என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
சர்வதேச எமோஜி தினத்தை முன்னிட்டு ஆப்பிள் நிறுவனம் 70-க்கும் அதிகமான புதிய எமோஜிக்களை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. #WorldEmojiDay
சர்வதேச எமோஜி தினத்தை கொண்டாடும் வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச் மற்றும் மேக் சாதனங்களில் 70 புதிய எமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த ஆண்டிற்குள் 70 புதிய எமோஜிக்களுக்கான மென்பொருள் அப்டேட் வெளியிடப்படும் என ஆப்பிள் அறிவித்துள்ளது. புதிய எமோஜிக்கள் யுனிகோட் 11.0 சார்ந்த உருவங்களை சப்போர்ட் செய்கிறது. புதிய எமோஜிக்களில் தலைமுடி சார்ந்த அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மக்களுக்கு சிவப்பு நிறம், சாம்பல் நிறம் மற்றும் சுறுள் வகை தலைமுடி, சொட்டை தலை சார்ந்த புதிய எமோஜி, சிரிக்கும் முகம் கொண்ட கோல்டு, பார்டி, ப்ளீடிங் முகம் கொண்ட எமோஜி வழங்கப்பட இருக்கிறது. இதுதவிர பலவகையான விலங்கு எமோஜிக்கள், புதிய வகை உணவு எமோஜிக்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இத்துடன் விளையாட்டு, சின்னங்கள் மற்றும் பல்வேறு வகையான புதிய எமோஜிக்கள், சூப்பர் ஹீரோ எமோஜி, சாஃப்ட்பால், நசார் அமுலெட் மற்றும் இன்ஃபினிட்டி சின்னம் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது. புதிய எமோஜிக்கள் பல்வேறு ஆப்பிள் சாதனங்களுக்கு ஐ.ஓ.எஸ். 12 மென்பொருளில் வழங்கப்படுகிறது. #WorldEmojiDay #Apple
மொபைல் போன் பயன்படுத்துவோரை அதிகம் பாதிக்கும் ஸ்பேம் அழைப்புகளை தவிர்க்கச் செய்யும் கூகுள் ஆப் அம்சம் அறிமுகமாகியுள்ளது. #Google #phone
மொபைல் போன் பயன்படுத்துவோரை கடந்த சில ஆண்டுகளாக அதிகம் பாதிக்கும் விஷயமாக தேவையற்ற மற்றும் விளம்பர அழைப்புகள் (ஸ்பேம்) இருக்கின்றன. இவற்றை தவிர்க்க பல்வேறு மூன்றாம் தரப்பு செயலிகள் கிடைக்கும் நிலையில், இவை அத்தகைய சிறப்பானதாக இல்லை என்ற குற்றச்சாட்டை பெரும்பாலானோர் தெரிவிக்கின்றனர்.
ஸ்பேம் அழைப்புகளை தவிர்க்க செய்ய கூகுள் புதிய அம்சத்தை வழங்குகிறது. முன்னதாக ஏப்ரல் மாதத்தில் கூகுள் போன் ஆப் பீட்டா பதிப்பில் ஸ்பேம் அழைப்புகளை கண்டறியும் அம்சம் சோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் போன் ஆப் சப்போர்ட் பக்கத்தில் பயனர்கள் ஸ்பேம் அழைப்புகளை தவிர்க்க செய்யும் மாற்றங்களை அப்டேட் செய்திருக்கிறது.
காலர் ஐடி மற்றும் ஸ்பேம் ப்ரோடெக்ஷன் என அழைக்கப்படும் இந்த அம்சம் தானாகவே ஸ்பேம் அழைப்புகளை கட்டுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. போன் ஆப் தானாகவே ஸ்பேம் அழைப்புகளை வாய்ஸ்மெயிலுக்கு அனுப்பிவிடும்.

“கூகுள் போன் செயலியில் காலர் ஐடி மற்றும் ஸ்பேம் ப்ரோடெக்ஷன் ஆன் செய்யப்பட்டு இருந்தால், உங்களுக்கு அழைப்பு விடுப்பவர்களின் விவரங்களை பார்க்க முடியும். இதில் அழைப்புகளை மேற்கொள்வோர் உங்களது கான்டாக்ட் இல் இல்லாத வியாபார மையங்கள் மற்றும் ஸ்பேம் அழைப்புகள் குறித்து எச்சரிக்கை செய்யும்” என கூகுள் சப்போர்ட் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அம்சத்தை ஆனஅ செய்ய செட்டிங்ஸ் சென்று Caller ID & spam ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். ஒருவேளை ஸ்பேம் அழைப்புகளால் உங்களது போன் ரிங் ஆக வேண்டம் எனில் Filter suspected spam calls ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த அம்சத்தை தேர்வு செய்வது ஒவ்வொருத்தரின் தனிப்பட்ட விருப்பம் ஆகும்.
