என் மலர்
ஆன்மிகம்
- அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
- வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
ஔவையார் அருளிய வினை தீர்க்கும் விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ(கு) எறிப்ப
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழம் நுகரும் மூஷிக வாகன
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந்து அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இதுபொருள்என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முக மாக இனிதெனக்கு அருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரிஎட்டு நிலையும் தரிசனப் படுத்தி
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக்கும் ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்தை அழுத்திஎன் செவியில்
எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக! விரை கழல் சரணே!
- ஔவை பிராட்டி தானும் அவர்களுடன் கயிலை மலைக்குச் சென்று, சிவதரிசம் பெற எண்ணினார்.
- ஔவையாரும் மனமகிழ்ந்து விநாயகர் பூஜையை வழமை போல சிறப்பாக செய்து முடித்தார்.
புராண காலத்தில் திருமாக்கோதை என்னும் சேரமான் பெருமாள் என்ற மன்னர், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மிகவும் நெருங்கிய நண்பராவார்.
ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லற வாழ்வை முடித்து சிவனை தரிசிக்க கைலாயம் செல்ல எண்ணி சிவபெருமானை புகழ்ந்து பாடி வேண்டினார். அவரது வேண்டுதலை ஏற்றுக்கொண்ட சிவன் அவரை கைலாயத்திற்கு அழைத்துச்செல்ல ஐராவதம் என்னும் தேவலோக யானையையும், தேவர்களையும் அனுப்பினார்.
சுந்தரரும் யானைமீது ஏறி ஆகாய மார்க்கமாக கயிலாயம் புறப்பட்டார். இதனை அறிந்த மன்னன் சேரமான் பெருமாள் வானத்தில் இந்த அதிசயத்தை பார்த்தார். அவருக்கு சுந்தரரை பிரிய மனமில்லாமல் அவருடன் தானும் கைலாயம் செல்லும் நோக்கில் தன் குதிரையில் ஏறி அதன் காதில் "சிவயநம" என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதினார். உடனே குதிரையும் சுந்தரரைத் தொடர்ந்து கைலாயத்தை நோக்கி புறப்பட்டது.
இவ்வாறு ஆகாய மார்க்கமாக சென்று கொண்டிருந்த சுந்தரரும், சேரமான் பெருமாளும், ஓரிடத்தில் ஔவையார் விநாயகர் பூஜையில் இருப்பதைக் கண்டு "நீயும் வாயேன் பாட்டி" என்று அழைத்தனர். பூஜையை முடித்து விட்டு வருகிறேன் என்று ஔவைப்பிராட்டி பதில் அளித்தார்.
ஔவை பிராட்டி தானும் அவர்களுடன் கயிலை மலைக்குச் சென்று, சிவதரிசம் பெற எண்ணினார். அதனால் பூஜையில் வேகத்தைக் கூட்டினார். விநாயகப் பெருமான் 'ஔவையே விரைவாக பூஜை புரிய காரணம் யாது?' என வினவ, கயிலை செல்லும் ஆவலை மூதாட்டியும் தெரிவித்தாள்.
ஔவையே பதட்டம் கொள்ளாது நிதானமாக பூஜை செய்வாய். யாம் சுந்தரருக்கு முன் உம்மை கயிலை சேர்ப்போம்' என திருவாய் மலர்ந்து அருளினார்.
ஔவையாரும் மனமகிழ்ந்து விநாயகர் பூஜையை வழமை போல சிறப்பாக செய்து முடித்தார். பூஜையினால் அகமகிழ்ந்த விநாயகர் யோகத்தை (யோக மார்க்கம் மூலமாக முத்தியடையும் வித்தை) ஔவையாருக்கு எடுத்துக் கூற, ஔவையார் அதனை "விநாயகர் அகவல்" என்ற நூலாக இவ்வுலகுக்கு அருளினார்.
இறுதியில் விநாயகர் தன் துதிக்கையினால் ஔவையாரை தூக்கி கைலையில் சேர்த்தார். ஔவையாரும் கயிலை காட்சி கண்டு சிவனுடன் இணைந்தார் என புராண கதைகள் கூறுகின்றன.
