search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண் துறை"

    • வேளாண்மை பொறியியல் துறை மூலம் ஒரு விவசாயிக்கு பவர்டில்லர் எந்திரம் மானிய விலையில் வழங்கப்பட்டது.
    • முகாமில் விதை சான்று அலுவலர் சந்துரு மற்றும் விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    கடையம் வட்டாரத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2023-2024-ம் ஆண்டு தேர்வாகி உள்ள துப்பாக்குடி பஞ்சாயத்து அம்மன் கோவில் வளாகம், அணைந்த பெருமாள் நாடானூர் பஞ்சாயத்து செல்லபிள்ளையார்குளம் கிராமத்தில் அனைத்து அரசு துறை அலுவலர்களின் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு துப்பாக்குடி பஞ்சாயத்து தலைவர் செண்பகவல்லி ஜெகநாதன், அணைந்த பெருமாள் நாடானூர் பஞ்சாயத்து தலைவர் அழகுதுரை தலைமை தாங்கினர்.

    கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏஞ்சலின் பொன் ராணி முன்னிலை வகித்து பேசினார். துணை வேளாண்மை அலுவலர் சுப்புராம் வரவேற்று பேசினார்.

    ஆர்.வி.எஸ். ஆராய்ச்சி மையம் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் சுகுமார், ஆலங்குளம் விதை சான்று அலுவலர் சந்துரு, உதவி விதை அலுவலர் சேர்மன், வேளாண்மை பொறியியல் துறை பொறியாளர் கருப்பசாமி, கால்நடைத்துறை சார்பில் கால்நடை ஆய்வாளர் கிருஷ்ணவேணி, கிராம நிர்வாக அலுவலர் இசக்கி முத்து, தோட்டக்கலை உதவி அலுவலரும், துப்பாக்குடி நோடல் அதிகாரியுமான கோவிந்தராஜ், வேளாண்மை உதவி அலுவலரும், அணைந்த பெருமாள் நாடானூர் நோடல் அதிகாரியுமான தீபா, தோட்டக்கலை உதவி அலுவலர் திருமலைக்குமார், வேளாண்மை உதவி அலுவலர்கள் கமல்ராஜன், பேச்சியப்பன், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் பொன்ஆசீர் மற்றும் விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் மாரியப்பன் என்ற விவசாயிக்கு பவர்டில்லர் எந்திரம் மானிய விலையில் வழங்கப் பட்டது.

    வி.எஸ்.டி, இயற்கை அக்ரோ நிறுவனங்கள் மூலம் வேளாண் கருவிகள் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் நாகராஜன் செய்திருந்தார்.

    மேலும் கடையம் வட்டாரத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2023-2024-ம் ஆண்டு தேர்வாகி உள்ள மற்ற பஞ்சாயத்துகளான திருமலையப்பபுரம் முதலியார்பட்டி, தெற்கு மடத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு முகாம், பஞ்சாயத்து தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.

    • 9 முதல் 12 மாத வயது உடைய கன்றுகளை மட்டும் நடவு செய்ய வேண்டும்.
    • 45 நாட்கள் கழித்து காய்பறித்தல் நல்லது.

    உடுமலை :