மொபைலுக்கு வரும் ஸ்பேம் அழைப்புகளை தற்சமயம் போன் ஆப் சிவப்பு நிற ஸ்கிரீன் மூலம் எச்சரிக்கை செய்கிறது. புதிய அம்சம் எந்தளவு சிறப்பானதாக இருக்கும் என்றும் இது எவ்வாறு இயங்கும் என்பது குறித்த விவரங்கள் அறியப்படவில்லை. #Google #phone #Apps
ட்விட்டர் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றம் காரணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ட்விட்டர் ஃபாளோவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. #TwitterPurge
ட்விட்டரில் லாக் செய்யப்பட்ட கணக்குகள் முடக்கப்படுவதால் டொனால்டு டிரம்ப் மற்றும் பராக் ஒபாமா ஆகியோரை பின்தொடர்வோர் (ஃபாளோவர்கள்) எண்ணிக்கை முறையே சுமார் ஒரு லட்சம் மற்றும் நான்கு லட்சம் வரை குறைந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் போலி தகவல்கள், வதந்திகள் மற்றும் தவறான தகவல்கள் அதிகம் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில் பல்வேறு நிறுவனங்களும் இவற்றை எதிர்கொள்ள அதிரடி முடிவுகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் ட்விட்டரில் லாக் செய்யப்பட்ட ஐ.டி.க்கள் முடக்கப்படுகின்றன.
லாக் செய்யப்பட்ட அக்கவுன்ட்களை முடக்குவதால் ட்விட்டரில் அரசியல் தலைவர்கள் ஃபாளோவர்களின் எண்ணிக்கை குறைய துவங்கியிருக்கிறது. உலகளவில் பல லட்சம் கணக்குகள் முடக்கப்படுவதால் இவ்வாறு ஃபாளோவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
"புதிய நடவடிக்கை பலருக்கு பாதகமாக இருந்தாலும், இதுபோன்ற முடிவுகளால் பொதுப்படை கருத்துக்களை விவாதிக்க ட்விட்டர் அதிக நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்கும்," என ட்விட்டர் நிறுவன சட்ட வல்லுநர், திட்டம் மற்றும் பாதுகாப்பு துறை தலைவர் விஜாயா கடே தனது வலைதளத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
லாக் செய்யப்பட்ட அக்கவுன்ட்கள் பெரும்பாலும் மக்களால் உருவாக்கப்படுவதால், இது ஸ்பேம் அல்லது ரோபோட்களாக இருக்க வாய்ப்புகள் குறைவு தான். ட்விட்டர் பயன்பாட்டில் அதிகப்படியான திடீர் மாற்றங்களை கவனிக்கும் பட்சத்தில் இதுபோன்ற அக்கவுன்ட்களை ட்விட்டர் கண்டறிந்து கொள்ளும்.

கோப்பு படம்
தற்போதைய நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்பதால், ட்விட்டர் ஃபாளோவர்கள் எண்ணிக்கையில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்படலாம் என ட்விட்டர் தெரிவித்துள்ளது.
முன்னதாக இதுகுறித்து வெளியான தகவல்களில் கடந்த சில மாதங்களில் ட்விட்டர் பல லட்சம் கணக்குகளை முடக்கி வருகிறது, இதனால் மாதாந்திர ட்விட்டர் பயனர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதத்தில் மட்டும் ஏழு கோடி கணக்குகளை ட்விட்டர் முடக்கியதைத் தொடர்ந்து ஜூலை மாதத்திலும் கணக்குகளை முடக்கும் நடவடிக்கை தொடரும் என கூறப்படுகிறது. ட்விட்டர் தலைமை நிதி அலுவலர் நெட் சீகல் இந்த நடவடிக்கை காரணமாக ட்விட்டர் பயனரின் எண்ணிக்கை பாதிக்கப்படாது என ட்வீட் செய்திருக்கிறார்.
தற்சமயம் ட்விட்டர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 33 கோடிகளாக இருக்கின்றன. இது குறித்து சீகல் மேலும் கூறும் போது, "ட்விட்டரில் சைன்-அப் செய்து மிகவும் குறைந்த எண்ணிக்கையில் லாக்-இன் செய்தோ அல்லது 30 நாட்களுக்கும் அதிகமாக பயன்படுத்தாமல் இருக்கும், எங்களது பட்டியலில் இல்லாத கணக்குகளை நாங்கள் முடக்குகிறோம்," என தெரிவித்திருக்கிறார்.
"ஒருவேளை ஏழு கோடி பேரின் கணக்குகளை ட்விட்டரில் இருந்து முடக்கியிருந்தால், அதனை நாங்களாகவே நேரடியாக உங்களுக்கு தெரிவிப்போம்" என சீகல் தனது மற்றொரு ட்வீட்-இல் குறிப்பிட்டிருக்கிறார்.
தகவல் பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பிரிட்டன் தகவல் ஆணையம் அபராதம் விதிக்க உள்ளது. #Facebook #databreaches
கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடன் இணைந்து பல லட்சம் பயனர்களின் தகவல்களை சட்ட விரோதமாக பயன்படுத்த அனுமதியளித்ததாக ஃபேஸ்புக் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சட்ட வல்லுநர்கள் முன் ஆஜராகி ஃபேஸ்புக் பயனர் விவரங்கள் எவ்வாறு கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகாவிற்கு வழங்கப்பட்டது குறித்து அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.
