என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • போதை பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம்
    • வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் அருகே உள்ள சின்ன அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 43). இவர் சொந்தமாக மினி டெம்போ வைத்து தொழில் செய்து வருகிறார்.

    இந்த மினி டெம்போவில் நாமக்கல்லில் இருந்து முட்டை லோடு ஏற்றிக் கொண்டு அவற்றை கர்நாடகா மாநிலத்திற்கு கொண்டு சென்று அங்குள்ள வியாபாரிகளிடம் விற்பனை செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று கார்த்திக் தனது மினி டெம்போவில் முட்டை லோடு ஏற்றிக் கொண்டு கர்நாடகாவுக்கு சென்றார்.

    பின்னர் அவர் அங்கு முட்டை லோடு இறக்கி விட்டு அங்கிருந்து திரும்பியபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ்- 74 கிலோ, பான்மசாலா-77 கிலோ, கூல் லிப்-23 கிலோ உள்ளிட்ட 262 கிலோ போதை பொருட்களை மினிடெம்போவில் கடத்தி கொண்டு வந்தார்.

    மினி டெம்போ கிருஷ்ணகிரி, சேலம் மாவட்ட சோதனை சாவடிகளை கடந்து நாமக்கல் மாவட்டத்திற்குள் நுழைந்தது. அப்போது நாமக்கல் கருப்பட்டிபாளையம் பிரிவு சாலையில் நல்லிபாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த மினி டெம்போவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பதுக்கி வைத்திருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்து, டிரைவர் கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த போதை பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை கடைகளில் கொடுத்து விற்பனை செய்வதற்காக கடத்தி கொண்டு வந்துள்ளார்.

    பறிமுதல் செய்யப்பட்ட இந்த போதை பொருட்கள் மற்றும் மினி டெம்போ ஆகியவை நல்லிபாளையம் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

    • தீ அருகில் இருந்த நாட்டுக்கோழிகள் இருந்த கீற்று மற்றும் தகர கொட்டகைக்கு பரவியது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கந்தம்பாளையம் அருகே உள்ள கொண்டரசம் பாளையத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (58). இவர் அருணகிரிபாளையம் ஊஞ்சல்கொடை தோட்டம் என்ற இடத்தில் தனக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணை வைத்து அதில் சுமார் 2 ஆயிரம் நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்தார்.

    இந்த நிலையில் ஆடுகளுக்கு விறகு அடுப்பில் கூழ் காய்ச்சினார். பின்னர் அடுப்பை அணைக்காமல் கந்தம்பாளையத்தில் உள்ள வங்கிக்கு சென்று விட்டார். அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ அருகில் இருந்த நாட்டுக்கோழிகள் இருந்த கீற்று மற்றும் தகர கொட்டகைக்கு பரவியது. இதில் தீப்பிடித்து நாட்டுக்கோழிப்பண்ணை முழுவதும் எரிந்தது.

    இது குறித்து அருகில் இருந்தவர்கள் திருச்செங்கோடு தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இருப்பினும் நாட்டுக்கோழி பண்ணையில் இருந்த சுமார் 2 ஆயிரம் நாட்டுக்கோழிகள் தீயில் கருகி எரிந்து இறந்து போனது. இது குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் நல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருவரும் இன்று காலை ஒரே மோட்டார்சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டனர்.
    • விபத்து குறித்து உடனடியாக எலச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிகுமார். இவரது மகன் ராகுல் (வயது 20). இவர் ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட் பகுதியில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் படித்து வந்தார்.

    இதேபோல் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் பூந்தமிழன் (20). இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இன்பர்மேஷன் டெக்னாலஜி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இவரும், ராகுலும் நண்பர்கள் ஆவர். இருவரும் இன்று காலை ஒரே மோட்டார்சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டனர். மாணவர் பூந்தமிழன் திருச்செங்கோட்டில் உள்ள கல்லூரியில் படித்து வருவதால் அவரை அங்கு இறக்கி விடுவதற்காக மோட்டார்சைக்கிளை ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு நோக்கி ஓட்டினார்கள்.

    திருச்செங்கோடு அடுத்த எலச்சிப்பாளையம் நல்லாம்பாளையம் ரேசன் கடை அருகில் சாலையில் இருவரும் சென்றபோது மோட்டார்சைக்கிளும், திருச்செங்கோட்டில் இருந்து ராசிபுரத்தை நோக்கி வந்த தனியார் பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் மாணவர்கள் ராகுல், பூந்தமிழன் இருவரும் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    இந்த விபத்து குறித்து உடனடியாக எலச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டனர். மேலும் இது பற்றி போலீசார், மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் மாணவர்களின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதை பார்க்கும்போது நெஞ்சை கரைய வைத்தது.

    மாணவர்கள் பலியானதை தொடர்ந்து அவர்கள் படித்த கல்லூரி சோகத்தில் மூழ்கியது.

