என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.



    இந்தியாவில் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஐபோன் உற்பத்தி நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஐபோன் உற்பத்தி பணிகள் நிறுத்தி வைக்கப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

    விஸ்ட்ரன் மற்றும் ஃபாக்ஸ்கான் என இரண்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஐபோன் உற்பத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்க வகையில் மத்திய அரசு உத்தரவை அமல்படுத்தும் விதமாக இரு நிறுவனங்களும் ஐபோன் உற்பத்தியை நிறுத்துவதாக கூறப்படுகிறது.

    ஐபோன் XR

    இந்தியாவில் உள்ள அனைத்து ஆலைகளிலும் உற்பத்தி பணிகளை விஸ்ட்ரன் மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் நிறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் உற்பத்தி பணிகள் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. விஸ்ட்ரன் நிறுவன பணிகள் எதுவரை நிறுத்தப்பட்டு இருக்கிறது என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரன் நிறுவனங்கள் இந்தியாவில் ஐபோன் XR மற்றும் ஐபோன் SE மாடல்களை ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி செய்து வருகின்றன.
    வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை எதிர்கொள்ள புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது.



    உலகில் கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், போலி செய்திகள் பரவ வாட்ஸ்அப் தான் காரணமாக கூறப்படுகிறது. ஃபேஸ்புக் தளத்தில் போலி செய்திகளை எதிர்கொள்ள போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

    இந்த நிலையில், வாட்ஸ்அப் போலி செய்திகளை எதிர்கொள்ள புதிய அம்சத்தினை உருவாக்கி வருவதாக தெரிகிறது. வாட்ஸ்அப் தளத்தில் பயனர்கள் பகிரும் ஃபார்வேர்டு மெசேஜ்களை வெரிஃபை செய்யும் வசதி சோதனை செய்யப்படுகிறது. செயலியில் சில க்ளிக்களை மேற்கொண்டால் இந்த அம்சத்தை செயல்படுத்த வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    புதிய அம்சம் ஃபார்வேர்டு செய்யப்படும் குறுந்தகவல்களில் ஏதேனும் தவறான தகவல் உள்ளதா என்பதை பயனர்கள் கண்டறிய வழி செய்கிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இந்த அம்சத்திற்கென மேக்னிஃபையிங் கிளாஸ் பட்டன் ஐகான் வழங்கப்படுகிறது.



    இதனை க்ளிக் செய்யும் போது, வாட்ஸ்அப் சார்பில் இணையத்தில் இதுபற்றி தேட விரும்புகின்றீர்களா? இந்த குறுந்தகவல் கூகுளுக்கு அப்லோடு செய்யப்படும் (“Would you like to search this on the web? This will upload the message to Google,”) என்ற தகவல் பாப் அப் முறையில் காண்பிக்கப்படும்.

    பின் பயனர் “Search Web” அல்லது cancel போன்ற ஆப்ஷன்கள் காணப்படும். இதில் Search Web ஆப்ஷனை க்ளிக் செய்யும் போது குறுந்தகவல் போலியானது என்றால் அதுபற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

    வாட்ஸ்அப் செயலியில் பகிரப்படும் குறுந்தகவல் பற்றி அதிக விவரங்களை பயனர்கள் அறிந்து கொள்ள தொடர்ந்து புதிய அம்சங்களை உருவாக்க பணியாற்றி வருகிறோம். இந்த அம்சம் தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது. விரைவில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படும் என வாட்ஸ்அப் தெரிவித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சாம்சங், ஒப்போ, விவோ போன்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்து இருக்கின்றன.



    ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களான சாம்சங், ஒப்போ மற்றும் விவோ போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் மொபைல் போன் உற்பத்தியை நிறுத்துவதாக தெரிவித்துள்ளன. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடுமுழுக்க மக்கள் வெளியில் வர கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து உற்பத்தி நிறுத்தம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    அடுத்த அறிவிப்பு வரும் வரை சாம்சங் நிறுவன ஆலைகளில் உற்பத்தி பணிகள் துவங்காது என சாம்சங் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார். 

    விவோ

    சாம்சங்கை பொருத்தவரை ஊழியர்களின் பாதுகாப்பிற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஊழியர்களின் நலம் கருதியும், அவர்களது குடும்பத்தார் கொரோனா மூலம் பாதிக்கப்படாமல் இருக்கவும், அரசு வழிமுறைகளை பின்பற்றும் விதமாக நொய்டா ஆலையின் உற்பத்தி பணிகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்.  

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ ஃபேக்ட்ரியில் பணியாற்றாத ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற கேட்டுக் கொண்டுள்ளது. இதுதவிர எரிக்சன் மற்றும் நொய்டா போன்க நிறுவனங்களில் சமூக இடைவெளி அடிப்படையில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிகிறது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வொர்க் ஃபிரம் ஹோம் சலுகையை அறிவித்து இருக்கிறது.