அரசியல் பிரச்சாரங்களில் தகவல்கள் பயன்படுத்தப்பட்டது குறித்த விசாரணையை தொடர்ந்து ஃபேஸ்புக் மீது 5,00,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.4.5 கோடி) அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட இருப்பதாக பிரிட்டன் தகவல் ஆணையர் எலிசபெத் டென்ஹாம் தெரிவித்து இருக்கிறார்.
மக்களின் தகவல்களை பாதுகாக்க ஃபேஸ்புக் தவறவிட்டதாகவும், தகவல் பயன்பாடு மற்றும் மற்றவர்கள் எவ்வாறு தகவல்களை பெறுகின்றனர் என்பது குறித்து வெளிப்படையான தகவல்களை வழங்கவில்லை எனவும் டென்ஹாம் தெரிவித்திருக்கிறார்.

கோப்பு படம்
“சமூக வலைதளத்தின் குறிப்பிட்ட பகுதி பயனர்களை, புதுவித தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிரச்சார நிறுவனங்களை வாக்காளர்களிடம் தொடர்பு கொள்ள வைக்கின்றன. எனினும், இதுபோன்ற வழிமுறைகள் சட்டத்திற்கு எதிரானது,” என டென்ஹாம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எட்டப்படும் முன் ஃபேஸ்புக் பதில் அளிக்க முடியும். அந்த வகையில் பிரிட்டன் தகவல் ஆணையரின் அறிக்கையில் உள்ள அம்சங்களை ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் இதற்கு பதில் அளிப்பதாகவும் ஃபேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் இதர நாட்டின் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஒத்துழைப்பை போன்றே பிரிட்டன் தகவல் ஆணையத்துக்கும் வழங்குவோம்.” என ஃபேஸ்புக் நிறுவன மூத்த பாதுகாப்பு அலுவலர் எரின் எகான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார். #Facebook #databreaches
மத்திய டெலிகாம் துறை வழங்கியிருக்கும் ஒற்றை அனுமதி பாரதி ஏர்டெல் நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைய மத்திய டெலிகாம் துறை அனுமதி அளித்திருக்கிறது. டெலிகாம் துறையில் மிகப்பெரிய ஒப்பந்தமாக பார்க்கப்படும் நிலையில், பாரதி ஏர்டெல் நிறுவனம் முதலிடத்தை இழக்க இருக்கிறது.
கடந்த 15 ஆண்டுகளாக டெலிகாம் சந்தையில் முதலிடத்தில் இருக்கும் பாரதி ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா இணையும் பட்சத்தில் முதலிடத்தை இழக்கலாம் என கூறப்படுகிறது. மார்ச் 2017-ம் ஆண்டு இரண்டு நிறுவனங்களிடையேயான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் டெலிகாம் துறை விதிமுறைகளுடன் இதற்கான ஒப்புதலை வழங்கி இருக்கிறது.
இருநிறுவனங்களின் ஒப்பந்தத்திற்கான அனுமதியளிக்க ரூ.7268 கோடி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஐடியா நிறுவனத்தின் ஒருமுறை ஸ்பெக்டரம் கட்டண தொகை வங்கி உத்தரவாதமாக ரூ.3342 கோடியும், ஏலம் விடப்படாத வோடபோன் நிறுவன சந்தை கட்டணம் ரூ.3,926 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
வங்கி உத்தரவாத தொகையை ஐடியா செல்லுலார் எதிர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக டெலினார் ஐடியா நிறுவனத்தை பாரதி ஏர்டெல் கைப்பற்றும் போதும் இதேபோன்ற சூழல் ஏற்பட்டது. ஐடியா மற்றும் வோடபோன் சார்பில் இந்த விவகாரம் குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. சட்ட ரீதியிலான நகர்வுகள் மற்றும் மத்திய டெலிகாம் துறை நடவடிக்கைகளின் காரணமாக இருநிறுவன இணைப்பு மேலும் தாமதம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோப்பு படம்
இரண்டு நிறுவனங்களும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தும் பட்சத்தில் மத்திய டெலிகாம் துறை வோடபோன் இந்தியா உரிமம் மற்றும் வோடபோன் மொபைல் சர்வீசஸ் லிமிட்டெட் உரிமங்களை ஐடியா செல்லுலாருக்கு மாற்றும் பணிகளை துவங்கும். இவ்வாறு நடைபெறும் பட்சத்தில் இருநிறுவனங்களின் இணைப்பு நிறைவுறும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.
