என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • கலச சொம்பில் நூல் சுற்றி, மஞ்சள், குங்குமம் வைத்து, பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.
    • ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது நன்மை தரும்.

    உலகில் உள்ள உயிர்களை காப்பதற்காக அன்னை பராசக்தி பல வடிவங்களில் அவதாரம் எடுத்த மாதம் தான் ஆடி மாதம். அந்த ஆடி மாதத்தில் எல்லா நாட்களும் சிறப்பானவை தான் என்றாலும் ஆடி வெள்ளி மட்டும் எப்போதும் தனிச் சிறப்பு பெற்றது தான். ஏனென்றால் இந்த ஆடி வெள்ளியில் அம்மனை வழிபட்டால் எல்லா வளங்களும் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. இந்த ஆடி மாதம் தொடங்கிய அடுத்த நாளே ஆடி வெள்ளி வருவது கூடுதல் சிறப்பு. ஆடி மாத முதல் வெள்ளியில் அம்பிகையை எவ்வாறு வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்.

    அதிகாலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு வாசல் தெளித்து மாக்கோலமிட்டு வீட்டை துடைக்க வேண்டும். பூஜை அறையை சுத்தம் செய்தபின், எல்லா சாமி படங்களையும் துடைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும். வேப்பிலையை நிலை வாசலில் கட்ட வேண்டும்.

    கலச சொம்பில் நூல் சுற்றி, மஞ்சள், குங்குமம் வைத்து, பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர், நீர் நிரம்பிய கலசத்தை பூஜை அறையின் மத்தியில் மனைக்கோலம் போட்டு அதன் நடுவே வைக்க வேண்டும். அந்த கலச நீரில் அன்னையானவள் அம்பிகை எழுந்தருள வேண்டும் எல்லா வளங்களையும் வழங்க வேண்டும் என மனதுருகி வேண்டிக்கொள்ள வேண்டும். குல தெய்வத்திற்கும், இஷ்ட தெய்வத்திற்கும் தீபாராதனை காட்டி, சர்க்கரைப் பொங்கலை நிவேதனமாக படைக்க வேண்டும். முடிந்தால் ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது நன்மை தரும்.

    கணவருக்கு தொழிலில் மேன்மை ஏற்படுவதற்கு ஆடி வெள்ளியன்று மாலைப் பொழுதில், ஆதிபராசக்தி, புவனேஷ்வரி, அம்பிகை, அகிலாண்டேஷ்வரி என உங்கள் மனம் விரும்பும் எந்த அம்பிகையாக இருந்தாலும் சரி , பூச்சரங்களால் அலங்கரித்து வழிபட வேண்டும். தொழில் மேன்மை மட்டுமின்றி மாங்கல்ய பாக்யமும் தழைக்கும். கூடுதலாக குத்துவிளக்கு பூஜை செய்தால், அதாவது சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து, அவர்களுக்கு வெற்றிலை பாக்கு, தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம், பழம்,தேங்காய் முதலானவற்றை கொடுக்கலாம். இப்படி செய்தால் எல்லா நன்மைகளும் உங்கள் வீடு தேடி வரும் என்பார்கள்.

    ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழைகளிலும் வழிபாடு செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையிலாவது வழிபாடு செய்யலாம். திருமணத் தடை, குழந்தை பாக்கியம், மாங்கல்ய தோஷம் முதலானவை நீங்கி நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் வல்லமையை அன்னை பராசக்தி அருளிடுவாள்.

    ஆடி வெள்ளி நாளான நாளை ராகுநேரம் காலை 10.30 மணி முதல் 12 மணி வரை. அதனால் வழிபாடு மேற்கொள்பவர்கள் காலை 09.15 மணி முதல் 10.15 வரையும், மாலையில் 04.45 மணி முதல் 05.45 மணி வரையும் வழிபாடு செய்யலாம் .

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    நிதி நிலை உயரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    ரிஷபம்

    யோகமான நாள். காரிய வெற்றிக்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு உண்டு. தொழிலில் புதிய முதலீடுகள் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    மிதுனம்

    உற்சாகத்துடன் செயல்படும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். நண்பர்கள் ஒத்துழைப்போடு தொழில் வளர்ச்சி உண்டு. விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.