    தென்னை சாகுபடி செழிக்க, செய்ய வேண்டிய வை மற்றும் செய்ய க்கூடாதவை என்னென்ன என்பது குறித்து, வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி விவசாயிகள் செய்ய வேண்டியவை வருமாறு:- தரமான தாய்மரத்தை தேர்வு செய்ய வேண்டும். சரியான பருவத்தில் கன்றுக ளை நட வேண்டும். ஐந்து மாதத்துக்குள் முளைக்காத கன்றுகளை அகற்றி விட வேண்டும். 9 முதல் 12 மாத வயது உடைய கன்றுகளை மட்டும் நடவு செய்ய வேண்டும்.குழிகளின் பக்கவாட்டில் மண்ணை அகற்றி கன்றுகள் வளர, வளர புதிய மண் இட வேண்டும். மழைக்காலத்தில் கன்றின் அடித்தண்டில் ஒட்டி இருக்கும் மண்ணை அகற்ற வேண்டும். சொட்டுநீர் பாசன முறையை பின்பற்றி நீர் வழியாக உரமிடுதல் நல்லது. மண் சோதனை மதிப்பீட்டு அளவுகளை கொண்டு, சரியான, தேவையான அளவு தொழு உரம் மற்றும் பிற உரங்களை இட வேண்டும்.குருத்து அழுகலை தடுக்க சரியான வடிகால் வசதி செய்ய வேண்டும். அடித்தண்டு அழுகலை கட்டுப்படுத்த, சொட்டு நீர் பாசனம் அவசியம். பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கும்போது 45 நாட்கள் கழித்து காய்பறித்தல் நல்லது. நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாட்டுக்கு இயற்கை வழி பொருள்கள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை பயன்படுத்த வேண்டும்.வீரிய ஒட்டு கன்றுகளை நல்ல நீர் வசதியு டன் நன்றாக பராமரித்து வளர்க்க வேண்டும். இன கவர்ச்சி பொறிகளை தோப்பின் ஓரத்திலோ அல்லது வெளியிலோ வைக்க வேண்டும்.

    விவசாயிகள் தவிர்க்க வேண்டியவை :- வீட்டுக்கு அருகில் மாட்டு தொழுவம், குப்பை மேடு பக்கத்தில் மட்டும் பிற வசதியான இடங்களில் வளரும் தென்னை மரங்களை தாய் மரமாக தேர்வு செய்யக்கூடாது. தென்னந்தோப்பை அடிக்கடி உழவு செய்தல் கூடாது.அதிகமான தண்ணீர் பாய்ச்சுவதை தவிர்க்க வேண்டும். பரிந்துரை க்கப்படாத உரங்களை விடக்கூடாது. வேர்கள் மற்றும் தண்டுகளில் காயம் ஏற்படுத்தக் கூடாது. பச்சை இலைகளை வெட்டக்கூடாது. முதிர்ச்சி அடையாத காய்களை, விதை காய்களாக தேர்வு செய்யக்கூடாது.தாழ்வான பகுதிகளில் மழை நேரத்தில் நடவு செய்வதை தவிர்க்க வேண்டும். பரவல் பாசன முறையை பின்பற்றக் கூடாது.இனக்கவர்ச்சி பொறிகளை நேரான சூரிய வெளிச்சத்தில் வைக்கக் கூடாது. குருத்துப் பகுதியில் பரிந்துரைக்கப்படாத பூச்சி கொல்லி மருந்துகளையே அல்லது திரவ நுண்ணுயிர் உரங்களையோ, உயிர் கொல்லியையோ தெளித்தல் கூடாது. 

    • கால்நடைகளுக்கான சிறப்பு நோய் தடுப்பு முகாம்களும் நடைபெற உள்ளது.
    • விவசாய பெருமக்கள் அனைவரும் முகாம்களில் தவறாது கலந்துக்கொண்டு பயனடையலாம்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை - உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, கூட்டுறவுத்துறை, பால்வளத்துறை, கால்நடைத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, ஊரக வளர்ச்சிதுறை, உள்பட பல துறைகள் இணைந்து கிராம பஞ்சாயத்துகளை தன்னிறைவு பெற்ற கிராம பஞ்சாயத்துகளாக மாற்றிட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் தொடர்பாக இன்று, (வியாழக்கிழமை) 89 கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. முகாம்களில் பட்டா மாறுதல், நுண்ணீர் பாசனம் அமைக்க விண்ணப்பம் பெறுதல், சிறு குறு விவசாயி சான்று வழங்குதல், விவசாய கடன் அட்டை வழங்குதல், பயிர்காப்பீடு திட்ட விழிப்புணர்வு, வேளாண் துறை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்ந்த திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது. மேலும் கால்நடைகளுக்கான சிறப்பு நோய் தடுப்பு முகாம்களும் நடைபெற உள்ளது. எனவே விவசாய பெருமக்கள் அனைவரும் இந்த முகாம்களில் தவறாது கலந்துக்கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தன.