மற்ற விதிமுறைகளை பொருத்த வரை டெலிகாம் துறை வைத்திருக்கும் வோடபோனின் வங்கி உத்தரவாத தொகையான ரூ.6452 கோடியை ஐடியா தன்வசம் மாற்ற வேண்டும். தற்சமயம் டெலிகாம் துறையால் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் இறுதி முடிவு எட்டப்படும் பட்சத்தில், இருநிறுவனங்கள் இணைப்புக்கு பின் உரிமம் வைத்திருப்பவர் என்ற முறையில் ஐடியா நிறுவனம் வோடபோனின் ஒருமுறை ஸ்பெக்ட்ரம் கட்டணத்தை செலுத்த ஒப்புக் கொள்வதாக உறுதியளிக்க வேண்டும்.
இருநிறுவனங்கள் இணைப்பு மூலம் வோடபோன் ஐடியா லிமிட்டெட் என்ற புதிய நிறுவனம் உருவாகும், இந்நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்களால் ஏற்பட்டு இருக்கும் போட்டியை எதிர்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனித்தனியே ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் இணைந்து ஜியோ மற்றும் ஏர்டெல் ஏற்படுத்தும் போட்டியை எதிர்கொள்ள முடியாத சூழலில் பயனர்கள் மற்றும் லாபம் உள்ளிட்டவற்றை இழந்து வருகின்றன.
வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைந்து வருவாய் சந்தையில் 37.5% பங்குகளையும், வாடிக்கையாளர்கள் சந்தையில் 39% பங்குகளுடன் டெலிகாம் சந்தையில் தனிப்பெரும் நிறுவனமாக உருவெடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இந்த அம்சம் குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் அதிகளவு பரப்பப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம் வாட்ஸ்அப் செயலியில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
வாட்ஸ்அப் சோதனை செய்யும் புதிய அம்சம் அதன் பயனர்களை போலி செய்திகள் குறித்து எச்சரிக்கை செய்யும். வாட்ஸ்அப் க்ரூப்களில் அதிகம் பரப்பப்படும் குறுந்தகவல்கள் போலியானதா என்பது குறித்து இந்த அம்சம் பயனர்களுக்கு எச்சரிக்கை செய்யும்.
மேலும் வாட்ஸ்அப்-இல் அனுப்பப்படும் குறுந்தகவல்களில் வலைத்தள முகவரி கொண்டு வலைத்தளம் போலியானதா என்பதை வாட்ஸ்அப் தானாக கண்டறியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் சஸ்பீஷியஸ் லின்க் (Suspicious Link) என அழைக்கப்படுகிறது.

சஸ்பீஷியஸ் லின்க் அம்சம் எப்படி உதவும்?
இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டதும், வாட்ஸ்அப்-இல் மற்றவர்களிடம் இருந்து உங்களுக்கு வரும் வலைத்தள முகவரியை வாட்ஸ்அப் பின்னணியில் சோதனை செய்யும். சோதனையில் ஏதேனும் கோளாறு இருக்கும் பட்சத்தில் வாட்ஸ்அப் பயனருக்கு எச்சரிக்கை செய்யும். “வாட்ஸ்அப் ஏதேனும் போலி வலைத்தள லின்க்-களை கண்டறிந்தால், குறிப்பிட்ட குறுந்தகவல் சிவப்பு நிறத்தில் குறியிடப்படும்,” என WaBetaInfo தெரிவித்து இருக்கிறது.
சிவப்பு நிற குறியீடு கொண்டு பயனர்கள் குறிப்பிட்ட வலைத்தளம் போலியானதா, அதில் இருந்து மற்ற போலி வலைத்தளங்களுக்கு ரீடைரக்ட் செய்யப்படும் என்பதை பயனர்கள் புரிந்து கொள்ள முடியும். சில சமயங்களில் மூன்றாம் தரப்பு லின்க்-களும் மால்வேர் நிறைந்த வலைத்தளத்துக்கான முகவரியை (லின்க்) அனுப்பலாம்.
வாட்ஸ்அப் பீட்டா 2.18.204 வெர்ஷனில் காணப்பட்டு இருக்கும் இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலங்களில் போலி செய்திகளை முடக்கும் பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டு வந்தது குறி்ப்பிடத்தக்கது.

இதுவரை போலி செய்திகளை முடக்க வாட்ஸ்அப் மேற்கொண்ட நடவடிக்கைகள்:
- வாட்ஸ்அப் செயலியில் பயனர்களை பிளாக் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனருக்கு அறிமுகம் இல்லாதவர்களை வாட்ஸ்அப்-இல் பிளாக் செய்ய முடியும்.
- க்ரூப்களில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் க்ரூப்களில் சேர்க்கச் செய்யும் வசதி முடக்கப்பட்டுள்ளது.
- குறிப்பிட்ட க்ரூப்களில் யார் யார் தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதை க்ரூப் அட்மின்களே முடிவு செய்ய முடியும்.
- க்ரூப் அட்மின்களை டீமோட் (Demote) செய்யும் வசதி. இந்த வசதியை கொண்டு ஏற்கனவே க்ரூப் அட்மினாக இருக்கும் ஒருவரை க்ரூப் உறுப்பினராக மாற்ற முடியும்.
