search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது, வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் - அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பேச்சு
    X

    தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை மாணவர்கள் எடுத்துக்கொண்ட காட்சி.

    எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது, வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் - அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பேச்சு

    • செப்டம்பர் 10ந் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக ஐ.நா சபை அறிவித்தது.
    • தற்கொலை செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது.

    திருப்பூர் :

    உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரி நுழைவாயிலில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமை தாங்கினார். மாணவ செயலர் பூபதிராஜா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் முருகேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் கூறுகையில் , செப்டம்பர் 10 ந் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக ஐ.நா சபை அறிவித்தது, இந்தாண்டின் மையக்கருத்தாக "செயல்பாடுகள் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்" உள்ளது. தற்போது எந்த பிரச்சனையாக இருந்தாலும் சர்வ சாதாரணமாக தற்கொலை செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. வீட்டில் உள்ளவர்கள் பேசினாலும், அறிவுரைகள் சொன்னாலும், காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, கடன் பிரச்சனை இப்படி எண்ணற்ற காரணங்களை முன்வைத்து தற்கொலை முடிவுகளை இளைஞர்கள் எடுக்கிறார்கள், அரிது அரிது மானிடனாக பிறப்பது அரிது, இன்பம் இருக்கும் இடத்தில் துன்பங்களும் இருக்கும் .அதை ஆராயந்து வாழ வேண்டுமே தவிர தற்கொலை தீர்வாகாது. இப்படியான தற்கொலைகளை தடுக்க வேண்டும் என்பதே உலக தற்கொலை தடுப்பு தினத்தின் நோக்கம் ஆகும்.

    முடிந்த அளவிற்கு தனிமையில் இருந்து வெளியே வர வேண்டும். பிரச்சனைகளை மனதிற்குள் கொண்டு செல்லக்கூடாது. மாணவர்கள் பெற்றோரிடம் மனம் விட்டு பேசவேண்டும்.தற்கொலை எண்ணங்களை தடுக்கவும், தற்கொலை முயற்சி செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து, அவர்களை மீண்டும் இந்த முயற்சியில் ஈடுபடாமல் தடுத்து மாற்றுப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வாழ்க்கை என்பது நமக்கு கிடைத்த வரம். அதை அனுபவித்து வாழ வேண்டும் என்றார்.

    மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில் ,பள்ளி கல்லூரிகளில் ஆலோசனை குழுக்களை ஏற்படுத்தி அதன் மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கலாம் என்றார். பிறகு மாணவ செயலர்கள் அருள்குமார், பூபாலன், அரவிந்தன் ஆகியோர் தலைமையில் மாணவ மாணவிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் தற்கொலை தடுப்பு ரிப்பன் அணிவிக்கப்பட்டது.தற்கொலை தடுப்பு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    வாழ்க்கை என்பது வாழ்வதற்கே, வெற்றி தோல்வி இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை என்ற உறுதிமொழியை எடுத்து விழிப்புணர்வினை ஏற்படுத்தினர். இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    Next Story
    ×