என் மலர்tooltip icon

    தரவரிசை

    இன்பசேகர் இயக்கத்தில் உமாபதி - ரேஷ்மா ரத்தோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `அதாகப்பட்டது மகாஜனங்களே' படத்தின் விமர்சனம்.
    அப்பாவியான நாயகன் உமாபதி கிதார் வாசிப்பதில் வல்லவர். இதனால், அவரது அப்பா பாண்டியராஜன் தன்னுடைய அப்பாவின் நினைவாக உமாபதியின் புகைப்படத்துடன் அவரது முழு விவரம் அடங்கிய கிதார் ஒன்றை அவருக்கு பரிசாக அளிக்கிறார். இந்நிலையில், நாயகனின் நண்பர் பெரிய தொழிலதிபரான நரேனின் வீட்டில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். அவர், நாயகனுக்கு போன் செய்து தனக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும், தான் அவசரமாக அங்கு செல்லவேண்டும் என்பதால், நான் வரும்வரை என்னுடைய வேலையை நீ பார்க்கவேண்டும் என்று நாயகனிடம் கெஞ்சுகிறார்.

    நாயகனும் மனமிறங்கி, அந்த வீட்டில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். வேலைக்கு வந்த சிறிது நேரத்தில் அவர் மயங்கிவிடுகிறார். மயக்கம் தெளிந்தபோது அந்த வீட்டில் அனைவரும் மயங்கிய நிலையில் கிடக்கிறார்கள். இதைப் பார்த்ததும் தன்னுடைய நண்பனுக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்கிறார் நாயகன். நண்பரும் என்னால் நீ மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று அவரை அங்கிருந்து கிளம்ப சொல்கிறார். அடுத்தபடியாக நண்பரும் போலீசுக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை புகாராக கொடுக்கிறார்.



    உடனே அங்கிருந்து கிளம்பும் உமாபதி தான் கொண்டு வந்த கிதாரை அங்கேயே விட்டு விட்டு சென்றுவிடுகிறார். சிறிது நேரம் கழித்து கிதார் நினைவில்வர, அதை எடுப்பதற்காக மீண்டும் நரேனின் வீட்டுக்கு சென்று கிதாரை தேடிப் பார்க்கிறார். ஆனால், கிதார் அங்கு இல்லை. அந்த கிதாரில் தன்னுடைய முழு விவரமும் இருப்பதால், ஒருவேளை போலீஸ்தான் அதை எடுத்துச் சென்றிருப்பார்களோ? என்று பயப்படுகிறார் நாயகன். இதனால் தான் மாட்டிக் கொள்வோம் என்றும் பயப்படுகிறார்.

    மறுநாள் தன்னுடைய நெருங்கிய நண்பரான கருணாகரனிடம் சென்று நடந்த விஷயங்களை கூறி, தன்னைக் காப்பாற்ற அவரால் மட்டுமே முடியும் என்று நம்பி உதவி கேட்கிறார். இதற்குள், கொள்ளையர்கள் கிதார் மாட்டிக்கொண்டு வந்திருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகிறது. அதன்பிறகு, தன்னுடைய கிதார் கொள்ளையர்கள் வசம்தான் இருக்கிறது என்பது தெரிந்துகொண்ட நாயகன், எப்படியிருந்தாலும் அந்த கிதார் போலீஸ் வசம் கிடைத்தால் தான் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்துக்கொண்டு கருணகாரனை வைத்து இந்த பிரச்சினையை தீர்க்க பார்க்கிறார்.



    ஆனால் உண்மையிலேயே பயந்தாங்கொள்ளியான கருணாகரன் இவருடைய பிரச்சினையை எப்படி தீர்த்து வைத்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    தம்பி ராமையாவின் மகனான நாயகன் உமாபதி நடிப்பில் அடுத்தடுத்து உயரத்தை தொடுவார் என்ற நம்பிக்கையை இந்த படத்தில் கொடுத்திருக்கிறார். அப்பாவித்தனமான கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்து காமெடியிலும் கலக்கியிருக்கிறார். நடனத்திலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். தம்பிராமையாவின் பெயரை இவர் நிச்சயம் காப்பாற்றுவார் என்பது இந்த படத்தின் மூலம் தெரிகிறது.

    நரேனின் மகளாக வரும் கதாநாயகி ரேஷ்மா ரத்தோர் நடிப்பில் ஓகேதான். நாயகனுக்கு அப்பாவாக வரும் பாண்டியராஜனுக்கு படத்தில் நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பு கொடுக்கவில்லை. இருப்பினும் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தொழிலதிபராக வரும் நரேன் நகைச்சுவையான கதாபாத்திரத்தை ரொம்பவும் சிறப்பாகவே செய்திருக்கிறார்.



    மனோபாலாவுக்கு இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம். கடைசியில், இவரது கதாபாத்திரம் கொடுக்கும் டுவிஸ்டு பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும். கருணாகரன் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அவர் இன்னொரு நாயகன் என்றே சொல்லலாம். படம் முழுவதும் அடிவாங்குவதும், அதை சமாளிப்பது என இவரது கதாபாத்திரம் நகர்ந்து சென்றிருக்கிறது. அதை வித்தியாசப்படுத்தி நடித்து அனைவரையும் வயிறு குலுங்க வைத்திருக்கிறார்.

    தம்பி ராமையா ஒரு காட்சி வந்தாலும் நிறைவாக செய்துவிட்டு போயிருக்கிறார். இயக்குனர் இன்பசேகர் ஒரு இன்பமான கதையை உருவாக்கி, அதை ரசிகர்களுக்கு கலகலப்பாக கொடுத்திருக்கிறார். தன்னுடைய கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்வதிலேயே பாதி வெற்றி பெற்றுவிட்டார். குடும்பத்தோடு சென்றால் கலகலப்பாக பொழுதை கழிக்கலாம் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறார். படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.



    பி.கே.வர்மா ஒளிப்பதிவு படத்தை கலர்புல்லாக காட்டியிருக்கிறது. இமான் இசையில் பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம். பின்னணி இசையிலும் கதைக்கு தேவையான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ கலகலப்பு.
    விஷ்ணு - வர்ஷா - இஷாரா நாயர் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘இவன் யாரென்று தெரிகிறதா’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    நாயகன் விஷ்ணு கல்லூரியில் படித்து முடித்துவிட்டு பொறுப்பில்லாமல் நண்பர்கள் அர்ஜுனன், ராஜ்குமார் ஆகியோருடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். இவருடைய அப்பாவான ஜெயப்பிரகாஷும் விஷ்ணுவை ரொம்பவும் செல்லமாக வளர்த்து வருகிறார்.

    பொறுப்பில்லாமலும், அப்பாவித்தனமாகவும் இருக்கும் விஷ்ணுவை அவரது நண்பர்கள் தங்கள் காதலுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களுக்கு உதவுவதாக தனது அப்பாவித்தனத்தால் விஷ்ணு தனது நண்பர்களை அவ்வப்போது பிரச்சினையில் மாட்டி விடுகிறார்.



    இதனால் கோபமடைந்த அவரது நண்பர்கள் விஷ்ணுவுக்கு காதலே அமையாது என்று அவருக்கு சாபம் விடுகிறார்கள். ஆனால், விஷ்ணுவோ காதலர் தினத்தில் பிறந்த எனக்கு காதல் அமையாதா? நான் யாரையாவது காதலித்து காட்டுகிறேன் என்று அவர்களுக்கு சவால் விட்டு செல்கிறார்.

    அப்போது, கல்லூரியில் படிக்கும்போது இவருடன் படித்த இஷா நாயர், இவரை தேடி வந்து காதலை சொன்னது ஞாபகம் வரவே, அவளை தேடிப் போய் தனது காதலை சொல்கிறார். ஆனால், இஷா நாயருக்கோ திருமணம் ஆகி, குழந்தையெல்லாம் இருக்கிறது. உடனே ஏமாற்றத்துடன் திரும்பும் விஷ்ணு சப்-இன்ஸ்பெக்டரான நாயகி வர்ஷாவை பார்க்கிறார்.



    அவளை எப்படியாவது காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் அவள் பின்னாலேயே சுற்றுகிறார். இறுதியில், வர்ஷாவை காதலிக்க வைத்து, தனது நண்பர்களுக்கு விடுத்த சவாலை விஷ்ணு நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

    சின்னத்திரையில் நடித்து வந்த விஷ்ணு, அவ்வப்போது சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். இந்த படத்தில் முழுநீள ஹீரோவாக மாறியிருக்கிறார். அப்பாவித்தனமான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நண்பர்களுடன் சேர்ந்து இவர் செய்யும் சேட்டைகள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன.