- பஞ்சாங்க முறைப்படி 11 வகையான திரவியங்களுடன் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உலக புகழ்பெற்ற பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. குடவரை கோவிலான இங்கு விநாயகப்பெருமான் மற்ற இடங்களில் காணப்படுவதைப்போல நான்கு கைகளுடன் இல்லாமல் இரு கைகளுடன் காணப்படுகிறார். விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக விநாயகர் சதுர்த்தி விழா கடந்த ஆகஸ்ட் 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிலிருந்து தினசரி பகல் மற்றும் இரவில் உற்சவர் கற்பக விநாயகர் திருநாள் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இரண்டாம் நாள் விழாவில் இருந்து இரவில் மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனங்களில் உற்சவர் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குறிப்பாக ஆறாம் நாள் கஜமுக சூரசம்காரத்தில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும், 9-ம் நாளான நேற்று மாலை விநாயகரும், சண்டிகேஸ்வரரும் வெவ்வேறு இருதேர்களில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி ரத வீதியில் உலா வந்தனர். அப்போது திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். இதில் சண்டிகேசுவரர் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வந்தனர்.
தொடர்ந்து இரவு வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக் காப்பு அலங்காரம் மூலவருக்கு நடத்தப்பட்டது. இரவில் யானை வாகனத்தில் விநாயகர் வீதியுலா வந்தார். பத்தாம் நாளான இன்று சதுர்த்தி தினத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீப ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு அலங்காரமும் தீப ஆராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக தங்க மூஷிஷ வாகனத்தில் நாதஸ்வரம் முழங்க விநாயகப் பெருமானும், வெள்ளி பல்லக்கில்அங்குச தேவரும், சிவனின் அஸ்திரதேவரும் புறப்பாடாகி கோவில் எதிரே உள்ள திருக்குளப்படித்துறையில் எழுந்தருளினர். அங்கு காலை 10 மணிக்கு பஞ்சாங்க முறைப்படி 11 வகையான திரவியங்களுடன் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் முக்குறுணி மோதகம் படையலும் நடைபெறுகிறது.
சதுர்த்தி விழாவையொட்டி கைகளில் அருகம்புலுடன் விநாயகரை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்துள்ளனர்.
சதுர்த்தி தினத்தை முன்னிட்டு மாவட்ட சூப்பிரண்டு தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சி.சி.டி.வி. கேமரா அமைக்கப்பட்டுள்ளது. 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள், பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கான வழிகள், குடிநீர் மற்றும் கழிவறை உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் கோவில் நிர்வாகத்தால் செய்து தரப்பட்டுள்ளது.
- விநாயகப் பெருமான் பிள்ளையார், விக்னேஸ்வரர், ஐங்கரன், கணபதி போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
- ஏழை, எளிய மக்களுக்கு வசதிக்கேற்றவாறு தானங்கள் செய்யலாம்.
இந்து மதத்தில் முழுமுதற் கடவுளாக போற்றப்படுபவர் விநாயகப் பெருமான். ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகர் அவதரித்ததாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் இந்நாளையே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். விநாயகர் சதுர்த்தி விழாவானது இந்தியா முழுவதும் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
பொதுவாக எந்த கடவுளாக இருந்தாலும், அவர்களை வழிபடுவதற்கு கோவிலுக்கு செல்ல வேண்டும். ஆனால் விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு அந்த அவசியம் இல்லை. ஏனென்றால் ஊரில் உள்ள சாலையோரம், ஆற்றங்கரை, குளக்கரை, அரச மரத்தடி போன்ற எல்லா இடங்களிலும் எளிமையாக அருள்புரிபவர் விநாயகப் பெருமான். சிவபெருமானை வழிபடுவதை 'சைவம்' என்றும், விஷ்ணு பகவானை வழிபடுவதை 'வைணவம்' என்றும் சொல்வதை போல விநாயகப் பெருமானை வழிபடுவதை 'காணாபத்யம்' என்று அழைப்பார்கள்.
