search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி மேலாண்மை ஆணையம்"

    • காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
    • பிப்ரவரி, மார்ச்சில் நிலுவை வைத்துள்ள 3.5 டி.எம்.சி. நீரை தடையின்றி திறக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கி நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இதில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நிலுவை வைத்துள்ள 3.5 டி.எம்.சி. நீரையும், ஏப்ரல், மே மாதங்களுக்கான நீரையும் தடையின்றி திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்நிலையில், கர்நாடகாவில் குடிநீர் பிரச்சனை மற்றும் வறட்சி நீடித்து வருவதால் தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட முடியாது. நீர் இருப்பு மற்றும் சூழலைக் கருத்தில் கொண்டு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என கர்நாடகா தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

    • கர்நாடகா அரசும், அம்மாநில கட்சிகளும், அரசியல் ஆதாயத்திற்காக காவிரி பிரச்சனையில் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிரான போக்கையே கடைப்பிடிக்கின்றன.
    • காவிரி தண்ணீரில் தமிழக மக்களின் வாழ்வாதாரமே அடங்கி இருக்கிறது. இதில் அரசியலை புகுத்துவது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை டெல்லியில் கூட இருக்கிறது. இம்முறையாவது தமிழகத்திற்கு உரிய பங்களிப்பை அளிக்க கர்நாடகா அரசிற்கு உரிய உத்தரவை ஆணையம் பிறப்பிக்க வேண்டும்.

    காவிரி மேலாண்மை ஆணையம் 28 கூட்டங்களை கூட்டியுள்ளது, ஒவ்வொரு கூட்டத்திலும் தமிழகத்திற்கு உரிய நீரை அளிக்க கர்நாடக அரசிற்கு ஆணையம் வலியுறுத்துவதும், அதை அம்மாநில அரசு மறுப்பதும் தொடர் கதையாக உள்ளது. தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இப்பிரச்சனைக்கு காவிரி மேலாண்மை ஆணையம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இரு மாநில மக்களின் தேவைக்கும், அவசியத்திற்கும் ஏற்ப உத்தரவுகளை இடவேண்டும்.

    கர்நாடகா அரசும், அம்மாநில கட்சிகளும், அரசியல் ஆதாயத்திற்காக காவிரி பிரச்சனையில் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிரான போக்கையே கடைப்பிடிக்கின்றன. இது சரியான செயலல்ல. காவிரி தண்ணீரில் தமிழக மக்களின் வாழ்வாதாரமே அடங்கி இருக்கிறது. இதில் அரசியலை புகுத்துவது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.

    நாளை (4-ந்தேதி) நடைபெற இருக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் தமிழக மக்களின் தேவையறிந்து, கடந்த காலத்தில் இரு மாநில அரசுகளும் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய, உரிய தண்ணீரை பெற்றத்தர உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 'எல் நினோ' என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலையை உயரச் செய்யும் ஒரு வகை காலநிலை நிகழ்வு
    • கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகாவில் சரியாக பெய்யாததால் காவிரியில் நீர் வரத்து வெகுவாக குறைந்தது

    'எல் நினோ' கால நிலை முடிவுக்கு வந்தது. வரும் தென்கிழக்கு பருவமழைக்குப் பின் காவிரியில் தண்ணீர் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    'எல் நினோ' என்பது பசிபிக் கடல் பரப்பில் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பின் எதிரொலியாக, உலகின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலையை உயரச் செய்யும் ஒரு வகை காலநிலை நிகழ்வு. இதனால் அதீத மழை, திடீர் புயல், கடுமையான வறட்சி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்

    கடந்த மே மாதம் வரை மேட்டூர் அணையில் 100 அடிக்கும் குறையாமல் தண்ணீர் இருந்தது. தென்மேற்கு பருவமழை மிக அதிகமாக பெய்தால் மட்டுமே காவிரியில் நீர் வரத்து இருக்கும். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகாவில் சரியாக பெய்யாததால் காவிரியில் நீர் வரத்து வெகுவாக குறைந்தது.

