என் மலர்tooltip icon

    வழிபாடு

    • பன்னிரு சூரியர்களையும் ‘ஆதித்தியர்’ என்பர்.
    • சிவபெருமானை நோக்கி சூரியன் கடுந்தவம் செய்து ‘கிரகபதம்’ எனும் பேறு பெற்றார்.

    காசிப முனிவருக்கும் அவரது மனைவி அதிதி என்பவருக்கும் விசுவவான் முதலான பன்னிரண்டு சூரியர்கள் பிறந்தனர். அதிதி அன்னையின் புத்திரர்கள் ஆதலால் பன்னிரு சூரியர்களையும் 'ஆதித்தியர்' என்பர்.

    பிரம்மதேவன் ஒரு காலத்தில் இருள் மயமான அண்டத்தைப் பிளந்தார். அப்போது அவ் அண்டத்திலிருந்து 'ஓம்' என்றப் பேரொலி எழுந்தது. அவ்வொலியில் இருந்து ஒளி உருவமாக சூரியன் தோன்றினான். இவ்வாறே சூரிய பகவானின் முதல்தோற்றம் நிகழ்ந்தது என மன மார்க்கண்டேய புராணம் கூறுகின்றது.

    பன்னிரு சூரியர்களில் முதலாமவராகிய விசுவவான் என்ற சூரிய பகவான் துவஷ்டாவின் மகளான சஞ்ஞீகை (உஷா) என்பவரை மணந்துகொண்டார். சஞ்ஞீகையின் திருவயிற்றில் வைத்சுதமனு, யமன், அசுவினி தேவர்கள் ஆகியோர் பிறந்தனர்.


    சூரியனின் சூடு (வெப்பம்) தாங்க இயலாதவளாகிய சஞ்ஞீகை தன்னுடைய நிழலையே ஒரு பெண்ணாக உருவாக்கினாள். அவளைத் தனக்குப் பதிலாக சூரியனுக்குத் தெரியாமலே அவரிடம் இருக்கச் செய்து சஞ்ஞீகை தந்தை வீடு சென்றுவிட்டாள்.

    சஞ்ஞீகையின் நிழலாகத் தோன்றிய அப்பெண்ணிற்குச் சாயாதேவி (பிரத்யுஷா) என்ற பெயர் வழங்கலாயிற்று. சாயாதேவி தான், வேறொரு பெண் என்ற விபரத்தை அறிவிக்காமலே ஆதித்தியரிடம் வாழ்க்கைத் துணையாக வாழ்ந்து வந்தாள். சூரியனும் அவளைச் சஞ்ஞீகை என்றே நினைத்து நெடுநாட்கள் வாழ்ந்துவந்தான்.

    சாயாதேவிக்கு சாவர்ணியமனு, சனி என்ற மகன்களும் பத்திரை என்ற மகளும் பிறந்தனர்.

    ஒரு சமயம் சூரியன் தன் மகனான எமனால் சாயாதேவி தோன்றிய உண்மை வரலாற்றை அறிந்தார். உடனே உஷாதேவியின் தந்தையான துவஷ்டாவிடம் சென்று உஷாதேவி இருக்குமிடத்தை அறிந்து கொண்டு அங்கே விரைந்தார்.

    அடர்ந்த காட்டில் பெண் குதிரை உருவத்தில் உஷாதேவி தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டார். பின்னர் அவரிடம் பேசி அன்போடு அழைத்து வந்து அவள் விருப்பப்படி இருவரோடும் இன்பமுடன் இல்லறம் ஏற்றருளினார். இவ்விரு தேவிகளே சூரியனிடம் என்றும் பிரியாதிருந்து அருள் செய்கின்றனர்.

    சூரியனுக்கு மனைவியர் பலர் உண்டு எனப் புராணங்கள் கூறுகின்றன. சூரியனுக்கும் சருஷிணிக்கும் பிறந்தவர்கள் பிருகு, வால்மீகர் ஆவர். சூரியனுக்கும் ஊர்வசிக்கும் பிறந்தவர்கள் அகத்தியரும், வால்மீகியும் ஆவர்.

    சூரியனுக்கும் குந்திதேவிக்கும் பிறந்தவன் கர்ணன் என்று பாரதமும், சுக்ரீவன் சூரியக்குமாரனே என்று ராமாயணமும் கூறுகின்றன.

    சிவபெருமானை நோக்கி சூரியன் கடுந்தவம் செய்து 'கிரகபதம்' எனும் பேறு பெற்றார். மேலும் ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலா வரும் உயர்வையும் சிவனருளால் பெற்றார். அதனால் சூரியன் தம் ஆயிரம் கிரகணங்களால் இருளை அழிக்கவும் ஒளியை உண்டாக்கவும் வெப்பத்தைத் தரவும் கூடிய வல்லமை பெற்றார்.

