என் மலர்tooltip icon

    வழிபாடு

    • 51 சக்தி பீடங்களில், 18 சக்தி பீடங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன.
    • தேவிபட்டினம். பராசக்தியின் அக்குள் பகுதி விழுந்த இடம்.

    இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள 51 சக்தி பீடங்களில், 18 சக்தி பீடங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்றாக திகழ்கிறது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம். பராசக்தியின் அக்குள் பகுதி விழுந்த இடமாகத் திகழும் இந்த சக்தி பீடம், `வீரசக்தி பீடம்' என்று போற்றப்படுகிறது.

    மகிஷாசுரமர்த்தினி கோபம் தணிந்து அமைதியான வடிவில் இங்கு கோவில் கொண்டிருப்பதாக எடுத்துரைக்கிறது, தேவிபுர மகாத்மியம். அதோடு அட்சர வகைகளில் சாகர எழுத்துக்களும் இத்தலத்து சக்திபீட நாயகியாக விளங்கும் அன்னை உலகநாயகியிடமே தோன்றியதாகவும் தெரிவிக்கிறது தேவிபுர புராணம்.

    மற்ற சக்தி பீடங்களில் உள்ள கரும்பாறை அமைப்பே இங்கும் இருப்பது இந்த வீரசக்தி பீடத்திற்கு ஆதாரமாக உள்ளது. இந்த தேவிகோட்ட பீடத்தில் உள்ள தேவியின் பெயர் `அகிலேஸ்வரி' என பிரஹத்நீலதந்திர நூல் குறிப்பிடுகிறது. இப்பெயரே `உலகநாயகி' என்று தமிழில் வழங்கப்படுகிறது. ராமாயண காவியம் போற்றும் முக்கிய ஷேத்திரம் இது. ராமபிரானது வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத இடமாகத் திகழ்கிறது, இந்த தேவிபட்டினம்.

    முதலாம் ராஜராஜ சோழனின் பட்டத்து அரிசியான லோகமாதேவியின் பெயரில் `உலகமாதேவிபட்டினம்' என்பதே மருவி தேவிபட்டினம் ஆனது என்று சரித்திரம் விவரிக்கிறது.

    மகிஷாசுர வதம்

    பிரம்மனிடம் வரம் பெற்ற மகிஷாசுரன், தேவர்களையும், ரிஷிகளையும் பலவாறு துன்புறுத்தினான். மகிஷாசுரன் தன்னுடைய அழிவு ஓர் பெண்ணால்தான் ஏற்பட வேண்டும் என்று வரம் பெற்றிருந்தான். எனவே அன்னை பராசக்திக்கு, சிவபெருமான் சூலத்தையும், திருமால் சக்கரத்தையும், பிரம்மா கமண்டலத்தையும் அளித்தனர்.

    அதேபோல் இந்திரன் வஜ்ராயுத்தையும், அக்னிபகவான் சக்தி என்னும் ஆயுதத்தையும், எமன் தண்டத்தையும், நிருதி கத்தியையும், வருணன் பாசத்தையும், வாயு பகவான் வில்லையும், குபேரன் பாண பாத்திரத்தையும் வழங்கினர்.

    மேலும் சமுத்திரராஜன் தாமரை மலரை வழங்கினான். சூரியன் ஒளிக்கதிர்களை கொடுத்தார். ஆதிசேஷன், நாக ஆபரணங்களை அளித்தார். சர்வ சக்திகளையும் பெற்ற பராசக்தி, 18 கரங்களில் 18 விதமான ஆயுதங்களை தாங்கி மகிஷாசுரனை வதம் செய்தாள். வதம் புரிந்த உடன் இங்கு வந்து தேவி சாந்தமடைந்து, படுத்தவண்ணம் சுயம்புவாக எழுந்தருளினாள்.

     ராமர் பெற்ற ஆசி

    ராவணனை வெல்லும் நோக்கத்தோடு இலங்கை செல்ல இருந்த ராமர் மற்றும் லட்சுமணர், அனுமன் உள்ளிட்ட வானரப் படையினர் அனைவரும், உப்பூரில் வீற்றருளும் வெயிலுகந்த விநாயகரை வழிபட்டனர். பின்னர் கடற்கரை ஓரமாகவே பயணித்த ராமரும், அவரது படைகளும் தேவிபூர் என்னும் இந்த தேவிபட்டினத்தில் முதலில் திலகேஸ்வரப் பெருமானை வணங்கி, பின் வீரசக்தி பீடத்தில் வீற்றருளும் மகிஷாசுரமர்த்தினியின் மறு உருவமான அன்னை உலகநாயகிக்கு, தீர்த்தம் உண்டாக்கி அபிஷேகித்து ஆன்ம சுத்தி அடைந்தனர். உலகநாயகி அம்மனை வணங்கி அவரது ஆசி பெற்ற பின்னர், கடல் பகுதியில் நவக்கிரகங்களை கல்லால் நிறுவி வழிபட்டனர்.

    அப்போது கடலில் அலைகள் முன்னெழும்பி வரவே, இங்கு அருள்புரியும் ஆதி ஜகந்நாதரை, ராமர் உள்ளிட்ட அனைவரும் ஆராதித்தனர். ஜெகந்நாத பெருமாளின் ஆணைக்கு அடங்கிய அலைகள் பின்னே செல்ல, நவக்கிரக நாயகர்களை நலமுடன் பூஜித்த பிறகு, வானரப் படையுடன் இலங்கை சென்றடைந்தார், ராமபிரான்.

