என் மலர்tooltip icon

    வழிபாடு

    • இன்று சனி பிரதோஷம்.
    • கூடாரைவெல்லும் உற்சவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மார்கழி-27 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: துவாதசி காலை 8.13 மணி வரை பிறகு திரயோதசி மறுநாள் விடியற்காலை 4.58 மணி வரை பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம்: ரோகிணி நண்பகல் 12.34 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சனி பிரதோஷம். கூடாரைவெல்லும் உற்சவம். திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம். ஆவுடையார் கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் ரதோற்சவம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பிகை சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில், ஸ்ரீ வரதராஜ மூலவர், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில் வரதராஜ பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப்பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். திருஇந்தளூர்ஸ்ரீ பரிமள ரெங்கராஜப் பெருமாள், திருச்சேறை ஸ்ரீ சாரநாதப் பெருமாள் கோவில்களில் காலை திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மேன்மை

    ரிஷபம்-வெற்றி

    மிதுனம்-சுபம்

    கடகம்-ஜெயம்

    சிம்மம்-சுகம்

    கன்னி-தனம்

    துலாம்- வரவு

    விருச்சிகம்-முயற்சி

    தனுசு- உயர்வு

    மகரம்-கவனம்

    கும்பம்-லாபம்

    மீனம்-பணிவு

    • 14-ந்தேதி ஐயப்ப சுவாமிக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்படும்.
    • திருவாபரணங்கள் நாளை மறுநாள் பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை கடந்தமாதம் 31-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. அன்றைய தினத்தில் இருந்து தினமும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

    மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருப்பதால் பக்தர்களின் வருகை கடந்த சில நாட்களாகவே அதிகமாக உள்ளது. இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிவவுகிறது. மகரவிளக்கு பூஜைக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை தேவ சம்போர்டு மேற்கொண்டு வருகிறது.

    மகரவிளக்கு பூஜை நடக்கும் 14-ந்தேதி ஐயப்ப சுவாமிக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்படும். அந்த திருவாபரணங்கள் நாளை மறுநாள்(12-ந்தேதி) பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்படுகிறது. இதனையொட்டி பக்தர் களுக்கு பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    அய்யப்பனுக்கு அணிவிக் கப்படும் திருவாபரணங்கள் பாரம்பரிய பாதையான பெருவழிப்பாதை வழியாகத் தான் சபரிமலைக்கு கொண்டு வரப்படும். இதனால் நாளை (11-ந்தேதி) முதல் வருகிற 14-ந்தேதி வரை பக்தர்கள் பெருவழிப் பாதையில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இன்று மாலை வரையே பக்தர்கள் பெருவழிப்பாதை வழியாக செல்ல அனுமதிக் கப்படுவார்கள். அதன்பிறகு 14ந்தேதிக்கு பிறகே பெரு வழிப்பாதை வழியாக சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல முடியும். நாளை முதல் 14-ந்தேதி வரை பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னி தானத்துக்கு செல்லலாம்.

    பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு திருவாபரணம் கொண்டு செல்லப்படும் நாளான 14-ந்தேதி பம்பையில் இருந்து சன்னி தானத்துக்கு செல்லவும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும்.

    மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு பம்பையில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்தவும் தடை விதிக்கப் படுகிறது. நாளைமறுநாள் (12-ந்தேதி) காலை 8 மணி முதல் வருகிற 15-ந்தேதி மதியம் 2 மணி வரை பம்பை மலை உச்சியில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த அனுமதியில்லை.

    மகரவிளக்கு பூஜைக்காக அதிகளவில் பக்தர்கள் வந்தபடி இருப்பதால் ஸ்பாட் புக்கிங் நேற்று முதல் 5 ஆயிரமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. மகரவிளக்கு நாளான 14-ந்தேதி ஸ்பாட் புக்கிங் 1,000-ஆக குறைக்கப்படுகிறது. அது மட்டுமின்றி ஸ்பாட் புக்கிங் கவுண்டர்கள் பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 19-ந்தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனம் நடைபெறுகிறது.
    • இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் வரும் 19-ந்தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனம் நடைபெறுகிறது.

    வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு கோவில் வளாகம் மற்றும் வெளிப்புறம் முழுவதும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தசரா குழுவினரால் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல டன் எடையுள்ள பல வகையான மலர்கள் மற்றும் பழங்கள் கொண்டு வியக்கும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.


    வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு நேற்று இரவு 12.5 மணியளவில் கோவில் திறக்கப்பட்டு பாசுரங்கள் வாசிக்கப்பட்டன. பின்னர் அச்சகர்கள் 12.25 மணி அளவில் பூஜைகள் செய்து ஆர்த்தி எடுத்தனர்.

    தோமாலையுடன் கருவறை கதவு திறக்கப்பட்டு மூலவருக்கு அர்ச்சனைகள் நடந்தது. வழக்கமான பூஜைகள் நடந்தன. இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.


    இதையடுத்து மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    வி.ஐ.பி. பிரேக் தரிசனம் முடிந்த பிறகு சாதாரண பக்தர்கள் வைகுண்ட வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். 

    • ஆண்டாள் ரெங்க மன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் விசேஷ அலங்காரம்.
    • பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என்று பக்தி கோஷமிட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    தமிழகத்தில் உள்ள வைணவ தலங்களில் பிரசித்தி பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில். ஆண்டாள் தாயார் அவதரித்த இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் நீராட்டு உற்சவம் பகல் பத்து என்று அழைக்கப்படும் திருமொழி திருநாளும், அதனைத்தொடர்ந்து ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாளும், முடிவில் ஆண்டாள் எண்ணைக்காப்பு உற்சவமும் நடைபெறும்.

    அதன்படி இந்தாண்டு மார்கழி மாத நீராட்டு உற்சவம் கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பச்சைப் பரப்புதல் மற்றும் காலை, இரவு வேளைகளில் ஆண்டாள் ரெங்க மன்னார் வீதி உலா, அரையர் வியாக்ஞானம், திருவாராதணம், பெரிய பெருமாள் பத்தி உலாவுதல் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது. இதன் முடிவில் பகல் பத்து திருவிழா நிறைவு பெற்றது.

    ராப்பத்து என்று அழைக்கப்படும் திருவாய் மொழி திருநாள் இன்று (10-ந்தேதி) தொடங்கியது. அதில் முதல் நிகழ்ச்சியாக வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதம் என்னும் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு ஆண்டாள் ரெங்க மன்னார் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சனம் விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து அர்ச்சர்கள் பாலாஜி பட்டர், ஸ்தானிகம் ரங்கராஜன் என்ற ரமேஷ், கிச்சப்பன், பிரசன்ன வெங்கடேஷ் அய்யங்கார், சுதர்சன், மணியார் அம்பி ஆகியோர் சிறப்பு பூஜைகளை நடத்தினர். இதையடுத்து பெரிய பெருமாள், ஆண்டாள் ரெங்கமன்னார் ஆகியோர் காலை 6.50 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு அதனை கடந்து வந்தனர்.

    அப்போது அவர்களுக்கு எதிரே வேதாந்த தேசிகர் ராமானுஜர், பெரியாழ்வார் ஆகியோர் ஒன்று சேர்ந்து நின்று மங்களாசாசனம் செய்தனர். இதையடுத்து அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என்று பக்தி கோஷமிட்டனர். அதனைத் தொடர்ந்து ஆண்டாள், ரெங்க மன்னார் ராப்பத்து மண்டபத்திற்கு சென்றனர்.

    அங்கு திருவாராதணம், அரையர் வியாக்ஞானம் சேவகாலம் தீர்த்த விநியோ கம் கோஷ்டி நடைபெற்றது. அப்போது பல்லாயிரக்க ணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இத னைத் தொடர்ந்து ஆண்டாள் எண்ணைக்காப்பு உற்சவம் தொடங்கியது.

    சொர்க்கவாசல் திறப்பு விழாவில் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜ சுவாமி கள் உட்பட பல்லாயிரக்க ணக்கானோர் கலந்து கொண்டனர். அதேபோல் சபரிமலை யாத்திரை செல்லும் அய்யப்ப பக்தர்க ளும் சொர்க்கவாசலை கடந்து சென்று வழிபட்டனர்.

    • பகல் பத்து நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் எம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
    • காலை 5.15 மணி அளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.

    வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று திருப்பதி ஏழுமலை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவல்லிக்கேணி பெருமாள் கோவில் உள்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நடைபெற்றது.


    வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, பெருமாள் கோவில்களில் இன்று நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த டிசம்பர் 30 -ந் தேதி தொடங்கியது.

    தொடர்ந்து நடந்த பகல் பத்து நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் எம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, விரஜாநதி மண்டபத்தில் பெருமாள் வேத விண்ணப்பம் கேட்டருளினார்.

    தொடர்ந்து காலை 5.15 மணி அளவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை அலங்காரத்துடன் நம்பெருமாள் காட்சி அளித்தார்.


    பக்தர்கள் ரங்கா… ரங்கா… என பரவசத்துடன் முழங்க, பரமபதவாசல் திறக்கப்பட்டது. பரமபத வாசலை கடந்த நம்பெருமாளை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. 

    • வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலையில் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும்.
    • விஷ்ணுவின் உடலில் இருந்து ஒரு அழகான பெண் தோன்றினாள். அவள் தான் ஏகாதசி.

    மகாவிஷ்ணுவை வழிபடும் விரதங்களில் முக்கியமானதாக, வைகுண்ட ஏகாதசி இருக்கிறது. மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் இந்த ஏகாதசியானது, மோட்சத்திற்கான ஏகாதசி' என்று போற்றப்படுகிறது.

    அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலையில் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும். இறைவனை வழிபட்டு, இந்த வாசல் வழியாக வெளியே வருபவர்களுக்கு, மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.


    ஏகாதசி தோன்றிய கதை

    முரண் என்ற அசுரன், பல காலம் தவம் செய்து மிகப்பெரும் அரிய வரங்களைப் பெற்றிருந்தான். அந்த சக்தியைக் கொண்டு தேவர்களையும், முனிவர்களையும், மக்களையும் துன்பத்தில் ஆழ்த்தினான்.

    எனவே 'முரணை அழிக்க வேண்டும்' என்று சகல முனிவர்களும், தேவர்களும் விஷ்ணுவிடம் முறையிட்டனர். அவரும் முரண் முன்பாக தோன்றி, அவனோடு கடும் யுத்தம் செய்தார். ஆனால் அவனை அழிக்க முடியவில்லை.

    ஏனெனில் முரண் பெற்றிருந்த வரங்களில், அவனுக்கு பெண்ணால்தான் மரணம் நிகழும் என்பதும் அடங்கும். இதையறிந்த மகாவிஷ்ணு, இனி போர் புரிந்து பயன் இல்லை என்பதை உணர்ந்தார்.

    எனவே ஹிமாவதி என்னும் குகைக்குள் சென்று யோக நித்திரையில் ஆழ்ந்தார். அவர் நித்திரையில் இருந்த நேரத்தில் அவரைக் கொல்ல வந்தான் முரண். அப்போது விஷ்ணுவின் உடலில் இருந்து ஒரு அழகான பெண் தோன்றினாள். அவள் முரணுடன் போரிட்டு, அவனை எரித்துக் கொன்றாள்.

    முரணுடன் போரிட்ட விஷ்ணுவிடம் இருந்து 11-ம் நாள் தோன்றியதால், அந்த பெண் 'ஏகாதசி' என்று அழைக்கப்பட்டாள். அவளிடம் விஷ்ணு, "உனக்கு என்ன வரம் வேண்டுமோ, அதைக் கேட்டு பெற்றுக்கொள்" என்றார்.

    அப்போது ஏகாதசி, "முரண் அழிந்த இந்த தினத்தில், யார் உங்களது பெயரைச் சொல்லி கொண்டாடுகிறார்களோ, விரதம் இருக்கிறார்களோ, அவர்களுக்கு நீங்கள் மோட்சத்தை தந்தருள வேண்டும்" என்று கேட்டாள். அதன் காரணமாக ஏகாதசியும், அந்த நாளில் இருக்கும் விரதமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


    ஏகாதசியின் பெருமை

    துர்வாச முனிவருக்கு ஆயிரம் சீடர்கள் உண்டு. அவர் தவத்தில் சிறந்தவராக இருந்தார். அவரிடம் இருந்த ஒரே குறை, அவருக்கு ஏற்படும் கோபம் தான். அந்த கோபத்தால் அவர் பிரசித்தி பெற்றவராகத் திகழ்ந்தாலும், அதே கோபம்தான் அவரை சிக்கலிலும் தள்ளி இருக்கிறது. அப்படி ஒரு நிகழ்வுதான் இது.