    1000 கிரகணங்களில் 400 கிரகணங்கள் மழை பொழிவதற்கும், 300 கிரகணங்கள் மழை வளம் உண்டாக்குவதற்கும் 300 கிரகணங்கள் பனி பொழிவதற்கும் பயன்படுகின்றன என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

    சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கும் செல்வார். அவர் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்குச் செல்லும் சமயமே மாதப் பிறப்பு நிகழ்கிறது. சூரியன் சஞ்சரிக்கும் ராசியின் பெயரைக் கொண்டே அந்தந்த மாதங்களுக்குப் பெயர் வழங்கப்படுகின்றன.


    சித்திரை மாதப் பிறப்பைச் சித்திரை விசு என்றும் ஐப்பசி மாதப் பிறப்பை 'ஐப்பசி விசு' என்றும் கூறுவர். இவ்விரு மாதப் பிறப்புகளுக்கு முன் எட்டு நாழிகைகளும் பின் எட்டு நாழிகைகளும் புண்ணிய காலங்களாகும்.

    தட்சிணாயணம் தொடங்கும் ஆடி மாதப் பிறப்பின் முன் 16 நாழிகையும், உத்ராயணம் தொடங்கும் தை மாதப் பிறப்பின் பின் 16 நாழிகைகளும் புண்ணிய காலங்கள்.

    சூரியன் மகர ராசியில் (தை மாதம்) இருக்கும்போது ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை, திருவோணம் நட்சத்திரம், வியதீபாத யோகம் ஆகிய நான்கும் கூடினால் அது அர்த்தோதய புண்ணிய காலமாகும்.

    சூரியன் மகரராசியில் இருக்கும்போது திங்கட்கிழமை, அமாவாசை, திருவோணம், வியதீபாதம் ஆகியவை கூடியவரின் மகோதய புண்ணிய காலமாகும்.

    இக்காலங்களில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி சூரிய வணக்கம் செய்து இறைவழிபாடு, தியானம் முதலியன செய்தால் பல பிறவிகளில் செய்த வினை நீங்கும். பெரும் புண்ணியங்கள் சேரும் என்று ஆகமங்களும் புராணங்களும் கூறுகின்றன.

    • அனுமன் டாலரை அணிந்து கொள்ளுங்கள்.
    • மாணிக்கத்தால் செய்த விநாயகரை பூஜியுங்கள்.



    உங்களுக்கு சூரியதோஷம் இருந்தால், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அனுமன் கோவிலுக்குப் போய் வழிபடுங்கள். தாமிரத்தால் செய்த இஷ்டதெய்வ டாலர் அல்லது அனுமன் டாலரை அணிந்து கொள்ளுங்கள்.


    ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45 மணிக்குள் வீட்டு பூஜையறையில் பசுநெய்தீபம் 5 அகலில் ஏற்றிவைத்து வழிபடுங்கள். பசுமாட்டுக்கு கோதுமை அல்லது கோதுமைத்தவிடு வாங்கிக் கொடுங்கள். ஆதித்ய ஹிருதயம், அனுமன் சாலீசா துதிகளை தினமும் சொல்லுங்கள் அல்லது கேளுங்கள்.

    வசதி இருப்பவர்கள், மாணிக்கக் கல்லில் டாலர் செய்து கழுத்தில் அணியுங்கள். அல்லது, மாணிக்கத்தால் செய்த விநாயகரை பூஜியுங்கள்.


    வருடத்திற்கு ஒரு முறை அனுமன் கோவிலுக்குப் போய் தரிசனம் செய்து விட்டு கோதுமையால் ஆன இனிப்பு வகைகளை இயன்ற அளவு தானம் செய்யுங்கள். சூரியனார் கோவிலுக்குப் போவதும் நல்லது.

    தினமும் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து அன்றாடப் பணிகளை செய்ய ஆரம்பியுங்கள். மாதத்தில் ஒருநாள் நவக்கிரக சூரியனை தரிசித்து வழிபடுங்கள்.

    மேற்கண்ட பரிகாரங்களுள் உங்களால் இயன்றதையெல்லாம் செய்யுங்கள். சூரியதோஷம் நிச்சயமாக உங்களை விட்டுப் போகும்.

    • எங்களிடம் மிகுந்த கருணையுடைய ஒப்புயர்வற்ற கண்ணனே!
    • உனது திருப்பள்ளியில் இருந்து எழுந்தருள்வாய்!

    திருப்பாவை

    பாடல்:

    ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்

    ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,

    தரிக்கிலா னாகித்தான்த்தான் தீங்கு நினைந்த

    கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

    நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை

    அருத்தித்து வந்தோம்; பறைதருதியாகில்

    திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி

    வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்:

    எங்களிடம் மிகுந்த கருணையுடைய ஒப்புயர்வற்ற கண்ணனே! ஒப்பற்ற தேவகியின் மகனாய்ப் பிறந்து, பிறந்த அதே இரவில் வேறொருத்தியான யசோ தையின் மகனாக மாற்றப்பட்டு மறைந்து வளர்ந்தாய்! ஆணவத்தால் உன்னை அழிக்க நினைத்த கம்சனின் வஞ்சகத்தை தோற்கடித்து, அவனது வயிற்றில் நெருப்பாக நின்ற பெருமானே! உன்னை நாடி வந்திருக்கிறோம். நோன்புக்குத் தேவையான அருளை நீ தருவாயானால், உனது அருட்செல்வத்தையும், தொண்டினையும் பாடுவோம். வருத்தம் நீங்கி மகிழ்ந்திருப்போம்.

