என் மலர்
வழிபாடு
- உன் சிவந்த கண்களை சிறிதளவாவது திறந்து எங்களைப் பார்க்கக் கூடாதா?
- திருப்பெருந்துறையில் உறைந்தருளும் சிவபெருமானே!
திருப்பாவை
பாடல்
அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்;
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற் போல்
அங்கண்ணிரண்டுங்கொண் டெங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
அழகிய பெரியதான உலகத்தில் உள்ள பேரரசர்கள் எல்லாம் தங்களது செருக்குகள் களைந்து, உன் கட்டிலின் அருகில் கூடியிருப்பது போல, நாங்களும் உன்னைச் சரணடைய வந்திருக்கிறோம். சலங்கையைப் போலவும், சிறிதே இதழ்கள் திறந்த தாமரையைப் போலவும் இருக்கும் உன் சிவந்த கண்களை சிறிதளவாவது திறந்து எங்களைப் பார்க்கக் கூடாதா? சூரியனும் சந்திரனும் ஒருங்கே உதித்தது போல் இருக்கும் உன் இரு கண்களாலும் எங்களை நோக்கினால் எங்களின் எல்லா சாபங்களும், பாவங்களும் நீங்கி நாங்கள் தூய்மையடைவோம்.
திருவெம்பாவை
பாடல்:
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள் போய்
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலர, மற்றண்ணல்அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே!
அலைகட லே! பள்ளி எழுந்தரு ளாயே!
விளக்கம்:
கருட தேவரின் அண்ணனாகிய அருணன் சூரியதேவனின் தேரை செலுத்துவதற்காக கீழ்திசை வந்து விட்டான். இருள் விலகி, உன் திருமுகத்துக் கருணையைப் போன்ற ஒளிக்கற்றைகளைப் பாய்ச்ச சூரியனும் எழுந்து விட்டான். உனது திருக்கண்களைப் போன்ற மலர்கள் மலர்ந்து விட்டன. அந்த மலர்களில் உள்ள தேனைக் குடிப்பதற்காக வண்டுகள் ரீங்காரமிடுகின்றன. திருப்பெருந்துறையில் உறைந்தருளும் சிவபெருமானே! அருட் செல்வத்தை தந்தருளும் ஆனந்த மலை போன்றவனே! அலை வீசும் கடல் போன்றவனே! துயில் நீங்கி எழுந்தருள்வாய்!
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
- ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மார்கழி-22 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சப்தமி இரவு 6.56 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம்: உத்திரட்டாதி இரவு 7.53 மணி வரை பிறகு ரேவதி
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் திரிபுர சம்கார லீலை. ஆழ்வாார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் கஜேந்திர மோட்சம். கரூர் ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. சிதம்பரம் ஸ்ரீ சிவபெருமான் காலையில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் புறப்பாடு. இரவு கைலாச பர்வத வாகனத்தில் பவனி. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆக்கம்
ரிஷபம்-உழைப்பு
மிதுனம்-ஓய்வு
கடகம்-புகழ்
சிம்மம்-மகிழ்ச்சி
கன்னி-ஊக்கம்
துலாம்- தனம்
விருச்சிகம்-களிப்பு
தனுசு- வெற்றி
மகரம்-போட்டி
கும்பம்-தெளிவு
மீனம்-லாபம்
- விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
- சுமார் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த ஆன்மீக சுற்றுலாத் தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது.
இந்த கோவிலில் விடுமுறை நாட்களில் அதிகமாக கூட்டம் காணப்படும். தற்போது பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி, தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம், விருதுநகர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதை யாத்திரையாக அலகு குத்தியும் , காவடி எடுத்து கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
மேலும் ஐயப்ப பக்தர்கள் சீசன் ஆக இருப்பதால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் தங்கள் விரதத்தை தொடங்குவதாக இருந்தாலும், கோவிலுக்கு செல்வதாக இருந்தாலும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்து சாமிதரிசனம் செய்து செல்வது வழக்கம்.

அந்த வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே கோவிலில் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சியை முன்னிட்டு இன்று கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. பக்தர்கள் வருகையால் திருச்செந்தூர் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது
போக்குவரத்து நெருக்கடியால் உள்ளுர் பொதுமக்கள் ரதவீதிதளில் நடமாட முடியாமல் திணறி வருகின்றனர்.
- பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு அலங்கார ரூபத்தில் சாமி அம்பாள் எழுந்தருள, வேதமந்திரங்கள் முழங்க தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சம்பந்த விநாயகர், உண்ணாமலை சமேத அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பக்தர்கள் கொட்டும் பணியையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு வழிபட்டனர்.
உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் சாமி அம்பாள் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவர்.
மாட்டு பொங்கல் தினத்தன்று சாமி அம்பாள் அருணாசலேஸ்வரர் கோவில் திட்டிவாசல் வழியாக சூரிய பகவானுக்கு காட்சி தந்து மாட வீதியில் வலம் வருவர். மாடவீதியில் 3 முறை வலம் வந்த பின்னர் மாலையில் திருவூடல் நிகழ்ச்சி நடைபெறும்.
மாட்டுப் பொங்கல் தினத்தில் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தியம் பெருமான் பலகாரங்கள் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தருவார்.
- வளமையான பல பசுக்களை உடைய நந்தகோபனின் மகனே!
- உன் மலர் பாதங்களுக்கு பூக்கள் கொண்டு அர்ச்சிக்கிறோம்.
திருப்பாவை
பாடல்:
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்;
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்;
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
பால் கறப்பதற்கெனக் கொண்டு வந்த கலசங்கள் நிரம்பி வழியும் வரை, இடைவிடாது பால் சுரந்து கொண்டே இருக்கும் வளமையான பல பசுக்களை உடைய நந்தகோபனின் மகனே! உறக்கம் விட்டு எழுவாய். இவ்வுலகில் எல்லோரும் காணும்படியாக ஒளிச்சுடராக காட்சியளித்த கண்ணனே! வலிமை கொண்டவனே! பெரியவனே! கண் விழிப்பாய்! உன்னை எதிர்த்தவர்கள் தங்கள் வலிமையை இழந்து, தோற்று உனது படுக்கையறை வாசல் தேடிவந்து, உன் திருவடிகளில் சரணம் அடைவதைப் போல, நாங்களும் உன் பெருமைகளைப் புகழ்ந்து பாடி வந்து நிற்கின்றோம்.
திருவெம்பாவை
பாடல்:
போற்றி! என் வாழ்முதல் ஆகிய பொருளே!
புலர்ந்தது; பூங்கழற் கிணைதுணை மலர் கொண்டு
ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில் நகை கொண்டுநின் திருவடி தொழுகோஞ்
சேற்றிதழ்க் கமலங்கண் மலரும்தண் வயல்சூழ்
திருப் பெருந் துறையுறை சிவபெருமானே!
ஏற்றுயர் கொடியுடையாய்! எமை உடையாய்!
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
விளக்கம்:
எனது வாழ்வின் முழுமுதல் பொருளாகிய பெருமானே! உன்னைப் போற்றுகின்றேன்! பொழுது விடிந்து விட்டது. உன் மலர் பாதங்களுக்கு பூக்கள் கொண்டு அர்ச்சிக்கிறோம். உன் திருமுகத்தில் மலரும் அருட் புன்னகையை பார்த்து உனது திருவடிகளைத் துதிக்கிறோம். தாமரை மலர்கள் மலர்ந்துள்ள சேறு நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறை என்னும் தலத்தில் வாழ்கின்ற சிவபெருமானே! காளை மாட்டின் கொடியைக் கொண்டவனே! என்னை ஆட்கொண்ட பெருமானே! உனது திருப்பள்ளியில் இருந்து எழுந்தருள்வாய்!
- இன்று சஷ்டி விரதம்.
- சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மார்கழி-21 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சஷ்டி இரவு 9.11 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: பூரட்டாதி இரவு 9.28 மணி வரை பிறகு உத்திரட்டாதி
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சஷ்டி விரதம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. திருமாலிருஞ்சோலை கள்ளழகர் பகற்பத்து உற்சவம். திருக்குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் வெள்ளிச் சப்பரத்தில் திருவீதியுலா. மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் பவனி. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சிந்தனை
ரிஷபம்-நற்செயல்
மிதுனம்-உற்சாகம்
கடகம்-போட்டி
சிம்மம்-முயற்சி
கன்னி-உயர்வு
துலாம்- இன்பம்
விருச்சிகம்-யோகம்
தனுசு- சாதனை
மகரம்-கடமை
கும்பம்-உழைப்பு
மீனம்-மாற்றம்
- சிதம்பரம் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திரு மஞ்சன தரிசனமும் நடைபெறுவது வழக்கம்.