    கடகம்

    மகிழ்ச்சி கூடும் நாள். இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். சொத்து வாங்கும் சூழ்நிலைக்கு கேட்ட உதவி கிடைக்கும். புதிய வேலைக்கு விண்ணப்பிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    சிம்மம்

    ஆலய வழிபாட்டால் அமைதி கிடைக்கும் நாள். எடுத்த காரியத்தை முடிக்கப் பெரும் பிரயாசை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் குறைகளைப் பொருட்படுத்த வேண்டாம்.

    கன்னி

    வீண் விவகாரங்கள் விலகும் நாள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். செய்தொழிலில் லாபம் உண்டு. பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும். பதவிகளும் கிடைக்கலாம்.

    துலாம்

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். வரன்கள் வாயிற்கதவைத் தட்டும். வீடு மாற்றம், நாடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பலநாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும்.

    விருச்சிகம்

    யோகமான நாள். புதிய திட்டங்களுக்கு மாற்றினத்தவர்களின் ஆதரவு உண்டு. அரசு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு அது கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும்.

    தனுசு

    தொழில் போட்டிகள் அகலும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். காவல்துறை சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட மனக்கலக்கம் அகலும். ஊதிய உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

    மகரம்

    விரோதிகள் விலகும் நாள். வியாபாரத்தில் புதியவர்கள் வந்திணைவர். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோக மாற்றம் உறுதியாகும்.

    கும்பம்

    நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். தடைகள் விலகும். தனவரவு உண்டு. தாழ்வு மனப்பாமையை அகற்றிக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களின் குறையைத் தீர்ப்பீர்கள்.

    மீனம்

    காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும் நாள். விலகிச்சென்ற சொந்தங்கள் மீண்டும் வந்திணைவர். பஞ்சாயத்துகள் சாதகமாகும். தொழில் மாற்ற சிந்தனை உருவாகும்.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    • குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-1 (வியாழக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சப்தமி இரவு 6.33 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம் : ரேவதி காலை 3.29 மணி வரை பிறகு அசுவினி

    யோகம் : சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம்

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திரு மெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.

    சோழவந்தான் அருகில் குருவித்துறை சித்திர ரத வல்லபபெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராக வேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உற்சாகம்

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-உதவி

    கடகம்-நன்மை

    சிம்மம்-பரிசு

    கன்னி-பாராட்டு

    துலாம்- உயர்வு

    விருச்சிகம்-இன்சொல்

    தனுசு- நற்செயல்

    மகரம்-புகழ்

    கும்பம்-பெருமை

    மீனம்-கவனம்

    • குருபகவானுக்கு உரிய வியாக்கிழமையில் ஆடி பிறப்பது மிகவும் சிறப்பானது.
    • ஆடி மாதம் தொடங்கி மறுநாளே ஆடி வெள்ளி வருவது கூடுதல் சிறப்பு.

    வருடத்தில் எல்லா மாதமும் சிறப்பு வாய்ந்தது தான் என்றாலும் ஆடி மாதம் தனிச் சிறப்பு பெற்றது. ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்று தான் அழைப்பார்கள். ஏன் என்று தெரியுமா? ஆடி என்பதே ஒரு தேவ மங்கையின் பெயர் தான். தேவ மங்கை ஒரு சாபத்தால் வேப்பமரமாக மாறி பின் அம்பிகைக்கு உகந்த விருக்ஷமாக மாறியவள். அதனால் தான் ஆடி மாதத்தையும் அம்மனையும் வேம்பையும் பிரிக்க முடியாது என்று சொல்வார்கள்.

    நாளை ஆடி முதல் நாள். குருபகவானுக்கு உரிய வியாக்கிழமையில் ஆடி பிறப்பது மிகவும் சிறப்பானது. ஆடி மாதம் தொடங்கி மறுநாளே ஆடி வெள்ளி வருவது கூடுதல் சிறப்பு. இந்த பதிவில் ஆடி மாத முதல் நாள் வழிபாடு பற்றி பார்க்கலாம்.

    ஆடி முதல் நாள் காலை எழுந்ததும் வாசல் தெளித்து மாக்கோலமிட்டு, வீடு, வாசல் துடைத்து, பூஜை அறையில் சாமி படங்களுக்கு பூ போட வேண்டும். பின்னர் ஒரு கலச சொம்பில் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, மலரால் அலங்கரித்து வைக்க வேண்டும். அதன் பின்னர் காமாட்சி அம்மன் விளக்கேற்றி இஷ்ட தெய்வத்தையும், குல தெய்வத்தையும் மனதார வணங்க வேண்டும். ஆடி மாதத்தில் மேற்கொள்ளும் விரதங்கள் முழுமையடைய வேண்டும். வேண்டிய வரங்களெல்லாம் கிடைக்க வேண்டும். எல்லா சூழ்நிலையிலும் எங்களோடு துணை நிற்க வேண்டும் தாயே ! என்றும் அந்த அம்பிகையின் அருள் வேண்டும் என மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.

