என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கஜா புயலால் பாதிக்கப்பட்டு கரிசைக்காடு கிராமத்தில் வாழ்ந்து வரும் செல்லகுஞ்சி பாட்டிக்கு ராகவா லாரன்ஸ் வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்.
    கஜா புயலால் பலர் தங்களுடைய வீடுகளை இழந்தார்கள். அப்படி வீடிழந்த எளிய மனிதர்களுக்கு தன் சார்பாக வீடுகள் கட்டித்தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்தார். அறிவித்தது போலவே அந்தப்பணிகளைச் சரியாகச் செய்தும் வருகிறார். முதல் வீடு சமூக சேவகர் ஆலங்குடி கணேஷன் என்பவர்க்கு வீடு கட்டிக் கொடுத்து சென்றவாரம் கிரகப்பிரவேஷம் நடைபெற்றது. 

    தற்போது  வீடு இழந்து பெரும் துயரை கண்ட தஞ்சாவூர் மாவட்டதில் உள்ள கரிசைக்காடு கிராமத்தில் வாழ்ந்துவரும் செல்லகுஞ்சி  பாட்டிக்கும் வீடு கட்டிக் கொடுத்து பாட்டிக்கு தண்ணீர் கொடுத்த சோகத்தை ஆனந்தக் கண்ணீரால் ஆற்றிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.



    அன்று பாட்டி வீடு இழந்ததும் உலக அளவில் பாட்டியின் நிலைமை பேசப்பட்டது. பல நல்ல உள்ளங்களின் அனுதாபமும், அக்கறையும் லாரன்ஸ் மூலமாக இன்று  நிறைவேறியுள்ளது. இன்னும் இந்த மக்கள் பணிகள் தொடரும் என்று கூறுகிறார் ராகவா லாரன்ஸ்.
    கேன்ஸ் படவிழாவில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் காஞ்சீபுரம் பட்டு சேலை அணிந்து சென்று பலரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.
    சர்வதேச அளவில் ஆஸ்கார், குளோப் திரைப்பட விருதுகளுக்கு அடுத்து கேன்ஸ் விருதுகள் உயர்வாக கருதப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான 75-வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் உள்ள கேன்ஸ் நகரில் தொடங்கி உள்ளது. வருகிற 25-ந்தேதி வரை இந்த விழா நடக்கிறது. போட்டியில் சர்வதேச அளவில் 21 படங்கள் பங்கேற்கின்றன.

    சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. கேன்ஸ் பட விழாவில் அமெரிக்க இயக்குனர் ஜின் ஜார்முச் இயக்கிய ‘த டெட் டோன்ட் டை’, டாரண்டினோவின் ‘ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இன் ஹாலிவுட்’, முதன் முறையாக கருப்பின பெண் இயக்குனரான பிரான்சிஸ் மட்டி டியோப் இயக்கிய படம் ஆகியவற்றை திரையிடுவது முக்கியத்துவம் பெற்றுள்ளன.



    கேன்ஸ் விழாவில் விருது பெறும் பல படங்கள் ஆஸ்கார் விருதை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர் நடிகைகள் பலர் கலந்து கொள்கிறார்கள். இந்தி நடிகைகள் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, கங்கனா ரணாவத் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கங்கனா ரணாவத் காஞ்சீபுரம் பட்டு சேலை அணிந்து சென்று பலரையும் திரும்பி பார்க்க வைத்தார். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    மோகன்லாலின் புலிமுருகன் படத்தின் சாதனையை, தற்போது அவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் லூசிபர் திரைப்படம் அதிக வசூல் செய்து முறியடித்துள்ளது.
    மோகன்லால் நடிப்பில் உருவான ‘லூசிபர்’ படம் கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி வெளியானது. அரசியல் சாரம்சம் கொண்ட இந்தப் படத்திற்கான கதையை மலையாளத்தின் பிரபல கதாசிரியர் முரளி கோபி எழுதியிருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

    மலையாளத்தில் ஏற்கனவே மோகன்லால் நடிப்பில் வெளியாகி இருந்த ‘புலிமுருகன்’ திரைப்படம் தான் 150 கோடி வரை வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றிருந்தது. அந்த சாதனையை, படம் வெளியான 25 நாட்களுக்கு உள்ளாகவே முறியடித்திருக்கிறது ‘லூசிபர்’.