- ஃபார்வேர்டெட் (Forwarded) லேபல் அம்சம் கொண்டு பயனர்கள் தங்களுக்கு ஃபார்வேர்டு செய்யப்படும் குறுந்தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
புகைப்படம்: நன்றி WABetaInfo
உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்துள்ளது. ஆய்வு குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
உலகில் தொழில்நுட்பங்களின் ஆதிக்கம் மெல்ல நம் வாழ்வியலை மாற்ற துவங்கியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் உலக தொழில்நுட்ப சந்தையில் வெளியான பல்வேறு சாதனங்கள் நம் பணியை சுலபமாக்கும் என்றும் நேரத்தை மிச்சம் செய்யும் என்ற போர்வையில் நம் பழக்கவழக்கங்களை அடியோடு மாற்றிவிட்டன, சில இடங்களில் மெல்ல மாற்றி வருகின்றன.
இந்தியாவில் விலை குறைவாக கிடைக்கும் அனைத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்திருக்கும் நிலையில், வியாபார மையங்கள் மற்றும் பெரும் நிறுவனங்களும் அறிந்து வைத்திருப்பதில் ஆச்சரியம் இருக்க முடியாது. அந்த வகையில் டிஜிட்டல் உலகில் விலை குறைவாகவோ அல்லது எளிதில் அனைவராலும் வாங்கக்கூடியதாகவும் வெளியிடப்படும் சாதனங்கள் நம் பயன்பாடுகளையும் கடந்து விற்பனையாகி வருகிறது.
இவ்வாறு நம் தகவல் பரிமாற்றத்துக்கு அவசியமானதாக கண்டறியப்பட்ட தொலைபேசிகள், மொபைல் போன்களாகவும் பின் ஸ்மார்ட்போன், டேப்லெட் என உருவெடுத்து இன்று தகவல் பரிமாற்றத்தை கடந்து பல்வேறு பயன்களை இவை வழங்கி வருகின்றன. இந்தியாவில் மலிவு விலையில் துவங்கி அனைவருக்கும் ஏற்ற விலையில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்த ஆய்வை சர்வதேச டிஜிட்டல் தரவு விநியோக தளமான லைம்லைட் நெட்வொர்க்ஸ் நடத்தியது. 2018-இல் டிஜிட்டல் வாழ்கைமுறையின் நிலை (The State of Digital Lifestyles - 2018) என்ற தலைப்பில் உலகம் முழுக்க நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 48% பேர் மொபைல் போன்களின் அடிமைகளாகி விட்டனர் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்திருக்கிறது.

கோப்பு படம்
உலக நாடுகளில் டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையானவர்கள் பட்டியலில் மலேசியா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. உலகின் பத்து நாடுகளில் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவோரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்து இருக்கிறது.
இந்தியர்கள் அதிகம் சார்ந்து இருக்கும் டிஜிட்டல் சாதனங்களில் லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் இரண்டாவது இடம் பிடித்து இருக்கின்றது. ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 45% பேர் இந்த சாதனம் இன்றி ஒரு நாள் கூட இருக்க முடியாது என பதில் அளித்துள்ளனர். இது சர்வதேச அளவின் 33% விட 12 சதவிகிதம் அதிகம் ஆகும்.
ஆய்வில் கலந்து கொண்ட இந்தியர்களில் 90% பேர் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் தங்களது வாழ்வில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது. அனைத்து வித டிஜிட்டல் தரவுகளையும் அதிகம் பயன்படுத்துவோர் பட்டியலில் உலகின் மற்ற நாடுகளை விட இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தி வருவதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியர்களில் 75% பேர் வாரத்தில் ஒருமுறையேனும் இசையை ஸ்ட்ரீம் செய்தோ அல்லது டவுன்லோடு செய்தோ பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். இதுவும் உலகின் மற்ற நாடுகளை விட அதிகம் என லைம்லைட் தெரிவித்துள்ளது. இத்துடன் திரைப்படங்களை டவுன்லோடு செய்து அவற்றை ஆஃப்லைனில் பார்ப்பதிலும் இந்தியர்கள் முதன்மையாக இருக்கின்றனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியர்கள் 12 சதவிகிதம் அதிகமாக திரைப்படங்களை பார்த்து வருகின்றனர்.
புகைப்படம்: நன்றி PIXABAY
கூகுள் டூப்லெக்ஸ் செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் தகவல் பரிமாற்ற தொழில்நுட்பம் கால் சென்டர் மையங்களில் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூகுள் IO 2018 நிகழ்வில் கூகுள் டூப்லெக்ஸ் எனும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தகவல் பரிமாற்றம் செய்யும் மென்பொருள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த மென்பொருள் பயன்படுத்துவோரின் சார்பாக மற்றவர்களுக்கு அழைப்பை மேற்கொண்டு முன்பதிவு செய்யும்.
