என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • பூக்கி படத்தை விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார்.
    • இந்தப் படம் வருகிற 13ஆம் தேதி வெளியாகிறது.

    விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் அஜய் திஷான், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் பூக்கி. ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் காதலர் தினத்தை ஒட்டி வருகிற பிப்ரவரி 13ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

    பட வெளியீட்டை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி, "நீங்கள் இல்லாமல் நான் இல்லை. எப்போதும் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த விழாவின் நாயகன் கணேஷ் சந்திரா. அவரை நான் முதலில் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினேன் என்பதில் எனக்கு பெருமை. இன்று அவரை இயக்குநராக மீண்டும் அறிமுகப்படுத்துவது இன்னும் பெருமை. உங்கள் உழைப்பு திரையில் தெளிவாக தெரிகிறது." 

    "மலையாள சினிமா போல தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கும் முக்கியத்துவம் வர வேண்டும். அந்த வகையில் புதிய பரதி ஒரு முக்கியமான எழுத்தாளர். இந்தப் படத்துக்கு பிறகு அவர் பெரிய இடத்திற்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது. அஜய் – மிக நேர்மையான, உழைப்பாளி. முதலில் ஒரு நல்ல மனிதன். அதனால் தான் நல்ல நடிகனாகவும் பெரிய இடத்திற்கு வருவார். தனுஷா – மிகவும் புத்திசாலியான, திறமையான நடிகை. டயலாக் டெலிவரி, டப்பிங், நடிப்பு – எல்லாமே சிறப்பாக இருந்தது."

    "இவ்வளவு நாள் கேமராவுக்குப் பின்னாடி இருந்து மத்தவங்க சொல்ற 'ஆக்ஷனை' மட்டும் கேட்டுட்டு இருந்தேன். ஆனா இப்போ முதல் முறையா, 'பூக்கி' படத்தின் மூலமா கேமராவுக்கு முன்னாடி வந்து 'ஆக்ஷன்-கட்' சொல்ல ஆரம்பிச்சிருக்கேன்," என்றார்.

    • நீதிமன்றம் சென்றால் தணிக்கை சான்றிதழ் கிடைக்க மேலும் தாமதமாகும்
    • வழக்கில் தலையிட மறுப்பு தெரிவித்தது உச்ச நீதிமன்றம்

    ஜன நாயகன் படத்திற்கு விரைந்து தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கை திரும்பப் பெற்றுள்ளது பட தயாரிப்பு நிறுவனம்.

    மீண்டும் நீதிமன்றம் சென்றால் தணிக்கை சான்றிதழ் கிடைக்க மேலும் தாமதமாகும் என்பதால், திரைப்படத்தை மறு தணிக்கைக்கு அனுப்ப தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் தணிக்கை வாரியம் மூலமாகவே இப்பிரச்சினையை முடிக்க படக்குழு இந்த முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

    வழக்கின் பின்னணி

    ஜனவரி 9 அன்று சென்னை உயர்நீதிமன்றத் தனி நீதிபதி (நீதிபதி ஆஷா), படத்திற்கு உடனடியாக 'U/A' சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. ஜனவரி 27, 2026 அன்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, "தணிக்கை வாரியத்தின் தரப்புக் கருத்தைக் கேட்காமல் தனி நீதிபதி தீர்ப்பளித்தது தவறு" எனக் கூறி அந்த உத்தரவை ரத்து செய்தது. மேலும் தனி நீதிபதியே வழக்கை விசாரிப்பார் என உத்தரவிட்டது. 

    இதனிடையே தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியநிலையில் இது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கும் எனக் கூறி வழக்கில் தலையிட மறுப்பு தெரிவித்தது உச்ச நீதிமன்றம். தற்போது, இந்த வழக்கு மீண்டும் தனி நீதிபதியின் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் படக்குழு வழக்கை வாபஸ் பெற்றுள்ளது.

    ஜன நாயகன்

    ஹெச்.வினோத் நடிப்பில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோர் நடிப்பில் உருவாகி, பொங்கலை முன்னிட்டு ஜன.9 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விஜய்யின் கடைசிப் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது. ஆனால் தணிக்கை பிரச்சனையால் தற்போது வரை வெளியாகவில்லை.

    • கிராமத்து பின்னணியில் ஒரு படம் செய்து வருகிறேன்.
    • விஜய் ஆண்டனி இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில்,  மீரா விஜய் ஆண்டனி வழங்கும் புதிய படம் "பூக்கி". அஜய் திஷான் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில், இளைஞர்களை கவரும் படைப்பாக இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது.