    அதோடு ‘புலிமுருகன்’ திரைப்படம் 50 நாட்களை நெருங்கிய வேளையில் 101 தியேட்டர்களில் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் ‘லூசிபர்’ திரைப்படம் 50 நாட்களை கடந்த நிலையில், 119 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

    இப்படத்தின் 2ம் பாகம் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.
    ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் இயக்குநர் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சுட்டுப் பிடிக்க உத்தரவு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    `தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’. இந்த படத்தில் இயக்குநர்கள் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா ரவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற ஜூன் 14-ந் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் படத்தை பார்த்த தணிக்கைக் குழு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


    செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் விக்ராந்த் மற்றும் சுசீந்திரன், பணியில் இருக்கும் போது திகிலான குற்றச் சம்பவம் ஒன்று நடக்கிறது. இதற்கு பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் கதையாக உருவாக இருக்கிறது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஸ்கின் நடித்திருக்கிறார்.

    கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார்.

    காலா, விஸ்வாசம் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சாக்‌ஷி அகர்வால், எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடிப்பதாக தெரிவித்துள்ளார்.
    ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்து அவர் அளித்த பேட்டியில் இருந்து,

    "ரஜினி சார் சினிமாவில் பெரிய அடையாளம் அவர் படம் மூலமாக எனக்கு ஒரு அடையாளம் வந்தது மகிழ்ச்சி. இப்போது கதையின் நாயகியாக சின்ட்ரெல்லா படத்தில் ராய் லட்சுமியோடு இணைந்து நடித்தது நல்ல அனுபவம். நிச்சயம் அப்படம் எனது சினிமா வாழ்க்கையில் மைல்கல்லாக அமையும்.



    அத்துடன் எழில் சார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் உடனும் இணைந்து நடித்து வருகிறேன். இது ஒரு ஹாரர் கலந்த காமெடி படம். எழில் சார் நம்மிடம் நமக்கே தெரியாமல் நம்மிடம் இருக்கும் திறமைகளை அற்புதமாக வெளிப்படுத்தச் செய்துவிடுவார். அவரது இயக்கத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி. அதேபோல் ஜி.வி.பிரகாஷ் உடன் நடிக்கும் அனைத்து நடிகைகளுக்கும் அவரோடு மீண்டும் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரும். இந்த படத்தில் பாவாடை தாவணி கட்டி நெல்லை தமிழில் பேசி நடித்திருக்கிறேன்.

    தற்போது திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அணீஸ் இயக்கத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். நிச்சயம் இந்த ஆண்டு எனக்கு தமிழ் சினிமாவில் முக்கியமான ஆண்டாக இருக்கும்" என்றார்.

    ரஞ்சித் ஜோசஃப் இயக்கத்தில் ஈழ பின்னணியில் உருவாகி `யு' சான்றிதழ் பெற்ற முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை `சினம் கொள்' படத்திற்கு கிடைத்துள்ளது.
    கனடாவில் பிறந்து வளர்ந்த ரஞ்சித் ஜோசஃப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `சினம் கொள்'. இலங்கையில் போருக்குப் பிறகான தசாப்தத்தில் இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி பேசும் படமாக இது உருவாகி இருக்கிறது.

    6 வருடங்கள் சிறை தண்டனை முடிந்து வெளியே வரும் ஆண்டவன் கட்டளை புகழ் அரவிந்தன், அவரது வீடு இலங்கை ராணுவத்தால் கைப்பற்றப்பட்டதை காண்கிறார். மேலும் அவரது குடும்பத்தினர் காணாமல் போயிருக்கிறார்கள். அதன் பின்னணில் நடப்பதை மையப்படுத்தி கதை நகர்கிறது. மேலும் இந்த திரைப்படம் தமிழர்கள் எதிர்கொள்ளும் சில கடினமான, யதார்த்தமான விஷயங்களையும் பேசியிருப்பதாக இயக்குனர் ரஞ்சித் ஜோசஃப் தெரிவித்தார்.



