என் மலர்
சினிமா செய்திகள்
சூர்யாவின் 2டி தயாரிப்பில் விஜய்குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘உறியடி 2’ படத்தின் விமர்சனம். #Uriyadi2 #Uriyadi2Review
வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் ஆலை தமிழ்நாட்டில் உள்ள கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. அதே கிராமத்தில் இன்ஜினியரிங் படித்து விட்டு தன்னுடைய நண்பர்களுடன் வேலை தேடி வருகிறார் நாயகன் விஜய் குமார்.
அந்த தொழிற்சாலையில் தன் நண்பர்களுடன் வேலைக்கு சேர்கிறார் விஜய்குமார். சேரும் முதல்நாளே தொழிலாளி ஒருவர், தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு உயிரிழக்கிறார். அதே தொழிற்சாலையில், டாக்டராக பணிபுரியும் நாயகி விஸ்மயாவும் விஜய்குமாரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகிறார்கள்.
இந்நிலையில், தொழிற்சாலையில் ஏற்படும் விஷவாயு கசிவால் தன்னுடைய நண்பர் ஒருவர் இறக்கிறார். ஏற்கெனவே வேறு ஒரு விபத்தில் இறந்த தொழிலாளியும், விஜய்குமாரின் நண்பரும் இறந்ததற்கான காரணம் ஒன்றுதான் என்று விஜய்குமாருக்கு தெரியவருகிறது.

தொழிலாளிகள் இறந்ததை வைத்து அந்த ஊரில் அரசியல்வாதியாக இருக்கும் சங்கர், போராட்டம் நடத்தி தொழிற்சாலையை மூட வைக்கிறார். பின்னர் தொழிற்சாலையின் முதலாளி பணத்திற்கு ஆசைப்பட்டு ஆலையை அவரே திறக்க வைத்து விடுகிறார்.
சில நாட்களில் போதுமான பாதுகாப்பு வசதி இல்லாமல், தொழிற்சாலையில் இருந்து விஷவாயு வெளியேறி காற்றில் கலக்கிறது. இதனால், ஊரில் உள்ள மக்கள் பலரும் பாதிப்படைந்து இறக்கிறார்கள். இதில், தன்னுடைய பெற்றோரை இழக்கிறார் விஜய்குமார்.
அதன்பின் தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார் விஜய்குமார். இதற்கு காரணமாக செயல்படும் தொழிற்சாலை முதலாளி துரை ரமேஷுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முயற்சி செய்கிறார்.
இறுதியில் விஜய்குமார் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

உறியடி படம் போலவே இப்படத்திலும் ஆழமான, அழுத்தமான கருத்தை பதிவு செய்து இயக்கி நடித்திருக்கிறார் விஜய்குமார். தொழிற்சாலையினால் ஏற்படும் பாதிப்பு, அதற்கு பின்னால் இருக்கும் அரசியல், பொது மக்களை கண்டுக்கொள்ளாத அரசியல்வாதிகள் என அனைத்தையும் தோலுறித்து காட்டியிருக்கிறார். முதல்பாதி துள்ளலான நடிப்பையும், பிற்பாதியில் போராடும் இளைஞராகவும் நடித்து கவர்ந்திருக்கிறார். ஏய் இங்க வாடா என்று போலீஸ் கூப்பிடும் காட்சியிலும், 500 அரசியல்வாதிகள் கோடி கணக்கில் இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிப்பதா... என பேசும் வசனங்களில் கைத்தட்டல் பெறுகிறார். இடைவெளிக்கு முன்பு பதற்றத்தையும், இடைவெளிக்குப் பின் பரிதாபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார். படம் பார்ப்பவர்களை அந்த கிராமத்திற்கே அழைத்து சென்று விடுகிறார்.
மருத்துவராக திரையில் தோன்றும் நாயகி விஸ்மயா, காதல், மக்களுக்காக போராடுவது என நடிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஜாதி கட்சி நடத்தும் அரசியல்வாதியாக வரும் சங்கர் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். விஜய்குமாரின் நண்பர்களாக வரும் சுதாகர் மற்றும் அப்பாஸ் இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். தொழிற்சாலை முதலாளியாக வரும் துரை ரமேஷ், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார்.