    ஒரு முறை துர்வாசர், அம்பரீஷ மகாராஜா ஆளும் தேசத்தை அடைந்தார். அந்த மன்னன், விஷ்ணுவின் மீது அதீத பக்தி கொண்டவர். அவரது அரண்மனையில் தன்னுடைய சீடர்களுடன் வந்து தங்கினார், துர்வாசர்.

    அன்று அம்பரீஷ மகாராஜா ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்துக் கொண்டிருந்தார். மறுநாள் காலை துவாதசியில் விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் துர்வாசர் தன் சீடர்களுடன் நதிக்கு நீராட சென்று விட்டார்.

    ஆனால் அன்று காலை துவாதசி பாரணையை முடிக்க வேண்டிய கட்டாயத்தில், அம்பரீஷ மன்னன் இருந்தார். துர்வாச முனிவரின் எண்ணம் வேறாக இருந்தது.

    'அம்பரீஷனுக்கு நம் கோபம் தெரியும். எனவே நாம் உணவருந்தாமல் அவன் துவாதசி பாரணையை முடிக்க மாட்டான். மகாராஜாவாக இருந்தாலும், அவன் நமக்காக காத்திருக்கட்டும்' என்று கருதியவர், அரண்மனை திரும்புவதற்கு காலம் தாழ்த்தினார்.

    அம்பரீஷ மகாராஜனோ கலக்கத்தில் இருந்தார். 'ஏகாதசி விரதத்தை பூர்த்தி செய்யாவிட்டால், இத்தனை ஆண்டு காலமாக கடைப்பிடித்து வரும் விரதத்தில் தடை ஏற்படுமே என்று வருந்தினார்.

    இறுதியில் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். துர்வாச முனிவரும், அவரது சீடர்களும் உணவருந்தும் முன்பாக, நாம் உணவருந்துவது சரியாக இருக்காது. அதே நேரம் துவாதசி பாரணையையும் முடிக்க வேண்டும்.

    எனவே பெருமாளுக்கு சமர்ப்பித்த துளசி தீர்த்தத்தை உட்கொண்டு, தன்னுடைய துவாதசி பாரணையை முடித்தார். அம்பரீஷ மகாராஜா.

    வெகு தாமதமாக வந்த துர்வாசர், துளசி தீர்த்தத்தை உட்கொண்டு அம்பரீஷ மகாராஜா ஏகாதசி விரதத்தை முடித்தது தெரியவந்ததும் கடும் கோபம் கொண்டார். "விருந்தினர்களுக்கு உணவளிக்காமல், நீ எப்படி சாப்பிடலாம்.

    துளசி தீர்த்தமாக இருந்தாலும், அதை நீ செய் திருக்கக்கூடாது" என்று கடுமையாக கோபப்பட்டவர்.

    தன் தலைமுடியில் இருந்து ஒரு முடியை எடுத்து சில மந்திரங்களை உச்சரித்தார். அது ஒரு பெரிய பூதமாக உருமாறியது.

    அந்த பூதம், அம்பரீஷ மகாராஜாவை விழுங்க வந்தபோது. 'இறைவனின் திருவடி தான் நம்மை காப்பாற்றும்' என்பதை உணர்ந்து, மகாவிஷ்ணுவின் திருநாமத்தை உச்சரிக்கத் தொடங்கினார்.

    அப்போது அங்கே மிகப்பெரிய ஒளி பிரவாகம் தோன்றி, அதனுள் இருந்து சுதர்சன சக்கரம் வெளிப்பட்டது. அது பூதத்தை தன் நெருப்பால் எரித்தது. அதோடு நில்லாமல், மகாவிஷ்ணுவின் பக்தனையே கொல்ல நினைத்த துர்வாசரையும் துரத்தியது.

    சுதர்சன சக்கரத்திற்கு பயந்து, பூலோகம், புவர் லோகம். சுவர்லோகம், மகாலோகம், தபோ லோகம், இந்திரலோகம் என்று ஈரேழு உலகங்களுக்கும் ஓடிய துர்வாசர், இறுதியாக வைகுண்டம் சென்று நாராயணனின் பாதத்தில் சரணடைந்தார்.

