search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவு பாதுகாப்பு"

    • பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருந்த சிப்ஸ்களை உணவு மாதிரிக்காக எடுத்து உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பினார்.
    • தயாரிக்கப்பட்ட சிப்ஸ் தரம் குறைந்தது, பாதுகாப்பற்ற உணவுப்பொருள் என்று அறிக்கை வந்தது.

    தென்காசி:

    தென்காசி வட்டார பகுதிக்குட்பட்ட இலஞ்சி. வள்ளியூர் பகுதியில் உள்ள சிப்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் கடந்த வாரம் தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது அங்கு தயாரித்து விற்பனைக்கு வைத்திருந்த சீலிட்ட பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருந்த நேந்திரன் மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ் உணவு மாதிரிக்காக எடுத்து உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பினார்.

    இந்நிலையில் சிப்சில் அதிகப்படியான செயற்கை வண்ணம் கலந்திருந்ததாலும், லேபிள் குறைபாடுகள் இருந்ததாலும் அங்கு தயாரிக்கப்பட்ட சிப்ஸ் தரம் குறைந்தது மற்றும் பாதுகாப்பற்ற உணவுப்பொருள் என்று அறிக்கை வந்தது. அதனடிப்படையில் சிப்ஸ் தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர மாவட்ட நியமன அலுவலர் மூலமாக மாநில உணவுபாதுகாப்பு ஆணையருக்கு அனுமதி கோரப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மாநில உணவுபாதுகாப்பு ஆணையர் லால்வேனா சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு தொடர அனுமதி அளித்ததின்பேரில், தென்காசி வட்டார உணவுபாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன், செங்கோட்டை நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் சுனில்ராஜா, சிப்ஸ் நிறுவன உரிமையாளருக்கு ரூ. 30 ஆயிரம் அபராதமும்,கோர்ட்டு கலையும் வரையில் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் சுரேஷ் ஆஜரானார்.

    • உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • 12 கிலோ காலாவதியான சிக்கன் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது.

    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி தனது குடும்பத்தி னருடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாமக்கலில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சவர்மா மற்றும் துரித உணவு வாங்கி சாப்பிட்டு உள்ளார். இதில் அந்த மாணவி பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டல்களில் ஆய்வு செய்ய வேண்டும் என சுகாதார த்துறையினர் அந்தந்த மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி இருந்தனர்.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமையில் அலுவலர்கள் செல்வன், அருண்குமார் தலைமையில் குழுவினர் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஓட்டலில் சிக்கன், நூடுல்ஸ் உள்பட பல்வேறு உணவுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. உணவு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டதில் 12 கிலோ காலாவதியான சிக்கன் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த 12 கிலோ சிக்கனை உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் பினாயில் ஊற்றி அழித்தனர்.

    இதைத்தொடர்ந்து மற்ற ஓட்டல்களிலும் ஆய்வு செய்யப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தெரிவித்தார்.

    • இரு கடைகளில் இருந்து மட்டும் தரம் குறைவான மீன்கள் சுமார் 20 கிலோ அளவிலானது பறிமுதல் செய்து அப்புறப்படுத்தி பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.
    • உணவு பாதுகாப்பு உரிமம் ஒரு சில கடைகள் மட்டும் பெற்றுள்ளனர். எடுக்காதவர்கள், புதுப்பிக்காதவர்கள் 7 தினங்களுக்குள் விண்ண ப்பிக்க வலியுறுத்தப்பட்டது

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி, மாவட்டம் முழுதும் உள்ள மீன் விற்பனை மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க பரிந்துரைத்துள்ளார். அதன் அடிப்படையில்

    தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா மற்றும் மீன் வளத்துறை உதவி இயக்குனர் கோகுல ரமணன் வழிகாட்டலின் படி, பாலக்கோடு மீன் மார்க்கெட் பகுதிகளில் உள்ள மீன் விற்பனை நிலையங்களில், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் மீன்வளத்துறை சார் ஆய்வாளர் வெங்க டேசன், மீன்வள பாதுகாவலர் முருகன் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

    10-க்கும் மேற்பட்ட கடைகளில் மீன்கள் பார்வையிட்டு இருப்பு மற்றும் விற்பனைக்கு வைத்திருந்த திலேபியா,ரோக், ரூப்சந்த், மிருதுளா மீன்கள் என அனைத்து வகையான மீன்களையும் ஆய்வு செய்தனர்.