    நாயகனின் நண்பர்களாக வரும் அர்ஜுனன், ராஜ்குமார் இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நாயகிகளில் இஷாரா நாயர் ஏற்கெனவே நாம் பல படங்களில் பார்த்த முகம்தான். இந்த படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருக்கிறார். தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார்.



    டப் மாஷில் புகழ்பெற்ற வர்ஷா ஹீரோயின் அவதாரம் எடுத்திருக்கும் படம். படத்தில் இவருடைய கதாபாத்திரம்தான் ரொம்பவும் சீரியஸாக செல்லும். அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். படத்திற்கு ரொம்பவும் பலம் அருள்தாஸ், பக்ஸ், ராம்ஸ் செய்யும் அமர்க்களம்தான். திருட்டு கும்பலான இவர்கள் செய்யும் சேட்டைகள் படத்தின் கலகலப்புக்கு கியாரண்டி.

    இயக்குனர் சுரேஷ்குமார் தனது முதல் படத்தில் காதல் மற்றும் அதற்குள் காமெடி கலந்து கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். இப்படத்தின் முதல் பாதி ரொம்பவும் மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி ரொம்பவும் கலகலப்பாக நகர்ந்திருக்கிறது. குடும்பத்துடன் சென்று பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு படமாக இதைக் கொடுத்திருக்கிறார்.

    என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிக்கும்படியாக உள்ளது. அதேபோல், பின்னணி இசையும் ஓகே சொல்ல வைக்கிறது. பி&ஜியின் ஒளிப்பதிவும் பாராட்டும்படி இருக்கிறது.

    மொத்தத்தில் ‘இவன் யாரென்று தெரிகிறதா?’ கலகலப்பு.
    ஆர்.கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியாகி இருக்கும் இவன் தந்திரன் படத்தின் விமர்சனம்.
    இன்ஜினியரிங் படித்து வந்த நாயகன் கவுதம் கார்த்திக் மற்றும் அவரது நண்பன் ஆர்.ஜே.பாலாஜி, படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கும் பிரபலபான இடத்தில் கடை ஒன்றை ஆரம்பிக்கின்றனர். அங்கு லேப்டாப், கணினி, மொபைல் போன் உள்ளிட்டவற்றை பல எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். எலக்ட்ரானிக் மீது அதீத ஈடுபாடு உடைய கவுதம் கார்த்திக் பல்வேறு புதிய முயற்சிகளிலும் ஈடுபடுகிறார்.

    அதன் பயனாக ஆப்பிள், ஆண்ட்ராய்டு போன்ற, தனித்துவமான புதிய மொபைல் போன் ஒன்றையும் உருவாக்குகிறார். பின்னர் அந்த போனை விற்பனை செய்ய பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார். இதுஒருபுறம் இருக்க நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத், கவுதம் கார்த்திக்கிடம் இருந்து லேப்டாப் ஒன்றை வாங்கி செல்கிறார். அந்த லேப்டாப்பில் ஏற்பட்ட பழுதின் காரணமாக இவர்களது சந்திப்பு மோதலுக்கு செல்கிறது.



    அதே நேரத்தில் அமைச்சர் சூப்பர் சுப்பராயன் வீட்டில் கேமரா மாட்டும் பணி கவுதம் கார்த்திக்குக்கு கிடைக்கிறது. கேமரா வைத்துவிட்டு, அதற்கான பணத்தை சுப்பராயனின் மச்சானான ஸ்டன்ட் சில்வாவிடம் கவுதம் கார்த்திக் கேட்க, பணம் கொடுக்காமல் கவுதமை விரட்டி விடுகிறார் சில்வா. இதனால் கடுப்பாகும் கவுதம் கார்த்திக், தனக்கு வரவேண்டிய பணத்தை சில்வாவிடம் வசூலித்தே ஆக வேண்டும் என்று உறுதியுடன் இருக்கிறார்.

    இந்நிலையில், பல இன்ஜினியரிங் கல்லூரிகளில் தரமான கல்வி இல்லை என்று அமைச்சர் சூப்பர் சுப்பராயன், குறி்பிட்ட கல்லூரிகளுக்கு தடை விதிக்கிறார். அதில் நாயகி ஷ்ரத்தா படிக்கும் கல்லூரியும் ஒன்று. இவ்வாறாக கல்லூரிகளுக்கு தடை விதிப்பது போல் விதித்து பணம் சம்பாதிக்கும் முயற்சியில் சுப்பராயன் ஈடுபடுகிறார். அமைச்சருக்கு பணம் கொடுப்பதற்காக மாணவர்களிடம் இருந்து கல்லூரி நிர்வாகம் பணம் கேட்க, பணத்தை கொடுக்க முடியாமல், மாணவர் ஒருவர் கவுதம் கார்த்திக் முன்னிலையிலேயே தற்கொலை செய்து கொள்கிறார்.



    இந்த பிரச்சனைக்கு சுப்பராயன் தான் காரணம் என்று கவுதம் கார்த்திக்குக்கு தெரிய வர, தனது சாதுரியத்தின் மூலம் அமைச்சருக்கு எதிரான ஆதரங்களை திரட்டுகிறார். இதையடுத்து சூப்பர் சுப்பராயன் குறித்த தகவல்களை ரகசியமாக இணையதளங்களில் வெளியிடுகிறார். இதனால் சூப்பர் சுப்பராயனின் அமைச்சர் பதவியும் பறிக்கப்படுகிறது. இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு, மீண்டும் அமைச்சராக முயற்சி செய்கிறார் சுப்பராயன்.

    மறுபுறத்தில் அமைச்சரை மாட்டி விட்டது கவுதம் கார்த்திக் தான் என்பதை கண்டுபிடித்துவிடும் சில்வா, கவுதமை தேடி செல்கிறார். இந்நிலையில், கல்லூரி பிரச்சனையில் தன்னை பற்றிய தகவல் வெளியேறி விடக்கூடாது என்பதால், தனது மச்சான் சில்வாவையும், சுப்பராயன் கொலை செய்து விடுகிறார். இதையடுத்து அவரது பதவி பறிபோக காரணமானது கவுதம் தான் என்பதை அமைச்சர் கண்டுபிடித்து பழிவாங்கினாரா? அல்லது கவுதம் அமைச்சரை வெளிவரமுடியாத சிக்கலில் சிக்க வைத்தாரா? ஷ்ரத்தாவுடனான மோதல் காதலில் முடிந்ததா? என்பதே மீதிக்கதை.



    சமீப காலமாக வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கவுதம் கார்த்திக், கல்லூரியில் இருந்து வெளியேறினாலும், செய்முறையில் இன்ஜினியரிங் மாணவர்களை விட சிறந்து விளங்குபவராக ஜொலிக்கிறார். இன்ஜினியராக இல்லாவிட்டாலும், அதற்குறிய தனித்துவத்துடன் வலம் வந்து ரசிக்க வைத்திருக்கிறார். அவரது நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது.

    காற்று வெளியிடை படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். முதல் படத்திலேயே ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் ரசிக்கும்படி இருந்தாலும், நடுத்தர வீட்டு பெண் என்று கூறிவிட்டு, பார்ப்பதற்கு பணக்கார வீட்டு பெண் போல இருப்பது படத்திற்கு மைனஸ்.



    நகைச்சுவையில் ஆர்.ஜே.பாலாஜி ரசிக்க வைக்கிறார். பல கவுண்டர்கள் கொடுத்தாலும், ஒரு சில கவுண்டர்களுக்கே சிரிக்க முடிகிறது.  இன்ஜினியரிங் படித்து வேலையின்றி இளைஞர்கள் கஷ்டப்படுவதை அவ்வப்போது சுட்டிக்காட்டுகிறார். நகைச்சுவை கலந்த எதார்த்தத்தை எடுத்துரைத்திருக்கிறார்.

    சூப்பர் சுப்பராயன், ஸ்டன்ட் சில்வா இருவருமே மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். அமைச்சருக்குண்டான கெத்துடன் வலம் வரும் சூப்பர் சுப்பராயன் பார்வையிலேயே மிரட்டுகிறார். மற்றபடி பாரத் ரெட்டி, மயில்சாமி, மதன் பாப் காமெடி கலந்த நடிப்புடன் காட்சிக்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.



