என் மலர்
சினிமா செய்திகள்
சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த அபர்ணா பாலமுரளி, தன்னை பற்றி வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் அபர்ணா பாலமுரளி. சர்வம் தாளமயம் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக வந்தார். 8 தோட்டாக்கள் படத்திலும் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு அபர்ணா பாலமுரளியின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது. அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாகவும், உடல்நிலை மிகவும் மோசமடைந்து இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதனால் நடிகர்- நடிகைகள் பலரும் அவரை தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரிக்க தொடங்கினர். ரசிகர்களும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பதிவுகள் வெளியிட்டனர். உடல்நிலை வதந்திக்கு அபர்ணா மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது “நான் நலமாக இருக்கிறேன். தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம். உடல்நிலை பற்றி பரவி வரும் தகவல் உண்மையல்ல, அதை யாரும் நம்ப வேண்டாம்'' என்று கோபமாக தெரிவித்து உள்ளார்.
பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ரைட்டர் படத்தை பார்த்த இயக்குனர் வெற்றிமாறன் படக்குழுவினரை பாராட்டி பேசி இருக்கிறார்.
இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘ரைட்டர்’. இதில் இனியா, ஹரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் சிறப்புகாட்சி சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
படம் பார்த்தபிறகு இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பாளர் பா.ரஞ்சித்தையும், இயக்குனர் பிராங்ளினையும் கட்டிப்பிடித்து பாராட்டுக்களை தெரிவித்தார். ரொம்ப முக்கியமான படத்தை தமிழ் சினிமாவிற்கு தந்திருக்கிறீர்கள். சமுத்திரக்கனியின் நடிப்பு தனித்துவமாக இருக்கிறது.

இந்த வருடத்தின் மாபெரும் வெற்றிப்பட வரிசையில் ரைட்டர் இருக்கும். தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என அனைவரும் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட படங்களை தயாரித்து வரும் ரஞ்சித்துக்கு எனது வாழ்த்துக்களும் அன்புகளும் என்றார். வெற்றிமாறனின் பேச்சுக்குப் பிறகு இயக்குனர் பா.ரஞ்சித் கண்கலங்கினார்.
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் சமந்தா, ரசிகரின் பதிவுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் புஷ்பா படத்தில் சமந்தா ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சியாக குத்தாட்ட நடனம் ஆடி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் ஆண்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்று ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனாலும் பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. யூ-டியூப்பில் அதிகமானோர் பார்த்துள்ளனர். படம் வெற்றி பெறுவதற்கு இந்த பாடலும் காரணம் என்கின்றனர். இந்த நிலையில் சமந்தா கவர்ச்சி நடனம் ஆடியதை வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

‘‘விவாகரத்து செய்து வாழ்க்கையை கெடுத்து கொண்ட குத்தாட்ட நடிகை சமந்தா, ஜென்டில்மேனிடம் இருந்து ரூ.50 கோடியை வரியில்லாமல் திருடிக்கொண்டார்” என்று அவர் கூறியுள்ளார். நாக சைதன்யாவை ஜென்டில்மேன் என்று குறிப்பிட்டு அவரை விவாகரத்து செய்ய சமந்தா ரூ.50 கோடி பெற்றதாக அந்த ரசிகர் விமர்சித்து இருப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது.

சமந்தாவின் பதிவு
அந்த விமர்சனத்தை பார்த்த சமந்தா ‘‘கடவுள் உங்கள் ஆன்மாவை ஆசிர்வதிக்கட்டும்” என்று டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அவதூறு செய்தவர் மீது கோபப்படாமல் கனிவான முறையில் சமந்தா பதில் சொன்னது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் சமந்தாவின் பதிலுக்கு அந்த ரசிகர் தன்னுடைய பதிவை நீக்கி விட்டார்.
முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறி இருக்கிறது.
நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கார் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் ஆஸ்கார் பட்டியலில் இடம்பெற்றுள்ள படங்கள் பட்டியல் ஆஸ்கார் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் கூழாங்கல் திரைப்படம் இடம்பெற்று இருந்தது.
ஆஸ்கார் விருது வழங்கும் விழா அடுத்த வருடம் மார்ச் மாதம் 27-ந் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. ஆஸ்கார் விருதுக்கு 15 படங்கள் இறுதி செய்யப்பட்டு அதில் ஒரு படத்துக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருது வழங்கப்படும்.