    "பூக்கி" திரைப்படம் காதலர் தினக் கொண்டாட்டமாக வரும் 2026 பிப்ரவரி 13ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. பட வெளியீட்டை ஒட்டி பூக்கி முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

    இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சசி, "எல்லாருக்கும் வணக்கம். இந்த படத்துல இருக்கிற பாடல் காட்சிகளையும், சீன்ஸையும் நீங்க எல்லாரும் பார்த்திருப்பீங்க. உங்கள் எல்லாருக்கும் இருக்கும் எதிர்பார்ப்பை விட  இரண்டு  மடங்கு அதிகமான எதிர்பார்ப்பு எனக்கு இருக்கிறது. அதுக்குக் காரணம் கணேஷ் சந்திரா. அவர் ஒரு சினிமாட்டோகிராபர் மட்டுமல்ல, ஒரு இயக்குநரும் கூட." 

    "நான் விஜய் ஆண்டனி, அஜய் வைத்து கிராமத்து பின்னணியில் ஒரு படம் செய்து வருகிறேன். அந்தப் படத்துல எல்லாருமே கருப்பு நிற தோற்றத்தில் இருப்பாங்க. விஜய் ஆண்டனிக்கு ஒரு விவசாயி கேரக்டர். ஆனா இங்க இந்த படத்துல பார்த்தா… எல்லாமே கலர் கலரா, fresh-ஆ இருக்கிறது. அதை பார்த்ததும் ரொம்ப பெரிய சர்ப்ரைஸாக இருந்தது."

    "அஜய் என் படத்திலேயும், இந்த படத்திலேயும் இரண்டு வெவ்வேறு மாதிரியான கேர்கடர்களை மிக அழகாக கையாண்டிருக்கிறார். உண்மையிலேயே நல்ல திறமைசாலி.  இப்படத்தில் ரொம்ப சென்சிபிளான, எமோஷனல் லவ் ஸ்டோரி இருக்கும் அப்படிங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கணேஷ் சந்திரா பற்றி நான் கேள்விப்பட்டிருக்கேன். அவர் எடுக்குற கதை, சொல்லுற விதம் எப்போதுமே ஒரு உணர்வோட இருக்கும். அதோட விஜய் ஆண்ட்னியின் பாடல்கள்… சோகமான இடத்துல வர வேண்டிய சாங்ஸ்கூட ஒரு தனி வைபோட, அவருடைய ஸ்டைல்ல ரொம்ப அழகா போட்டிருக்கார்," என்றார்

    • திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவை கொண்டாடினார்.
    • புதிய நடிகரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளேன்.

    தமிழ் திரையுலகில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் கவுதம் வாசுதேவ் மேனன். இயக்கம் மட்டுமின்றி பல திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இடையில் திரைப்படங்களை தயாரிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். சமீபத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவை கொண்டாடினார்.

    இதனிடையே சமீபத்திய பேட்டியளித்த கவுதம் வாசுதேவ் மேனன், "எனது அடுத்த படத்திற்காக ஒரு காதல் கதையைத் தயார் செய்து வைத்திருக்கிறேன். இப்போது பெரிய ஹீரோக்கள் யாரும் காதல் கதைகளில் நடிக்கத் தயாராக இல்லை. அதனால், நான் இளம் நடிகர்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன், மேலும் அதில் ஒரு புதிய நடிகரை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளேன்.

    நானும் சிலம்பரசனும் கூட இதற்கு முன்பு 'நதிகளிலே நீராடும் சூரியன்' படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் அந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் இல்லாததால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதனால் நாங்கள் 'வெந்து தணிந்தது காடு' படத்தை செய்தோம்.

    இப்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்தக் காதல் கதை, இரண்டு பேருக்கு இடையேயான ஒரு தூய்மையான நாடகமாகும். ஜென்-இசட் தலைமுறையினரின் காதல் வித்தியாசமானது என்று பலர் சொல்கிறார்கள், ஆனால் காதலின் மொழி இப்போது மாறிவிட்டது என்று நான் நினைக்கவில்லை," என்றார்.

    ஹர்ஷவர்தன் ரமேஷ்வரின் பின்னணி இசை படத்திற்கு ஒரு 'ஹாலிவுட் த்ரில்லர்' தரத்தைக் கொடுக்கிறது.