    இறுதியாக அம்பிகைக்கு நைவேத்தியமாக வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், பாயசம் என உங்களால் முடிந்ததை படைக்கலாம். வழிபாட்டின் போது அபிராமி அந்தாதி பாராயணம் செய்யலாம் அல்லது உங்களுக்கு தெரிந்த அம்மன் மந்திரங்களை அல்லது பாடல்களை பாடலாம். எதுவுமே தெரியவில்லை என்றாலும் குறையில்லை. அந்த அன்னையின் அருள் வேண்டி மனதார வேண்டினாலே போதும். கேட்டதை மட்டுமல்ல நம் தேவையறிந்து கேட்காததையும் அன்னை நமக்கு அருளிடுவாள்.

    • ஆடிப்பூர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்படும்.
    • அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார்.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அதில் ஆடிப்பூர திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி நாளை மறுநாள் காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாள் சன்னதி முன்பு ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. 4-ம் திருவிழாவான 21-ந் தேதி (திங்கட்கிழமை) பிற்பகல் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம், இரவு 8 மணிக்கு காந்திமதி அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

    10-ம் திருநாளான வருகிற 27-ந் தேதி( ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு கோவில் ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூரம் முளைக்கட்டு திருவிழா நடக்கிறது. அப்போது காந்திமதி அம்மனை அலங்கரித்து, மடியில் முளைகட்டிய சிறுபயரை கட்டிவைத்து, வளையல்கள் அணிவித்து, அனைத்து பலகாரங்களும் அம்மனுக்கு படைக்கப்படும்.

    தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார். அங்கு அம்மன் மடியில் கட்டி வைக்கப்படும் முளைகட்டிய சிறுபயரை பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    • அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் கொடியேற்றுகிறார்.
    • விழாவின் சிகர நிகழ்ச்சியான 11-ம் திருவிழா தேரோட்டம் 28-ந்தேதி மதியம் 12 மணிக்கு நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித்திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்று காலை 5 மணிக்கு உகப்படிப்பு, 6 மணிக்கு கொடி பட்டம் பதியை சுற்றி வந்து கொடியேற்றம் நடக்கிறது. அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் கொடியேற்றுகிறார்.

    தொடர்ந்து அய்யா வைகுண்டர் புஷ்ப வாகன பவனி நடக்கிறது. காலை 9 மணிக்கு அன்ன தர்மம், பகல் 12 மணிக்கு உச்சிப் படிப்பு, பணிவிடை, தொடர்ந்து அன்ன தர்மம், மாலை 4 மணிக்கு உகப் படிப்பு,பணிவிடை 5மணிக்கு புஷ்ப வாகன பவனி, தொடர்ந்து அன்ன தர்மம் நடக்கிறது.

    11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு உகப் படிப்பு, பணிவிடை பால் அன்ன தர்மம், உச்சிப் படிப்பு, பணிவிடை நடக்கிறது.

    மாலை 5 மணிக்கு புஷ்ப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம், சர்ப்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், இந்திர வாகனம், காளை வாகனம் என பல்வேறு வாகன பவனி நடக்கிறது

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 11-ம் திருவிழா தேரோட்டம் 28-ந்தேதி மதியம் 12 மணிக்கு நடக்கிறது. அன்று காலை 6மணிக்கு உகப் படிப்பு, பணிவிடை, பால் அன்ன தர்மம், 9மணிக்கு அன்ன தர்மம், நடக்கிறது. அன்று இரவு அய்யா வைகுண்டர் காளை வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதல் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் தர்மர், செயலாளர் பொன்னுதுரை, பொருளாளர் கோபால் நாடார், துணை தலைவர் அய்யா பழம், இணை செயலாளர் ராஜேந்திரன் நாடார், இணை செயலாளர்கள், ராதாகிருஷ்ணன், தங்க கிருஷ்ணன், வரதராஜ பெருமாள், சுதேசன், இணைத்தலைவர்கள் விஜயகுமார், செல்வின், பால்சாமி, ராஜதுரை மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • நடை திறப்பையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.
    • பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். அதன்படி ஆடி மாத பூஜைக்காக கோவில் நடை இன்று (புதன் கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும்.

