என் மலர்
ராசிபலன் - Rasi Palan

2025 ஐப்பசி மாத ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்
- பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல பொறுப்புகள் கிடைக்கும்.
- உடன்பிறப்புகளின் திருமணங்களை முன்நின்று நடத்துவீர்கள்.
தனுசு ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். இது அவ்வளவு நல்லதல்ல. வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். வளர்ச்சிக்கு இடையூறாக பல சம்பவங்கள் நடைபெறும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு திடீரென திருப்தி தராத பொறுப்புகள் மாற்றப்படலாம். உறவினர் பகையால் ஊர் மாற்றம், நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய முடியாத சூழல் உருவாகும். பிள்ளைகளால் பிரச்சனைகள் ஏற்பட்டு மனக் கலக்கத்தை உருவாக்கும்.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கிறார். அவர் உச்சம் பெற்று இருப்பதால் நன்மை கிடைக்கும். என்றாலும் அலைச்சல் அதிகரிக்கும். அடிக்கடி பயணங்களால் ஆரோக்கிய சீர்கேடு உருவாகும். ஒருசில காரியங்கள் விரையில் முடிந்தாலும் எதிர்பார்த்துக் காத்திருந்த சில காரிங்கள் முடிவடையாமல் தாமதத்தை ஏற்படுத்தும். இடமாற்றம், வீடு மாற்றம் எதிர்பாராத விதத்தில் அமையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு குறையும். அதனால் வேறு உத்தியோகத்திற்குச் செல்லலாமா என்ற சிந்தனை மேலோங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் குறுக்கீடுகள் வரலாம்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் சகாய ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். சகாய ஸ்தானாதிபதி சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே எதையும் ஒரு முறைக்குப் பல முறை யோசித்தும், அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனையை கேட்டும் செய்வது நல்லது. ஒரு சில காரியங்கள் நடைபெறுவதுபோல் இருந்து கடைசி நேரத்தில் நழுவி செல்லலாம். கடன்சுமையின் காரணமாக மனக்கவலை அதிகரிக்கும். உத்தியோகத்தில் வருவதாக இருந்த பதவி உயர்வு தடைப்படும். அதிக கவனம் தேவைப்படும் நேரம் இது.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், செவ்வாய். அவர் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இவ்வேளையில், சுப விரயங்கள் அதிகரிக்கும். துணிந்து எந்த முக்கிய முடிவும் எடுக்க இயலாது. சொத்துக்கள் விரயமாகலாம். சொந்தங்களால் பிரச்சனை உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்ள மாட்டார்கள். வெளிநாடு செல்லும் முயற்சி கைகூடினாலும் அது திருப்தி அளிக்காது. உடன்பிறப்புகளின் வழியில் செலவு உண்டு.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். லாபாதிபதியான அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரத்தில் பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். புகழ்பெற்றவர்களின் சந்திப்பு நிகழும். ஆடை, ஆபரணச் சேர்க்கை, வெளிநாட்டு வணிகத்தால் ஆதாயம் உண்டு. பெண்வழிப் பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். பிறர் போற்றும் அளவிற்கு வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டுமென்று விரும்புவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளால் பிரச்சனை ஏற்படும். கலைஞர்களுக்கு மாதக் கடைசியில் மகிழ்ச்சி நிலவும். மாணவ -மாணவிகளுக்கு படிப்பில் வெற்றி உண்டு. பெண்களுக்கு இல்லற வாழ்க்கை இனிமை தரும். எப்பொழுதோ கொடுத்த தொகை வந்துசேரும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 18, 19, 22, 23, 29, 30, நவம்பர்: 3, 4, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.