    ஆனால் நாராயணரோ, "ஆண்டவனை நாம் மரியாதைக் குறைவாக நடத்தினால், அந்த பாவத்தை அடியார்களுக்கு செய்யும் தொண்டின் மூலமாக போக்கிக் கொள்ள முடியும். ஆனால் அடியார்களுக்கு கெடுதல் நினைத்தால், அவர்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. எனவே துர்வாசரே.. நீ, அம்பரீஷ மகாராஜனிடமே சென்று முறையிடு" என்றார்.

    துர்வாச முனிவருக்கு வேறு வழியில்லை. வைகுண்டத்தில் இருந்து புறப்பட்ட அவர், அடுத்ததாக நின்ற இடம் அம்பரீஷனின் அரண்மனைதான். "அம்பரீஷா.. என் ஆணவத்தை பொறுப்பாய். என் தவம் அனைத்தும் உனது ஏகாதசி விரதத்தின் முன் பலனற்று போய்விட்டது.

    இறைவனின் பக்தனுக்கு உரிய சக்தியை நான் உணர்ந்து கொண்டேன். சுதர்சன சக்கரம் என்னை துரத்தி வருகிறது. நீதான் என்னைக் காக்க வேண்டும்" என்றார்.


    உடனே அம்பரீஷ மகாராஜா, விஷ்ணு பகவானுக்குரிய நாமங்களை உச்சரித்து அவரை நோக்கி தியானம் செய்தார். இதையடுத்து சுதர்சன சக்கரம் விலகிச் சென்றது.

    வைகுண்ட ஏகாதசி விரதத்தை மேற்கொள்பவர்கள். அன்றைய தினம் தங்களின் சக்திக்கு ஏற்ற வகையில் 'ஒம் நமோ பகவதே வாஸுதேவாய என்ற மந்திரத்தை. 28 முறை அல்லது 54 முறை அல்லது 108 முறை ஜெபித்து வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

    • மகா தீப மை நடராஜருக்கு சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும்.
    • திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ், ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    திருவண்ணாமலையில் உள்ள மகா தீப மலையை பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி, மார்கழி மாத பவுர்ணமி வருகிற 13-ந்தேதி அதிகாலை 5.29 மணிக்கு தொடங்கி, மறுநாள் (14-ந்தேதி) அதிகாலை 4.46 மணிக்கு நிறைவு பெறுகிறது. அந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மேலும், ஆருத்ரா தரிசன வழிபாடும் 13-ந்தேதி நடைபெற உள்ளது. அப்போது மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரையில் சேகரிக்கப்பட்ட மகா தீப மை நடராஜருக்கு சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். அதன்பிறகு பக்தர்களுக்கு வழங்கப்படும்.

    பவுர்ணமி மற்றும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ், ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    • ஆதிசேஷன் மீது அமர்ந்திருக்கும் சுதைச் சிற்பம் காணப்படுகிறது.
    • அனுமனும், பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருடனும் அமர்ந்திருக்கிறார்கள்.

    கோவில் தோற்றம்

    செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்துள்ளது, வெங்கம்பாக்கம் கிராமம். இங்கு ஸ்ரீரங்கநாதப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. பொதுவாக அரங்கநாதப் பெருமாள் என்றாலே அவர் சயனக்கோலத்தில் தான் காட்சி தருவார்.


    ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள பெருமாள், அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பது, வேறு எங்கும் காணக் கிடைக்காத காட்சி என்கிறார்கள். இந்த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    இந்த திருத்தலத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாள், சுயம்பு மூர்த்தியாக இந்த கிராமத்தில் தோன்றியிருக்கிறார். இதையடுத்து அவருக்கு ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து, ஆரம்ப காலத்தில் சிறிய கூரை அமைத்து வழிபாட்டைத் தொடங்கியிருக்கிறார்கள்.

    நாளடைவில் சிறிய அளவில் கல்லால் ஆன கட்டிடம் கட்டி, அதனுள் ஸ்ரீரங்கநாதப் பெருமாளை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். கோவிலை நிர்மாணித்து 1964-ம் ஆண்டில் முதல் கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி முடித்துள்ளனர்.

    அதன்பின்னர் 1991-ம் ஆண்டும் கோவில் புனரமைக்கப்பட்டு, சற்றே விரிவுபடுத்தி கட்டப்பட்டு, மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்கிறது.

