என் மலர்
சினிமா செய்திகள்
- 'One 2 One' திரைப்படத்தின் முதல் பாடலை இயக்குனர் வெங்கட் பிரபு தனது X பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.
- சிங்கம் சிறுத்தை எனும் இப்பாடலை விஜய் சேதுபதி மற்றும் சுந்தர் சி ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.
கே. திருஞானம் இயக்கத்தில் சுந்தர் சி நாயகனாகவும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடிக்கும் 'One 2 One' திரைப்படத்தின் முதல் பாடலை இயக்குனர் வெங்கட் பிரபு தனது X பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.
இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு - எஸ். கே.ஏ. பூபதி கார்த்திக், பிரவீன் நித்தியானந்தம், விக்ரம் மோகன், படத்தொகுப்பு சி.எஸ். பிரேம் குமார். கலை இயக்கம் ஆர். ஜனார்த்தனன் மேற்கொண்டுள்ளனர். இந்த படத்தை 24 IIRS புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. சிங்கம் சிறுத்தை எனும் இப்பாடலை விஜய் சேதுபதி மற்றும் சுந்தர் சி ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.
இப்படத்தில் ஒரு குழந்தைக்குப் பாசமான தந்தையாகவும், மறுபுறம் ஆக்சன் முகத்துடன் வித்தியாசமான பாத்திரத்தில் சுந்தர் சி நடித்துள்ளார்.அவருக்கு இணையான வில்லன் பாத்திரத்தில், இமைக்கா நொடிகள் படத்திற்குப் பிறகு, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இப்படத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகை நீது சந்த்ரா மற்றும் விஜய் வர்மன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முழுதும் நிறைவடைந்த நிலையில், படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுஹானி பட்நாகர், சிகிக்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
- சுஹானிக்கு டங்கல் படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் சுஹானி படிப்பில் கவனம் செலுத்த விரும்பியதால், சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.
டங்கல் படத்தில் அமீர்கானின் இளைய மகளாக நடித்த சுஹானி பட்நாகர், தனது 19 வயதில் அகால மரணமடைந்துள்ளார்.டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுஹானி பட்நாகர், சிகிக்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
சுஹானி பட்நாகர் பாலிவுட்டின் பிரபலமான குழந்தை நட்சத்திரம். அமீர் கானின் பிளாக்பஸ்டர் படமான 'டங்கல்' படத்தில் அறிமுகமான அவர் ஜூனியர் பபிதா போகத் வேடத்தில் நடித்தார். படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. மேலும் பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் அவர் நடித்துள்ளார்.

சுஹானிக்கு டங்கல் படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் சுஹானி படிப்பில் கவனம் செலுத்த விரும்பியதால், சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.
இந்நிலையில் சில காலத்திற்கு முன்பு சுஹானிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது, அதன் காரணமாக அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சுஹானி சிகிச்சைக்காக எடுத்துக்கொண்ட மருந்துகளில் பக்கவிளைவுகள் இருந்ததால், அவரது உடலில் படிப்படியாக தண்ணீர் தேங்கியது.
இதனால் அவர் நீண்ட நாட்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
- மற்றொரு படத்தில் நடிக்க இருப்பதை விஜய் உறுதிப்படுத்தினார்.
- இந்த படத்தின் இயக்குனர் பற்றி எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் "தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்" (கோட்) என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று, பின்னணி வேலைகள் துவங்கும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே விஜய் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளதாக அறிவித்தார். மேலும் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர்சூட்டியிருப்பதாக அறிவித்தார். இது தொடர்பான அறிவிப்பில், தற்போது நடித்து வரும் கோட் படம் தவிர்த்து, மற்றொரு படத்தில் நடிக்க இருப்பதை விஜய் உறுதிப்படுத்தி இருந்தார்.

மேலும், இந்த படத்தின் பணிகளில் அரசியல் கட்சி பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அறிவித்து இருந்தார். எனினும், இந்த படத்தின் இயக்குனர் பற்றி எவ்வித தகவலும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக விஜய் நடிக்கும் 69 படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவார் என்று தகவல்கள் வெளியாகின.
