என் மலர்
நீங்கள் தேடியது "பொங்கல் பண்டிகை"
- அரசின் கஜானாவில் பணத்தை சேர்க்கும்படி தலைமை செயலகத்துக்கு தபால் நிலையம் வழியாக அனுப்பி உள்ளேன்.
- இந்த ஆண்டு பரிசுத்தொகையை பெற்று நானாகவே மணியாடர் மூலமாக அரசுக்கு அனுப்பி உள்ளேன்.
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கருத்தப்பிள்ளையூர் கிராமத்தை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். சமூக ஆர்வலரான இவர் நேற்று அம்பை தலைமை தபால் நிலையத்திற்கு வந்தார்.
அங்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட்ட ரூ.3 ஆயிரம் பரிசு பணத்தை மணியார்டர் மூலம் தலைமை செயலகத்திற்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் வெளியே வந்த கிறிஸ்டோபர் கூறியதாவது:-
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளியவர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடும் விதமாக பரிசு தொகுப்போடு ரூ.3 ஆயிரம் ரொக்கம் வழங்கினார்.
அதனை நான் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்பாக ரேஷன் கடையில் பெற்றுக்கொண்டேன். தற்போது தமிழக அரசு கடுமையான நிதிச்சுமையில் இருக்கும் நிலையில் என் வீட்டை போல், நாட்டையும் நான் நேசிப்பதால் அந்த ரொக்க பணத்தை வைத்துக்கொள்ள விரும்பவில்லை. அதனால் அரசின் கஜானாவில் பணத்தை சேர்க்கும்படி தலைமை செயலகத்துக்கு தபால் நிலையம் வழியாக அனுப்பி உள்ளேன்.
ஒவ்வொரு ஆண்டும் அரசு இதுபோன்ற பரிசுத்தொகை வழங்கும்போது அரசின் நிதி சுமையை கருத்தில் கொண்டு அந்த பணத்தை பெற்றுக்கொள்ளாமல் விட்டு விடுவேன். ஆனால் அந்த பணம் மீண்டும் அரசின் கஜானாவுக்கு முறையாக செல்லுமா? என்று எனக்கு சந்தேகம் இருந்தது.
இதனால் இந்த ஆண்டு பரிசுத்தொகையை பெற்று நானாகவே மணியாடர் மூலமாக அரசுக்கு அனுப்பி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ரூ.140 கோடிக்கு மது விற்பனை கூடுதலாக நடைபெற்றது.
- போகி பண்டிகை மற்றும் பொங்கல் பண்டிகை ஆகிய 2 நாளுக்கான விற்பனை மட்டும் ரூ.519 கோடியாக உயர்ந்தது.
பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் கடந்த 14-ந்தேதி முதல் நேற்று 18-ந்தேதி வரை நடைபெற்றது. 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டதால் பொங்கலை உற்சாகமாக மக்கள் கொண்டாடினர்.
அதே நேரத்தில் டாஸ்மாக் கடைகளிலும் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் மது விற்பனை அதிகமாக நடைபெற்றதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு சுமார் ரூ.850 கோடிக்கு மது விற்பனை நடந்து உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ரூ.140 கோடிக்கு மது விற்பனை கூடுதலாக நடைபெற்றது.
இந்த ஆண்டு மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகமாக இருந்ததால் மது விற்பனையும் கூடியுள்ளது. போகி பண்டிகை மற்றும் பொங்கல் பண்டிகை ஆகிய 2 நாளுக்கான விற்பனை மட்டும் ரூ.519 கோடியாக உயர்ந்தது.
16-ந்தேதி மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால் 15-ந் தேதியே அதிக அளவு மதுபானங்கள் வாங்கி குவித்தனர். இதுவரையில் இல்லாத விற்பனையாக இது பார்க்கப்படுகிறது.
காணும் பொங்கலான 17-ந்தேதி மதுவிற்பனை படுஜோராக நடந்துள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, விழுப்புரம் மண்டலங்களின் மதுபானங்கள் தேவையான அளவு குவிக்கப்பட்டு இருந்தது.
நகரப் பகுதிகளை காட்டிலும் கிராமப்புறங்களில் மது விற்பனை கணிசமாக கூடி இருந்தது. இதற்குக் காரணம் நகர்ப்புறங்களில் இருந்து மக்கள் கிராமங்களில் பொங்கல் கொண்டாட சென்றது தான். அதனால் கிராமங்களில் உள்ள மதுக்கடைகளில் இரவு வரை மது விற்பனை களை கட்டியது.
நேற்று (ஞாயிற்றுக் கிழமை) விற்பனை குறைந்ததாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர். 4 நாட்களில் கையில் இருந்த பணம் முழுவதும் செலவாகி விட்டதால் நேற்று வழக்கமான அளவே விற்பனை நடந்து உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
புதிய ரக மதுபானங்களும் அதிக அளவில் கடைகளில் குவிக்கப்பட்டிருந்ததால் தேவையான மது வகைகளை வாங்கி அருந்தினர்.