    மேலும் மீன்கள் நீண்ட நாள் கெடாமல் இருக்க, மீன்களில் பார்மலின் உபயோகப் படுத்தப்பட்டு இருக்கிறதா என பார்மலின் டெஸ்ட் கிட் உபகரணம் கொண்டு வெளி மாநில (ஆந்திரா) மீன் மற்றும் உள்ளூர் மீன்களை ஆய்வு செய்தனர்.

    ஆய்வில் பார்மலின் ஏதும் கலந்து விற்பனை செய்யப்படவில்லை என அறியப்பட்டது.

    இரு கடைகளில் இருந்து மட்டும் தரம் குறைவான மீன்கள் சுமார் 20 கிலோ அளவிலானது பறிமுதல் செய்து அப்புறப்படுத்தி பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.

    மேற்படி கடைக்காரர்களுக்கு தலா ரூ.1000 விதம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் உணவு பாதுகாப்பு உரிமம் ஒரு சில கடைகள் மட்டும் பெற்றுள்ளனர். எடுக்காதவர்கள், புதுப்பிக்காதவர்கள் 7 தினங்களுக்குள் விண்ண ப்பிக்க வலியுறுத்தப்பட்டது.

    உணவு பாதுகாப்பு சான்றிதழ் எடுக்காவிடில் உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் படி உடனடி அபராதம் ஐந்தாயிரம் விதிக்க மாவட்ட நியமன அலுவலர் உத்தர விட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தெரிவித்தார்.

    மேலும் இந்த ஆய்வுகள் மாவட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக உணவு பாதுகாப்பு மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள் அலுவலர்கள் தெரிவித்துக் கொண்டனர்.

    • காரைக்குடியில் பதனீரை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை செய்தனர்.
    • பொதுமக்கள் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் என்றார்.

    காரைக்குடி

    காரைக்குடியில் கடந்த மாதம் முதல் பல்வேறு இடங்களில் பதநீர் விற்பனை நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அதிகாலை பதநீர் இறக்கப்பட்டு வேன் மூலமாக காரைக்குடிக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    உடலிற்கு நலம் பயக்கும் பதநீரை மக்கள் ஆர்வமாக வாங்கி பருகி வருகின்றனர்.அதே வேளையில் இந்த பதநீரில் ரசாயனம் கலந்து விற்பனை செய்யப்படுவ தாகவும் இனிப்பு சுவைக்காக சீனி மற்றும் தண்ணீர் கலந்து விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்தன.

    இதையடுத்து சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி தலைமைமையில் உணவு பாதுகாப்பு அலு வலர்கள் முத்துக்குமார், சாக்கோட்டை பிளாக் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் பதநீர் விற்பனையை ஆய்வு செய்தனர். பல்வேறு இடங்களிலும் சோதனைக்காக மாதிரி களை எடுத்துச் சென்றனர்.

    மேலும் பதநீர் விற்பனையாளர்களிடம் பதநீர் இறக்கவும் விற்பனை செய்யவும் முறையான அனுமதி பெறவேண்டும் எனவும், அதிகாலை இறக்கப்படும் பதநீரை பகல் ஒரு மணிக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

    காரைக்குடி 100 அடி சாலையில் விற்பனை செய்து வந்த பதநீரில் இனிப்புக்காக சர்க்கரை சேர்த்து விற்பனை செய்வதை அறிந்து சுமார் 50 லிட்டர் அளவிலான பதநீரை சாக்கடையில் கொட்டிச் சென்றனர்.

    இதுகுறித்து அலுவலர் டாக்டர் பிரபாவதி கூறுகையில், பதநீரில் ரசாயன பொருட்களை கலந்தால் அதனை அருந்துவோருக்கு கண் எரிச்சல், வயிற்றுப்போக்கு ஏற்படும். மேலும் உணவு முறைகேடு சம்பந்தமாக பொதுமக்கள் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் என்றார்.

    • 18 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
    • 11 கடைகளுக்கு அபராதம்

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலாத்த லமான கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளது. இந்த சீசனையொட்டி ஆங்காங்கே நடைபாதைகளில் ஏராள மான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் கன்னியாகு மரியில் நேற்று குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கசிவம் நாகர்கோவில் மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் குமாரபாண்டியன், தக்கலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பிரவின்ரகு ஆகியோர் கொண்ட குழுவினர் ஒரு குழுவாகவும் மேல்புறம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் வின்சென்ட்கிளாட்சன், குளச்சல் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி, திருவட்டார்வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் இன்னொரு குழுவாகவும் தனித்தனியாக சென்று 50-க்கும் மேற்பட்ட ஓட்டல் மற்றும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    கன்னியாகுமரி கடற்கரை சாலை, மெயின்ரோடு, திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதி உள்பட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் 11 கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதுகண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அந்த கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.22 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த கடைகளில் இருந்து 18 கிலோ 750 கிராம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாதீர்கள்.
    • ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தாதீர்கள்

