என் மலர்tooltip icon

    தரவரிசை

    எம்.மதன் இயக்கத்தில் மதன் - உபசனா ராய் நடிப்பில் வெளியாகி இருக்கும் `எண்பத்தெட்டு' படத்தின் விமர்சனம்.
    ஜெயப்பிரகாஷின் மகனான நாயகன் எம்.மதன் சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்று ஆசையில் அதற்காக முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில், தனது அம்மாவுடன் கோயிலுக்கு செல்லும் மதன், அங்கு நாயகி உபசனா ராயை பார்க்கிறார். முதல் சந்திப்பில் அவள் மீது ஒருவித ஈர்ப்பு மட்டுமே வருகிறது. உபசனா ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் தான் மதனின் அக்காவின் குழந்தைகளும் படிக்கிறார்கள்.

    இந்நிலையில், தனது நண்பன் அப்புக்குட்டியின் திருமணத்திற்கு செல்லும் மதனுக்கு அங்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. திருமணப் பெண்ணின் தோழியாக உபசனா ராய் வர, அப்புக்குட்டி இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைக்கிறார். இதையடுத்து நண்பர்களாகும் இருவரும் ஒரு கட்டத்தில் காதலர்களாகவும் மாறி விடுகின்றனர். மதனின் வீட்டில் இவர்களது காதலுக்கு பச்சை கொடி காட்டினாலும், நாயகியின் அப்பா சினிமா துறையினருக்கு பெண் கொடுக்க மாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறார்.



    அவர்களிடம் ஒரு நிலையான சம்பாத்தியம் இருக்காது என்று கூற, ஒரு வாரத்திற்குள் தான் ஒரு லட்ச ரூபாய் சம்பாதித்து வருவதாக நாயகன் சபதம் செய்கிறார். சபதத்தில் வெற்றி பெற்றால் பெண்ணை கொடுப்பதாக உபசனாவின் அப்பாவும் கூற, விளம்பரம் ஒன்றை இயக்கி மதன் ஒன்றரை லட்சம் சம்பாதித்து விடுகிறார். இதையடுத்து இருவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில், அந்த ஊரிலேயே முக்கிய தாதாவாக வரும் டேனியல் பாலாஜி கொலை ஒன்றை செய்துவிட்டு, கொலை செய்யப்பட்டவரின் மொபைலில் இருந்து ஏதோ ஒரு எண்ணை அழுத்த, அந்த கால் மதனுக்கு செல்கிறது. மதன் போனை எடுத்ததும் கால் துண்டிக்கப்படுவதால், மதன் அந்த நம்பருக்கு போன் செய்கிறார். ஆனால் எதிர்முனையில் இருந்து பேச்சு ஏதும் வராததால், தனது காதலி தான் தன்னிடம் விளையாடுகிறாள் என்று நாயகன் மீண்டும் மீண்டும் போன் செய்கிறார். இதனால் போலீசிடமும் மாட்டுகிறார்.

    இவ்வாறாக போலீசில் சிக்கும் மதன் தனது குற்றமற்றவர் என்பதை நிரூபித்தாரா? தன்னை போலீசில் மாட்டி விட காரணமான டேனியல் பாலாஜியை பழிவாங்கினாரா? தனது காதலியை திருமணம் செய்தாரா என்பதே படத்தின் மீதிக் கதை.



    நாயகன் மதன் படத்திற்கு தேவையானதை சிறப்பாக கொடுத்திருக்கிறார். காதல் காட்சிகளிலும், ரொமான்ஸ் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். உபாசனா ராயின் நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது.

    டேனியல் பாலாஜி வில்லனுக்கே உரிய தொணியில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால் படத்தில் அவருக்கு ஏற்ற கதாபாத்திரம் இல்லை என்பதே நிதர்சனம். ஜெயப்பிரகாஷ், ஜான் விஜய், மீரா கிருஷ்ணன் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். அப்புக்குட்டி, சாம்ஸ், பவர் ஸ்டார் சீனிவாசன், லொல்லு சபா மனோகர் காமெடியில் ஒருசில இடங்களில் சிரிக்க வைக்கின்றனர்.

    இயக்குநர் எம்.மதன் அவரே நடித்து இயக்கியிருப்பதால் காட்சிகளில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டது போல தோன்றுகிறது. படத்தில் கதைக்கு கொடுத்த முக்கியத்துவத்தை இயக்குநர் திரைக்கதைக்கு கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார்.

    தயரத்னமின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இல்லை. பின்னணி இசையும் சுமார் ரகம் தான். பி.ஜி.வெற்றிமாறனின் ஒளிப்பதிவு ஓரளவுக்கு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் `எண்பத்தெட்டு' செவுத்துல முட்டு.
    எம்.என்.கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ராஜபாண்டி, ரவீந்திரன், கிருஷ்ணகுமார் சூரி, ரேணுகா, சுவாதி நடிப்பில் வெளியாகி இருக்கும் `சவரிக்காடு' படத்தின் விமர்சனம்.
    நண்பர்களாக வரும் ராஜபாண்டி, ரவீந்திரன், கிருஷ்ணகுமார், ரேணுகா, சுவாதி ஆகிய ஐந்து பேரும் ஒரே கல்லூரியில் படித்து வருகின்றனர். தொடக்கம் முதலே நல்ல நட்பு பாராட்டி வரும் இவர்கள் இறுதிஆண்டு படிப்பை முடித்த பின்னர், நண்பர்கள் ஒவ்வொருவர் வீட்டிற்கும் செல்ல முடிவு செய்கின்றனர்.

    அதன்படி 5 பேரில் கிராமத்தில் உள்ள ஒருவரது வீட்டிற்கு முதலில் செல்கின்றனர். அங்கு தங்கியிருந்து அந்த பகுதியில் உள்ள முக்கியமான இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் இருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கும் சவரிக்காடு என்னும் பகுதிக்கும் செல்ல முடிவு செய்கின்றனர்.



    ஆனால், அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று ஊர் மக்கள் பலரும் அவர்களிடம் கூறுகின்றனர். சவரிக்காடு பகுதிக்கு செல்பவர்கள் யாரும் உயிருடன் திரும்ப முடியாது. அங்கு சில மர்மங்கள் இருப்பதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். அவர்களது பேச்சைக் கேட்காமல், ஐந்து பேரும் சவரிக்காட்டுக்கு சென்று, இரவு முழுவதும் அங்கு தங்கியிருக்கின்றனர்.

    இந்நிலையில், நாயகிகளில் ஒருவர் அவசர காரியமாக காட்டிற்குள் செல்கிறாள். ஆனால் போனவள் திரும்ப வரவில்லை. மாறாக திடீரென அவள் கத்தும் சத்தம் மட்டும் கேட்க நண்பர்கள் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். இதையடுத்து நாயகர்களில் ஒருவர் அவளைத் தேடி காட்டிற்குள் செல்கிறார். அவரும் திரும்பி வராததால் ஒவ்வொருவராக அவர்களை தேடி செல்ல அனைவரும் தனித்தனியாக பிரிந்து விடுகின்றனர்.



    அந்த இருட்டில் தனித்தனியாக பிரிந்து சென்ற ஐந்து நண்பர்களும் உயிருடன் திரும்பினார்களா? அந்த காட்டிலேயே உயிரிழந்தார்களா? சவரிக்காட்டில் இருக்கும் மர்மம் என்ன? அங்கு என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகர், நாயகி என்று யாரையும் குறிப்பிட்டு கூறமுடியாது. ராஜபாண்டி, ரவீந்திரன், கிருஷ்ணகுமார், ரேணுகா, சுவாதி ஆகிய ஐந்து பேருமே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். நட்பை வெளிப்படுத்துவதில் ஐந்து பேரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். நடிகர் சூரி ஒரு சில இடங்களில் மட்டுமே வருகிறார் இருப்பினம் சூரி வரும் இடங்கள் கலகலப்பாக இருக்கிறது. அதேபோல் ரோபோ சங்கரும் சிறப்பு தோற்றத்தில் வந்து செல்கிறார். மற்ற துணை நடிகர்கள் அனைவருமே தங்களது பங்குக்கு கதைக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.