இதோடு, சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை மற்றும் துணிவு போன்ற படங்களை இயக்கிய வினோத் விஜய்யின் 69-வது படத்தை இயக்க இருப்பதாகவும், இந்த படம் அரசியல் கதைக்களம் கொண்டு உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து விஜய்யின் 69 படத்தை வெற்றி மாறன் இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், விஜய் 69 படத்தின் இயக்குனர்கள் பட்டியலில் புதிய பெயர் இணைந்துள்ளது. அதன்படி தெலுங்கு திரையுலகில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜூன் என முன்னணி நடிகர்களை இயக்கிய த்ரிவிக்ரம் விஜய்யின் 69-வது படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
- விஷ்ணு விஷாலின் 21-வது படத்தை ராம்குமார் இயக்குகிறார்.
- இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.
விஷ்ணு விஷால் தனது 21-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குனர் ராம்குமார் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஷெட்யூல்கள் நிறைவடைந்த நிலையில், மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இது தொடர்பான தகவலை விஷ்ணு விஷால் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் பதிவட்டுள்ளார்.

அதில், "விஷ்ணு விஷால் 21 படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியது. பணியில் இயக்குனர் ராம்குமார் உடன்.. எதிர்பாராததை எதிர்பாருங்கள்," என்று குறிப்பிட்டுள்ளார். இம்முறை படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெறுகிறது. இந்த படம் தொடர்பான இதர அப்டேட்கள் விரைவில் வெளியாகலாம்.
- நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் என்பதற்காக அவருடன் உடனே சேர்ந்து பயணிக்க முடியாது. அவர் தனது கொள்கைகளைச் சொல்லட்டும், பின்னர் பார்க்கலாம்.
- நடிகர்கள் கட்சித் தொடங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை என இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் கட்சித் தொடங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை என இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மன்சூர் அலிகான், " நான் இதற்கு முன்னர் தொடங்கிய கட்சிக்கு தமிழ் தேசிய புலிகள் என பெயரிட்டிருந்தேன். ஆனால் இந்தியா முழுவதும் முழுமைக்கு தமிழ்நாட்டின் முன்னேற்றம் அடைந்ததாகத் தெரியவில்லை. தமிழ் இனத்தில் முன்னேற்றமில்லை. ஒரு தமிழனை பிரதமராக்க முடியவில்லை. இது தொடர்பாக 24ஆம் தேதி நடத்தவுள்ள மாநாட்டில் விரிவாக பேசவுள்ளேன். வரும் மக்களவைத் தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவோம். ஆனால் எத்தனைத் தொகுதிகள் எந்தெந்த தொகுதிகள் என இன்னும் முடிவு செய்யவில்லை.
நடிகர்கள் கட்சி தொடங்குவதில் எனக்கே உடன்பாடு இல்லை. என்னை நான் ஒரு நடிகனாகக் கருதவில்லை. கடந்த 1991-ம் ஆண்டுதான் எனது முதல் படம் வெளியானது. ஆனால் கடந்த 1987, 88 ஆண்டுகளில் மறைந்த ஆதித்தனாரை தமிழர் தலைவர் என அழைத்தற்கு அதனை விமர்சித்து ஒரு பத்திரிகை கடுமையாக எழுதியது. இதனைக் கண்டித்து சென்னையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டேன். அப்போது நான் நடனக் கலைஞராக இருந்தேன்."
அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைபெற்ற காவிரி, இலங்கைப் பிரச்னைகளுக்கான போராட்டத்தில் கலந்து கொண்டேன். ஆளுநர் மாளிகைக்கு எதிராக கிரிக்கெட் விளையாடச் சென்றேன். அப்போது தமிழ் நாட்டில் மைதானங்களே இல்லை. ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்ல முடியாத காலகட்டம். இதுபோன்ற போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். நடிப்பு என்பது தொழிலாகத்தான் எனக்கு இருந்தது.
