என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் வாத்தி கம்மிங் என்ற பாடல் புதிய சாதனை படைத்துள்ளது.
    விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். 

    அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ‘வாத்தி கம்மிங்...’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்களை கவர்ந்து டிக் டாக்கில் 100 மில்லியன்களை கடந்து சாதனை படைத்து இருப்பதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது. 
    கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வீட்டில் இருக்கும் மக்களுக்கு நடிகர் சௌந்தரராஜா டிப்ஸ் கொடுத்திருக்கிறார்.
    கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் 144 தடை உத்தரவு போட்டுள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று வலியுறுத்தி வருகிறார்கள். 

    வீட்டில் இருப்பார்களுக்காக நடிகர் சௌந்தர ராஜா டிப்ஸ் கொடுத்திருக்கிறார்.  அதில், ஆரோக்கிய உணவுகளை உண்ணுங்கள், அளவாக உண்ணுங்கள். முடிந்த அளவு உடற்பயிற்சி செய்யுங்கள், வீட்டை வாகனங்களை கழுவி சுத்தம் செய்யுங்கள். அதிக அளவு டிவி மற்றும் செல்போன் உபயோகிக்காமல் புத்தகம் படியுங்கள். சமையல் செய்யப் பழகுங்கள், குடும்பத்தினர் மற்றும் உறவுகளிடம் மனம்விட்டுப் பேசுங்கள். அதிக அளவு ஏசியை பயன் படுத்தாதீர்கள். உங்களுக்குள் இருக்கும் திறமை மற்றும்  அறிவின் அளவை சுயபரிசோதனை செய்யுங்கள்.
    கனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ், அடுத்ததாக இயக்கும் படத்தில் பிரபல நடிகர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான கனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் தெலுங்கிலும் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் ஆனது. தற்போது அடுத்த படத்திற்கான வேலைகளில் பிசியாக இருக்கிறார் அருண்ராஜா. இவரது அடுத்த படம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. விஜய்யின் 65 வது படத்தை இவர் இயக்குவதாக கூறப்பட்டது. இருப்பினும் அது உறுதி செய்யப்படவில்லை.

    உதயநிதி ஸ்டாலின்

    இந்நிலையில்,  அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை அஜித்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனி கபூர் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    நடிகர் சிம்பு அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு வில்லனாக ஆர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தடைபட்டுள்ளது. கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்த பின் படப்பிடிப்பு நடைபெறும். 

    இப்படத்தை தொடர்ந்து மிஸ்கின் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

    சிம்பு, ஆர்யா

    இந்நிலையில், சமீபத்திய தகவலின் படி, அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க  ஆக்ஷன் படமாக உருவாக உள்ள இதில், ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க உள்ளதாகவும்  சொல்லப்படுகிறது.
    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் பிடியிலிருந்து மக்களை காக்க நடிகை ரோஜா தனது வீட்டில் சிறப்பு யாகம் ஒன்றை நடத்தி உள்ளார்.
    சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் எங்கும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. அதில் இருந்து தப்பிக்க இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. ஆந்திர மாநிலத்திலும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா தனது கணவரும், இயக்குனருமான ஆர்.கே.செல்வமணியுடன் இணைந்து தனது வீட்டில் பண்டிதர்கள் மூலம் ருத்ராபிஷாகம் என்ற யாகத்தினை நடத்தினர். கொரோனாவின் பிடியில் இருந்து கடவுள் பொதுமக்களை காத்திட வேண்டி இந்த யாகத்தை தனது வீட்டில் நடத்தியதாக ரோஜா தெரிவித்தார்.
    தமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்காக நடிகர் கமல்ஹாசனும், இயக்குனர் ஷங்கரும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க திரையுலகமே மூடப்பட்டுள்ளது. இதனால் திரைப்பட தொழிலாளர்கள், துணை நடிகர்-நடிகைகள் வேலை இழந்து க‌‌ஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கு பலர் உதவி வருகிறார்கள். ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பெப்சிக்கு நிதி வழங்கினர். நடிகர் கமல்ஹாசன் ரூ.10 லட்சம் வழங்குகிறார். டைரக்டர் ‌‌ஷங்கர் ரூ.10 லட்சமும், தயாரிப்பாளர் லலித் ரூ.10 லட்சமும் வழங்கினர். நடிகர் சங்கத்துக்கு நடிகர் பொன்வண்ணன் ரூ.25 ஆயிரமும், பூச்சி முருகன், சத்ய பிரியா ஆகியோர் தலா ரூ.10 ஆயிரமும் வழங்கி இருக்கிறார்கள்.