    • ஆம்னி வேனின் முன் பகுதியும் சேதமடைந்து ஆம்னி வேனை ஓட்டி வந்த மணிகண்டனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
    • தலை மற்றும் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே 3 பேரும் பலியானார்கள்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ராசிபாளையம் காட்டூர் எரியூர்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மலையண்ணன் (70), விவசாயி. இவரது மனைவி நிர்மலா (55). அதே பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் என்பவரது மனைவி செல்லம்மாள் (65). இவர்கள் 3 பேரும் நாமக்கல்-மோகனூர் செல்லும் தார் சாலை ஓரத்தில் காட்டூர் பெட்ரோல் நிலையம் அருகே இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் நடைபயிற்சி சென்றனர்.

    அப்போது மோகனூர் பாம்பாட்டி தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஆம்னி வேனை அதிவேகமாக ஓட்டி வந்தார். பின்னர் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் நடைபயிற்சி சென்ற மலையண்ணன், அவரது மனைவி நிர்மலா மற்றும் செல்லம்மாள் ஆகிய 3 பேர் மீதும் மோதியது. இதில் அவர்களுக்கு தலை மற்றும் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே 3 பேரும் பலியானார்கள்.

    அதேபோல் ஆம்னி வேனின் முன் பகுதியும் சேதமடைந்து ஆம்னி வேனை ஓட்டி வந்த மணிகண்டனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து உடனடியாக மோகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் விபத்தில் பலியான 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஆம்னி வேன் டிரைவர் மணிகண்டனை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மோகனூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் மோகனூர் போலீசார் ஆம்னி வேனை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து ஆம்னி வேனை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடைபயிற்சி சென்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பேர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வடக்கு மாவட்ட செயலாளர் பெரியகுளம் ராமச்சந்திரன் உள்பட 4 நிர்வாகிகளும் அக்கட்சியில் இருந்து விலகி விட்டனர்.
    • சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெகதீஷ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீப நாட்களாக நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர்.

    அதன்படி, கோவை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் பெரியகுளம் ராமச்சந்திரன் உள்பட 4 நிர்வாகிகளும் அக்கட்சியில் இருந்து விலகி விட்டனர்.

    இதேபோல், சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெகதீஷ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    இதுபோன்று, நாம் தமிழர் கட்சியில் இருந்து தினமும் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.

    இந்நிலையில், நா.த.க நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் வினோத்குமார் உட்பட 50 பேர், அக்கட்சியில் இருந்து கூண்டோடு விலகியுள்ளனர்.

    இதுகுறித்து வினோத் குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கட்சிக்காகப் பல லட்சங்களைச் செலவு செய்துள்ளோம். ஆனால், நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை. கட்சிக் கொள்கைக்கு எதிராகவும், மதவாதத்தை ஆதரித்தும் சீமான் பேசி வருகிறார்" என்றார்.

    • அரசாணையை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.
    • பெயர் மாற்றத்திற்காக போராடிய பெரியவர் கணேசன் மற்றும் வழக்கறிஞர் அன்பழகன் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

    பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்றுறு, நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் 'அரிசன் காலனி' என்ற பெயரை அழித்து, மல்லசமுத்திரம் கிழக்கு எனப் பெயர் மாற்றம் செய்தார்.

    மேலும், பெயர் மாற்றத்திற்காக போராடிய ஊர்ப் பெரியவர் கணேசனுக்கு பொன்னாடை அணிவித்த அமைச்சர், இதற்கான அரசாணையை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.

    இதனிடையே பெயர் மாற்றத்திற்காக போராடிய பெரியவர் கணேசன் மற்றும் வழக்கறிஞர் அன்பழகன் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

    இந்த நிலையில், 'அரிசன் காலனி' என்ற பெயரை அழித்து மல்லசமுத்திரம் கிழக்கு என பெயர் மாற்றம் செய்த அமைச்சர் மற்றும் தமிழக அரசுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர். 

    • அரசுப்பள்ளி பெயர் மாற்றத்திற்காக போராடிய கணேசனுக்கு அமைச்சர் பொன்னாடை அணிவித்தார்.
    • பெயர் மாற்றத்திற்கான அரசாணையை பள்ளி தலைமை ஆசிரியரிடம் அமைச்சர் வழங்கினார்.

    நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி, 'அரிசன் காலனி' என்ற ஊர்ப்பெயரில் இயங்கி வந்த நிலையில், 'மல்லசமுத்திரம் கிழக்கு' என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெயர் மாற்றம் செய்தார்

    'கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்' என்ற மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வரிகளை குறிப்பிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசுப்பள்ளியின் பெயரை மாற்றம் செய்தார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அரிசன் காலனி' எனும் பெயரினை 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு' எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது அவ்வூர் மக்களின் கோரிக்கையாக இருந்தது.