    திருவெம்பாவை

    பாடல்:

    பூதங்கள் தோறும்நின்றாய் எனின் அல்லால்

    போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்

    கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்

    கேட்டறியோம்உனைக் கண்டறி வாரைச்

    சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா!

    சிந்தனைக் கும்அரியாய்! எங்கள் முன்வந்து

    ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்

    எம் பெருமான்! பள்ளி எழுந்தரு ளாயே!

    விளக்கம்:

    திருப்பெருந்துறையில் வாழ்கின்ற அரசே! பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றிலும் நிறைந்து, பிறப்பும் - இறப்பும் இல்லாதவன் என்று புலவர்கள் உன்னைப் புகழ்ந்து பாடுவதை நாங்கள் கேட்டறிந்துள்ளோம். ஆனால் உன்னைக் கண்டறிந்தவர்கள் பற்றி நாங்கள் அறிந்ததில்லை. குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையின் மன்னவனே! எங்கள் முன் வந்து நாங்கள் செய்யும் தவறுகளை நீக்கி எங்களை ஆட்கொண்டு அருள்புரிகின்ற எமது தலைவனே! உனது திருப்பள்ளியில் இருந்து எழுந்தருள்வாய்! 

    • இன்று கார்த்திகை விரதம்.
    • சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மார்கழி-25 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: தசமி நண்பகல் 12.03 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம்: பரணி பிற்பகல் 3.05 மணி வரை பிறகு கார்த்திகை

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று கார்த்திகை விரதம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் உத்ராட்ச விமானத்தில் பிட்டு நேர்பட மண் சுமந்து போருளியக் காட்சி. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கண்ணன் திருக்கோலமாய் மாலை தந்தப் பரங்கி நாற்காலியில் பவனி. மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி, கரூர் ஸ்ரீ ரங்கநாதர், நெல்லை ஸ்ரீ நெல்லையப்பர் கோவில்களில் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெரு மாள் நாச்சியாார் திருக்கோலம், மோகனாவதாரம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் பவனி. திரு வல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திரு மஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குரு பகவானுக்கு கொண்டைக் கடைலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பாராட்டு

    ரிஷபம்-வெற்றி

    மிதுனம்-பரிசு

    கடகம்-நலம்

    சிம்மம்-சாந்தம்

    கன்னி-கீர்த்தி

    துலாம்- உதவி

    விருச்சிகம்-போட்டி

    தனுசு- ஆர்வம்

    மகரம்-பக்தி

    கும்பம்-நன்மை

    மீனம்-மேன்மை

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மார்கழி-24 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: நவமி பிற்பகல் 2.16 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: அசுவினி மாலை 4.35 மணி வரை பிறகு பரணி

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் ஊர்துவ தாண்டவ காட்சி. இரவு வெள்ளி யானை வாகனத்தில் பவனி. திருக்குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் பஞ்ச மூர்த்திகளுடன் ரதோற்சவம். இரவு சுவாமி பூத வாகனத்திலும் அம்பாள் கிளி வாகனத்திலும் திருவீதியுலா. சிதம்பரம் ஸ்ரீ சிவபெருமான் ரிஷப வாகனத்தில் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கள்ளர் திருக்கோலமாய் பவனி. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருப்புளிங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அபிஷேகம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர், வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் காலை சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நலம்

    ரிஷபம்-பெருமை

    மிதுனம்-அமைதி

    கடகம்-நட்பு

    சிம்மம்-சாந்தம்

    கன்னி-வரவு

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-செலவு

    தனுசு- புகழ்

    மகரம்-இன்பம்

    கும்பம்-சாதனை

    மீனம்-கண்ணியம்

    • 2 ஆயிரம் வருடங்களாக நிறைவேறாத ஆண்டாளின் வேண்டுதல் நிறைவேறியது.
    • ராமானுஜரை, ஆண்டாள் நாச்சியாா் ‘அண்ணனே’ என்று அழைத்திருக்கிறார்.

    ஆண்டாள் தன்னுடைய திருப்பாவையில் முதல் ஐந்து பாடல்களின் வாயிலாக நோன்பு இருப்பதன் மாண்பைப் பற்றி சொல்கிறார். அடுத்துவரும் 6 முதல் 15 வரையான பாடல்களில் கண்ணனின் லீலைகளைப் பற்றி எடுத்துரைக்கிறார்.