    தடயவியல் நிபுணராக வரும் பாவனா தனது தம்பியுடன் வசித்து வருகிறார். இவரது தந்தையும், தாயும் இறந்த பிறகு, தனது தம்பி மனநலம் பாதிக்கப்படுகிறார். பல முறை அவர் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். இப்படி இருக்கையில் தம்பி ஒருநாள் காணாமல் போய்விடுகிறார்.

    தம்பியை தேடிக் கொண்டிருக்கும்போது, அவர் தனது தாய், தந்தை இறந்த இடத்திலேயே தம்பியும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியாகிறார்.

    தொடர் கொலைகளை விசாரிக்கும் காவல் அதிகாரி ரஹ்மான் பாவனாவின் தம்பி மரணம் குறித்து விசாரிக்கிறார். மனநலம் பாதிக்கப்பட்ட அவர், தற்கொலை செய்துக்கொண்டதாக வழக்கை முடித்து வைக்கிறார்.

    தன் தம்பியின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக நம்பும் தடயவியல் நிபுணர் பாவனா, உண்மையை கண்டறிய களமிறங்குகிறார். அப்போது, ரஹ்மானுடன் பாவனாவின் பயணம் இணைகிறது.

    ஒரு கட்டத்தில் தற்கொலைக்கும், இந்த மர்மக் கொலைகளுக்கும் இடையே உள்ள 'அறிவியல் பின்னணி' மற்றும் 'மரணத்தின் சமன்பாடு' (Equation of Death) என்ன என்பதை விவரிக்கிறது படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு மலையாளத்தில் ஒரு அழுத்தமான பாத்திரத்தில் பாவனா மிரட்டியிருக்கிறார். ஒரு அக்காவாக பாசம் காட்டுவதும், விசாரணையில் உறுதி காட்டுவதுமாக பாவனா, கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். ரஹ்மானின் அனுபவ நடிப்பு திரையில் பிரதிபலிக்கிறது.

    இயக்கம்

    மலையாள சினிமாவில் 'சைக்கோ த்ரில்லர்' கதையுடன் 'அறிவியல் புனைவை' (Sci-Fi) இணைத்த விதம் ஒரு புதிய முயற்சியை எடுத்திருக்கிறார் இயக்குனர் ரியாஸ் மரத். ஒரு தரமான சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம்.

    152 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தின் இரண்டாம் பாதி சற்று இழுவையாகத் தெரிகிறது. எடிட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    ஒளிப்பதிவு & இசை

    சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு மற்றும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வரின் பின்னணி இசை படத்திற்கு ஒரு 'ஹாலிவுட் த்ரில்லர்' தரத்தைக் கொடுக்கிறது.

    ரேட்டிங்- 2.5/5

    • வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
    • சாதகமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

    நடிகர் விஜய் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "ஜனநாயகன்." கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்த நிலையில், தணிக்கை சான்று கிடைக்காததால், திரைப்படம் வெளியாகாமல் உள்ளது. படத்திற்கு தணிக்கை பெறுவது தொடர்பாக படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் தணிக்கை வாரியம் இடையே சட்ட ரீதியாக மோதல் உருவாகி இருக்கிறது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை குழுவுக்கு மீண்டும் அனுப்பப்பட்டு இருப்பதாக இன்று (பிப்.9) காலை முதலே தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் காரணமாக படத்திற்கு விரைவில் தணிக்கை சான்று கிடைத்துவிடும் என்றும் இதைத் தொடர்ந்து படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

    ஜனநாயகன் விவகாரம் குறித்து பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தணிக்கை குழுவை சேர்ந்த அதிகாரி ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ஒட்டுமொத்த தணிக்கை வழிமுறைகள் ரகசியமாக நடைபெறும் என கூறியிருக்கிறார். இதேபோல் தயாரிப்பு நிறுவனமும் தணிக்கை சான்று கிடைக்கும் வரை அமைதி காக்கும் என்று தெரிகிறது.

    அந்த வகையில், தற்போது வரை ஜனநாயகன் விவகாரம் தொடர்பான வழக்கை படத்தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெறவில்லை. மேலும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவோ அல்லது வழக்கை திரும்பப்பெறவோ இல்லை. ஜனநாயகன் விவகாரம் குறித்து படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படாததும் இதற்கு காரணமாக இருக்கலாம். எனினும், ஜனநாயகன் தொடர்பாக சாதகமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    • ஒளிப்பதிவாளர் ஜீவன் கவுடா, காடுகள், மழைக் காட்சிகளை அழகாக படம் பிடித்திருக்கிறார்.
    • கிராமத்தில் காட்டுப்பன்றி வேட்டையாடும் வீரனாக நாயகன் காடா நடராஜ் வாழ்ந்து வருகிறார்.