    இந்த ஆலயத்தின் முகப்பு பகுதியில் மகாவிஷ்ணு, நான்கு திருக்கரங்களுடன் ஆதிசேஷன் மீது அமர்ந்திருக்கும் சுதைச் சிற்பம் காணப்படுகிறது. அவருக்கு இருபுறத்திலும் சிறிய திருவடி என்று அழைக்கப்படும் அனுமனும், பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருடனும் அமர்ந்திருக்கிறார்கள்.

    அதன் அருகிலேயே மகாவிஷ்ணு ஆதிசேஷன் மீது சயனக் கோலத்தில் வீற்றிருக்கும், பல வண்ண சுதைச் சிற்பம் காண்போர் கண்களைக் கவரும் விதத்தில் அமைந்துள்ளது. பழமையான இக்கோவிலானது, கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம் என்ற அமைப்புடன் கட்டப்பட்டிருக்கிறது.

    பொதுவாக ஸ்ரீரங்கநாதப்பெருமாள் ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும் கோலத்தில்தான் காட்சி அளிப்பார். ஆனால் இத்தலத்தில் பெருமாள் ஆதிசேஷன் மீது சிம்மாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் இருப்பது, அரிதான ஒரு அமைப்பாகும்.


    கிழக்கு திசை நோக்கி வீற்றிருக்கும் இந்தப் பெருமாள், வலது காலை தொங்கவிட்டும், இடது காலை மடக்கி வைத்த நிலையிலும் அமர்ந்துள்ளார். நான்கு கரங்கள் கொண்ட இந்தப் பெருமாளின் மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரம் தாங்கியும், கீழ் இரு கரங்களில் வலது கரத்தை பீடத்தின் மீதும், இடது கரத்தை முழங்காலின் மீதும் வைத்த நிலையில் காணப்படுகிறார்.

    மூலவர் சன்னிதிக்கு எதிர்புறத்தில் கருடாழ்வார் வீற்றிருக்கிறார். மூலவர் சன்னிதிக்கு எதிரே மறுபுறத்தில் ஆஞ்சநேயர் சன்னிதி இருக்கிறது. இத்தலத்தின் வழியாக செல்லும் பக்தர்கள் அனைவரும், இவ்வாலயம் வந்து பெருமாளை வணங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

    இத்தலத்துப் ஸ்ரீரங்கநாதப் பெருமாளை வணங்கினால், முயற்சித்த காரியம் வெற்றிகரமாக நிறைவேறும் என்று இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

    இந்த ஆலயத்தில் நடைபெறும் வைணவ நிகழ்வுகளில், வைகுண்ட ஏகாதசி திருவிழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த விழாவில், வெங்கம்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, பெருமாளை தரிசனம் செய்து அவரின் அருளைப் பெற்றுச் செல்வது வாடிக்கை.


    இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரை யிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்குக் கடற் கரைச் சாலையில் மாமல்லபுரத்திற்கும், கல்பாக்கத்திற்கும் இடையில் அமைந்துள்ளது வெங்கம்பாக்கம். செங்கல்பட்டில் இருந்து கல்பாக்கம் சாலையில் இயங்கும் அனைத்துப் பேருந்துகளும் இவ்வூரில் நின்று செல்லும். பேருந்து நிறுத்தத்தில் இருந்து சதுரங்கப்பட்டினம் சாலையில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

    • எங்களிடம் பேரன்பு கொண்ட திருமாலே! மணிவண்ணா!
    • பிறவியை நீக்கி எம்மை ஆட்கொள்ளுகின்ற எங்கள் எம் பெருமானே!

    திருப்பாவை

    பாடல்:

    மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்

    மேலையார் செய்வனகள் வேண்டுவன, கேட்டியேல்;

    ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன

    பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே

    போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே,

    சாலப் பெரும்பறையே; பல்லாண் டிசைப்பாரே,

    கோல விளக்கே, கொடியே, விதானமே,

    ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்:

    எங்களிடம் பேரன்பு கொண்ட திருமாலே! மணிவண்ணா! மார்கழி நோன்பை நோற்க, நாங்கள் புதிதாக ஒன்றும் கேட்கப் போவதில்லை. பெரியவர்கள் விதித்துள்ளவற்றுள் நாங்கள் வேண்டுவதைக் கேட்பாயாக! உலகையே நடுங்கச் செய்யும் உன் பாஞ்சஜன்யம் போன்ற வெண்சங்குகள், உன் புகழைப் பாடவல்ல பெரிய பறை முரசுகள், பல்லாண்டு பாடும் பாடல் கலைஞர்கள், அழகிய விளக்குகள், கொடிகள், குடைகள் ஆகியவற்றை ஆலிலையில் அவதரித்த நீ எங்களுக்கு அருள வேண்டும்.