- தொடர்ந்து 14-ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலா, 15-ந் தேதி தெப்போற்சவத்துடன் உற்சவம் நிறைவடைகிறது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திரு மஞ்சன தரிசனமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்கள் மற்றும் நாட்டிலிருந்தும் திரளாக கலந்து கொண்டனர்.
இதனையத்து நாளை சந்திர பிரபை வாகன வீதியுலா, 6-ந் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா, 7-ந் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா ஆகியன நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான 12-ந் தேதி தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும், 13-ந் தேதி மதியம் 2 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், ஞான காச சித்சபை பிரவேசமும் நடைபெறும். தொடர்ந்து 14-ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலா, 15-ந் தேதி தெப்போற்சவத்துடன் உற்சவம் நிறைவடைகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் குழு செயலர் வெங்கடேச தீட்சிதர், துணைச்செயலர் சுந்தரதாண்டவ தீட்சிதர், உற்சவ ஆச்சாரியர் சிவராஜ தீட்சிதர் ஆகியோர் செய்து வருகின்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் சிதம்பரம் டி.எஸ்.பி. லாமேக் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை சிதம்பரம் நகராட்சி சேர்மன் செந்தில்குமார் உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள் செய்து இருந்தனர்.
- வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் காலை 4.30 மணிக்கு திறக்கப்படும்.
- கோவிலின் சுற்றுப்புறங்களில் 32 கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட உள்ளன.
சென்னை:
மகத்துவம் வாய்ந்த மார்கழியில் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏதாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு வரும் 10-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கான முன்னேற்பாடு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பார்த்தசாரதி கோவிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் காலை 4.30 மணிக்கு திறக்கப்படும். அதற்கான தரிசனக் கட்டண சீட்டு ரூ.500-க்கு ஆன்லைன் மூலம் வருகின்ற 6-ந் தேதி பெற்று கொள்ளலாம்.
1,500 கட்டணச் சீட்டுகள் ஆன்லைன் மூலம் வழங்கப்படும். மேலும், 500 நபர்கள் முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் சொர்க்கவாசல் தரிசனம் செய்ய கட்டணமின்றி அனுமதிக்கப்படுவார்கள். சொர்க்கவாசல் நிகழ்வுக்கு பிறகு நடக்கும் தரிசன நிகழ்வுக்கு சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.
முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் வைகுண்ட ஏகாதசி அன்று காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரையிலும் கோவிலின் பின்கோபுர வாசல் வழியாக சாமி தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறை சார்பில் 3 துணை கமிஷனர்கள் தலைமையில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் என ஒரு முறைக்கு 600 போலீசார் வீதம் 3 முறைகளில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். கோவிலின் சுற்றுப்புறங்களில் 32 கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட உள்ளன.
கோவிலில் 5 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்படும். அனைத்து பக்தர்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் வழங்கப்படும். கோவில் தெப்பக்குளம் அருகிலும் மற்றும் நரசிம்மர் சன்னதி பின்புறமும் 20 தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மார்கழி-20 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பஞ்சமி இரவு 11.16 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம்: சதயம் இரவு 10.51 மணி வரை பிறகு பூரட்டாதி
யோகம்: அமிர்த, மரணயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சிதம்பரம், திருநெல்வேலி, குற்றாலம் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் உற்சவம் ஆரம்பம். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர், ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன அலங்கார சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் காலை சிறப்பு திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர் புறப்பாடு. ஸ்ரீ வாஞ்சியம் திருமுருகப் பெருமான் அபிஷேகம், அலங்காரம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதரவு
ரிஷபம்-ஜெயம்
மிதுனம்-ஒற்றுமை
கடகம்-கட்டுப்பாடு
சிம்மம்-கடமை
கன்னி-கண்ணியம்
துலாம்- உழைப்பு
விருச்சிகம்-ஏற்றம்
தனுசு- வரவு
மகரம்-தாமதம்
கும்பம்-பயணம்
மீனம்-இனிமை
- வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
- விரைவில் திருமணம் நடைபெற வைகுண்டவாசன் அருள்பாலிப்பார்.