    இந்த படத்தை பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் படத்திற்கு `யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர். பொதுவாகவே ஈழ பின்னணியில் உருவாகும் படங்களில் போர், இரத்தம் மற்றும் அழுத்தமான வசனங்கள் இடம்பெற்றிருக்கும். இதனாலேயே படத்திற்கு தணிக்கையில் யு சான்றிதழ் கிடைப்பதில்லை. இந்த நிலையில், ஈழ பின்னணியில் உருவாகி `யு' சான்றிதழை பெற்ற முதல் தமிழ்ப்படம் என்ற பெருமை சினம் கொள் படத்திற்கு கிடைத்துள்ளது.

    இலங்கையில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு போன்ற இடங்களில் படம்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. 

    ஐரோப்பா, கனடா மற்றும் தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் வாழும் இலங்கை தமிழர்கள் இந்த படத்துக்கு நிதி அளித்துள்ளனர். தேசிய விருதுக்கான பரிந்துரைக்காக அனுப்பப்பட்டுள்ள இந்த படம் ஜூலை மாதம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் - கியாரா அத்வானி நடிப்பில் உருவாகும் காஞ்சனா படத்தின் இந்தி பதிப்பான லட்சுமிபாம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
    லாரன்ஸ் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் ‘காஞ்சனா’. லாரன்சுக்கு ஜோடியாக ராய் லட்சுமியும், திருநங்கை வேடத்தில் சரத்குமாரும் நடித்திருந்தார்கள். காமெடி, ஹாரர் கலந்த திரில்லர் படமாக வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைதொடர்ந்து, ‘காஞ்சனா 2’, ‘காஞ்சனா 3’ பாகங்கள் வெளியாகிவிட்டது.

    தற்போது காஞ்சனா முதல் பாகம் இந்தியில் ‘லட்சுமி பாம்’ Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். சரத்குமார் வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். கதாநாயகியாக கியரா அத்வானி நடிக்கிறார்.


    படப்பிடிப்பு மும்பையில் நடந்து வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதில் அக்‌ஷய் குமார் பெண் வேடமேற்று மேக்கப் செய்யும்படி இருந்தது.

    படம் வருகிற ஜூன் 5 2020-ல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் அஞ்சலி நடிப்பில் இந்தியாவின் முதல் ஸ்டெரோஸ்கோபிக் 3டி படமாக உருவாகி இருக்கும் ‘லிசா’ படத்தின் முன்னோட்டம்.
    பி.ஜி.மீடியா ஒர்க்ஸ் சார்பில் பி.ஜி.முத்தையா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘லிசா’.

    அஞ்சலி நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சாம் ஜோன்ஸ், மக்ராந்த் தேஷ்பாண்டே, யோகி பாபு, மைம் கோபி முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இசை - சந்தோஷ் தயாநிதி, ஒளிப்பதிவு - பி.ஜி.முத்தையா, கலை - வினோத் ரவீந்திரன், சண்டைப்பயிற்சி - ஸ்டன்னர் சாம், பாடல்கள் - மணி அமுதவன், நடனம் - சுரேஷ், கிரியேட்டிவ் ஹெட் - யோகேஷ் கிருஷ்ணா, ஆடியோகிராபி - ஏ.எம்.ரஹமதுல்லா, தயாரிப்பு மேற்பார்வை - பாலமுருகன், இணை இயக்கம் - டி.என்.பி.ராஜேந்திரன், நிர்வாக தயாரிப்பு - சௌந்தர் பைரவி, தயாரிப்பு - பி.ஜி.முத்தையா, எம்.தீபா, எழுத்து, இயக்கம் - ராஜு விஸ்வநாத்.



    இந்த படம் 3டி டெக்னாலஜி ஸ்டீரியோஸ்கோப் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்திய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. திகில் கலந்த த்ரில்லர் படமாக இது உருவாகி இருக்கிறது. படம் வருகிற மே 24-ந் தேதி திரைக்கு வருகிறது.

    லிசா படத்தின் டிரைலர்:

    சக்திவாசன் இயக்கத்தில் நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் உருவாகும் ‘நாயே பேயே’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
    ‘குப்பை கதை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடன இயக்குநர் தினேஷ். யதார்த்மான கதையம்சத்தில் கடந்த ஆண்டு வெளியான இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தற்போது மற்றுமொரு படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    ‘நாயே பேயே’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை சக்திவாசன் இயக்குகிறார். ஐஸ்வர்யா, ‘ஆடுகளம்’ முருகதாஸ், சாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    நிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார்.