    ஆலய அமைப்பு

    கடற்கரைக்கு சற்று உட்புறமாக அமைதியான சூழலில் அமைந்துள்ளது, உலகநாயகி அம்மன் ஆலயம். கிழக்கு முகமாக ஏழு கலசங்களைக் கொண்ட ஐந்து நிலை ராஜகோபுரம் அற்புதமாக காட்சியளிக்கின்றது. நான்கு தூண்களைக் கொண்ட முகமண்டபம் அழகுற காணப்படுகிறது. உள்ளே பலிபீடம், கொடிமரம் மற்றும் சிம்ம வாகனம் உள்ளது. நீண்ட முன் மண்டபம், பதினாறு தூண்களைக் கொண்டு பதினாறுகால் கருங்கல் மண்டபமாக பற்பல சிற்பங்களை தாங்கி நிற்கின்றது. பின் இடை மண்டபம். அடுத்ததாக கருவறை.

    கருவறை உள்ளே சுயம்பு வடிவாய் எழுந்தருளி, பேரருள் பரப்புகின்றாள் உலகத்தையே காத்தருளும் அன்னை உலகநாயகி. சுதையாக முழு உருவச் சிலையும் இங்கு காணப்படுகின்றன. ஆலயத்தைச் சுற்றி வருகையில் அம்பாளின் கருவறை மேலே அமைக்கப்பட்டுள்ள ஏகதள விமானத்தை வழிபடுவது சிறப்பு.

    பிராகாரத்தில் கந்தன், கணபதி மற்றும் நாகராஜர் சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறிய ஆலயம் எனினும் சீருடன் திகழ்கிறது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடைபெறுகின்றன. நவராத்திரி மற்றும் சித்ரா பவுர்ணமி ஆகிய வருடாந்திர விசேஷங்களும் இங்கு சிறப்புற கொண்டாடப்படுகின்றன.

    இந்த உலகநாயகி அம்மனை வழிபட சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். மன தைரியம் கூடும். எதிரிகளால் ஏற்படும் இடையூறுகள் நீங்கும். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இடைவிடாமல் ஆலயம் திறந்திருக்கும். சக்தி பீட நாயகியாக மட்டுமில்லாமல் கிராம தேவதையாகவும், பலரது குலதெய்வமாகவும் திகழும் உலகநாயகியை வழிபட்டு வாழ்வில் உயர்வு பெறுவோம்.

    அமைவிடம்

    ராமநாதபுரத்தில் இருந்து தொண்டி கடற்கரை சாலையில் ராமநாதபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தேவிபட்டினம்.

    • சஷ்டி விரதமும், வெள்ளிக்கிழமையும் இணைந்து வருவது சிறப்பு.
    • பெண்களுக்கு திருமாங்கல்ய பலம் கூடும்.

    சஷ்டி தினத்தில் முருகப்பெருமானின் அருளைப் பெற "சஷ்டி விரதம்" அனுஷ்டிக்கும் முறையையும், அதன் பலன்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

    சஷ்டி தினத்தன்று காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு வீடு முழுவதுமோ அல்லது வீட்டின் பூஜை அறையை மட்டுமோ சுத்தம் செய்ய வேண்டும், பின்பு பூஜையறையில் முருகன் படத்திற்கு முன்பு தீபமேற்றி, தூபங்கள் காட்டி, பால், பழம் நிவேதனம் வைக்க வேண்டும்.

    காலையில் இருந்து உணவேதும் அருந்தாமல் பூஜையறையில் அமர்ந்து "கந்த சஷ்டி கவசத்தையோ" வேறு ஏதேனும் முருகனின் மந்திரங்களையோ நாள் முழுவதுமோ அல்லது உங்களால் முடிந்த வரை ஜெபிக்க வேண்டும். வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள். ஓம் முருகா என்று மனதிற்குள் ஜெபித்தவாறு தங்கள் வேலையில் ஈடுபடலாம்.

    இந்த சஷ்டி விரத நாட்களில் புலால் உணவுகளையோ, போதை வஸ்துக்களையோ விரதமிருப்பவர் உண்ணக்கூடாது. மனதில் தீய எண்ணங்களோ, கடுமையான உணர்ச்சிகளோ இல்லாதவாறு இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். இந்த சஷ்டி விரதத்தை உணவருந்தாமலும், அப்படியில்லையெனில் ஒன்று அல்லது இரண்டு வேளை உணவு உட்கொண்டு மேற்கொள்ளலாம். வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மூன்று வேளை உணவு உட்கொண்டு இவ்விரதத்தை மேற்கொள்ளலாம்.

    சஷ்டி தினத்தன்று குழந்தை இல்லாத பெண்கள் விரதமிருப்பதால், அவர்களின் உடலின் குறைகள் நீங்கி முருகப்பெருமானின் அருளால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் ஆரோகியம் மேம்படும்.

    மேலும் இந்த விரதத்தை தொடர்ந்து மேற்கொள்பவர்களுக்கு எல்லா செல்வமும், எல்லாவற்றிலும் வெற்றியடையும் யோகமும் வாய்க்கும்.

    சஷ்டி விரதமும், வெள்ளிக்கிழமையும் இணைந்து வருவது சிறப்பு. தொடர்ந்து சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு அறிவுக் கூர்மையும், ஆற்றலும், செயல்திறனும் கூடும். குடும்ப உறவுகள் மகிழ்ச்சியாக இருக்கும். பெண்களுக்கு திருமாங்கல்ய பலம் கூடும்.

    சஷ்டி விரதம் இருப்பவர்கள், முதல் நாளான பஞ்சமி மதியம் முதலே விரதம் இருப்பது நல்லது. அன்று இரவு பால், பழம் மட்டும் சாப்பிட்டு, அடுத்த நாள் காலை நீராடி, சங்கல்பம் செய்து கொண்டு முருகப்பெருமானுடைய ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்ய வேண்டும்.