    • இலைப் புள்ளியின் உட்புறத்தில் வெளிர் நிறத்தில் இருக்கும்.
    • வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து உரிய விளக்கங்களை பெற்று பயன்பெறலாம்.

    மடத்துக்குளம் :

    மடத்துக்குளம் வட்டாரத்தில் நெற்பயிரில் குலை நோய் மற்றும் இலைப்புள்ளி நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க வேளாண்மைத்துறையினர் வழிகாட்டல்கள் வழங்கி உள்ளனர். இதுகுறித்து மடத்துக்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி கூறியதாவது:-

    மடத்துக்குளம் வட்டாரத்தில் குறுவை மற்றும் சம்பா பருவத்தில் சுமார் 7,500 ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது சுமார் 2,500 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர் வளர்ச்சிப் பருவம், பூ பருவம், பால் பிடிக்கும் பருவம் மற்றும் அறுவடைக்குத் தயாரான நிலையில் உள்ளது. மடத்துக்குளம் வட்டாரத்தில் தற்சமயம் நிலவி வரும் காற்றின் அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் மூடுபனி காரணமாக நெற்பயிரைத் தாக்கும் பூஞ்சாண நோய்களான இலைப்புள்ளி நோய் மற்றும் குலை நோய் தாக்குவதற்கு சாதகமான சூழல் நிலவி வருகிறது. நெற்பயிரில் இலைகளில் ஆரஞ்சு நிறத்தில் புள்ளி கோள வடிவில் தோன்றி இலை முழுவதும் பரவி காணப்படுவது இலை புள்ளி நோய் தாக்குதலின் அறிகுறியாகும்.

    இதனை தவிர்க்க நெல்லில் நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட ரகங்களான கோ 44, பவானி ரகங்களை சாகுபடி செய்தல் சிறந்தது. மேலும் அதிகப்படியான தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும். விதைகளை சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைத்தல் மற்றும் நெல் நடவு வயலில் தொழு உரத்துடன் 2 கிலோ கலந்து இடுதல் வேண்டும். மேலும் ரசாயன பூஞ்சாண கொல்லிகளான மேன்கோசெப் ப்ரொபினெப், கார்பென்டசிம் போன்றவற்றைத் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். குலை நோய் நெல் இலைகளின் மேற்புறத்தில் குழல் வடிவிலான இலைப்புள்ளி தோன்றி கண் போன்று காட்சியளிக்கும். இலைப் புள்ளியின் உட்புறத்தில் வெளிர் நிறத்தில் இருக்கும். கணுப்பகுதியில் கருப்பு நிறத்தில் அழுகியது போன்று தோற்றமளிக்கும்.