சமீபகாலமாக நாட்டில் என்ன நடக்கின்றது என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு முடிவோடு இறங்கி இருக்கின்றேன், பார்ப்போம். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இணைந்துள்ளனர். 15 ஆயிரம் பேருக்கு மேல் பொறுப்புகள் போட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியைத் தொடங்கியுள்ளோம். இந்தியா முழுமைக்குமான உரிமைகளுக்கு குரல் கொடுப்போம். எங்கள் கட்சி தேசிய அளவில் இருக்கும். அதற்காக நாங்கள் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்கள் கிடையாது. தமிழர்களுக்கான உரிமைகள் பல மறுக்கப்படுகின்றது. ஒக்கிப் புயல் வந்தபோது பல நாட்கள் கடல் நீரில் மீனவர்கள் மிதந்தார்கள். ஆனால் ஒரு ஹெலிகாப்ட்டர் கூட மினவர்களை மீட்கச் செல்லவில்லை. நம்மால் அப்படி இருக்க முடியுமா? மீனவர்கள் யாராவது நம்மை மீட்க வருவார்களா என காத்துக்கொண்டு இருந்தனர்.
நான் விடப்போவதில்லை. அதிரடி அரசியல், உரியடி பதவிகள். தேசியக் கட்சிகளுடன் இணைந்து பயணிப்போம். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் என்பதற்காக அவருடன் உடனே சேர்ந்து பயணிக்க முடியாது. அவர் தனது கொள்கைகளைச் சொல்லட்டும், பின்னர் பார்க்கலாம். பல்லாவரத்தில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
தமிழ்நாட்டில் படிப்பறிவு குறைவாக உள்ளது. பார்ப்பதற்கு ஹாலிவுட் பட நடிகர் போல உள்ளார். ஒரு ஜெராக்ஸ் கடை எங்கு உள்ளது எனக் கேட்டால் தெரியவில்லை. இப்படியான நிலையில்தான் தமிழ்நாடு உள்ளது" என மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.
- மிதுன் மித்ரா புரொடக்சன்ஸ் சார்பில் மது நாகராஜன் தயாரித்துள்ளார்.
- ரணம் திரைப்படம் வரும் 23ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
நடிகர் வைபவ்வின் 25வது படமான ரணம், ஷெரிப் இயக்கத்தில் உருவாகி உள்ளது.
இந்த படத்தில், நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி, பதமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை மிதுன் மித்ரா புரொடக்சன்ஸ் சார்பில் மது நாகராஜன் தயாரித்துள்ளார். அரோள் கரோலி இசையமைத்துள்ளார். ரணம் திரைப்படம் வரும் 23ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், ரணம் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. டிரெயிலரை நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "வைபவின் 25வது படமான #ரணம்அரம்தாவரேல் வெற்றி பெற என் அன்பு சகோதரனுக்கு வாழ்த்துகள். நீங்கள் இன்னும் பல மைல்கற்களை விரைவில் எட்டுவீர்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
- ஹிரித்திக் ரோஷன் கடந்த சில வாரங்களாக பயிற்சி எடுத்திருந்தார்.
- ஜுனியர் என்.டி.ஆர். இணைவது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஃபைட்டர் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் கூட நிறைவு பெறாத நிலையில் ஹிரித்திக் ரோஷன் ஏஜெண்ட் கபீர் கதாபாத்திரத்தில் நடிக்க மீண்டும் ஆயத்தமாகி வருகிறார். கடந்த ஜனவரி 25-ம் தேதி ஃபைட்டர் வெளியான நிலையில் ஹிரித்திக் ரோஷன் வார் படத்திற்கு தயாராகி வருகிறார்.
2019-ம் ஆண்டு ஹிரித்திக் ரோஷன் ஏற்று நடித்திருந்த ஏஜெண்ட் கபீர் கதாபாத்திரம் பேசு பொருளாக மாறியது. மேலும் இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் ஹிரித்திக் ரோஷன் வார் 2 படத்தை அடுத்த வாரத்திலேயே துவங்க இருக்கிறார்.

வார் 2 மூலம் இந்த ஆக்ஷன் யூனிவர்சில் ஜுனியர் என்.டி.ஆர். இணைவது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. வை.ஆர்.எஃப். ஸ்பை யுனிவர்ஸ் மூலம் ஹிரித்திக் ரோஷனின் இதுவரை பார்த்திராத கோணத்தை இயக்குனர் அயன் முகர்ஜி வெளிக்கொண்டுவர ஆயத்தமாகி வருகிறார்.