    அதோடு அறியாமையில் மூழ்கி உறங்கிக்கொண்டிருக்கும் ஆயர்குல பெண்களையும், மானிடர்களையும் விழித்தெழப் பாடுகிறார். 16 முதல் 25-ம் பாசுரம் வரை, கண்ணனின் மாளிகையிலும், அதன் சுற்றுப்புறத்திலும் இருக்கும் அருளைப் பெறும் விதமாக இருக்கிறது.

    26-வது பாடலில் கண்ணனை நேரடியாக அழைத்து, ஆயர்குல பெண்கள் நோன்பு இருக்க தேவையானவற்றை பரிசாக அளிக்கும்படி கேட்கிறார்.


    அடுத்து வரும் 27-வது பாடலில், கண்ணன் எப்படியும் தனக்கு பேரருளை தருவான் என்ற நம்பிக்கையில், அவன் கையைப் பிடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில், கண்ணன் தன்னை கைப்பிடிக்கும் சமயத்தில் அவனின் அழகுக்கு நிகராக தானும் ஓரளவேனும் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக மணம் கமழும் மலர் சூட்டி, சில ஆபரணங்களை அணிந்து தன்னை அழகுபடுத்திக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

    பாவை நோன்பு இருந்த ஆண்டாள், தனக்கும் அரங்கநாதருக்கும் திருமணம் செய்துவைத்தால், அக்காரவடிசலும், வெண்ணெயும் சமர்ப்பிப்பதாக கள்ளழகரிடம், ஆண்டாள் நாச்சியார் வேண்டிக்கொள்கிறாள்.

    அவர் நினைத்தபடியே அரங்கநாதருடன் கைகோர்த்த ஆண்டாள் நாச்சியார், அரங்கனுடன் ஐக்கியமாகி விட்டார். ஆனால் கள்ளழகருக்கு அவர் சமர்ப்பிப்பதாக கூறிய அக்காரவடிசலும், வெண்ணெயும் சமர்ப்பிக்கப்படாமலேயே இருந்தது.


    ஒன்றிரண்டு வருடங்கள் அல்ல... சுமார் 2 ஆயிரம் வருடங்கள் இந்த வேண்டுதல் நிறைவேறவே இல்லை. ஆண்டாள் வாழ்ந்ததாகக் கூறப்படும் காலத்திற்கு 2 ஆயிரம் வருடங்களுக்குப்பின் வந்த ராமானுஜர், ஆண்டாளின் ஆசையையும், அவரது வேண்டுதலையும் கேள்விப்பட்டார்.

    அவர் ஆண்டாளின் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக, கள்ளழகர் கோவிலின் முன்பாக வந்து அங்குள்ள அர்ச்சகரின் அனுமதியைப் பெற்று, நூறு அண்டாக்களில் அக்காரவடிசலையும், வெண்ணெயையும் சமர்ப்பித்தார்.

    இதனால் 2 ஆயிரம் வருடங்களாக நிறைவேறாத ஆண்டாளின் வேண்டுதல், நேர்த்திக்கடன் நிறைவேறியது. அதை நிறைவேற்றியவர் ராமானுஜர்.

    கள்ளழகருக்கு நேர்த்திக்கடன் செலுத்திய ராமானுஜர், அந்த பிரசாதத்தை எடுத்துக்கொண்டு திருவில்லிபுத்தூரில் கோவில் கொண்டிருந்த ஆண்டாளை பார்ப்பதற்காகச் சென்றார். ஆனால் வயது வித்தியாசம் பார்க்காத ஆண்டாள், தனக்கான வேண்டுதலை நிறைவேற்றிய ராமானுஜரை, 'அண்ணனே..' என்று அழைத்ததாக தல வரலாறு சொல்கிறது.

    ஒரு பெண்ணின் மனதில் உள்ள விஷயங்களை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு, அவளது தந்தைக்கு உண்டு. அதன்பிறகு அந்த பொறுப்பு அவளது அண்ணனுக்கு உரியது. அதனால் தான் ராமானுஜரை, ஆண்டாள் நாச்சியாா் 'அண்ணனே' என்று அழைத்திருக்கிறார்.

    அன்று முதல் திருப்பாவையின் 27-ம் பாசுரத்தில் 'பால் சோறு மூட நெய் பெய்து..' என்று இருப்பதால், அக்காரவடிசலான பால்சோறு, நூறு அண்டாக்களில் சமர்ப்பிக்கும் வழக்கம், இன்றைக்கும் அழகர்மலையில் உள்ள கள்ளழகர் ஆலயத்தில் நடைபெற்று வருகிறது.

    இது பிற்காலத்தில் பிற வைணவ ஆலயங்களிலும் செய்யும் ஒரு நடைமுறை வழக்கமாக மாறிப்போனது. திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், திருவரங்கம் அரங்கநாதர் கோவில், கள்ளழகர் ஆலயங்களில் இந்த விழா வெகு சிறப்பாக நடை பெறும்.