    குலைநோய் பாதித்த பயிர்களின் கதிர்கள் வெளிவருவது தடைப்படும். அதையும் தாண்டி வெளிவரும் கதிர்கள் பதர்களாக இருக்கும். குலை நோயிலிருந்து பயிர்களைப் பாதுகாக்க நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட ரகங்களான கோ 57,கோ 51,கோ 52,கோ 53,ஏடிடி 36,ஏடிடி 39,ஏஎஸ்டி 18 மற்றும் ஐஆர் 64 ரகங்களை சாகுபடி செய்யலாம். நெல்லில் அதிக தழைச்சத்து இடாமல் இருக்க வேண்டும். அத்துடன் நெல் வயலில் உள்ள களைகளை அகற்றி சுத்தமாக பராமரித்தல் மூலமாக குலை நோயைக் கட்டுப்படுத்தலாம். பூஞ்சாண நோய்களின் அறிகுறி தென்பட்டால் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களையோ அல்லது வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து உரிய விளக்கங்களை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்காச்சோள தோட்டங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • பயிர்களை பாதுகாப்பது குறித்த தொழில் நுட்ப ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள வானரமுட்டியில் தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் ஆகியோர் மக்காச்சோளம் பயிரிடப்பட்ட விவசாயிகளின் தோட்டங்களில் ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின் போது மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் வராமல் தடுப்பதற்கு, விதைப்பதற்கு முன் கோடை உழவு செய்தல், ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுதல் ,தையோமீத்தாக்கம் 4 மில்லி மருந்தை ஒரு கிலோ விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்தல், சரியான இடைவெளியில் விதைத்தல், வரப்பு பயிராக நாற்றுச் சோளம் பயிரிடுதல் மூலமாகவும் விதைத்தவுடன் இனக்கவர்ச்சிப் பொறி வைத்தல், 15 முதல் 20 நாட்கள் வயதுடைய பயிர்களுக்கு புழு பெண்டியாமைட் 5 மில்லி, 35 முதல் 40 நாட்கள் வயதுடைய பயிர்களுக்கு மெட்டாரைசியம், அனிசோப்பிலே 80கிராம், 40 முதல் 60 நாட்கள் வயதுடைய பயிர்களுக்கு மெக்டின்பென்சோயட் 4 கிராம்,60 நாட்களுக்கு மேல் வயது உடைய பயிர்களுக்கு நவலூரான் 10 மில்லி அல்லது ஸ்பிலோ டோராம் 5 மில்லி மருந்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து படைப்புழு தாக்குதலில் இருந்து மக்காச்சோள பயிர்களை பாதுகாப்பது உள்ளிட்ட தொழில் நுட்ப ஆலோசனைகளை விவசாயிகளுக்கு விளக்கி கூறினர்.

    • மானாவாரி சாகுபடி பல ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
    • சிறு தானியங்களின் பயன்பாடு நகர, கிராமப்புறங்களில் அதிகரித்துள்ளது.

    உடுமலை :

    உடுமலை சுற்றுப்பகுதியில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையை ஆதாரமாகக்கொண்டு, மானாவாரி சாகுபடி பல ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. கம்பு, தினை, சோளம், கொண்டைக்கடலை உட்பட தானியங்கள் இப்பகுதியிலேயே உற்பத்தியாகி சந்தைகளுக்கு வரத்து சீராக இருந்து வந்தது.பல்வேறு காரணங்களால் தானிய சாகுபடியும் சிறு தானிய உணவுகள் பயன்பாடும் குறைந்தது.

    கடந்த சில ஆண்டுகளாக சிறு தானிய உணவுகள் குறித்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.இதனால் சிறு தானியங்களுக்கான, தேவை அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கேற்ப உற்பத்தி இல்லாமல் பற்றாக்குறை நிலவி வருகிறது.

    இது குறித்து சிறு வியாபாரிகள் கூறியதாவது:- உடல் நலனுக்கு நன்மை தரும், சிறு தானியங்களின் பயன்பாடு நகர, கிராமப்புறங்களில் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப தரமான, அதேவேளையில் விலை குறைவாக தானியங்கள் கிடைப்பதில்லை.உடுமலை பகுதியில் இவ்வகை சாகுபடிகள் வெகுவாக குறைந்து விட்டது. முன்பு அறுவடை சீசன் சமயங்களில் நேரடியாக கிராமங்களுக்கு சென்று சிறு தானியங்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வோம். தற்போது அந்நிலை இல்லை. உள்நாட்டு தேவைக்கு போதுமான அளவு தானியங்கள் கிடைப்பதில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.விவசாயிகள் கூறுகையில், சிறு தானியங்கள் சாகுபடி செய்ய ஆர்வமிருந்தாலும் தேவையான விதைகள் கிடைப்பதில்லை.

