search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு மருத்துவக்கல்லூரி"

    • பிறந்த பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதற்காக இன்குபேட்டர் வசதி உள்ளது.
    • குழந்தைகளின் தீவிர சிகிச்சை பிரிவான இன்குபேட்டர் சிகிச்சையிலேயே இதுபோன்ற அவல நிலை ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

    கள்ளக்குறிச்சி:

    குறை பிரசவம் அல்லது உடல் எடை குறைவாக பிறந்த குழந்தைகளை வைத்து பாதுகாப்பதற்காக தற்போது அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் இன்குபேட்டர் வசதிகள் உள்ளன. அதாவது பிரிமெச்சூர் குழந்தைக்கு தேவையான உடல் வெப்பநிலையை பராமரிக்க இன்குபேட்டர் பயன்படுத்தப்படும். இதில் குழந்தையின் ரத்த அழுத்தம், இதயதுடிப்பு, சுவாசம் மற்றும் வெப்பநிலையை கண்காணிக்க சென்சார்கள் பயன்படுத்தப்படும். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், பிறந்த பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதற்காக இன்குபேட்டர் வசதி உள்ளது.

    ஆனால் அந்த இன்குபேட்டர் எந்திரத்தின் கருவியின் 4 புறத்திலும் இரும்பில் ஆன கால்கள் அமைக்கப்பட்டு, அதை தள்ளிக்கொண்டு செல்வதற்காக சக்கரம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள இன்கு பேட்டரில் 3 பகுதிகளில் மட்டும் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 இடத்தில் சக்கரம் இல்லாததால், அந்த எந்திரத்திற்கு 2 கல் வைத்து முட்டுக்கொடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் தீவிர சிகிச்சை பிரிவான இன்குபேட்டர் சிகிச்சையிலேயே இதுபோன்ற அவல நிலை ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். மேலும் மருத்துவக்கல்லூரி பெயர் அளவிற்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியாக செயல்படுவதாகவும், அங்கு முறையாக சிகிச்சை அளிப்பதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதற்கிடையே இன்குபேட்டரில் ஒரு குழந்தை வைத்திருக்கும் நிலையில், அதை தாங்கி நிற்கும் கம்பியில் ஒரு பகுதியில் மட்டும் கல் வைத்து முட்டுக்கொடுத்துள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • தாயும், சேயும் வராண்டாவில் தரையில் படுத்து சிகிச்சை பெற்று வந்தனர்.
    • மருத்துவ அலுவலர் ரவிக்குமார் சிறப்பு சிகிச்சைக்கான தனி அறை ஓதுக்கினார்.

    விக்கிரவாண்டி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தை சேர்ந்தவர் ராதிகா (வயது 28). கர்ப்பிணியான இவருக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரில ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை மூலம் கடந்த 5-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

    குழந்தையின் கையில் வழக்கத்தைவிட தசை அதிகமாக இருந்ததால், குழந்தைகள் வார்டிற்கு தாய் மற்றும் சேயை மாற்றினர். அங்கிருந்த அனைத்து படுக்கையிலும் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதனால் ராதிகா மற்றும் அவரது குழந்தைக்கு இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து தாயும், சேயும் வராண்டாவில் தரையில் படுத்து சிகிச்சை பெற்று வந்தனர். இது தொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

    இது தொடர்பாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி பதில் அளித்தார். இது தொடர்பாக இருவருக்குமிடையே டுவிட்டரில் கடுமையான வார்த்தைப் போர் நடைபெற்றது.

    இந்நிலையில், வராண்டாவில் தரையில் படுத்து சிகிச்சை பெற்று வந்த ராதிகா மற்றும் அவரது குழந்தைக்குக்கு தனி அறை ஒதுக்கிடு செய்ய மருத்துவக்கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி உத்தரவிட்டார். அதன்பேரில் மருத்துவ அலுவலர் ரவிக்குமார் சிறப்பு சிகிச்சைக்கான தனி அறை ஓதுக்கினார். அங்கு குழந்தைக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    • இளநிலை மருத்துவ படிப்புக்கு 100 இடங்கள் ஒதுக்கப்பட்டு மாணவர்கள் சேர்ந்து படித்து வருகிறார்கள்.
    • 3-வது பேட்ஜ் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் தாராபுரம் ரோட்டில் அரசு மருத்துவக்கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரி கடந்த 2021-22-ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது. இளநிலை மருத்துவ படிப்புக்கு 100 இடங்கள் ஒதுக்கப்பட்டு மாணவர்கள் சேர்ந்து படித்து வருகிறார்கள். இந்த கல்லூரி வளாகத்திலேயே அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரமாண்டமாக கட்டப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது.

    தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி.) ஒவ்வொரு ஆண்டும் அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஆய்வு செய்து அடுத்த ஆண்டு மருத்துவப்படிப்புக்கான அங்கீகாரம் புதுப்பிப்பு மற்றும் புதிய கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரத்தை வழங்குவது வழக்கம். புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகளில் முதல் 5 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் அங்கீகாரம் புதுப்பிப்பு இருக்கும். அதன்பிறகு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரம் மற்றும் புதுப்பிப்பு வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியில் தேசிய மருத்துவ ஆணையத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் கடந்த மாதம் 29-ந் தேதி வந்து ஆய்வு மேற்கொண்டனர். அரசு மருத்துவக்கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்களின் எண்ணிக்கை, மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்படும் விதம், ஆய்வகம், மருத்துவ மாணவர்களுக்கான வசதிகள், விடுதி வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், அரசு மருத்துவமனையில் நோயாளிக–ளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர்.

    குறிப்பாக அனைத்து மருத்துவ மாணவர்கள், பேராசிரியர்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகை பதிவு, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதை ஆய்வு செய்தனர். தங்கள் தரப்பில் இருந்து அனைத்தையும் திருப்திகரமான முறையில் தேசிய மருத்துவ ஆணைய குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு 2023-24-ம் ஆண்டுக்கான 100 மருத்துவ இடங்கள் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியுள்ளது. ஏற்கனவே கடந்த 2021-22-ம் ஆண்டு முதல் பேட்ஜ், 2022-23-ம் ஆண்டு 2-வது பேட்ஜ் என்ற நிலையில் வருகிற 2023-24-வது ஆண்டு 3-வது பேட்ஜ் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதுபோல் 2022-23-ம் ஆண்டு அங்கீகாரம் முதல் தடவை புதுப்பிக்கப்பட்டது என்றும், தற்போது 2-வது ஆண்டாக அங்கீகாரத்தை புதுப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு இந்த ஆண்டுக்கான அங்கீகாரம் மற்றும் ஏற்கனவே படித்து வருபவர்களுக்கான அங்கீகாரம் புதுப்பிப்பு கிடைத்துள்ளதால் மருத்துவத்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • அடுத்த கல்வியாண்டுக்கான அங்கீகாரம் புதுப்பிப்பது தொடர்பாக இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக ஆய்வு செய்துள்ளனர். விதிமுறைக்கு உட்பட்டு நாங்கள் திருப்தியாக செய்துள்ளோம்.

    திருப்பூர்:

    திருப்பூரில் ரூ.127 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ சேவையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேற்றுமுன்தினம் தொடங்கி வைத்தனர். 500 படுக்கை வசதிகளுடன் இந்த மருத்துவமனை சேவையை தொடங்கியுள்ளது.

    இந்நிலையில் தேசிய மருத்துவ கவுன்சிலில் இருந்து 5 பேர் கொண்ட குழுவினர் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். அடுத்த கல்வியாண்டுக்கான அங்கீகாரம் புதுப்பிப்பது தொடர்பாக இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அரசு மருத்துவக்கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்களின் எண்ணிக்கை, மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் விதம், ஆய்வகம், போதுமான டாக்டர்கள் உள்ளார்களா, மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கான வசதிகள், சிகிச்சை அளிக்கும் முறைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர். அப்போது அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் மற்றும் மருத்துவ அதிகாரிகள் உடனிருந்தனர்.