    எம்.என்.கிருஷ்ணகுமார் ஐந்து நண்பர்களுக்கு இடையேயான நட்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தாலும், கதையிலும், திரைக்கதையிலும் கோட்டை விட்டிருக்கிறார். காமெடி படம் என்பதற்கு ஏற்றாற்போல் படம் முழுக்க காமெடியில் இல்லை, திகில் என்று பார்த்தால் மிரட்டும்படியான காட்சிகளும் இல்லை. எந்த கண்ணோட்டத்தில் இயக்குநர் இந்த படத்தை எடுத்திருக்கிறார் என்பதை உணர முடியவில்லை. இதில் தொடரும் என்று படத்தை முடித்திருக்கிறார். இதுதான் ரசிகர்களுக்கு திகிலை ஏற்படுத்துகிறது.

    ஏ.டி.இந்திரவர்மனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசையும் திகிலை ஏற்படுத்தவில்லை. கே.கோகுலின் ஒளிப்பதிவில் காட்சிகள் நல்ல வந்திருக்கிறது.

    மொத்தத்தில் `சவரிக்காடு' திகிலில்லை.
    ஜி.ஆறுமுகம் இயக்கத்தில் தமன் குமார் - மதுஸ்ரீ நடிப்பில் வெளியாகியிருக்கும் புயலா கிளம்பி வர்றோம் படத்தின் விமர்சனம்.
    நாயகன் தமன் குமார் கேபிள் டிவி அலுவலகம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது கேபிள் டிவி நிறுவனத்தில் அவருக்கு துணையாக கும்கி அஸ்வின் உள்ளிட்ட அவரது நண்பர்கள் பணிபுரிந்து வருகின்றனர். துபாய் சென்று திரும்பிய சிங்கம் புலி, தமனின் நண்பனாக வருகிறார். இந்நிலையில், நாயகி மதுஸ்ரீயை பார்க்கும் நாயகனுக்கு முதல் பார்வையிலேயே அவள் மீது காதல் வந்துவிடுகிறது. அடுத்தடுத்த சந்திப்பில் இருவருமே காதலிக்க தொடங்கி விடுகின்றனர்.

    இந்நிலையில், அந்த ஊரில் முக்கிய ரவுடியாக வரும் ஆர்.என்.ஆர்.மனோகர் அந்த ஊரில் பல அட்டகாசங்களை செய்து வருகிறார். அதில் ஒன்றாக அடுத்தவர்களின் சொத்துக்களை, தனது ஆள் பலத்தைக் கொண்டு தனது பெயருக்கு மாற்றிக் கொள்வது உள்ளிட்ட அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகிறார். ஒரு கட்டத்தில் தமனுக்கு வேண்டிய முதியவர் ஒருவரை மிரட்டி, அவரது வீட்டை எழுதி வாங்கி விடுகிறார்.



    இந்த சம்பவம் குறித்து கேள்விப்படும் தமன், இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கிறார். அதன்பேரில் போலீசார் மனோகரை கைது செய்து சிறையில் அடைத்து விடுகின்றனர். இதையடுத்து ஜாமீன் பெற்று வெளியே வரும் மனோகர், தன்னை போலீசில் சிக்க வைத்த தமனை பழிவாங்க முடிவு செய்கிறார். மேலும் தனது ஆட்களின் மூலம் தமனை சரமாரியாக அடித்து விடுகிறார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தமனை அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்க்கின்றனர்.

    இதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் தமன், அனைவரிடமும் தனக்கு விபத்து ஏற்பட்டதாகவே கூறுகிறார். தனது நண்பர்களிடம் மட்டும் உண்மையை கூற, தமனின் நண்பர்கள் மனோகரை பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். திட்டம் போட்டு தான் மனோகரை பழிவாங்க வேண்டும் என்று தமன் அவரது நண்பர்களை தடுக்கிறார். அதற்காக மனோகரிடம் இருக்கும் ஆள் பலத்தை முதலில் குறைக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.



    இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் தமன், மனோகரை பழிவாங்க தனது நண்பர்களுடன் இணைந்து புயலாக கிளம்புகிறார். அவரது முயற்சியில் வெற்றி கண்டாரா? மனோகரை திட்டம் போட்டு பழிவாங்கினாரா? தனது காதலியுடன் சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகன் தமன் குமார் படத்தின் தலைப்புக்கு ஏற்ப ஆக்சன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். காதல் காட்சிகளிலும், ரொமேன்ஸ் காட்சிகளிலும் அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. நாயகி மதுஸ்ரீ அவரது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். நடிப்பிலும், பாடல் காட்சிகளிலும் அவரது நடிப்பு ரசித்து பார்க்கும்படி இருக்கிறது.



    மனோகர் ஒரு ஆக்ரோஷமான உள்ளூர் ரவுடியாக சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு சில இடங்களில் அவர் மிகையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பது போல தோன்றுகிறது. காமெடிக்கு நடிகர் சிங்கம்புலி ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். கும்பி அஸ்வின் உள்ளிட்ட அவரது நண்பர்கள் இணையும் நேரம் கலகலப்பு உண்டாகிறது. மற்ற கதாபாத்திரங்கள் அனைத்துமே படத்தின் போக்கிற்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.

    ரவுடி ஒருவர் செய்யும் அட்டகாசங்களை, நாயகன் தனது நண்பர்களுடன் இணைந்து முறியடிக்க முயற்சி செய்யும் கதையை நட்பு, காதல், ரொமான்ஸ் என ஒரு கலவையாக கொடுத்திருக்கிறார் ஜி.ஆறுமுகம். சண்டைக்காட்சிகளும், குத்துப்பாட்டு ஒன்றும் ரசித்து பார்க்கும்படி இருக்கிறது.

    சார்லஸ் தனா இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசை ஓரளவுக்கு பரவாயில்லை. வி.விஜய்யின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன.

    மொத்தத்தில் `புயலா கிளம்பி வர்றோம்' தாங்க முடியவில்லை.
    டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் அசோக் செல்வன் - ப்ரியா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் `கூட்டத்தில் ஒருத்தன்' படத்தின் விமர்சனம்.
    தனது வாழ்க்கையில் வெற்றி என்பதையே ருசிக்காத ஒரு மிடில் பெஞ்ச் இளைஞனைப் பற்றிய கதை தான் கூட்டத்தில் ஒருத்தன். பள்ளி, கல்லூரிகளில் பொதுவாக முதல் பெஞ்ச் அல்லது கடைசி பெஞ்ச்சை பற்றிய பேச்சே அடிபடும். ஆனால் மிடில் பெஞ்ச்சில் இருப்பவர்களை கண்டுகொள்வதெ இல்லை. இவ்வாறாக ஒரு மிடில் பெஞ்ச் மாணவனாக வருகிறார் அசோக் செல்வன். தனது பிறப்பிலிருந்தே தோல்வியை மட்டுமே சந்தித்த அவருக்கு எதிலும் அதீத ஈடுபாடு இல்லை.

    இதுவரை அவரை யாரும் பாராட்டியதும் இல்லை. யாரிடமும் நல்ல பெரை வாங்கியதுமில்லை. அசோக் செல்வனின் தந்தை மாரிமுத்து, அம்மா, தங்கை என வீட்டில் இருப்பவர்கள் கூட அசோக் செல்வனை கண்டுகொள்வதே இல்லை. அவரும் அதை பெரிதாக பொருட்படுத்தாமலே இருந்து வருகிறார்.



    இந்நிலையில், ஒருநாள் கடற்கரைக்கு சென்ற அசோக் செல்வன், கடற்கரையின் அழகுக்கு இழுக்கு ஏற்படுத்தும் குப்பைகளை எடுத்து குப்பை தொட்டியில் போடுகிறார். இதை பார்த்த பள்ளி மாணவி ப்ரியா ஆனந்த், அசோக் செல்வனை பாராட்ட, இதுவரை பாராட்டையே கேட்டகாத அவரது காதுகளுக்கு சிலிர்ப்பு ஏற்படுகிறது. தனது பள்ளி படிப்பில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுக்கும் பிரியா ஆனந்த், தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பத்திரிக்கை துறையில் மேற்படிப்பு படிக்க இருப்பதாக கூற, அசோக் செல்வனும் அதே படிப்பை தேர்வு செய்து, ப்ரியா ஆனந்தின் கல்லூரியிலேயே சேர்கிறார். அங்கு பாலசரவணனுடன் அவருக்கு நட்பு ஏற்படுகிறது.  