ஆலய முகப்புத் தோற்றம்
அனந்தன் என்னும் பெருமாளுக்கு இந்தப் பூவுலகம் முழு வதும் சிறப்பு வாய்ந்த பல ஆலயங்கள் உள்ளன. கிராமப்புறங்களில் மிகப் பழமை வாய்ந்த வைணவக் கோவில்கள் இருப்பது மிக மிக அரிது.

ஆனால் கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்திலுள்ள பு.உடையூர் கிராமத்தில் அப்படி ஒரு பெருமைமிகு பெருமாள் ஆலயம் அமைந்திருக்கிறது. இந்த ஆலயம் கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோவில் ஆகும்.
இவ்வாலயம் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் என்பதை மட்டும், அதன் கட்டிடக்கலையை வைத்து கணிக்க முடிகிறது. ஆனால் யாரால் கட்டப்பட்டது என்பதற்கான சான்று எதுவும் இல்லை.
பல நூறு வருடங்களாக சிதிலமடைந்து கிடந்த இந்த ஆலயத்தில், ராமானுஜர் சில காலம் தங்கியிருந்ததாகவும், அவர் சிதிலமடைந்த ஆலயத்தை புதுப்பித்ததாகவும் தற்போதைய தல வரலாறு தெரிவிக்கிறது.
தில்லையை தரிசிக்க வந்த ராமானுஜர், இந்த வழியாகத்தான் தில்லைக்குச் சென்றிருக்கிறார். அப்போது இந்த கிராமத்தில் சிதிலமடைந்து கிடந்த கல்யாண வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தைப் பார்த்துள்ளார்.
அப்பகுதி மக்களிடம், "ஏன் இப்படி இந்த ஆலயத்தை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டீர்கள்? பரந்தாமன் ஆலயத்தை பார்ப்பதற்கே, மனது பாரமாக இருக்கிறதே!" என்று வருத்தப்பட்டாராம்.
ஊர் மக்களோ, "பல நூற்றாண்டு காலமாகவே இந்த ஆலயம் சிதிலமடைந்துதான் இருக்கிறது. இந்த ஆலயத்தை கட்டும் அளவுக்கு, எங்களிடம் போதிய பொருளாதாரம் இல்லை" என்று கூறினராம்.
உடனே ராமானுஜர் தன் பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு, இவ்வூரில் சில காலம் தங்கி ஊர் மக்களின் உடல் உழைப்போடு சிதைந்து கிடந்த கல்யாண வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தை பழமை மாறாமல் அப்படியே கட்டி முடித்திருக்கிறார் என்ற செவி வழிச் செய்தி நமக்குக் கிடைக்கிறது. அதன்பிறகு அவ்வூர் மக்கள், இந்த பெருமாளைக் கொண்டாடத் தொடங்கினர்.

கோவில் அமைப்பு
முன்மண்டபம் அதில் திருநாமம், அனுமன், கருடாழ்வார் ஆகியோரின் சுதை சிற்பங்கள் அழகுற காட்சி தருகின்றன. அவைகளை வணங்கிவிட்டு உள்ளே சென்றால், பலிபீடம், கருடாழ்வார் ஆகியோரை தரிசிக்கலாம்.
ஆலயத்தில் நுழைந்ததும் முதலில் இருப்பது மணி மண்டபம். அடுத்தது மகா மண்டபம். அர்த்த மண்டபத்தின் வாசலில் ஜெயன், விஜயன் ஆகிய இரண்டு துவார பாலகர்கள் கம்பீரமாக காட்சி தருகிறார்கள். அந்த மண்டபத்தில் சன்னிதிகள் எதுவும் கிடையாது.
கிழக்கு நோக்கிய கருவறையில் கல்யாண வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவர்களுக்கு முன்பாக ஸ்ரீதேவி-பூதேவியுடன் கூடிய வரதராஜப் பெருமாள், இடது பக்கம் சக்கரத்தாழ்வார், வலது பக்கம் பெருந்தேவி தாயார் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.