    மாலை பூஜை அறையில் விளக்கேற்றி, முருகப் பெருமானுக்கு மலர் மாலைகள் சாற்றி ஏதேனும் ஒரு நிவேதனத்தை வைத்துப் படைக்க வேண்டும். தூப தீபங்கள் காட்டி வணங்கி உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

    • திருப்போரூர் முருகப் பெருமாள் கிளி வாகனத்தில் பவனி.
    • கோவை கோனியம்மன் இந்திர விமானத்தில் தெப்போற்சவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, மாசி 18 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சஷ்டி நாளை விடியற்காலை 4.23 மணி வரை பிறகு சப்தமி.

    நட்சத்திரம்: சுவாதி காலை 10 மணி வரை பிறகு விசாகம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருப்போரூர் முருகப்பெருமாள் கிளி வாகனத்தில் பவனி. கோவை கோனியம்மன் இந்திர விமானத்தில் தெப்போற்சவம். ராமேசுவரம் ஸ்ரீராமநாதர் விழா தொடக்கம். ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு. திருவாரூர் தியாகராஜர் பவனி. ராமேசுவரம் பர்வத்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை மாடவீதி புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-போட்டி

    ரிஷபம்-செலவு

    மிதுனம்-சிரமம்

    கடகம்-பண்பு

    சிம்மம்-உயர்வு

    கன்னி-உறுதி

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-நட்பு

    தனுசு- அறிவு

    மகரம்-ஆய்வு

    கும்பம்-வெற்றி

    மீனம்-உதவி

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருப்பதி லட்டு பிரசாதமாக கொடுக்கப்படுவது ஏன் தெரியுமா?
    • பல்லவர் ஆட்சியில் பக்தர்களுக்கு பிரசாதம் அளிக்கும் திட்டம் தொடங்கியது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக கொடுக்கப்படுவது ஏன் தெரியுமா?

    கி.பி.830-ம் ஆண்டில்தான் முதல் முதலாக பல்லவர் ஆட்சியில் ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த காலத்தில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க மலையேறி செல்ல பல நாட்கள் ஆகும்.

    தரிசித்த பின்பும் சில நாட்கள் மலையில் தங்கி ஓய்வு எடுத்த பிறகு ஊர் திரும்புவது வழக்கம். அவர்கள் திரும்பி வீட்டுக்குச் செல்லும் வரை தேவையான உணவு அவர்களுக்கு கோவில் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    இதனால், முதலில் திருப்பொங்கம் என்ற பெயரில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னால், கி.பி.1445-ம் ஆண்டு முதல் சுய்யம் என்ற இனிப்பு பிரசாதமாகக் கொடுக்கப்பட்டது. 1455-ம் ஆண்டு அப்பம் கொடுக்கத் தொடங்கினார்கள். 1460-ம் ஆண்டில் அது வடையாக மாறியது. 1468-ம் ஆண்டு முதல் வடைக்கு பதில் அதிரசம் தரப்பட்டது. 1547-ம் ஆண்டு மனோஹரம் எனப்படும் இனிப்பு வழங்கப்பட்டது.

    1803-ம் ஆண்டு மதராஸ் மாகாணம் அமல்படுத்திய பிரசாத விநியோக முறையில் பூந்தி பிரசாதமாக விற்பனையானது. 1940-ம் ஆண்டு முதல் பூந்திக்கு பதில் லட்டு விற்பனை அமலானது.

    ஆரம்பத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு ஒன்று எட்டு அணாவிற்கு விற்கப்பட்டது. இதுதவிர, கல்யாண உற்சவ லட்டு, கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாழ்க்கையில் பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியாது.
    • பிரச்சனை இல்லாத வாழ்க்கை சுவாரசியமாகவும் இருக்காது.

    யாருக்கு தான் பிரச்சினை இல்லை. வாழ்க்கையில் பிரச்சினை இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியாது. அவ்வளவு ஏன்? பிரச்சினை இல்லாத வாழ்க்கை சுவாரசியமாகவும் இருக்காது என்பதற்கு பல உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.

    உதாரணத்திற்கு குடும்பத்தில் அண்ணன் - தம்பி பிரச்சினை, அக்கா-தங்கை பிரச்சினை, சொத்து பிரச்சினை, பண பிரச்சனை ... இவை அனைத்தயும் தீர்த்து வைக்க முடியும்.

    ஆனால் எப்போதுமே..... வீட்டில் பிரச்சினை வந்துகொண்டே இருந்தால் என்ன செய்வது? மன நிம்மதி இருக்காது. உடல் ஆரோக்கியம் சீர்கெடும், எந்த வேலையிலும் நாட்டம் இருக்காது. இப்படியான நிலையில், குடும்பத்தில் அமைதி நிலவவும், சண்டை சச்சரவுகள் இல்லாத வாழ்கை வாழவும், எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் உதிக்கவும் மிக சிறப்பான வழிமுறை ஒன்று உள்ளது.

     பரிகாரம்

    தினமும் மாலை நேரத்தில் வேப்பிலை மீது இரண்டு அகல் விளக்கு வைத்து ஏற்றுவது மிகவும் சிறந்தது. அதாவது, நம் வீட்டு வாசலில் சதுர வடிவில் மஞ்சளால் கோலமிட்டு... அதன் மீது வேப்பிலையை பரப்பி, அதன் மீது 2 அகல் விளக்குகளில் மஞ்சள் திரியிட்டு விளக்கேற்றி வந்தால், திருஷ்டி படாது. எதிரிகள் நம்மை விட்டு விலகுவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். இவ்வாறு ஏற்றப்படும் விளக்கு குறிப்பாக கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 108 வைணவ திவ்ய தலங்களில் 45-ம் திவ்ய தேசமாகும்.
    • நின்ற நாராயணப்பெருமாள்' நிற்கும் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ளத தொன்மை வாய்ந்த திருநின்ற நாராயண பெருமாள் கோவில் உள்ளது. விரும்பும் வாழ்க்கைத் துணையை அடைய விரும்புபவர்கள் திருநின்ற நாராயண பெருமாளை வேண்டி வணங்கினால் பிரார்த்தனை நிறைவேறும்.