    இந்நிலையில், தனது காதலை ப்ரியா ஆனந்திடம் வெளிப்படுத்துகிறார். டாப் பெஞ்சரான ப்ரியா ஆனந்த் தன்னை காதலிப்பதற்கு முன்பாக எதையாவது சாதித்துவிட்டு வர வேண்டும் என்று சொல்கிறார். இதனால் வருத்தத்துடன் செல்லும் அசோக் செல்வன், கடலில் விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். அப்போது அங்கு உயிருக்கு போராடும் குழந்தை ஒன்றை காப்பாற்றுகிறார். அசோக் செல்வன் குழந்தையை காப்பாற்றுவதை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்கிறார்.



    இந்நிலையில், சென்னையின் பிரபல ரவுடியான சமுத்திரக்கனி அந்த வீடியோவை பார்த்து, தனது மகனை காப்பாற்றிய அசோக் செல்வனுக்கு உதவி செய்கிறார். மேலும் ப்ரியா ஆனந்துடன், அசோக் செல்வனை சேர்த்து வைப்பதாக உறுதி அளிக்கிறார். இதையடுத்து சமுத்திரக்கனியின் உதவியால் அசோக் செல்வன் பேசப்படும் சில காரியங்களை செய்கிறார். இதையடுத்து ப்ரியா ஆனந்த்தும், அசோக் செல்வனை காதலிக்க ஆரம்பிக்கிறாள்.

    ஒருகட்டத்தில் அசோக் செல்வன், தனது சொந்த முயற்சியில் அந்த காரியங்களை செய்யவில்லை என்பது தெரிய வர, ப்ரியா ஆனந்த், அசோக் செல்வனை விட்டு பிரிகிறாள். இந்நிலையில், பிரியா ஆனந்த்துக்கு திருமணமும் நிச்சயம் செய்யப்படுகிறது.



    ப்ரியா ஆனந்த் அவரது வீட்டில் பார்த்து வைத்த மாப்பிள்ளையை மணந்தாரா? அசோக் செல்வனுடன் மீண்டும் இணைந்தாரா? அசோக் செல்வன் தனது அந்தஸ்தை உணர்த்தினாரா? வெற்றி கண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    அசோக் செல்வன் படத்தில் ஒரு மிடில் பெஞ்சராகவே வாழ்ந்திருக்கிறார். இதற்கு முன்பு அவர் நடித்த படங்களை விட இந்த படத்தில் அவரது நடிப்பு பாராட்டும் படி இருக்கிறது. சிறப்பான கதாபாத்திரத்தை தேர்வு செய்து அதில் தனது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

    ப்ரியா ஆனந்த் கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார். திரையில் அழகாக வந்து ரசிக்க வைக்கிறார். ப்ரியா ஆனந்துக்கும் ஓர் அழுத்தமான கதாபாத்திரம் தான், அதனை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். சமுத்திரக்கனி ஒரு ரவுடியாக, அப்பாவாக சிறப்பாக நடித்திருக்கிறார். பால சரவணன் காமெடியில் ரசிக்க வைத்திருக்கிறார். மாரிமுத்து, அனுபமா குமார், ஜான் விஜய் கதாபாத்திரத்திற்கு ஏற்ப முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.



    மிடில் பெஞ்ச்சர்கள் எப்படி இருப்பார்கள், என்னென்ன செய்வார்கள், அவர்கள் சந்திக்கும் அவமானம், கஷ்டம் என அனைத்யைும் காதல், நட்பு என ஒரு கலவையாக சிறப்பாக இயக்கியிருக்கிறார் டி.ஜே.ஞானவேல். குறிப்பாக உணவை வீணாக்கக் கூடாது, உணவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், உணவின் முக்கியத்துவம் என்ன என்பதை ஒரு மெசேஜாக பதிவு செய்திருக்கிறார்.

    நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் விரும்பி கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன.

    மொத்தத்தில் `கூட்டத்தில் ஒருத்தன்' ரசனையானவன்.
    அருண் வைத்யநாதன் இயக்கத்தில் அர்ஜுன் - பிரசன்னா - வரலட்சுமி நடிப்பில் அர்ஜுனின் 150-வது படமாக வெளியாகி இருக்கும் `நிபுணன்'' படத்தின் விமர்சனம்.
    சென்னையில் அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். கொலை செய்யப்பட்டவரின் உடலில் ஒரு சீரியல் நம்பரும், முகத்தில் மாஸ்க்கும் தடயமாக விட்டுச் செல்லப்பட்டிருக்கிறது. அந்த கொலை குறித்து விசாரிக்க அர்ஜுன் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்று அமைக்கப்படுகிறது.

    அந்த குழுவில் பிரச்சனா, வரலட்சுமி அர்ஜுனுடன் இணைந்து அந்த கொலைகாரனை பிடிக்க உதவி செய்கின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் இருக்கும் சிறு தயடங்களை கூட அர்ஜுன் கவனமாக சேகரித்து வருகிறார். ஆனால் அதற்குள் டாக்டர் ஒருவர் அதேபோல கொடூர சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை மூலம் இரு கொலைக்கும் தொடர்பு இருப்பதையும், அந்த சீரியல் கில்லரை விரைவில் பிடிக்க வேண்டும் என்றும் அர்ஜுன் முடிவு செய்கிறார்.



    மேலும் அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கும் சமயத்தில், மூன்றாவதாக வழக்கறிஞர் ஒருவர் அதேபோல் கொலை செய்யப்படுகிறார். இதையடுத்து இந்த வழக்கில் தீவிர கவனம் செலுத்தும் அர்ஜுன், அந்த சீரியல் கில்லர் அடுத்ததாக குறிவைத்திருப்பது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். அந்த முயற்சியில் இறங்கிய அர்ஜுனுக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. ஏனென்றால், அந்த சீரியல் கில்லர், அடுத்ததாக குறிவைத்திருப்பது அர்ஜுனை தான் என்பதையும், அதற்கான காரணம் என்னவென்பதையும் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறார்.

    தன்னை ஏன் அந்த சீரியல் கில்லர் கொலை செய்ய முயற்சி செய்கிறான்? இதற்கு முன்பாக உயிரிழந்த மூன்று பேருக்கும், தனக்கும் என்ன சம்மந்தம்? என்று அர்ஜுன் தீவிர யோசனையில் இருக்கிறார். இதையெல்லாம் செய்யும் அந்த சீரியல் கில்லர் யார் என்பதையும், அவனை கைது செய்தாரா? என்பதே படத்தின் மீதக்கதை.



    தனது 150-வது படத்தில் நடித்திருக்கும் அர்ஜுனின் கதாபாத்திரம் படத்தையே தன்னுடன் கூட்டிச் செல்கிறது. பொதுவாக ஆக்‌ஷன் படங்கள் என்றாலே அர்ஜுன் காட்சிகளுடன் ஒன்றிவிடுவார். அதேபோல் இப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தாலும், போலீஸ் உடை அணியாமல் வரும் அவரது லுக்கும், உடைகளும் அவரை ஒரு ஸ்டைலிஷ் போலீஸ் அதிகாரியாக காட்டுகிறது. தனது அனுபவ நடிப்பால், சண்டைக் காட்சிகளிலும், கொலையை கண்டுபிடிப்பதிலும் அர்ஜுன் திறம்பட நடித்திருக்கிறார். ஒரு அதிரடியான, சுறுசுறுப்பான போலீஸ் அதிகாரியாக படம் முழுவதும் வலம் வருகிறார். ஒரு போலீஸ் அதிகாரியாக மட்டுமல்லாமல், ஒரு கணவனாக, அப்பாவாக, அண்ணனாக, தோழனாக இளமையாக நடித்திருக்கிறார்.

    அர்ஜுனின் குழவில் ஒருவராக வரும் பிரசன்னா தனது கதாபாத்திற்கு தேவையானதை சிறப்பாக கொடுத்திருக்கிறார். அவரது உடைகளும், பேச்சும் என ஒரு போலீஸ் அதிகாரியாகவே வாழ்ந்திருக்கிறார். வரலட்சுமி சரத்குமாருக்கு இப்படத்தில் ஒரு வலுவான கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. அதனை அவர் சரியாக பயன்படுத்தியிருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.



    சீரியல் கொலையை மையமாக வைத்து மாறுபட்ட கதைக்களத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லமல் காட்சிகளை கொடுத்திருக்கிறார் அருண் வைத்யநாதன். படத்தில் ஆக்‌ஷன் கிங் நடித்திருப்பது படத்திற்கே கூடுதல் பலம். அர்ஜுனுக்கேற்ற விறுவிறுப்புடன் திரைக்கதையை அமைத்திருப்பதால் படம் ரசிக்கும்படி இருக்கிறது. அர்ஜுனை மையப்படுத்தி காட்டியிருப்பதால் மற்ற கதாபாத்திரங்கள் பெரிதாக எடுபடவில்லை. சீரியர் கில்லர் குறித்த சஸ்பென்சை கடைசியில் காட்டியிருப்பது சிறப்பு. அது யார் என்ற சஸ்பென்ஸ், படம் பார்கும் போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்படி இருக்கும்.

