என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • 16 பந்துகளில் ஹர்திக் பாண்ட்யா அரை சதம் அடித்தார்.
    • உண்மையாகவே நான் அவுட்டாகி வெளியே வரும் வரை அது 2-வது அதிவேக அரைசதம் என்று எனக்குத் தெரியாது.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி ஹர்திக் பாண்ட்யா அதிரடியில் 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா 25 பந்துகளில் 63 ரன்கள் குவித்து ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் 16 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தினார்.

    இந்நிலையில் டி20 போட்டியில் முதலிடத்தை மிஸ் பண்ணிட்டோமே என்று தோன்றியதாக ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உண்மையாகவே நான் அவுட்டாகி வெளியே வரும் வரை அது 2-வது அதிவேக அரைசதம் என்று எனக்குத் தெரியாது. சோஷியல் மீடியா டீம் சொன்னதும் 'அடடா முதலிடத்தை மிஸ் பண்ணிட்டோமே' என்று தோன்றியது. இருந்தாலும் யுவி பாஜி (யுவராஜ் சிங்) அந்த சாதனையை வைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி தான் என கூறினார்.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
    • இந்த தொடரில் இஷான் கிஷன் இடம் பிடித்துள்ளார்.

    மும்பை:

    10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்.7-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது.

    இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. துணை கேப்டனாக அக்ஷர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் இந்த அணியில் 2-வது விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் இடம் பிடித்துள்ளார். இதன்மூலம் 2 ஆண்டுகளுக்கு பிறகு இஷான் கிஷன் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். கடைசியாக 2023-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடியிருந்தார்.

    நடந்து முடிந்த SMAT தொடரில் கேப்டனாக மற்றும் பேட்டராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் அவர் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • துணை கேப்டனாக அக்ஷர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மும்பை:

    10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியாவுடன், பாகிஸ்தான், நமிபியா, நெதர்லாந்து, அமெரிக்க அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்.7-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது. பரம போட்டியாளரான பாகிஸ்தானை பிப்.15-ந்தேதி கொழும்பில் சந்திக்கிறது.

    இந்த நிலையில். டி20 உலகக் கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக அக்ஷர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 2-வது விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் இடம் பிடித்துள்ளார். 

    டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி விவரம்:-

    அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங், அக்ஷர் பட்டேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன். 




    • மும்பை அணிக்காக ரோகித் சர்மா களமிறங்குகிறார்.
    • ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியில் விராட் கோலி விளையாட உள்ளார்.

    விஜய் ஹசாரே டிராபி தொடர் வரும் 24-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி ஒருநாள் தொடராக நடைபெற உள்ளது. இந்த தொடர் பிளேட், எலைட் என்ற இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பிளேட் பிரிவில் மேகாலயா, மிசோரம், அருணாச்சல பிரதேசம், பீகார், மணீப்பூர், நாகலாந்து இடம் பெற்றுள்ளது.

    எலைட் பிரிவில் தமிழ்நாடு, புதுச்சேரி, குஜராத், ஆந்திரா, டெல்லி, ஹரியானா, ரெயில்வேஸ், ஒடிசா, சவுராஸ்ட்ரா, பஞ்சாப், மகாராஷ்டிரா, சண்டிகர், கோவா, ஹிமாசல் பிரதேசம், உத்திரகாண்ட், மும்பை, சிக்கீம், பெங்கால், விதர்பா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, திரிபுரா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், அசாம், பரோடா, ஐதராபாத், உத்தர பிரதேசம் ஆகிய அணிகள் இந்த பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் விஜய் ஹசாரே தொடரில் இந்திய அணியின் ஜாம்பவான்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விளையாட உள்ளனர். அதன்படி மும்பை அணிக்காக ரோகித் சர்மா களமிறங்குகிறார். அவர் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியில் விராட் கோலி விளையாட உள்ளார்.

    இவர்கள் இருவரும் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் விளையாட உள்ளதால் ரசிகர்கள் இடையே பெரும் எதிர் பார்ப்பு உள்ளது.

    • இங்கிலாந்து அணி 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • இங்கிலாந்து அணிக்கு இன்னும் 228 ரன்கள் தேவை.