தன் திருநாமத்திலேயே கல்யாண வெங்கடேசப் பெருமாள் என்று இருப்பதால், இவ்வாலயம் திருமணத் தடையை போக்கும் சிறப்பு மிக்க ஆலயமாகத் திகழ்கிறது.
பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு வந்த திரு மணங்கள் கைகூட, இவ்வாலய பெருமாள் மீது நம்பிக்கை வைத்து, அவரது சன்னிதி முன்பாக நின்று 'கோவிந்தா..' என்று கோஷம் எழுப்பி பிரார்த்தனை செய்தாலே போது மானது.
தடைகளை அகற்றி விரைவில் திருமணம் நடைபெற வைகுண்டவாசன் அருள்பாலிப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.
திருமணத்திற்குப் பிறகு இல்லற வாழ்க்கையில் சின்னச் சின்ன சலசலப்புகள் வருவது சகஜம்தான். ஆனால் அதுவே கோபமாக மாறி கணவன் - மனைவியை பல நேரங்களில் பிரிப்பதுண்டு.
மனம் வருத்தத்தால் மண வாழ்க்கையில் பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் இணைந்து வாழவும் இவ்வாலய கல்யாண வெங்கடேசப் பெருமாளை துளசி மாலை சூட்டி வணங்குகிறார்கள்.

அப்படி ஒன்றுசேரும் தம்பதியர் இருவரும் இங்கு வந்து, துளசியால் இறைவனை அர்ச்சித்து, தங்களின் நன்றிக் கடனை செலுத்துகிறார்கள்.
இவ்வாலயம் அமைந்த பு.உடையூர் கிராமத்தின் முக்கியமான தொழிலாக கருதப்படுவது விவசாயம் தான்.
இங்குள்ள விவசாயிகள், தங்கள் விவசாயப் பணியை தொடங்கும் முன்பு, நாராயணனின் நாமத்தை கூறி பிரார்த்தனை செய்துவிட்டுதான், விவசாயப் பணிகளைத் தொடங்குகிறார்கள். அப்படி செய்யப்படும் விவசாயம், அமோக விளைச்சலை அள்ளித் தருவதாக சொல்கிறார்கள்.
கல்வியில் சிறந்து விளங்க இங்கிருக்கும் அனுமனுக்கு கல்வி பயிலும் மாணவ - மாணவிகள், 'ஸ்ரீராமஜெயம்' எழுதி மாலையாக தொடுத்து அணிவித்து பிரார்த்தனை செய்கின்றனர். அப்படி செய்பவர்களுக்கு மன உறுதியும், தன்னம்பிக்கையும் பிறப்பதோடு, கல்வியிலும் சிறந்து விளங்குவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஆலயத்தில் ஆண்டு விழா மற்றும் வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்கள் மட்டுமே கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி அன்று காலையும், மாலையும் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு அன்று ஒரு நாள் மட்டும் இரவு முழுவதும் ஆலயம் திறந்திருக்கும்.
அதோடு வாரம் தோறும் சனிக்கிழமைகள், மாதந்தோறும் ஏகாதசி ஆகிய நாட்களிலும், கல்யாண வெங்கடேசப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடை பெறும்.
இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். சனிக்கிழமை மட்டும் மாலை வேளையிலும் திறக்கப்படும்.
அமைவிடம்
கடலூர் மாவட்டம் புவனகிரி மற்றும் சிதம்பரத்தில் இருந்து பு.உடையூர் கிராமத்திற்கு நகரப் பேருந்து வசதி உள்ளது.
- ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது.
- 81 சித்தர்கள் நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர்.
* தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது.
* அதாவது முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.
* ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.
* அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

* அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்சியே எடுத்தார். இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார்.
81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர். இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக இன்னொரு தகவல் உண்டு.
* இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது.
* விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.
* தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராட்சம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும் இது போகரின் கை வண்ணம்.
* அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.
* இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் - ஒன்பது வருடம்.