     ‌‌ஷங்கர்

    திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்துக்கு நடிகரும், தயாரிப்பாளருமான கே.ராஜன் ரூ.25 ஆயிரம் நிதி வழங்கி உள்ளார். மேலும் பெப்சி தொழிலாளர்களுக்கு தயாரிப்பாளர் தாணு 250 மூட்டை அரிசியும், நடிகர் ஹரி‌‌ஷ் கல்யாண் ரூ.1 லட்சம் நிதியும், நடிகை ரோஜா 100 மூட்டை அரிசியும், நடிகர் ராதாரவி 12 மூட்டை அரிசியும், ஜெய்வந்த் 10 மூட்டை அரிசியும் வழங்கி உள்ளனர். மேலும் பலர் உதவி வழங்கி வருகிறார்கள்.
    கொரோனா வைரஸின் ஆபத்து தெரிந்தும் வெளியே ஜாலியாக சுற்றுவதை மக்கள் நிறுத்த வேண்டும் என நடிகர் அர்ஜுன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    நடிகர் அர்ஜுன் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:- “எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், யாரும் வீட்டைவிட்டு வெளியே வராதீர்கள். இது உங்களுக்காக மட்டுமல்ல, வயதான தாய், தந்தை, குழந்தை, குடும்பம் அனைவரையும் காப்பாற்றும் முயற்சியாகும். கொரோனா வைரஸ் தும்மினால், இருமினால் பரவும் என்று கூறினர். ஆனால் இப்போது காற்றிலும் இது இருக்கிறது என்கின்றனர்.

    அர்ஜுன்

    எனது நண்பர் ஒருவர் இத்தாலியில் நர்சாக இருக்கிறார். அவரிடம் பேசும்போது இத்தாலியில் ஒரு நாளைக்கு 5 ஆயிரத்து 500-ல் இருந்து 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது என்றும், 550-ல் இருந்து 600 பேர் உயிரிழக்கின்றனர் என்றும் கூறினார். இதன் மூலம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை உணருங்கள். ரஜினி, கமல், விஜய், அஜித் ரசிகர்கள் மக்களுக்கு, “வெளியே வராதீர்கள்” என்று செல்போனில் தகவல் அனுப்பி தடுத்து நிறுத்துங்கள்.

    துப்பாக்கியை நமது தலையில் நாமே வைத்து இருப்பது போன்ற நிலைமையில் இருக்கிறோம். கொரோனா வைரஸ் ஆபத்து தெரிந்தும், வெளியே ஜாலியாக சுற்றுவதை நிறுத்துங்கள். வீட்டில் இருங்கள். குடும்பத்தையும், நாட்டையும் காப்பாற்றுங்கள்.” இவ்வாறு கூறியுள்ளார்.
    ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் இலவசமாக முக கவசங்களை வழங்கினர்.
    கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் போலீசார் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முக கவசம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் போலீசாருக்கும் போதிய அளவில் முக கவசங்கள் கிடைக்காத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் 200 முக கவசங்கள் தயார் செய்யப்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வழங்கப்பட்டது. 

    விஜய்

    இந்நிலையில், தேனி மாவட்ட  விஜய் மக்கள் இயக்கத்தினர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வியை நேற்று நேரில் சந்தித்து விஜய் ரசிகர்கள் சார்பில் 200 முக கவசங்களை வழங்கினார். அப்போது தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் உடன் இருந்தார். விஜய் ரசிகர்களின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
    மிருக காட்சி சாலைகளில் விலங்குகளை அடைத்து வைக்க வேண்டாம் என நடிகை நமீதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் வீட்டில் இருக்கும்படி அரசு கடுமையாக எச்சரித்து உள்ளது. இதனையும், விலங்குகளை மிருக காட்சி சாலைகளில் அடைப்பதையும் ஒப்பிட்டு நடிகை நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- “இப்போதைய நிலைமையை வைத்து புரிந்துகொள்ள வேண்டும். நான் ஒருபோதும் மிருக காட்சி சாலைகளை ஆதரித்தது இல்லை. மிருக காட்சி சாலைகளுக்கு சென்று விலங்குகளை பார்க்கும்படி யாரையும் ஊக்குவித்ததும் கிடையாது. 