படத்திற்கு பெரிய பலம் இசை. 96 படத்தில் மெலோடி இசையை கொடுத்து மயக்கிய கோவிந்த் வசந்தா, இப்படத்தின் காட்சிகளில் நம்மை கடத்தி இருக்கிறார். இவருடைய பின்னணி இசை பார்ப்பவர்களுக்கு உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. நம்பள ரொம்ப பீல் பண்ண வைத்திருக்கிறார் மனுஷன்.
பிரவீன் குமாரின் ஒளிப்பதிவு கிராமத்து அழகையும், மக்களின் பாதிப்பையும் பரிதவிப்பையும் திரையில் பிரதிபலித்திருக்கிறார். கலை இயக்குனர் ஏழுமலை ஆதிகேசவன் மெனக்கெட்டிருப்பது திரையில் தெரிகிறது. தெளிவான காட்சிகளில் இவரின் நுணுக்கமான வேலைபாடுகள் பெரிதும் உதவியிருக்கிறது.
மொத்தத்தில் ‘உறியடி 2’ அரசியல்வாதிகளுக்கு சவுக்கடி.
சிவாஜி நடித்த வசந்த மாளிகை படத்தின் டிஜிட்டல் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட பி.சுசீலா, அவர் எனக்கு அண்ணன் என்று கூறியிருக்கிறார். #PSusheela
எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வெளியிடப்பட்டு வசூலை குவிக்கின்றன. இயக்குநரும் தயாரிப்பாளருமான வி.சி.குகநாதன் சிவாஜி நடித்த ’வசந்தமாளிகை’ படத்தை டிஜிட்டலுக்கு மாற்றி வெளியிடுகிறார்.
டிஜிட்டலில் ரிலீசாக இருக்கும் `வசந்தமாளிகை’ படத்தின் டிரைலர் நடிகை வாணிஸ்ரீ, பின்னணி பாடகி பி.சுசீலா, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பி.சுசீலா ‘நாங்கள் பாடிய பாடல்களுக்கு சிவாஜி நடித்ததால் தான் எங்களுக்கு புகழ் கிடைத்தது. சிவாஜியும் நானும் அண்ணன் தங்கையாக பழகி இருக்கிறோம். அவர் எனக்கு உடன் பிறவாத அண்ணன். அவர் இருந்து இதை பார்த்து இருந்தால் மிகவும் மகிழ்ந்து இருப்பார். இதில் கலந்துகொள்வது எனக்கு பெருமையான விஷயம்’. இவ்வாறு அவர் பேசினார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர்வது குறித்து நயன்தாரா ‘கொலையுதிர் காலம்’ படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #KolaiyudhirKaalam #VigneshShivn
சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பிரதாப் போத்தன் நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு பேசும்போது, நயன்தாரா குறித்து சர்ச்சை கருத்துகளை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. நடிகர் சங்கமும் கண்டித்தது.
நயன்தாராவின் காதலரும், டைரக்டருமான விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘இந்த படத்தை தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சில ஆண்டுகளுக்கு முன்பே கைவிட்டு விட்டனர் என்று நினைத்தேன். பொருத்தமற்ற நிகழ்ச்சியில் தேவையற்ற நபர்கள் கலந்து கொண்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே பேசினர்’’ என்று தெரிவித்தார்.