    இந்த வைபவத்தின் போது, 120 லிட்டர் பால், 250 கிலோ அரிசி, 15 கிலோ கல்கண்டு, கிலோ கணக்கில் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை சேர்த்து, பலமணி நேரம் சுண்டக் காய்ச்சித் தயாரிக்கும் அக்காரவடிசலும், வெண்ணெயும் கள்ளழகருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

    'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னைப்

    பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்

    நாடு புகழும் பரிசினால் நன்றாக

    சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே

    பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்

    ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு

    மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்

    கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்'

    மேற்கண்ட இந்தத் திருப்பாவையின் 27-வது பாடலை, அதற்குரிய மார்கழி 27-ந் தேதி, பக்தா்கள் அனைவரும் தங்கள் இல்லங்களிலும், அருகில் உள்ள கோவில்களிலும் பால்சோறு எனப்படும் அக்காரவடிசல் செய்து, இறைவனுக்கு நைவேத்தியமாக படைத்து, அக்கம் பக்கத்தினர் அனைவருக்கும் பகிர்ந்து உண்ணலாம்.


    கூடாரவல்லி தினம் என்பது கண்ணன், ஆண்டாளை ஆட்கொள்ளப் போவதாக, ஆண்டாள் உறுதியாக நம்பிய நன்னாள். ஜீவாத்மா- பரமாத்மா தத்துவத்தில், பரமாத்மா வந்து ஜீவாத்மாவை தன்னுடன் ஐக்கியமாக்கிக்கொள்வது உறுதி என்பதை நிரூபித்த நிகழ்வு தினம் இது.

    இந்த நாளில் பெண்கள் புத்தாடை அணிந்து கொள்வதும், அணிகலன்கள் பூட்டிக்கொள்வதும் வாழ்வில் ஒளியேற்றும். ஆண்டாளின் மன விருப்பத்தை, அரங்கநாதர் வந்து நிறைவேற்றிக் கொடுத்ததுபோல, இந்த நாளில் வேண்டிக்கொள்ளும் பெண்களின் மனவிருப்பத்தை, ஆண்டாளே நிறைவேற்றித் தருவார் என்பது நம்பிக்கை.

    • 10-ந்தேதி வைகுண்ட ஏகாதசி
    • 13-ந்தேதி ஆருத்ரா தரிசனம்.

    7-ந்தேதி (செவ்வாய்)

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னிதியில் எண்ணெய்க் காப்பு உற்சவம் ஆரம்பம்.

    * திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி.

    * ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் திருவீதி உலா.

    * குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு.

    * சமநோக்கு நாள்.

    8-ந்தேதி (புதன்)

    * குற்றாலம் திருக்குற்றாலநாதர் பஞ்சமூர்த்திகளுடன் ரத உற்சவம்.

    * சிதம்பரம் சிவபெருமான் ரிஷப வாகனத்தில் பவனி.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், முரளி கண்ணன் திருக்கோலம்.

    * திருவைகுண்டம். திருமாலிருஞ்சோலை

    * கள்ளழகர் தலங்களில் பகற்பத்து உற்சவம்.

    * சமநோக்கு நாள்.

    9-ந்தேதி (வியாழன்)

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கண்ணன் திருக்கோலம்.

    * திருவரங்கம் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து நாச்சியார் திருக்கோலத்துடன் அர்ச்சுன மண்டபம் எழுந்தருளல்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் நாச்சியார் திருக்கோலம்.

    * கீழ்நோக்கு நாள்.


    10-ந்தேதி (வெள்ளி)

    * வைகுண்ட ஏகாதசி.

    * கார்த்திகை விரதம்.

    * திருவரங்கம் நம்பெருமாள் முத்தங்கி சேவை.

    * திருநெல்வேலி நெல்லையப்பர், சங்கரன்கோவில் சிவபெருமான் பவனி.

    * கீழ்நோக்கு நாள்.


    11-ந்தேதி (சனி)

    * சனிப் பிரதோஷம்.

    * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் மகாரத உற்சவம், மாலை ஆனந்த தாண்டவ காட்சி.

    * சிதம்பரம் சிவபெருமான் தங்க ரதத்தில் பிட்சாண்டக் காட்சி.

    * மேல்நோக்கு நாள்.

    12-ந்தேதி (ஞாயிறு)

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் இரவு நடேசர் மகா அபிஷேகம்.

    * காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், மதுரை கூடலழகர் தலங்களில் இராபத்து உற்சவ சேவை.

    * சங்கரன்கோவில் சிவபெருமான் ரத உற்சவம், சுவாமி அம்பாள் புருசாமிருக வாகனத்தில் பவனி.

    * சமநோக்கு நாள்.


    13-ந்தேதி (திங்கள்)

    * பவுர்ணமி விரதம்.

    * ஆருத்ரா தரிசனம்.

