என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேளாண் துறை சிறப்பு முகாம் இன்று நடக்கிறது
- கால்நடைகளுக்கான சிறப்பு நோய் தடுப்பு முகாம்களும் நடைபெற உள்ளது.
- விவசாய பெருமக்கள் அனைவரும் முகாம்களில் தவறாது கலந்துக்கொண்டு பயனடையலாம்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை - உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, கூட்டுறவுத்துறை, பால்வளத்துறை, கால்நடைத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, ஊரக வளர்ச்சிதுறை, உள்பட பல துறைகள் இணைந்து கிராம பஞ்சாயத்துகளை தன்னிறைவு பெற்ற கிராம பஞ்சாயத்துகளாக மாற்றிட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடர்பாக இன்று, (வியாழக்கிழமை) 89 கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. முகாம்களில் பட்டா மாறுதல், நுண்ணீர் பாசனம் அமைக்க விண்ணப்பம் பெறுதல், சிறு குறு விவசாயி சான்று வழங்குதல், விவசாய கடன் அட்டை வழங்குதல், பயிர்காப்பீடு திட்ட விழிப்புணர்வு, வேளாண் துறை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்ந்த திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது. மேலும் கால்நடைகளுக்கான சிறப்பு நோய் தடுப்பு முகாம்களும் நடைபெற உள்ளது. எனவே விவசாய பெருமக்கள் அனைவரும் இந்த முகாம்களில் தவறாது கலந்துக்கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தன.