    எஸ்.நவீனின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

    மொத்தத்தில் `நிபுணன்' வித்தியாசமானவன்.
    ரோம் பிமானா இயக்கத்தில் ஆசிஷ் ராஜ் - ருக்சார் மீர் நடிப்பில் வெளியாகி இருக்கும் அசத்துறாண்டா படத்தின் விமர்சனம்.
    நாயகன் ஆசிஷ் ராஜ் விசாகப்பட்டினத்தில் கல்லூரி ஒன்றில் இறுதியாண்டு படித்து வருகிறார். அவரே அந்த கல்லூரியின் டாப்பராகவும் வலம் வருகிறார். இந்நிலையில், அதே கல்லூரியில் படிக்கும் எம்.எல்.ஏ.வின் தம்பிக்கும், ஆசிஷ் ராஜுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இந்நிலையில், நாயகி ருக்சார் மீர், ஆசிஷ் படிக்கும் கல்லூரியில் வந்து சேர்கிறாள்.

    ஆசிஷ் ராஜுக்கும், எம்.எல்.ஏ.வின் தம்பிக்கும் இடையே மீண்டும் ஒருநாள் பிரச்சனை வர, நாயகி ருக்சார் நாயகனை தடுத்து நிறுத்துகிறார். இதையடுத்து இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறிவிடுகிறது. இவர்களது காதலுக்கு இருவரது வீட்டாரும் சம்மதம் தெரிவிக்க இருவருக்கும் திருமணம் செய்து வைக்கவும் ஏற்பாடுகள் நடக்கிறது.



    இந்நிலையில், ஆசிஷ் ராஜின் தந்தை சுமன், அவரது மனைவியுடன் கோவில் ஒன்றில் தர்ப்பணம் கொடுக்கிறார். இதை நாயகி ருக்சார் மீர் பார்த்து விடுகிறாள். அவர்கள் சென்ற பிறகு, ஐயரிடம் சென்று யாருக்கு தர்ப்பணம் கொடுத்தார்கள் என்று ருக்சார் கேட்க, காலமான அவர்களது ஒரே மகனுக்கு கொடுத்ததாக ஐயர் கூற, இதை கேட்டு அதிர்ச்சியடையும் ருக்சார், இந்த விஷயத்தை ஆசிஷ் ராஜிடம் சொல்கிறாள்.

    இதனால் ருக்சார் மீது கோபமடையும் ஆசிஷ், ருக்சாருடன் சண்டை பிடிக்கிறார். மேலும் தனது பெற்றோரிடம் இந்த விஷயம் குறித்து மறைமுகமாக கேட்க முயற்சி செய்கிறார். அதில் அவருக்கு சில தகவல்கள் கிடைக்க, அடுத்தடுத்து சில தகவல்களையும் சேகரிக்கிறார். இந்நிலையில், மும்பையில் ஒரு ரவுடி கும்பல் ஆசிஷ் ராஜை தேடி வருகிறது.

    பின்னர் ஆசிஷ் விசாகப்பட்டினத்தில் இருப்பது அந்த கும்பலுக்கு தெரியவர, அந்த கும்பல் ஆசிஷை கண்டுபிடித்ததா? ஏன் அந்த கும்பல் ஆசிஷை தேடி வருகிறது? ஆசிஷ் யார்? அவருக்கும் மும்பையில் இருக்கும் ரவுடி கும்பலுக்கும் என்ன சம்மந்தம்? ஆசிஷ் - ருக்சார் திருமணம் நடந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    காதல் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் ஆசிஷ் ராஜ் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக தான் யார் என்றே புரியாமல் அதுகுறித்து தேடுவதற்காக திரியும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. ருக்சார் மீர் ஒரு காதலியாகவும், தனது காதலனை சமாதானப்படுத்துவதில் ஒரு மனைவியாகவும் ரசிக்க வைத்திருக்கிறார். தெலுங்கு படங்கள் என்றாலே கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது. அதேபோல் இந்த படத்தில் ஆங்காங்கே கவர்ச்சியான காட்சிகள் வந்து செல்கின்றன. மற்றபடி சுமன், பிரம்மானந்தம், பூசானி கிருஷ்ண முரளி, தனிகெல்லா பரணி, அனுபவ நடிப்பால் ரசிக்க வைத்திருக்கின்றனர். இவர்களுடன் அஜய் கோஷ், அமீஷா படேல், அன்னபூர்ணா, பல்லிரெட்டி, இந்திராஜா உள்ளிட்டோரும் காட்சியின் போக்குக்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.

    ரோம் பிமானா இயக்கத்தில் விசாகப்பட்டினம், மும்பையை மையமாக வைத்து கதை நகர்கிறது. இயக்குநர் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருப்பதால் படம் விறுவிறுப்பாக செல்கிறது. அதற்கேற்ப அடுத்தடுத்த காட்சிகள் வேகமாக வருவதால், ரசித்து பார்க்கும்படி இருக்கிறது.

    மணி ஷர்மா இசையில் பாடல்கள் டப் செய்யப்பட்டிருப்பது கேட்பதற்கு சுமாராக தான் இருக்கிறது. பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். வெங்கட் கங்காதரியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.

    மொத்தத்தில் `அசத்துறாண்டா' அடிதூள்.
    சுரேஷ் கோவிந்த் இயக்கத்தில் ஸ்ரீசாந்த் - நிக்கி கல்ராணி - பியர்ன் மானே நடிப்பில் வெளியாகியிருக்கும் டீம் 5 படத்தின் விமர்சனம்.
    நாயகன் ஸ்ரீசாந்தின் இளம்வயதிலேயே கேன்சர் நோயால் அவனது தந்தை உயிரிழந்து விடுகிறார். தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் ஸ்ரீசாந்த்துக்கு பள்ளி பருவத்திலேயே சைக்கிள் ரைடிங்கில் ஆர்வம் இருந்தது. பின்னர் அந்த ஆர்வம் பைக் மீது மாற, ஒரு பைக் ரேசராக மாறினார். ஆனால் தான் ஒரு ரைடர் என்கிற விஷயம் ஸ்ரீசாந்தின் தங்கையான பியர்ல் மானேவை தவிர குடும்பத்தில் வேறு யாருக்கும் தெரியாமல் இருக்கிறது. மேலும் ஸ்ரீசாந்துக்கு அவரது பியர்ல் மானே உந்துசக்தியாக, ஊக்கம் அளித்து வருகிறாள்.

    ஸ்ரீசாந்த் மற்றும் அவரது 4 நண்பர்கள் சேர்ந்த குழுவே டீம் 5. இந்த டீம் 5 குழுவுக்கும், மற்றொரு குழுவுக்கும் இடையே அடிக்கடி பைக் போட்டி நடத்தப்படுகிறது. இந்நிலையில், நிக்கி கல்ராணி வேலை செய்து வரும் பைக் கம்பெனியன் புதிய பைக் ஒன்றிக்கு, மாடலாக ஸ்ரீசாந்த் நியமிக்கப்படுகிறார்.



    அதேநேரத்தில் ஸ்ரீசாந்துடன் நிக்கி கல்ராணிக்கு காதல் வந்துவிடுகிறது. இந்நிலையில், ஸ்ரீசாந்த் பைக் போட்டிகளில் பங்கேற்பதும், ரைடர் என்பதும் அவரது வீட்டிற்கு தெரிய வருகிறது. இதனால் கோபமடையும் ஸ்ரீசாந்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவரை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பிவைக்க முடிவு செய்கின்றனர். அவர்களது முடிவுக்கு ஸ்ரீசாந்தும் சம்மதம் தெரிவிக்கிறார்.

    இந்நிலையில், தனது காதலை தெரிவிப்பதற்காக, ஸ்ரீசாந்த்தை, நிக்கி கல்ராணி அழைக்கிறார். ஆனால் அவளது காதலை வெளிப்படுத்தும் சமயத்தில் ஸ்ரீசாந்தின் தங்கை பியர்ல் மானே உயிரிழந்ததாக தகவல் வர, உடனடியாக ஸ்ரீசாந்த் அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.