    * போகிப்பண்டிகை.

    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் பார்வதி அம்மன் ஊஞ்சல்.

    * மேல்நோக்கு நாள்.

    • காயாம்பூவைப் போன்ற கருநீல நிற முடைய கண்ணனே!
    • திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே!

    திருப்பாவை

    பாடல்:

    மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்

    சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து,

    வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி,

    மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

    போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்

    கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக்

    கோப்புடைய

    சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த

    காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்:

    மழைக் காலத்தில் காட்டில் ஒரு குகையில் காலம் மறந்து உறங்கும் சிங்கம், தானாக உணர்ந்து எழுந்து, அனல் பறக்கும் கண்களைத் திறந்து, பிடரி மயிர் சிலிர்க்க, சோம்பல் முறித்து, நெஞ்சை நிமிர்த்திப் புறப்படும். அதேபோல் காயாம்பூவைப் போன்ற கருநீல நிற முடைய கண்ணனே! உனது இடத்தில் இருந்து, எம்மிடம் வந்து அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் வந்த காரணத்தைக் கேட்டு அருள்புரிவாய்.

    திருவெம்பாவை

    பாடல்:

    கூவின பூங்குயில்; கூவின கோழி

    குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;

    ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து

    ஒருப்படு கின்றது; விருப்பொடு நமக்குத்

    தேவ! நற் செறிகழற் றாளிணை காட்டாய்;

    திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!

    யாவரும் அறிவரி யாய்; எமக் கெளியாய்

    எம்பெரு மான்; பள்ளி எழுந்தரு ளாயே!

    விளக்கம்:

    குயில்கள் கூவுகின்றன; கோழிகள் கூவுகின்றன; நீர்ப்பறவைகள் சத்தமிடுகின்றன. பொழுது விடிந்து விட்டது என்பதை அறிவிக்கும் விதமாக சங்குகளும் ஒலித்தன. கதிரவன் வரவால் விண்மீன்களும் மறைந்தன. சூரியன் ஒளி வீசுகின்றான். திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! எவரும் அறிந்து கொள்ள முடியாதவனும், எமக்கு எளியவனுமாகிய பெருமானே! தேவர்களுக்கு நற்கதியை அளிக்கும் உன் வீரக் கழல் அணிந்த பாதங்களை எமக்குக் காட்டும்படி துயில் நீங்கி எழுந்தருள்வாய்!

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் எண்ணை காப்பு உற்சவம் ஆரம்பம்.
    • திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பட்டாபிராமர் திருக்கோலம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மார்கழி-23 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: அஷ்டமி மாலை 4.36 மணி வரை பிறகு நவமி

    நட்சத்திரம்: ரேவதி இரவு 6.15 மணி வரை பிறகு அசுவினி

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் எண்ணை காப்பு உற்சவம் ஆரம்பம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வாார் வீதி உலா. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பட்டாபிராமர் திருக்கோலம். திருக்குற்றாலம் ஸ்ரீ குற்றால நாதர் ரிஷப வாகன பவனி. குரங்கனி ஸ்ரீ முத்து மாலையம்மன் புறப்பாடு. வாயிலார் நாயனார் குருபூஜை. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உற்சாகம்

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-நட்பு

    கடகம்-உயர்வு

    சிம்மம்-போட்டி

    கன்னி-சிறப்பு

    துலாம்- மாற்றம்

    விருச்சிகம்-இரக்கம்

    தனுசு- பொறுமை

    மகரம்-கடமை

    கும்பம்-வரவு

    மீனம்-ஜெயம்

    • 108 திவ்ய தேசங்களில் 3-வது தலமாக போற்றப்படுகிறது.
    • நாலாயிர திவ்ய பிரபந்தம் இயற்றப்பட்ட தலம்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    'பூலோக வைகுண்டம்' என போற்றப்படும் இக்கோவிலில் 'சொர்க்க வாசல்' தனியாக கிடையாது என்பது தனிச்சிறப்பாகும். இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் 3-வது தலமாக போற்றப்படுகிறது. மேலும், 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும், நாலாயிர திவ்ய பிரபந்தம் இயற்றப்பட்ட தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா, சித்திரை பெருவிழா ஆகியவை வெகு விமரிசை யாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான தைப்பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா இன்று (திங்கட்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.


    முன்னதாக உற்சவர் சாரங்கபாணி சுவாமி, ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து, கொடிமரத்திற்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு, பட்டாச்சாரியார்கள் வேதமந்திரங்கள், நாதஸ்வர மேளதாளம் முழங்க கொடிக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டு, கருடாழ்வார் உருவம் வரையப்பட்ட கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா நடைபெறும்.முக்கிய நிகழ்வாக வருகிற 10-ந்தேதி வைகுண்ட ஏகாதசி அன்று சிறப்பு தரிசனமும், 14-ந்தேதி தைப்பொங்கல் தினத்தன்று தேரோட்டமும் நடைபெற உள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் சிவசங்கரி, உதவி ஆணையர் சாந்தா மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • 10-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வைகுண்ட ஏகாதசி துவார தரிசனம்.
    • நாளை வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 10-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வைகுண்ட ஏகாதசி துவார தரிசனம் நடைபெறுகிறது.