    கிராமத்தில் காட்டுப்பன்றி வேட்டையாடும் வீரனாக நாயகன் காடா நடராஜ் வாழ்ந்து வருகிறார். முதலாளிக்கு விசுவாசமாக இருந்து வரும் இவரை, முதலாளி மற்றும் அவருடைய மகன்கள் எதிர்த்து கொல்ல முயற்சி செய்கிறார்கள். இறுதியில் முதலாளி மற்றும் மகன்களை காடா நட்ராஜ் எப்படி எதிர்கொண்டார்? காடா நட்ராஜை முதலாளி மற்றும் மகன்கள் எதிர்க்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் காடா நட்ராஜ், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டலான நடிப்பை கொடுத்து இருக்கிறார். நாயகி நிரிக்ஷா ஷெட்டி இடையேயான காதல், கதைக்கு முக்கிய அம்சம். ஆனால் நிரிக்ஷா ஷெட்டியின் ஒருதலைக் காதலும், அதை காடா நட்ராஜ் ஏற்றுக்கொள்ளும் தருணமும் திரைக்கதையில் தாமதமாக வருவதால், எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

    மேல் தர வர்க்கத்தைச் சேர்ந்த எதிரிகளாக வரும் யஷ் ஷெட்டி, பாலா ராஜ்வாடி ஆகியோர் மோதல்கள் கதைக்கு வேகம் கொடுத்தாலும், ஒரே மாதிரியான மோதல்கள் திரும்பத் திரும்ப வருவதால் சலிப்பு ஏற்படுகிறது.

    இயக்கம்

    இயக்குநர் வெங்கடேஷா, இரு காலகட்டங்களை இணைக்கும் சவாலான கதைக்களத்தை தேர்வு செய்திருக்கிறார். கிராமத்து சூழலும், நவீன வாழ்க்கையும் இணைக்க முயற்சித்த அவரது முயற்சி பாராட்டத்தக்கது. ஆனால், எதிர்பார்த்த அளவில் படம் உருவாகாதது வருத்தம். கிராமத்து பின்னணி, ஆக்ஷன் கலந்த படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு 'கரிகாடா' ஓரளவு ஈர்ப்பை தரும். ஆனால் தெளிவான திரைக்கதை, வலுவான கதாபாத்திர வளர்ச்சி எதிர்பார்ப்பவர்களுக்கு படம் சற்று குழப்பமாகவும், துண்டுத்துண்டாகவும் தோன்ற வாய்ப்புள்ளது.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் ஜீவன் கவுடா, காடுகள், மழைக் காட்சிகளை அழகாக படம் பிடித்திருக்கிறார். சில காட்சிகள் கண்ணுக்கு நிறைவாக இருக்கின்றன.

    இசை

    அதிஷய் ஜெயின், ஷஷாங்க் சேஷகிரியின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கவனம் ஈர்த்து இருக்கிறது.

    ரேட்டிங்- 2.5/5

    • சில படங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
    • அருண் மாதேஸ்வரன் விலகிவிட்டதாக தகவல்.

    தென்னிந்திய மொழிகள், பாலிவுட், ஹாலிவுட் என திரைத்துறை பேதமின்றி பம்பரமாக சுழன்று நடித்து வருபவர் நடிகர் தனுஷ். நடிப்பு மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு என பல பிரிவுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். தமிழில் மட்டும் இவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார். இதில் சில படங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    இந்த வரிசையில், பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்தப் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. தனுஷ் நடிப்பில் உருவாகும் இளையராஜா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் இருந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் விலகிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி வந்தது.

    இந்த நிலையில், இளையராஜா வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்து நடிகர் தனுஷின் மேலாளர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்த X தளப்பதிவில் அவர், "நடிகர் தனுஷ் நடிக்கும் இளையராஜா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் இருந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் விலகிவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் உண்மையல்ல.

    லோகேஷ் கனகராஜின் `டிசி' திரைப்படம் வெளியான பிறகு, திட்டமிட்டபடி இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பணிகளைத் தொடங்குவார். இந்தத் திட்டம் குறித்த இதர தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்," என தெரிவித்துள்ளார்.