    நடை திறப்பையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் மட்டும் நடைபெறும்.

    நாளை (வியாழக்கிழமை) முதல் 21 -ந் தேதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும்.

    மேலும் 21-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    • ஆடி கிருத்திகை நாளில் விரதம் இருந்து முருகனை வழிபடுவது மிகவும் சிறப்பானது ஆகும்.
    • பெரும்பான்மையான பக்தர்கள் முருகன் கோவில்களுக்கு சென்று காவடி எடுத்தல், அலகு குத்துதல், அன்னதானம் செய்தல் முதலானவற்றை செய்வர்.

    ஆடி மாதம் அம்மனுக்கு மட்டும் உகந்த மாதம் கிடையாது. தமிழ்க் கடவுள் முருகனுக்கும் உகந்த மாதம். கிருத்திகை நட்சத்திரம், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது தான் எனினும் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் கூடுதல் சிறப்பு கொண்டது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக்கடன்களையும் செலுத்த முக்கிய நாளாக இந்த நாளை தேர்வு செய்கிறார்கள். ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடித்தால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    ஆடி கிருத்திகை நாளன்று தான் தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் சூரனை அழிக்க சரவணப்பொய்கையில் ஆறு குழந்தைகளாக அவதரித்தார். அதனால் தான் முருக பக்தர்கள் இந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர் . வாழ்வில் எல்லா வளமும் பெறுவதற்கு கந்தனின் கடை கண் பார்வை போதும் என்பார்கள். அந்த கந்தனின் அருளை முழுமையாக பெறுவதற்கு கிருத்திகை வழிபாடு செய்தாலே போதும். மாதாமாதம் வரும் கிருத்திகை வழிபாடு செய்ய முடியாதவர்கள் ஆண்டிற்கு மூன்று கிருத்திகையில் செய்தாலே போதும் என்பர். ஆடி கிருத்திகை, கார்த்திகை கிருத்திகை. தை கிருத்திகை இந்த மூன்று தெய்வீக தினங்களில் முறையாக விரதமிருந்து வழிபட்டாலே போதும் கந்தனின் பார்வை நம் மீது பட்டு எல்லா வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இந்த ஆடி கிருத்திகையில் பக்தர்கள் அனைவரும் உள்ளன்போடும், பக்தியோடும் தங்களது பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்துவார்கள். அன்றைய தினம் புண்ணீய தீர்த்தத்தில் நீராடி, கந்தர் அலங்காரம்,திருப்புகழ், கந்த சஷ்டி கவசம் முதலானவற்றை பாராயணம் செய்வார்கள். பெரும்பான்மையான பக்தர்கள் முருகன் கோவில்களுக்கு சென்று காவடி எடுத்தல், அலகு குத்துதல், அன்னதானம் செய்தல் முதலானவற்றை செய்வர். மற்ற முருகன் கோவில்களை விட திருத்தணி முருகன் கோவில் தான் ஆடி கிருத்திகைக்கு விசேஷமானது.

    ஆடி கிருத்திகை நாளில் விரதம் இருந்து முருகனை வழிபடுவது மிகவும் சிறப்பானது ஆகும். அன்றைய தினம் முருகனின் ஆறுபடை வீடுகளில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், ஹோமங்கள், தேர் பவனி ஆகியவை நடக்கும். இது தவிர நாடெங்கிலும் இருக்கும் முருகன் கோவிலில் விழாக்கோலம் கொண்டிருக்கும்.

    இந்த ஆண்டு ஆடி கிருத்திகை கூடுதல் சிறப்பு. ஏனெனில், இந்த ஆண்டு ஆடி மாதத்தில் ஜூலை 20 மற்றும் ஆகஸ்ட் 16 ஆகிய 2 தேதிகளில் ஆடி கிருத்திகை வருகிறது. இரண்டு கிருத்திகை வருவதால் இதில் எந்த நாளில் ஆடி கிருத்திகை விரதமிருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்ற குழப்பம் பக்தர்களிடையே நிலவுகிறது.

    இருப்பினும் ஜூலை 20 தேதி வரும் கிருத்திகை ஆடி கிருத்திகையாக கணக்கில் கொள்ளக்கூடாது என்றும், ஆகஸ்ட் 16 ஆம் தேதி சனிக்கிழமையன்று வரும் கிருத்திகை தான் ஆடிக் கிருத்திகை என்று கூறுகின்றனர். அன்றைய தினம் காலை 08.27 மணி முதல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி காலை 06.49 மணிக்கு ஆடிக் கிருத்திகை நிறைவடைகிறது.