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்து காட்டுப்புத்தூர் ஸ்ரீ நாராயண பிரம்மேந்திரர் திருமண மண்டபத்தில் காட்டுப்புத்தூர் அனைத்து வணிகர் சங்கத்தினர் ஏற்பாட்டில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (உணவு பாதுகாப்பு பிரிவு) உணவு வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.காட்டுப்புத்தூர் அனைத்து வணிகர்கள் சங்க தலைவர் மணி (எ) சி.குப்புசாமி தலைமையில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக காட்டுப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலரும் வளம் மீட்பாளர் மற்றும் சுற்றுச்சூழல் கல்வியாளர் டாக்டர்.ச.சாகுல் அமீது, திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர்டாக்டர் ஆர்.ரமேஷ்பாபு தொட்டியம் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி டி. செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

    இதில் வணிகர்கள் கலப்படம் செய்யப்பட்ட பொருள்களை எளிய முறையில் கண்டறிய செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் காட்டுப்புத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வணிகர்கள் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக் கூடாது. பேரூராட்சி சிறப்பாக செயல்பட அனைத்து வணிகர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    ஆரோக்கியமான தரமான உணவுப் பொருட்களை வணிகர்கள் விற்பனை செய்ய வேண்டும் உள்பட பல்வேறு வேண்டு கோளை வணிகர்சங்கத்திற்கு பேரூராட்சி நிர்வாகம் முன்வைத்தது. உணவு பாதுகாப்பில் அதிக கலர் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை வாங்க வேண்டாம். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாதீர்கள். ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தாதீர்கள் மற்றும் சட்டமன்ற அறிவிப்புகள் குறித்து வணிகர்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது.

    முடிவில் சங்கத் துணைத் தலைவர் ஜி. மோகன் குமார் நன்றி கூறினார்.

    • உணவு திருவிழாவில் சுகி சிவத்தின் அறுசுவை பட்டிமன்றம் நடக்கிறது.
    • ஓவியப்போட்டிகளுக்கு வருகிற 4-ந் தேதிக்குள் படைப்புகளை அனுப்பி வைக்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் 'திருப்பூர் உணவுத்திருவிழா -2022' காங்கயத்தில் வருகிற 7-ந்தேதி நடக்கிறது.விழாவின் ஒரு பகுதியாக காங்கயம் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து காலை 8 மணிக்கு, 'வாக்கத்தான்' விழிப்புணர்வு பேரணி நடக்கிறது. மேலும், சலங்கையாட்டம், ஒயிலாட்டம், வள்ளி கும்மி ஆட்டத்துடன் விழா களைகட்ட போகிறது.உணவுத்திருவிழாவில் சுகி சிவத்தின் அறுசுவை பட்டிமன்றம் நடக்கிறது.

    முன்னதாக பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான போட்டிகளும் நடக்கின்றன.உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகம், ஓவியப்போட்டிகளுக்கு வருகிற 4-ந் தேதிக்குள் படைப்புகளை அனுப்பி வைக்கலாம்.சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். படைப்புகளை, eatrighttiruppur@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும், உணவு பாதுகாப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்தும் சமர்ப்பிக்கலாம். விவரங்களுக்கு 78711 33777 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:-

    உணவு திருவிழாவின் ஒரு பகுதியாக 7-ந் தேதி காலை 10மணிக்கு, காங்கயம் என்.எஸ்.என்., திருமண மண்டபத்தில் சமையல் போட்டி நடக்கிறது.

    ஆரோக்கிய சமையல், அதிவேக சமையல், அடுப்பில்லா சமையல், குழந்தைகள் சமையல், பாரம்பரிய சமையல், தென்னிந்திய சமையல், சிறுதானிய சமையல், பால்வகை சமையல், மறந்து போன உணவகள், சமையல் அலங்காரம் ஆகிய தலைப்புகளில், சமையல் செய்யலாம்.போட்டியில், 'செப்' தாமு மற்றும் 'செப்' அனிதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.

    சமையல் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு, 'திருப்பூரின் அறுசுவை அரசி' என்ற பட்டமும், பரிசுகளும் வழங்கப்படும். போட்டியாளர் விரும்பிய உணவுகளை வீட்டில் தயாரித்தும் எடுத்துவரலாம். ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெறுபவர், இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். இறுதிப்போட்டி சமையல் கலைஞர் முன்னிலையில் மண்டபத்தில் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×