மகர ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் சப்தம ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்கிறார். அதிலும் அவர் உச்சம் பெற்றிருப்பதால் உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். முன்னேற்றப் பாதையில் இருந்த குறுக்கீடுகள் அகலும். 'குரு பார்வை கோடி நன்மைக்கு வித்திடும்' என்பதால் கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். பகை அனைத்தும் உறவாகும். பாதியில் நின்ற பல பணிகள் ஒவ்வொன்றாக முடியும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும் மாதம் இது.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அதிசார கதியில் வந்தாலும் சப்தம ஸ்தானம் என்பதால் நல்ல காரியங்கள் பலவும் நடைபெற வழிவகுத்துக் கொடுப்பார். 'இதுவரை சேமித்த சேமிப்புகள் கரைந்துவிட்டதே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, அதை ஈடுகட்டும் வாய்ப்புகள் வந்துசேரும். குருவின் பார்வையால் தடைப்பட்ட காரியம் தானாக நடைபெறும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல பொறுப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்பதவிகள் வருவதற்கான அறிகுறிகள் தென்படும். இடம், பூமி விற்பனையால் லாபம் உண்டு.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் தன ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். இரண்டில் ராகு இருப்பதால் திரண்ட செல்வம் வரும். என்றாலும் சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் விரயங்களும் கூடுதலாக இருக்கும். வீடு, வாகனப் பராமரிப்பு செலவு உண்டு. ஆடை, ஆபரணச் சேர்க்கை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். சனி உங்கள் ராசிநாதனாகவும் இருப்பதால் உடல் நலத்திற்காக சிறிது செலவிடும் சூழல் உண்டு. குடும்பத்தினரின் பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கலாம். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையலாம்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். தொழிலில் கிளைத் தொழில்கள் தொடங்கும் வாய்ப்பு உருவாகும். தாய்வழி ஆதரவு உண்டு. 'கட்டிடம் கட்டிக் குடியேறும் வாய்ப்பு இன்னும் கை கூடவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, அது கைகூடும். எதையும் துணிந்து செய்ய முன்வருவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும். நாள்பட்ட நோயில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்கள் அதிகார அந்தஸ்திற்கு உயர்த்தப்படுவர்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகின்றது. உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். குடும்பப் பிரச்சனை அகலும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி நீங்கள் தீட்டிய திட்டம் வெற்றி பெறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதோடு கேட்ட சலுகைகளும் கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களால் லாபம் உண்டு. சகோதர வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு இலாகா மாற்றங்களும், ஊதிய உயர்வும் கிடைக்கும். கலைஞர்களுக்கு முயற்சியில் வெற்றி உண்டு. மாணவ - மாணவிகளுக்கு, பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு திருப்தி தரும். பெண்களுக்கு சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். தன வரவு திருப்தி தரும். வீடு வாங்கும் யோகம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 20, 21, 23, 24, நவம்பர்: 1, 2, 5, 6, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.
கும்ப ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். மேலும் ஜென்மச் சனியாகவும் இருக்கிறார். எனவே ஏழரைச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் எதிலும் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீர், திடீரென மனக்குழப்பம் ஏற்படும். ஜென்மத்தில் ராகுவும் இருப்பதால் பொருளாதாரத்தில் ஓரளவு திருப்தி ஏற்பட்டாலும் விரயங்கள் மிகவும் அதிகரிக்கும். எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து செய்யவேண்டிய மாதம் இது.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு எதிர்ப்பு, வியாதி, கடன்சுமை ஆகியவற்றை குறிக்கும் இடத்தில் தனாதிபதி குரு உச்சம் பெறுவதால் இக்காலத்தில் மிகுந்த கவனம் தேவை. எதிரிகளின் பலம் மேலோங்கும். இணைந்து செயல்படுபவர்கள் உங்களை விட்டு விலக நேரிடும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு ரண சிகிச்சைகள் கூட வரலாம். உத்தியோகத்தைப் பொறுத்தவரை உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைப்பது அரிது. திடீரென வரும் மாற்றங்கள் மனவருத்தத்தை உருவாக்கும்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் உங்கள் ராசியிலேயே சனியும், ராகுவும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். அதிலும் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். இது போன்ற நேரங்களில் நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கலாம். மேலும் ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால், அது எத்தனையாவது சுற்று என்பதைக் கண்டறிந்து செயல்பட வேண்டும். முதல் சுற்றோ, மூன்றாவது சுற்றோ நடைபெற்றால் முயற்சிகளில் தாமதம் ஏற்படும். நடுச்சுற்று நடந்தால் நல்லது நடக்க வழிபிறக்கும். இருப்பினும் சனி பகவானை முறையாக வணங்குவது நல்லது.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது, தொழிலில் முன்னேற்றமும், எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். புதிய கூட்டாளிகள் வந்திணைவர். பொருளாதாரம் உயரும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த கருத்துவேறுபாடுகள் மாறும். சகோதரர்களுக்கு கொடுத்து உதவுவீர்கள். உடன்பிறப்புகளின் திருமணங்களை முன்நின்று நடத்துவீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். இப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. இதுபோன்ற நேரத்தில் பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிரச்சனைகள் ஒவ்வொன்றாக நல்ல முடிவிற்கு வரும். முன்னோர் சொத்துக்களில் முறையாக பங்கீடு கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து உத்தியோகம் சம்பந்தமாக நல்ல அழைப்புகள் வரலாம். கை நழுவிச் சென்ற வாய்ப்புகள் கூட இப்பொழுது கைகூடிவரும். உறவினர் பகை அகலும். தாய்வழி ஆதரவு உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நண்பர்களால் நல்ல திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு போதுமான முதலீடு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி மாறி வரலாம். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை தேவை. பெண்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடிவரும். வருமானம் திருப்தி தரும். சொத்துக்கள் வாங்கும் முயற்சி கைகூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 22, 23, 27, 28, நவம்பர்: 3, 4, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.