    • 2002-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் 'மௌனம் பேசியதே'
    • மௌனம் பேசியதே படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

    ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'நாயகன்', 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜய்யின் 'கில்லி', 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', 'அஞ்சான்', தனுஷின் 'யாரடி நீ மோகினி', சேரனின் 'ஆட்டோகிராஃப்' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    இந்த நிலையில், 24 ஆண்டுகளுக்கு முன் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'மௌனம் பேசியதே' படம் மீண்டும் வெளியாக உள்ளது.

    காதலர் தினத்தை ஒட்டி வரும் பிப்ரவரி 13 அன்று மௌனம் பேசியதே படம் வெளியாக உள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

    2002-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் 'மௌனம் பேசியதே'. த்ரிஷா, லைலா, நந்தா, நேஹா பெண்ட்ஸ் என பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இன்றும் கூட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

    மௌனம் பேசியதே படம் மீண்டும் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மௌனம் பேசியதே படத்தின் பிரபல வசனத்தை சூர்யா பேசியுள்ளார். 

    • சுட சுட தோசை. அதுவும் ஐஸ்வர்யா ராஜேஷ் சுட்ட தோசை.
    • வீடியோ காட்சிகளை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

    தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ், தெலுங்கு, சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சில தினங்களுக்கு முன்பு தெலுங்கு படப்பிடிப்பில் பங்கேற்றார். அப்போது திடீரென படப்பிடிப்பு தளத்தில் சமையல் பகுதிக்கு சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ் படப்பிடிப்பில் பங்கேற்றோருக்கு தோசை சுட்டு பரிமாறினார்.

    தோசை, தோசை வேண்டுமா? வேண்டுமா? என கூவி, கூவி அழைத்து அனைவருக்கும் தனது கையால் சுட சுட சுட்டுக் கொடுத்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

    சுட சுட தோசை. அதுவும் ஐஸ்வர்யா ராஜேஷ் சுட்ட தோசை. கேட்க வா வேண்டும் மேடம். எனக்கு மேடம் எனக்கு என போட்டி போட்டு 'தோசை'யை சுவைத்து மகிழ்ந்தனர் படக்குழுவினர்.

    அப்போது எடுத்த வீடியோ காட்சிகளை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

    • டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் ஆவார்.
    • படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

    சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடித்துள்ள படம் 'வித் லவ்'. இப்படத்தின் மூலம் அபிஷன் கதாநாயகனாக அறிமுகமானார். அபிஷன் ஜீவிந்த் முன்னதாக தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற "டூரிஸ்ட் ஃபேமிலி" படத்தின் இயக்குநர் ஆவார்.

    காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு இருக்கும் "வித் லவ்" படத்தில் காவ்யா அனில், ஹரிஷ்குமார், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், ஆர்.ஜே. ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வித் லவ் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.

    வித் லவ் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 11 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக அபிஷன் ஜீவிந்த் இயக்கிய டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் பெரும் லாபம் ஈட்டிய நிலையில், தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் வித் லவ் திரைப்படமும் வசூலை குவித்து வருகிறது.

    • மஞ்சுவாரியர் மலையாள திரையுலகில் பெண் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
    • மஞ்சுவாரியர் சமீபத்தில் மோட்டார் சைக்கிளில் தனுஷ்கோடிக்கு தனியாக பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    தென்னிந்திய திரை உலகில் தனித்துவமான நடிப்பாலும், அழகாலும் ரசிகர்கள் மனதில் நிலைத்திருப்பவர் மஞ்சுவாரியர். 47 வயதிலும் அதே அழகு, அதே இளமை கொண்டு தனக்கான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.

    திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து வரும் மஞ்சுவாரியர் வேட்டையன் படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்தார். தொடர்ந்து மலையாள படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் மஞ்சுவாரியர் மலையாள திரையுலகில் பெண் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். மஞ்சுவாரியர் சமீபத்தில் மோட்டார் சைக்கிளில் தனுஷ்கோடிக்கு தனியாக பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் மஞ்சுவாரியர் பாரம்பரிய அழகின் அடையாளமான மூக்குத்தி அணிந்து கேரள உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மூக்குத்தியை மூக்குக்கு கீழ் பகுதியில் அணிந்து முக அழகை வெளிப்படுத்தியுள்ள மஞ்சுவாரியரின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டிங்காகி வருகிறது.

    ஆடம்பரம் இல்லாமல் இயல்பான தோற்றத்தில் மஞ்சுவாரியர் அணிந்திருந்த மூக்குத்தி பெண்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×