    வைகுண்ட ஏகாதசி யைமுன்னிட்டு நாளை காலை 7 மணி முதல் 12 மணி வரை கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. கோவில் கர்ப்ப கிரகம்,பலி பீடம், கொடிமரம், விமான கோபுரம் உள்ளிட்ட கோவில் முழுவதும் பச்சைக் கற்பூரம், பன்னீர், குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது.

    கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் சுமார் 5 மணி நேரம் நடைபெறுகிறது. இதனால் பக்தர்கள் தரிசனம் 5 மணி நேரம் ரத்து செய்யப்படுகிறது.

    இதேபோல் நாளை வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 66,561 பேர் தரிசனம் செய்தனர்.18,647 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.98 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 9 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • சூரிய நமஸ்காரம் 8 நிலைகளை கொண்ட ஒரு யோக பயிற்சியாகும்.
    • ஆத்ம நலன் தரும் சூரியபகவானின் திருநாமங்களை உரக்க உச்சரிப்போம்.

    சூரியனை முழுமுதற்கடவுளாகப் போற்றி வணங்கும் வழக்கம் பண்டைய காலம் தொட்டே இருந்து வருகிறது. சூரியனின் ஆற்றலையும், பயனையும் நம் முன்னோர்கள் மட்டுமின்றி இன்றைய நவீன அறிவியல் தொழில் நுட்ப உலகத்தில் மின் சக்தி பற்றாக்குறையை நீக்க சூரிய சக்தியை சரியான முறையில் பயன்படுத்த நமது அறிவியல் அறிஞர்கள் முன் வந்துள்ளனர். காலம் செல்லச் செல்ல சூரிய நமஸ்காரம் மட்டுமல்லாது அனைத்து சக்திகளும் சூரியனிடமிருந்து நேரடியாகப் பெறும் வாய்ப்பு உருவாகும்.


    சூரிய நமஸ்காரம் நமது ஆன்மீக வாழ்வுடனும், ஆரோக்கிய வாழ்வுடனும் ஒன்றிய அறிவியல் மருத்துவக் கூறுகளை உள்ளடக்கிய நோய் தீர்க்கும் யோக பயிற்சியாகும்.

    தொன்று தொட்டே பாரத மக்கள் பின்பற்றி வந்த ஓர் ஆசார முறை சூரிய நமஸ்காரம், உடல் மற்றும் மனது உறுதியடையவும் அமைதியடையவும் உதவும் ஆசாரமிது. இதை விதி முறைகள் படி செய்யும் போது உடற்பாகங்களில் ஆற்றலும் சக்தியும் வருகின்றது.

    அதிகாலை நேரத்தில் நம் உடலில் படும் சூரிய ஒளி தேக ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதைத்தான் நமது புண்ணிய பாரத பூமியில் வாழ்ந்த சித்தர்கள் காலை வெயிலில் ஆரம்பிக்கும் பித்தம், மாலை வெயிலில் தணிந்து போகும் என்றனர்.

    சூரிய ஒளியைக் கொண்டு கொடிய நோயான காமாலையையும் குணப்படுத்தலாம் என்கிறது அதர்வண வேதம். மேற்கத்திய நாடுகள் உள்பட உலகின் எல்லா பாகங்களிலும் இந்த ஆசார முறை பிரசித்தி பெற்றிருக்கிறது. ஜிம்னாஸ்டிக், சன்பாத் என்ற பெயர்களில் சூரிய நமஸ்காரத்தை உட்படுத்தி உடற்பயிற்சிகள் செய்து வருகின்றனர்.

    சூரிய நமஸ்காரம் வாயிலாக நமது உடலில் உள்ள எல்லா மூட்டுகளுக்கும் அசைவு ஏற்படுகிறது. சருமத்தில் வைட்டமின் டி உற்பத்தி செய்யும் திறன் காலையில் வரும் சூரிய ஒளிகதிர்களுக்கு உண்டு.

    கால்சியம் உற்பத்தியை கட்டுப்படுத்தும் திறனும் உண்டு என்பது அறிவியல் துறைகள் அங்கீகரித்து உள்ளன. மேலும் உடலுறுப்புகள் உறுதி பெறுவதால் காச நோயனுக்களின் ஆக்கிரமிப்பையும் தடுக்கின்றன. தொடர்ச்சியாக சூரிய நமஸ்காரம் செய்வதினால் அகால வயது முதிர்ச்சியை ஓரளவுக்கு தடை செய்யலாம்.