    பி.எஸ்.என்.எல். மற்றும் ஆக்ட் ஃபைபர்நெட் வொர்க் ஃபிரம் ஹோம் சலுகையை அறிவித்த நிலையில், தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ இதே சலுகையை அறிவித்து இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், மக்களை பாதுகாக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக பணியாட்கள் அனைவரும் வீட்டில் இருந்தே பணியாற்ற கேட்டுக் கொள்ளப்படுகிறது. வீட்டில் இருந்தே பணியாற்றுவோருக்காக பி.எஸ்.என்.எல். தனது லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணைய சேவையை வழங்குவதாக அறிவித்தது. இதை தொடர்ந்து ஆக்ட் ஃபைபர்நெட் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டது. 

    அந்த வரிசையில் தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு வொர்க் ஃபிரம் ஹோம் சலுகையை அறிவித்து உள்ளது. ரூ. 251 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 51 நாட்கள் ஆகும்.

    ரிலையன்ஸ் ஜியோ

    இந்த சலுகையில் டேட்டா தவிர வேறு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை. முன்னதாக ஜியோ நிறுவனம் ரூ. 11, ரூ. 21, ரூ. 51 மற்றும் ரூ. 101 விலையில் 4ஜி வவுச்சர்களின் பலன்களை மாற்றியமைத்து பழைய விலையில் இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது. 

    அந்த வகையில் பயனர்களுக்கு வவுச்சர்களில் முறையே 800 எம்.பி. டேட்டா, 75 நிமிடங்களுக்கு மற்ற நெட்வொர்க் அழைப்புகள், 2 ஜி.பி. டேட்டா 200 நிமிடங்கள் மற்ற நெட்வொர்க் அழைப்புகள், 6 ஜி.பி. டேட்டா 500 நிமிடங்கள் மற்ற நெட்வொர்க் அழைப்புகள், 12 ஜி.பி. டேட்டா 1000 நிமிடங்கள் மற்ற நெட்வொர்க் அழைப்புகள் வழங்கப்படுகிறது.
    இந்திய குடிமக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விவரங்களை வழங்க மத்திய அரசு வாட்ஸ்அப் அக்கவுண்ட் ஒன்றை துவங்கி இருக்கிறது.



    கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி மக்களிடையே நிலவும் அச்சத்தை போக்கும் நோக்கில் மத்திய அரசு வாட்ஸ்அப் செயலியில் அக்கவுண்ட் ஒன்றை துவங்கியிருக்கிறது. சாட்பாட் மூலம் இயங்கும் இந்த அக்கவுண்ட்டிற்கு MyGov Corona Helpdesk என பெயரிடப்பட்டுள்ளது.

    அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் கிடைக்கும் இந்த சேவையை பயன்படுத்த பொதுமக்கள் - 9013151515 என்ற எண்ணை தங்களது மொபைலில் சேமித்துக் கொண்டு MyGov Corona Helpdesk-க்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.

    MyGov Corona Helpdesk

    புதிய சாட்பாட் சேவையானது கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி மக்களிடையே பரவும் போலி தகவல்களை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு தகவல்களை மக்களுக்கு வழங்கும். 

    இந்தியாவில் இதுவரை சுமார் 251 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்து நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
    சியோமி நிறுவனம் தனது Mi 10 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.



    சியோமி நிறுவனம் தனது ஃபிளாக்‌ஷிப் Mi 1- ஸ்மார்ட்போன் இந்தியாவில் மார்ச் 31-ம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்துள்ளது. இதனை சியோமி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனை சியோமி தனது வலைதளம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் நேரலை செய்கிறது. 

    அறிமுக தினத்தன்றே புதிய ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகளும் துவங்க இருப்பதாக சியோமி பிரத்யேக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. மார்ச் 31 முதல் ஏப்ரல் 7 வரையிலான காலக்கட்டத்தில் சியோமி Mi 10 ஸ்மார்ட்போனை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு ரூ. 2500 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    சியோமி Mi 10 இந்திய விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும்,  சியோமி இந்தியா நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெயின் சீனாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டதை விட இந்திய விலைகளில் வித்தியாசமான விலை நிர்ணயம் செய்யப்படும் என தெரிவித்து இருக்கிறார். சீனாவில் Mi 10 விலை இந்திய மதிப்பில் ரூ. 42,400 முதல் துவங்குகிறது.

    சியோமி Mi 10

    சிறப்பம்சங்களை பொருத்தவரை சியோமி Mi 10 ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வளைந்த AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 மோடெம், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11 வழங்கப்பட்டுள்ளது.