    தனது பாசமான தங்கையை பிரிந்த ஸ்ரீசாந்த், அவளது ஆசையை நிறைவேற்ற மீண்டும் பைக் ரேசில் பங்கேற்றாரா? அல்லது வெளிநாட்டிற்கு சென்று வேலையில் சேர்ந்தாரா? நிக்கி கல்ராணி தனது காதலை ஸ்ரீசாந்திடம் தெரிவித்தாரா? ஸ்ரீசாந்த் அதற்கு சம்மதம் தெரிவித்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.



    தொலைக்காட்சி தொடர்களில் முதலில் பங்கேற்று வந்த ஸ்ரீசாந்த், அக்சர் என்ற இந்தி படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அந்த படம் ரிலீசாவதற்கு முன்பாகவே அவர் ஹீரோவாக அறிமுகமாகும் டீம் 5 ரிலீசாகியுள்ளது. தனது முதல் படத்திலேயே ஸ்ரீசாந்த் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக பைக் ரேசராக அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது.

    நிக்கி கல்ராணி தனது அழகான சிரிப்பு மற்றும் நடிப்பால் ரசிக்க வைத்திருக்கிறார். ஸ்ரீசாந்த் - நிக்கி கல்ராணி இடையேயான காதல் ரசிக்கும்படி இருக்கிறது. பியர்ள் மானே ஒரு தங்கையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு கூடுதல் பலம். மகரண்டு தேஷ்பாண்டே தனது அனுபவ நடிப்பால் ரசிக்க வைக்கிறார். பிஜு குட்டன், கோட்டயம் பிரதீப், மஞ்சு சதீஷ், சுமேஷ் கிருஷ்ணன் தங்களது பங்களிப்பை சிறப்பாக அளித்திருக்கின்றனர்.



    சினிமாவுக்கே உரித்தான, இயல்பான கதையில், பாசம், காதல், நட்புடன் கொஞ்சம் பைக் ரேஸை சேர்த்த கலவையாக கொடுத்திருக்கிறார் சுரேஷ் கோவிந்த். மைக் ரேஸை சுற்றியே கதை செல்வதால், படம் ரசிக்கும்படி இருந்தாலும், பல இடங்களில் தேவையில்லாத காட்சிகள் வருகின்றதோ என்று ரசிகர்கயை யோசிக்க வைக்கும்படியாக திரைக்கதை செல்கிறது.

    கோபி சுந்தரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசையில் ரசிக்க வைத்திருக்கிறார். சஜித் புருஷன் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாகவும், கேரளாவை ரம்மியமாகவும் காட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் `டீம் 5' ரசிக்க வைத்திருக்கலாம்.
    மேட் ரீவ்ஸ் இயக்கத்தில் ஆண்டி செர்கிஸ் - வூடி ஹாரல்சன் - ஸ்டீவ் சான் நடிப்பில் வெளியாகி இருக்கும் `வார் ஃபார் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்' படத்தின் விமர்சனம்.
    வார் ஃபார் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் படத்தின் இரண்டாவது பாகத்தின் தொடர்ச்சியாக இந்த பாகம் தொடர்கிறது. கடந்த பாகத்தில் குரங்குகள் ஒரு அணியாகவும், மனிதர்கள் ஒரு அணியாகவும் இருப்பார்கள். இதில் குரங்கு கூட்டத்தில் உள்ள ஒரு குரங்குக்கு மட்டும் மனிதர்களை பிடிக்காது. ஆனால் குரங்குகளின் தலைவனான சீசர், மனிதர்கள் நமக்கு தீங்கு செய்ய மாட்டார்கள் என்று கூறி, மற்ற குரங்குகளை சமாதானப்படுத்துகிறது.  

    சீசரின் பேச்சைக் கேட்காத அந்த வெள்ளை குரங்கு, சீசரை மனிதர்கள் கொலை செய்துவிட்டதாகக் கூறி மனிதர்கள் - குரங்குகள் இடையே கலவரத்தை உண்டுபண்ணுகிறது. மேலும் மனிதர்களிடம் இருந்த ஆயுதங்களையும் கைப்பற்றிவிடும்படி கடைசி பாகம் முடிந்திருக்கும்.



    ஆனால் அந்த பாகத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட சீசரை மனிதர்கள் காப்பாற்றி, அதற்கு தேவையான சிகிச்சை அளித்திருப்பார்கள். இதையடுத்து, மனிதர்களின் உதவியோடு, அந்த வெள்ளை குரங்குடன் இருக்கும் கெட்ட குரங்களை சீசர் கொன்று விடுகிறது. இதையடுத்து சீசரின் பின்னாள் மற்ற குரங்குகள் வந்து சேர, மனிதர்களை காட்டிலிருந்து வெளியேறி அவர்களது இடத்திற்கு போகும்படி சீசர் கூறிவிடுகிறது.

    இதையடுத்து மனிதர்கள் அங்கிருந்து சென்றுவிடுகின்றனர். எனினும் வெள்ளை குரங்கு, மனிதர்கள் திரும்பவும் வருவார்கள் என்று கூறி, பயமுறுத்துகிறது. இந்நிலையில், சீசரின் மூத்த மகன், தனக்கு பாதுகாப்பான இடம் ஒன்று தெரியும் என்று கூறி, அங்கு அனைவரும் நிம்மதியாக வாழலாம் என்று கூறுகிறது. இதையடுத்து அனைவரும் அந்த பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் போது, காட்டில் மனித நடமாட்டம் இருப்பதை சீசர் கண்டுபிடிக்கிறது.

     

    இந்நிலையில், கலோனல் தலைமையிலான மனிதர்கள், சீசரின் மனைவி மற்றும் மகனை கொன்று விடுகிறது. இதையடுத்து கலோனலின் கொலை வெறித் தாக்குதல்களில் இருந்து தன் இனத்தைக் காக்க நினைக்கும் சீசர், தன் இனத்தை அந்த பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி விட்டு, தனது மனைவி, மகனை கொன்ற கலோனலைக் பழிவாங்க செல்கிறது. ஆனால், கலோனலைக் கண்டுபிடிக்கும் முன்பே, கலோனல் சீசரின் இனத்தைப் பிடித்துச் சிறையில் அடைத்து விடுகிறது. மேலும் சீசரும் கலோனலிடம் சிக்கிக் கொள்கிறது.

    இவ்வாறு சிக்கிக் கொள்ளும் சீசர், தனது இனத்தை எப்படிக் காப்பாற்றுகிறது? அதற்காக என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டது? கலோனல் மற்றும் அந்த வெள்ளை குரங்கை சீசர் பழிவாங்கியதா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.



    கலோனலாக நடித்திருக்கும் வூடி ஹாரல்சன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குரங்குகளுடன் அவருக்குண்டான கோபமும், அதனை பழிவாங்க மேற்கொள்ளும் ஆக்ரோஷமான முயற்சிகளும் ரசிக்கும்படி இருக்கிறது.

    கடைசி பாகத்தின் தொடர்ச்சியாக, உயிரோடு வரும் சீசர், தனது இனத்தை காப்பாற்ற, மனிதர்களை எப்படி எதிர்கொள்கிறது. அதில் மனிதர்களி்ன் பொறியில் சிக்கி மீண்டும், தனத இனத்தை காப்பாற்றியிருப்பதை சிறப்பாக இயக்கியிருக்கிறார். படத்தின் சி.ஜி. வேலைகளில் படக்குழு சிறப்பாக ஈடுபட்டிருக்கிறது. மாட் ஏப்ஸ் மூலம் அங்கங்கு சிரிப்பு வரும்படி இருக்கிறது. பாசம், ஏக்கம், சண்டை, காமெடி என அனைத்தையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார்.



    மைக்கேல் ஜியோசினோவின் இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. ஒரு காட்சிக்கும் பதபதைக்கும் பின்னணி இசையை கொடுத்திருக்கிறார்.  மைக்கேல் செரசினின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக காட்டப்பட்டிருக்கிறது. எனினும் 3டி-யில் பார்க்கும் போது பெரும்பாலான காட்சிகள் இரவு நேரத்தில் எடுக்கப்பட்டிருப்பதால் பார்ப்பதற்கு நேயர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.