    படிப்பு இல்லை என்ற ஒரு குறை இல்லை. இன்ஜினியரிங் படித்தால் தான் உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்ற எண்ணத்தில் இருப்பர்களுக்கு, தனது தனித்துவத்தின் மூலமாக உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியும். அதற்கான முயற்சியில் தொடந்து ஈடுபட்டால் அடுத்தடுத்த நிலைக்கு செல்லலாம் என்பதை கூறியிருக்கும் இயக்குநர் ஆர்.கண்ணனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம். தனக்குரிய தனித்துவத்தின் மூலம் யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் எதிர்க்கலாம் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார். ஒரு நல்ல கதையை சிறப்பாக இயக்கி இருந்தாலும், திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டிருந்தால், படம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

    தமனின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது. இவன் தந்திரன் பின்னணி இசை கேட்கும்படி இருக்கிறது. பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் டிஜிட்டல் லுக்கில் சிறப்பாக வந்திருக்கிறது.

    மொத்தத்தில் `இவன் தந்திரன்' சிக்கலானவன்.
    நட்டி குமார் இயக்கத்தில் அகில் - நயனா - சோனியா அகர்வால் நடிப்பில் வெளியாகி இருக்கும் `எவனவன்' படத்தின் விமர்சனம்.
    சொந்தமாக தொழில் செய்து வரும் நாயகன் அகில், நாயகி நயனாவை காதலித்து வருகிறார். இவர்களது காதலுக்கு நயனாவின் அம்மா மற்றும் அப்பா டெல்லி கணேஷ் சம்மதம் தெரிவிக்கின்றனர். ஒருநாள் நயனாவின் பெற்றோர் வெளியூர் செல்ல, வீட்டில் தனியாக இருக்கும் நயனா, அகிலை துணைக்கு அழைக்கிறாள். இவ்வாறு நயனா வீட்டிற்கு செல்லும் அகில், நயனா இருவரும் வேறு வேறு அறைகளில் தங்குகின்றனர். அடுத்த நாள் காலை, நயனா குளிப்பதை தனது மொபைலில் வீடியோ எடுத்து அதனை நயனாவிடம் காண்பிக்கிறார்.

    அந்த வீடியோவை பார்த்து அகில் மீது கோபமடையும் நயனா, அதனை அழிக்க சொல்ல, அகில் வீடியோவை அழித்து விடுகிறார். ஆனால் தனது வீட்டிற்கு சென்று அந்த வீடியோவை ரெக்கவரி போட்டு எடுத்து விடுகிறார். இந்நிலையில், அகிலின் போன் தொலைந்து போகிறது. மற்றொரு நாயகனான சரணிடம் சிக்கும் அந்த போனை தரச்சொல்லி அகில், அவரை மிரட்டுகிறார்.



    இதனால் கோபமடையும் சரண், போனில் ஏதேனும் இருக்குமோ என்று சந்தேகித்து, போனில் என்ன இருக்கிறது என்று பார்க்கிறார். இதில் நயனாவின் குளியல் வீடியோ இருக்க, காதலியை இப்படி வீடியோ எடுத்திருக்கிறாயே என்று சரண், அகிலை விமர்ச்சிக்கிறார். இதையடுத்து, சரண் என்ன சொன்னாலும் தான் செய்யத் தயாராக இருப்பதாக அகில் கூற, அவருக்கு தண்டனையாக சமூகத்தில் இவரை போன்று தவறுகள் செய்யும் சிலரை அகில் மூலமாக சரண் பாடம் புகட்டுகிறார்.

    இதில் அமைச்சர் ஒருவரை பொதுமேடையில் செருப்பால் அடிக்க வேண்டும் என்கிறார். சரணின் பேச்சை கேட்டு அகிலும், அமைச்சரை செருப்பால் அடித்துவிட்டு, பின்னர் அமைச்சரை தனியாக சந்தித்து, மொபைல் தொலைந்தது முதல், அதில் இருக்கும் வீடியோ வரை அனைத்தையும் கூறி மன்னிப்பு கேட்கிறார். அந்தநேரம் பார்த்து, அமைச்சரை சந்தித்து பேசும் நயனா, தான் அகிலை காதலிப்பதாக அவரது போட்டோவை காட்ட அமைச்சர் கோபத்தின் உச்சிக்கே செல்கிறார். மேலும் அகில் கூறிய அனைத்தையும் நயனாவிடம் சொல்லிவிடுகிறார்.



    பின்னர் நயனாவை சந்திக்கும் அகிலிடம், அந்த அமைச்சர் தான் தனது அண்ணன் என்று நயனா கூற அகில் அதிர்ச்சி அடைகிறார். இதுஒருபுறம் இருக்க சரண் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் அகில், தனது நண்பர்கள் உதவியுடன் அவரை அடித்து, உதைத்து கடலில் தூக்கி எறிந்து விடுகிறார்.

    இந்நிலையில், நயனா காணாமல் போக, அமைச்சரின் உத்தரவால் போலீஸ் அதிகாரிகளான அசோகன், சோனியா அகர்வால், அகிலை கைது செய்கின்றனர். இந்த விசாரணையில் நடந்தது அனைத்தையும் அகில் போலீசிடம் கூறுகிறார். இந்நிலையில், கடலில் தூக்கி எறிந்த அந்த நபரும் திரும்ப வர, அந்த நபர் எப்படி உயிருடன் வந்தார்? அகில் - நயனாவின் காதல் வெற்றி பெற்றதா? நயனாவின் அண்ணனின் எதிர்ப்பை மீறி இருவரும் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    நாயகன் அகில், நயனா நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் காட்சிகள் பார்பதற்கு ரசிக்கும்படியாக இல்லை. நடிகர் அசோகன்  படத்திற்காக சிறப்பு உடற்பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார். அது படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. அவரது உழைப்புக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம். சமீபகாலமாக படவாய்ப்புகள் அமையாததால், கிடைக்கும் வேடத்தில் நடத்து வரும் சோனியா அகர்வால், இப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக சிறப்பாக நடித்திருக்கிறார். இதற்கு முன்னதாக சாயா படத்திலும் சோனியா போலீஸாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் காட்சிக்கு ஏற்ப ஆங்காங்கே வந்து செல்கிறது.

    திட்டமிட்டு செயல்படுவதிலும், செயல்படுத்துவதிலும் இளைஞர்கள் புத்திசாலிகள் என்றாலும், விளைவுகள் பற்றி  தெரியாமல் இறங்கி சிரமப்படும் இளைஞர்கள் சிலரும் உண்டு. இது போல் சின்ன தவறுதானே செய்கிறோம். அதனால் என்ன பெரிதாக வந்து விட போகிறது என்று நினைத்து இளைஞன் ஒருவன் செய்த தவறால் அவன் என்ன சிக்கலில் மாட்டுகிறான். அவனது வாழ்க்கையில் என்னென்ன நடந்தது? என்பதை படமாக இயக்கி இருக்கிறார் நட்டி குமார்.



    ஃபெடோ பேட்டின் பின்னணி இசை படத்திற்கு ஓரளவு பலத்தை கூட்டியிருக்கிறது. அருண் பிரசாத்தின் ஔிப்பதிவு சுமார் ரகம் தான். படம் பார்பதற்கான மனநிலையே இல்லாமல், சீரியல் தொகுப்புகளை இணைத்து பார்த்தால் எப்படி இருக்குமோ, அந்த சிந்தனையே இருக்கிறது.

    மொத்தத்தில் `எவனவன்' சொல்ல முடியவில்லை.
    பிரசாந்த் ஜி சேகர் இயக்கத்தில் அஸ்வின் ஜெரோம் - நாயகி வர்ஷா பொலம்மா நடிப்பில் வெளியாகி இருக்கும் `யானும் தீயவன்' படத்தின் விமர்சனம்.
    அமைச்சராக வரும் சந்தானபாரதியின் ஆதரவில் ஊரின் முக்கிய தாதாவாக வலம் வருகிறார் ராஜு சுந்தரம். அமைச்சரின் ஆதரவாளர் என்பதால் போலீஸ் கூட அவரிடமிருந்த ஒதுங்கியே இருக்கிறது. இருந்தாலும் அவரது நடவடிக்கைகளை கவனித்து வருகிறது. காவல் அதிகாரியாக வரும் பொன்வண்ணன், ராஜு சுந்தரம் செய்து வரும் தவறுகளை மேலோட்டமாக கவனித்து வருகிறார்.

