என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • வரும் 12-ம் தேதி காலை 10 மணி 17 நிமிடங்களுக்கு பி.எஸ்.எல்.வி சி-62 விண்ணில் ஏவப்பட உள்ளது.
    • பி.எஸ்.எல்.வி சி 62 மூலம் விவசாயம், ராணுவம் மற்றும் தட்பவெப்ப நிலைகள் அறியமுடியும் என்றார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வரும் 12-ம் தேதி பி.எஸ்.எல்.வி சி-62 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

    இதையடுத்து இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் 3 விஞ்ஞானிகள் இன்று காலை ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தனர். அப்போது பி.எஸ்.எல்.வி சி-62 விண்கல மாதிரியை ஏழுமலையான் காலடியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    சாமி தரிசனத்திற்கு பின் இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது:

    கடந்த ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி சி-61 தோல்வியடைந்தது.

    வரும் 12-ம் தேதி காலை 10 மணி 17 நிமிடங்களுக்கு பி.எஸ்.எல்.வி சி-62 விண்ணில் ஏவப்பட உள்ளது.

    இந்த விண்கலம் வெற்றிகரமாக ஏவவேண்டும் என்பதற்காக ஏழுமலையானை தரிசனம் செய்தோம்.

    பி.எஸ்.எல்.வி சி 62 மூலம் விவசாயம், ராணுவம் மற்றும் தட்பவெப்ப நிலைகள் அறியமுடியும்.

    இந்த ஆண்டு இறுதியில் குலசேகரபட்டினத்தில் இருந்து விண்கலங்களை விண்ணில் செலுத்த தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்.

    2027-ம் ஆண்டு சூரியனை ஆய்வுசெய்ய செயற்கைக்கோளை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும்.

    அதற்கு முன் 3 முறை ஆளில்லாத விண்கலங்களை சூரியனை ஆய்வுசெய்ய அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.

    இந்த ஆண்டில் முதல்முறையாக இமாதம் 12-ம் தேதி இஸ்ரோ விண்கலத்தை விண்ணில் செலுத்த உள்ளது.

    இதன்மூலம் இதுவரை பல்வேறு வெளிநாடுகளின் 442 விண்கலங்களை விண்ணில் செலுத்திய பெருமை இஸ்ரோவுக்கு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

    • கடலில் கலக்கும் தண்ணீருக்கான இரண்டு மாநிலங்களுக்கு இடையே சர்ச்சைக்கான தேவை என்ன?.
    • சிலர் தண்ணீரை விரும்புவதில்லை. சர்ச்சைகளை விரும்புகிறார்கள்.

    ஆற்று நீர் பங்கீடு தொடர்பாக தெலுங்கானாவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தொடர்ந்து பிஆர்எஸ் கட்சி மீது குற்றம்சாட்டி வருகிறது. மேலும், ஆந்திராவுடன் இணைந்திருந்தபோதும் கூட அநீதி இழைக்கப்பட்டது எனத் தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ராயலசீமா நீர்ப்பாசன திட்டம் குறித்து குற்றம்சாட்டியிருந்தார்.

    இந்த நிலையில், நதி நீர் தொடர்பாக ஆந்தியா- தெலுங்கானா இடையே சர்ச்சை தேவையில்லை என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

    கடலில் கலக்கும் தண்ணீருக்கான இரண்டு மாநிலங்களுக்கு இடையே சர்ச்சைக்கான தேவை என்ன?. சிலர் தண்ணீரை விரும்புவதில்லை. சர்ச்சைகளை விரும்புகிறார்கள். போலாவரம் திட்டம் நிறைவடைந்ததும் தெலுங்கான நீரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    முந்தைய ஒய்.எஸ்.ஆர்.சி.பி. அரசாங்கத்தின் போது செய்யப்பட்ட 'தவறுகள்' சரிசெய்யப்பட்டுவிட்டன. வருவாய் தொடர்பான சர்ச்சைகளை தீர்க்க கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆனது. சிலர் பொய்களைப் பரப்பி வருகிறார்கள். தவறுகளைச் செய்துவிட்டு, பழியை மற்றவர்கள் மீது சுமத்த முயற்சிக்கிறார்கள்.

    இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

    • தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தரநிலைகளுக்கு முழுமையாக இணங்கி செயல்படுத்தப்பட்டது.
    • வருகிற 11-ந்தேதிக்குள் மேலும் 2 கின்னஸ் உலக சாதனைகள் படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆந்திர மாநிலத்தில் பெங்களூரு-கடப்பா-விஜயவாடா நெடுஞ்சாலை வழித்தடத்தில் 24 மணி நேரத்தில் 28.95 கி.மீ தூரத்திற்கு சாலை அமைத்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஆந்திர முதலமைச்ர் சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    ஆந்திராவில் உள்ள பெங்களூரு-கடப்பா-விஜயவாடா பொருளாதார வழித்தடத்தில் (என்.எச்.544ஜி) 24 மணி நேரத்திற்குள் தொடர்ச்சியாக 28.95 கிலோமீட்டர் தூரத்திற்கு 10,675 மெட்ரிக் டன் கான்கிரீட் சாலை அமைத்து 2 கின்னஸ் உலக சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது.

    இந்த அசாதாரண சாதனை, இந்திய அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை, மத்திய மந்திரி நிதின் கட்கரியின் கீழ் உலகத் தரம் வாய்ந்த நெடுஞ்சாலை உள்கட்டமைப்புக்கு அளிக்கப்படும் தொடர்ச்சியான உந்துதல், மற்றும் பொறியாளர்கள், தொழிலாளர்கள்,களக் குழுக்களின் சிறப்பான அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது.

    இது கடுமையான தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தரநிலைகளுக்கு முழுமையாக இணங்கி செயல்படுத்தப்பட்டது.

    ஆந்திராவில் உள்ள இந்த முக்கிய வழித்தடத்தின் தொகுப்புகள் 2 மற்றும் 3-ல், வருகிற 11-ந்தேதிக்குள் மேலும் 2 கின்னஸ் உலக சாதனைகள் படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கு எங்களின் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். இந்தியா கட்டமைக்கிறது. ஆந்திரப் பிரதேசம் சாதிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 துணை செயற்கைக்கோள்களும் ராக்கெட் மூலம் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.
    • சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ வருகிற 12-ந்தேதி பி.எஸ்.எல்.வி-சி 62 ராக்கெட் விண்ணில் ஏவ உள்ளது.

    இதுதொடர்பாக இஸ்ரோ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பி.எஸ்.எல்.வி-சி62 திட்டத்தின் ராக்கெட்டை வருகிற 12-ந்தேதி காலை 10:17 மணிக்கு ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த ஏவுதலை ஏவுதல் காட்சிக் கூடத்தில் இருந்து பொதுமக்கள் பார்க்க ஆன்லைனில் lvg.shar.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட் மூலம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) உருவாக்கப்பட்ட மேம்பட்ட புவி கண் காணிப்பு-ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் செயற்கைக் கோளான இ.ஒ.எஸ்-என்1 (அன்வேஷா ) விண்ணில் ஏவப்படுகிறது. இது பட மெடுக்கும் செயற்கைக் கோள் ஆகும்.

    மேலும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட் ரேட்டர் என்ற சிறிய செயற்கைக்கோள் மற்றும் இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெ ரிக்கா முழுவதும் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 துணை செயற்கைக்கோள்களும் ராக்கெட் மூலம் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

    • அந்தப் பகுதி முழுவதையும் சூழ்ந்த கரும்புகையும் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.
    • அச்சமடைந்த கிராம மக்கள், தங்கள் உடைமைகள் மற்றும் கால்நடைகளுடன் ஊரை விட்டு வெளியேறத் தொடங்கினர்.

    ஆந்திர மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் உள்ள ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றில் எரிவாயு கசிவு மற்றும் தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோனசீமா மாவட்டம் ரசோல் அருகே உள்ள இருசுமண்டா கிராமத்தில் அமைந்துள்ள ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றில் இன்று வழக்கமான பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

    அப்போது எதிர்பாராத விதமாக கச்சா எண்ணெய் கலந்த எரிவாயு மிகக் கடுமையான அழுத்தத்துடன் கசியத் தொடங்கியது. சில நிமிடங்களிலேயே இந்த வாயு கசிவு தீபற்றி எரியத் தொடங்கியது.