    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆசஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டுவில் நடைபெற்று வருகிறது.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 371 ரன் குவித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 286 ரன் எடுத்தது. 85 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 271 ரன் எடுத்து இருந்தது. டிராவிஸ் ஹெட் சதம் அடித்தார். அவர் 142 ரன்னுடனும், அலெக்ஸ் கேரி 52 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 356 ரன்கள் முன்னிலை, கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது. டிராவிஸ் ஹெட் 170 ரன் குவித்து அவுட் ஆனார். டெஸ்டில் அவரது 2-வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். 5-வது விக்கெட் ஜோடி 162 ரன் எடுத்தது.

    அலெக்ஸ் கேரி 72 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். மற்ற வீரர்கள் எளிதில் ஆட்டம் இழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 84.4 ஓவரில் 349 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்துக்கு 435 ரன் இலக்காக இருந்தது.

    இங்கிலாந்து தரப்பில் ஜோஸ் டங் 4 விக்கெட்டும், கார்ஸ் 3 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், வில் ஜேக்ஸ், பென் ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 435 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து அணி ஆடியது.

    31 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 2 விக்கெட்டை இழந்தது. பென் டக்கெட் 4 ரன்னிலும், ஓலிபோப் 17 ரன்னிலும், கம்மின்ஸ் பந்தில் பெவிலியன் திரும்பினார்கள். 3-வது விக்கெட் டுக்கு கிராவ்லியுடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுமையாக விளையாடினர். இருந்தாலும் பேட் கம்மின்ஸ் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    சிறப்பாக விளையாடிய கிராவ்லி அரைசதம் கடந்து அசத்தினர். அடுத்து வந்த ஹாரி ப்ரூக் 30 ரன்னிலும் பென் ஸ்டோக்ஸ் 5 ரன்னிலும் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கிராவ்லி 85 ரன்னிலும் நாதன் லயன் பந்துவீச்சில் வெளியேறினார்.

    இதனால் இங்கிலாந்து அணி 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணிக்கு இன்னும் 228 ரன்கள் தேவை என்ற நிலையுடன் கடைசி நாளில் களமிறங்கும். 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் போட்டியில் வெற்றி பெறலாம் மேலும் தொடரை கைப்பற்றி விடலாம் என்ற நோக்கி ஆஸ்திரேலியா நாளை களமிறங்கும். ஆஸ்திரேலிய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

    • வெஸ்ட் இண்டீஸ் வீரர் கவேம் ஹாட்ஜ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார்.
    • நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி, அஜாஸ் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    மவுண்ட் மாங்கானு:

    நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கானுவில் நடைபெற்று வருகிறது.

    நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர்களான கான்வே இரட்டை சதமும் (227 ரன்), கேப்டன் டாம் லாதம் சதமும் (137) அடித்தனர். ரச்சின் ரவீந்திரா 72 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் ஷீல்ஸ் , ஆண்டர்சன் பிலிப், ஜஸ்டின் கிரீவ்ஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 110 ரன் எடுத்து இருந்தது. பிரன்டன் கிங் 55 ரன்னுடனும், கேம்பெல் 45 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 465 ரன்கள் பின்தங்கி, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் வெஸ்ட்இண்டீஸ் தொடர்ந்து விளையாடியது.

    கேம்பெல் மேலும் ரன் எதுவும் எடுக்காமலும், பிரன்டன் கிங் 63 ரன்னிலும், டெவின் இம்லாச் 26 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதை தொடர்ந்து அலிக் அதானேஸ் (44 ரன்), ஜஸ்டின் கிரீவ்ஸ் (43 ரன்), கேப்டன் ரோஸ்டன் சேஸ் (2) ஆகியோர் அவுட் ஆனார்கள்.

    மறுமுனையில் இருந்த 3-வது வரிசை வீரரான கவேம் ஹாட்ஜ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் அவர் பொறுப்புடன் ஆடினார். 224 பந்துகளில் 13 பவுண்டரியுடன் 100 ரன்களை தொட்டார். 13-வது டெஸ்டில் விளையாடும் கவேம் ஹாட்ஜ்க்கு இது 2-வது சதமாகும்.

    இதனால் 3-வது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 381 ரன்கள் எடுத்துள்ளது. ஹாட்ஜ் 109 ரன்னுடனும் பில்ப் 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி, அஜாஸ் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் 25 பேர் கொண்ட உத்தேச பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.
    • இதில் கேப்டன் பொறுப்பில் இருந்து சாரித் அசலங்கா அதிரடியாக நீக்கப்பட்டார்.