    மறுபுறத்தில் நாயகன் அஸ்வின் ஜெரோம் - நாயகி வர்ஷா பொலம்மா இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வருகின்றனர். வசதியான வீட்டைச் சேர்ந்த இருவரும் காதலித்து வருகின்றனர். மகிழ்ச்சியாக காதலித்து வரும் இவர்கள், ஒருநாள் வெளியே சென்று வருகையில், மதுபோதையில் அங்கு வரும் ராஜு சுந்தரம் மற்றும் அவரது கூட்டாளிகள் மூன்று பேர் வர்ஷாவை கிண்டல் செய்கின்றனர். ஒரு கட்டத்தில் வர்ஷாவை தரகுறைவாக திட்டியும் விடுகின்றனர்.



    இதனால் கடுப்பாகும் அஸ்வின் அவர்களை அடிக்க செல்கிறார். இந்நிலையில், அஸ்வினை சமாதானப்படுத்தும் வர்ஷா, அவனை அங்கிருந்து கூட்டிச் செல்கிறார். வர்ஷாவை அவளது வீட்டில் பத்திரமாக கொண்டுவிடும் அஸ்வின் மீண்டும் அதே இடத்திற்கு சென்று, வர்ஷாவை கிண்டல் செய்த ராஜு சுந்தரம் மற்றும் அவரது கூட்டாளிகளை சரமாரியாக தாக்கிவிட்டு செல்கிறார்.

    ஊருக்கே தாதாவாக வலம் வந்த தன்னை, சாதாரண இளைஞன் ஒருவர் தாக்கி சென்றதால், அவனை கொலை செய்ய முடிவு செய்யும் ராஜு சுந்தரம், அஸ்வினை தேடி வருகிறார். இந்த பிரச்சனை ஒருபக்கம் இருக்க, அமைச்சர் சந்தான பாரதிக்கு எதிராக செயல்படுகிறார். இதனால் கோபமடையும் சந்தான பாரதி, ராஜு சுந்தரத்தை கைது செய்ய உத்தரவிடுகிறார். இந்நிலையில், பெற்றோரின் சம்மதம் கிடைக்காத அஸ்வினும், வர்ஷாவும் ரகசிய திருமணம் செய்து ராஜு சுந்தரம் வசிக்கும் வீட்டின் மேல்மாடியில் குடிபெயர்கின்றனர்.



    அஸ்வினை தேடிவரும் ராஜு சுந்தரம், தனது வீட்டிற்கு மேல் மாடியிலேயே அஸ்வின் இருப்பதை தெரிந்து கொண்டு, இருவரையும் பிணையக் கைதியாக பிடித்து வைத்துக் கொள்கிறான். பின்னர் அவர்களை கொலை செய்ய முடிவு செய்யும் ராஜு, அவர்களை வைத்து போலீசில் இருந்து தப்பிக்கவும் முடிவு செய்கிறான். இவ்வாறாக ராஜு சுந்தரத்திடம் மாட்டிக் கொண்ட அஸ்வின், எப்படி தப்பித்தார்? போலீஸ் ராஜுவை கைது செய்ததா? அஸ்வின் - வர்ஷாவின் திருமணத்தை அவர்களது பெற்றோர் ஏற்றுக் கொண்டார்களா என்பது படத்தின் மீதிக்கதை.

    நாயகன் அஸ்வின் தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதல் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் அவரது நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. வர்ஷா அழகு பதுமையாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். நஸ்ரியா சாயலில் இருக்கும் இவரது நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. வர்ஷா வரும் காட்சிகளில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.



    ராஜு சுந்தரத்தின் கதாபாத்திரம் தான் படத்திற்கே பலம். இதற்கு முன்பு அவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்துமே காமெடி கலந்த சாயலில் இருக்கும். ஆனால் இந்த படத்தில் மாஸான தாதாவாக வலம் வரும் ராஜு சுந்தரம், கதைக்கு ஏற்ப மிரட்டி இருக்கிறார். பொன்வண்ணன், சந்தான பாரதி முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். விடிவி கணேஷ், அருண்ராஜா காமராஜ், ஜாங்கிரி மதுமிதா கதையின் போக்குக்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.

    எல்லோருடைய மனதிலும் ஒரு  நல்லவன், ஒரு தீயவன் இருப்பான். சூழ்நிலைக்கு ஏற்ப அவன் வெளிப்படுவான். அதனை படத்தின் மூலம் தெரிவிக்க முயன்றிருக்கும் இயக்குநரின் முயற்சிக்கு பாராட்டுக்கள். எந்த ஒரு விஷயத்தையும் சிந்தித்து செய்ய வேண்டும். யோசிக்காமல் செய்வதால் ஏற்படும் விளைவுகளை காதல், கிரைம் கலந்து உருவாக்கி இருக்கிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கும் பிரசாந்த் ஜி சேகர் திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டு இருக்கலாம்.



    அச்சுராஜாமணியின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்களும் கேட்கும்படி இருக்கிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக இருக்கிறது. காட்சிகளில் மிரள வைத்திருக்கிறார்.

    மொத்தத்தில் `யானும் தீயவன்' மாற்றம் கொண்டவன்.
    மூன்று தலை கொண்ட சுறாவின் அட்டகாசத்தை மையப்படுத்தி வெளிவந்துள்ள த்ரீ ஹெட்டெட் ஷார்க் அட்டாக் படத்தின் விமர்சனம்.
    கடலுக்கு மேல் கட்டப்பட்ட ஆராய்ச்சி கூடத்தில் விசித்திரமான கடல்வாழ் உயிரினங்களை கண்டறிந்து, அவைகளின் வாழ்வாதாரம் கடலுக்கடியில் எப்படி இருக்கிறது? அவை எந்த சூழ்நிலையில் வாழ்கின்றன என்பது குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

    இவர்கள் ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்கும்போதே 3 தலை கொண்ட சுறா ஒன்று இவர்களது ஆராய்ச்சிக் கூடத்தை தாக்குகிறது. இதனால், அங்கிருந்து அனைவரும் தப்பித்துப் போக நினைக்கிறார்கள். அந்த சுறாவின் தாக்குதலில் ஆராய்ச்சி கூடம் அழிந்துபோகவே, அங்கிருந்து அனைவரும் ஒரு படகு மூலம் தப்பித்து செல்கிறார்கள்.



    செல்லும் வழியில் இவர்கள் ஒரு உல்லாச படகை பார்க்கிறார்கள். அவர்களிடம் சென்று உதவி கேட்கலாம் என்கிற பட்சத்தில் 3 தலை கொண்ட அந்த சுறா உல்லாச படகை தாக்கி, அதில் பயணம் செய்பவர்களை கொல்கிறது. இதில் சில பேர் காயத்துடன் தப்பிக்கிறார்கள்.

    இதற்குள், ஆராய்ச்சி கூடத்தில் பணிபுரிந்தவர்களும் அந்த உல்லாச படகை அடைகிறார்கள். காயமடைந்தவர்களையும் காப்பாற்றுகிறார்கள். மறுபடியும் அந்த சுறா உல்லாச படகை தாக்கி மற்றவர்களையும் கொன்று சாப்பிட துடிக்கிறது. இறுதியில், அந்த சுறாவிடமிருந்து அனைவரும் தப்பித்தார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

    இரண்டு தலை சுறாவின் அட்டகாசத்தை கண்டுகளித்த வரிசையில் தற்போது மூன்று தலை கொண்ட சுறாவை மையப்படுத்தி இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் கிறிஸ்டோபர் ரே. மூன்று தலை கொண்ட சுறாவை காட்சிப்படுத்தியதில் கிராபிக்ஸ் நன்றாகவே தெரிகிறது. அதேபோல், படத்தில் லாஜிக் இல்லாத சில சம்பவங்களும் இடம் பெற்றிருப்பதால் ஹாலிவுட் தரத்திற்கு இதை நினைத்துப் பார்க்கமுடியவில்லை.



    ஆராய்ச்சிக்கூடத்தில் இருந்து தப்பிக்கும் சமயத்தில் தூரத்தில் நிற்கும் படகை பிடிப்பதற்காக கடலுக்குள் இறங்கி நடக்கும் ஒவ்வொருவரும் சுறாவிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற பயத்துடனே செல்லும் காட்சிகளில் எல்லாம் நமக்கும் பயம் தொற்றிக் கொள்கிறது. படத்தில் ஆரம்பத்தில் மூன்று தலை சுறா கரையில் நின்று கொண்டிருப்பவர்களை தலைக்கு ஒருவரை கடித்து திங்கும் காட்சிகளில் இயக்குனரின் கற்பனையை பாராட்டியே ஆகவேண்டும்.