    வேளாண்துறை சார்பில் சிறப்பு திட்டங்களின் கீழ் மானியத்தில் சிறு தானிய விதைகளை வழங்க வேண்டும். பருவமழைகள் கைகொடுத்தால், இவ்வகை தானியங்கள் உற்பத்தி பழைய நிலைக்கு திரும்பும் என்றனர்.

    • இறவை பாசன நிலங்களிலும் மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.
    • தொழில் நுட்பங்களை கடைபிடித்தால் படைப்புழு தாக்குதலிருந்து கட்டுப்படுத்தலாம்.

    குடிமங்கலம் :

    உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக உள்ளது. உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில் ஏறத்தாழ 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. படைப்புழு தாக்குதல், தரமற்ற விதை, சாகுபடி செலவு அதிகரித்துள்ள நிலையில் மக்காச்சோளத்திற்கு போதிய விலை கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மக்காச்சோளம் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது.

    இந்நிலையில் பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கப்பட உள்ள நிலையில் அப்பகுதிகளிலும் பருவ மழையை எதிர்பார்த்தும், இறவை பாசன நிலங்களிலும் மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். மக்காச்சோளம் சாகுபடி விவசாயிகளுக்கு படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:- மக்காச்சோளத்தில், அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்த முன் ஏற்பாடாக ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு, கடைசி உழவின் போது, நிலத்தில் இட்டு உழுது விட வேண்டும். இவ்வாறு செய்யும் போது நிலத்திலுள்ள தாய் அந்துப்பூச்சிகள் கூண்டுப்புழுவிலிருந்து வெளிவருவதில்லை.

    அடுத்து விதை நேர்த்தி அவசியமானதாகும்.விதையினை சையன்ட்ரானிபுரோல் 19.8 மற்றும் தயோ மீதாக்சோம் 19.8 மருந்தினை ஒரு கிலோ விதைக்கு 4 மில்லி மற்றும் 15 லிட்டர் நீர் கலந்து அரை மணி நேரம் நிலத்தில் உலர்த்தி பின் விதைகளை நிலத்தில் விதைக்க வேண்டும்.மேலும் வரப்பு ஓரத்தில் எள், சூரியகாந்தி, துவரை, தட்டை, உளுந்து, சோளம் ஆகிய தானிய பயிர்களை வரப்பு பயிர்களாக சாகுபடி செய்தால் அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்தலாம்.இந்த தொழில் நுட்பங்களை கடைபிடித்தால் படைப்புழு தாக்குதலிருந்து கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    • தென்னந்தோப்புகளில் இயற்கை உரம் கட்டுவதாக வருபவர்களை தவிர்த்திடுங்கள்.
    • தென்னை மரத்துக்கு பேரூட்ட உரங்கள் மட்டுமல்லாமல், நுண்நூட்ட உரங்களும் மிகவும் அவசியமாகும்.

    உடுமலை :

    உடுமலை பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. போதிய விலை இல்லாதது, வெள்ளை ஈ, கூன் வண்டு தாக்குதல் மற்றும் குரும்பை உதிர்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், தென்னை விவசாயிகள் பாதித்து வருகின்றனர்.இந்நிலையில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள விவசாயிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், ஒரு சில பகுதிகளில் இயற்கை உரம் மற்றும் மருந்துகளை வேரிலே கட்டுவதன் வாயிலாக, பிரச்னைகளுக்கு முழுமையாக தீர்வு கிடைக்கும், மகசூல் அதிகரிக்கும் என்று ஆசை வார்த்தை கூறுகின்றனர்.