    மழை பொழிவு குறைவுக்குக் காரணம் எல் நினோ என்று கூறப்பட்டது. எல் நினோ சில நேரங்களில் வறட்சியையும் சில நேரங்களில் வெள்ளத்தையும் கொடுக்கும். தென்மேற்கு பருவமழை காலத்தில் மழை பொழிவு சரியாக இல்லாத காரணத்தால் மேட்டூர் அணை கடந்த ஆண்டு ஜூன் முதல் அக்டோபர் வரையிலான கால கட்டத்தில் நிரம்பவில்லை. 40 அடிக்கும் கீழே சரிந்தது. அணை நீர் திறப்பு நிறுத்தப்பட்டதை அடுத்து படிப்படியாக உயர்ந்து 65 அடி வரை எட்டியது தற்போது குடிநீருக்காக மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டின் பங்கு தண்ணீரை தர வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை. இந்த ஆண்டு கர்நாடகா வறட்சியை சந்தித்துள்ளதாக அங்குள்ள ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த சூழ்நிலையில்தான் எல் நினோ முடிவுக்கு வந்து விட்டதாக பதிவிட்டுள்ளார் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.

    அவர் தனது X பக்கத்தின் பதிவில் "எல் நினோவிற்கு குட் பை. வரும் தென்மேற்கு பருவமழை காலத்தில் காவிரியில் தண்ணீர் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும்" என்று பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.


    • கலெக்டர் அலுவலகத்திற்கு பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் வந்தனர்.
    • மேகதாதுவில் அணைக்கட்ட கூடாது என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் கடந்த 1 - ந்தேதி நடைபெற்றது. இதில், மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடகா அரசின் வரைவு திட்ட அறிக்கை குறித்த வாக்கெடுப்பில் தமிழக அரசின் பிரதிநிதியான நீர் வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா எதிர்ப்பு தெரிவித்தார். இந்த எதிர்ப்பையும் மீறி வாக்கெடுப்பு நடத்த ஆணையத் தலைவர் அனுமதித்தபோது, அதில் சந்திப் சக்சேனா பங்கேற்றார்.

    உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கோடு வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இது முற்றிலும் சட்டத்துக்கு புறம்பானது மட்டுமல்லாமல் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கும் முரணானது என்று தமிழகத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள், விவசாயிகள் தெரிவித்தனர். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் வந்தனர்.

    பின்னர் அவர்கள் கலெக்டர் தீபக்ஜேக்கப்பிடம் , மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு அளித்தனர்.

    இதையடுத்து கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று கொண்டு மேகதாது அணை தொடர்பான காவிரி மேலாண்மை ஆணையத்தின் தீர்மான நகலை தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மேகதாதுவில் அணைக்கட்ட கூடாது என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். உடனே போலீசார் எரிந்து கொண்டிருந்த நகல் மீது தண்ணீர் ஊற்றினர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • காவிரி மேலாண்மை கூட்டம் கடந்த நவம்பர் 3-ம் தேதி நடைபெற்றது.
    • 3 மாதத்துக்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று நடந்தது.

    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கடைசியாக காவிரி மேலாண்மை கூட்டம் கடந்த நவம்பர் 3-ம் தேதி நடைபெற்றது. இதன்பிறகு 3 மாதங்களாக இந்த கூட்டம் நடைபெறவில்லை. 3 மாதங்களுக்கு பிறகு இன்று இக்கூட்டம் நடைபெற்றது.

    இந்நிலையில், இந்தக் கூட்டத்தின் முடிவில் தமிழகத்திற்கு பிப்ரவரி மாதத்திற்கான 2.5 டி.எம்.சி. தண்ணீரை விநாடிக்கு 998 கன அடி வீதம் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    காவிரி மேலாண்மை ஆணையமும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தொடர்ந்து கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டும் அது குறைவான அளவையே திறந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கும் தமிழக விவசாயிகளுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் மட்டுமல்லாது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதாகும்.
    • திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்பே புதிய அணை கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளை காங்கிரஸ் அரசு தீவிரப்படுத்தும் என்ற கர்நாடக மாநில கவர்னரின் குடியரசு தின உரை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சியும், காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கும் தமிழக விவசாயிகளுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் மட்டுமல்லாது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதாகும்.

    காவிரியின் குறுக்கே கால் நூற்றாண்டுக்கும் மேலாகவே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டிருந்தாலும், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்பே புதிய அணை கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    போதிய நீர் இருப்பு இருந்தும் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசினாலும், நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் உரிய நீரை பெற்றுத்தர முடியாத திமுக அரசினாலும் டெல்டா பகுதி விவசாயிகள் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

    எனவே, தமிழகத்தை பாலைவனமாக்கும் நோக்கில் கட்டப்படும் மேகதாது அணைக்கான பூர்வாங்கப் பணிகளை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்தி, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.

    • காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்வதற்காக ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது.
    • காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை மறுதினம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது.

    இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்துள்ளன.

    இந்நிலையில், நாளை மறுதினம் 90-வது காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெறவுள்ளது. காணொலி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 3-ம் தேதி நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் 23-ம் தேதி வரை தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

    நாளை மறுதினம் நடக்கும் கூட்டத்தில் ஆணையத்தின் உத்தரவுபடி கர்நாடக மாநிலம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துள்ளதா என்பது பற்றி கணக்கீடு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • அணைகளில் தண்ணீர் இல்லை, குடிநீருக்கு பற்றாக்குறையாக உள்ளது என கர்நாடகா தொடர்ந்து கூறி வருகிறது.
    • காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் டெல்லியில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

    புதுடெல்லி:

    காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடக அரசு எந்த உத்தரவையும் மதிக்காமல் தமிழகத்துக்கு போதிய தண்ணீரை திறந்துவிட மறுத்து வருகிறது.

    அணைகளில் தண்ணீர் இல்லை, குடிநீருக்கு பற்றாக்குறையாக உள்ளது என்று கர்நாடக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது.

    இதற்கிடையே, கடந்த மாதம் 30-ம் தேதி காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு நிலுவையில் உள்ள 13.5 டி.எம்.சி. தண்ணீரை அதிகாரிகள் கேட்டனர். ஆனால் கர்நாடகம் அதற்கு மறுப்பு தெரிவித்தது.

    இருப்பினும் ஒழுங்காற்று குழு தலைவர் கர்நாடகத்தின் வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. கண்டிப்பாக 11 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்றும் நவம்பர் 1-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை வினாடிக்கு 2,600 கன அடி வீதம் தமிழ்நாட்டுக்கு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்றும் முடிவு செய்து வலியுறுத்தினார்கள். இதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையத் துக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

    இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் இன்று மதியம் கூடியது. இந்தக் கூட்டத்தில் இன்று தமிழகத்தின் சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், உறுப்பினர் பட்டாபிராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் கர்நாடகா, புதுச்சேரி, கேரளா அதிகாரிகளும் பங்கேற்றனர்.

    அப்போது தமிழ்நாட்டுக்கு ஒழுங்காற்று குழு கூட்டத்தில் முடிவெடுத்தபடி அக்டோபர் 27 வரை நிலுவையில் உள்ள 11 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • வரும் 3-ந்தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது.
    • சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் இவ்வளவு பிடிவாதமாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

    சென்னை:

    சென்னை கோட்டூர்புரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரியில் 13 ஆயிரம் கனஅடி நீர் திறக்க நாங்கள் கோரிக்கை வைத்தோம். 2,600 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.

    வரும் 3-ந்தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது. 13ஆயிரம் கனஅடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்துவோம்.

    காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க முடியாது என்று சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் இவ்வளவு பிடிவாதமாக கூறி இருப்பது ஆச்சரியமாக உள்ளது. ஏதோ எதிரிநாட்டோடு மோதுவது போல் நினைக்கிறார்கள். உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு மதிக்காமல் இருப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

    இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

    • தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
    • காவிரி விவகாரத்தில் நமது உரிமை பறிக்கப்பட்டு வருகிறது.

    மண்டியா:

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் அணைகள் முழுமையாக நிரம்பவில்லை. இதனால் கர்நாடகம்-தமிழகம் இடையே காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக மீண்டும் பிரச்சினை எழுந்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்பேரில் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதனை கண்டித்து கர்நாடகத்தில் விவசாய சங்கங்கள், கன்னட அமைப்பினர், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக காவிரியின் மையப்பகுதியாக மண்டியா மற்றும் மைசூரு மாவட்டங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினா் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள விசுவேஸ்வரய்யா பூங்காவில் கடந்த 33 நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 34-வது நாளாக நேற்றும் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு பல்வேறு அமைப்பினரும், சங்கங்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

    நேற்று விவசாய சங்கத்தினரும், கன்னட அமைப்பினரும் மண்டியா டவுனில் கண்டன ஊர்வலம் நடத்தினர். அப்போது மத்திய, மாநில அரசுகள் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். பின்னர் விசுவேஸ்வரய்யா பூங்காவுக்கு சென்று போராட்டத்தை தொடர்ந்தனர்.