கூழாங்கல் பட போஸ்டர்
இந்த நிலையில், ஆஸ்கார் வெளியிட்டுள்ள இறுதி பட்டியலில் கூழாங்கல் திரைப்படம் இடம்பெறவில்லை. இதன் மூலம் ஆஸ்கார் போட்டியிலிருந்து கூழாங்கல் திரைப்படம் வெளியேறி உள்ளது. இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'இந்த பட்டியலில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்! இருப்பினும் இவ்வளவு தூய்மையான சினிமாவை கொடுத்ததற்காக பி.எஸ்.வினோத்ராஜ்-க்கு நான் நன்றி கூறுகிறேன்.
Would have been great to be on this list !
— Vignesh Shivan (@VigneshShivN) December 22, 2021
Nevertheless I thank @PsVinothraj for giving such a pure cinema!
I thank the Indian jury members for selecting our film as the official entry for the oscars this year🙏🏻
Thanking all our well-wishers & friends for rooting for us😇 pic.twitter.com/Flz5krtZsa
இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான அதிகாரப்பூர்வ நுழைவாக எங்கள் படத்தைத் தேர்ந்தெடுத்த இந்திய ஜூரி உறுப்பினர்களுக்கு எனது நன்றிகள். எங்கள் நலம் விரும்புபவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி' என்று தெரிவித்துள்ளார்.
முத்தையா இயக்கத்தில் தற்போது விருமன் படத்தில் நடித்திருக்கும் கார்த்தி, அண்ணன் சூர்யாவிற்கு நன்றி சொல்லி இருக்கிறார்.
நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் நல்ல படங்களை தயாரித்து வருகிறார். கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, “விருமன்” படத்தை சூர்யா தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி மதுரையில் ஆரம்பமானது.
மதுரை, தேனி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் 60 நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து கார்த்தி கூறும்போது, ‘மதுரை சுற்று வட்டாரத்தில் நல்ல திறமையுடன், சிறப்பான திட்டமிடலால், மொத்தமாக 60 நாட்கள் படப்பிடிப்பை இயக்குனர் முத்தையாவும், ஒளிப்பதிவாளர் செல்வகுமாரும் நடத்தி உள்ளார்கள். என்னுடன் ஜோடியாக நடித்த அதிதி ஷங்கருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. எதார்த்தமானவர், அவருடன் நடித்த நாள்கள் ஜாலியானவை.

விருமன் படக்குழுவினர்
மீண்டும் இப்படம் மூலம் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைவதில் சந்தோஷம். 2டி நிறுவனத்திற்கும் தயாரிப்பாளர் சூர்யா அவர்களுக்கும் நன்றி’ என்றார்.
படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு குறித்து படக்குழுவினர் விரைவில் வெளியிட இருக்கிறார்கள். அடுத்த ஆண்டு 2022 சம்மர் வெளியீடாக விருமன் படத்தை களமிறக்க இருக்கிறார்கள்.
கவின் இயக்கத்தில் முகின், மீனாக்ஷி, பிரபு, சூரி, தம்பி ராமையா நடிப்பில் உருவாகி இருக்கும் வேலன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் “வேலன்” என்னும் காமெடி படத்தினை தயாரித்திருக்கிறார். கவின் இயக்கியுள்ள இப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான முகின் நாயகனாகவும், மீனாக்ஷி நாயகியாகவும் நடிக்கிறார்கள்.
மேலும் இவர்களுடன் பிரபு, சூரி, மரியா, தம்பி ராமையா, ஶ்ரீரஞ்சனி, சுஜாதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரபல மலையாள மொழி இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படம் டிசம்பர் 31ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இதன் டிரைலரை நடிகர் சிம்பு வெளியிட்டு இருக்கிறார். இதில் முகின், அப்பனோட பகை மட்டுமில்ல... வீரமும் பிள்ளைக்கு வந்து சேரும்... என்ற வசனம் ரசிகர்களை கவர்ந்து வரவேற்பு பெற்று வருகிறது.
மாஸ்டர் பட தயாரிப்பாளர் மற்றும் விஜய் உறவினருமான சேவியர் பிரிட்டோ இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சீனா நிறுவனமான சியோமி (xiaomi) நிறுவனத்திற்கு சொந்தமான 25 இடங்களில் சென்னையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூருவிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.


மாஸ்டர் பட தயாரிப்பாளர்
இந்நிறுவனத்தின் உதிரிபாகங்களை ஏற்றுமதி இறக்குமதி கையாள்வதில் மாஸ்டர் பட தயாரிப்பாளர் பிரிட்டோவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வரும் 24ம் தேதி வெளியாக உள்ள ‘83’ திரைப்படம் கிரிக்கெட் ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ஆம் ஆண்டில் முதன்முறையாக உலக கோப்பையை வென்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றிக் கதையை அடிப்படையாக கொண்டு ‘83’ என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.
கபீர் கான் இயக்கி உள்ள இந்த திரைப்படத்தில் ரன்வீர்சிங், கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கபிலின் மனைவியான ரோமியா பாடியா வேடத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார். 1983ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்தின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார்.