    இது போன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் வேளாண் துறை, வேளாண் பல்கலைக்கழகம் பரிந்துரை அடிப்படையில், உர மேலாண்மை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் எனவும், வேளாண் அலுவலகங்களில் இயற்கை உரங்கள், நுண்Èட்டம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது, என வேளாண்துறை தெரிவித்துள்ளது.இது குறித்து உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:-

    தென்னந்தோப்புகளில் இயற்கை உரம் கட்டுவதாக வருபவர்களை தவிர்த்திடுங்கள். வேளாண்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலை வழங்கும் பரிந்துரைகளின் படி உரம் இடுவது நல்ல பலனைத்தரும்.தென்னை மரத்துக்கு பேரூட்ட உரங்கள் மட்டுமல்லாமல், நுண்Èட்டஉரங்களும் மிகவும் அவசியமாகும். ஒரு தென்னைக்கு ஆண்டுக்கு பேரூட்டங்களான யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ் சிகப்பு 3.5 கிலோ வழங்க வேண்டும்.அதனை இரண்டாகப்பிரித்து, ஜூன், ஜூலை மற்றும் ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் இட வேண்டும். பேரூட்டம் வைத்து 2 மாதம் கழித்து தென்னை அரை கிலோ வீதம், ஆண்டுக்கு இரு முறை இட வேண்டும்.தொழு உரம் 50 கிலோ, வேப்பம்புண்ணாக்கு ஒரு கிலோ, டிரைக்கோடெர்மா விரிடி 200 கிராம் இட வேண்டும். இரண்டையும் ஒன்றாக கலந்து வைக்கக்கூடாது.

    அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா ஏக்கருக்கு ஒரு லிட்டர் வீதம், மக்கிய தொழு உரத்துடன் கலந்து மரத்தின் துார் பாகத்திலிருந்து, 3 அடி துாரத்தில் வட்டம் எடுத்து வைப்பது சிறந்த பலன் தரும். தென்னை நுண்ணுாட்டம் வைப்பதால், பொக்கைக்காய்கள் உருவாதல், குரும்பை உதிர்தல் தடுக்கப்படுகிறது. மகசூல் அதிகரிப்பதுடன் காய் எடையும் அதிகரிக்கும்.சிறப்பான பலன் தரும் தென்னை நுண்ணுாட்டத்தை வேளாண் துறை அலுவலகங்களில் வாங்கி, விவசாயிகள் பயனடையலாம்.இயற்கை உரம் கட்டுவதாக வரும், நபர்கள் குறித்து 99445 57552 என்ற எண்ணில் வேளாண்மை உதவி இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

      மடத்துக்குளம் :

      உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில், பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கும், கிணற்றுப்பாசனத்துக்கும் மக்காச்சோளம் அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது.இரண்டாம் மற்றும் நான்காம் மண்டல பாசனத்துக்கு, 60 ஆயிரம் ஏக்கர் வரையிலும் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது.பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் இதன் சாகுபடிக்கு தேவையான பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.

      மண்டல பாசனத்துக்கு பிரதானமாக மேற்கொள்ளப்படும் மக்காச்சோள சாகுபடியில் கடந்த 2018ம் ஆண்டில் இருந்து படைப்புழு தாக்குதலின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.வளர்ச்சி தருணத்தில் உள்ள இப்பயிரின் நடுப்பகுதியில் தங்கும் படைப்புழுக்கள், வேகமாக செடியின் ஒட்டுமொத்த பாகங்களையும் சேதப்படுத்துகிறது. குறுகிய நாட்களில் தண்டுப்பகுதி பாதித்து செடிகள் சாய்கிறது.இலைகளையும் துளையிட்டு வளர்ச்சி முற்றிலுமாக பாதிக்கிறது.புழுக்களை கட்டுப்படுத்த 3 முறை மருந்து தெளித்தும் பலன் இருப்பதில்லை. கதிரிலும் இப்புழுக்கள் சேதம் ஏற்படுத்துகின்றன.ஏக்கருக்கு 100 கிலோ கொண்ட 30 மூட்டை வரை சராசரியாக விளைச்சல் முன்பு இருந்தது. படைப்புழு தாக்குதலுக்குப்பிறகு கடந்த சில ஆண்டுகளாக ஏக்கருக்கு 10 மூட்டை வரை விளைச்சல் குறைந்து பொருளாதார சேதம் ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு சீசனிலும் இத்தாக்குதல் குறையாமல் தொடர்கிறது.