    இந்நிலையில் 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு' எனப் பெயர் மாற்றம் செய்வதற்கான அரசாணையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க வெளியிட்டோம்.

    தொடர்ந்து இன்று மல்லசமுத்திரம் கிராமத்திற்கு நேரடியாக சென்று 'அரிசன் காலனி' எனும் பெயரினை அழித்து, அரசாணையை பள்ளியின் தலைமையாசிரியரிடம் வழங்கினோம். இதற்காக போராடி வந்த ஊர் பெரியர் திரு.கணேசன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தோம்.

    ஊர் மக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற வழக்கறிஞர் திரு.G.அன்பழகன் அவர்களிடம் 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அலைப்பேசி வாயிலாக தெரிவித்தோம். மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்" என்று பதிவிட்டுள்ளார்.

    • போராட்டத்திற்கு மருந்து வணிகர்கள் சங்கம் உள்பட 46 வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
    • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாமக்கல் நகருக்குள் வரும் வெளியூர் பஸ்கள் பழைய பஸ் நிலையத்திற்குள் வராமல் மெயின் ரோட்டில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு செல்கிறது. பஸ்கள் பழைய பஸ் நிலையத்திற்குள் வராததால், பஸ் நிலையத்தில் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் கடைகளில் வியாபாரம் இல்லை. மேலும் மெயின் ரோட்டில் பொதுமக்கள் கூடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் , பஸ் நிலைய கடை வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே நகருக்குள் வந்து செல்லும் அனைத்து பஸ்களும் பழைய பஸ் நிலையத்திற்குள் வந்து பயணிகளை ஏற்றி செல்லவேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி பொதுமக்களுடன் இணைந்து நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை (25-ந்தேதி) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நாமக்கல் நகரம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு மருந்து வணிகர்கள் சங்கம் உள்பட 46 வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    நாமக்கல் நகரில் மளிகை கடைகள், மருந்து கடைகள், எலக்ட்ரிக்கல் கடை உள்பட 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மருந்து வணிகர்கள் சங்கத்தினர் மருந்து கடைகளை நாளை காலை 6 மணிமுதல் மதியம் 2 மணி வரை கடையடைப்பு செய்வதாகவும், பிற வணிக நிறுவனங்கள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு செய்வதாகவும் தெரிவித்துள்ளதால் நாளை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக நாளை அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாத நிலை உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் நோட்டு, புத்தகங்கள் வாங்க முடியாத நிலை, அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள், கூலி தொழிலாளர்கள் தங்கள் தொழில்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    • மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பெற்றோருடன் பள்ளியின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தற்போது ஓட்டு கட்டிடத்தில் பள்ளி இயங்கி வருவதால் மழை காலங்களில் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் அடுத்த பொம்மசமுத்திரம் ஊராட்சி பெருமாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 52 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் இன்றி ஒரு ஆசிரியர் மட்டுமே கடந்த 18 மாதங்களுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் அந்த ஆசிரியரும் தற்போது மருத்துவ விடுப்பில் சென்று விட்டார். இதையடுத்து கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இந்த பள்ளிக்கு தற்காலிகமாக 2 ஆசிரியர்களை நியமித்து தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டிருந்தார். அதிலும் ஒரு ஆசிரியர் கடந்த 4 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆசிரியர்கள் இன்றி மாணவர்கள் தவிப்பதாக கூறி இன்று பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பெற்றோருடன் பள்ளியின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:- இந்த பள்ளிக்கு என்று நியமிக்கப்படும் ஆசிரியர்கள் குறைந்தது ஒரு ஆண்டுக்காவது மாற்றப்படாமல் இருக்க வேண்டும். அப்போது தான் மாணவர்களின் கல்வி பாதுகாக்கப்படும். அடிக்கடி ஆசிரியர்கள் மாற்றப்படுவதாலும் நிரந்தரமாக ஆசிரியர் இல்லாததாலும் மாணவர்களின் மனநிலை பாதிப்புக்குள்ளாகிறது. அதோடு மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விகுறியாக உள்ளது. அதேபோல் பள்ளிக்கென புதிதாக கான்கிரீட் கட்டிடம் கட்டிதர வேண்டும். தற்போது ஓட்டு கட்டிடத்தில் பள்ளி இயங்கி வருவதால் மழை காலங்களில் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

    மேலும் பள்ளிவளாகத்தை சுற்றிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் உடனடியாக தேவையான ஆசிரியர்களை நியமித்து மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது பற்றி தெரியவந்ததும் நாமக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • பூவேஷை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன். ஆட்டோ டிரைவர்.