விநாயகப் பெருமான் பிள்ளையார், விக்னேஸ்வரர், ஐங்கரன், கணபதி போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். விநாயகர் என்றால் 'மேலான தலைவர்' என்றும், விக்னேஸ்வரர் என்றால் 'இடையூறுகளை நீக்குபவர்' என்றும், பிள்ளையார் என்றால் 'குழந்தை மனம் படைத்தவர்' என்றும், ஐங்கரன் என்றால் 'ஐந்து கரங்களை உடையவர்' என்றும், கணபதி என்றால் 'கணங்களுக்கு அதிபதி' என்றும் பொருள்படும். விநாயகப் பெருமான் அவதாரம் குறித்து பல்வேறு புராணக் கதைகள் உள்ளன.
ஒரு சமயம் சிவபெருமான் கைலாயத்தில் இருந்து வெளியே சென்றிருந்தபோது, பார்வதி தேவி நீராடச் சென்றார். அப்போது அவர், தனக்கு காவல் காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது உடலில் இருந்து வாசனை துகள்களை உருட்டி ஒரு உருவத்தை உருவாக்கினார். பின்பு தன்னுடைய அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார். இவ்வாறு உருவம் பெற்றவரே விநாயகர். விநாயகரிடம், யாரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாது என கட்டளையிட்டு நீராட சென்றார், பார்வதி தேவி.
அச்சமயம் கைலாயத்திற்கு திரும்பிய சிவபெருமான் உள்ளே நுழைய முயன்றார். வந்திருப்பது தன் தந்தை என்பதை அறியாத விநாயகர், அவரை உள்ளே செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினார். இதனால் சிவபெருமானுக்கும், விநாயகருக்கும் சண்டை மூண்டது. இறுதியில் கோபம் கொண்ட சிவபெருமான், தனது சூலாயுதத்தால் விநாயகரின் தலையை கொய்தார்.
அப்பொழுது பார்வதி தேவி நீராடி முடித்துவிட்டு வெளியே வந்தார். தன் மகனான விநாயகர், தலை இல்லாமல் கிடப்பதை கண்டு கடும் கோபமும், ஆவேசமும் கொண்டார். தான் உருவாக்கிய விநாயகரை சிவனே சிதைத்து விட்டதை அறிந்த பார்வதி தேவி, காளியாக உருவம் எடுத்து கண்ணில் படுவதையெல்லாம் அழிக்கத் தொடங்கினார்.
காளியின் ஆவேசத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். காளியை சாந்தப்படுத்துவதற்கு முடிவு செய்த சிவன், தனது கணங்களை அழைத்து வட திசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் வெட்டி கொண்டு வருமாறு பணித்தார். அதன்படி கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு யானையே முதலில் தென்பட்டது.
அவர்கள் யானையின் தலையை வெட்டி எடுத்துச் சென்று இறைவனிடம் கொடுத்தனர். சிவபெருமான் அத்தலையை வெட்டுண்டு கிடந்த விநாயகரின் உடலில் வைத்து உயிர் கொடுத்தார். இதைக் கண்டு சாந்தமடைந்த தேவி மனம் மகிழ்ந்து விநாயகரை கட்டி அணைத்துக் கொண்டார். பின்பு சிவன், விநாயகருக்கு 'கணேசன்' என நாமம் சூட்டித் தமது கணங்களுக்கு தலைவராக நியமித்தார் என நாரத புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விரதம்
விநாயகர் சதுர்த்தி விரதம் என்பது ஆவணி மாதம் சதுர்த்தியில் தொடங்கி புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தி வரை மேற்கொள்ளப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்து வாசலில் மாவிலை தோரணங்கள் கட்டி அலங்கரிக்க வேண்டும். பின்பு பூஜையறையை மொழுகி கோலம் இட்டு அதன் நடுவில் வாழை இலையை விரித்து பச்சரிசியை பரப்ப வேண்டும். அந்த பச்சரிசியில் வலது மோதிர விரலால் பிள்ளையார் சுழி போட்டு 'ஓம்' என்று எழுதி, மண் பிள்ளையார் அல்லது பிள்ளையார் படத்தை வைக்க வேண்டும்.