      நடப்பு சீசனில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தி பொருளாதார சேதத்தை தவிர்க்க வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.விளைநிலங்களில், நடவுப்பணிகள் துவங்கும் முன்பே இதற்கான விழிப்புணர்வை துவங்கினால் மட்டுமே திட்டம் பலனை தரும். எனவே வட்டார வாரியாக படைப்புழு தாக்குதல் கட்டுப்பாட்டு முறைகளை வேளாண்துறையினர் துவக்க வேண்டும்.உழவு முறை, விதைத்தேர்வு, நடவு முறை, வரப்பு பயிர் பராமரிப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். இல்லாவிட்டால் இந்த சீசனிலும் மக்காச்சோளம் சாகுபடி விவசாயிகளுக்கு பாதிப்பு அளிப்பதாகவே இருக்கும்.

      • சின்ன வெங்காய சாகுபடி ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
      • வெங்காய விலையில் அதிக அளவு ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது.

      பல்லடம் :

      பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. இந்த பகுதி விவசாயிகளின் முக்கிய விவசாயமாக சின்ன வெங்காய சாகுபடி உள்ளது.இங்கு சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சின்ன வெங்காய சாகுபடி ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் வெங்காய விலையில் அதிக அளவு ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது.

      இந்தநிலையில் மழையால் சின்னவெங்காயத்தில் ஏற்படும் பூஞ்சை நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறைகள் குறித்து வேளாண்மை துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தற்போது 40 - 50 நாள் வயதுடைய சின்னவெங்காய பயிர்கள் சாகுபடியில் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் குளிர்ந்த காற்றுடன் தட்பவெப்பநிலை நிலவுகிறது. இதனால் ஒரு சில இடங்களில் சின்னவெங்காய பயிர்களில் பூஞ்சை நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.நோய் தாக்குதல் ஆரம்ப கட்டமாக இருந்தால் 10 லிட்டர் நீரில் டிரைக்கோடெர்மா விரிடி, பேசிலஸ் சப்டிலிஸ் 50 மி.லி. என்ற அளவில் கலந்து வேர் பாகம் நனையுமாறு தெளிக்கவேண்டும்.

      கார்பெண்டாசிம், மாங்கோசெப் பூஞ்சாணக்கொல்லி கலவையை 20 மி.லி. ஐ, 10 லிட்டருக்கு என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். இதற்கு மாற்றாக, புரோபிகோனசோல், 25 ஈசி, 20 மி.லி., ஐ 10 லிட்டர் வீதம் தெளிக்கலாம். ஏழு நாட்கள் இடைவெளியில், இருமுறை தெளிக்க வேண்டும். நோய் தாக்குதல் தீவிரம் அடைந்திருந்தால் ஏக்கருக்கு, 500 கிராம் கார்பெண்டாசிம் மற்றும் மாங்கோசெப் பூஞ்சாணக்கொல்லி கலவையை, 25 கிலோ அமோனியம் சல்பேட் உடன் கலந்து அடி உரமாக போட வேண்டும். இவ்வாறு வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

      • கொழிஞ்சி கடும் வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடிய பயிராகும்.
      • கொழிஞ்சியில் சாம்பல் சத்து, மணிச்சத்து மற்றும் தழைச்சத்து அதிக அளவில் இருப்பதால் நெற்பயிர்கள் செழித்து வளரும்.