    இவர் ஈரோட்டில் ஒரு திருமண மண்டபத்திற்கு அலங்காரம் செய்வதற்காக அலங்காரப் பொருட்களை சரக்கு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கபிலர்மலை அருகே சிறுகிணத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரது மகன் சிவநாதன் (வயது20.), கபிலர்மலை அருகே உள்ள கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சிவா (வயது19), அதே பகுதியைச் சேர்ந்த பூவேஷ், வெங்கரைப் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோரை சரக்கு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு ஈரோடு பகுதிக்கு சென்றார்.

    பின்னர் திருமண மண்டபத்தில் அலங்காரம் செய்துவிட்டு மீண்டும் கபிலர்மலை வருவதற்காக ஜேடர்பாளையம் வந்து ஜேடர்பாளையத்திலிருந்து பரமத்தி செல்லும் சாலையில் நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது ஜேடர்பாளையம் அருகே தண்ணீர் பந்தல் என்ற பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது பரமத்தியில் இருந்து ஜேடர்பாளையம் நோக்கி அதிவேகமாக வந்த லாரியும், சரக்கு ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்தானது.

    இதில் சரக்கு ஆட்டோவில் இருந்த சிவநாதன், சிவா ஆகியோருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்தனர். அதேபோல் பூவேஷ், ரமேஷ், ஆட்டோ டிரைவர் சாமிநாதன் ஆகிய 3 பேருக்கும் தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தில்இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிவநாதன் மற்றும் சிவா, பூவேஷ், ரமேஷ், சாமிநாதன் ஆகிய 5 பேரையும் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிவநாதன் மற்றும் சிவா ஆகிய இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அதேபோல் பூவேஷ், ரமேஷ், சாமிநாதன் ஆகிய 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பூவேஷை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து ரமேஷ், சாமிநாதன் ஆகிய 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவநாதன் மற்றும் சிவா, பூவேஷ் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆற்றின் கரைப்பகுதியில் 3 பேரின் உடைகள் மற்றும் செல்போன், அவர்கள் அணிந்திருந்த செருப்புகள் மட்டும் இருந்தது.
    • ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பிலிக்கல்பாளையம் நகப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ராஜ். இவரது மகன் வினித் (20). இவர் குமாரபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவரது நண்பர்களான தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மகன் நந்தகுமார்(21) மற்றும் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த ஷேக் பெசருல்லி சாகிப் ஆகிய இருவரும் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தனர்.

    நேற்று வினித் வீட்டிற்கு அவரது நண்பர்களான நந்தகுமார், ஷேக் பெருசல்லி சாகிப் ஆகியோர் வந்துள்ளனர். பின்னர் மாலை சுமார் 3 மணியளவில் நகப்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றிற்கு நண்பர்கள் 3 பேரும் குளிக்க சென்றுள்ளனர். இரவு 7 மணி ஆகியும் வீட்டிற்கு வராததால் வினித்தின் பெற்றோர் காவிரி ஆற்று பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது ஆற்றின் கரைப்பகுதியில் 3 பேரின் உடைகள் மற்றும் செல்போன், அவர்கள் அணிந்திருந்த செருப்புகள் மட்டும் இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் ஜேடர்பாளையம் போலீசார் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ராஜவேல், ஜெர்மையா அருள் பிரகாஷ், செல்வம், கார்த்திகேயன், பூபதி, சரவணகுமார், சரவண கணேஷ் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் காணாமல் போன 3 கல்லூரி மாணவர்களையும் காவிரி ஆற்றில் மீன்பிடி படகுமூலம் தேடினர்.

    இரவு 11 மணி வரை தேடி பார்த்தனர். இரவு இருள் சூழ்ந்ததன் காரணமாக தண்ணீரில் மாயமான மாணவர்களை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து 11 மணியுடன் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை 2-வது நாளாக நாமக்கல் தீயணைப்பு வீரர்கள் நகப்பாளையம் காவிரி ஆற்றுக்கு வந்து மீன்பிடி படகு மூலம் காவிரி ஆற்று தண்ணீரில் மூழ்கி காணாமல் போன 3 பொறியியல் கல்லூரி மாணவர்களை தொடர்ந்து தேடினர்.

    அப்போது வட்டப்பாறை என்ற பகுதியில் பாறை இடுக்கில் இருந்து மாணவர் வினித் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவரது உடலை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். தொடர்ந்து மேலும் நந்தகுமார், ஷேக் பெசருல்லி சாகிப் ஆகிய 2 கல்லூரி மாணவர்களின் உடல்களையும் மீட்டனர். அவர்களின் உடல்களை பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புகாரின்பேரில் மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.
    • போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் சவுதாபுரம் ஓலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 23). வெல்டிங் தொழிலாளி. இவர் காளிப்பட்டி சின்ன பூசாரி காடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டு அவரை வெளியூருக்கு அழைத்து சென்றார்.

    இது குறித்த புகாரின்பேரில் மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பிரகாஷை நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

    ×