    கொழும்பு:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் 25 பேர் கொண்ட உத்தேச பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் பொறுப்பில் இருந்து சாரித் அசலங்கா அதிரடியாக நீக்கப்பட்டார். அவரது மோசமான பேட்டிங் பார்ம் காரணமாக கேப்டன்ஷிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதாக இலங்கை தேர்வு குழு தலைவர் பிரமோதயா விக்ரமசிங்கா தெரிவித்துள்ளார்.

    ஆனால் சமீபத்தில் பாகிஸ்தானில் விளையாடிய போது குண்டு வெடித்ததால் பாதுகாப்பு அச்சத்தால் அசலங்கா பாதியில் நாடு திரும்பினார். அங்கு தொடர்ந்து விளையாடும்படி இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியும் அவர் அதை ஏற்காததே பதவி பறிப்புக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

    அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் தசுன் ஷனகா கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார். அசலங்கா ஒரு வீரராக தொடருகிறார்.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியில் ஆட்டநாயகனாக ஹர்திக் பாண்ட்யா தேர்வு செய்யப்பட்டார்.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் இந்தியா தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

    முன்னதாக இந்த போட்டியின் போது ஹர்திக் பாண்ட்யா சிக்சர் அடித்த பந்து, பவுண்டரி லைனில் இருந்த கேமரா மேன் மீது பட்டது. இதனையடுத்து அவர் கையில் ஐஸ்பேக் ஒத்தரம் கொடுக்கப்பட்டது. இதனை அறிந்த ஹர்திக் பாண்ட்யா அவரை கட்டியணைத்து காயம் எப்படி இருக்கிறது என்பதை விசாரித்தார். அதற்கு கேமராமேன் அதிர்ஷ்டவசமாக கையில் பட்டது. கொஞ்சம் மேலே பட்டிருந்தால் அவ்வளவு தான் என சிரித்தப்படி கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி எந்த ஒரு 20 ஓவர் தொடரையும் இழந்ததில்லை.
    • ஆசிய கோப்பை உள்பட தொடர்ச்சியாக 8 தொடர்களை கைப்பற்றி இருக்கிறது.

    10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியாவுடன், பாகிஸ்தான், நமிபியா, நெதர்லாந்து, அமெரிக்க அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்.7-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது. பரம போட்டியாளரான பாகிஸ்தானை பிப்.15-ந்தேதி கொழும்பில் சந்திக்கிறது.

    இந்த நிலையில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி மும்பையில் இன்று அறிவிக்கப்படுகிறது. இதையொட்டி தேர்வு குழு தலைவர் அஜீத் அகர்கர் தலைமையிலான கமிட்டியினர் ஆலோசிக்கிறார்கள். தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் சூர்யகுமார் யாதவும் அணித் தேர்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி எந்த ஒரு 20 ஓவர் தொடரையும் இழந்ததில்லை. ஆசிய கோப்பை உள்பட தொடர்ச்சியாக 8 தொடர்களை கைப்பற்றி இருக்கிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் கணிசமான வெற்றிகளோடு 'நம்பர் ஒன்' அணியாக திகழ்கிறது. அதனால் தற்போதைய 20 ஓவர் அணியில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் மாற்றங்கள் இருக்கப்போவதில்லை. பார்மின்றி தடுமாறும் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லுக்கு இடம் இருக்குமா? என்பது தான் சற்று கேள்விக்குறியாக இருக்கிறது. அவரது இடத்துக்கு ஜெய்ஸ்வால் அல்லது சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் 45 பந்தில் சதம் விளாசிய இஷான் கிஷன் ஆகியோரின் பெயர் பரிசீலிக்கப்படலாம். மற்றபடி அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங், அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா ஆகியோர் அணியில் தொடருவார்கள்.

    ரிங்கு சிங், ரியான் பராக், நிதிஷ்குமார் ரெட்டி, பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோர் மாற்று வீரர்களின் பட்டியலில் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பு வரை அணியில் மாற்றம் செய்து கொள்ள முடியும்.