    ஊரடங்கையொட்டி சில நாட்கள் வீட்டில் இருப்பதற்கே நமக்கு சோர்வு ஏற்படுகிறது, வெளியே செல்ல வேண்டும் என்று விரும்புகிறோம். நமது சந்தோஷத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் விலங்குகளுக்கும் இந்த உணர்வுதானே இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு விலங்குகளை காட்ட விரும்பினால் கம்ப்யூட்டரிலோ அல்லது சரணாலயத்துக்கு அழைத்துச் சென்றோ காட்டுங்கள். தயவுசெய்து மிருகங்களை அடைத்து வைப்பதை நிறுத்துங்கள். 

    நமீதா

    மன அழுத்தத்தாலும், கவலையாலும் அவை இறக்கின்றன. நாம் டிக்கெட் வாங்கி போய் பார்ப்பதால்தான் மிருக காட்சி சாலைகள் நிரம்பி வழிகின்றன. அங்கு போவதை நிறுத்தினால், விலங்குகளை அடைத்து வைப்பதையும் நிறுத்திவிடுவார்கள். விலங்குகள் நம்முடன் வாழ்பவையே தவிர நமக்காக வாழக்கூடியவை அல்ல.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் சுவை, வாசனை திறனை இழந்ததாக பிரபல பாப் பாடகர் தெரிவித்துள்ளார்.
    ஹாலிவுட் நடிகரும், பிரபல அமெரிக்க பாப் பாடகருமான ஆரோனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிபடுத்தி அவர் கூறியிருப்பதாவது:- “எனக்கு கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தெரிந்தன. சளி இருந்தது. உடனடியாக பரிசோதனை செய்தேன். தற்போது எனக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். இதனை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். 

    ஆரோன்

    தற்போது நான் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறேன். அதிர்ஷ்டவசமாக காய்ச்சல் இல்லை. சளி மட்டும் இருக்கிறது. பலருக்கு தீவிரமான அறிகுறிகள் இருப்பதை அறிந்தேன். கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது. வாசனைத் திறனையும், சுவையையும் இழந்து விட்டேன். இந்த வைரஸ் யாரை வேண்டுமானாலும் தாக்கும். அனைவரும் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் தன்னுடைய அம்மாவுடன் இணைந்து ஊறுகாய் செய்திருக்கிறார்.
    தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நாகசவுரியா. இவர் தமிழ் சினிமாவில் விஜய் இயக்கிய தியா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். மேலும் பல படங்களையும் தயாரித்துள்ளார்.

    கொரோனா எதிரொலியால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், நடிகர்-நடிகைகள் அனைவரும் தங்கள் குடும்பங்களுடன் நேரங்களை செலவிட்டு வருகின்றனர். 

    இந்நிலையில் நடிகர் நாக சவுரியா தனது அம்மாவுடன் சேர்ந்து ஊறுகாய் போட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.
    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடிகர் பிரகாஷ்ராஜ் தனது பணியாளர்கள் அனைவருக்கும் முன்கூட்டியே சம்பளம் கொடுத்திருக்கிறார்.
    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல துறைகளும் முடங்கி இருக்கிறது . இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ், தனது பணியாளர்கள் அனைவருக்கும் மே மாதம் வரை முன்கூட்டியே சம்பளம் கொடுத்திருக்கிறார். 

    இது குறித்து அவர் டுவிட்டரில், எனது பண்ணை வீடு, சினிமா தயாரிப்பு நிறுவனம், அறக்கட்டளை மற்றும் வீட்டுப் பணியாளர்கள் என அனைவருக்கும் மே மாதம் வரைக்குமான சம்பளத்தை முன்கூட்டியே வழங்கி விட்டேன். கட்டுப்பாடு காரணமாக நின்று போயிருக்கும் எனது மூன்று படங்களிலும், சம்பந்தப்பட்ட தினக்கூலி பணியாளர்களுக்குக் குறைந்தது அரை சம்பளத்தைத் தர அவசியமான வழிமுறையை முடிவு செய்தேன். ஆயினும் இன்னும் முடியவில்லை. என்னால் முடிந்த வரை இன்னும் பண்ணுவேன் .

     நம்முடையே வாழ்க்கைக்கு நாம் திரும்பத் தர வேண்டிய நேரமிது. ஒருவருடன் ஒருவர் ஆதரவாக நிற்க வேண்டிய வேளை இது என்று பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
    ×