    வானுயர எழும்பிய நெருப்புப் பிழம்புகளும், அந்தப் பகுதி முழுவதையும் சூழ்ந்த கரும்புகையும் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ஓஎன்ஜிசி மீட்புக் குழுவினரும் தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இருசுமண்டா மற்றும் அதனைச் சுற்றியுள்ள மூன்று கிராமங்களில் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டது.

    மேலும், வீடுகளில் மின் சாதனங்களை இயக்கவோ அல்லது அடுப்புகளைப் பற்றவைக்கவோ வேண்டாம் என அதிகாரிகள்   பொதுமக்களுக்குக் எச்சரிக்கை விடுத்தனர்.

    சம்பவத்தின்போது யாரும் அருகே இல்லை. அதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விவசாய நிலம் அருகே இந்த தீ விபத்து ஏற்பட்டது என தகவல் தெரிவிக்கின்றது. இந்த பகுதியில் இதற்கு முன்பும் இதேபோன்ற எரிவாயு கசிவு ஏற்பட்டு, தீ விபத்து சம்பவமும் ஏற்பட்டு உள்ளது. 

    தற்போது நிலைமை மோசமடைந்ததைக் கண்டு அச்சமடைந்த கிராம மக்கள், தங்கள் உடைமைகள் மற்றும் கால்நடைகளுடன் ஊரை விட்டு வெளியேறத் தொடங்கினர்.

    எரிவாயு கசிவைக் கட்டுப்படுத்தும் வரை அந்தப் பகுதி முழுதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.  

    • தனது தாய்மொழியில் படிக்கும் மாணவர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.
    • தொழில்நுட்பம் மொழிகளைச் சிதைப்பதில்லை, மாறாக அவற்றைப் பாதுகாப்பதற்கு உதவுகிறது.

    ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூரில் 4-வது உலக தெலுங்கு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

    மக்கள் ஒருவருக்கொருவர் அவரவர்களுடைய மொழிகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும். ஒரு மொழியை விட மற்றொரு மொழி உயர்ந்ததோ அல்லது தாழ்ந்ததோ அல்ல. தனது தாய்மொழியில் படிக்கும் மாணவர்கள் சிறந்து விளங்குகிறார்கள். தொழில்நுட்பம் மொழிகளைச் சிதைப்பதில்லை, மாறாக அவற்றைப் பாதுகாப்பதற்கு உதவுகிறது. குழந்தைகளுக்கு மொழியின் மீது அன்பு கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

    • 'மது வாங்கிக் கொடுத்தால் மட்டுமே கீழே இறங்குவேன்' என அந்த நபர் முரண்டு பிடித்தார்
    • இது கோயில் அதிகாரிகள் மற்றும் பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

    திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் ராஜகோபுரம் மீது ஏறி தங்க கலசத்தை சேதப்படுத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

    'மது வாங்கிக் கொடுத்தால் மட்டுமே கீழே இறங்குவேன்' என முரண்டு பிடித்து அந்த நபர் போராட்டத்தில் ஈடுபட்டார். இது கோயில் அதிகாரிகள் மற்றும் பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

    குடிபோதையில் இருந்த நபரை சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு திருப்பதி போலீஸ் கைது செய்து அழைத்துச் சென்றது.

    பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில் வசிக்கும் குட்டாடி திருப்பதி என தெரியவந்தது.

    • 2024-ம் ஆண்டில் 2.55 கோடியாக இருந்த பக்தர்களின் வருகை, 2025ம் ஆண்டில் 2.70 கோடியாக அதிகரிப்பு.
    • ஒரே நாளில் மட்டும் 5.13 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    2025-ஆம் ஆண்டில் திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு விற்பனை குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் மொத்தம் 13.52 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டுகளை விட மிகப்பெரிய வளர்ச்சியாகக் கருதப்படுகிறது.

    2024ம் ஆண்டில் மொத்த லட்டு விற்பனை 12.15 கோடியாகவும், 2025-ல் 13.52 கோடியாகவும் உள்ளது. இது, 1.37 கோடி அதாவது 10 சதவீதம் அதிகளவு விற்பனையாகும்.