    மூட்டுகள் நல்ல லாவக மடைகின்றது. தொப்பை வயிறு வருவதை கட்டுபடுத்த இயல்கின்றது. மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் நிலைநிறுத்தவும் சூரிய நமஸ்காரம் உதவுகின்றது. சூரிய நமஸ்காரம் செய்பவர்கள் ஆரம்பத்தில் அனுசரிக்க வேண்டிய சில விசயங்களை பார்ப்போம்.

    பரிசுத்தமான எளிய வாழ்க்கை வாழ வேண்டும். அளவான உணவு அருந்த வேண்டும். விசாலமானதும் காற்றோட்டம் உள்ளதுமான இடத்தில் நமஸ்காரம் செய்ய வேண்டும். நமஸ்கார வேளையில் மிக அவசியமான ஆடை மட்டும் தளர்த்தியாக அணியவேண்டும்.

    தேநீர், காபி, குட்கா, புகையிலை, மதுபானம் முதலியவை அருந்த வேண்டாம், இப்படி அநேக விஷயங்களை கவனித்து சூரிய நமஸ்காரம் ஆரம்பிக்க வேண்டும். சூரிய நமஸ்காரம் செய்வதற்கு மிகவும் உகந்த நேரம் சூரிய உதயமாகும் அதிகாலை நேரம்.

    இளஞ்சூரியனில் இருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்கள் எண்ணற்ற நோய்எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளது. இரவில் தூக்கத்தால் உடலுக்கும், மனத்திற்கும் ஓய்வு கிடைப்பதால், அதிகாலையில் உடற்தசைகள் உடற்பயிற்சி செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.

    மூளையின் அலைகள், அதிர்வுகள் குறைந்து அமைதியாக இருப்பதும் அதிகாலையில் வெப்பம் குறைவாக இருப்பதால்தான் சூரிய நமஸ்கார பயிற்சிகளின் போது நமது உடலும் உள்ளமும் சோர்வடை வதில்லை.

    சூரிய நமஸ்காரம் செய்வதற்கு உகந்த திசை கிழக்கு. சூரியனின் கதிர்கள் உடல் முழுவதும் படும் வகையில் சுத்தமான காற்று இருக்கக்கூடிய திறந்த வெளியில் நின்ற படி செய்ய வேண்டும்.

    சூரிய நமஸ்காரம் எட்டு நிலைகளை வரிசையாகக் கொண்ட ஒரு யோக பயிற்சியாகும். ஒவ்வொரு சூரிய நமஸ்காரமும் மொத்தம் பன்னிரண்டு ஆசன நிலைகளை உள்ளடக்கியதாகும்.

    பன்னிரண்டு ஆசனங்கள் இணைந்து ஒரு சுற்று. இவ்வாறு 12 நமஸ்கார சுற்றுகள் இணைந்து ஒரு சூரிய நமஸ்காரமாகும்.

    ஒவ்வொரு நமஸ்காரமும் நம் உடல் உறுப்புகளான மூளை, இருதயம், வயிற்றில் உள்ள சுரப்பிகளைத் தூண்டும். ஓம் எனும் பிரணவ மந்திரத்துடன் சேர்த்து சூரிய பகவானுடைய 12 திருநாமங்களையும் சொல்லி வணங்கியபடி செய்ய வேண்டும்.


    நமக்கு மன, உடல், ஆத்ம நலன் தரும் சூரியபகவானின் திருநாமங்களை உரக்க உச்சரிப்போம்.

    ஓம் மித்ராய நமஹ... சிறந்த நண்பன்

    ஓம் ரவயே நமஹ... போற்றுத்தலுக்குரியவன்

    ஓம் சூர்யாய நமஹ... ஊக்கம் அளிப்பவன்

    ஓம் பானவே நமஹ... அழகூட்டுபவன்

    ஓம் சகாய நமஹ... உணர்வுகளுக்கு வலிமை தருபவன்

    ஓம் பூஷ்ணே நமஹ... புத்துணர்ச்சி தருபவன்

    ஓம் ஹிரண்யகர்ப்பாய நமஹ... ஆற்றல் அளிப்பவன்

    ஓம் மரீசயே நமஹ... நோய்களை அழிப்பவன்

    ஓம் ஆதித்யாய நமஹ... கவர்ந்திழுப்பவன்

    ஓம் சவித்ரே நமஹ.... சிருஷ்டிப்பவன்

    ஓம் அர்க்காய நமஹ... வணக்கத்திற்கு உரியவன்

    ஓம் பாஸ்கராய நமஹ... ஒளிமிகுந்து பிரகாசிப்பவன்.

    மேற்கண்ட மந்திரத்தை உச்சரித்தவாறு சூரிய நமஸ்காரம் செய்யும்போது நமது மனம் சிதறாமல் ஒருமுகப்படுகிறது. மந்திரத்தை உச்சரிக்கும் போது அதன் அதிர்வு நமது உடலின் எல்லா பகுதிகளுக்கும் சென்று பல உணர்வுகளை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மையாகும்.

    ×