    மொத்தத்தில் ‘த்ரி ஹெட்டெட் ஷார்க் அட்டாக்’ ரசிக்கலாம்.
    ரவி ராகுல் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள ‘சலாம்’ படத்தின் விமர்சனம்
    வெளியூரிலிருந்து தனது நண்பனின் ஊரான இராமேஸ்வரத்திற்கு வருகிறார் நாயகன். அந்த ஊரில் இஸ்லாம் மற்றும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் மதத்தால் வேறுபட்டாலும், எல்லோரும் மச்சான், மாப்பிள்ளை, அண்ணன், தம்பி என்று அனைவரும் ஒருவருக்கொருவர் உரிமையோடு பழகி வருகிறார்கள்.

    இந்நிலையில், அந்த ஊரிலேயே தன்னுடைய நண்பன் செய்யும் தொழிலுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார் நாயகன். அவர் அந்த ஊரிலேயே இருக்கப்போகிறார் என்று ஊரில் உள்ள அனைவரிடமும் சொல்லி வருகிறார் நாயகனின் நண்பன். இதனால், நாயகனையும் தங்கள் வீட்டில் உள்ள ஒரு பையன்போலவே அனைவரும் அவரை நடத்தி வருகிறார்கள். ஆனால், நாயகனோ அந்த ஊரில் நடக்கும் சில விஷேசங்களையெல்லாம் ஏதோ காரணங்களுக்காக ஒதுக்கியே வருகிறார்.



    அதேஊரில், நாயகியை ஒரு விபத்தில் இருந்து காப்பாற்றுகிறார் நாயகன். ஆனால், நாயகனை தவறாக புரிந்துகொண்ட நாயகி அவரை அடித்து விடுகிறார். ஒருகட்டத்தில் தன்மீது தான் தப்பு இருக்கிறது என்பதை உணர்ந்த நாயகிக்கு நாயகன் மீது காதல் வருகிறது.

    இதற்கிடையில் நாயகன் வசிக்கும் ஊருக்கும் வரும் சம்பத், நாயகனின் போட்டோவை அந்த ஊரில் உள்ள அனைவரிடமும் காட்டி அவரைப் பற்றிய விவரங்கள் கேட்கிறார். ஆனால், யாரும் நாயகனை தங்களுக்கு தெரியவில்லை என்றே சொல்கிறார்கள்.



    உண்மையில் நாயகன் அந்த ஊருக்கு வரக் காரணம் என்ன? நாயகனை தேடி வரும் சம்பத் யார்? எதற்காக நாயகனை தேடுகிறார்? நாயகி தனது காதலை நாயகனிடம் சொன்னாரா? இவர்களது காதலை அந்த ஊர் மக்கள் ஏற்றுக் கொண்டார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகனான ரவி ராகுல் படம் முழுக்க ஏதோ சோகம் வழிந்த முகத்துடனே வந்து போகிறார். படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருந்தும் கொஞ்சம் நடிப்பதற்கு முயற்சி செய்திருக்கிறார். புதுமுகம் என்பதால் இவரிடம் பெரிதாக எதிர்பார்க்க முடியாது என்றாலும், கதைக்கு பொருத்தவரை அவருடைய நடிப்பு போதும் என்பதுபோல் தான் தோன்றுகிறது.

    நாயகிக்கும் படத்தில் ரொம்பவும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். அவரும் தனது கதாபாத்திரத்திற்குண்டான வலு தெரிந்து அதை மேலும் சிறப்பாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். படத்தில் நிறைய பார்த்த முகங்கள் இருந்தாலும் அவரவர் தங்கள் கதாபாத்திரக்குண்டான நடிப்பை கொடுத்து படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.



    இயக்குனர் ரவி ராகுல், இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒரு கருத்தை படத்தில் சொல்ல வந்திருக்கிறார். இன்றைய சூழ்நிலையில் அனைவரும் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொருவருக்குள்ளும் மனிதநேயத்தை வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், சொல்லவேண்டிய கருத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

    தருண் ஆண்டனியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசை ஓகே சொல்ல வைக்கிறது. மகிபாலன் ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    மொத்தத்தில் ‘சலாம்’ சலாம் போடலாம்.
    ஜெயம் ரவி-சாயிஷா நடிப்பில் விஜய் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘வனமகன்’ படத்தின் விமர்சனம்
    சாயிஷா சிறுவயதில் இருக்கும்போது அவளுடைய பெற்றோர் ஒரு விபத்தில் இறந்துவிட, அதன்பிறகு சாயிஷாவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பிரகாஷ் ராஜ் வசம் வருகிறது. அதன்பின்னர், பிரகாஷ் ராஜ் சாயிஷாவின் பெயரில் நிறைய தொழில்கள் தொடங்கி சாயிஷாவை பெரிய தொழிலபதிர் ஆக்குகிறார். சாயிஷா பெயரிலேயே எல்லா சொத்துக்களும் இருப்பதால், தன்னுடைய மகனான வருணுக்கு அவளை திருமணம் செய்துவைத்து சொத்துக்களை தன்வசமாக்க நினைக்கிறார் பிரகாஷ் ராஜ்.

    இந்நிலையில், அந்தமானுக்கு சுற்றுலா செல்லும் போது, காட்டுவாசியான ஜெயம் ரவியின் மீது கார் ஏற்றிவிடுகிறார்கள். அடிபட்டு கிடக்கும் ஜெயம் ரவிக்கும் சிகிச்சை அளிப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்கிறார்கள். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்க முடியாததால் இந்தியா கொண்டு வந்துவிடுகிறார்கள். அவருக்கு சிகிச்சை அளித்து நல்ல நிலைமைக்கு கொண்டு வருகிறார்கள். ஆனால், அவர் பழைய நினைவுகளை இழந்துவிடுகிறார்.



    மேலும், காடுதான் எல்லாமே என்று வாழ்ந்துவந்த ஜெயம் ரவிக்கு நகர வாழ்க்கை புதுமையாக தெரிகிறது. அதேபோல், மற்றவர்கள் பேசும் மொழியும் இவருக்கு வியப்பை கொடுக்கவே, அவர்களிடமிருந்து தனித்தே வாழ்கிறார். இதற்கிடையில், சாயிஷா காட்டுவாசிகளிடம் எப்படி பழகவேண்டும் என்று தெரிந்துகொண்டு ஜெயம் ரவியுடன் நட்பு வளர்க்கிறாள். நாளடைவில் ஜெயம் ரவி சாயிஷாவின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறார்.

    இந்நிலையில், காணாமல்போன ஜெயம் ரவியை தேடி அந்தமான் காட்டு இலாகா அதிகாரிகள் இந்தியாவுக்கு வருகிறார்கள். ஜெயம் ரவியை பிடித்துக்கொண்டு அந்தமான் செல்கிறார்கள். ஜெயம் ரவியை மீட்பதாக சாயிஷாவும் அந்தமான் போகிறார். போலீஸ் நிலையத்திலிருந்து தப்பிக்கும் ஜெயம் ரவி, சாயிஷாவை கூட்டிக்கொண்டு காட்டுக்குள் செல்கிறார்.

    அப்போதுதான் ஜெயம்ரவிக்கு அனைத்துமே ஞாபகத்துக்கு வருகிறது. காட்டில் அவர் பிறந்து வளர்ந்தது, அவருக்கென்று ஒரு கூட்டம் இருந்தது, கார்ப்பரேட் கம்பெனிக்காரர்கள் தங்களுடைய இருப்பிடத்தை அழிக்க நினைத்து தன்னுடைய ஆட்களை எல்லாம் காட்டை விட்டே துரத்தியது என அனைத்துமே அவருடைய நினைவில் வருகிறது.



    சாயிஷாவை தன்வசம் வைத்துக்கொண்டு தன்னுடைய இனத்தை எப்படி கண்டறிந்தார்? கார்ப்பரேட் கம்பெனிக்காரர்களையும் எப்படி அங்கிருந்து விரட்டி அடித்தார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

    ஜெயம் ரவி இப்படத்தில் ஒரு இடத்தில்கூட வசனமே பேசவில்லை. படம் முழுக்க தனது முகபாவனையிலேயே நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதை மிகவும் நேர்த்தியாகவே செய்திருக்கிறார்கள். இப்படத்தில் இவர் கஷ்டப்பட்டு உழைத்திருப்பது படம் பார்க்கும்போதே தெரிகிறது.

