என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் `கொலையுதிர் காலம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள `மிஸ்டர்.லோக்கல்' படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `கொலையுதிர் காலம்' படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. `ஹஷ்' என்ற ஹாலிவுட் படத்தை தழுவி இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.  தணிக்கையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.



    எக்ஸட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோரி கெர்யக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமேஸ்வர் எஸ்.பகத் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

    நயன்தாரா தற்போது சிரஞ்சீவியுடன் சயீரா நரசிம்ம ரெட்டி, ரஜினிகாந்துடன் தர்பார், விஜய்யுடன் தளபதி 63 உள்ளிட்ட படங்களில் பிசியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா - சாய் பல்லவி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் `என்ஜிகே' படம் வருகிற மே 31-ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படம் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கும் திரைப்படம் `என்ஜிகே'. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளனர். ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    படத்தில் சூர்யா நந்த கோபாலன் குமரன் (என்.ஜி.கே) என்ற பெயரில் நடித்திருக்கிறார். ஒரு சாதாரண இளைஞராக இருந்து அரசியல் களத்தில் இறங்கி மாற்றத்தை ஏற்படுத்துவது போல் அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.


    சமீபத்தில் வெளியான படத்தின் டீசரில் இடம்பெற்றிருந்த அரசியலும், பாடல்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படம் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையே நடிகர் சூர்யா இன்று மாலை 5 மணிக்கு ட்விட்டர் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பார் என்று படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளளது.


    படத்தின் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்திற்கான உரிமையை ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் கைப்பற்றியிருப்பதாக படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

    ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

    பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் ஒத்த செருப்பு படம் பற்றி பேசிய ரஜினிகாந்த், ஒரு படம் வெற்றி பெற நான்கு விஷயங்கள் முக்கியம் என்றும், அவை பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தில் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
    ஒத்த செருப்பு படத்தில் நடித்து இயக்கி உள்ள பார்த்திபனை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ பதிவில் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது:-

    “என் அருமை நண்பர் பார்த்திபன், நல்ல படைப்பாளி. புதிது புதிதாக சிந்திக்கக் கூடியவர். சிறிது காலம் படங்களை இயக்காமல் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். அவர் படம் இயக்க வேண்டும் என்று நான் கேட்டேன். இப்போது தனி ஒருவர் மட்டும் நடிக்கும் வித்தியாசமான ஒத்த செருப்பு படத்தை எடுத்துள்ளார். 

    1960-ம் ஆண்டில், இந்தியில் சுனில்தத் ‘யாதே’ என்றொரு படத்தில், தனி ஒருவராக நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தியாவிலேயே இந்த ‘ஒத்தசெருப்பு’ 2-வது படம். பார்த்திபனே தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, நடித்தும் இருப்பது உலகிலேயே இல்லாத ஒன்று.



    ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும். படத்தின் கரு புதிதாக இருக்க வேண்டும். இதுவரை எவரும் சிந்திக்காததாக இருக்க வேண்டும். நல்ல கருத்து சொல்வதாக இருக்க வேண்டும். குறைந்த பட்ஜெட்டில் எடுத்திருக்க வேண்டும். யதார்த்தமாக இருக்க வேண்டும். நான்காவதாக படத்துக்கு நல்ல விளம்பரம் செய்ய வேண்டும். 

    இந்த நான்குமே பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தில் இருக்கிறது. இந்தப் படத்தின் மூலமாக அவர் வெற்றிகளும் விருதுகளும் பெறுவார். இந்த படம் ஆஸ்கார் செல்லும், அதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

    ரஜினிகாந்த் பேசிய வீடியோ:

    சித்திக் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிக்கும் பிக் பிரதர் படத்தில் பிரபல பாலிவுட் நடிகரின் தம்பி நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
    ‘ப்ரண்ட்ஸ்’, ‘எங்கள் அண்ணா’, ‘காவலன்’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ போன்ற சில படங்களை இயக்கியவர் சித்திக். தற்போது மோகன்லாலை வைத்து ‘பிக் பிரதர்’ எனும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் சல்மான் கானின் தம்பியான அர்பாஸ் கான் நடிக்கிறார்.

    பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான அர்பாஸ் கான், சித்திக் இயக்கும் ‘பிக் பிரதர்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவுக்கு வருகை தருகிறார். இதன் கலந்துரையாடலுக்காக கேரளா வந்தார் அர்பாஸ். இதை மகிழ்ச்சியுடன், ‘சல்மான் கான் தம்பியான அர்பாஸ் கானை வரவேற்பதிலும் எங்களது படத்தில் இவர் நடிப்பதும் சந்தோ‌ஷம்‘ என சித்திக் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். 