விக்னேஷ் சிவன் கைவிடப்பட்ட படம் என்று கூறியதால் படத்தின் வியாபாரம் பாதித்துள்ளது. டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு முன்னால் கொலையுதிர் காலம் படத்தை வாங்கிக்கொள்வதாக சொன்ன வினியோகஸ்தர்கள் தற்போது வேண்டாம் என்று பின்வாங்கிவிட்டனர்.
படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்குவதாக உறுதி அளித்த நிறுவனமும் இப்போது வேண்டாம் என்று கூறிவிட்டது. இதனால் படத்தின் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. படத்தின் நஷ்டத்துக்கு பொறுப்பு ஏற்கும்படி விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர்வது குறித்து இயக்குனர் சக்ரி டோலட்டி உள்ளிட்ட படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #KolaiyudhirKaalam #VigneshShivn #Nayanthara
புவன் நல்லன் இயக்கத்தில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் `ஜாம்பி' படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. #Zombie #YogiBabu
எஸ் 3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் `ஜாம்பி'. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், ஒரு பாடல் தவிர படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.
யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், சித்ரா அக்கா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு விடுதியில் இரவு நேரத்தில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி நகைச்சுவை படமாக தயாராகி உள்ளது. பெரும்பகுதி படப்பிடிப்பு விடுதியை சுற்றியே நடந்துள்ளது. இந்த படத்தில் யோகிபாபு பெண் வேடத்திலும் சில காட்சிகளில் வருகிறார். அந்த புகைப்படத்தை யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
படத்தை கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். பிரேம்ஜி இந்த படத்துக்கு இசையமைக்கிறார். #Zombie #YogiBabu #YashikaAannand
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரணாவத் பாலிவுட் இயக்குநர் பஹலாஜ் நிஹலானி மீது புகார் தெரிவித்துள்ளார். #KanganaRanaut
‘தாம் தூம்’ படத்தில் நடித்த கங்கனா ரனாவத் தற்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 2 முறை தேசிய விருதுகள் பெற்று பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தற்போது தமிழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கிறார்.
விஜய் இயக்கும் இந்த படத்துக்கு தலைவி என பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்தியிலும் இப்படம் ஜெயா என்ற பெயரில் உருவாகிறது. அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் கங்கனா. கடந்த வருடம் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் மீது சரமாரியாக குற்றம் சாட்டியதுடன் போலீசில் புகார் அளித்தார்.
தற்போது பாலிவுட் பிரபல இயக்குனர் பஹலாஜ் நிஹலானி மீது புகார் கூறியிருக்கிறார். ‘ஐ லவ் யூ பாஸ்’ இந்தி படத்தில் நடித்தபோது, உள்ளாடை அணியாமல் கயிறுகள் மட்டுமே கட்டிக்கொண்டு தன்னை போட்டோவுக்கு போஸ் கொடுக்க, இயக்குனர் நிஹலானி வற்புறுத்தியதாகவும், அது ஒரு வகையான ஆபாச படம் என்றும் தெரிவித்துள்ளார்.

‘ஐ லவ் யூ பாஸ்’ படத்தில், நடுத்தர வயதுடைய அலுவலக மேலதிகாரி ஒருவருடன் உடலுறவு கொள்ளும் இளம்பெண் கதாபாத்திரம் தனக்கு தரப்பட்டது. அது எனக்கு ஏற்ற படம் இல்லை என்பதால் நான் நடிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கங்கனாவின் புகாரை மறுத்திருக்கிறார் இயக்குனர் நிஹலானி.
‘ஐ லவ் யூ பாஸ்’ ஆபாச படம் இல்லை, அமிதாப், ரிஷிகபூர் ஆகியோரை இந்த படத்தில் நடிக்க கேட்டேன். இது எப்படி ஆபாச படமாக இருக்க முடியும். கங்கனா இப்படத்துக்காக புகைப்படத்துக்கு அளித்த போஸுக்கு பிறகுதான் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வர தொடங்கின என்று இயக்குனர் தெரிவித்திருக்கிறார். இயக்குனர் மீது கங்கனா கூறியுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. #KanganaRanaut
அறிமுக இயக்குநர் கே.ஆர். சந்துரு இயக்கத்தில் தீரஜ் நாயனாக அறிமுகமாகும் போதை ஏறி புத்தி மாறி படத்தில் மீரா மிதுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். #BodhaiYeriBudhiMaari #MeeraMitun
ரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, அறிமுக இயக்குனர் கே.ஆர். சந்துரு இயக்கத்தில் உருவாகும் படம் `போதை ஏறி புத்தி மாறி'. த்ரில்லர் படமாக உருவாகும் இதன்மூலம், பல்வேறு குறும்படங்களில் நடித்து பிரபலமான தீரஜ் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார். பிரதைனி சர்வா என்ற மாடல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மீரா மிதுன் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுகுறித்து மீரா மிதுன் கூறும்போது,