    திருமணத் தடை உள்ளவர்கள் பெருமாளையும், தாயாரையும் தொடர்ந்து வணங்கினால் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பெருமாளுக்கு பரிவட்டம் சாற்றி வழிபடுகின்றனர். சிலர் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்தும், புளியோதரை படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    சித்ரா பவுர்ணமி, வைகாசி வசந்தோற்சவம், ஆனி பிரமோற்சவம், ஆவணி பவித்ரோற்சவம், புரட்டாசி கருட சேவை, பங்குனி திருக்கல்யாண உற்சவம் ஆகிய விழாக்கள் இக்கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

     தல வரலாறு

    இந்த கோவிலில் மூலவராக திருநின்ற நாராயண பெருமாள் வீற்றிருக்கிறார். செங்கமலத்தாயார், ஆஞ்சநேயர், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. கோயிலில் கொடிமரம் உள்ளது. பாஸ்கர தீர்த்தம், பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதி ஆகியவை தல தீர்த்தங்களாக உள்ளன. ஸ்ரீரங்கம், அழகர்கோவில் போன்று இங்கும் சோமசந்திர விமானம் உள்ளது.

    திருத்தங்கல்லில் உள்ள `தங்காலமலை' என்ற குன்றின் மீது திருநின்ற நாராயண பெருமாள் கோவில் உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. கோயிலை கட்டியவர் குறித்து விபரம் எதுவும் இல்லை.

    இந்த கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 45-ம் திவ்ய தேசமாகும். 2 நிலைகளாக உள்ள இந்த கோயிலில் முதல் நிலை கோயிலில் மூலவரான 'நின்ற நாராயணப்பெருமாள்' நிற்கும் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இவரது திருமேனி சுதையால் ஆனது. இவருக்கு தெய்வீக வாசுதேவன், திருத்தங்காலப்பன் என திருநாமங்கள் உள்ளன. 2-ம் நிலை கோவிலில் செங்கமலத்தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    • மாசி தேர் திருவிழா மிக சிறப்பாக கொடியேற்றத்துடன் நடைபெறுவது வழக்கம்.
    • மாசி தேர் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

    பவானி:

    பவானி நகர மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறது செல்லாண்டி அம்மன், மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி தேர் திருவிழா மிக சிறப்பாக கொடியேற்றத்துடன் நடைபெறுவது வழக்கம்.

    செல்லியாண்டி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்று 12 ஆண்டுகளுக்கு மேல் முடிவடைந்த நிலையில் தமிழக அரசு இந்து அறநிலைத்துறை அனுமதி பெற்று கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் 2 கோவிலிலும் கும்பாபிஷேக பணிகள் தொடக்க விழா பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செல்லியாண்டி அம்மன் கோவில் வளாகத்தில் செல்லியாண்டி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் திருவிழா நடத்துவது பற்றி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

    அப்போது கட்டளைதாரர்கள், ஊர் பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டு கோவில் திருப்பணி நடைபெறும் காரணத்தால் மாசி திருவிழா நடத்த வேண்டாம் என ஒரு மனதாக முடிவு செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து பவானி நகரத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடி உடலில் சேறு பூசி பல்வேறு வகையான வேடங்களில் அணிந்து சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் மாசி தேர் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பவானி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள எல்லையம்மன் கோவில், வர்ணபுரம் சமயபுரம் மாரியம்மன் கோவில், மேற்குத்தெரு மாரியம்மன் கோவில் செல்லியாண்டி அம்மன், மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் உள்ள மூலவருக்கு பக்தர்கள் மற்றும் கட்டளை தாரர்கள் கும்பாபிஷேக விழா குழுவினர் முன்னிலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

    பவானி நகரில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி செல்லியாண்டி அம்மன் மற்றும் மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த மாசி திருவிழா ரத்து செய்யப்பட்டதால் தொடர்ந்து பவானி நகரம் களை இழந்து காணப்பட்டது.

    • தோப்புக்கரணம் போட்டால் விநாயகர் மகிழ்ந்து அருள் புரிவார்.
    • சஹஸ்ர நாமம்'' கூறி ஒவ்வொரு மலராக அர்ச்சனை செய்தார்.

    விஷ்ணு பகவான் காத்தல் தொழில் புரிய வேண்டி அதற்காக சில ஆயுதங்களைப் பெற்றார். அதில் ஒன்று தான் சக்ராயுதம். அவர் அச்சக்கரத்தை ஒரு போரில் ததீசி என்ற முனிவர் மேல் ஏவ அது சக்தி இழந்து திரும்பி வந்துவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஷ்ணு பகவான் வேறு ஒரு வலிமையான ஆயுதம் வாங்குவதற்காக சிவனை வழிபடச் சென்றார்.

    அப்போது வாசலில் இருந்த விநாயகப் பெருமானை வணங்காமல் விஷ்ணு உள்ளே சென்றுவிட்டார். இதனால் விஷ்ணு பகவான் மீது விநாயகருக்கு கோபம் வந்தது. இதை அறியாத விஷ்ணு பகவான், சிவபெருமானை போற்றி வணங்கி 1000 தாமரை மலர்களால், சிவபெருமானின் ஆயிரம் திருநாமங்களாகிய "சஹஸ்ர நாமம்'' கூறி ஒவ்வொரு மலராக அர்ச்சனை செய்தார்.

    இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான், முன்பொருசமயம் ஜலந்தராசுரன் என்ற அரக்கனை மாய்க்க தம் கால் நகங்களால் உருவாக்கி இருந்த சுதர்சனம் எனும் சக்கர படைப்பை விஷ்ணு பகவானுவுக்கு கொடுத்தார். விஷ்ணு பகவான் சுதர்சனசக்கரத்தை வாங்கிக்கொண்டு வரும்போது வாயிலில் இருந்த விநாயகப் பெருமான் வழிமறித்தார். விஷ்ணு பகவானின் கையில் இருந்த சுதர்சன சக்கரத்தை பிடுங்கி தம் வாயில் போட்டுக் கொண்டார்.

    அதனைக் கண்டு அதிர்ந்த விஷ்ணு பகவான், தாம் விநாயகப் பெருமானை வணங்காது சென்றது தவறுதான் என்பதை உணர்ந்தார். அவரை வணங்கி, தமது நான்கு திருக்கரங்களாலும் இருகாதுகளையும் பற்றிக்கொண்டு பலமுறை உட்கார்ந்து எழுந்து தோர்பி, கர்ணம் இட்டார். இந்த செயல் பார்க்க மிகவும் நகைச்சுவையாக இருந்ததால் விநாயகர் தம் கோபம் மறந்து விழுந்து விழுந்து சிரித்தார்.

     அப்போது அவர் வாயில் இருந்த சுதர்சன சக்கரம் வெளியில் விழுந்தது. அதனை எடுத்து விநாயகப் பெருமானிடம் வணங்கி ஆசிபெற்றார் விஷ்ணு பகவான். (இந்த கணபதி விகடச்சக்கர விநாயகர் என போற்றப்படுகிறார். இவர் காஞ்சிபுரம் கோவிலில் வீற்றிருந்து அருளாட்சி செய்கிறார்). இப்படி தோப்புக்கரணம் போட்டால் விநாயகர் மகிழ்ந்து அருள் புரிவார் என்பதாலேயே இச்செயல் நடைமுறைக்கு வந்தது.

    • மாசி, பங்குனி மாதங்களில் குலதெய்வ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
    • சுடச்சுட கமகமக்கும் கறி விருந்து.

    பசும்பொன்:

    ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் மாசி, பங்குனி மாதங்களில் குலதெய்வ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அவ்வாறு நடைபெறும் விழாக்க ளில் நேர்த்திக்கடனாக ஆட்டுக்கிடாய்களை சுவா மிக்கு பலியிட்டு, பின்னர் அதன் கறியை கமகமக்கும் வகையில் சமையல் செய்து பக்தர்களுக்கு விருந்தாக படைப்பது காலம் காலமாய் நடைபெற்று வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே ஆனையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம் மன் மற்றும் கருப்பண்ண சாமி, வன்னி குலசாமி கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள சுவாமிகள் மற்றும் தேவதைகளுக்கு 17-ம் ஆண்டு மாசி களரி திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.

     இதில் சுவாமிகளுக்கு நேர்த்திக்கடனாக 51 ஆட்டு கிடாய்களைப் பலியிட்டு, 1,008 கிலோ வெள்ளாட்டுக்கறியை அதிகாலையில் சமையல் செய்து தங்களது குலதெய்வ வழிபாடு நடத்தினர். இதில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் சுடச்சுட கமகமக்கும் கறி விருந்து வைத்தனர்.

    இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குவிந்த பக்தர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குலதெய்வ வழிபாடு செய்து, பின்னர் நீண்ட வரிசையில் பொறுமையாக நின்று ஆட்டுக்கிடாய் கறி விருந்தை ருசித்து சாப்பிட்டனர். பக்தர்கள் கூட்டம் அலை மோதியதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது.
    • அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலன்கள் பற்றிய விபரங்கள்.

    விநாயகர் சதுர்த்தி அல்லது சங்ககடஹர சதுர்த்து அல்லது சதுர்த்தி திதி அன்று 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது. 21 பதிரங்களைத் தெரிந்து கொள்வது நலம் பல பயக்கும் என்பர். அவ்வாறான பதிரங்களும், அவற்றைக் கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு:-

    1. முல்லை இலை: அறம் வளரும்

    2. கரிசலாங்கண்ணி இலை: இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.

    3. விஸ்வம் இலை: இன்பம், விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.

    4. அருகம்புல்: அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

    5. இலந்தை இலை: கல்வியில் மேன்மையை அடையலாம்.

    6. ஊமத்தை இலை: பெருந்தன்மை கைவரப் பெறும்.

    7. வன்னி இலை: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப் பெறும்.

    8. நாயுருவி இலை: முகப் பொலிவும், அழகும் கூடும்.

    9. கண்டங்கத்திரி இலை: வீரமும், தைரியமும் கிடைக்கப் பெறும்.

    10. அரளி இலை: எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.

    11. எருக்கம் இலை: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிடைக்கும்.

    12. மருதம் இலை: மகப்பேறு கிடைக்கும்

    13. விஷ்ணுகிராந்தி இலை: நுண்ணிவு கைவரப் பெறும்.

    14. மாதுளை இலை: பெரும் புகழும் நற்பெயரும் கிடைக்கும்.

    15. தேவதாரு இலை: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிடைக்கும்.

    16. மரிக்கொழுந்து இலை: இல்லற சுகம் கிடைக்கப் பெறும்.

    17. அரச இலை: உயர் பதவியும், பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்.

    18. ஜாதிமல்லி இலை: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப் பெறும்.

    19. தாழம் இலை: செல்வச் செழிப்புக் கிடைக்கப் பெறும்.

    20. அகத்தி இலை: கடன் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

    21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை: நல்ல கணவன்- மனைவி அமையப் பெறும்.

    • 8-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
    • கருட வாகன வீதிஉலா மார்ச் 4-ந்தேதி நடக்கிறது.

    திருமலை:

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி, அடுத்த மாதம் (மார்ச்) 8-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி நேற்று அதிகாலை மூலவரை துயிலெழுப்பி சுப்ரபாதம், கொலு, பஞ்சாங்க சிரவணம், மாலை அங்குரார்ப்பணம் நடந்தது.

    மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை புண்யாஹவச்சனம், மிருதங்கரஹணம், சேனாதிபதி உற்சவம் நடந்ததும், சிறப்புப்பூஜைகள் செய்து புற்று மண் எடுத்து வந்து முளைப்பாரிக்காக விதைகள் விதைப்பு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிகளில் கோவில் சிறப்பு நிலை துணை அதிகாரி வரலட்சுமி, உதவி அதிகாரி கோபிநாத், கண்காணிப்பாளர் செங்கல்ராயுலு, கோவில் ஆய்வாளர் கிரண்குமார் ரெட்டி மற்றும் கோவில் அர்ச்சகர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 8.40 மணியில் இருந்து 9 மணிக்குள் மீன லக்னத்தில் பாரம்பரிய முறைப்படி பிரம்மோற்சவ விழா `கருட' கொடியேற்றம் நடக்கிறது.

    முன்னதாக இன்று காலை 6.30 மணியில் இருந்து 8.30 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    அதைத்தொடர்ந்து மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை ஊஞ்சல் சேவை, இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை பெரிய சேஷ வாகன வீதிஉலா நடக்கிறது. வாகன சேவைகள் தினமும் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரையிலும், மீண்டும் இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் நடக்கிறது.

    வாகனங்களில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் தனித்தும், உபய நாச்சியார்களுடன் சேர்ந்தும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பிரம்மோற்சவ விழாவின் `சிகர' நிகழ்ச்சியாக கருடவாகன வீதிஉலா (கருட சேவை) மார்ச் 4-ந்தேதி நடக்கிறது.

     விழாவையொட்டி கோவில் வளாகம், நான்கு மாடவீதிகள் முழுவதும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்காக கோவில் புஷ்கரணி சுத்தம் செய்து தூய புனிதநீர் நிரப்பப்பட்டுள்ளது.

    • சனியானவர் ஜன்ம லக்னத்தில் இருந்தால் சங்கடங்கள் சூழக் கூடும்.
    • 2-ஆம் இடத்தில் உள்ள சனி நிறையப் பணம் தருவார்.

    1. சனியானவர் ஜென்ம லக்னத்தில் இருந்தாரானால் அது சொந்த வீடாக இல்லாத பட்சத்தில் ஜாதகரின் வாழ்க்கையில் சங்கடங்கள் சூழக்கூடும். ஜாதகர் வறுமையில் உழல்வார். மட்டமான செயல்களைச் செய்யக்கூடியவர் ஆவார். மந்தமாகப் பேசுவார்.

    2. லக்னத்தில் சனி இருந்து சனிக்கு அது பகைவீடாக இருக்குமானால் நண்பருடன் சண்டை போடுகிற குணம் ஜாதகருக்கு அமையும். ஜென்ம லக்னம் துலாமாகவோ, தனுசாகவோ, மீனமாகவோ அமைந்து அதில் சனி இருந்தால் ஜாதகருக்கு உயர்வுகள் உண்டு. தோற்றப் பொலிவு இருக்கும். ஒரு குழுவுக்குத் தலைமை தாங்கும் தகுதி ஏற்படும்.

    3. மகரம் அல்லது கும்பம் ஜென்ம லக்னமாகி சனியானவர் அங்கே இருந்தால் ஜாதகருக்கு விசேஷமான தகுதிகள் நன்மைகள் சிறப்புகள் எல்லாம் உண்டாகும்.

    4. ரிஷபத்தில் உள்ள சனியானவர் அது ஜென்ம லக்னமானால் சிறப்பான பலன்களைத் தருவார் என்று சில கிரந்தங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

    5. 2-ஆம் இடத்தில் உள்ள சனி நிறைய பணம் தருவார். ஆனால், அந்த பணத்தை இழக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படக்கூடும். 2-ல் உள்ள சனியினால் முகத்தில் நோய் அல்லது வாயில் புண் ஆகியவை உண்டாகக் கூடும்.

    6. சனியானவர் 2-ஆம் இடத்தில் இருந்தாரானால் தாய்நாட்டை விட்டு வெளிநாட்டிற்கு சென்று சுகபோகங்களையும், செல்வங்களையும் பெறக்கூடியவராக இருப்பார்.

    7. 2-ல் உள்ள சனியால் ஜாதகருக்குத் தாயிடம் பக்தி உண்டாகும். ஆனால், சகோதர பாசம் இராது.

    8. 2-ல் உள்ள சனிக்கு சுப பலம் இருக்குமானால் அதாவது ஆட்சி, உச்சம் போன்ற நிலை இருக்குமானால் குறைகள் குறையவும், நிறைகள் அதிகமாகவும் சந்தர்ப்பமுண்டு.

    9. 3-ஆம் இடத்தில் உள்ள சனி அறிவு, ஆற்றல் இரண்டையும் தருவார். ஆனால், மனோவியாகூலம் அவ்வப்போது உண்டாகும்.

    10. சனியானவர் 3-ல் இருந்தால் ஜாதகருக்குத் தரும குணம் இருக்கும். ஆனாலும் செய்யும் காரியங்களில் தரக்குறைவு இருந்து கொண்டிருக்கும். 3-ல் உள்ள சனி பலம் பெற்றிருந்தாரானால் குறைகள் எல்லாம் அகல்வதோடு மனைவியால் இன்பமும், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் உண்டாகும்.

    11. 3-ஆம் இடத்தில் உள்ள சனி பலவீனமாக இருந்தாரானால் சகோதரர்களுக்கு நாசம் ஏற்படக்கூடும். தாய்நாட்டை விட்டு வெளிநாடு செல்லக்கூடிய நிலை ஜாதகருக்கு உண்டாக கூடும். அந்த நிலை நல்லதாக அமைவதற்கு 3-ல் உள்ள சனிபலம் பெற்றிருக்க வேண்டும்.