      உடுமலை:

      மண்வளம் காப்பதில் பசுந்தாள் உரப்பயிர்களில் கொழிஞ்சி முதலிடம் பிடிக்கிறது. மண்ணின் வெப்பத்தைக் கட்டுப்படுத்தவும், மண் வளத்தை மேம்படுத்தவும் வேளாண்மைத்துறையினர் வழிகாட்டுகின்றனர். இதுகுறித்து உடுமலை வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:-

      கொழிஞ்சி கடும் வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடிய பயிராகும்.பூச்சி நோய் தாக்குதல் குறைவான பயிராகும். சணப்பை, தக்கைப்பூண்டு போன்ற பயிர்கள் கடும் வெப்பத்தைத் தாங்காது.அத்துடன் அவற்றை பூப்பூக்கும் பருவத்துக்கு முன் மடக்கி உழவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தண்டு கெட்டிப்பட்டு நார்த்தன்மை அதிகரித்து விடும்.இதனால் சீக்கிரம் மக்காமல் நிலத்திலேயே தங்கி விடும். ஆனால் கொழிஞ்சியைப் பொறுத்தவரை எத்தனை நாட்கள் நிலத்தில் விட்டு வைத்திருந்தாலும் மடக்கி உழுததும் எளிதில் மக்கி விடும்.அத்துடன் வளரும் காலம் வரை நிலத்துக்கு மூடாக்கு போல செயல்பட்டு மண் வெப்பமாவதைத் தடுக்கும்.

      நெல் அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன் தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்தி விடலாம்.அதனையடுத்து 7 நாட்களுக்குப் பிறகு ஒரு ஏக்கருக்கு 8 கிலோ உளுந்து விதையுடன் 5 கிலோ கொழிஞ்சி விதையையும் சேர்த்து 10 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து விதைக்க வேண்டும்.இதனைத் தொடர்ந்து 7 நாட்கள் கழித்து நெல்லை அறுவடை செய்து விடலாம்.பின்னர் உளுந்தும் கொழிஞ்சியும் தண்ணீர் பாய்ச்சாமலேயே நன்கு வளரும்.உளுந்தை 75 நாட்களில் அறுவடை செய்து விடலாம்.அடுத்த போக நெல் சாகுபடிக்கு 15 நாட்கள் முன் நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சி கொழிஞ்சியை மடக்கி உழுது விடலாம்.

      கொழிஞ்சியில் சாம்பல் சத்து, மணிச்சத்து மற்றும் தழைச்சத்து அதிக அளவில் இருப்பதால் நெற்பயிர்கள் செழித்து வளரும்.குறிப்பாக நெல் சாகுபடியில் யூரியாவின் பயன்பாட்டைக் குறைப்பதில் கொழிஞ்சிக்கு பெரும்பங்கு உள்ளது.மடக்கி உழுத செடியிலுள்ள விதைகள் மண்ணுக்குள் புதைந்திருந்தது அறுவடைக்குப் பிறகு தானாகவே முளைக்கும்.எனவே நெல் சாகுபடிக்கு முன் கொழிஞ்சி சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் பயனடையலாம்.அத்துடன் அனைத்து விதமான பயிர் சாகுபடியிலும் பசுந்தாள் உரப்பயிரான கொழிஞ்சி சாகுபடி செய்து மடக்கி உழுவதன் மூலம் மண் வளத்தை மேம்படுத்தலாம்என்று அதிகாரிகள் கூறினர்.

      • மாடு ஆடுகளுக்கு கிருமி நீக்க மருந்து கொடுக்கப்பட்டது.
      • 50 விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

      செங்கோட்டை:

      வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் செங்கோட்டை அருகே உள்ள இலத்தூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது.

      தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் நல்ல முத்துராஜா தலைமை தாங்கினார். வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன் முன்னிலை வகித்தார். கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருத்துவர் சிவகுமார் கால்நடை சிறப்பு மருத்துவ முகாமை செயல்படுத்தினார்.

      60-க்கும் மேற்பட்ட மாடு ஆடுகளுக்கு கிருமி நீக்க மருந்து கொடுக்கப்பட்டது. மேலும் பால் மாடுகளுக்கு சத்து மருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 50 விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

      உதவி வேளாண்மை அலுவலர் அருணாச்சலம் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சம்சுதீன் மற்றும் சிவகுமார் உதவி தோட்டக்கலை அலுவலர் மணிகண்டன் செய்திருந்தனர்.

      ×