குறைந்த ரக மதுபானங்கள் அதிக அளவில் விற்பனையானது. பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக மதுபானம் இடம் பெற்று இருந்ததால் ஓட்டல்களில் உள்ள மது பார்களிலும் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.
- கடந்த 14-ந்தேதி முதல் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
- பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நேற்று முதல் சென்னைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 15-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடந்த 14-ந்தேதி முதல் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பொங்கலையொட்டிய தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் வசிக்கும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு இருந்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிறுவனங்களை நடத்தி வருபவர்களும் தங்களது நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து விட்டு அவர்களும் ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு இருந்தனர்.
பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நேற்று முதல் சென்னைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.
இன்று முதல் பள்ளிக்கூடம் மீண்டும் திறக்கப்படுவதால், விடுமுறைக்காக குடும்பத்துடன் தென் மாவட்டங்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்பி வரத்தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக திருச்சி சென்னை NH சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சிங்கபெருமாள் கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை நோக்கி வரும் கார்கள், பேருந்துகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆமை வேகத்தில் பேருந்துகள் நகர்ந்து செல்வதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.
சொந்த ஊருக்கு சென்ற மக்கள் சென்னைக்கு திரும்புவதையடுத்து செங்கல்பட்டு டோல்கேட், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், தாம்பரம் ரெயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
- மாலை 4 மணிக்கு முடியும் படகு போக்குவரத்து 1 மணி நேரம் கூடுதலாக நீட்டித்து மாலை 5 மணி வரை படகு போக்குவரத்து நடந்தது.
- அனைவரும் கண்ணாடி பாலத்தில் நடந்து சென்று திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட்டு உள்ளனர்.
கன்னியாகுமரி:
சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது.
இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி முதல் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டது. இந்த தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து கடந்த 15-ந்தேதி முதல் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. வழக்கமாக காலை 8 மணிக்கு தொடங்கும் படகு போக்குவரத்து அன்று முதல் இன்று வரை 2 மணி நேரம் முன்னதாக அதிகாலை 6 மணிக்கு தொடங்கியது. அதேபோல மாலை 4 மணிக்கு முடியும் படகு போக்குவரத்து 1 மணி நேரம் கூடுதலாக நீட்டித்து மாலை 5 மணி வரை படகு போக்குவரத்து நடந்தது.
தொடர் விடுமுறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலம் ஆகியவற்றை 56 ஆயிரத்து 609 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுள்ளனர். போகிப்பண்டிகையான 14-ந்தேதி 9 ஆயிரத்து 593 பேரும், பொங்கல் பண்டிகையான 15-ந்தேதி 16 ஆயிரத்து 564 பேரும், மாட்டுப்பொங்கல் தினமான நேற்று முன்தினம் 14 ஆயிரத்து 737 பேரும், காணும் பொங்கல் தினமான நேற்று 15 ஆயிரத்து 715 பேரும் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் கண்ணாடி பாலத்தில் நடந்து சென்று திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- நெல்லையில் இருந்து சென்னை, கோவை, சேலம், திருப்பூா் உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட்டன.
- பயணிகளின் தேவைக்கு ஏற்ப பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 15-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடந்த 14-ந்தேதி முதல் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பொங்கல் விடுமுறை நாட்கள் இன்றுடன் முடிவடைகிறது.
நாளை (திங்கட்கிழமை) முதல் பள்ளிக்கூடம் மீண்டும் திறக்கப்படுவதால், விடுமுறைக்காக குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு நேற்று முதலே வெளியூர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கி உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் தாங்கள் பணிபுரியும் ஊர்களுக்கு நேற்று முதல் புறப்பட்டு வருகின்றனர். இன்றும் அதிகாலை முதலே ரெயில்களிலும், பஸ்களிலும் செல்ல தொடங்கி உள்ளனர்.
இதனால் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்தும், வழியாகவும் இயக்கப்பட்ட ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஏற்கனவே ரெயில்களில் இருக்கை நிரம்பி விட்ட நிலையில், புதிதாகவும் சிறப்பு ரெயில்கள் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டது.
ஆனால் அவையும் சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது. நேற்று அந்தியோதயா ரெயிலில் ஏற்கனவே பெரும்பாலான இருக்கைகள் நிரம்பியதால், நடைபாதை, படிக்கட்டு அருகில் ஏராளமானவர்கள் அமர்ந்தும், நின்றும் பயணம் செய்தனர். இன்றும் காலையிலேயே வந்த ரெயில்களில் பயணிகள் முண்டியடித்து ஏறிச்சென்றனர். இன்று மாலை இயக்கப்படும் அந்தியோதயா ரெயிலில் இடம் பிடிக்கவும், நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகளிலு பயணிக்கவும் காலை முதலே ரெயில் நிலையத்தில் வரிசை போட்டு பயணிகள் இடம் பிடிக்க காத்திருந்தனர்.