    பதிலுக்கு, ‘மலையாள சினிமா லெஜண்ட் மோகன் லாலுடன் நடிக்கப்போவதும், சித்திக் போன்றவர் இயக்கத்தில் நடிப்பதும் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. முதல் முறையாக ‘பிக் பிரதர்’ படம் மூலம் மலையாள சினிமாவுக்கு வருகை தருகிறேன். ஷூட்டிங் வரும் ஜூலை மாதம் தொடங்குகிறது’ என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் அர்பாஸ்கான்.
    பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கு பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
    கமல்ஹாசனின் புரோமோ வீடீயோ வெளியானது முதலே பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்த நிலையில், பிக்பாஸ் மூன்றாவது சீசனில் ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் செல்லும் முதல் போட்டியாளரை உறுதி செய்திருக்கிறார்கள்.

    அந்தப் போட்டியாளர் `ஓ.கே. ஓ.கே.’ படத்தில் நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்த காமெடி நடிகை `ஜாங்கிரி’ மதுமிதா. சின்னத் திரையில் `சின்ன பாப்பா பெரிய பாப்பா’வில் காமெடி செய்தவர். சில மாதங்களுக்கு முன்பு உதவி இயக்குனர் மோசஸ் ஜோயலைத் திருமணம் செய்துகொண்டார்.



    `மணமாகி கொஞ்ச நாளிலேயே கணவரை மூன்று மாதங்கள் பிரிந்து எப்படி பிக் பாஸ் வீட்டுக்கு’ என்றால், ``அவங்களுக்கு சவால்னா ரொம்ப பிடிச்ச வி‌ஷயம். இந்த வாய்ப்பை ஒரு சவாலா எடுத்து பண்ணணும்னு நினைக்கிறாங்க. தவிர, இந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்கறதில்லையே! பொதுவாகவே வர்ற வாய்ப்புகளைத் தவற விடக்கூடாதுன்னு நினைக்கிறவங்க அவங்க’’ என்கின்றனர் மதுமிதாவுக்கு நெருக்கமானவர்கள்.
    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா, நரகாசூரன் படத்தை தொடர்ந்து சண்டைக்காரியாக விமலுடன் களமிறங்க இருக்கிறார்.
    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை, ஸ்ரேயா. சிம்புவுடன் இணைந்து `அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் நடித்தார். பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் `நரகாசூரன்’ படத்தில் நடித்தார்.

    அரவிந்த்சாமி ஜோடியாக இப்படத்தில் இவர் நடித்திருந்தார். இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை. இதற்குப் பிறகு தமிழில் எந்தப் படங்களிலும் நடிக்காமல் இருந்த ஸ்ரேயா, தற்போது நடிகர் விமலுடன் இணைந்து `சண்டக்காரி’ படத்தில் அவருக்கு பாஸாக நடித்துக்கொண்டிருக்கிறார்.



    `சண்டக்காரி’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடிந்திருக்கிறது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் கிராமம் சார்ந்த ஏரியாவில் நடக்க இருக்கிறது.

    இந்தப் படத்தில் விமலுக்கு வில்லன் ரோலில் `மகதீரா’ படத்தில் நடித்த `தேவ் கில்’ நடிக்கிறார். விமல் நடிப்பில் விரைவில் `களவாணி 2’ ரிலீசாக இருக்கிறது.
    அக்‌ஷய் குமாரை வைத்து இந்தியில் காஞ்சனா படத்தின் ரீமேக்கை இயக்கி வந்த ராகவா லாரன்ஸ், தற்போது அந்த படத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
    லாரன்ஸ் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் ‘காஞ்சனா’. காமெடி, ஹாரர் கலந்த திரில்லர் படமாக வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து, ‘காஞ்சனா 2’, ‘காஞ்சனா 3’ பாகங்கள் வெளியாகிவிட்டது.

    தற்போது காஞ்சனா முதல் பாகம் இந்தியில் ‘லட்சுமி பாம்’ (Laaxmi Bomb) என்ற பெயரில் ரீமேக் உருவாகி வருகிறது. லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமாருகும், சரத்குமார் வேடத்தில் அமிதாப் பச்சனும் நடிக்கிறார்கள். கதாநாயகியாக கியரா அத்வானி நடிக்கிறார்.



    இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், லட்சுமி பாம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. அதில் அக்‌ஷய் குமார் பெண் வேடமேற்று மேக்கப் செய்யும்படி இருந்தது. மேலும் படத்தை 2020-ல் ஜூன் 5ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில், இப்படத்தில் இருந்து விலகுவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரு படைப்பாளிக்கு பணம், புகழை விட தன்மானம் தான் முக்கியம் என்றும், நேற்று வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தன்னுடைய பார்வைக்கு வராமலேயே வெளிவந்துவிட்டதாகவும், அந்த போஸ்டரின் டிசைன் தனக்கு திருப்தி இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு படைப்பாளியாக தான் இந்த விஷயத்தில் அவமதிப்பு செய்யப்பட்டதாகவும் இதன் காரணமாக இந்த படத்தில் இருந்து தான் விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

    மிஸ்டர்.லோக்கல் படத்தை தொடர்ந்து நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கொலையுதிர் காலம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்திருக்கிறார்கள்.
    சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள மிஸ்டர்.லோக்கல் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 

    இந்நிலையில், நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கொலையுதிர் காலம்’ படத்தை ஜூன் 14ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 



    மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்தை சக்ரி டோலட்டி இயக்கி இருக்கிறார். இந்த படம் `ஹஷ்' என்ற ஹாலிவுட் படத்தை தழுவி உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. 
    நானே படகேருக்கு எதிராக சாட்சி சொல்ல பலரும் பயப்படுகிறார் என்று மீடூ இயக்கம் மூலம் புகார் கூறிய தனுஸ்ரீ தத்தா வேதனையுடன் கூறியுள்ளார்.
    ‘மீடு’ இயக்கம் கடந்த ஆண்டு திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, பிரபல நடிகர் நானே படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறினார்.

    புகாரின் பேரில் நானே படேகர் மற்றும் டைரக்டர், தயாரிப்பாளர், நடன இயக்குனர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். புகாருக்கு மறுப்பு தெரிவித்த நானே படேகர், தனுஸ்ரீ தத்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

    இந்நிலையில், நானே படேகர் மீதான பாலியல் புகாரில் உண்மையில்லை. அவர் குற்றமற்றவர் என போலீசார் தெரிவித்து விட்டதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் இதை தனுஸ்ரீ தத்தா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நானே படேகர் குற்றமற்றவர் என யார் சொன்னது? இது வெறும் வதந்தி தான். நான் எனது வக்கீலிடம் பேசினேன். அவர் போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதை உறுதிபடுத்தினார். போலீஸ் விசாரணை மெதுவாக நடப்பது உண்மைதான். சாட்சிகளை முன்வந்து வாக்கு மூலம் அளிக்க வைப்பதற்கு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.



    முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட பின்னர் இதுவரை ஒன்று அல்லது 2 சாட்சிகள் மட்டுமே வாக்குமூலம் அளித்துள்ளனர். எனினும் சம்பவத்தை நேரில் பார்த்த முக்கிய சாட்சிகள் பலர் இன்னும் வாக்குமூலம் அளிக்கவில்லை.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் அவர்கள் வாக்குமூலம் அளிக்க பயப்படுகிறார்கள். முதலில் வாக்குமூலம் அளிக்க முன்வந்த பலரும் தற்போது மாறி விட்டனர்.

    சம்பவம் நடந்து 10 வருடங்கள் ஆகி விட்டது. எங்களுக்கு சரியாக ஞாபகம் இல்லை என தெரிவிக்குமாறு சாட்சிகளிடம் கூறி உள்ளனர். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் பலரின் முன்னிலையில்தான் அந்த சம்பவம் நடந்தது. நானே படேகர் அத்துமீறி நடந்து கொண்டார். இதை நான் தட்டிக் கேட்டபோது நடன இயக்குனர் கணேஷ் ஆச்சர்யா, தயாரிப்பாளர் சமி சித்திக், இயக்குனர் ராகேஷ் சரங் ஆகியோர் என்னை பாராட்டினார்கள்.

    நான் அங்கிருந்து வெளியேறிய போது எனது காரை அடித்து உடைத்தனர். இது படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவருக்கும் தெரியும். ஆனால் அன்று படப்பிடிப்பில் யார்-யார் இருந்தார்கள்? என்பதற்கு ஆவணங்கள் எதுவும் இல்லை என்கின்றனர். இது சந்தேகத்தை கிளப்புகிறது.

    பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும். பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டால் தைரியமாக முன்வந்து புகார் தெரிவிக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகத்தான் நான் புகார் கொடுத்தேன். விசாரணை முழுமையாக முடிந்த பிறகு தான் உண்மை வெளிவரும்.