இந்த படம் தடம் மாதிரி ரசிகர்களை சீட் நுனிக்கு வரவைக்கும் த்ரில்லர் வகையை சேர்ந்தது. தலைப்புக்கு சம்பந்தத்தை கிளைமாக்ஸில் மட்டுமே பார்க்க முடியும். இயக்குநர் கே.ஆர்.சந்துரு குறும்பட இயக்குநர், கதை சொன்ன உடனே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தோன்றியது.
இந்த படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, கே.பி. இசையமைக்கிறார். சாபு ஜோசப் படத்தொகுப்பையும், கோபி ஆனந்த் கலை பணிகளையும் கவனிக்கின்றனர். #BodhaiYeriBudhiMaari #Dheeraj #KRChandru #MeeraMitun
பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வருகிற 10-ந் தேதி துவங்கவிருக்கிறது. #Rajinikanth166 #ARMurugadoss
‘பேட்ட’ படத்துக்கு பிறகு ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க தயாராகி உள்ளார். ரஜினியின் 166-வது படமாக உருவாகும் இந்த படத்தின் பட வேலைகள் தொடங்கி உள்ளன.
சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில், படத்தில் வரும் ரஜினியின் தோற்றத்தை புகைப்படம் எடுக்கும் பணி நடந்தது. இந்த புகைப்படங்கள் வெளியானால் ரஜினியின் கதாபாத்திரம் தெரிய வரும்.
இதில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியல், தாதாக்கள், அதிரடி என்று விறுவிறுப்பாக திரைக்கதையை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு வருகிற 10–ந்தேதி மும்பையில் தொடங்க உள்ளது. ஒரு மாதம் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பை நடத்துகின்றனர்.

இடையில், வருகிற 18-ந் தேதி மட்டும் சென்னை வந்து ஓட்டு போட்டு விட்டு மீண்டும் மும்பை சென்று படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். ரஜினியின் கதாபாத்திரம் சமூக வலைத்தளங்களில் வெளியாவதை தடுக்க படப்பிடிப்பில் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள்செய்துள்ளனர்.
இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஏற்கனவே சந்திரமுகி படத்தில் இருவரும் ஜோடியாக நடித்து இருந்தனர். சிவாஜி படத்தில் ஒரு பாடலுக்கு சேர்ந்து நடனமும் ஆடி இருந்தனர். தற்போது அட்லி இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வரும் நயன்தாரா விரைவில் ரஜினிகாந்த் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth166 #ARMurugadoss
பாபா பாஸ்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், பார்த்திபன், பல்லக் லால்வானி, பூனம் பாஜ்வா நடிப்பில் வெளியாகி இருக்கும் குப்பத்து ராஜா படத்தின் விமர்சனம். #KuppathuRaja #GVPrakashKumar
வடசென்னையில் உள்ள ஒரு குப்பத்தில் வாழ்ந்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ், குப்பத்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தலைவர் போல் செயல்பட்டு வருகிறார் பார்த்திபன். ஜி.வி.பிரகாஷின் அப்பாவான எம்.எஸ்.பாஸ்கரும், பார்த்திபனும் நண்பர்கள். தொடக்கத்தில் இருந்தே ஜி.வி.பிரகாஷுக்கும், பார்த்திபனுக்கும் மோதல் இருக்கிறது.
அதே குப்பத்தில் வசித்து வரும் நாயகி பல்லக் லால்வானியும், ஜி.வி.பிரகாஷும் காதலித்து வருகிறார்கள். இந்த நிலையில், ஜி.வி.பிரகாஷ் வீட்டுக்கு அருகில் குடிவருகிறார் பூனம் பாஜ்வா. இவரால் காதலர்களான ஜி.வி.பிரகாஷ் - பல்லக் லால்வானி இடையே அடிக்கடி சண்டை வருகிறது.

அந்த பகுதியில் கவுன்சிலராக இருக்கும் கிரணை பொது இடத்தில் வைத்து எம்.எஸ்.பாஸ்கர் கிண்டல் செய்கிறார். மறுநாளே எம்.எஸ்.பாஸ்கர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். எம்.எஸ்.பாஸ்கரை கொலை செய்தது யார் என்று தெரியாமல் ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் குழம்பி இருக்கின்றனர். அதேபோல் அந்த பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஒருவனும் மர்மமான முறையில் காணாமல் போகிறான்.
கடைசியில், எம்.எஸ்.பாஸ்கரை கொலை செய்தது யார்? காணாமல் போன சிறுவன் என்னவானான்? ஜி.வி.பிரகாஷ் - பல்லக் லால்வானி இணைந்தார்களா? என்பதே குப்பத்து ராஜாவின் அடுத்த பாதி.