    ஆய்வு குறித்து டீன் முருகேசன் கூறும்போது, அரசு மருத்துவக்கல்லூரிக்கு வரும் கல்வியாண்டுக்கான அங்கீகாரம் வழங்குவதற்கு முன் தேசிய மருத்துவ கவுன்சில் குழுவினர் ஆய்வு செய்து, திருப்தி அளிக்கும் பட்சத்தில் அங்கீகாரத்தை புதுப்பித்து வழங்குவார்கள். திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள வசதிகள் குறித்து ஏற்கனவே தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு அறிக்கை அனுப்பிவிட்டோம். 5 பேர் கொண்ட குழுவினர் வந்து ஆய்வு செய்துள்ளனர். உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக ஆய்வு செய்துள்ளனர். விதிமுறைக்கு உட்பட்டு நாங்கள் திருப்தியாக செய்துள்ளோம். குழு ஆய்வுக்கு பிறகு திருப்தி அளிக்கும்பட்சத்தில் அங்கீகாரம் கிடைக்கும் என்றார்.

    சென்னை ஸ்டான்லி, திருச்சி, தர்மபுரி ஆகிய 3 அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தான நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியில் தேசிய மருத்துவ கவுன்சில் குழுவினர் ஆய்வு செய்து ள்ளனர். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியின் அங்கீகாரம் புதுப்பிப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என அதிரிகள் தெரிவித்தனர்.

    • திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணி முழுவீச்சில் முடிந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
    • 500க்கும் மேற்பட்டோர் அமரும் விதமாக கலையரங்கம் மருத்துவ கல்லுாரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணி முழுவீச்சில் முடிந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அனைத்து விதமான நிகழ்ச்சிகளும் நடத்த ஏதுவாக ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் அமரும் விதமாக கலையரங்கம் மருத்துவ கல்லுாரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது.இதன் முகப்பில் தமிழருக்கும் திருப்பூர் மாவட்டத்துக்கும் பெருமை சேர்க்கும் வகையிலான சிமென்டில் புடைப்பு சிற்பம் அமைக்கப்பட்டு, இது பார்வையாளர்களை கவரும் வகையில் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.

    அதில் பண்டை தமிழரின் ஆடல், பாடல்களை குறிப்பிடும் வகையில் ஆண், பெண் இருவரும் ஜோடியாக இணைந்து திருவிழா ஒன்றில் நடனம் ஆடுவது, வண்ணங்களில் தோரணம் கட்டி, களைகட்டிய ஊர்த்திருவிழா, மத்தளம் இசைத்தபடி பெண் கலைஞர்கள், கிராம கோவில்களில் நடக்கும் அன்றைய நாட்டிய நடன நிகழ்ச்சி.திருப்பூர் மாவட்டத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் களம் காண தயாராக இருக்கும் காங்கயம் காளை, பின்னலாடையின் அடையாளமாக வெவ்வேறு நிறங்களில் பளிச்சிடும் நூல் ரகங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரி வந்து செல்பவர்கள் ஓவிய வடிவமைப்பை உற்று கவனித்து வியந்து செல்கின்றனர்.

    • செப்டம்பர் 10ந் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக ஐ.நா சபை அறிவித்தது.
    • தற்கொலை செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது.

    திருப்பூர் :

    உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரி நுழைவாயிலில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமை தாங்கினார். மாணவ செயலர் பூபதிராஜா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் முருகேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் கூறுகையில் , செப்டம்பர் 10 ந் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக ஐ.நா சபை அறிவித்தது, இந்தாண்டின் மையக்கருத்தாக "செயல்பாடுகள் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்" உள்ளது. தற்போது எந்த பிரச்சனையாக இருந்தாலும் சர்வ சாதாரணமாக தற்கொலை செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. வீட்டில் உள்ளவர்கள் பேசினாலும், அறிவுரைகள் சொன்னாலும், காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, கடன் பிரச்சனை இப்படி எண்ணற்ற காரணங்களை முன்வைத்து தற்கொலை முடிவுகளை இளைஞர்கள் எடுக்கிறார்கள், அரிது அரிது மானிடனாக பிறப்பது அரிது, இன்பம் இருக்கும் இடத்தில் துன்பங்களும் இருக்கும் .அதை ஆராயந்து வாழ வேண்டுமே தவிர தற்கொலை தீர்வாகாது. இப்படியான தற்கொலைகளை தடுக்க வேண்டும் என்பதே உலக தற்கொலை தடுப்பு தினத்தின் நோக்கம் ஆகும்.