    இதேபோல், 2024-ம் ஆண்டில் 2.55 கோடியாக இருந்த பக்தர்களின் வருகை, 2025ம் ஆண்டில் 2.70 கோடியாக அதிகரித்துள்ளது.

    கடந்த டிசம்பர் 27, 2025 அன்று ஒரே நாளில் மட்டும் 5.13 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத ஒரு நாள் சாதனையாகும்.

    பக்தர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய, ஒரு நாளைக்குச் சராசரியாக 4 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. விசேஷ நாட்களில் இது 8 முதல் 10 லட்சம் வரை அதிகரிக்கப்படுகிறது.

    2024-ல் எழுந்த நெய் கலப்பட சர்ச்சைகளுக்குப் பிறகு, 2025-ல் தரக் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. புதிய ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு, லட்டுகளின் தரம் உறுதி செய்யப்பட்டதால் பக்தர்களின் நம்பிக்கை மற்றும் வரவேற்பு அதிகரித்துள்ளதாகத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • 2 குளிர்சாதன பெட்டிகளில் தீப்பற்றியதில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
    • எக்ஸ்பிரஸ் ரெயிலின் B1, M1 பெட்டிகள் முழுமையாக எரிந்து சேதமடைந்தன.

    ஜார்கண்ட் மாநிலம், டாடா நகரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் டாடா நகர் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் துவ்வாடா அருகே வந்தபோது ரெயிலின் பேன்ட்ரி காருக்கு அருகில் இருந்த பி1 மற்றும் எம்2 ஏசி பெட்டிகளில் புகை வந்தது,

    இதனை கவனித்த லோகோ பைலட்டுகள் உடனடியாக ரெயிலை எலமஞ்சிலி ரெயில் நிலையத்தில் ரெயிலை நிறுத்தினர். புகை தீயாக மாறியது. அதில் இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினர்.

    இந்த சம்பவத்தில் பி1 பெட்டியில் இருந்த ஒருவர் உயிருடன் எரிந்து உயிரிழந்தார். இறந்தவர் விஜயவாடாவைச் சேர்ந்த சந்திரசேகர் சுந்தர் (வயது 70) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    விபத்து காரணமாக, எலமஞ்சிலி ரெயில் நிலையம் புகையால் நிரம்பியது.

    அனகப்பள்ளி எலமஞ்சிலி மற்றும் நக்கப்பள்ளி ஆகிய இடங்களிலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க முயன்றனர். 2 பெட்டிகளிலும் இருந்த பயணிகளின் அனைத்து உடமைகளும் எரிந்தன.

    மூத்த ரெயில்வே அதிகாரிகள் நிலையத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தனர். ஆம்புலன்ஸ்கள் விரைந்தன. சுமார் 2000 பயணிகள் குளிரில் ரெயில் நிலையத்தில் சிக்கித் தவித்தனர். இந்த விபத்தைத் தொடர்ந்து, விசாகப்பட்டினம் விஜயவாடா வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரெயில்களும் நிறுத்தப்பட்டன.

    அதிகாலை 3.30 மணிக்குப் பிறகு எரிந்த 2 பெட்டிகளையும் ரெயில்வே அதிகாரிகள் அகற்றினர். பயணிகளை மற்ற பெட்டிகளுக்கு மாற்றி ரெயிலை அனுப்ப ஏற்பாடு செய்தனர்.

    இந்த விபத்து காரணமாக விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடா செல்லும் பல ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. சில ரெயில்கள் விசாகப்பட்டினம் அனகப்பள்ளி மற்றும் துனி நிலையங்களில் நிறுத்தப்பட்டன.

    தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் விஜயவாடாவில் நடந்தது.
    • பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் தன்வி பத்ரி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தார்.

    விஜயவாடா:

    87-வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்தது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தன்வி பத்ரி, சூர்யா கரிஷ்மா தமிரி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சூர்யா கரிஷ்மா தமிரி 17-21, 21-12, 21-14 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் விஜயவாடாவில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் தன்வி பத்ரி அரையிறுதியில் வென்றார்.