இதேபோல் நெல்லை புதிய பஸ் நிலையத்திலும் நேற்று இரவு முதல் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சென்னை, கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு புறப்பட்ட பஸ்களில் ஏராளமானோர் போட்டிப்போட்டு ஏறி பயணம் செய்தார்கள். மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சாா்பில் நெல்லையில் இருந்து சென்னை, கோவை, சேலம், திருப்பூா் உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட்டன.
பயணிகளின் தேவைக்கு ஏற்ப பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு புறக்காவல் நிலைய போலீசார் பஸ் நிலைய நடைமேடைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஒலிப்பெருக்கு மூலமாகவும் பயணிகளுக்கு எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டு கொண்டே இருந்தது.
- பொங்கல் பரிசுத்தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு, ரொக்கப்பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது.
- பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக டோக்கன்கள் முறையாக வினியோகம் செய்யப்பட்டு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கப்படும் எனவும், ரொக்கப்பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 8-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது.
பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக டோக்கன்கள் முறையாக வினியோகம் செய்யப்பட்டு அதன்படி பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது. இந்தநிலையில், பொங்கல் பண்டிகை முடிந்தபோதும் சுமார் 90 சதவீத ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசுத்தொகை ரூ.3 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, விடுபட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணமும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்றும் விடுபட்டவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அடுத்த அறிவிப்பு வரும் வரை பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் தொடரும் என்றும் ரேஷன்கடை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மனமகிழ் மன்றங்கள் மூலம் 14ம் தேதி ரூ.33.16 கோடிக்கு விற்பனை.
- மனமகிழ் மன்றங்கள் மூலம் 15ம் தேதி ரூ.49.43 கோடிக்கும் மது விற்பனை.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் மட்டும் ரூ. 518 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
டாஸ்மாக் மூலம் 14ம் தேதி ரூ.184.05 கோடிக்கும், 15ம் தேதி ரூ.251.23 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.
மனமகிழ் மன்றங்கள் மூலம் 14ம் தேதி ரூ.33.16 கோடிக்கும், 15ம் தேதி ரூ.49.43 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.
சென்னை மண்டல டாஸ்மாக் கடைகளில் மட்டும் ரூ.98 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
கடந்த பொங்கல் விடுமுறையின்போது 4 நாளில் ரூ.725 கோடிக்கு மது விற்பனையான நிலையில் இந்தாண்டு 2 நாளிலே ரூ.518 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளது.
- லாரி டிரைவர்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சென்னை:
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் இன்று மாட்டுப் பொங்கலும், நாளை காணும் பொங்கலும் கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கலையொட்டிய தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் வசிக்கும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிறுவனங்களை நடத்தி வருபவர்களும் தங்களது நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து விட்டு அவர்களும் ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக சாலைகள் வெறிச்சோடியே காணப்படுகின்றன.
குறிப்பாக வடசென்னை பகுதிகளில் கனரக வாகனங்கள் எப்போதுமே அணிவகுப்பதை காண முடியும். துறைமுகம் நோக்கி செல்லும் கனரக வாகனங்களால் செங்குன்றம், புழல், மாதவரம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் கண்டெய்னர் லாரிகள் அதிக அளவில் சென்று வரும்.
பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறைவிடப்பட்டுள்ளதால் லாரி டிரைவர்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக வடசென்னை பகுதிகளும் வாகனப் போக்குவரத்து இன்றியே காணப்படுகிறது.
நாளை காணும் பொங்கலுக்கு இன்று இருப்பதை விட வாகனப் போக்குவரத்து மிகவும் குறைவாகவே இருக்க வாய்ப்புள்ளதாகவும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
- சென்னையில் இருந்து மட்டும் சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர்.
- அரசு சார்பில் சுமார் 25,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கடந்த 6 நாட்களில் மட்டும் சொந்த ஊர்களுக்கு ஆம்னி பேருந்துகளில் 3.35 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 9ம் தேதிகளில் இருந்து இன்று மாலை வரை 3,35,150 பயணிகள் ஆம்னி பேருந்துகளில் சென்னையில் இருந்து வெளியூர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, அரசு போக்குவரத்துக் கழக சிறப்புப் பேருந்துகள் மூலம் இதுவரை சுமார் 7 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
ரயில், அரசு பேருந்து மற்றும் ஆம்னி பேருந்துகள் என அனைத்தையும் சேர்த்தால், சென்னையில் இருந்து மட்டும் சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர்.