    திருத்தணி முருகன் கோவிலில் 5 நாள் உற்சவ விழாவாக ஆடிக்கிருத்திகை கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி அஸ்வினி கிருத்திகையும், ஆகஸ்ட் 15ம் தேதி பரணி கிருத்திகையும், ஆகஸ்ட் 16ம் தேதி ஆடிக் கிருத்திகையும் கொண்டாடப்படவுள்ளது. மேலும் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் நாள் தெப்ப உற்சவமும், ஆகஸ்ட் 17ம் தேதி இரண்டாம் நாள் தெப்ப உற்சவமும், ஆகஸ்ட் 18ம் தேதி மூன்றாம் நாள் தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

    ரிஷபம்

    கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ளும் நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். வெளிநாட்டிலிருந்து வரும் செய்தியால் வியப்படைவீர்கள்.

    மிதுனம்

    நெருக்கடி நிலையை சமாளிக்க நிதியுதவி கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.

    கடகம்

    யோகமான நாள். இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் மூலம் உதிரி வருமானங்கள் கிடைக்கும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. தொழிலில் குறுக்கீடுகள் விலகும்.

    சிம்மம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். மறைமுக எதிர்ப்புகளால் மனக்கலக்கம் ஏற்படும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    கன்னி

    மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். கொடுத்த பாக்கிகள் வசூலாகும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.

    துலாம்

    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். தொழில் கூட்டாளிகளால் குழப்பங்கள் ஏற்படலாம். பணம் சம்பந்தப்பட்ட வகையில் விழிப்புணர்ச்சி தேவை. வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

    விருச்சிகம்

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். புது நிறுவனங்களிலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வரலாம்.

    தனுசு

    கூடப்பிறந்தவர்களால் கூடுதல் நன்மை கிடைக்கும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். அருகில் இருப்பவர்களின் ஆதரவு உண்டு. புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

    மகரம்

    ஆதாயம் அதிகரிக்கும் நாள். அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு. அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பணத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும்.

    கும்பம்

    வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும்.

    மீனம்

    எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும் நாள் தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள்.

    • தட்சிணாயன புண்ணிய காலம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆனி-32 (புதன்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சஷ்டி இரவு 8.43 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம் : பூரட்டாதி காலை 6.12 மணி வரை பிறகு உத்திரட்டாதி மறுநாள் விடியற்காலை 4.48 மணி வரை பிறகு ரேவதி

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், சஷ்டி விரதம், சுபமுகூர்த்த தினம், ஸ்ரீநரசிம்மருக்கு திருமஞ்சனம்

    இன்று சஷ்டி விரதம். சுபமுகூர்த்த தினம். தட்சிணாயன புண்ணிய காலம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் அபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சனம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.

    திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்கு திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பணிவு

    ரிஷபம்-பரிவு

    மிதுனம்-பாசம்

    கடகம்-ஓய்வு

    சிம்மம்-லாபம்

    கன்னி-வரவு

    துலாம்- உதவி

    விருச்சிகம்-வெற்றி

    தனுசு- பரிசு

    மகரம்-நன்மை

    கும்பம்-நிறைவு

    மீனம்-புகழ்

    • அம்மன் நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி நம்மை நல்வழிப்படுத்தும் அற்புத மாதம் தான் இந்த ஆடி மாதம்.
    • ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளியும், செவ்வாயும் பெண்களுக்குப் பொன்னான திருவிழா தான்!

    ஆடி மாதத்தை பண்டிகைகளின் தொடக்க மாதம்.. பக்தி மாதம் என்றே சொல்லலாம் ! பூமாதேவி அவதரித்த உன்னத மாதம். அதனால் தான் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகவும் பண்டிகைகளின் தொடக்க மாதமாகவும் கொண்டாடப்படுகிறது. அம்மன் நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி நம்மை நல்வழிப்படுத்தும் அற்புத மாதம் தான் இந்த ஆடி மாதம்.