விநாயகரை அருகம்புல், எருக்கம்புல், விபூதி, சந்தனம், மலர்கள் போன்றவற்றால் அலங்கரிக்க வேண்டும். பிறகு விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், தேங்காய், வெல்லம் கலந்த மாவு உருண்டை, அப்பம், அவல், பொரி, சுண்டல், எள்ளுருண்டை போன்றவற்றை படைத்து சாம்பிராணி காட்டி சூடம் ஏற்ற வேண்டும். அப்போது விநாயகருக்கான அகவல், மந்திரம், கவசம் பாடி வழிபட வேண்டும். `சதுர்த்தி விரதத்தை முறையாக கடைப்பிடிக்க உள்ளேன். அதனால் விரதம் முடியும் வரை எந்த தடைகளும் வராமல் இருக்க அருள்புரிய வேண்டும்' என்று பிரார்த்திக்க வேண்டும்.
மேலும் ஏழை, எளிய மக்களுக்கு வசதிக்கேற்றவாறு தானங்கள் செய்யலாம். அன்னதானம் வழங்கலாம். விநாயகர் விரதத்தை பக்தியுடன் கடைப்பிடிப்பவர்களுக்கு சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், செல்வ வளமும் கிடைக்கும். குடும்பத்தில் துன்பம் விலகி, இன்பம் பொங்கும்.
- மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக் கூடியது’ என்று பொருள்.
- விநாயகருக்கு முதன்முதலில் மோதகம் படைத்து, அவரது அருளை பெற்றவர் அருந்ததி தேவி.
ஓம்கார வடிவமாகவும், ஞானத்தின் வடிவமாகவும் திகழ்பவர் விநாயகப் பெருமான். விநாயகர் வழிபாட்டில் அவருக்கு படைக்கப்படும் உணவுகள் தனித்த இடத்தை பிடிக்கின்றன. உண்மையான பக்தியுடன் எதை படைத்தாலும் விநாயகப் பெருமான் ஏற்றுக்கொள்வார். இருப்பினும் அவருக்கு பிடித்தமான உணவுகளை படைத்து வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் விநாயகர் வழிபாட்டில் கொழுக்கட்டை, மோதகம், லட்டு, அப்பம், அவல், பொரி, கடலை, சுண்டல் ஆகியவை தவிர்க்க முடியாத இடத்தை பிடிக்கின்றன.
பிள்ளையாருக்கு பல விதமான நைவேத்தியங்கள் படைக்கப்பட்டாலும், அதில் முதன்மை இடத்தை பிடிப்பது மோதகம் தான். வீட்டில் பூஜிக்கப்படும் விநாயகர் கையில் மோதகம் இருக்க வேண்டும் என்பார்கள். மோதகம் என்பது தேங்காய், வெல்லப்பாகு, அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படும் பதார்த்தம் ஆகும். விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு மோதகம் படைத்து வழிபட்டால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம். விநாயகருக்கு மோதகம் நைவேத்தியமாக படைப்பதற்கு முக்கியமான காரணம் உண்டு.
மோதகம் என்றால் மோதக் + அகம் ஆகும். மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு 'வழங்கக் கூடியது' என்று பொருள். மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் வழங்கக் கூடிய பொருள் என்பதால் மோதகத்தை விநாயகருக்கு படைத்து வழிபடுவது சிறப்பானதாகும்.
ஒரு சமயம் அத்ரி ரிஷியின் மனைவியான அனுசுயா, சிவன், பார்வதி, விநாயகர் ஆகியோரை விருந்திற்காக அழைத்திருந்தார். எந்த உணவை கொடுத்தாலும் விநாயகரின் பசியை போக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட அனுசுயா, இனிப்பு கலந்த மோதகத்தை சாப்பிடக் கொடுத்தார். மொத்தமாக 21 மோதகங்களை விநாயகருக்கு அளித்தார். அதை சாப்பிட்டதும் விநாயகப் பெருமானின் பசி முழுவதுமாக நீங்கி, மகிழ்ச்சி அடைந்தார்.