    12. 4-ல் உள்ள சனி மகிழ்ச்சியைக் கெடுப்பார். அமைதியைக் குலைப்பார். கவலையைக் கொடுப்பார். குடும்பத்திலிருந்து பிரிய வைப்பார்.

    13. 4-ம் இடத்தில் உள்ள சனியால், தந்தை வழி நலம் குறையும். சொத்துக்கள் சேர்மானம் இராது. இருதயநோய் ஏற்படக்கூடும். வயிற்றுவலியும் உண்டாகக்கூடும்.

    14. 4-ம் இடத்தில் உள்ள சனியினால் அந்நிய தேசவாசம் ஜாதகருக்கு உண்டாகும்.

    15. பலம் பொருந்தியவராக உள்ள சனி 4-ல் இருப்பாரானால் ஜாதகருக்குச் சுபிட்சமும், செல்வமும் வாகன வசதியும் ஏற்படதடையிராது

    16. 5-ல் சனி மக்கள் பாக்கியத்தைக் குறைப்பார். புத்திர தோஷம் உண்டாகக் கூடும். மேலும் செல்வம் சந்தோஷம் இவைகள் குறையும்.

    17. 5-ல் உள்ள சனி ஜாதகருக்குப் புத்தி மந்தத்தை உண்டு பண்ணுவார். பகைவரால் தொல்லையை உண்டாக்க கூடும். மனநலம் திருப்திதராது. நேர்வழியில் சிந்தனை செல்லாது. மன வியாதி உண்டாக கூடும்.

    18. 5-ல் உள்ள சனியின் மூலம் வயிற்றுநோய் உண்டாகலாம். ஆனால் பொதுவாக ஓர் உன்னதமான வாழ்க்கை பெறுவதற்குச் சந்தர்ப்பம் உண்டு.

    19. 8-ல் உள்ள சனி உச்சமாகவோ, ஆட்சியாகவோ இருந்தாரானால் கெட்ட பலன்கள் பெருமளவுக்கு குறைந்து விடும். நல்ல பலன்கள் இடம்பெறும்.

    20. 6-ஆம் இடத்தில் சனிக்குப் பலம் இருக்குமானால் ஜாதகர் பகைவரை வெற்றிக் கொள்வார். பலம் குறைந்த சனியினால் ஜாதகர் பகைவரால் ஒடுக்கப்படுவார்.

    21. 6-ல் உள்ள சனி பகைவருடைய வீட்டிலோ, நீச்ச நிலையிலோ இருப்பாரேயானால், பிறந்த குடிக்கே நாசம் தேடுவார். மேலும் வாழ்வில் சோதனையை ஜாதகர் சந்திக்கக்கூடும்.

    22. பொதுவாக 6-ஆம் இடம் சனிக்கு ஏற்புடைய இடமாகையால் ஜாதகர் கவுரவமாகவும், செல்வ சுகங்களோடும் வாழக்கூடும். ஜீரண சக்தியும் ஜாதகருக்கு இருக்கும்.

    23. 6-ஆம் இடத்தில் உள்ள சனியினால் தாய் நலம் பாதிக்கப்படும். வயிற்றுப்புண் ஏற்படக்கூடும். இந்த சனி பலமுள்ளவராக இருந்தால் ஜாதகருக்கு நோய் நொடிகள் உண்டாகாமல் ஆரோக்கியம் இருந்து வரும்.

    24. 7-ல் உள்ள சனியினால் நன்மைகள் குறையும். செல்வ சுபிட்சம் குறையும். அலைச்சல்கள் அதிகமாகும்.

    25. 7-ஆம் இடத்தில் உள்ள சனி, ஆண் ஜாதகருக்குத் தகாத பெண் சேர்க்கையை உண்டாக்கும். கீழ்த்தரமான செயல்களை ஜாதகர் செய்ய நேரும்.

    26. 8-ல் உள்ள சனியால் கண்பார்வை மங்கக்கூடும். வயிற்றுக் கோளாறு உண்டாகக் கூடும்.

    27. 8-ல் உள்ள சனி ஜாதகருக்குப் பணத்தைச் சேர்த்துத் தருவாரே தவிர மதிப்பை தர மாட்டார். ஜாதகர் அடிமை வேலை செய்ய வேண்டியிருக்கும். சுயமாக பெரிய காரியங்களை நிர்வகிக்கக்கூடிய ஆற்றல் இல்லாமல் போகும்.

    28. 8-ல் உள்ள சனி இளம் வயதில் ஜாதகருக்கு மகிழ்ச்சியை தரமாட்டார். ஆயுளை தீர்க்கமாகக் கொடுப்பார்.

    29. 9-ல் உள்ள சனியால் ஜாதகருக்குப் பணம் குவியும். மகிழ்ச்சி ஏற்படும். மக்களால் மகிழ்ச்சியுண்டாகும்.

    30. சனி 9-ல் இருக்கப் பிறந்தவர்களுக்கு வேதாந்த மனப்பான்மை ஏற்படும். ஜோதிடம் போன்ற கலைகளில் பாண்டித்யம் உண்டாகும்.

    31. 9-ல் உள்ள சனி பலவீனம் பெற்றிருந்தால் ஜாதகருக்கு அதிர்ஷ்டக்குறைவு உண்டாகும். மற்றவர்களுக்கு ஜாதகரால் தொல்லை விளையக்கூடும்.

    32. பெரும்பாலும் 9-ல் உள்ள சனி ஜாதகருக்கு வெளிநாட்டில் யோகத்தை உண்டு பண்ணுவார்.