    இந்த ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளியும், செவ்வாயும் பெண்களுக்குப் பொன்னான திருவிழா தான்! இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடி மாதம் நாளை மறுநாள் 17-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 16-ந்தேதி வரை உள்ளது. அம்மனுக்கு உகந்த இந்த ஆடி மாதத்தில் வரக்கூடிய முக்கியமான விசேஷ நாட்கள் என்ன, விரத நாட்கள் என்ன, அவை எந்தெந்த தேதியில் வருகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

    2025 ஆடி மாத விசேஷ நாட்கள் :

    ஜூலை 24- ஆடி அமாவாசை

    ஜூலை 28- ஆடிப்பூரம்,நாக சதுர்த்தி

    ஜூலை 29- கருட பஞ்சமி ,நாக பஞ்சமி

    ஆகஸ்ட் 03- ஆடிப்பெருக்கு

    ஆகஸ்ட் 07- ஆடித்தபசு

    ஆகஸ்ட் 08- வரலட்சுமி விரதம்

    ஆகஸ்ட் 09- ஆவணி அவிட்டம்

    ஆகஸ்ட் 10- காயத்ரி ஜபம்

    ஆகஸ்ட் 12)- மகா சங்கடஹர சதுர்த்தி

    ஆகஸ்ட் 16- கோகுலாஷ்டமி

    ஆடி மாத விரத நாட்கள்:

    ஜூலை 20 -கிருத்திகை

    ஜூலை 21- ஏகாதசி

    ஜூலை 22- பிரதோஷம்

    ஜூலை 23- சிவராத்திரி

    ஜூலை 24- அமாவாசை

    ஜூலை 28- சதுர்த்தி

    ஜூலை 30- சஷ்டி

    ஆகஸ்ட் 05- ஏகாதசி

    ஆகஸ்ட் 06- பிரதோஷம்

    ஆகஸ்ட் 08- திருவோணம்,பெளர்ணமி

    ஆகஸ்ட் 12- சங்கடஹர சதுர்த்தி

    ஆகஸ்ட் 14- சஷ்டி

    ஆகஸ்ட் 16- கிருத்திகை

    ஆடி மாத அஷ்டமி, நவமி மற்றும் கரி நாட்கள்:

    ஜூலை 17-அஷ்டமி

    ஆகஸ்ட் 01-அஷ்டமி

    ஆகஸ்ட் 16-அஷ்டமி

    ஜூலை 18-நவமி

    ஆகஸ்ட் 02-நவமி

    ஜூலை 18-கரி நாட்கள்

    ஜூலை 26-கரி நாட்கள்

    ஆகஸ்ட் 05-கரி நாட்கள்

    ஜூலை 27 ஆம் தேதி வாஸ்து நாள். அன்றைய தினத்திற்கான வாஸ்து நேரம் காலை 07.44 முதல் 05.20 வரை .

    2025 ஆடி மாதத்தில் இரண்டு கிருத்திகை நட்சத்திரங்கள் அமைந்துள்ளது. இதனால் இந்த வருடம் நாம் 2 ஆடி கிருத்திகை கொண்டாட இருக்கிறோம்.

    • கோவில் வளாகத்தில் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறாது.
    • பக்தர்கள் வழக்கம் போல் சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் மிகச்சிறந்த சனி பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    கோவில் மண்டபத்தில் புனித நீர் தெளித்து கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் முதல் நாள் திருவிழா தொடங்கும். அதன் பின் சனீஸ்வரர்-நீலா தேவி திருக்கல்யாணம், சுவாமி வீதி உலா, சக்தி கரகம் எடுத்தல், கருப்பண்ணசாமிக்கு மதுபானம் படையல் வைத்தல், பக்தர்களுக்கு கறி விருந்து என 5 வாரங்களும் திருவிழா நடைபெறும்.

    இந்த கோவிலை பரம்பரை அறங்காவலர் குழுவினர் நிர்வகித்து வந்தனர். அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 2011-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் வந்தது.

    இதனால் கோவில் நிர்வாகத்தை மீண்டும் அறங்காவலர் குழுவினரிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும், கோவில் நிர்வாகம் சார்பில் திருவிழா நடத்தக்கூடாது என கோரியும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

    இதன் காரணமாக கடந்த ஆண்டு திருவிழா ரத்து செய்யப்பட்டது. அதே போல இந்த ஆண்டும் ஆடித் திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவில் வளாகத்தில் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறாது. ஆனால் கடந்த காலங்களில் ஆடித் திருவிழாவின் போது நடைபெற்ற பூஜைகள் எவ்வித மாற்றமும் இன்றி நடைபெறும். பக்தர்கள் வழக்கம் போல் சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆடி மாதம் பிறந்தது முதல் கோவிலுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என்பதால் சிறப்பு பஸ்களும் இயக்கப்படும்.

    ×