    சாயிஷா பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார். நடனமும் சுழன்று சுழன்று ஆடியிருக்கிறார். எல்லாம் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. நடிப்பிலும் சபாஷ் சொல்ல வைக்கிறார். பிரகாஷ் ராஜ் தனது அனுபவ நடிப்பை கொடுத்து படத்திற்கு பலம் சேர்க்க முயற்சித்திருக்கிறார்.



    வருணுக்கும் படத்தில் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தம்பி ராமையாவின் காமெடி சமீபகால படங்களில் கேட்டு புளித்துப்போனதாகவே இருப்பதால் பெரிதாக எடுபடவில்லை. அர்ஜுனன், வேல ராமமூர்த்தி, ரம்யா சுப்ரமணியன், சாம் பால் உள்ளிட்டோரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு எற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

    வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து படமாக்கிவரும் விஜய், இந்த படத்திலும் வித்தியாசமான கதையை கையிலெடுத்திருக்கிறார். கஷ்டப்பட்டு உழைக்கக்கூடிய நடிகர்களை வைத்து வேலை வாங்கிவிட்டு திரைக்கதையில் சொதப்பியிருக்கிறார். இவர் காமெடியாக எடுத்த காட்சிகளில் எல்லாம் சுத்தமாக சிரிக்கவே தோன்றவில்லை.



    காட்டில் வாழ்பவர்கள்தான் மனிதர்களாக வாழ்கிறார்கள். நகரத்தில் வாழும் சிலபேரால் நாம் காட்டுவாசியாகவே தெரிகிறோம் என்ற ஆழமான கருத்தையும் சமூகத்திற்கு சொல்ல வந்திருக்கிறார். காட்டுவாசிகளின் போர்க்குணம், அவர்களின் குணாதிசயங்களை ஜெயம் ரவி மூலமாக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

    ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லையென்றாலும், பின்னணி இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது. திருவின் ஒளிப்பதிவு அந்தமான் காடுகளை வளைத்து வளைத்து படமாக்கியிருக்கிறது. காட்சிகளிலும் குளுமை இருக்கிறது.

    மொத்தத்தில் ‘வனமகன்’ நம் வசமில்லை.
    சிம்பு-ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் வெளிவந்துள்ள ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் விமர்சனம்.
    துபாயில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் கஸ்தூரி, துபாயில் பெரிய டானாக இருப்பவரை தேடிக்கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். பெரிய டானுக்கு நெருக்கமானவர்களை சுற்றி வளைக்கிறது போலீஸ். அப்போது மஹத்தையும் கைது செய்து விசாரிக்கிறது. அப்போது அவர் ‘அஸ்வின் தாத்தா’ பற்றிய கதையை கூற ஆரம்பிக்கிறார்.

    அதன்பின்னர் 70 காலகட்டத்தை நோக்கி பிளாஷ் பேக் விரிகிறது. மதுரையில் நண்பர்கள் விடிவி கணேஷ், மஹத் உடன் வாழ்ந்து வருகிறார் சிம்பு (மதுர மைக்கேல்). நண்பர்கள்தான் உலகமே என்று வாழ்ந்துவரும் சிம்பு, மதுரையில் இருக்கும்  மிகப்பெரிய ஆளுக்கு கீழ் அடியாளாக பணியாற்றி வருகிறார். இதனால், ஊரிலேயே மிகவும் கெத்தான ஆளாக வலம்வருகிறார் சிம்பு.



    இந்நிலையில், ஒருநாள் ஸ்ரேயாவை பார்க்கும் சிம்புவுக்கு அவள்மீது காதல் வருகிறது. முதலில் சிம்புவை கண்டுகொள்ளாத ஸ்ரேயா ஒருகட்டத்தில் அவரை காதலிக்க ஆரம்பிக்கிறாள். இரண்டு பேரும் சேர்ந்து ஊரை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவெடுக்கையில், சிம்பு அடியாளாக பணியாற்றுபவரின் மகன் சிம்புவை போலீசில் மாட்டிவிடுகிறான்.

    சிம்பு ஜெயிலுக்கு போன நேரத்தில் ஸ்ரேயாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை நடத்த பார்க்கிறார்கள். அப்போது, சிம்புவின் நண்பர்கள் அவரை ஜெயிலில் இருந்து தப்பிக்க வைத்து, ஸ்ரேயாவிடம் சேர்த்து வைக்க நினைக்கிறார்கள். ஜெயிலில் இருந்து தப்பிக்கும் சிம்பு, ஸ்ரேயாவை மணமுடித்தால் அவளால் நம்முடன் நிம்மதியாக வாழமுடியாது என்று முடிவெடுத்து, ஊரை விட்டு ஓடி தலைமறைவாகிறார்.

    பின்னர் நாட்கள் கடக்கிறது. சிம்புவுக்கும் வயதாகிவிடுகிறது. வயதானபிறகு ‘அஸ்வின் தாத்தா’ என்று அழைக்கப்படும் சிம்பு, தன்னுடைய நண்பர் விஜயகுமார் தன்னைவிட இளம் வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டதை பார்த்து, தானும் அதேபோல் இளம் வயது பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். அதற்காக, வயதானவரை திருமணம் செய்துள்ள பெண்கள் வேண்டும் என்று விளம்பரமும் கொடுக்கிறார்.



    அந்த விளம்பரத்தை பார்த்து நிறைய பேர் வருகிறார்கள். அதில், தமன்னாவும் வருகிறார். தமன்னா மணப்பெண்ணாகத்தான் வந்திருக்கிறாள் என்று நினைக்கும் சிம்பு, அதன்பின்னர், அவள் கோவை சரளாவுக்கு மாப்பிள்ளை தேடித்தான் அங்கு வந்திருப்பதை அறிகிறார். இருப்பினும், தமன்னாவுடன் நட்பு வளர்த்து வருகிறார்.

    இந்த நட்பு நாளடைவில் இருவருக்குள்ளும் காதலாக மாறியதா? இல்லையா? என்பதே முதல்பாகத்தின் மீதிக்கதை. கஸ்தூரி தேடும் டானுக்கும், இந்த கதைக்கும் என்ன சம்பந்தம்? என்பதை இரண்டாம் பாகத்தில் சொல்லவிருக்கிறார்கள்.

    இரண்டு பாகமாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகத்தில் சிம்பு, மதுர மைக்கேல், அஸ்வின் தாத்தா என்ற இரண்டு கெட்டப்புகளில் வருகிறார். மதுர மைக்கேல் கெட்டப்பில் இவர் அறிமுகம் காட்சி அவர் சொல்வதுபோலவே சிறப்பு. மதுர மைக்கேல் கெட்டப்புகளில் ரொம்பவும் மாஸாக காட்டியிருக்கிறார்கள். அதற்கேற்றார்போல், இவருடைய நடிப்பும் படத்திற்கு ரொம்பவும் மாஸாக இருக்கிறது. அறிமுக பாடலில் ரசிகர்களின் தோளின்மீதே நின்று இவர் ஆடும் ஆட்டம் மெய்சிலிர்க்க வைக்கிறது.



    அஸ்வின் தாத்தா கெட்டப்பில் கொழுக் மொழுக்கென்று இருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கேற்றவாறு நடிப்பிலும், நகைச்சுவையிலும் ரசிக்க வைத்திருக்கிறார். இருப்பினும், இதுவெல்லாம் சிம்புவின் ரசிகர்களுக்கு திருப்திபடுத்தும்படி அமைந்திருக்கிறதா? என்றால் அது கேள்விக்குறியே. சிம்புவின் நண்பராக வரும் மஹத் தனக்கு என்ன வருமோ? அதை அப்படியே திரையில் பிரதிபலித்திருக்கிறார்.

    விடிவி கணேஷ் வழக்கம்போல காமெடி, செண்டிமெண்ட் என ரசிக்க வைத்திருக்கிறார். நான் கடவுள் ராஜேந்திரன் வழக்கம்போல் தன்னுடைய குரலாலேயே ரசிகர்கள் வயிறு குலுங்க வைத்திருக்கிறார். ஸ்ரேயா எளிமையாக வந்து எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்திருக்கிறார். அமைதியான முகம், மென்மையான கோபம் என தன்னுடைய நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

    தமன்னா கிளாமர் உடையில் வந்து அனைவரையும் கிளுகிளுப்பூட்டியிருக்கிறார். வயதான தாத்தாவை காதலிக்கும் வெகுளியான பெண்ணாகவும், முதியோர் காப்பகத்தை ஏற்று நடத்தும் பொறுப்பான பெண்ணாகவும் எளிதாக நம்மை கவர்கிறார்.