    மொத்தத்தில் `வார் ஃபார் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்' முடிந்தது.
    எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் பரதன் - அன்சிபா ஹாசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `பாக்கணும் போல இருக்கு' படத்தின் விமர்சனம்.
    நாயகன் பரதன், சூரி, பிளாக் பாண்டி மூன்று பேரும் நண்பர்கள். கஞ்சா கருப்பு, அங்கு டெய்லர் கடை ஒன்றை வைத்திருக்கிறார். நாயகன், அவரது நண்பர்கள் மூவரும் கஞ்சா கருப்பு வைத்திருக்கும் கடையிலேயே பொழுதை போக்கி வருகிறார்கள். இதில் பரதன் எந்த வேலைக்கு போகாமல் ஊர் சுற்றி வருகிறார்.

    இந்நிலையில், அந்த ஊருக்கு வரும் நாயகி அன்சிபா ஹாசனையும் பார்க்கிறார். முதலில் அன்சிபா யார் என்று தெரியாமல் அவளை காதலிக்க ஆரம்பிக்கும் பரதன், பின்னர் அன்சிபா தனது சிறு வயது தோழி என்பதை அறிந்து கொள்கிறார். பின்னர் தனது தோழி தான் அன்சிபா என்பதால் அன்சிபாவிடம் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பிக்கிறார். அத்துடன் பரதன் தனது காதலையும் தெரிவிக்கிறார்.



    பரதனின் காதலை அன்சிபாவும் ஏற்றுக் கொள்கிறாள். இதையடுத்து அடிக்கடி சந்திக்கும் இவர்கள், ஒருநாள் படம் பார்க்க தியேட்டருக்கு செல்கின்றனர். படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது, டிவி சேனல் ஒன்று எடுத்த பேட்டியில் பரதனும், அன்சிபாவும் ஒன்றாக வெளியே வருவது தெரிந்துவிடுகிறது. இதனை ஊர்மக்கள் பலரும் பார்த்து விடுகின்றனர்.

    இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகும் அன்சிபாவின் அப்பாவான லிவிங்ஸ்டன், தனது மகளை கண்டிக்கிறார். இந்நிலையில், அன்சிபாவின் வீட்டிற்கு வரும் பரதனின் தந்தை ஜெயப்பிரகாஷ், இருவரது காதலும் ஊர் அறிந்த விஷம் என்பதால், இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று பெண் கேட்கிறார். லிவிங்ஸ்டனும் அதற்கு சம்மதம் தெரிவிப்பதால், இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடத்தப்படுகிறது.



    நிச்சயதார்த்தத்துக்காக வெளியூரில் இருந்து வரும் பரதனின் அண்ணன், அன்சிபாவின் அக்காவிடம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்கிறார். இந்த காட்சி மண்டபத்தில் இருக்கும் தொலைக்காட்சிகளில் தெரிகிறது. இதனை மண்டபத்தில் இருக்கும் அனைவரும் பார்த்து விடுகின்றனர். இதனால் மேலும் மனவேதனைக்கு உள்ளாகும் லிவிங்ஸ்டன் பரதன் - அன்சிபா திருமணத்திற்கு முன்னதாக அவர்களது அண்ணன் - அக்காவின் திருமணத்தை நடத்தி விட முடிவு செய்கின்றனர்.

    இதையடுத்து உடனடியாக நிச்சயம் செய்து, பின்னர் திருமணமும் செய்து வைக்கின்றனர். இந்நிலையில், ஜெயப்பிரகாஷ் வீட்டில் நடக்கும் ஒரு பிரச்சனையை அன்சிபாவின் அக்கா தவறாக சித்தரித்து தனது அப்பா வீட்டிற்கு வந்து விடுகிறாள். இதானல் பரதன் லிவிங்ஸ்டனை அடிக்கும் அளவுக்கு பிரச்சனை செல்கிறது. தனது அப்பாவை அடித்ததால், பரதனிடம் அன்சிபா சண்டை பிடிக்கிறாள்.



    இவர்களது காதலிலும் பிரச்சனை வர, இருவரும் மீண்டும் இணைந்தார்களா? அவர்களது காதல் திருமணத்தில் முடிந்ததா? அண்ணனும் - அண்ணியும் மீண்டும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    பரதன் இயல்பான நடிப்பின் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சூரியுடன் இணைந்து பரதன் அடிக்கும் லூட்டி ரசிக்கும்படி இருக்கிறது. பல இடங்களில் இருவரும் சிரிப்பு மழையில் நனைய வைக்கின்றனர். காதல் காட்சிகளில் அன்சிபாவின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது.

    சூரி வழக்கம்போல அவரது இயல்பான காமெடி மூலம் திரையரங்கையே அதிர வைக்கிறார். சூரியுடன் இணைந்து பிளாக் பாண்டி காமெடியில் முயற்சி செய்திருக்கிறார். குறிப்பாக கஞ்சா கருப்புவை கலாய்க்கும் காட்சிகள் உச்ச காமெடியாக அமைவது, களவாணி படத்தை நினைவுபடுத்தும் படி இருக்கிறது. லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ் என மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.



    காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியிருக்கும், இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் முயற்சிக்கு பாராட்டுக்கள். பரதன் - சூரி இடையேயான ஒற்றுமை நன்றாக இருப்பதால் படம் ரசித்து பார்க்கும் படி இருக்கிறது. நட்பு, காதல், பாசம் என அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிந்தாலும், திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம்.

    அருள் தேவ் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசையில் ரசிக்க வைத்திருக்கிறார். டி.எம்.மூவேந்தரின் ஒளிப்பதிவில் காட்சிகள் கிராமத்துசாயலில் நன்றாக வந்திருக்கிறது.

    மொத்தத்தில் `பாக்கணும் போல இருக்கு' காமெடி சரவெடி
    புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன் - விஜய் சேதுபதி - கதிர் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் - வரலட்சுமி நடிப்பில் வெளியாகியிருக்கும் `விக்ரம் வேதா' படத்தின் விமர்சனம்.
    சென்னையின் முக்கிய தாதாக்களில் ஒருவர் வேதா எனப்படும் விஜய் சேதுபதி. அவரை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று காவல்துறையில் சிறப்பு படை ஒன்று அமைக்கப்படுகிறது. பிரேம் தலைமையிலான அந்த அமைப்பில் என்கவுண்டரில் கைதேர்ந்தவரான மாதவனும் இருக்கிறார். பிரேமின் வழிகாட்டுதலின்படி விஜய் சேதுபதியை என்கவுண்டர் செய்வதற்காக வேதாவை அந்த குழு தேடி வருகிறது.

    இந்நிலையில், விஜய் சேதுபதி இருக்கும் இடம் குறித்து ரகசிய தகவல் ஒன்று கிடைக்க, மாதவன் உள்ளிட்ட அந்த குழு சம்பவ இடத்திற்கு விரைந்து, அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. இதில் குற்றவாளி இல்லாத ஒரு நபரையும் என்கவுண்டர் செய்து விடுகிறார்கள். மேலும் அந்த நபரை குற்றவாளி என்றும் போலீஸ் அறிக்கையில் அறிவிக்கின்றனர். இதுஒருபுறம் இருக்க மாதவனுக்கு வழக்கறிரான ஷரத்தா ஸ்ரீநாத்துடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.

    இந்நிலையில், முதல் திட்டம் தோல்வியடைந்ததை அடுத்து, விஜய் சேதுபதி இருக்கும் இடம் குறித்த தகவல் மீண்டும் கிடைக்க, இந்த முறை விஜய் சேதுபதியை கட்டாயம் என்கவுண்டர் செய்துவிட வேண்டும் என்று பெரிய படையே செல்கிறது. ஆனால் விஜய் சேதுபதி அவராகவே காவல் நிலையத்திற்கு நேரில் சென்று சரணடைகிறார். தனி ஆளாக வந்து சரணடைந்த விஜய் சேதுபதியிடம் மாதவன் விசாரணை நடத்துகிறார். அப்போது, தனது வாழ்க்கையில் நடந்த கதை ஒன்றை சொல்லும் விஜய் சேதுபதி, அதிலிருந்து கேள்வி ஒன்றை கேட்கிறார்.

    மாதவன் அந்த கேள்விக்கு பதில் சொன்ன உடனேயே, விஜய் சேதுபதிக்கு ஜாமீன் கிடைத்து வெளியே சென்றுவிடுகிறார். விஜய் சேதுபதியை ஷரத்தா ஸ்ரீநாத் ஜாமீனில் எடுக்கிறார். இந்நிலையில் பிரேம் கொலை செய்யப்படுகிறார். இதனிடையே மாதவன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருவரும் பிரிந்து விடுகின்றனர். பிரேமை கொலை செய்தது விஜய் சேதுபதி தான் என்று மாதவன், விஜய் சேதுபதியை என்கவுண்டர் செய்ய தேடி வருகிறார். ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதியை கண்டுபிடித்து அவரை கைதும் செய்கிறார்.