இதைக் கண்ட பார்வதி தேவி, அனுசுயாவை போல் எவர் ஒருவர் விநாயகருக்கு மோதகம் படைத்து வழிபடுகிறார்களோ அவர்களின் விருப்பங்கள் அனைத்தையும் விநாயகப்பெருமான் நிறைவேற்றி வைப்பார் என வரம் அளித்தார். பார்வதி தேவி அளித்த வரத்தின் படி, பக்தர்கள் தாங்கள் விநாயகரிடம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறுவதற்காக மோதகத்தை நைவேத்தியமாக படைக்கிறார்கள்.
விநாயகருக்கு முதன்முதலில் மோதகம் படைத்து, அவரது அருளை பெற்றவர் அருந்ததி தேவி என்று கூறப்படுகிறது. கற்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்து, வானில் இன்றும் விண்மீனாய் வலம் வருபவர் வசிஷ்டரின் மனைவியான அருந்ததி. புண்ணிய பலன் காரணமாக ஒருமுறை வசிஷ்டரின் ஆசிரமத்துக்கு விஜயம் செய்தார் விநாயகர். அவர் வருவதை அறிந்த அருந்ததி, அவருக்காக புதிய நைவேத்தியம் செய்ய விரும்பினார்.
விநாயகப் பெருமான், அண்டத்தின் எல்லா இடங்களிலும் நிறைந்து இருப்பவர். இதனால் அண்டத்தை உணர்த்தும் விதமாக வெள்ளை மாவினால் 'செப்பு' எனும் மேல் பகுதியை செய்தார். அண்டத்தின் உள்ளே பூரணமாக நிறைந்திருக்கும் விநாயகரை உணர்த்தும் விதமாக, இனிப்பான பூரணத்தை மாவுக்குள்ளே வைத்து மோதகத்தை தயார் செய்தார். பின்பு வசிஷ்டரிடம் அதைக் கொடுத்து விநாயகருக்கு படைத்தார்.
அப்படி அவர் அளித்த பிரசாதத்தின் தத்துவச் சிறப்பை உணர்ந்த பிள்ளையார், அதை உலகுக்கு உணர்த்தும் விதமாக, மோதகத்தை எப்போதும் தன் திருக்கரங்களில் ஏந்திக் கொண்டிருக்கிறார். அருந்ததி மூலம் நமக்குக் கிடைத்த அந்த அருள் பிரசாதத்தைப் போன்றே, விநாயகர் சதுர்த்தியான இன்று நம் வாழ்வும் இனிப்பும் தித்திப்புமாகப் பூரணத்துவம் பெற பிள்ளையாரை வழிபட்டு வரம் பெறுவோம்.
- வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் உட்பட திரளான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர்.
- புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 500 இடங்களில் இன்று மாலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவர், உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உட்பட 21 திரவிய பொருட்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து கலசாபிஷேகம் செய்யப்பட்டு மூலவருக்கு தங்க கவசம், வைர கிரீடம் அணிவிக்கப்பட்டது. உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் உட்பட திரளான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் தங்கு தடையின்றி சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அனைவருக்கும் இடைவிடாது லட்டு, சர்க்கரை பொங்கல் உட்பட 9 வகை பிரசாதம் வழங்கப்பட்டது.
சதுர்த்தி விழாவையொட்டி கோவிலில் ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல புதுச்சேரியில் உள்ள அனைத்து கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது.
இந்து முன்னணி மற்றும் விநாயகர் சதூர்த்தி பேரவை சார்பில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 500 இடங்களில் இன்று மாலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
தொடர்ந்து தினமும் பூஜைகள் நடத்தப்படுகிறது. வருகிற 31-ந்தேதி (ஞாயிற்றுகிழமை) அனைத்து விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு புதுச்சேரி கடலில் விஜர்சனம் செய்யப்படுகிறது.
- கிரகண நேரத்திற்கு 6 மணி நேரங்களுக்கு முன்பே கோவில் கதவுகள் மூடப்படுவது வழக்கம்.
- அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதம் மூலம் கோவில் கதவுகள் திறந்து கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்படும்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிரகண காலங்களில் மூடப்படுவது வழக்கம். அதன்படி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.50 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பித்து, மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 1.31 மணிக்கு நிறைவடைகிறது.
