என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் அர்னவ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு.
    • 2 வாரங்களுக்கு போரூர் மகளிர் காவல் நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனை.

    தொலைக்காட்சித் தொடரில் நடித்து வரும் சின்னத் திரை நடிகர் அர்னவ், தன்னுடன் தொலைக்காட்சி தொடரில் நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்ட நிலையில், கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    அர்னவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போரூர் அனைத்து மகளிர் போலீசார்,வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் கீழ் படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் அர்னவ்வை கைது செய்து மாங்காடு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் தனக்கு ஜாமின் கேட்டு பூந்தமல்லி நீதிமன்றத்தில் அர்னவ் தரப்பில் 2வது முறையாக மனு அளிக்கப்பட்து. அதை விசாரித்த நீதிபதி ஸ்டாலின், நடிகர் அர்னவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி அவர் 2 வாரங்களுக்கு போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு சென்று கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து  இன்று புழல் சிறையில் இருந்து அர்னவ் ஜாமினில் விடுதலை ஆவார் என தெரிகிறது.

    • நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் அடுத்த இரண்டு படங்களை தற்போது உறுதி செய்துள்ளார்.

    நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    ஜெயிலர்

    இந்நிலையில், இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தொடர்பாக லைக்கா நிறுவனம் தலைவர் சுபாஷ்கரன், தமிழ் குமரன், பிரேம் சிவசாமி ஆகியோர் ரஜினியை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தனர். இப்படங்களின் பூஜை வரும் நவம்பர் 5-ஆம் தேதி சென்னையில் வைத்து நடைபெறவுள்ளது.


    லைக்கா நிறுவனர்களுடன் ரஜினி

    இந்த இரண்டு படங்களில் ஒன்றை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியும் மற்றொன்றை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமியும் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியன திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -1’.
    • 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

    மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


    பொன்னியின் செல்வன்

    இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.


    பொன்னியின் செல்வன் போஸ்டர்

    இந்நிலையில், 'பொன்னியின் செல்வன் -1' ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் நவம்பர் 4-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை ஓடிடி தளம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படத்தை தற்போது வாடகை முறையில் ஓடிடி தளம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார்.
    • இதில் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற ஒரு டாஸ்க்கால் பல பிரச்சினைகள் வெடித்துள்ளது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரம் எபிசோடில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதில் தற்போது 19 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.


    பிக்பாஸ் சீசன் 6

    இதையடுத்து பிக்பாசில் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் மொத்தம் 19 பொம்மைகள் இடம்பெற்றிருக்கும் ஆனால் 18 பொம்மைகளை மட்டுமே போட்டியாளர்களால் எடுக்கப்பட்டு அந்த அறையில் வைக்கப்படும். மீதம் உள்ள ஒரு நபரின் பெயர் இடம்பெற்றிருக்கும் பொம்மை எடுக்க தவறினால் அந்த பொம்மையில் இருக்கும் நபர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றபடுவார் என்று அறிவிக்கப்பட்டது.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்த டாஸ்க்கினால் பிக்பாஸ் வீட்டில் பெரும் பிரச்சினைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் அசீம், ஷிவின் இவரும் வெளியில் இருக்கும் சிறைச்சாலைக்கு செல்கின்றனர். அப்போது அசீம் சிறைச்சாலை ஒரு பூஞ்சோலை. அடுத்த முறையிலிருந்து நோ வொர்க் தான் என சொல்கிறார். இத்துடன் இந்த புரோமோ முடிவடைகிறது. இதற்கு முன்பு பொம்மை டாஸ்க்கினால் அசீமிற்கும் தனலட்சுமிக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.



    • பாலிவுட் தயாரிப்பாளர் கமல் கிஷோர் மிஸ்ரா மீது அவரது மனைவி யாஸ்மின் புகார் அளித்துள்ளார்.
    • போலீசார் புகாரின் அடிப்படையில் கமல் கிஷோர் மிஸ்ராவை கைது செய்தனர்.

    பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான கமல் கிஷோர் மிஸ்ரா 'சர்மா ஜி கி லக் கயி', 'தேஹாட்டி டிஸ்கோ', 'காலி பாலி' போன்ற பல படங்களை தயாரித்துள்ளார். இவர் மும்பை அந்தேரி பகுதியில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். கமல் கிஷோர் மிஸ்ரா தான் வசிக்கும் கட்டடத்தின் கார் பார்க்கிங்கில் இருந்து காரை எடுக்கும் போது இவரின் மனைவி யாஷ்மின் இவரை தேடி கார்பார்க்கிங் பகுதிக்கு வந்துள்ளார்.


    கமல் கிஷோர் மிஸ்ரா

    அப்போது காரில் மாடல் அழகி ஒருவர் இருப்பதை பார்த்த யாஸ்மின் தனது கணவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த மிஸ்ரா காருடன் வேகமாக புறப்பட முயன்ற போது மிஸ்ராவின் மனைவி காரில் அடிபட்டு கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் சம்பவ இடத்தில் இருந்து மிஸ்ரா காரில் தப்பிச்சென்றுவிட்டார்.


    கமல் கிஷோர் மிஸ்ரா

    காயம் அடைந்த மிஸ்ராவின் மனைவி இது குறித்து அம்போலி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் தயாரிப்பாளர் கமல் கிஷோர் மிஸ்ரா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், விசாரணைக்கு பின்னர் அம்போலி போலீசார் கமல் கிஷோர் மிஸ்ராவை கைது செய்தனர்.

    • சினேகன் அறக்கட்டளை பெயரில் பணமோசடி விவகாரத்தில் நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • நடிகை ஜெயலட்சுமி அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தான் சினேகன் இவ்வாறு செய்கிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக இருப்பவர் சினேகன். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியினுடைய நிர்வாகியாகவும் உள்ளார். இவர் 2015-யிலிருந்து சினேகன் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதையடுத்து இவரது அறக்கட்டளையின் பெயரில் போலியாக சமூக வலைதளங்கள் தொடங்கி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பண வசூல் செய்து வருவதாக சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.


    ஜெயலட்சுமி - சினேகன்

    இதனிடையே தன் மீதான குற்றச்சாட்டை ஜெயலட்சுமி மறுத்தார். தொடர்ந்து சினேகன் அளித்த புகாரின்பேரில் சின்னத்திரை நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது 2 பிரிவுகளின் கீழ் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


    ஜெயலட்சுமி - சினேகன்

    இந்நிலையில், இது குறித்து நடிகை ஜெயலட்சுமி கூறியதாவது, "நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. எந்த ஆதாரமும் இல்லாமல். என் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பே காவல் துறை வழக்கு பதிவு செய்து விட்டதாக கூறுகின்றனர். எனக்கு யாரும் எதிரிகள் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் இதற்கு காரணம். நான் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு என் அறக்கட்டளையை ஆரம்பிக்கவில்லை" என்று கூறினார்.

    • எச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் படம் ‘துணிவு’.
    • இந்த படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் "துணிவு". இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.


    துணிவு

    இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். 'துணிவு' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்று தகவல்கள் பல வெளிவந்த நிலையில் இதனை படக்குழு உறுதி செய்துள்ளது.


    துணிவு போஸ்டர்

    அதன்படி, இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. அந்த போஸ்டரில் 'துணிவு' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • நடிகை வரலட்சுமி தற்போது 'கொன்றால் பாவம்' படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

    கன்னடத்தில் இருமுறை மாநில விருதுகளை பெற்ற இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'கொன்றால் பாவம்'.


    கொன்றால் பாவம்

    1981-களில் நடக்கும் கிரைம் திரில்லர் கதையான இந்த திரைப்படம் மோகன் ஹப்பு எழுதிய பிரபல கன்னட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில், ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    கொன்றால் பாவம்

    பிரதாப் கிருஷ்ணா மற்றும் மனோஜ் குமார் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இந்நிலையில், 'கொன்றால் பாவம்' படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சினிமா துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 1-ஆம் தேதி ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நடிகை ஜோதிகா மலையாள நடிகர் மம்முட்டியுடன் இணைந்து 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா, திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.