தயாரிப்பாளர் மது மட்டேனா, கபீர் கான் மற்றும் விஷ்ணு இந்தூரி இணைந்து தயாரிக்கும் '83’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கடந்த ஆண்டு ரன்வீர் சிங், தனது பிறந்தநாளில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் வரும் 24ம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வருகிறது. இதையொட்டி டெல்லியில் 83 திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அறிவித்துள்ளது.
பிரம்மாண்ட படங்களை இயக்கி இருக்கும் சங்கரின் மகள் அதிதி சங்கர், அடுத்ததாக பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
நடிகர் சிம்பு நடித்து வெளியான மாநாடு இன்று வரைக்கும் வசூல் மழை பொழிந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது கவுதம் மேனன் இயக்கி வரும் வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இப்படம் முடிந்த பிறகு இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இயக்கும் கொரோனா குமார் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இதில் சிம்புவுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்க இருக்கிறார். இவர் தற்போது கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுப் பகுதியில் இருக்கிறது.
தமிழில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா, தனது மகள் ராதாவுக்காக புதிய முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். சினிமா அனுபவங்கள் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘‘சினிமா குறித்த எனது எண்ணங்கள் தற்போது மாறிவிட்டன. எனது மகள் ராதா என் படங்களைப் பார்த்து பெருமைப்படும்படியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன்.
நான் நடிக்க ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் இருபது ஆண்டுகள் வரை நடிப்பேன். இந்த நீண்ட பயணத்திற்கு ரசிகர்களின் அன்புதான் காரணம். இன்னும் 20 ஆண்டுகள் ரசிகர்களின் அன்பை பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதற்காக எவ்வளவு உழைக்கவும் தயாராக இருக்கிறேன்.

மகளுடன் ஸ்ரேயா
பத்து மாதங்களுக்கு முன் பார்சிலோனாவில் ஒரு மகளை பெற்றெடுத்தேன். அவளுக்கு ராதா என பெயர் வைத்தோம். ராதா வந்த பிறகு எனது வாழ்க்கையே மாறிவிட்டது. குழந்தையை ஜாக்கிரதையாக வளர்க்க பிரத்யேகமாக யோசிக்கிறேன். எனக்கு கதக் நடனத்தை பின்னணியாக வைத்து வரும் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது” என்றார்.
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் ராஷ்மிகா மந்தனாவின் ஆபாச காட்சிகளை படக்குழுவினர் நீக்கியுள்ளனர்.
தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது 2 இந்தி படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா படம் சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த படத்தில் எல்லை மீறிய சில ஆபாச காட்சிகள் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. சாமி சாமி பாடலில் பாவாடையுடன் ராஷ்மிகா மந்தனா கவர்ச்சியாக நடனம் ஆடுவதும், அல்லு அர்ஜுனுடன் காருக்குள் நெருக்கமாக அமர்ந்து காதல் செய்யும் காட்சியும், வசனமும் ஆபாசமாக இருப்பதாகவும், இந்த காட்சிகள் பார்வையாளர்களை முகம் சுழிக்க வைப்பதாகவும் எதிர்ப்புகள் கிளம்பின.

புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனா
இதனால் பலரும் குழந்தைகளுடன் குடும்பத்தோடு படம் பார்க்க வருவதை தவிர்ப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து சர்ச்சை காட்சிகளை படத்தில் இருந்து படக்குழுவினர் நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
புதுடெல்லி:
கடந்த 2016ம் ஆண்டில் ‛பனாமா பேப்பர்ஸ்' நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் வெளியாகின. இதில் இந்தியாவை சேர்ந்த அரசியல் சினிமா, தொழில், மற்றும் விளையாட்டு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் ஐநூருக்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கி குவித்துள்ளது தெரிய வந்தது. நடிகர் அமிதாப் பச்சன் குடும்பத்தினரின் பெயரும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தது.
பிரிட்டனுக்கு சொந்தமான வெர்ஜியன் தீவில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றில் அமிதாப்பின் மருமகளும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
புதுடெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக கோரி நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பப்பட்டது. எனினும் அவர் தமக்கு கால அவகாசம் கோரியதுடன் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்நிலையில் மூன்றாவது முறையாக நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜரான ஐஸ்வர்யா ராயிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது தன் தரப்பு விளக்கத்தை ஐஸ்வர்யா ராய் அளித்தார். அந்த விபரத்தை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