கிரகண நேரத்திற்கு 6 மணி நேரங்களுக்கு முன்பே கோவில் கதவுகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவில் வருகிற 7-ந்தேதி மாலை 3 மணி முதல் மறுநாள் அதிகாலை 3 மணி வரை சுமார் 12 மணி நேரம் மூடப்படும். பின்னர் 8-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதம் மூலம் கோவில் கதவுகள் திறந்து கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்படும். பின்னர் புண்யாஹாவசனம் நடத்தப்படும். தொடர்ந்து தோமாலை சேவை, பஞ்சாங்க ஸ்ரவணம், அர்ச்சனை சேவை ஆகியவை ஏகாந்தமாக நடைபெறும். காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த தகவலை திருமலை- திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
- பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
- தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி, நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதல் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மக்கள், தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை அலங்கரித்து வைத்து பூஜைகள் செய்தனர். மேலும் பூஜைப்பொருட்களையும், விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல் மற்றும் உணவு வகைகளை படைத்து நைவேத்தியம் செய்தனர். மேலும், தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷகம்.
- மதுரை ஸ்ரீ சோமசுந்தரர் நாரைக்கு முக்தி அருளிய காட்சி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆவணி-11 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சதுர்த்தி பிற்பகல் 3.52 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம் : அஸ்தம் காலை 7.07 மணி வரை பிறகு சித்திரை
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று விநாயகர் சதுர்த்தி, சுபமுகூர்த்த தினம், விநாயகருக்கு 18 படி அரிசியால் கொழுக்கட்டை படைத்தல்
இன்று ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி. சுபமுகூர்த்த தினம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷகம். மதுரை ஸ்ரீ சோமசுந்தரர் நாரைக்கு முக்தி அருளிய காட்சி. விருதுநகர் ஸ்ரீ சொக்கநாதர் உற்சவம் ஆரம்பம். பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், திருச்சி உச்சிபிள்ளையார் ஸ்ரீ மாணிக்க விநாயகர், மதுரை ஸ்ரீ முக்குறுணி பிள்ளையார், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகப் பெருமான் கோவில்களில் ஹோமம், அபிஷேகம்.
மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் ஸ்ரீ முக்குறுணி விநாயகருக்கு 18 படி அரிசியால் செய்யப்பட்ட பெரிய கொழுக்கட்டை படைத்தல். கரூரில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சனம். விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலையில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பரிவு
ரிஷபம்-மாற்றம்
மிதுனம்-தனம்
கடகம்-நன்மை
சிம்மம்-வெற்றி
கன்னி-அசதி
துலாம்- ஊக்கம்
விருச்சிகம்-உவகை
தனுசு- இன்பம்
மகரம்-ஆதரவு
கும்பம்-ஆசை
மீனம்-அமைதி
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
காரிய வெற்றிக்கு கணபதியை வழிபட வேண்டிய நாள். புதிய மனிதர்களின் சந்திப்பு உண்டு. பொருளாதார நிலை உயரும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
ரிஷபம்
நிதிநிலை உயரும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சொத்துகள் வாங்குவதில் இருந்த தடை அகலும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.
மிதுனம்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். ஆதாயம் தரும் வேலை ஒன்றில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.
கடகம்
விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். பொதுநலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணம் பலன் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றிய தகவல் உண்டு.
சிம்மம்
எதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். இனத்தார் பகைமாறும். ஆரோக்கியம் தெளிவு பெறும். கடன் பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள்.
கன்னி
நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். குழந்தைகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். இடம், பூமியால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். பாதியில் நின்ற கட்டிடப் பணி மீதியும் தொடரும்.
துலாம்
தொட்டது துலங்கும் நாள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். சொத்து விற்பனையால் லாபம் உண்டு. அயல்நாட்டிலிருந்து அனுகூலத்தகவல் கிடைக்கும்.