    திருவெம்பாவை

    பாடல்:

    பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்

    பந்தனை வந்தறுத் தார்அவர் பலரும்

    மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்

    வணங்கு கின்றார்; அணங்கின் மணவாளா!

    செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ்

    திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!

    இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்

    எம்பெரு மான்! பள்ளி எழுந்தருளாயே!

    விளக்கம்:

    நிலமற்ற இடத்தில் தவம் செய்து உன்னை உணர்ந்த யோகியரும், பந்த பாசங்களை உதறியவர்களும், மை தீட்டிய கண்களுடைய பெண்டிரைப் போன்று தங்களைப் பாவித்துக் கொண்டு உன்னைத் தொழுகிறார்கள். உமையம்மையின் மணவாளனே! இந்தப் பிறவியை நீக்கி எம்மை ஆட்கொள்ளுகின்ற எங்கள் எம் பெருமானே! சிவந்த தாமரை மலர்கள் மலர்ந்துள்ள வயல்கள் சூழ்ந்திருக்கும் திருப்பெருந்துறையில் உறைந்தருளும் சிவபெருமானே! துயில் நீங்கி எழுந்தருள்வாய்.

    • இன்று ஸ்ரீவைகுண்ட ஏகாதசி.
    • சகல விஷ்ணு ஆலயங்களிலும் பரமதவாசல் திறப்பு விழா.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மார்கழி-10 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை.

    திதி: ஏகாதசி காலை 10.02 மணி வரை. பிறகு துவாதசி.

    நட்சத்திரம்: கார்த்திகை நண்பகல் 1.41 மணி வரை. பிறகு ரோகிணி.

    யோகம்: சித்த, மரணயோகம்.

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று ஸ்ரீவைகுண்ட ஏகாதசி. கர்போட்ட நிவர்த்தி. சகல விஷ்ணு ஆலயங்களிலும் பரமதவாசல் திறப்பு விழா. சகல விஷ்ணு ஆலயங்களிலும் இராப்பத்து உற்சவம் ஆரம்பம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் முத்தங்கி சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் முத்தங்கி சேவை. இரவு தங்க சேஷ வாகனத்தில் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதிவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற பெரு திருப்பிரட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். தூத்துக்குடி ஸ்ரீபாகம் பிரியாள் வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம். மாலை ஊஞ்சல் சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-செலவு

    மிதுனம்-தெளிவு

    கடகம்-சாந்தம்

    சிம்மம்-உழைப்பு

    கன்னி-சாதனை

    துலாம்- ஓய்வு

    விருச்சிகம்-முயற்சி

    தனுசு- நலம்

    மகரம்-ஈகை

    கும்பம்-உயர்வு

    மீனம்- நன்மை

    • எந்தெந்த கோவில்களில் எல்லாம் பரமபத வாசல் உள்ளதோ அங்கு எல்லாம் வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்படும் நிகழ்வு நடைபெறும்.
    • சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

    ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    புகழ்பெற்ற கோவில்கள் மட்டுமின்றி, பெரும்பாலான பெருமாள் கோவில்களிலும், எந்தெந்த கோவில்களில் எல்லாம் பரமபத வாசல் உள்ளதோ அங்கு எல்லாம் வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்படும் நிகழ்வு நடைபெறும்.

    இன்று 10-1-2025 அதிகாலையில் திருச்சி ஸ்ரீ ரங்கம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆகிய கோவில்களில் சொர்க்கவாசல் ஆனது திறக்கப்பட்டது.

    பல்வேறு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

    • நம்பெருமாளின் மோகினி அலங்காரம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.
    • இராப்பத்து திருவாய்மொழி திருநாள் நாளை முதல் தொடங்குகிறது.

    திருச்சி:

    108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதெசி பெருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றது.

    இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த டிசம்பர் 30-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 31-ந்தேதி பகல்பத்து திருவாய்மொழி திருநாள் தொடங்கியது.

    விழாவையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் தினந்தோறும் காலையில் பல்வேறு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

    பகல் பத்து 10-ம் திருநாளான இன்று நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரம் நடைபெற்றது. பாற்கடலை கடைந்து கிடைத்த அமுதத்தை அசுரர்கள் பறித்துக் கொள்ள, தேவர்கள் திருமாலைச் சரணடைந்தனர். அவரும் மோகினியாகத் தோன்றி, தேவர்களுக்கு அமுதம் கிடைக்கச் செய்தார்.

    இதை நினைவூட்டும் வகையில் இந்த மோகினி அலங்கார காட்சி நடைபெற்றது. இதற்காக இன்று காலை 6 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், 7 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தார். அங்கு மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

    நம்பெருமாளின் மோகினி அலங்காரம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. அவர் வெண்ணிற பட்டு புடவை அணிந்து, வலது திருக்கையில் தங்கக் கோலக்கிளி தாங்கி, இடது திருக்கை தொங்க விட்டுக் கொண்டு, கம்பீரமாக அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி அளித்தார்.

    மேலும் சவுரிக் கொண்டை அணிந்து, அதில் கலிங்கத்துராய் , நெற்றி பட்டை , முத்து பட்டை சாற்றி, காதில் வைர மாட்டல், வைரத் தோடு அணிந்து, மூக்குத்தி அணிந்து காட்சி தந்தார். மார்பில் பங்குனி உத்திர பதக்கம், அதன்மேல் தாயாரின் திருமாங்கல்யம், அழகிய மணவாளன் பதக்கம், அடுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டிருந்தன.

    மேலும் நெல்லிக்காய் மாலை, தங்க பூண் பவழ மாலை, காசு மாலை அணிந்து, இடது திருக்கை முழுவதும் தங்க வளையல்கள், அரசிலை பதக்கம், பவழ வலையல், தாயத்து சரங்களுடன் கம்பீரமாக் காட்சி அளித்தார்.

    வடியில் தங்க சதங்கை, தண்டைகளும், பின்புறம் ஏலக்காய் ஜடை தாண்டா சாற்றி,அதன் மேல் கல் இழைத்த ஜடை நாகத்துடன் சேர்ந்த சிகப்பு கெம்புக்கல் ஜடை, ராக்கொடி அணிந்து, திருக்கைகளில் புஜ கீர்த்தி சாற்றி, அரைச்சலங்கை இடுப்பில் வலைவாக சாற்றி சூர்ய பதக்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்திருந்தார்.

    வருடம் ஒருமுறை மட்டுமே சேவை தரும் நாச்சியார் திருக்கோலத்தை காண திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்கள் மோகின் அலங்காரத்தில் பெருமாளை பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து மாலை 5 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள், இரவு 7 மணிக்கு கருட மண்டபம் சென்றடைவார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

    இதன் தொடர்ச்சியாக இராப்பத்து திருவாய்மொழி திருநாள் நாளை முதல் தொடங்குகிறது. நாளை (வெள்ளிக் கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து சிம்ம கதியில் புறப்பட்டு வெளியில் வருவார்.

    2-ம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே 3-ம் பிரகாரத்திற்கு வரும் நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வருவார்.

    அதனைத் தொடர்ந்து அதிகாலை 5.15 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்படும். அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசல் வழியாக எழுந்தருள்வார். பக்தர்கள் ரங்காரங்கா கோஷம் முழங்க அரங்கனை பிந்தொடர்ந்து சொர்க்கவாசல் வழியாக வருவார்கள்.

    பின்னர் நம்பெருமாள் மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு வருவார். அங்கு பெருமாள் சுமார் 1 மணி நேரம் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    அதன்பின் சாதரா மரியாதையாகி(பட்டு வஸ்திரம் சாற்றுதல்) ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி நள்ளிரவு வரை பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் இரவு 12 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, வீணை வாத்தியத்துடன், இரவு 1.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

    ராப்பத்து பெருவிழாவின் 7ம் திருநாளான 16-ந்தேதி அன்று திருக்கைத்தல சேவை நடைபெறும். 8-ம் திருநாளான 17-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம் நடைபெறும். 10ம் திருநாளான 19-ந்தேதி தீர்த்தவாரியும், 20-ந்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதெசி பெருவிழா நிறைவு பெறும்.

    ×