    பின்னர் பிரேம் கொலை குறித்து விஜய் சேதுபதியிடம் மீண்டும் விசாரணை நடத்தும் மாதவனிடம், விஜய் சேதுபதி மீண்டும் ஒரு கதை சொல்லி கேள்வி கேட்கிறார்.

    இவ்வாறாக வேதா(ளம்) எனப்படும் விஜய் சேதுபதி விக்ரம்(ஆதித்தன்) எனப்படும் மாதவனிடம் கதை சொல்லி, அதிலிருந்து கேள்வி கேட்டு, அதில் ஒரு புதிர் ஒன்றை வைக்கிறார். அந்த புதிருக்கு பின்னால் என்ன இருக்கிறது என்று தேடிக் கண்டுபிடிக்கும் மாதவன் அதன் பின்னணியை எப்படி கண்டுபிடிக்கிறார்? அதில் என்ன உண்மை புதைந்து கிடக்கிறது? விஜய் சேதுபதி என்ன ஆனார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    வேதாளத்தின் கேள்விக்கு பதில் சொல்லும் விக்ரமாதித்தனாக நடித்திருக்கும் மாதவனின் கதாபாத்திரம் படத்திற்கே பலம். மாதவனைத் தவிர இந்த கதாபாத்திற்கு வேறு யார் நடித்திருந்தாலும் பொருத்தமாக இருக்காது என்று கூறுமளவுக்கு ஒரு போலீசாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது நேர்த்தியான நடிப்பால் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. இறுதிச் சுற்று படத்திற்கு பிறகு மாதவன் மீண்டும் தனது ஸ்டைலை நிரூபித்திருக்கிறார்.

    விஜய் சேதுபதி ஒரு மாஸான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். வேதாளமாக புதிர் போட்டு அதற்கு பதிலை தேட வைக்கும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் ரசிக்கும்படி இருக்கிறது. விஜய் சேதுபதி ஒரு தாதாவாகவே வாழ்ந்திருக்கிறார். விஜய் சேதுபதி பேசும் வசனங்களுக்கு எப்போதும் போல நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அவரது தம்பியாக கதிர் குறைவான காட்சிகளில் வந்தாலும், முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

    வழக்கறிஞராக வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வரலட்சுமி அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இருவரது கதாபாத்திரமும் ரசிக்கும்படி இருக்கிறது. இவர்களுடன் பிரேம் குமார் மஸ்தோ, ராஜ்குமார் என பலரும் படத்திற்கு பக்கபலமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறனர்.

    ஓரம் போ, வா கோட்டர் கட்டிங் படத்திற்கு பிறகு புஷ்கர் - காயத்ரி இயக்கியிருக்கும் விக்ரம் வேதா, சென்னையை ஆட்டிப்படைக்கும் தாதாக்களுக்கும், அவர்களை ஒழிக்க நினைக்கும் போலீசுக்கும், அதனிடையே நடக்கும் புதிருக்கும் இடையே நடக்கும் கதையாக உருவாகி இருக்கிறது. 6 வருட இடைவெளிக்கு பிறகு புஷ்கர் - காயத்ரியின் இணை இயக்கத்தில் திரைக்கதையை சிறப்பாக அமைத்திருக்கிறார்கள். முன்னணி இரண்டு  நாயகர்களை ஒரே படத்தில் கையாளுவது என்பது எளிதல்ல. அதேபோல் இருவரது கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது சிறப்பு.

    சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் அனைத்துமே ரசித்து கேட்கும்படி இருக்கிறது. படத்தின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பின்னணி இசைக்கு திரையரங்கில் விசில் பறக்கிறது. பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவில் சென்னை கேங்ஸ்டர்களை தெளிவாக காட்டியிருக்கிறார்கள்.

    மொத்தத்தில் `விக்ரம் வேதா' ரணகளம்.
    ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இயக்கத்தில், ஆதி - விவேக் - ஆத்மிகா நடிப்பில் வெளியாகியிருக்கும் `மீசைய முறுக்கு' படத்தின் விமர்சனம்.
    நாயகன் ஹிப்ஹாப் தமிழா ஆதி கோவையில் அப்பா விவேக், அம்மா விஜயலட்சுமி, தம்பி அனந்த்ராமுடன் வாழ்ந்து வருகிறார். விவேக் மற்றும் விஜயலட்சுமி கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகின்றனர். பாரதியாரின் தீவிர பக்தரான விவேக் தமிழ் மொழியின் மீது அதீத ஈடுபாடு உடையவர். விவேக்கின் இந்த பற்று, ஆதியையும் தமிழின் மீது ஈடுபாடுடையவராக மாற்றுகிறது. இதையடுத்து பாரதியாரின் கவிதைகள் உள்ளிட்ட தமிழ் புத்தகங்களை படிக்க ஆரம்பிக்கிறார்.

    ஆதியும், விக்னேஷும் சிறுவயது முதலே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். ஆதிக்கு சிறவயதிலேயே இசை மீது ஈர்ப்பு இருப்பதை அறிந்த விவேக், ஆதிக்கு ஒரு கீ-போர்டை பரிசாக வழங்குகிறார். அதுமுதல் ஆதி - விக்னேஷ் இருவருமே அந்த கீ-போர்டு இல்லாமல் இருப்பதில்லை. இவர்களுடைய இசைப்பயணம் இதுமுதல் ஆரம்பமாகிறது.

    இதுஒருபுறம் இருக்க, தன்னுடன் பள்ளியில் படித்து வரும் ஆத்மிகா மீது ஆதிக்கு ஈர்ப்பு வருகிறது. இந்நிலையில், ஆத்மிகா வேறு பள்ளிக்கு சென்று விடுகிறார். வெகுநாட்களாக ஆத்மிகாவை சந்திக்காத ஆதி, தனது பள்ளிப்பருவத்தை முடிக்கும் நிலையில் ஆத்மிகாவை மீண்டும் சந்திக்கிறார். பின்னர் ஆத்மிகா மீது இருந்த ஈர்ப்பு, காதலாக மாறுகிறது. தனது பள்ளிப் படிப்பை முடிக்கும் தருணத்தில் தனது விருப்பத்தை ஆத்மிகாவிடம் தெரிவிக்க முயற்சி செய்கிறார். இந்நிலையில் ஆதி, ஆத்மிகா பின்னால் சுற்றுவதற்கு அந்த பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து சண்டை பிடிக்க, இந்த பிரச்சனை காவல் நிலையம் வரை செல்கிறது.

    இதையடுத்து ஆதி வீட்டில் இருந்தால் மேலும் ஏதாவது பிரச்சனை கிளம்பும் என்பதால், ஆதியை கல்லூரி விடுதியிலேயே சேர்த்து விடுகிறார் விவேக். ஆதியின் நண்பன் விக்னேஷும் அதே கல்லூரியிலேயே சேர்கிறார். இந்நிலையில், அதே கல்லூரியில் படித்து வரும் ஆத்மிகாவை பார்க்கும் ஆதிக்கு சந்தோஷத்தின் உச்சத்திற்கு செல்கிறார். பின்னர் இவர்களது ஈர்ப்பு அதிகமாகி, பின்னர் அது காதலாகவும் மாறிவிடுகிறது.

    இதனுடன் தனது இசை ஆர்வத்தையும் வளர்த்து வரும் ஆதி, பல்வேறு கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். பின்னர் கல்லூரி படிப்பை முடிக்கும் போது, ஆதியின் வாழ்க்கை குறித்து விவேக் கேட்கும் போது, சென்னை சென்று தான் இண்டிபெண்டன்ட் இசையில் சாதிக்க வேண்டும் என்று கூறுகிறார். ஆதியின் முடிவுக்கு விவேக் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஆதியின் ஆசைப்படி செல்ல அனுமதிக்கும் விவேக், ஆதிக்கு ஒரு வருடமே அவகாசம் அளிக்கிறார். அந்த ஒரு வருடத்தில் இசையில் வெற்றி பெறாவிட்டால் தனது விருப்பப்படி மேற்படிப்பு படிக்க வேண்டும் என்கிறார் விவேக்.