    பாலிவுட்டில் நிறைய நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஆனால் புகார் கொடுத்தால் தங்களுக்கு படவாய்ப்பு கிடைக்காது என கருதி தற்போது வரை அமைதியாக இருக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பார்த்திபனின் ஒத்த செருப்பு பட விழாவில் கலந்துக் கொண்ட கமல், ஒரு செருப்பு வந்து விட்டது; இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
    பார்த்திபன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஒத்த செருப்பு’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கமல், இயக்குனர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    இதில் கமல் பேசும்போது, எனக்கு காந்தியின் வரலாற்று புத்தகம் கொடுத்தார்கள். அதை நான் திரும்பி திரும்பி படித்தேன். அதில், காந்தி அவர்கள் ரெயிலில் செல்லும் போது, ஒரு செருப்பு தவறி விழுந்துவிட்டது. உடனே அவர் மற்றொரு செருப்பையும் கழற்றி வீசி விட்டார். ஏன் என்று கேட்டதற்கு ஒரு செருப்பு இருந்தால் யாருக்கும் உபயோகப்படாது என்று கூறியிருக்கிறார். அவரின் ரசிகர் நான்.



    அவர் போட்ட செருப்பில் ஒன்று வந்து சேர்ந்துவிட்டது. இன்னொன்றும் வரும். அதற்கான அருகதை எனக்கு உண்டு. அதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். என் மேல் செருப்பு வீசியதை பலரும் பயந்து பயந்து பேசுகிறார்கள். இதில் ஒரு பயமும் இல்லை. செருப்பு போட்டவருக்கே அவமானம்’ என்றார்.
    கஜா புயலால் பாதிக்கப்பட்டு கரிசைக்காடு கிராமத்தில் வாழ்ந்து வரும் செல்லகுஞ்சி பாட்டிக்கு ராகவா லாரன்ஸ் வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்.
    கஜா புயலால் பலர் தங்களுடைய வீடுகளை இழந்தார்கள். அப்படி வீடிழந்த எளிய மனிதர்களுக்கு தன் சார்பாக வீடுகள் கட்டித்தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்தார். அறிவித்தது போலவே அந்தப்பணிகளைச் சரியாகச் செய்தும் வருகிறார். முதல் வீடு சமூக சேவகர் ஆலங்குடி கணேஷன் என்பவர்க்கு வீடு கட்டிக் கொடுத்து சென்றவாரம் கிரகப்பிரவேஷம் நடைபெற்றது. 

    தற்போது  வீடு இழந்து பெரும் துயரை கண்ட தஞ்சாவூர் மாவட்டதில் உள்ள கரிசைக்காடு கிராமத்தில் வாழ்ந்துவரும் செல்லகுஞ்சி  பாட்டிக்கும் வீடு கட்டிக் கொடுத்து பாட்டிக்கு தண்ணீர் கொடுத்த சோகத்தை ஆனந்தக் கண்ணீரால் ஆற்றிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.



    அன்று பாட்டி வீடு இழந்ததும் உலக அளவில் பாட்டியின் நிலைமை பேசப்பட்டது. பல நல்ல உள்ளங்களின் அனுதாபமும், அக்கறையும் லாரன்ஸ் மூலமாக இன்று  நிறைவேறியுள்ளது. இன்னும் இந்த மக்கள் பணிகள் தொடரும் என்று கூறுகிறார் ராகவா லாரன்ஸ்.
    கேன்ஸ் படவிழாவில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் காஞ்சீபுரம் பட்டு சேலை அணிந்து சென்று பலரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.
    சர்வதேச அளவில் ஆஸ்கார், குளோப் திரைப்பட விருதுகளுக்கு அடுத்து கேன்ஸ் விருதுகள் உயர்வாக கருதப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான 75-வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் உள்ள கேன்ஸ் நகரில் தொடங்கி உள்ளது. வருகிற 25-ந்தேதி வரை இந்த விழா நடக்கிறது. போட்டியில் சர்வதேச அளவில் 21 படங்கள் பங்கேற்கின்றன.

    சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. கேன்ஸ் பட விழாவில் அமெரிக்க இயக்குனர் ஜின் ஜார்முச் இயக்கிய ‘த டெட் டோன்ட் டை’, டாரண்டினோவின் ‘ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இன் ஹாலிவுட்’, முதன் முறையாக கருப்பின பெண் இயக்குனரான பிரான்சிஸ் மட்டி டியோப் இயக்கிய படம் ஆகியவற்றை திரையிடுவது முக்கியத்துவம் பெற்றுள்ளன.



    கேன்ஸ் விழாவில் விருது பெறும் பல படங்கள் ஆஸ்கார் விருதை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர் நடிகைகள் பலர் கலந்து கொள்கிறார்கள். இந்தி நடிகைகள் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, கங்கனா ரணாவத் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கங்கனா ரணாவத் காஞ்சீபுரம் பட்டு சேலை அணிந்து சென்று பலரையும் திரும்பி பார்க்க வைத்தார். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    ×