விருச்சிகம்
வெற்றிகள் குவிய விநாயகரை வழிபட வேண்டிய நாள். தொழிலில் எதிர்பார்த்த நன்மை உண்டு. நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்துமுடிப்பீர்கள்.
தனுசு
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.
மகரம்
வளர்ச்சி கூடும் நாள். திட்டமிட்ட காரியம் ஒன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியம் ஒன்று நடைபெறும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
கும்பம்
சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். மறதியால் சில பணிகளில் தாமதம் ஏற்படும். உடல் நலனுக்காக செலவிடுவீர் உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
மீனம்
லாபகரமான நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்துமுடிப்பீர்கள். தொழில்மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். அன்னிய தேசத்திலிருந்து அழைப்புகள் வரலாம்.
- 21 வகையான இலைகளால் அர்ச்சித்தல் சிறப்பு.
- அருகம்புல் அர்ச்சனை செய்தால் அதற்கான பலன் ஏராளம் என சொல்லப்படுகிறது.
வீடுகளில் நாம் அவரவர் சக்திக்கு தக்கவாறு வழிபாடுகளை செய்யலாம். கோலம் போட்ட மனையில் அச்சுமண் பிள்ளையாரை வாங்கி வந்து, அதனை மண்டபத்தில் சின்ன வாழைக்கன்று கட்டி, மாவிலை தோரணங்கள் கட்டி, மலர்களால் அலங்காரம் செய்வார்கள்.
பின்னர் மண் பிள்ளையாருக்கு சந்தனம், குங்குமம் இட்டு, எருக் கம்பூ மாலை, அருகம்புல் மாலை ஆகியவை அணிவித்து அலங்காரம் செய்வார்கள். விநாயகருக்கு மிகவும் பிரியமான பத்ரம், வன்னிபத்ரம், அருகம்புல் இவைகள் கொண்டு அர்ச்சனை செய்தால் அதற்கான பலன் ஏராளம் என சொல்லப்படுகிறது.
மேலும் 21 வகையான இலைகளால் அர்ச்சித்தல் சிறப்பு. அந்த இலைகளின் பெயர், அர்ச்சனை செய்தால் கிடைக்கும் பலன்கள் விவரம் வருமாறு: -
1) முல்லை-அறம், 2) கரிசலாங்கண்ணி-இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள், 3) வில்வம்-இன்பம்; விரும்பியவை அனைத்தும், 4) அருகம்புல் - அனைத்துப் பாக்கியங்களும், 5) இலந்தை - கல்வி, 6) ஊமத்தை - பெருந்தன்மை, 7) வன்னி - இவ்வுலகில் வாழும் காலத்திலும் சொர்க்கத்திலும் பல நன்மைகள், 8) நாயுருவி - முகப்பொலிவு, அழகு, 9) கண்டங்கத்திரி - வீரம், 10) அரளி-வெற்றி.
11) எருக்கம் கருவில் உள்ள சிசுவுக்கு பாதுகாப்பு, 12) மருதம் - குழந்தை பேறு, 13) விஷ்ணுக்ராந்தி - நுண்ணறிவு, 14) மாதுளை- பெரும்புகழ், 15) தேவதாரு - எதையும் தாங்கும் இதயம், 16) மருவு - இல்லறசுகம், 17) அரசு - உயர் பதவி, மதிப்பு, 18) ஜாதி மல்லிகை -சொந்த வீடு, பூமி பாக்கியம், 19) தாழம் இலை - செல்வச்செழிப்பு, 20) அகத்திக் கீரை - கடன் தொல்லையில் இருந்து விடுதலை, 21) தவனம் - நல்ல கணவன்-மனைவி அமைதல்.
இந்த 21 இலைகளைத் தவிர நெல்லி, மருக்கொழுந்து, நோச்சி, கரிசலாங்கண்ணி, மாவிலை, துளசி, பாசிப்பச்சை ஆகிய இலைகளாலும் விநாயகருக்கு அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனை செய்தபின் பலவிதமான கனிகள், முக்கியமாக நாவல் பழம், மாதுளம் பழம், கொய்யாப்பழம், விளாம்பழம் ஆகியவையால் நைவேத்யம் செய்ய வேண்டும்.