    இந்நிலையில், சென்னை வரும் ஆதி, என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தார்? எப்படி வெற்றி பெற்றார்? அவரது காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, பாடல்கள், நடிப்பு என அனைத்தையும் தனது முதல் படத்திலேயே சிறப்பாக கையாண்டிருக்கிறார். அவரது இசை எப்படி இருக்கும் என்பது நாம் அறிந்ததே. அதையும் தாண்டி நடிப்பிலும் தன்னால் சாதிக்க முடியும் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். இந்த படம் அவருடைய சொந்த வாழ்க்கையின் தழுவலே என்பதால், அந்த கதாபாத்திரத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். இயக்குநராக இருந்தும், தனது கதாபாத்திரத்தை மிகைப்படுத்தாமல், கதாபாத்திரத்திற்கு தேவையானதை கொடுத்திருப்பது ரசிக்க வைக்கிறது. நடினத்திலும் தன்னை நிரூபித்திருக்கிறார்.

    ஒரு அப்பாவாக, தமிழ் பற்றாளனாக விவேக்கின் கதாபாத்திரம் படத்திற்கே ஒரு உந்துகோலாக இருக்கிறது. அதற்கேற்றாற் போல் அவரது நடிப்பும் ரசிக்க வைத்திருக்கிறது. குறிப்பாக அவர் பேசும் வசனங்களுக்கு திரையரங்கில் விசில் பறக்கிறது.  

    முதல் படம் போல இல்லாமல் ஆத்மிகாவும் நடிப்பில் கலக்கியிருக்கிறார். ஆதியுடனான காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. அதேபோல் அனந்த்ராம், விக்கேஷ், கோபி அரவிந்த், அன்பு, துனியா சுதாகர் உள்ளிட்ட யூடியூப் பிரபலங்கள் பலரும் இயல்பான நடிப்பால் கவர்கின்றனர்.

    ஒரு புதுமுக இயக்குநர் போல இல்லாமல் காட்சிகளில் கைதேர்ந்தவராக ஆதி கலக்கியிருக்கிறார். குறிப்பாக திரைக்கதை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. நடிகர், நடிகைகள் தேர்விலும் ஆதி ஒரு வெற்றிக் கூட்டணியை உருவாக்கியிருக்கிறார். படத்தில் இடம்பெறும் வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம். பாரதியின் பற்றாளன் என்பதையும், ஒரு இயக்குநராகவும் தனது முதல் படத்திலேயே நிரூபித்திருக்கும் ஆதிக்கு பாராட்டுக்கள்.

    வழக்கம் போல ஆதியின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. அவருடைய ஆல்பம் மற்றும் பாடல்கள் படத்தில் இடையிடையே வருவது ரசிக்க வைக்கிறது. மேலும் சில நினைவுகளையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக வாடி புல்ல வாடி ஆல்பம் அவரது வாழ்க்கையை தழுவியே தனது மனதில் இருந்தே எழுதியிருப்பார் என்பதை படத்தை பார்க்கும் போது உணர முடிகிறது. கிருத்தி வாசன், யு.கே.செந்தில் குமார் இருவரது ஒளிப்பதிவில் காட்சிகள் இளைய தலைமுறையை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. ஃபென்னி ஆலிவரின் படத்தொகுப்பு ரசிக்க வைக்கிறது. புதுமையை முயற்சி செய்திருப்பது படத்தை பார்க்கும் போது தெரிகிறது.

    மொத்தத்தில் `மீசைய முறுக்கு' நறுக்குனு இருக்கு.
    ஆர்.முத்துக்குமார் இயக்கத்தில் ராமகிருஷ்ணன் - லீமா பாபு நடிப்பில் வெளியாகியிருக்கும் `எந்த நேரத்திலும்' படத்தின் விமர்சனம்.
    நாயகன் ராமகிருஷ்ணன் கோத்தகிரி அருகே அவரது அப்பா, அக்கா சாண்ட்ரா ஏமி, மாமா யாஷ்மித் என தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் நாயகி லீமா பாபு. லீமாவை சந்தித்த முதல் பார்வையிலேயே ராமகிருஷ்ணனுக்கு காதல் வந்து விடுகிறது. இதையடுத்து தனது காதலை லீமாவிடம் தெரிவிக்க, லீமாவும் ராமகிருஷ்ணனின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டுகிறார். 

    இதையடுத்து லீமாவை தனது குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யும் ராமகிருஷ்ணன், லீமாவை முதலில் தனது அக்கா சாண்டாராவிடம் கூட்டிச் செல்கிறார். லீமாவை பார்த்து அதிர்ச்சியடைந்த சாண்ட்ரா, லீமாவிடம் பேசாமல் அங்கிருந்து சென்று விடுகிறாள். இதையடுத்து லீமாவை தனது வீட்டிற்கே ராமகிருஷ்ணன் கூட்டிச் செல்கிறார்.

    அங்கு லீமாவை பார்த்த ராமகிருஷ்ணன் வீட்டார் அனைவருமே அதிர்ச்சியுடனான பீதிக்கு உள்ளாகின்றனர். மேலும் அனைவருமே லீமாவிடம் பேசாமல் அங்கிருந்து சென்று விடுகின்றனர். குடும்பத்தினர் அனைவரும் ஏன் லீமா பார்த்து அதிர்ச்சியடைகின்றனர் என்ற காரணம் தெரியாமல் ராமகிருஷ்ணன் விழித்துக் கொண்டிருக்கிறார்.

    இந்நிலையில், சாலை விபத்து ஒன்றில் ராமகிருஷ்ணனின் அப்பா மற்றும் மாமா யாஷ்மித் இறந்துவிடுகின்றனர். இதனால் தீராத மனவேதனையில் இருக்கும் சாண்ட்ரா, ராமகிருஷ்ணன் மற்றும் தனது மகளை கூட்டிக்கொண்டு அவர்களது பூர்வீக வீட்டிற்கே திரும்ப சென்று விடுகிறார். அந்த வீட்டிக்கு சென்ற பிறகு இரவு நேரத்தில் சாண்ட்ராவுக்கு சில அமானுஷ்யங்கள் நிகழ்கின்றன. அதில் லீமாவின் ஆவி சாண்ட்ராவுக்கு தொல்லை கொடுப்பது போன்று தோன்றுகிறது.

    இதுபோன்ற தொல்லைகளால் அவதிப்படும் சாண்ட்ரா என்ன செய்தார்? சாண்ட்ராவை லீமாவின் ஆவி தொல்லை செய்வது உண்மையா? லீமாவை பார்த்து சாண்ட்ராவும், அவளது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்து ஏன்? ராமகிருஷ்ணன் - லீமாவின் காதல் வெற்றி பெற்றதா? இருவரும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ராமகிருஷ்ணன், எப்போதும் போல அலெட்டல் இல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார். திகில் படத்திற்கு ஏற்ப அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. லீமாவுடனான காதல் காட்சிகளிலும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்திற்கே திருப்புமுனையாக லீமாவின் காட்சிகள் செதுக்கப்பட்டிருப்பது சிறப்பு. காதல் காட்சிகளிலும், திரையிலும் லீமா அழகு தேவதையாக வந்து செல்கிறார்.

    சிவப்பு எனக்கு பிடிக்கும் படத்திற்கு பிறகு சாண்ட்ரா எமிக்கு ஒரு வலுவான கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. அதற்கேற்ப அவரது நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. யாஷ்மித் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பும் வரவேற்கும்படி இருக்கிறது.

    ஒரு கதைக்குள், மற்றொரு கதையை இணைத்து அதில் திகில் கலந்த ஒரு படத்தை இயக்கியிருக்கும் ஆர்.முத்துக்குமாருக்கு பாராட்டுக்கள். படம் முழுக்க கோத்தகிரியையே சுற்றி இருப்பதால், படத்தின் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. படத்தின் கதை சிறப்பாக இருந்தாலும், திரைக்கதையில் திகிலை கொஞ்சம் கூட்டியிருக்கலாம் என்பது நேயர்களின் விருப்பமாக இருக்கிறது.

    பி.சதீஷின் பின்னணி இசையில் பாடல்கள் கேட்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது. சாலை சகாதேவனின் ஒளிப்பதிவில் கோத்தகிரி ரம்மியமாக காட்டப்பட்டுள்ளது. காட்சிகளும் தெளிவாக இருப்பது படத்தின் பலத்தை மேலும் கூட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் `எந்த நேரத்திலும்' பயம் வரவில்லை.
    ×