அந்த வகையில் வார் 2 படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 23-ந் தேதி துவங்குகிறது. தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக ஹிரித்திக் ரோஷன் கடந்த சில வாரங்களாக பயிற்சி எடுத்திருந்தார்.
இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய ஹிரித்திக் ரோஷன், "கபீர் குறிப்பிடத்தக்க தடத்தை பதித்துள்ளான். இதனால் மீண்டும் கபீராக மாறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் கபீரை இந்த முறை வித்தியாசமான தோற்றத்தில் வெளிப்படுத்து எனக்கு சவாலாக இருக்கும். அவனின் மற்றொரு கோணம் வித்தியாசமாக இருக்க போகிறது," என்று தெரிவித்தார்.
- சி.சி.எல். தொடர் அடுத்த வாரம் துவங்குகிறது.
- சென்னை அணி கேப்டனாக ஆர்யா செயல்படுகிறார்.
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில், சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப் தி ஷெர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி என்பதால், ஆண்டுதோறும் இதற்கான எதிர்பார்ப்பு, அதிகரித்து கொண்டு வருகிறது. சென்னை அணியின் கேப்டனாக ஆர்யா செயல்பட்டு வருகிறார். இதன் நிறுவனர் கங்கா பிரசாத். சென்னை அணியில் விஷ்ணு விஷால், ஜீவா, மிர்ச்சி சிவா, ஷாந்தனு, விக்ராந்த், பரத், பிர்த்வி, அஷோக் செல்வன், கலையரசன், ஆதவ் கண்ணதாசன், என்.ஜே. சத்யா, தாசரதி, ஷரவ் உட்பட பல முக்கிய நட்சத்திரங்கள் உள்ளனர்.

வருகிற பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கும் சி.சி.எல். போட்டி மார்ச் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஷார்ஜா, ஹைதராபாத், சண்டிகர், திருவனந்தபுரம் என நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருக்கிறது. சென்னை ரைனோஸ் தனது முதல் போட்டியில் பஞ்சாப் அணியை 25 பிப்ரவரி அன்று ஷார்ஜாவில் எதிர்கொள்கிறது.
இது தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஷாந்தனு, "சென்னை ரைனோஸ் அணியில் விளையாடுவது வெற்றி, தோல்வியை கடந்து ஒரு மகிழ்ச்சியான பேரின்பத்தை கொடுக்கிறது. மீண்டும் நண்பர்களுடன் இணைந்து பயணிப்பது போன்ற உணர்வை கொடுக்கிறது."
"விஷ்ணு, ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். அதற்காக அவருக்கு நன்றி. இந்த முறை கப் எடுத்தே தீர வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறோம். எங்களுடன் இணைந்து பயணிக்கும் குழுவிற்கு நன்றி," என்று தெரிவித்தார்.
- ப்யார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
- ஸ்டார் திரைப்படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடீயோ நேற்று வெளியானது.
இளன் இயக்கத்தில் கவின் நடிக்கும் 'ஸ்டார்' பட உருவாக்கத்தின் முழு வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.
சின்னத்திரையில் சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த கவின், "லிப்ட்" என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். கவினின் இரண்டாவது திரைப்படமான "டாடா" மாபெரும் வெற்றி பெற்றது.
இதையடுத்து கவின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஸ்டார். ப்யார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் ப்ரோமோ வெளியானது. ஏற்கனவே இத்திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடீயோ மற்றும் பாடல் வெளியானது.
தொடர்ந்து, ஸ்டார் திரைப்படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடீயோ நேற்று வெளியானது.
இந்நிலையில், ஸ்டார் திரைப்படம் உருவாக்கத்தின் முழு விடியோ இன்று வெளியானது.
- பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' படத்தின் டீசர் பிப்ரவரி 19ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது..
- இந்தப் படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார்.
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' படத்தின் டீசர் பிப்ரவரி 19ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது..