    முன்னதாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஜன.11-ந்தேதி வதோதராவில் நடக்கிறது. இதற்கான இந்திய அணியும் இன்று அறிவிக்கப்படுகிறது.

    • மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்தது.
    • தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 142 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் அடிலெய்டில் நடந்து வருகிறது.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 371 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அலெக்ஸ் கேரி சதமடித்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 286 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. பென் ஸ்டோக்ஸ் தனி ஆளாகப் போராடி 83 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 142 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    அவர் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் கடைசியாக ஆடிய 4 டெஸ்ட்களிலும் (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 175 ரன், 119 ரன், இந்தியாவுக்கு எதிராக 140 ரன், இங்கிலாந்துக்கு எதிராக 142 ரன்) சதம் அடித்துள்ளார்.

    இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் குறிப்பிட்ட மைதானத்தில் தொடர்ச்சியாக 4 சதம் கண்ட 5-வது வீரர் என்ற பெருமையை டிராவிஸ் ஹெட் பெற்றார்.

    ஏற்கனவே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டான் பிராட்மேன் (மெல்போர்ன் மைதானம்), மைக்கேல் கிளார்க் (அடிலெய்டு), ஸ்டீவன்சுமித் (மெல்போர்ன்), இங்கிலாந்தின் வாலி ஹேமன்ட் (சிட்னி) ஆகியோர் ஆஸ்திரேலிய மைதானத்தில் தொடர்ச்சியாக தலா 4 சதம் அடித்துள்ளனர். அந்த சாதனை பட்டியலில் டிராவிஸ் ஹெட் இணைந்தார்.

    • டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 20 ஓவரில் 257 ரன்கள் குவித்தது.

    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடர் பிக் பாஷ் லீக். இந்தத் தொடரின் 15-வது சீசன் நடந்து வருகிறது.

    பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 257 ரன்கள் குவித்தது.

    அந்த அணியின் பின் ஆலன் 79 ரன்னும், கூப்பட் கனோலில் 77 ரன்னும் அடித்தனர்.

    பிரிஸ்பேன் ஹீட் அணி சார்பில் சேவியர் பார்ட்லெட் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 258 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பிரிஸ்பேன் ஹீட் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன காலின் முன்ரோ கோல்டன் டக் அவுட்டானார்.

    அடுத்து இணைந்த ஜாக் வைல்டர்முத்-மேட் ரென்ஷா ஜோடி அதிரடியாக ஆடியது.

    பெர்த் அணியின் பந்துவீச்சை இந்த ஜோடி வெளுத்து வாங்கியது. சிக்சரும் பவுண்டரியுமாக விளாசிய இருவரும் சதமடித்து அசத்தினர்.

    இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 212 ரன் சேர்த்த நிலையில் ரென்ஷா 101 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேக்ஸ் பிரையண்ட் தனது பங்குக்கு 28 ரன்கள் அடித்து ரிட்டயர்டு ஹர்ட் ஆனார்.

    இறுதியில் பிரிஸ்பேன் ஹீட் அணி 19.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 258 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய ஜாக் வைல்டர்முத் 110 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இதன்மூலம் பிக் பாஷ் லீக் வரலாற்றில் அதிக ரன்களை சேசிங் செய்த அணி என்ற வரலாற்று சாதனையை பிரிஸ்பேன் படைத்துள்ளது.

    • சீனாவில் பாட்மிண்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3வது சுற்றில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.

    பீஜிங்:

    சீனாவின் ஹாங்சு நகரில் பாட்மிண்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடர் நடந்து வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர், இரட்டையர், பெண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் தரவரிசையில் உலகின் 'டாப்-8' ஜோடி இதில் பங்கேற்கின்றன. இவை இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.

    இந்தியா சார்பில் ஆண்கள் இரட்டையரில் உலகத் தரவரிசையில் நம்பர்-3 ஆக உள்ள சாத்வித் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி பங்கேற்றது.

    இந்நிலையில், இந்திய ஜோடி நேற்று தனது 3-வது போட்டியில் மலேசியாவின் ஆரோன் சியா-சோ இக் ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் இந்திய ஜோடி முதல் செட்டை 17-21 என இழந்தது. இதில் சுதாரித்துக் கொண்ட இந்திய ஜோடி அடுத்த இரு செட்களை 21-18, 21-15 என வென்றது. இதன்மூலம் இந்திய ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    ×