நடிப்பில் புதிய பரிணாமத்தை காட்டி வரும் ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தில் வடசென்னை இளைஞனாக சிறப்பாக நடித்திருக்கிறார். குப்பத்து தலைவனாக பார்த்திபன் தனது வழக்கமான நக்கலுடன் அதகளப்படுத்தியிருக்கிறார். சிறப்பான நடிப்பு. பல்லக் லால்வானி தைரியமான வடசென்னை பெண்ணாக தமிழில் நல்ல அறிமுகத்தை பெற்றிருக்கிறார். பூனம் பாஜ்வா கவர்ச்சி தோற்றத்தில் வந்து செல்கிறார். எம்.எஸ்.பாஸ்கர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் உடன் பெரும்பாலான காட்சிகளில் வரும் யோகி பாபுவின் காமெடியும் பெரிதாக எடுபடவில்லை. சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். ஆர்.என்.ஆர்.மனோகர், கிரண், அஜய் ராஜ், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்.

நடன இயக்குநராக இருந்து திரைப்பட இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் பாபா பாஸ்கருக்கு வாழ்த்துக்கள். வடசென்னையில் உள்ள ஒரு குப்பத்தில் நடக்கும் சில சம்பவங்களை கோர்த்து படத்தை இயக்கியிருக்கிறார். எனினும் அந்த சம்பவங்கள் படத்திற்கு பெரிதாக உயிர் கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். வடசென்னை பேச்சும் இயல்பானதாக தோன்றவில்லை, பெரும்பாலான இடங்களில் நாடகம் போல் தோன்ற வைக்கிறது. குப்பத்தில் நடப்பவற்றை மிகைப்படுத்தி காட்டியிருப்பது போல் தோன்றுகிறது. படத்தின் படத்தொகுப்பு, கலை பணிகள் சிறப்பு.
ஜி.வி.பிரகாஷ் இசையில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். பாடல்கள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
மொத்தத்தில் `குப்பத்து ராஜா' அரியணை இல்லை. #KuppathuRajaReview #KuppathuRaja #GVPrakashKumar #PalakLalwani #Parthiban #PoonamBajwa
சத்தீஷ்வரன் இயக்கத்தில் ஜெய்க்குமார் - நந்திதா ஜெனிபர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `குடிமகன்' படத்தின் விமர்சனம். #Kudimagan #KudimaganReview
விவசாயத்தை அடிப்படையாக கொண்ட கிராமத்தில் நாயகன் ஜெய்க்குமார் ஒரு விவசாயி. மனைவி, மகன் என தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மகனை அதிக அன்பும், அக்கறையும்கொண்டு வளர்த்து வருகிறார்கள்.
விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட ஒரு அழகான கிராமத்தில் ஜெய்க்குமார், ஜெனிபர் மகன் ஆகாஷுடன் வசித்து வருகிறார்கள். மகனின் மீது அதிக அன்பும், அக்கறையும்கொண்டு வளர்த்து வருகிறார்கள். இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருக்கும் நிலையில், அந்த பகுதி கவுன்சிலரான கிரண் அங்கு மதுக்கடை ஒன்றை திறக்கிறார்.

இதையடுத்து ஊர்மக்கள் அனைவரும் ஊர்த் தலைவரான பாவா செல்லத்துரை தலைமையில் போராட்டத்தில் இறங்குகிறார்கள். இதையடுத்து விரைவில் மதுக்கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக கூறி மக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கிறார். மதுக்கடையை மூட கிரண் நடவடிக்கை எடுக்காததால், பொறுப்புடன் செயல்பட்டு வந்த அந்த ஊரை சேர்ந்த பலரும் மதுவுக்கு அடிமையாகின்றனர். நாயகன் ஜெயக்குமாரும் குடிக்கு அடிமையாக, அவரது குடும்பம் மோசமான நிலைக்கு செல்கிறது.
கடைசியில் குடி மகிழ்ச்சியான அந்த குடும்பத்தை எந்த அளவுக்கு அழித்தது? குடியால் ஏற்பட்ட, ஏற்படும் பாதிப்பு என்ன? என்பதை சொல்லக்கூடிய படம் தான் குடிமகன்.