இயக்குநர் பாலா, சூர்யா நடிப்பில் 'வணங்கான்' படத்தை இயக்கினார். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், திடீரென படம் கைவிடப்பட்டது. பின்னர், இந்தப் படத்தில் இருந்து சூர்யா திடீரென விலகினார். இதுபற்றி பாலா வெளியிட்ட அறிக்கையில், "வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம்.அதில் அவருக்கு வருத்தம்தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது" என்று கூறியிருந்தார்.
இதையடுத்து. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். மிஷ்கின், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்நிலையில் பாலா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீசர் வரும் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தை பாலாவின் தயாரிப்பு நிறுவனமான 'பி ஸ்டூடியோஸ்' நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏற்கனவே வெளியான வணங்கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. அதில் அருண்விஜய் ஒரு கையில் பெரியார் சிலையுடனும் மற்றொரு கையில் விநாயகர் சிலையுடனும் உள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக் அப்போது இணையத்தில் வைரலானது.
- லவ் டிரையாலஜி சார்ந்த காதல் கதை ஜாம் ஜாம்.
- வழக்கமான ரொமாண்டிக் காமெடி எண்டர்டெயினர் படமாக இருக்காது.
ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ஜி. டில்லி பாபு தயாரிக்கும் படங்கள் நல்ல வரவேற்பை பெறுவதோடு, பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் பட்டையை கிளப்பி வருகின்றன.
"ஓ மை கடவுளே", "பேச்சுலர்" என்ற இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்தது ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம். இந்த படங்களை தொடர்ந்து லவ் டிரையாலஜி சார்ந்த காதல் கதையாக 'ஜாம் ஜாம்' படத்தை அறிவித்துள்ளனர்.

இந்தப் படம் மூலம் பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா இயக்குநராக அறிமுகமாகிறார். வழக்கமான ரொமாண்டிக் காமெடி எண்டர்டெயினர் படமாக இது நிச்சயம் இருக்காது என்கிறார் இயக்குநர் அபிஷேக் ராஜா. மாறாக, அதிகமான எண்டர்டெயின்மெண்ட்டோடு ரொமான்ஸ் மற்றும் த்ரிலிங்கான தருணங்களும் இந்தப் படத்தில் இருக்கும் என்கிறார்.
"ஜாம் ஜாம்" படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். "முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்" என்ற மலையாள படத்தை இயக்கிய அபினவ் சுந்தர் நாயக் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார்.
நவதேவி ராஜ்குமார் ஆடை வடிவமைப்பையும், அழகியகூத்தன் மற்றும் சுரேன் ஜி ஒலிப்பதிவையும் கவனிக்கிறார்கள். இப்படத்திற்கு பிரதீப் ராஜ் கலை இயக்குநராக உள்ளார். மற்ற நடிகர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது.
- 1989-ம் ஆண்டு கவிதா சௌத்ரி எழுதி இயக்கி, நடித்த ‘உடான்' எனும் தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.
- 1989-ம் ஆண்டு கவிதா சௌத்ரி எழுதி இயக்கி, நடித்த ‘உடான்' எனும் தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.
பிரபல இந்தி நடிகை கவிதா சௌத்ரி மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயுடன் கவிதா சௌத்ரி போராடி வந்த நிலையில், தற்போது தன் 67ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
1989-ம் ஆண்டு கவிதா சௌத்ரி எழுதி இயக்கி, நடித்த 'உடான்' எனும் தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. கிரண்பேடிக்கு பிறகு இரண்டாவது பெண் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான அவரது கஞ்சன் சௌத்ரியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டது.
இந்த சீரியலில், கல்யாண் சிங் எனும் கதாபாத்திரத்தில் போலீசாக நடித்த கவிதா, அக்கதாபாத்திரமாக வாழ்ந்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். மேலும் 90களின் பிரபலமான 'சர்ஃப் எக்ஸல்' விளம்பரங்களில் 'லலிதா ஜி' எனும் கதாபாத்திரத்திலும் தோன்றி, அன்றைய தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.
இந்நிலையில், கவிதா நேற்று பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள பார்வதி தேவி மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இணையத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.