    இயக்குனர் சக்திவாசன் படம் பற்றி கூறியதாவது:-

    ‘‘நகரத்தில் வாழும் ஒரு துடிப்பான இளைஞன், மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். நிரந்தர வேலையில் இல்லாத அவன், அவ்வப்போது சமயோசிதமாக சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தில் நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கிறான்.

    இந்த நிலையில், அவன் ஒரு பெரிய திருட்டில் ஈடுபட்டு வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆக விரும்புகிறான். அவனுக்கு அந்த சந்தர்ப்பம் அமைந்ததா, அதில் அவன் வெற்றி பெற்றானா? என்பதே இந்த படத்தின் கதை.

    கோபி கிருஷ்ணா, கலைஅரசி சாத்தப்பன், டாக்டர் ரேவதி ரெங்கசாமி ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.

    ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி - ஜோதிகா இணைந்து நடிக்கும் புதிய படத்தில் தற்போது நடிகை நிகிலா விமலும் இணைந்திருப்பதாக கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    கார்த்தி தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்து வருகிறார். சத்யராஜ், சீதா, அம்மு அபிராமி அன்சன் பால் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தற்போது நடிகை நிகிலா விமலும் படக்குழுவில் இணைந்திருப்பதாக கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    கார்த்தி, இயக்குனர் ஜீத்து ஜோசப்புடன், நிகிலா விமல் இருக்கும் புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “ஊட்டியில் எங்கள் குழுவுடன் நிகிலா இணைந்துள்ளார். அவரை வரவேற்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    திகில், அதிரடி கலந்து குடும்ப உறவுகளை மையப்படுத்தும் கதையம்சத்தில் தயாராகும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். வயாகம் 18 ஸ்டூடியோஸ் வழங்க, பேரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன் சார்பில் ஜோதிகாவின் தம்பி சூரஜ் இந்த படத்தை தயாரிக்கிறார். 

    2019 அக்டோபரில் இந்த படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    விஷால் ஜோடியாக அயோக்யா படத்தில் நடித்துள்ள ராஷி கண்ணா, இந்த படத்தில் தனக்கு குரல் கொடுத்த டப்பிங் கலைஞரான ரவீனா ரவியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
    சமீபத்தில் வெளியான `அயோக்யா’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்திருந்தார். தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

    ‘அயோக்யா’ அவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் மூன்றாவது தமிழ்ப் படம் என்பதால் படத்தில் அவருக்கு டப்பிங் குரல்தான். ‘அயோக்யா’ படத்தில் ராஷிக்கு பின்னணி குரல் கொடுத்தது பிரபல டப்பிங் கலைஞரும் நடிகையுமான ரவீனா ரவி.


    இந்தப் படத்தை பார்த்து, டப்பிங் பேசியதற்காகத் தன் பெயர் டைட்டிலில் இல்லை என மிகுந்த வேதனையுடன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும், டிரைவர், கார்பென்டர், மெஸ் அண்ணா பெயர்களைப் போட்டிருக்காங்க ரொம்ப நல்லது. இருப்பினும் டப்பிங் கலைஞர்களின் பெயர்கள் மட்டும் இல்லை. இது நடப்பது வருத்தத்துக்குரிய வி‌ஷயம். காத்திருப்போம் எனப் பதிவிட்டிருந்தார். 

    ரவீனா ட்விட்டை பார்த்த ராஷி கண்ணா, இதுகுறித்து மன்னிப்புக் கேட்டும், தன் நடிப்புக்கு ரவீனா குரல் அழகு சேர்த்துள்ளது எனவும் பதில் ட்விட் பதிவிட்டார்.

    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, அடுத்த படத்தின் படப்பிடிப்புக்காக உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு செல்ல இருக்கிறார்.
    திரிஷா நடித்த சதுரங்க வேட்டை 2, கர்ஜனை என்ற இரண்டு படங்களும் ரிலீசுக்காகக் காத்திருக்கின்றன. மேலும் 1818, பரமபதம் என கைவசம் உள்ள படங்கள் வெவ்வேறு தயாரிப்பு நிலைகளில் இருக்கின்றன.

    இந்த நிலையில் எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் திரிஷா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏ.ஆர்.முருகதாசின் கதை, வசனத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தில் திரிஷா தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 



    கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. இதற்காக உஸ்பெகிஸ்தான் செல்ல இருக்கிறார் திரிஷா.
    ×