நாயகன் ஜெயக்குமார் காட்சிக்கு ஏற்ப பொறுப்போடு நடித்திருக்கிறார். பொறுப்பான இளைஞராக இருந்து போதைக்கு அடிமையாகி அவரது வாழ்க்கையே மாறும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். நடிப்பில் இன்னமும் அனுபவம் தேவை. நாயகி ஜெனிபர் இயல்பான, யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி கவர்கிறார். குடியில் இருந்து மீளும் கதாபாத்திரத்தில் பாலாசிங் அனுபவ நடிப்பை வெளிப்படுத்த, மது பிரியராக வரும் வீர சமர் காமெடிக்கு கைகொடுத்திருக்கிறார். மகனாக நடித்திருக்கும் ஆகாஷும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
குடியால் தமிழகத்தில் பல்வேறு குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் அவலம் ஏற்படுள்ளது என்பதை சமூக அக்கறையோடு சொல்லியிருக்கும் இயக்குநர் சத்தீஷ்வரனுக்கு பாராட்டுக்கள். மதுவால் ஏற்படும் தீமைகளை ஒரு கிராம பின்னணியில் ஒரு குடும்பத்தை வைத்து யதார்த்தமாக இயக்கியிருக்கிறார். குடியால் மதுபிரியர்களின் வாரிசுகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள், அவர்களது எதிர்காலம் என்னவாகிறது என்பதையும் சொல்லும் படமாக இதை உருவாக்கியிருக்கிறார். எனினும் திரைக்கதையில் சுவாரசியத்தை கூட்டியிருந்தால் இன்னமும் கவர்ந்திருக்கலாம்.

பிரசாந்தின் பின்னணி இசை ஏற்கும் ரகம் தான். அருள் செல்வனின் ஒளிப்பதிவில் கிராமத்தின் அழகு மிளிர்கிறது.
மொத்தத்தில் `குடிமகன்' வேண்டு(டா)ம். #Kudimagan #KudimaganReview
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் இணையும் நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. #PonniyinSelvan #Nayanathara
இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ‘பொன்னியின் செல்வன்’. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில விஷயங்களால் அது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.
தற்போது விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலரையும், தெலுங்கு, இந்தி திரையுலகை சேர்ந்த நடிகர்களையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அமிதாப் பச்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர் இந்த படத்தில் ஒப்பந்தமாகவில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்தில் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தி, பெரிய பழுவேட்டரையராக பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு, குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் மணிரத்னம். வந்தியத்தேவனை இலங்கைக்கு அழைத்து சென்று அருள்மொழி வர்மனை காப்பாற்றி தமிழகம் அழைத்து வரும் முக்கிய கதாபாத்திரமான பூங்குழலியாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
படத்தின் கதாபாத்திரங்கள் தேர்வு இறுதிநிலையை எட்டியிருக்கும் நிலையில், படப்பிடிப்பை 3 மாதங்கள் முன்பாக செப்டம்பரில் துவங்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. முதலில் கார்த்தி, ஜெயம் ரவி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. மகாவீர் கர்ணா படத்தை முடித்து டிசம்பரில் விக்ரம் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இணையவிருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, லைகா புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கதாபாத்திரங்கள் விவரம் வரும் வாரத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. #PonniyinSelvan #Maniratnam #Nayanthara
உலக மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்திருக்கிறார். #AvengersEndGame #VijaySethupathi
உலகளவில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் வருகிற ஏப்ரல் 26-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ரஸோ சகோதரர்கள் இயக்கியிருக்கும் இந்த படத்தில் மார்வெல் சீரியசில் இடம்பெற்றிருந்த அனைத்து சூப்பர் ஹீரோக்களும் ஒன்றாக இணைந்துள்ள கடைசி பாகம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மார்வெல் அந்தமை உருவாக்கி இருக்கிறார். இந்த பாடல் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