    33. 10-ஆம் இடத்தில் உள்ள சனியானவர் விவசாயம் மற்றும் தானியங்கள், எண்ணெய், உரம் ஆகியவற்றின் மூலம் ஜாதகர் பொருள் திரட்ட சந்தர்ப்பத்தைத் தேடித்தருவார்.

    34. 10-ல் உள்ள சனி ஜாதகருக்கு சாத்திர ஞானத்தை உண்டு பண்ணுவார். சிறந்த கல்வி ஜாதகருக்கு உண்டாகும். தைரியம் புகழும் ஜாதகரை வந்து சேரும்.

    35. 10-ல் உள்ள சனி ஜாதகரை பணக்காரராக்குவார். உயர்ந்த ஸ்தானத்தைக் கொடுப்பார். பெரிய நிர்வாகியாக விளங்குவார்.

    36. 10-ஆம் இடத்தில் சனி உள்ளவர்கள் சமூகத்திற்குத் தலைமை தாங்க முடியும். பெரிய குழுவுக்கு ஜாதகர் தலைமை தாங்கும் சக்தி ஏற்படக் கூடும்.

    37. 10-ல் உள்ள சனி ஜாதகருக்கு வெளிநாட்டு வாசத்தை உண்டு பண்ணுவதற்கும் சந்தர்ப்பமுண்டு.

    38. சனி 11-ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் நிறையச் சம்பாதிப்பார். சொத்துக்கள் சேர்ப்பார். நிறைய வருமானம் அடையப் பெறுவார்.

    39. 11-ஆம் இடத்தில் உள்ள சனி மூலம் ஜாதகர் தைரியசாலியாக வாழ முடியும். சரீர சுகம் அமையும். ஆனால் இளமையில் உடல் உபாதை ஏற்படக் கூடும்.

    40. பொதுவாக 11-ஆம் இடத்தில் உள்ள சனியால் ஒரு ஜாதகர் வியாபாரத் துறையில் விற்பன்னராக முடியும். இரும்பு, விவசாயம், எண்ணெய், உலோகங்கள் ஆகிய துறைகளின் மூலம் ஜாதகர் நிறையப் பொருள் திரட்டும் வாய்ப்பு ஏற்படும்.

    41. 11-ஆம் இடத்தில் உள்ள சனி பல நிலைகளிலும் சிறப்பைத் தருவார். என்றாலும், குடும்பத்தில் ஜாதகருக்குச் சிறப்பை உண்டாக்க மாட்டார். ஜாதகரால் குடும்பத்தாருக்கு நலம் உண்டாகவும் விடமாட்டார்.

    42. 12-ல் உள்ள சனி ஜாதகருக்கு நல்லொழுக்கத்தை உண்டாக்க மாட்டார். தொழில்களிலும் வீழ்ச்சியை உண்டு பண்ணுவார்.

    43. 12-ல் உள்ள சனியினால் ஜாதகருக்கு கடும் செலவு உண்டாகக் கூடும். அறிவாற்றல் மங்கியிருக்கும். பகைவரால் தொல்லை விளையக்கூடும்.

    44. 12-ஆம் இடத்தில் உள்ள சனிக்கு சுபர் பார்வை ஏற்பட்டு ஆட்சி அல்லது உச்சநிலை ஏற்பட்டிருக்குமானால், குறைகள் பெரும்பாலும் குறையும். சில நன்மைகள் தலைகாட்டும்.

    45. நவகோள்களிலும் ஈஸ்வரப்பட்டம் சனியைத் தவிர வேறு எந்தக் கிரகத்திற்கும் கிடையாது.

    46. ஒருவரது ஜென்மராசிக்கு 1, 2, 12 ஆகிய ராசி வீடுகளில் தலா 2 வருட வீதம் 32 1/2 என்ற சஞ்சரிக்கும் காலம் 7 சனி காலமாகும்.

    47. ஒருவரின் ராசிக்கு 4ஆம் இடத்தில் சஞ்சரிக்கும்போது அர்த்தாஸ்டமச்சனி என சொல்லப்படும். 8ஆம் இடத்தில் சஞ்சரிக்கும்போது அட்டமத்துச் சனி எனக் கூறப்படும்.

    48. ஒருவரது ராசிக்கு 3, 6, 11ஆம் வீடுகளில் சனிக்கிரக சஞ்சாரம் இடம்பெறும் காலம் நற்பலன்களை கூட்டி வழங்குவார்.

    49. இந்தியாவில் திருநள்ளாறில் தனி ஆலயமாக சனீஸ்வரன் மிகப் பிரசித்தம் பெற்று விளங்குகின்றார். இலங்கையில் திருக்கோணமலையில் மரத்தடியில் சனீஸ்வரனுக்கு தனி ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

    50. சனிக்கிரகம் பூமியில் இருந்து 97 கோடியே 90 லட்சம் மைல்கள் தொலைவில் உள்ளது. இதனைச் சுற்றி 3 வளையங்கள் உள்ளன. இதன் நடுவில் இருள் படலம் உள்ளது. 75000 மைல் விட்டமும் 700 பங்கு கன பரிமானம் உள்ளது. பூமியைப் போல் 100 மடங்கு எடையுள்ளது. இது ராசி மண்டலத்தைச் சுற்றிவர 29 வருடம் ஆகிறது.

    51. சங்கடங்கள் தீர்க்கும் சனிபகவானை சனிக்கிழமைகளில் விசேஷமாக புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து எள்ளு எரித்து சனிபகவானின் கெடுபலனில் இருந்து விடுபடுவதால் நற்பலனை பெறலாம்.

    52. சனீஸ்வரரின் அருளை வேண்டி வழிபடுபவர்கள் அவசியம் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவையும் வேண்டுதல் செய்வது நல்லது.

    53. சனிபகவான் தொல்லை நீங்க வேண்டுமானால் விபூதி அணிய வேண்டும் என்கிறார் ஷீத்வா முனிவர்.

    ×