    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், சிம்பு ரசிகர்களின் நாடித்துடிப்பை ரொம்பவும் நுணுக்கமாக அறிந்து வைத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். எந்தெந்த இடத்தில் ரசிகர்களை துள்ளி எழ வைக்கலாம் என்பதை அறிந்துகொண்டு அதற்கேற்றார்போல் காட்சிகளை அமைத்திருக்கிறார். அதேபோல், ஒரு கமர்ஷியல் படத்துக்குண்டான அத்தனை அம்சங்களும் இந்த படத்திலும் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், படத்தின் திரைக்கதையில் ரொம்பவும் கோட்டை விட்டுவிட்டார். அதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக ரசிக்கும்படியாக படம் இருந்திருக்கும்.

    யுவனின் பின்னணி இசைதான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. மதுர மைக்கேல் தீம் மியூசிக்தான் படத்தில் மிகப்பெரிய மாஸ். பாடல்களும் காட்சிகளுடன் பார்க்கும்போது கூடுதல் சிறப்பாக இருக்கிறது. கிருஷ்ணன் வசந்த்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. 90-களில் நடக்கும் காலகட்டத்திற்கு ஏற்ற ஒளியமைப்பை வைத்து அந்த காலத்தோடு ஒன்ற வைத்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’  சிறப்பு இல்லை.
    டெஸ்பிகபில் மீ அனிமேஷன் பட வரிசையில் மூன்றாவது பாகமாக வெளிவந்திருக்கும் ‘டெஸ்பிகபில் மீ 3’ படத்தின் விமர்சனம்
    பிராட் சிறுவயதிலிருந்து டிவி சீரியல்களில் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதனால், இவருக்கு ரசிகர்கள் ஏராளம். இவருடைய உருவத்தில் பொம்மைகள் எல்லாம் வெளியாகி அனைவர் மத்தியிலும் பிரபலமாகிவிடுகிறார். ஒருகட்டத்தில் இவருடைய சீரியல் நிறுத்தப்பட இவரது மார்க்கெட் சட்டென்று சறுக்குகிறது.

    இதனால், விரக்தியடையும் பிராட் நிஜ வாழ்க்கையிலும் வில்லனாகிறார். ஒருமுறை கப்பலில் இருக்கும் வைரத்தை திருடுவதற்கு பிராட் செல்கிறார். அதை கண்டுபிடித்து அவரை பிடிக்கும் முயற்சியில் உளவுத்துறை ஏஜென்டான க்ரூவும் அவரது மனைவியும் செல்கிறார்கள். சென்ற இடத்தில் வைரத்தை அவனிடமிருந்து மீட்டுவிடுகிறார்கள். ஆனால், பிராட் இவர்களிடமிருந்து தப்பித்து விடுகிறார்.



    இதனால் க்ருவையும் அவரது மனைவியையும் உளவுத்துறை ஏஜென்ட் பதவியிலிருந்து அவரை தூக்குகிறார்கள். இந்நிலையில், க்ரூ இரட்டை பிறவி என்றும், அவருக்கு ஒரு சகோதரர் இருப்பதும் தெரிய வருகிறது. எனவே, தனது சகோதரரை தேடி புறப்படுகிறார் க்ரூ.

    பெரிய செல்வந்தரான க்ரூவின் சகோதரர், ஏகப்பட்ட செல்வங்கள் இருந்தும் தன்னுடைய அப்பாவைப் போல் பெரிய வில்லனாக ஆகமுடியவில்லையே என்ற வருத்தத்தில் இருக்கிறார். இதனால், ஏற்கெனவே வில்லனாக இருந்து மிகப்பெரிய சாகசங்கள் செய்த க்ரூவிடம் தானும் அதேபோல் வில்லனாக ஆகவேண்டுமென்று உதவி கேட்கிறார்.



    ஆரம்பத்தில் மறுக்கும் க்ரூ, ஒருகட்டத்தில் தனது சகோதரனின் ஆசையை நிறைவேற்ற முன்வருகிறார். இதற்குள், க்ரூவால் கைப்பற்றப்பட்ட வைரத்தை பிராட் மறுபடியும் திருடி சென்றுவிடுகிறார். இதை அறிந்த க்ரூ, அந்த வைரத்தை திருடி, தனது சகோதரனை வில்லனாக்குவதற்காக பயிற்சி கொடுக்க முடிவெடுக்கிறார். இதற்காக பல திட்டங்கள் போட்டு அந்த வைரத்தை இரண்டு பேரும் சேர்ந்து திருட முயற்சி செய்கிறார்கள்.

    இறுதியில், அந்த வைரம் இவர்கள் கைக்கு கிடைத்ததா? தன்னைப் போலவே தனது தம்பியையும் பெரிய வில்லனாக க்ரூ மாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    டெஸ்பிகபில் மீ பட வரிசையில் மூன்றாவது பாகமாக வெளிவந்துள்ள படம்தான். முந்தைய பாகங்களைப்போலவே இந்த பாகமும் ரொம்பவும் கலகலப்பாக செல்கிறது. முக்கியமாக பிராட் கப்பலில் வைரத்தை திருடச் செல்லும்போது அவர் செய்யும் சேஷ்டைகள் எல்லாம் ரொம்பவும் கலகலப்பாக இருக்கிறது.



    அதேபோல், இந்த பாகத்தில் க்ரூவின் சகோதரர் செய்யும் குறும்புகளும் ரசிக்க வைக்கிறது. இவர் சீரியசாக செய்யும் விஷயங்கள் எல்லாம் நமக்கு காமெடியாக இருக்கிறது. மின்னியன்ஸ்களுக்கு ஆரம்பத்தில் அவ்வளவாக வேலை இல்லாவிட்டாலும் பிற்பாதிக்கு பிறகு அவைகளின் சேட்டைகள் எல்லாம் கலகலப்பூட்டியிருக்கின்றன.

    படம் முழுவதும் காமெடி மழை பொழிந்திருந்தாலும் ஆங்காங்கே செண்டிமெண்ட் காட்சிகளும் இருக்கிறது. அவை கதை ஓட்டத்திற்கு எவ்வித தடையையும் ஏற்படுத்தவில்லை. எல்லா கதாபாத்திரங்களையும் ரொம்பவும் நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்கள்.

    மொத்தத்தில் ‘டெஸ்பிகபில் மீ 3’ நகைச்சுவை விருந்து.
    அபிஷேக், அர்ச்சனா சிங் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘வெருளி’ படத்தின் விமர்சனம்.
    படத்தின் ஆரம்பத்திலேயே மினி பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது. இந்த விபத்தில் சில பேர் உயிரிழக்கிறார்கள். சில பேர் காயத்துடன் உயிர் தப்பிக்கிறார்கள். போலீஸ் அதிகாரியான நாயகன் அபிஷேக் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருப்பவர்களை எல்லாம் அப்புறப்படுத்தி, அந்த இடத்தில் சிதறிக் கிடக்கும் பொருட்களையெல்லாம் சேகரிக்கும்போது ஒரு எந்திர தகடும் கிடைக்கிறது. அதையெல்லாம் எடுத்து காவல் நிலையத்தில் அபிஷேக் வைக்கச் சொல்கிறார்.

    இந்நிலையில், இரவு ரோந்து பணியின்போது ஒரு தம்பதியிடம் மர்ம நபர் ஒருவர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட முயற்சிக்கிறார். அப்போது, அவர்களை அபிஷேக், தம்பதியரை அந்த மர்ம நபரிடமிருந்து காப்பாற்றுகிறார். அந்த இடத்திலும் அபிஷேக்குக்கு ஒரு எந்திர தகடு கிடைக்கிறது. மினி பஸ் விபத்து நடந்த இடத்திலிருந்து கிடைத்த எந்திர தகடும், வழிப்பறி கொள்ளை நடந்த இடத்தில் கிடைத்த எந்திர தகடும் ஒன்றையொன்று ஒத்துப்போகிறது.



    நடந்த சம்பவங்களுக்கும் அந்த தகட்டுக்கும் ஏதாவதும் சம்பந்தம் இருக்குமா? என்று விசாரித்துக் கொண்டிருக்கையில், டிவி ரிப்போர்ட்டரான நாயகி அர்ச்சனா சிங் இந்த தகவலை அறிந்துகொண்டு அவளும் இதுகுறித்த விசாரணையில் களமிறங்குகிறாள். இதன்பின்னர், ஒரு விபத்தில் குழந்தை இறக்க, அந்த இடத்திலும் ஒரு எந்திர தகடு கிடைக்கிறது.