விஜய்சேதுபதி இப்படத்தில் அயன்மேனுக்கு தமிழில் டப்பிங் பேசியுள்ளார். அதுபோல், பிளாக் விடோவிற்கு ஆண்ட்ரியா டப்பிங் கொடுத்துள்ளார். மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.
பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஆதி மற்றும் அனகா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நட்பே துணை’ படத்தின் விமர்சனம். #NatpeThunai #NatpeThunaiReview
பிரான்ஸ்க்கு சென்று செட்டிலாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாண்டிச்சேரியில் வாழ்ந்து வருகிறார் நாயகன் ஹிப்ஹாப் ஆதி. இவருடைய தாய் கவுசல்யா. ஒரு மோதலில் நாயகி அனகாவை பார்க்கிறார் ஆதி. முதல் சந்திப்பிலேயே அவர் மீது ஒருவிதமான ஈர்ப்பு ஏற்படுகிறது.
ஹாக்கி வீராங்கனையான அனகாவை மீண்டும் சந்தித்தவுடன் அவர் மீது காதல் வயப்படுகிறார். இவருடன் பழக நினைக்கும் ஆதி, அனகா பயிற்சி செய்யும் மைதானத்திற்கு நண்பர் மூலமாக செல்கிறார். பல போராட்டங்களால் மீட்கப் பட்ட அந்த மைதானத்தின் பயிற்சியாளராக இருக்கிறார் ஹரிஷ் உத்தமன்.
ஹாக்கி தேர்வின் போது நாயகி அனகாவிற்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதில் ஆதி தலையிட்டு, சிறப்பாக ஹாக்கி விளையாடி நாயகியின் தேர்வு உதவுகிறார். இதைப் பார்க்கும் பயிற்சியாளர் ஹரிஷ் உத்தமன் உட்பட பலர் வியப்படைகிறார்கள். பிறகு அவர் இன்டர்நேஷனல் அளவில் இந்திய ஜூனியர் அணிக்கு விளையாடியவர் என்று தெரியவருகிறது.

இந்நிலையில், அமைச்சராக இருக்கும் கரு பழனியப்பன், உலக நாடுகளே வேண்டாம் என்று ஒதுக்கிய ஒரு மருந்து கம்பெனியை இந்தியாவில் தொடங்க அனுமதி கொடுக்கிறார். அந்நிறுவனம் இதற்காக மைதானத்தை தேர்வு செய்கிறார்கள்.
மைதானத்தை விட்டுவிட கூடாது என்று பயிற்சியாளர் ஹரிஷ் உத்தமன் பல்வேறு வழிகளில் போராடுகிறார். ஒரு கட்டத்தில் ஹாக்கி விளையாடி வெற்றி பெற்றால் மைதானத்தை மீட்கும் சூழல் ஏற்படுகிறது. இதற்காக ஆதியை விளையாட அழைக்கிறார். ஆனால், ஆதியோ விளையாட மறுகிறார்.
இறுதியில் அந்த மைதானத்தை ஹரிஷ் உத்தமன் மீட்டெடுத்தாரா? ஹாக்கி விளையாட ஆதி மறுக்க காரணம் என்ன? அமைச்சர் கரு பழனியப்பனின் திட்டம் நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதி, துறுதுறு இளைஞனாக நடித்திருக்கிறார். படம் முழுக்க இளமை துள்ளலுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நாயகி அனகாவை துரத்தி துரத்தி காதலிப்பது, நடனம், விளையாட்டு என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பாக இடைவெளிக்கு முன் உள்ள காட்சியில் அசர வைக்கிறார். நாயகி அனகா கொடுத்த வேலையை செய்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் கவுசல்யா, அதே அழகுடன் அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அரசியல்வாதியாக வரும் கரு பழனியப்பன், யதார்த்தமான நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். இவர் பேசும் வசனங்கள் நிகழ்கால அரசியல் சூழ்நிலையை ஞாபகப்படுத்துகிறது. குறிப்பாக இறுதியில் பேசும் வசனம் செம்ம... பயிற்சியாளராக வரும் ஹரிஷ் உத்தமன் மிடுக்கான நடிப்பால் கவனிக்க வைத்திருக்கிறார். நண்பர்களாக வருபவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு. மைதானம் விளையாட்டு என பல படங்கள் வந்திருந்தாலும், இதில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார். விளையாட்டில் இருக்கும் அரசியல், அரசியல்வாதிகளின் தலையீடு என அனைத்தையும் சொல்லியிருக்கிறார். கிரிக்கெட்டை தவிர மற்ற விளையாட்டில் உலகளவில் விளையாடினாலும் அது மக்களுக்கு தெரியாது. அந்தளவிற்கு நம்நாடு இருக்கிறது என்பதை சொல்லியிருக்கிறார். வசனங்கள் படத்திற்கு பெரிய பலம். ஒரு சில லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம்.

அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. ஆதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்திருக்கிறது. பின்னணி இசையில் பெரிதளவு கைகொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘நட்பே துணை’ வலுவான நட்பு.