    ஸ்மார்ட்போனின் பின்புறம் 3டி கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹை-ரெஸ் ஆடியோ வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 108 எம்.பி. சாம்சங் சென்சார், 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, 20 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4780 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
    ரியல்மி பிராண்டு நார்சோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.



    ரியல்மி பிராண்டு விரைவில் நார்சோ ஸ்மார்ட்போன் சீரிசை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை ரியல்மி புதிய டீசர்களின் மூலம் தெரிவித்து இருக்கிறது.

    ரியல்மி நார்சோ

    புதிய நார்சோ சீரிஸ் அதிக சக்திவாய்ந்ததாக இருக்கும் என்றும் இது ஜெனரேஷன் இசட் பிரிவுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வருவதாக ரியல்மி தெரிவித்துள்ளது. ஏற்கனவே ரியல்மி பிராண்டு ப்ரோ சீரிஸ், எக்ஸ் சீரிஸ், சி சீரிஸ், யு சீரிஸ் உள்ளிட்டவற்றில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது.

    இதுவரை ஆங்கில எழுத்துக்களை தழிவியே ஸ்மார்ட்போன் சீரிஸ் இருந்து வரும் நிலையில், புதிய சீரிஸ் பெயர் வித்தியாசமாக இருக்கிறது. தற்போதைய டீசர்களின் படி புதிய ஸ்மார்ட்போன்கள் வெவ்வேறு நிறங்களில் வெளியாகும் என தெரிகிறது.

    கூகுள் நிறுவனம் தனது யூடியூப் தளத்தில் கொரோனா வைரஸ் பற்றிய போலி வீடியோக்களை நீக்கும் பணிகளை மேற்கொள்கிறது.



    கூகுள் மற்றும் ஆல்ஃபாபெட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல்கள் அடங்கிய வீடியோக்களை யூடியூப் தளத்தில் இருந்து நீக்கி வருவதாக தெரிவித்தார். இதற்கென செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்திருக்கிறார். 

    இதுவரை கொரோனா வைரஸ் பற்றி யூடியூபில் இருந்து ஆயிரக்கணக்கான போலி வீடியோக்களை நீக்கி இருப்பதாக சுந்தர் பிச்சை தனது வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். இத்துடன் மருத்துவ முகக்கவசங்கள் மற்றும் சுவாசக் கருவிகளுக்கான விளம்பரங்களுக்கு கடந்த வாரம் முதல் தற்காலிக தடை விதித்து இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

    கூகுள்

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதாக கூறும் நிரூபிக்கப்படாத வழிமுறைகள் அடங்கிய வீடியோக்களை தொடந்து நீக்கி வருகிறோம். கூகுள் மேப்ஸ் சேவையில் போலி விமர்சனங்கள் உடல்நல மையங்கள் சார்ந்த போலி விவரங்களை நீக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

    தற்சமயம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கக் கோரும் ஐந்து வழிமுறைகளை கூகுள் வலைதளத்தின் முகப்பு பக்கத்தில் அந்நிறுவனம் விளம்பரப்படுத்தி வருகிறது.

    இத்துடன் சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள கூகுள் (Google.org) சார்பில் ஐந்து கோடி டாலர்கள் வழங்கப்படுவதாகவும், அறிவியல், மருத்துவம், கல்வி மற்றும் சிறு வியாபாரங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக சுந்தர் பிச்சை தெரிவித்திருக்கிறார்.
    வோடபோன் நிறுவனம் ரூ. 218 மற்றும் ரூ. 248 விலையில் இரண்டு பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.



    வோடபோன் நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. ரூ. 218 மற்றும் ரூ. 248 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகைகளில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அதிவேக டேட்டா மற்றும் ஜீ5 சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இத்துடன் வோடபோன் பிளே சேவைக்கான சந்தாவும் வழங்கப்படுகிறது. வோடபோன் ரூ. 218 சலுகையில் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், 6 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றன.

    வோடபோன்

    ஏற்கனவே குறிப்பிடப்பட்டு இருப்பதை போன்று ரூ. 999 மதிப்புள்ள ஜீ5 சேவைக்கான சந்தாவும் இந்த சலுகையில் வழங்கப்படுகிறது. இதே போன்று ரூ. 248 சலுகையில் 8 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றன. இதிலும் ஜீ5 மற்றும் வோடபோன் பிளே சந்தா வழங்கப்படுகிறது.