    மேலும் மண்டியா நகர் ஜெயசாமராஜ உடையார் சர்க்கிளில் கர்நாடக சேனா அமைப்பினா் தேங்காய் கூடுகளை காண்பித்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தமிழக அரசுக்கு எதிராகவும், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராகவும் குற்றம்சாட்டினர்.

    மேலும் மண்டியா மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சங்கத்தினர் மைசூரு-பெங்களூரு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விசுவேஸ்வரய்யா பூங்காவுக்கு சென்ற அவர்கள், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டனர். அப்போது தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்கு பல தகாப்தங்களாக அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. கன்னடர்களுக்கு பேரடி விழுகிறது. காவிரி விவகாரத்தில் நமது உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கும் மாநில அரசு, விவசாயிகளின் நலனை காக்காமல் அலட்சியமாக செயல்பட்டு வருகிறது. அணைகளில் தண்ணீர் குறைவாக உள்ளதால், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    காவிரி நீரை நம்பி உள்ள மண்டியா, மைசூரு, பெங்களூரு மக்கள் குடிநீருக்காக சிரமப்படுவார்கள். தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீரை உடனடியாக நிறுத்த வேண்டும்.

    காவிரி விவகாரத்தில் மாநிலத்தில் உள்ள 3 அரசியல் கட்சிகளும் விவசாயிகளுக்கு அநீதி இழைத்து வருகிறது. காவிரி விவகாரத்தில் நமக்கு அநீதி ஏற்படுவதால் கர்நாடகத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலை அனைவரும் புறக்கணிக்க வேண்டும். குறிப்பாக காவிரி படுகையில் உள்ள மக்கள் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிக்க வேண்டும். அப்போது தான் மத்திய அரசின் பார்வை நம் பக்கம் திரும்பும் என்றனர்.

    • காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் வருகிற 12-ந்தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கூட்டத்தில் தமிழகம்-கர்நாடக அதிகாரிகள் மீண்டும் முறையிட உள்ளனர்.

    சென்னை:

    காவிரி பிரச்சனையில் கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாதம் செய்து தேவையான தண்ணீரை திறந்துவிட மறுத்து வருகிறது.

    கடந்த 28-ந்தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை கூட்டத்தில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டதையும் கர்நாடகம் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த உத்தரவை ரத்து செய்யுமாறு வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் வருகிற 12-ந்தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம்-கர்நாடக அதிகாரிகள் மீண்டும் முறையிட உள்ளனர்.

    • காவிரி நீர் மேலாண்மை வாரியம் 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட உத்தரவு
    • கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுப்பு தெரிவித்த நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு

    காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டு ஆகஸ்டு மாதத்துக்கான நதிநீர் பங்கை கர்நாடகம் வழங்க மறுப்பதாக கூறி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் ஆகஸ்டு 14-ந்தேதி மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கை கடந்த ஆகஸ்டு 25-ந்தேதி தேதி விசாரித்த சுப்ரீம்கோர்ட் காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 1-ந்தேதி ஒத்தி வைத்திருந்தது. அதன்பிறகு வழக்கு செப்டம்பர் 1-ந்தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டதால் தமிழக அரசின் தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் முறையிடப்பட்டது. அப்போது, நீதிபதிகள் அமர்வு, இந்த விவகாரம் செப்டம்பர் 6-ந்தேதி விசாரிக்கப்படும் என கூறி இருந்தனர்.

    இந்த நிலையில் செப்.6-ந்தேதி சுப்ரீம்கோர்ட்டில் விசாரிக்கப்படும் வழக்குகள் பட்டியலில் இந்த விவகாரம் இடம் பெற்றிருந்தது. ஆனால், அந்த அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி பி.எஸ். நரசிம்மா விடுமுறையில் இருந்ததால், அந்த வழக்கு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து, சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு முன் இந்த விவகாரத்தை தமிழகத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் குறிப்பிட்டு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். அப்போது, நீதிபதி பி.ஆர்.கவாய் செப்.21-ந்தேதி இந்த விவகாரம் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என்று கூறி இருந்தார்.

    அதன்படி இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

    தமிழக அரசு சார்பில் வக்கீல்கள் முகுல் ரோத்தகி, வில்சன், உமாபதி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது அவர்கள், ஆகஸ்டு மாதம் முதல் தண்ணீர் திறப்பதில் கர்நாடகா பிரச்சினை செய்து வருகிறது. காவிரி ஆணையத்தின் உத்தரவை கர்நாடகம் செயல்படுத்துவதில்லை.