மென்பொருளின் பொது டெஸ்டிங் முறை இந்த ஆண்டு கோடை காலத்தில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கூகுள் டூப்லெக்ஸ் மென்பொருள் கால் சென்டர்களிலும் பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
பெயருக்கு ஏற்றார்போல் டிஜிட்டல் அசிஸ்டன்ட் உதவியோடு டூப்லெக்ஸ் தகவல் பரிமாற்றம் செய்கிறது. மே மாதம் நடைபெற்ற டெவலப்பர்கள் மாநாட்டில் கூகுள் டூப்லெக்ஸ் எவ்வாறு முன்பதிவுகளை செய்யும் என்பது விளக்கப்பட்டது. இதில் மென்பொருள் அதன் பயனருக்கு பதி்ல் அழைப்பை மேற்கொண்டு முன்பதிவு செய்து அனைவரையும் வியப்படைய செய்தது. அறிமுகத்தின் போது சர்ச்சைக்குரியதாக தெரிந்தாலும், பயனர்களை கவர தவறவில்லை என்றே கூற முடியும்.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சில பெரிய நிறுவனங்கள் தங்களது அலுவலகங்கள் (கால் சென்டர்) கூகுள் டூப்லெக்ஸ் மென்பொருளை சோதனை செய்ய துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. டூப்லெக்ஸ் மென்பொருள் மூலம் கால் சென்டர்களில் மனிதர்கள் செய்யும் பணியை முழுமையாக எடுத்துச் செய்ய முடியும்.
கூகுள் IO 2018 நிகழ்வில் டூப்லெக்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட போது பயனரின் நேரத்தை மிச்சப்படுத்தும் என எளிமையாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த மென்பொருள் பெரும் நிறுவனங்களில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றே தெரிகிறது. கால் சென்டர்களில் பயன்படுத்தப்படுவது குறித்த தகவல் வெளியானதும், கூகுள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் டூப்லெக்ஸ் மென்பொருள் மூலம் பயனர் சார்ந்த செயலிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மான்சூன் ஹங்காமா என்ற பெயரில் புதிய சலுகையை அறிவித்திருக்கிறார். இதில் பயனர்கள் ஜியோபோனினை ரூ.501 விலையில் பெற முடியும்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வழங்கினார். ஜியோபோன் 2, ஜியோ ஜிகாஃபைபர் அறிவிப்புகளுடன் ஜியோபோன் சார்ந்த தகவல்களையும் அவர் வெளியிட்டார்.
கடந்த ஆண்டு ஜியோ அறிமுகம் செய்த ஜியோபோன் வாங்குவோருக்கு மான்சூன் ஹங்காமா என்ற பெயரில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் கீழ் பயனர்கள் ரூ.501 மட்டும் செலுத்தி ஜியோபோன் பெற முடியும். பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் ஃபீச்சர்போனினை வழங்கி, புதிய ஜியோபோனுக்கு ரூ.501 மட்டும் செலுத்தி வாங்கிட முடியும். இந்த சலுகை ஜூலை 21, 2018 முதல் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் அறிமுகம் செய்யப்பட்டது. பயனர்கள் ரூ.1,500 செலுத்தி புதிய ஜியோபோன் வாங்கி மூன்று ஆண்டுகளில் அதனை திரும்ப வழங்கி முன்பணத்தை திரும்ப பெற முடியும். அந்த வகையில் ஜியோபோன் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இன்று (ஜுலை 5) நடைபெற்ற ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜியோபோனில் விரைவில் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளை பயன்படுத்துவதற்கான அப்டேட் வழங்கப்பட இருப்பகாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோபோனில் 2.4 இன்ச் QVGA TFT டிஸ்ப்ளே, டூயல்-கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
ஜியோபோனில் 512 எம்பி ரேம், 4 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 4ஜி வோல்ட்இ நெட்வொர்க், ஜியோ செயலிகள் ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறது. இத்துடன் 24 இந்திய மொழிகளில் ஜியோபோன் பயன்படுத்தும் வசதி மற்றும் வாய்ஸ் கமான்ட் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.
ஆப்பிள் வெளியிட்ட ஐபோன் X விளம்பர வீடியோ மீது சந்தேகம் கொண்ட ப்ரிட்டன் விளம்பர ஆணையம், தகுந்த ஆய்வுக்கு பின் ஆப்பிளிடம் சரண்டர் ஆகியிருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் என்றாலே அதன் கேமரா அம்சங்கள், இதர நிறுவன ஸ்மார்ட்போன்களை விட மேம்பட்டு இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. கேமரா சார்ந்த விஷயத்தில் ஆப்பிள் அதிக அக்கறை செலுத்தி வரும் நிலையில், அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன் X மாடலிலும் தலைசிறந்த கேமரா அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருந்தன.