    வோடபோன் ரூ. 218 மற்றும் ரூ. 248 சலுகைகள் தற்சமயம் டெல்லி மற்றும் ஹரியானாவில் மட்டும் வழழங்கப்படுகின்றன. இதே போன்று ஐடியா செல்லுலார் வாடிக்கையாளர்களும் வோடபோன் அறிவித்து இருக்கும் இரண்டு புதிய சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்படுகிறது.
    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    வாட்ஸ்அப் செயலியில் டெலீட் மெசேஜஸ் அம்சம் வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.20.83 மற்றும் 2.20.84 வெர்ஷன்களில் இந்த அம்சம் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த அம்சத்தினை செயல்படுத்தினால் இது சாட்களில் உள்ள குறுந்தகவல்களை அழித்துவிடும். இந்த அம்சம் தானாக டிசேபிள் செய்யப்பட்டு இருக்கும் மேலும் இது பிரைவேட் சாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிகிறது.

    வாட்ஸ்அப் பீட்டா ஸ்கிரீன்ஷாட்

    வாட்ஸ்அப் டெலீட் மெசேஜஸ் அம்சம் முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து விரைவில் இது வாட்ஸ்அப் ஸ்டேபில் வெர்ஷனிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    புதிய அம்சம் பற்றி வெளியாகி இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களில் குறுந்தகவல் அனுப்புவோர், எத்தனை நிமிடங்களுக்கு பின் குறுந்தகவல் அழிய வேண்டும் என்பதை நிர்ணயிக்க முடியும். இதற்கு பயனர்கள் ஒரு மணி நேரத்தில் துவங்கி, 1 வாரம், 1 மாதம் மற்றும் 1 வருடம் வரை தேர்வு செய்து கொள்ளலாம்.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விநியோகம் இந்திய சந்தையில் 55 சதவீதம் உயர்ந்து இருப்பதாக சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    ஐபோன் 11 மற்றும் இதர மாடல்களுக்கு தொடர்ந்து அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. 2020 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத வாக்கில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விநியோகம் 55 சதவீத்ம வளர்ச்சியடைந்து இருப்பதாக சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய சந்தையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபோன் விநியோகம் பாதிக்கப்படவில்லை என்பது இந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஐபோன் விநியோகம் வளர்ச்சியடைந்து இருக்கிறது. மார்ச் மாத நிலவரத்தை ஆய்வு செய்தால் தான் கொரோனா வைரஸ் பாதிப்பின் தாக்கம் பற்றிய விவரங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

    ஐபோன் 11

    2020 ஜனவரி- பிப்ரவரி வாக்கில் இந்திய சந்தையில் அதிகம் விநியோகம் செய்யப்பட்ட மாடல்களில் ஆப்பிள் ஐபோன் 11 மற்றும் ஐபோன் XR உள்ளிட்டவை இருக்கின்றன. ஐபோன் விநியோகத்தில் கடந்த ஆண்டு மத்தியில் அதிகரித்தது. 

    2019 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விநியோகம் 17 சதவீதம் அதிகரித்தது. ஐபோன் விநியோகத்திற்கு ஐபோன் 11 மற்றும் ஐபோன் XR மாடல்களே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தி, விலை குறைப்பு உள்ளிட்டவையும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனம் தனது 2020 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



    ஆப்பிள் நிறுவனம் தனது 31-வது சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு ஜூன் மாதம் ஆன்லைன் முறையில் நடைபெறும் என தெரிவித்துள்ளது. 

    ஆப்பிள் நிறுவனத்தின் மென்பொருள் பிரிவுக்கான மூத்த துணை தலைவர் க்ரியாக் ஃபெட்ரெய்கி டெவலப்பர்கள் நிகழ்வு ஆன்லைன் கீநோட் மற்றும் அமர்வுகளாக நடைபெறும் என தெரிவித்திருக்கிறார். ஆன்லைன் நிகழ்வுக்காக பிரத்யேக வழிமுறை உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு

    2020 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஐ.ஒ.எஸ். 14, மேக் ஒ.எஸ். 10.16, வாட்ச் ஒ.எஸ். 7 மற்றும் டி.வி. ஒ.எஸ். 14 உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. வாட்ச் ஒ.எஸ். 7 தளத்தில் ஸ்லீப் டிராக்கிங், டேக்கிமீட்டர், வாட்ச் ஃபேசை பகி்ர்ந்து கொள்ளும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது.

    2020 சர்வதேச டெவலப்பகள் நிகழ்வில் உலகின் 155 நாடுகளை சேர்ந்த டெவலப்பர்களின் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்கும் கருத்துக்கள் மற்றும் கருவிகள் வழங்கப்படும். ஆப்பிள் நிறுவன டெவலப்பர்கள் பட்டியலில் உலகம் முழுக்க சுமார் 2.3 கோடி பேர் பதிவு பெற்ற டெவலப்பர்களாக இருக்கின்றனர்.

    டெவலப்பர்கள் நிகழ்வு குறித்த கூடுதல் விவரங்கள் ஜூன் மாதத்திற்குள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் என ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது. இதுதவிர ஆப்பிள் டெவலப்பர் ஆப் மற்றும் டெவலப்பர் வலைதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    ×