    முடிந்த அளவிற்கு தனிமையில் இருந்து வெளியே வர வேண்டும். பிரச்சனைகளை மனதிற்குள் கொண்டு செல்லக்கூடாது. மாணவர்கள் பெற்றோரிடம் மனம் விட்டு பேசவேண்டும்.தற்கொலை எண்ணங்களை தடுக்கவும், தற்கொலை முயற்சி செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து, அவர்களை மீண்டும் இந்த முயற்சியில் ஈடுபடாமல் தடுத்து மாற்றுப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வாழ்க்கை என்பது நமக்கு கிடைத்த வரம். அதை அனுபவித்து வாழ வேண்டும் என்றார்.

    மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில் ,பள்ளி கல்லூரிகளில் ஆலோசனை குழுக்களை ஏற்படுத்தி அதன் மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கலாம் என்றார். பிறகு மாணவ செயலர்கள் அருள்குமார், பூபாலன், அரவிந்தன் ஆகியோர் தலைமையில் மாணவ மாணவிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் தற்கொலை தடுப்பு ரிப்பன் அணிவிக்கப்பட்டது.தற்கொலை தடுப்பு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    வாழ்க்கை என்பது வாழ்வதற்கே, வெற்றி தோல்வி இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை என்ற உறுதிமொழியை எடுத்து விழிப்புணர்வினை ஏற்படுத்தினர். இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • வார்டுகளுக்கு கதவு, ஜன்னல் பொருத்தும் பணி, வயரிங் செய்து, தரைத்தளம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
    • ஆகஸ்டு இறுதிக்குள் திருப்பூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை 850 படுக்கைகளுடன் செயல்பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கலாம் என்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் நடப்பாண்டு ஜனவரியில் மருத்துவ கல்லூரி துவங்கப்பட்டது. மருத்துவப்படிப்புக்கான 100 இடங்கள் திருப்பூருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. தற்போது 98 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.மருத்துவ கல்லூரி மருத்துவமனை இரண்டுக்குமான பணி ஒரே நேரத்தில் துவங்கினாலும் மாணவர் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மருத்துவ கல்லூரி பணி முடிந்து விரைவாக திறக்கப்பட்டு விட்டது.

    ஓராண்டுக்கு முன் துவங்கப்பட்டாலும் இந்தாண்டு மார்ச் மாதத்துக்கு பின்புதான் மருத்துவமனை பணி சுறுசுறுப்பாகியது. கடந்த மே மாதம் அப்போதைய சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், கடந்த மாதம் சட்டசபை நிதிக்குழுவினர் கட்டுமான பணிகளை பார்வையிட்டு சென்னைக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.இந்நிலையில் 6 தளங்களில் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ள நிலையில் தற்போது வார்டுகளுக்கு கதவு, ஜன்னல் பொருத்தும் பணி, வயரிங் செய்து, தரைத்தளம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. வெளிவளாகத்தை சுற்றிலும் சுண்ணாம்பு பூச்சு பணி ஒரு வாரமாக நடந்து வருகிறது.

    திருப்பூர் தாராபுரம் ரோட்டில் இருந்து மருத்துவமனைக்குள் வரும் வழித்தடம், மருத்துவமனை சுற்றி பாதுகாப்புச்சுவர், மைய கட்டடத்துக்கான 2 நுழைவு வாயில்களுக்கு இறுதி கருத்துரு தயாராகியுள்ளது. ஓரிரு நாளில் இப்பணிகளும் துவங்கவுள்ளது.

    இது குறித்து பொதுப்பணித்துறையினர் கூறுகையில், மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணி, 60 சதவீதம் நிறைவுற்ற நிலையில் நடப்பு மாத இறுதிக்குள் 90 சதவீத பணியை முடித்து விட ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு இறுதிக்குள் திருப்பூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை 850 படுக்கைகளுடன் செயல்பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கலாம் என்றனர்.

    ×