    விஜயவாடா:

    87-வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் தன்வி பத்ரி, சுருதி முன்டாடா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய தன்வி பத்ரி 18-21, 21-12, 21-15 என்ற புள்ளிக்கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • திருமணம் முடிந்த நிலையில் மணகன் சொந்த ஊருக்கு ரெயிலில் அழைத்துச் சென்றார்.
    • ரெயில் இருந்த இறங்கி மாயமான நிலையில், அத்தையுடன் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம், இச்சாபுரம் நகர் கர்ஜி தெருவை சேர்ந்த இளம்பெண் முத்திரெட்டி வாணி (19). இவருக்கும் கர்நாடகாவை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீகாகுளத்தில் உள்ள துர்கா தேவி கோவிலில் திருமணம் நடந்தது.

    பின்னர் மணமகன் வாணியை தன் சொந்த ஊருக்கு ரெயிலில் அழைத்து சென்றார். விசாகப்பட்டினம் ரெயில் நிலையம் வந்ததும் கழிவறைக்கு செல்வதாக கூறி ரெயிலில் இருந்து இறங்கிய வாணி மீண்டும் அந்த ரெயிலில் ஏறவில்லை.

    இதையடுத்து மனைவியை காணாததால் பதறிய வாலிபர் ரெயிலுக்குள் வாணியை தேடி அலைந்தார். அவர் எங்கு தேடியும் கிடைக்காததால் விரக்தி அடைந்தார்.

    மணமகன் வீட்டார் வாணியின் குடும்பத்துக்கு திருமண செலவுக்காக ஒரு லட்சம் ரூபாய், பணம் கொடுத்திருந்தனர். அந்தப் பணத்தையும் நகையையும் எடுத்துக்கொண்டு வாணி தப்பிச் சென்றுவிட்டது தெரிந்தது. இதனால் அவர்கள் கடும் கோபம் அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து மணமகன் குடும்பத்தினருக்கு இச்சாபுரத்தில் உள்ள தனது அத்தை சந்தியா என்பவர் வீட்டில் வாணி இருக்கும் தகவல் கிடைத்தது.

    வாணியை தேடி அங்கு சென்ற அவர்கள் சந்தியாவிடம், தங்களது பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டனர். ஆனால், அவர் பணத்தை திருப்பி தர முடியாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதையடுத்து மணமகன் குடும்பத்தினர் போலீசில் வழக்கு தொடர்ந்தனர். போலீஸ் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    சிறுவயதிலேயே தாயை இழந்த வாணி, தந்தையை பிரிந்து, உறவினர்களிடம் வளர்ந்து வந்துள்ளார். இதன் காரணமாக அத்தை சந்தியா வாணியை சிறுவயதிலேயே தன் வலையில் விழ வைத்துள்ளார்.

    திருமணமாகாத அப்பாவி இளைஞர்களை திருமணம் செய்து, அவர்களிடம் நகை, பணத்தை பறித்து விட்டு, இருவரும் தப்பி விடுவார்கள். இதுவரை கர்நாடகா, ஒடிசா, கேரளா மாநிலங்களில் திருமணம் ஆகாத 8 இளைஞர்களை, இவர்கள் ஏமாற்றி உள்ள தகவல் போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    வாணி திருமணம் முடிந்த சில நாட்களிலேயே நகை மற்றும் பணத்துடன் தப்பி ஓடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது 9-வது திருமணத்தில்தான் வசமாக சிக்கி அவரது வண்டவாளங்கள் வெளியே தெரிய வந்துள்ளது.

    போலீசார் விசாரணைக்கு பயந்து வாணியும், அவரது அத்தை சந்தியாவும் தலைமறைவாகி உள்ளனர். இவர்களை தனிப்படை போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர்.

    இந்த நிலையில் தனிப்படை போலீசார் தேடுவது குறித்து தகவல் அறிந்த வாணியால் ஏற்கனவே ஏமாற்றப்பட்ட நாகிரெட்டி, கேசவரெட்டி ஆகியோர் போலீசில் புகார் அளித்து உள்ளனர். அவர்கள் வாணியுடன் எடுத்த தங்கள் திருமண போட்டோக்கள், வீடியோ ஆதாரங்களையும் தந்துள்ளனர்.

    அதை கைப்பற்றிய போலீசார் வாணியை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 19 வயது இளம் பெண் 9 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×