சமீபத்தில் தனது ஐபோன் X மாடலுக்கான விளம்பர வீடியோவினை ஆப்பிள் வெளியிட்டிருந்தது. இதில் ஐபோன் X கொண்டு ஸ்டூடியோ தர போர்டிரெயிட் புகைப்படங்களை படமாக்க முடியும் என ஆப்பிள் குறிப்பிட்டிருந்தது. வீடியோவை பார்த்து அதிர்ந்து போன விளம்பர தர நிர்ணய ஆணையம் ஆப்பிள் ஐபோன் X மாடலின் ஸ்டூடியோ தர போர்டிரெயிட் அம்சத்தை எங்களால் நம்ப முடியாது என பகிரங்கமாக தெரிவித்தது.
ப்ரிட்டனை சேர்ந்த விளம்பர தர நிர்ணய ஆணையம் தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டு இருந்ததை போன்று ஆப்பிள் வெளியிட்டிருக்கும் விளம்பரம் திசைத்திருப்பும் வகையில் இருப்பதாக இரண்டு குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. தற்சமயம் ஆப்பிள் நிறுவனத்துக்கு சாதகமாக புதிய தகவல் பதிவிடப்பட்டு இருக்கிறது.

அதில் ஐபோன் X மாடலின் விளம்பரங்களில் ஆப்பிள் நிறுவனம் ஸ்டூடியோ தர போர்டிரெயிட்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தலாம் என விளம்பர தர நிர்ணய ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி, ஐபோன் X மாடலில் உள்ள 50மில்லிமீட்டர் ஃபோக்கல் லென்ஸ் பிரபல ஸ்டூடியோ போர்டிரெயிட் லென்ஸ் ஆக இருக்கிறது, இத்துடன் லைட்டிங் ஆப்ஷன்களும் ஸ்டூடியோவில் உள்ளதை போன்று வேலை செய்கிறது.
விளம்பர தர நிர்ணய ஆணையம் வெளியிட்டிருக்கும் தகவல்களில், “ஸ்டூடியோ தர புகைப்படங்களை எடுக்கத் தேவையான பல்வேறு எஃபெக்ட்கள், நுட்பங்கள் மற்றும் டூல்கள் இருப்பதை உணர்ந்தோம், எனினும் இவை ஐபோன் X மட்டும் பயன்படுத்துவோருக்கு வழங்கப்படவில்லை. எனினும், அதிக தரமுள்ள புகைப்படங்களை எடுக்கத் தேவையான லைட்டிங் எஃபெக்ட்கள் இருப்பதை அறிந்து கொண்டோம். மேலும் இவை அனைத்தும் ஐபோன் X கேமரா மூலம் எடுக்கப்பட்டது என்பதையும் புரிந்து கொண்டோம்,” என தெரிவித்திருக்கிறது.
ஆப்பிள் வெளியிட்ட விளம்பர வீடியோவை கீழே காணலாம்..,
ஜெர்மன் நாட்டு பொறியியல் மாணவர் தனக்கு ஏற்பட்ட சொந்த அனுபவங்களில் இருந்து ஸ்மார்ட்போனை பாதுகாக்கும் கேஸ் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்.
ஸ்மார்ட்போன்களை வாங்க ஒவ்வொருவத்தரும் பல ஆயிரங்களை செலவிடுகின்றனர். அவை கை தவறி கீழே விழுந்தால் அதன் ஸ்கிரீன் போன்றே அவர்களும் நொருங்கி விடுகின்றனர். ஸ்மார்ட்போனில் தலைசிறந்த கேஸ் மற்றும் ஸ்கிரீன் ப்ரோடெக்டர் போடப்பட்டு இருந்தால், போன் கீழே விழுந்தால் ஏற்படும் பாதிப்பை குறைக்க முடியும்.
இவ்வாறு உங்களின் ஸ்மார்ட்போன் கீழே விழுந்தால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் பணியை மொபைல் ஏர்பேக் முழுமையாக ஏற்று கொண்டு இருக்கிறது. பிலிப் ஃப்ரென்ஸெல் என்ற ஜெர்மன் நாட்டு பொறியியல் மாணவர் பிரத்யேக ஸ்மார்ட்போன் கேஸ் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். இந்த கேஸ் போடப்பட்டு இருந்தால், ஸ்மார்ட்போன் கீழே விழுந்தாலும் பாதிக்கப்படாது.
ஸ்மார்ட்போன் கீழே விழுவதை தானாக அறிந்து கொண்டு கேஸ்-இல் பொருத்தப்பட்டு இருக்கும் ஸ்ப்ரிங்-கள் எட்டுக்கால் பூச்சியின் கால்களை போன்று ஸ்மார்ட்போனின் அனைத்து மூலைகளிலும் விரிந்து கொள்ளும். இதனால் ஸ்மார்ட்போன் தரையில் விழும் முன் கேஸ்-இல் இருக்கும் எட்டு ஸ்ப்ரிங்-கள் போன் நேரடியாக கீழே விழுவதை தவிர்க்கிறது.

