search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்வளத்தை மேம்படுத்த பசுந்தாள் உரப்பயிரான கொழிஞ்சி சாகுபடி செய்யலாம் - வேளாண் துறை அறிவுறுத்தல்
    X

    கோப்புபடம். 

    மண்வளத்தை மேம்படுத்த பசுந்தாள் உரப்பயிரான கொழிஞ்சி சாகுபடி செய்யலாம் - வேளாண் துறை அறிவுறுத்தல்

    • கொழிஞ்சி கடும் வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடிய பயிராகும்.
    • கொழிஞ்சியில் சாம்பல் சத்து, மணிச்சத்து மற்றும் தழைச்சத்து அதிக அளவில் இருப்பதால் நெற்பயிர்கள் செழித்து வளரும்.

    உடுமலை:

    மண்வளம் காப்பதில் பசுந்தாள் உரப்பயிர்களில் கொழிஞ்சி முதலிடம் பிடிக்கிறது. மண்ணின் வெப்பத்தைக் கட்டுப்படுத்தவும், மண் வளத்தை மேம்படுத்தவும் வேளாண்மைத்துறையினர் வழிகாட்டுகின்றனர். இதுகுறித்து உடுமலை வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:-

    கொழிஞ்சி கடும் வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடிய பயிராகும்.பூச்சி நோய் தாக்குதல் குறைவான பயிராகும். சணப்பை, தக்கைப்பூண்டு போன்ற பயிர்கள் கடும் வெப்பத்தைத் தாங்காது.அத்துடன் அவற்றை பூப்பூக்கும் பருவத்துக்கு முன் மடக்கி உழவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தண்டு கெட்டிப்பட்டு நார்த்தன்மை அதிகரித்து விடும்.இதனால் சீக்கிரம் மக்காமல் நிலத்திலேயே தங்கி விடும். ஆனால் கொழிஞ்சியைப் பொறுத்தவரை எத்தனை நாட்கள் நிலத்தில் விட்டு வைத்திருந்தாலும் மடக்கி உழுததும் எளிதில் மக்கி விடும்.அத்துடன் வளரும் காலம் வரை நிலத்துக்கு மூடாக்கு போல செயல்பட்டு மண் வெப்பமாவதைத் தடுக்கும்.

    நெல் அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன் தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்தி விடலாம்.அதனையடுத்து 7 நாட்களுக்குப் பிறகு ஒரு ஏக்கருக்கு 8 கிலோ உளுந்து விதையுடன் 5 கிலோ கொழிஞ்சி விதையையும் சேர்த்து 10 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து விதைக்க வேண்டும்.இதனைத் தொடர்ந்து 7 நாட்கள் கழித்து நெல்லை அறுவடை செய்து விடலாம்.பின்னர் உளுந்தும் கொழிஞ்சியும் தண்ணீர் பாய்ச்சாமலேயே நன்கு வளரும்.உளுந்தை 75 நாட்களில் அறுவடை செய்து விடலாம்.அடுத்த போக நெல் சாகுபடிக்கு 15 நாட்கள் முன் நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சி கொழிஞ்சியை மடக்கி உழுது விடலாம்.

    கொழிஞ்சியில் சாம்பல் சத்து, மணிச்சத்து மற்றும் தழைச்சத்து அதிக அளவில் இருப்பதால் நெற்பயிர்கள் செழித்து வளரும்.குறிப்பாக நெல் சாகுபடியில் யூரியாவின் பயன்பாட்டைக் குறைப்பதில் கொழிஞ்சிக்கு பெரும்பங்கு உள்ளது.மடக்கி உழுத செடியிலுள்ள விதைகள் மண்ணுக்குள் புதைந்திருந்தது அறுவடைக்குப் பிறகு தானாகவே முளைக்கும்.எனவே நெல் சாகுபடிக்கு முன் கொழிஞ்சி சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் பயனடையலாம்.அத்துடன் அனைத்து விதமான பயிர் சாகுபடியிலும் பசுந்தாள் உரப்பயிரான கொழிஞ்சி சாகுபடி செய்து மடக்கி உழுவதன் மூலம் மண் வளத்தை மேம்படுத்தலாம்என்று அதிகாரிகள் கூறினர்.

    Next Story
    ×