    அந்த தகடுக்கும் இந்த சம்பவத்துக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்பதை அப்போதுதான் அபிஷேக் உறுதிபடுத்துகிறார். உண்மையில் அந்த தகடுக்கும் நடந்த சம்பவங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இதெல்லாம் எதற்காக நடக்கிறது? யாரெல்லாம் இதன் பின்னணியில் இருந்து செயல்படுகிறார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.



    நாயகன் அபிஷேக் போலீஸ் அதிகாரிக்குண்டான மிடுக்குடன் படம் முழுக்க வலம் வந்திருக்கிறார். விசாரணை செய்யும் விதம், மற்றவர்களிடம் பேசும் விதம் எல்லாமே அருமையாக இருக்கிறது. ரிப்போர்ட்டராக வரும் நாயகி அர்ச்சனா சிங், தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.

    பிற்பாதியில் வரும் பாக்யராஜ் தனது அனுபவ நடிப்பை கொடுத்து படததிற்கு பலம் சேர்த்திருக்கிறார். பாசம், செண்டிமெண்ட் காட்சிகளில் அனைவரையும் உறைய வைத்திருக்கிறார். அவருடைய மகனாக நடித்திருக்கும் அசோக் பாண்டியனும் தனது பங்குக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ராணுவ அதிகாரியாக வரும் ரவி பிரகாஷ், அபிஷேக்குக்கு உதவி செய்யும் காட்சிகளில் எல்லாம் சிறப்பாக நடித்திருக்கிறார்.



    இயக்குனர் அமுதவாணன், திரில்லர் கதையில் சமூக அக்கறையுடன் ஒரு கருத்தையும் படத்தில் சொல்ல வந்திருக்கிறார். படம் ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும், நகரத்தில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களுக்கும் காரணம் என்னவென்று விசாரணை செய்ய ஆரம்பிக்கும் நிலையிலிருந்து படம் வேகமெடுக்கிறது. படத்திற்கு விளம்பரம் இல்லாததுதான் இப்படத்தை பற்றிய பேச்சு பெரிய அளவில் இல்லாமல் போயிற்று. படத்திற்கு நன்றாக விளம்பரப்படுத்தியிருந்தால் கண்டிப்பாக அனைவரிடத்திலும் இப்படம் நல்ல மதிப்பை பெற்றிருக்கும்.

    ராஜ் பிரதாப், தினேஷ் ராஜா ஆகியோரின் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்காவிட்டாலும், பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார்கள். சிவா பிரபுவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘வெருளி’ வெறுக்கவில்லை.
    பிரெயின் ஃபீ இயக்கத்தில் `கார்ஸ்' பட பாகங்களின் தொடர்ச்சியாக வெளிவந்துள்ள `கார்ஸ் 3' படத்தின் விமர்சனம்.
    கார்களில் முன்னணியில் இருக்கும் சிவப்பு கலர் காரான லைட்னிங் மெக்குயின், கார் பந்தயத்தில் தொடர்ந்து முதல் இடத்தையே பிடிக்கிறது. லைட்னிங்கின் நெருங்கிய நண்பர்களான பாபி ஸ்விப்ட் மற்றும் கேல் வெதர்ஸ் ஆகிய இரு கார்களும் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களை பிடித்து வருகிறது.

    இவ்வாறாக வெற்றிப் பாதையில் சென்ற இந்த கார்களின் வெற்றிக்கு தடை போடும்படியாக ஒரு சம்பவம் நடக்கிறது. அதாவது அடுத்ததாக நடக்கும் கார் பந்தயப் போட்டியில் லைட்னிங், வெற்றி கோட்டை தொடும் சமயத்தில் புதிய தொழில்நுட்பம் கொண்ட ஜாக்சன் ஸ்டார்ம் என்ற கருப்பு நிறக் கார் கண்ணிமைக்கும் நேரத்தில் லைட்னிங்கை முந்தி வெற்றிக் கோட்டை தொட்டுவிடுகிறது.



    இதையடுத்து, ஸ்டார்ம் மீது அனைவரின் கவனமும் திரும்ப, பழைய கார்கள் ஓரம் கட்டப்படுகிறது. நவீன தொழில்நுட்பம், புதுமையான ஸ்டைல் என அனைத்திலும் புதுமையை பார்த்த உடன், அனைவரும் லைட்னிங் மற்றும் அதன் நண்பர்களை ஓய்வுபெற சொல்லி வற்புறுத்த பாபி மற்றும் கேல் உள்ளிட்ட பல கார்கள் ஓய்வு அறிவிப்பை வெளியிடுகிறது.

    பந்தயத்தில் தான் வென்றே தீருவேன் என்ற முடிவுடன் இருக்கும் லைட்னிங், ஓய்வு பெறாமல் அடுத்த பந்தயத்தில் பங்கேற்கிறது. லைட்னிங்கை தவிர்த்து மற்ற பழைய கார்கள் அனைத்தும் ஓய்வு பெற்றதால், லைட்னிங் புதிய தொழில்நுட்பம் கொண்ட கார்களுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. பந்தயத்தில் அந்த கார்களுக்கு ஈடுகொடுக்க போராடிய லைட்னிங், ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கிவிடுகிறது.



    இதையடுத்து, லைட்னிங்கின் கதை அவ்வளவு தான் என்று பலரும் வசைபாடி வருகிறார்கள். இந்நிலையில் லைட்னிங் மீண்டும் புத்துயிர் பெற ஸ்பான்சர் ஒருவர் முன்வருகிறார். அவரது உதவியுடன் பழைய நிலைக்கு திரும்புகிறது லைட்னிங். ஆனால், அவர் லைட்னிங்கை போட்டியில் பங்கேற்க வைக்க விரும்பாமல், அதை வைத்து விளம்பரம் செய்து தன்னுடைய பொருட்களை விற்பனை செய்யவே முடிவு செய்கிறார். ஆனால் அவரது முடிவை ஏற்க மறுக்கும் லைட்னிங், கார் பந்தயப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது. தோல்வியடைந்தால், அவரது பேச்சை கேட்பதாக கூறி வாழ்வா சாவா போட்டிக்கு தயாராகிறது.

    லைட்னிங்கின் கோச்சான க்ரூஸ் ரேமியர்ஸ் சில நுணுக்கங்களை தெரிவித்து போட்டிக்கு தயார்படுத்துகிறது. கடைசியில் நாம் எதிர்பார்த்த அந்த போட்டி வர, அதில் பங்கேற்கும் லைட்னிங் எப்படி வெற்றி பெற்றது? வெற்றி பெற என்ன செய்தது? அதன் என்ன முயற்சிகளை மேற்கொண்டது? அனைவரையும் மீண்டும் எப்படி கவர்ந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    ஆங்கிலத்தில் ஓவன் வில்சன், கிறிஸ்டெலா அலோன்சா, கிறிஸ் கூப்பர், ஆர்மி ஹேமர் என கார்களுக்கு குரல் கொடுத்த அனைவரும் நக்கலுடன் பேசியிருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. தமிழ் டப்பிங்கில் வசனங்கள் ரசிக்கும்படி நகைச்சுவையாக இருக்கிறது.

    கார்ஸ் படங்களின் சீரியஸை இயக்கியுள்ள பிரெயின் ஃபீ, கார்ஸ் 3 படத்தை முந்தைய பாகங்களை போல இல்லாமல் வித்தியாசமாக இயக்கி இருக்கிறார். கார்ஸ் 1, கார்ஸ் 2 வரிசையில் கார்ஸ் 3 படமும் ரசித்து பார்க்கும்படி ட்விஸ்ட்டுகளுடன் இருக்கிறது.



    கேமரா காட்சிகளில் ஜெரமி லஸ்க்கி, கிம் வொயிட் திறம்பட செயல்பட்டிருக்கின்றனர். பிக்ஸார் அனிமேஷன் ஸ்டூடியோஸின் பங்களிப்பு அளப்பறியாதது. ஒவ்வொரு காட்சிக்கும் மெனக்கிட்டிருக்கின்றனர். படத்தை 3டி-யில் பார்க்க பிரம்மாண்டாக இருக்கிறது. ராண்டி நியூமேனின் பின்னணி இசை காட்சிக்கு துணையாக ரசிக்கும்படி இருக்கிறது.

    மொத்தத்தில் `கார்ஸ் 3' ரேஸ் வின்னர்.
    ×