பொங்கல் முடிந்து ஊர் திரும்புவதற்காக (ஜனவரி 16 - 19) அரசு சார்பில் சுமார் 25,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
- கடந்த 9-ந்தேதி முதல் நேற்று நள்ளிரவு வரை, மொத்தம் 15 ஆயிரத்து 762 பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன.
- இதுவரை 2 லட்சத்து 73ஆயிரத்து 152 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை:
தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்களின் பயண வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
நேற்று நள்ளிரவு 24 மணி நேர நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,092 பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 2,238 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. மொத்தம் 4,390 பஸ்கள் இயக்கப்பட்டு, 2 லட்சத்து 1940 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 9-ந்தேதி முதல் நேற்று நள்ளிரவு வரை, மொத்தம் 15 ஆயிரத்து 762 பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன. இதில் மொத்தம், 6 லட்சத்து 90ஆயிரத்து 720 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், இதுவரை 2 லட்சத்து 73ஆயிரத்து 152 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
பொங்கல் திருநாள் பயண காலத்தில், பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே, கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் ஆர். மோகன் தெரிவித்து உள்ளார்.
- கடந்த ஆண்டு அன்புமணி பங்கேற்ற நிலையில் தற்போது இருவருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அன்புமணி பங்கேற்கவில்லை.
- பொங்கல் விழாவில் ஒயிலாட்டம், சிலம்பாட்டம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன டாக்டர் ராமதாஸ் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
கடந்த ஆண்டு அன்புமணி பங்கேற்ற நிலையில் தற்போது இருவருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அன்புமணி இன்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்கவில்லை.
டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த பொங்கல் விழாவில் அவரது மனைவி சரஸ்வதி அம்மையார், மகள் ஸ்ரீகாந்தி, பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி, டாக்டர் ராமதாசின் பேரன் முகுந்தன் மற்றும் நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர், மாவட்ட செயலாளர்கள் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். இந்த பொங்கல் விழாவில் ஒயிலாட்டம், சிலம்பாட்டம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- பொங்கல் பரிசுத் தொகுப்பால் தமிழ் நாடெங்கும் பொங்கலை மிகச் சிறப்பாகக் கொண்டாட மக்கள் தயாராகி விட்டனர்.
- உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆர்வத்துடன் ஆயத்தமாகியுள்ளேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
உலகத் தமிழர் அனைவருக்கும் தமிழ்ப் பண்பாட்டுப் பெருநாள்-தைத்திருநாள்-உழவைப் போற்றும் அறுவடைத் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பச்சரிசி, சர்க்கரை, தித்திக்கும் செங்கரும்பு, புதிய வேட்டி சேலை, 3,000 ரூபாய் ரொக்கம் என நமது திராவிட மாடல் அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பால் தமிழ் நாடெங்கும் பொங்கலை மிகச் சிறப்பாகக் கொண்டாட மக்கள் தயாராகி விட்டனர்.
நானும், இன்று (ஜனவரி 14) சென்னை சங்கமம் கலைவிழா, ஜனவரி 17 அன்று உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆர்வத்துடன் ஆயத்தமாகியுள்ளேன்.
அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம், கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள், தூய்மைப் பணியாளர்கள்-செவிலியர்கள் எனப் பல்வேறு தரப்பினரின் நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேற்றம் என இந்தப் பொங்கல் அனைவருக்கும் மகிழ்ச்சிப் பொங்கலாக அமையவேண்டும் என மக்களின் மனமறிந்து நமது அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம், அனைவரும் வெல்வோம் ஒன்றாக என நாள்தோறும் நலத்திட்டங்கள் தொடர்கின்றன.
அடுத்த 5 ஆண்டுகள் செய்ய வேண்டிய பணிகளுக்கும் இப்போதே தயாராகும் வகையில், தமிழ் நாட்டு மக்களிடம் 'உங்க கனவ சொல்லுங்க' என அவர்களின் கோரிக்கைகள், தேவைகளைக் கேட்டறிந்து அவற்றை 2030-க்குள் நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளேன். கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அமைதி, மத நல்லிணக்கம், சமத்துவம் என ஆரோக்கிய அரசியலை முன்னெடுக்கும் இந்த நல்லாட்சி, திராவிட மாடல் 2.0 வடிவில் தொடர வேண்டும் என மக்களான நீங்களும் மனப்பூர்வமாக முடிவெடுத்துவிட்டீர்கள்.
பொங்கல் திருவிழாவிற்காக வெளியூர் சென்று திரும்புவோர் பாதுகாப்பாக பயணங்களை மேற்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
உழவர் பெருங்குடி மக்களை வணங்கி, புத்தாடை, வண்ணக்கோலம், உறவினர்களைச் சந்தித்து மகிழும் உற்சாகம், விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் பண்பு ஆகியவற்றோடு தமிழ்நாடெங்கும் புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமைந்திட எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள். பொங்கலோ பொங்கல்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