மேலும் பிள்ளையாருக்கு பாயாசம், வடை, அப்பம் ஆகியவைகளும் முக்கியமாக கொழுக்கட்டை பிடித்தமானது.
- செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி நாள் மிகவும் விசேஷமானதாகச் சொல்லப்படுகிறது.
- அனுஷ்டித்து விநாயகப் பெருமானை வணங்கித் துதிப்பவருக்கு அவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும்.
சதுர்த்தி திதி விநாயகப் பெருமானுக்குரிய விரத தினங்களுள் முக்கியமானதாகும். அதில் தேய்பிறை சதுர்த்தியில் அனுசரிக்கப்படும் 'சங்கடஹர சதுர்த்தி விரதம்' தலை சிறந்தது என்று போற்றப்படுகிறது. நவக்கிரகங்களில் ஒன்றான அங்காரகனுக்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாள். அதிலும், செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி நாள் மிகவும் விசேஷமானதாகச் சொல்லப்படுகிறது.
அங்கராக பகவானுக்கு சதுர்த்தி நாள் எப்படி விசேஷமானது என்பதை பார்க்கவ புராணம் நமக்கு விளங்குகிறது. பரத்வாஜ முனிவரால் கைவிடப்பட்ட குழந்தை பூமியில் கிடந்தது. அதை அதிசயத்துடன் பார்த்த பூமிதேவி வாரி அணைத்துக்கொண்டாள். தனக்கு ஆண்டவனால் அளிக்கப்பட்ட வரப்பிரசாதம் என்று மகிழ்ந்தாள். அந்த குழந்தையின் உடல் மாலை நேரத்தில் செவ்வானம் போல் சிவந்து ஒளியுடன் விளங்கியதால் அங்காரகன் என்று பெயரிட்டு பிரியமுடன் வளர்த்து வந்தாள். குழந்தை அங்காரகன் வளர்ந்து சிறுவனானான். தனது தந்தையைப் பார்க்க விரும்பினான். பூமிதேவி பரத்துவாஜரிடம் கொண்டு போய் ஒப்படைத்தாள். அழகு பொருந்திய தன் மைந்தனை அன்போடு அணைத்துக் கொண்டார் மகரிஷி.
உரிய காலத்தில் அங்காரகனுக்கு உபநயனம் செய்வித்து, வேதத்தை அவனுக்கு போதித்தார். மேலும் தனது இஷ்ட தெய்வமான விநாயகப் பெருமானின் மூலமந்திரத்தையும் உபதேசம் செய்தார். அங்காரகன் தந்தை காட்டிய வழியில் தனித்திருந்து தவ வாழ்க்கை மேற்கொண்டான். விநாயகப்ெபருமானின் பாத கமலங்களையே சரணம் என்று தியானித்து ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக கடுந்தவம் புரிந்தான்.
அங்காரகனின் தவம் பலித்தது. அங்காரகனுக்கு விநாயகப் பெருமான் காட்சியளித்து அருள்புரிந்தார்.
வானில் சந்திரன் உதயமாகும் நேரம் அது செவ்வாய்க்கிழமை, மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி நாள். அங்காரகன் அருள் பெற்ற அந்த புனித நாளில் விரதம் அனுஷ்டித்து விநாயகப் பெருமானை வணங்கித் துதிப்பவருக்கு அவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும்.
சங்கடங்கள் எல்லாம் பறந்தோடும் பக்தர்களது துயர் நீங்கும் வாழ்க்கை வளம் பெருகும். எனவே அங்காரகனின் நாளான செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி மற்ற சதுர்த்திகளை விட விநாயகருக்கு மிகவும் மகிழ்ச்சித் தரவல்லதாகக் கருதப்படுகிறது. அங்காரகனால் துவங்கப்பட்ட இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்தைக் கடைபிடித்து வருபவர்கள் அடையும் நற்பலன்கள் ஏராளம். கடன், வியாதி, பகை அகலும், செல்வச் செழிப்பு, வித்தை, செல்வாக்கு ஓங்கும். மகப்பேறு கிடைக்கும்.