    காதல் தி கோர்

    தற்போது இவர் நடிகர் மம்முட்டியுடன் 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


    படப்பிடிப்பில் இணைந்த ஜோதிகா

    இந்நிலையில், 'காதல் - தி கோர்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை ஜோதிகா படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இதனை படக்குழு புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளது. 


    • நடிகர் ஹரிஷ் கல்யாண், நர்மதா உதயகுமாரை கரம்பிடிக்க போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.
    • இவருக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது.

    'பியார் பிரேமா காதல்', 'இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்', 'தாராள பிரபு' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹரிஷ் கல்யாண். தமிழ் திரையுலகின் சாக்லேட் பாய் லிஸ்டில் இடம்பெற்றுள்ள இவர் 'நூறு கோடி வானவில்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து 'டீசல்' படத்தில் நடித்து வருகிறார்.


    ஹரிஷ் கல்யாண் - நர்மதா உதயகுமார்

    இப்படி பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் தனது திருமணம் குறித்த அறிக்கை ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அதில், "எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன். உங்கள் அனைவரின் ஆசியுடன், நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.


    ஹரிஷ் கல்யாண் - நர்மதா உதயகுமார் திருமணம்

    இந்நிலையில், இன்று சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கும் நர்மதா உதயகுமாருக்கும் இருவீட்டார் முன்னிலையில் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இந்த நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் எண்ட்ரியில் உள்ளே செல்லும் நபர் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் மகேஸ்வரி, அமுதவாணன், ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, ராபர்ட் மாஸ்டர், ஷாந்தி, ஜிபி முத்து, அசீம், விக்ரமன், ஜனனி, ஏடிகே, ராம் ராமசாமி, மணிகண்டன், ஷிரினா, ஆயிஷா, சிவன் கணேசன், அசல், தனலட்சுமி, நிவா, குயின்சி, கதிரவன் உள்ளிட்ட 20 நபர்கள் வீட்டின் உள்ளே சென்றனர். அதன்பின்னர் நடிகை மைனா நந்தினி வீட்டினுள் நுழைந்தார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று இன்றுடன் 19 நாட்களை நெருங்கியுள்ளது.

     

    பிக்பாஸ் சீசன் 6

    பிக்பாஸ் சீசன் 6

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரம் எபிசோடில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதில் தற்போது 19 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். இதனிடையே வைல்ட் கார்ட் எண்ட்ரியில் யார் உள்ளே வரப்போவது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இதில் உள்ளே நுழையும் யார் என்று அவர்களின் வியூகத்திற்கு ஏற்ப ஒரு ஒருவரை சொல்லி வருகிறனர். அதன்படி ஜி.பி.முத்துவுக்கு பதில் பிக்பாஸ் வீட்டினுள் நடிகர் மன்சூர் அலிகான் உள்ளே நுழையவுள்ளார் என்று பரபரப்பாக பேசப்பட்டது.

     

    மன்சூர் அலிகான்

    மன்சூர் அலிகான்

    இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்துக் கொள்ள மாட்டேன். அப்படி கலந்துக் கொள்வதாக இருந்தால், 'நான் தான் பிக்பாஸாக இருப்பேன்' என நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூத்தடிப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும், தான் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தால், 'விவசாயத்திற்கு முக்கியத்துவம்' கொடுக்கும் நிகழ்ச்சியாக, தான் பிக்பாஸாக இருந்து நடத்துவேன் என்றும் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘விக்ரம்.’
    • இப்படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது.

    மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'விக்ரம்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, என பல மொழிகளில் அண்மையில் வெளியாகி ரூ.400 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.


    விக்ரம்

    'விக்ரம்' திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகி சாதனை படைத்திருந்தாலும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி 100 நாட்களை கடந்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் கோவையில் நடைபெற்றது. இந்நிலையில், 'விக்ரம்' திரைப்படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது.


    ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் அறிக்கை

    இதனை விக்ரம் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    ×