பழனி பாலதண்டாயுதபாணி கோவில் சுமார் 500 அடி உயரத்தில் மலையின் மீது அமைந்துள்ளது. மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை ரெயில், ரோப்கார் மற்றும் திருமஞ்சன பாதை ஆகியவை உள்ளன.

* தொடக்க காலத்தில் மலையின் பாறைத்திட்டுகள் வழியாகவே மலைக்குச் சென்று வந்துள்ளனர். பின்னர் பக்தர்கள் நலனை கருத்தில் கொண்டு, 1927-ம் ஆண்டு அடிவாரத்தில் இருந்து மலைக் கோவிலுக்குச் செல்ல 690 படிகள் கொண்ட பாதை அமைக்கப்பட்டது. இதுவே தற்போதைய பிரதான பாதையாக இருந்து வருகிறது.
* பாதயாத்திரை பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்துவோர் இந்த வழியைத்தான் பயன்படுத்துகின்றனர். கந்தசஷ்டியின் போது கோவில் யானை, மலைக்கோவிலுக்கு சென்று வருவதற்காக யானைப் பாதை அமைக்கப்பட்டது.
* தற்போது யானைப் பாதையும் பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளது. இதில் சாய்வு தளமும் அதை இணைக்கும் படிகளும் உள்ளன.
* இது தவிர வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி சென்று தரிசனம் செய்யும் வகையில், 1964-ம் ஆண்டு முதல் மின் இழுவை ரெயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது திருப்புகழ், வெற்றிவேல், முருகா என 3 மின்இழுவை ரெயில்கள் இயக்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து விரைவாக மலைக்கோவில் செல்வதற்கு 2004-ம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதி ரோப்கார் சேவை தொடங்கப்பட்டது. ரோப் கார் மூலம் 3 நிமிடத்தில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல முடியும்.
திருமஞ்சன பாதை வழியே, குருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் தீர்த்தம் எடுத்து வர மட்டுமே கோவில் நிர்வாகம் அனுமதித்துள்ளது.
- மையிட்டு விரிந்த கண்களை உடைய நப்பின்னையே!
- எம் பெருமானே! 'உன் கைப்பிள்ளை உனக்கே அடைக்கலம்.
திருப்பாவை
பாடல்:
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்;
மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணவாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்;
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்;
தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
குத்து விளக்குகள் சுற்றிலும் எரிந்து கொண்டிருக்க, யானையின் தந்தத்தால் செய்த கட்டிலில், மென்மையான பஞ்சு மெத்தையில், பூச்சூடிய கூந்தலை உடைய நப்பின்னையின் மார்பகத்தின் மீது சாய்ந்து படுத்திருக்கும் கண்ணபிரானே! வாய் திறந்து பேசுவாய்! மையிட்டு விரிந்த கண்களை உடைய நப்பின்னையே! எத்தனை நேரமானாலும், நீ உன் கணவனை எழுப்ப மாட்டாய். சிறு பொழுதும் அவன் பிரிவை நீ பொறுக்க மாட்டாய்; இது உன் பெருமைக்குப் பொருந்தாது.
திருவெம்பாவை
பாடல்:
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொற் புதுக்கும்எம் அச்சத்தால்
எங்கள் பெருமான்! உனக்கொன் றுரைப்போம்கேள்!
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க;
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு?எமக்கேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
எம் பெருமானே! 'உன் கைப்பிள்ளை உனக்கே அடைக்கலம்' என்ற பழமொழியை நாங்கள் புதுப்பிக்கின்றோம். இருப்பினும் அச்சமே ஏற்படுகின்றது. அதனால் நாங்கள் உன்னை வேண்டிக் கொள்கிறோம். எங்கள் மார்புகள் உன் அடியாரல்லாதவரைச் சேராதிருக்கட்டும். எங்கள் கைகள் உங்களைத் தவிர வேறு யாருக்கும் ஏவல் செய்யாது இருக்கட்டும். எங்கள் கண்கள் இரவும் பகலும் உன்னைத் தவிர வேறெதையும் காணாமல் இருக்கட்டும். இத்தகைய வரத்தை எங்களுக்கு நீ அருள் செய்தால், கதிரவன் எத்திசையில் உதித்தால் எமக்கு என்ன கவலை?