இவரது கண்டுபிடிப்புக்கு ஜெர்மன் மெக்கடிரானிக்ஸ் சங்கம் சார்பில் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. தனது ஐபோன் கீழே விழுந்து ஸ்கிரீன் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர் இந்த கேஸ்-ஐ உருவாக்க துவங்கினார். பல்வேறு கட்ட ஆய்வுக்கு பின், போன் கீழே விழுவதை தானாக கண்டறியும் சென்சார்களை ஸ்மார்ட்போன் கேஸ்-இல் பொருத்தினார். போன் கீழே விழுவதை செனசார்கள் அறிந்து கொண்டதும், மெட்டல் ஸ்ப்ரிங்-கள் தானாக விரிந்து கொண்டு போன் பாதிப்படைவதை தவிர்க்கிறது.
ஆக்டிவ் டேம்பிங் என்ற பெயரில் ஆட்கேஸ் (ADcase) என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த பாதுகாப்பு கேஸ்-ஐ ஃப்ரென்ஸெல் காப்புரிமை பெற்றிருக்கிறார். விரைவில் கிக்ஸ்டார்ட்டர் மூலம் இந்த சாதனம் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் தயாரிப்பு பணிகள் துவங்கப்படாத நிலையில், இதன் விலை குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
முதற்கட்டமாக இந்த ஆட்கேஸ் ஐபோன் X, ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் பிளஸ், ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் போன் ஏர்பேக் வீடியோவை கீழே காணலாம்..,
ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் பதிவு செய்திருக்கும் புதிய தொழில்நுட்பத்திற்கான காப்புரிமை விவரங்கள் அனைவரையும் பதற வைக்கிறது.
ஃபேஸ்புக் விளம்பரங்களை வழங்க அந்நிறுவன ஊழியர்கள் யாரும் உங்களின் மொபைல் மைக்ரோபோன் உரையாடல்களை ரகசியமாக கேட்பது கிடையாது. எனினும் இதற்கான சாத்தியக்கூறு இல்லையென நினைக்க வேண்டாம்.
ஃபேஸ்புக் பதிவு செய்திருக்கும் காப்புரிமையில் அந்நிறுவனம் புதிய தொழில்நுட்பத்துக்கு உரிமை கோரியுள்ளது. இந்த தொழில்நுட்பம் பயனர்களின் சாதனங்களை பயன்படுத்தி, அவர்களின் அருகில் உள்ள ஆடியோக்களை பதிவு செய்யும் - இவற்றில் நீங்கள் மற்றவர்களுடன் உரையாடுவது - அல்லது உங்களின் படுக்கை அறையில் உள்ள ஒலி - உள்ளிட்டவற்றை பதிவு செய்து அவற்றை நிறுவனத்துக்கு அனுப்பும்.
ஜூன் 14-ம் தேதி காப்புரிமை விண்ணப்பம் சார்ந்த விவரங்களை மெட்ரோ பதிவிட்டு இருந்தது. இதில் ஃபேஸ்புக் எவ்வாறு உங்களின் மொபைல் போன் மைக்-ஐ தானாக ஆன் செய்து பதிவு செய்கிறது என்ற விவரங்கள் பதிவிடப்பட்டு இருந்தது.
அதன்படி ஃபேஸ்புக் அதிக பிட்ச் கொண்ட ஆடியோ சிக்னல்களை பிராட்கேஸ்ட் தரவுகளில் எம்பெட் செய்யும், இந்த ஒலி மனிதர்களுக்கு கேட்காது. என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிக்னல் உங்களின் மொபைலில் ஆடியோவை பதிவிட்டு, அவற்றை ஃபேஸ்புக்கிற்கு அனுப்பும்.

இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஃபேஸ்புக், இந்த தொழில்நுட்பம் பயனர்களிடத்தில் அமல்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தேவையில்லாத பட்சத்தில் ஏன் இதற்கான காப்புரிமையை பதிவு செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவன பொது ஆலோசகர் ஆலென் லொ மேஷபிள் தளத்துக்கு அளித்திருக்கும் அறிக்கையில், “சில புதிய தொழில்நுட்பங்களுக்கான காப்புரிமைகளை மற்ற நிறுவனங்களுக்கு முன் பதிவு செய்வது வழக்கமான நடைமுறை தான். இதுபோன்ற காப்புரிமைகள் எதிர்கால தொழில்நுட்பம் சார்ந்தவை என்பதோடு, இவை மற்ற நிறுவனங்களால் வணிக மயமாக்க முடியும்," என தெரிவித்திருக்கிறார்.
இதன் மூலம் தற்சமயம் ஃபேஸ்புக் மற்ற நிறுவனங்கள் உங்களின் அழைப்புகள் மற்றும் ஆடியோக்களை பதிவு செய்ய விடாமல் தடுத்து இருக்கிறது.
“இந்த தொழில்நுட்பம் ஃபேஸ்புக்கின் எவ்வித சாதனங்கள் மற்றும் சேவைகளிலும் இதுவரை சேர்க்கப்படவும் இல்லை, சேர்க்கப்படாது" என ஆலென் லொ தெரிவித்திருக்கிறார்.
புகைப்படம்: நன்றி UNITED STATES PATENT APPLICATION