மீன ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனநிறைவான வாழ்க்கை அமையும். 6-க்கு அதிபதி நீச்சம் பெறுவது யோகம். எனவே கடன்சுமை குறையும். கவலைகள் தீரும். இடமாற்றம், ஊர் மாற்றம் இனிமை தரும் விதம் நடைபெறும். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைத்து மகிழ்வீர்கள். நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும் மாதம் இது.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிநாதன் உச்சம் பெறும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். அவரது பார்வை பரிபூரணமாக உங்கள் ராசியில் பதியும் இந்த நேரம் தொட்டது துலங்கும். தொழிலில் கணிசமான தொகை கைகளில் புரளும். இனிய சந்தர்ப்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும். வீடு வாங்கும் யோகம் உண்டு. வாங்கிப் போட்ட சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு வெளியில் வந்து, சுய தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இப்பொழுது அது கைகூடும். பாதியில் நின்ற பணிகள் யாவும் முடிவடையும்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் விரய ஸ்தானத்தில் சனியும், ராகுவும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். விரய ஸ்தானத்தில் விரயாதிபதி சனி வக்ரம் பெறுவதால் எதிர்பாராத விரயங்கள் ஏராளமாக வந்துசேரும். 'பணம் வந்த மறுநிமிடமே செலவாகின்றதே' என்று கவலைப்படுவீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறைவாகவே கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் கொஞ்சம் அதிகரிக்கலாம். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ள நேரிடும். படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் வேறு திருப்தியற்ற வேலை கிடைக்கும். வாகனப் பழுதுச் செலவு உண்டு. பிறருக்குப் பொறுப்பு சொல்வதால் பிரச்சனை ஏற்படும்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசியில் செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கு இதுவரை அஷ்டமத்தில் சஞ்சரித்து வந்த செவ்வாய், இப்பொழுது பாக்கிய ஸ்தானத்திற்கு வருவதால் எல்லாவிதமான நன்மைகளும் கிடைக்கும். குறிப்பாக பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். பேச்சாற்றல் மிக்க ஒருவர் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பார். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். வெளிநாடு அல்லது வெளிமாநிலம் செல்லும் முயற்சி கைகூடும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. இருப்பினும் உங்கள் ராசிநாதன் குருவிற்கு சுக்ரன் பகைக்கிரகம் ஆவார். அவர் அஷ்டமத்தில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும். ஜீரணத் தொல்லைகளும், திடீர், திடீரென உடல்நிலையில் பாதிப்புகளும் ஏற்படலாம். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்தால், அதனால் பிரச்சனைகள் உருவாகும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குத் தள்ளிப்போன விஷயங்கள் தானாக நடைபெறும். வியாபாரம், தொழில் செய்பவர்கள், எதிர்பார்த்த இலக்கை அடைவர். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் பதவி பெறுவர். கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவ - மாணவிகளுக்குப் படிப்பில் வெற்றி உண்டு. பெண்களுக்கு பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 24, 25, 28, 30, 31, நவம்பர்: 5, 6, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.