    தற்போதைய சூழலில் கர்நாடகா அணைகளில் இருக்கும் நீரின் அளவைப் பொறுத்து பார்த்தாலும், தமிழகத்துக்கு 6400 கன அடி தண்ணீரை திறந்து விட வாய்ப்பு உள்ளது என காவிரி மேலாண்மை ஆணையம் முதலில் கூறினார்கள். இருப்பினும் 5 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்து விட்டால் போதும் என கர்நாடகாவுக்கு உத்தரவிட்டனர்.

    ஆனால் கர்நாடகம் அந்த உத்தரவையும் கூட பின் பற்றுவதில்லை. ஒவ்வொரு முறையும் ஒரு உத்தரவை ஆணையம் பிறப்பிக்கும் ம்போதும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி தமிழ கத்துக்கான நீரை கொடுக்க கர்நாடகம் மறுத்து வருகிறது. மேலும், காவிரி ஒழுங்காற்று குழுதான் தண்ணீரின் அளவு உள்ளிட்ட புள்ளி விவரங்களை கவனத்தில் கொண்டு தண்ணீர் திறப்பதற்கான அளவை நிர்ணயம் செய்கிறது.

    அவர்கள் தமிழ்நாட்டுக்கு தேவையான தண்ணீரை திறந்துவிட போதுமான பரிந்துரைகளை பல்வேறு கட்டங்களாக கொடுத்த போதும் காவிரி மேலாண்மை ஆணையம் அந்த அளவில் இருந்து எப்போதும் குறைத்து தண்ணீரை திறக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் 15 ஆயிரம் கன அடி, 10 ஆயிரம் கன அடி, 7200 கன அடி, 5 ஆயிரம் கன அடி, என தொடர்ச்சியாக தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு கொண்டே வந்துள்ளது.

    எங்களுக்கு தர வேண்டிய தண்ணீர் அளவு அதிக அளவில் நிலுவையில் உள்ளது. ஆனால் அதை எல்லாம் நாங்கள் கேட்கவில்லை. தற்போதைக்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை மட்டுமாவது திறந்து விட வேண்டும் என்றுதான் கேட்கிறோம். மழை பற்றாக்குறைவு இருக்கிறது என்பதை நாங்களும் ஒத்துக் கொள்கிறோம். ஆனால் அதற்காக அவர்களிடம் இருக்கும் நீரை கூட பகிர்ந்து கொடுக்கமாட்டேன் என்றால் எப்படி?

    நாங்கள் கடைமடை மாநிலமாக இருக்கிறோம். அவர்களுக்கு அவ்வளவு பிரச்சினை என்றால் எங்களுக்கு எவ்வளவு இருக்கும்? வறட்சியின் பாதிப்பு என்பது அவர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும்தான். கடந்த 12-ந்தேதி கூட்டத்தின் போது, 56 சதவீதம் நீர் பற்றாக்குறை என கூறினார்கள்.

    ஆனால் 6400 கன அடி திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு குறிப்பிட்டுள்ளது. ஆனால் 5000 கன அடி என இறுதி உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. புள்ளி விவரத்தை கணக்கிட்டு அதனடிப்படையில் நீர் வழங்க உத்தரவிடப்பட்டும் அதனை கர்நாடகம் செயல்படுத்த மறுக்கிறது என்று வாதிட்டனர்.

    அப்போது கர்நாடகா அரசு வக்கீல் கர்நாடகாவில் மழை இல்லை, காவிரியில் நீரும் குறைவாக இருக்கிறது. தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் விவசாயத்துக்கு மட்டும்தான். ஆனால் கர்நாடகாவை பொறுத்த வரை குடிநீர், விவசாயம் என அனைத்துக்கு நீர் தேவை. அதுதான் எங்களது பிரச்சினை. எங்களால் வினாடிக்கு 2500 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என்று வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகளுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு ஒரு முறை கூடி சூழலை ஆராய்ந்து வருகிறது. மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகள் மற்றும் பரிந்துரைகளை கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதேவேளையில் காவிரியில் 24 ஆயிரம் கன அடி நீரை திறக்க கோரும் தமிழ் நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது. வறட்சி கால அட்டவணைப்படி தமிழ்நாட்டுக்கான உரிய நீரை கர்நாடகா திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    ×