என் மலர்
ராசிபலன் - Rasi Palan

2025 ஐப்பசி மாத ராசிபலன்- சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்
- தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும்.
- குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும்.
சிம்ம ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் நீச்சம் பெற்று வலுவிழந்து சஞ்சரிக்கிறார். வக்ரச் சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. சர்ப்ப கிரகங்களின் ஆதிக்கமும் மேலோங்கி இருக்கிறது. எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அதன் விளைவாக மருத்துவச் செலவு கூடும். 'திறமை இருந்தும் எதையும் செய்ய இயலவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. வளர்ச்சி ஏற்பட்டாலும் விரயங்கள் அதிகரிக்கும்.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். முறையான பெயர்ச்சி இல்லாமல் அதிசாரப் பெயர்ச்சியாக இருந்தாலும் அதைப் பார்க்கும் இடங்கள் புனிதமடைகின்றன. எனவே விரயங்கள் அதிகரிக்கும். அதைச் சுபவிரயமாக மாற்றிக்கொள்வது நல்லது. தாயின் உடல்நலம் சீராகும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவோ, கல்யாணம் சம்பந்தமாகவோ, கடல் தாண்டிச் சென்று பணிபுரிவது சம்பந்தமாகவோ, ஏதேனும் முயற்சி செய்தால் அதில் வெற்றி கிடைக்கும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் சப்தம ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். இது அவ்வளவு நல்லதல்ல. எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. வாழ்க்கைத் துணை வழியே பிரச்சனைகள் மற்றும் குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நிலை தொல்லை ஏற்பட்டு மனக்கவலை அதிகரிக்கும். உத்தியோகமாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும் முறையாக அதில் கவனம் செலுத்த இயலாமல் தவிப்பீர்கள். இதுபோன்ற நேரங்களில் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவது நல்லது. பலரின் மனக்கசப்பிற்கு ஆளாக நேரிடும்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சுக ஸ்தானத்தில் பலம்பெறும் இந்த நேரம், ஒரு அற்புதமான நேரமாகும். சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். இடம், வீடு வாங்கும் யோகம் உண்டு. தாய் - தந்தையரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களால் லாபமும், புதிய முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும் நேரம் இது.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சகாய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம், அமைதியான வாழ்க்கைக்கு அடிகோலும் விதத்தில் சம்பவங்கள் நடைபெறும். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். முக்கியப் புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் யோகம் உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றம் ஏற்படலாம். கலைஞர்களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு குடும்பச்சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் நிதானம் தேவை.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 20, 21, 25, நவம்பர்: 8, 9, 15, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.
கன்னி ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் தன ஸ்தானத்தில் பரிவர்த்தனை யோகம் பெற்றுள்ளார். சுக்ரனும், புதனும் தன் வீடுகளை மாற்றி அமர்ந்திருப்பதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய பாதை புலப்படும். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். ஆலய தரிசனங்களும், ஆன்மிகப் பயணங்களும் உருவாகும். விரயாதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் இருப்பதால் திடீர் விரயங்கள் உண்டு. என்றாலும் அதைச் சமாளிக்க, முன்னதாகவே அதற்குரிய தொகை வந்துசேரும்.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ம் இடத்தில் உச்சம்பெற்றுச் சஞ்சரிக்கிறார். அதிசாரப் பெயர்ச்சியாக இருந்தாலும் அதற்குரிய பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். 4, 7-க்கு அதிபதியானவர் குரு என்பதால் ஆரோக்கியம் சீராகும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்யாணத் தடைகளும், காரியத் தடைகளும் அகலும். தாயின் உடல்நலம் சீராகும். சென்ற மாதம் ஏற்பட்ட தட்டுப்பாடுகளும், பண நெருக்கடியும் தானாகவே விலகும். எதிர்பாராத வரவுகளால் இதயம் மகிழும். குடும்ப ஒற்றுமை பலப்பட நீங்கள் எடுத்த முயற்சி பலன்தரும். பழைய பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் கும்ப ராசியில் சனி- ராகு சேர்க்கை ஏற்படுகிறது. 6-க்கு அதிபதி சனி, 6-ம் இடத்திலேயே வக்ரம் பெறுவது யோகம்தான். 'வாங்கிய கடனைக் கொடுக்க முடியவில்லையே, கொடுத்த கடனை வாங்க முடியவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது மகிழ்ச்சி தரும் விதத்தில் கொடுக்கல் -வாங்கல்கள் ஒழுங்காகும். வளர்ச்சி அதிகரிக்கும் இந்த நேரத்தில் இதைச் செய்வோமா, அதைச் செய்வோமா என்று சிந்திப்பீர்கள். தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு மூலம் வெளிவந்து புது முயற்சியில் ஈடுபட்டு பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் நல்ல மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக தொழில் நடக்கும் இடத்தை மாற்றம் செய்ய விரும்புவீர்கள். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நல்லவிதமாக நடைபெறும். உடன்பிறந்தவர்கள் பகை மறந்து செயல்படுவர். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். உடல்நலனில் மட்டும் சிறுசிறு தொல்லைகள் வந்து அலைமோதும். எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்பு கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். இப்ெபாழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலவி வந்த பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். குறிப்பாக பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். நூதனப் பொருட்களின் சேர்க்கை உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகம், தொழில் செய்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்குப் பொருளாதார நிலை உயரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 21, 22, 27, 28, நவம்பர்: 7, 8, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.
துலாம் ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அதிக விரயம் ஏற்படும். லாபாதிபதி சூரியனும் நீச்சம் பெற்றிருக்கிறார். 10-ல் உள்ள குருவால் பதவி மாற்றம், இடமாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும் சூழல் உண்டு. மாதத்தின் பிற்பகுதியில் சுக்ரன் பெயர்ச்சிக்குப் பிறகு, மகிழ்ச்சியான தகவல் வந்துசேரும். பொருளாதாரத்தில் இருந்த ஏற்ற இறக்க நிலை மாறும். எதையும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்துச் செயல்பட வேண்டிய மாதம் இது.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை பலத்தால் நன்மை கிடைக்கும். என்றாலும் 10-ம் இடத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் திடீரென மாற்றப்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் மனதைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படும். அண்ணன், தம்பிகளுக்குள் ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் முடிவிற்கு வருவதில் தாமதம் ஏற்படும். திருமணத்தடை உருவாகும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் பண நெருக்கடியின் காரணமாக ஒரு சிலர் சொத்துக்களை விற்க நேரிடும். பாகப் பிரிவினை திருப்தி தராமல் போகலாம். பிள்ளைகளால் மீண்டும் பிரச்சனை தலைதூக்கும். பெற்றோரின் அனுசரிப்பு கொஞ்சம் குறையும். 'நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கின்றதே' என்று கவலைப்படுவீர்கள். பரம்பரை நோயின் தாக்கத்தால் பதற்றம் ஏற்படும். முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது.
விருச்சிக - செவ்வாய்
இக்காலம் ஒரு இனிய காலமாகும். ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு தனாதிபதியான செவ்வாய், தன ஸ்தானத்திற்கு வரும்போது, அனைத்து துறையிலும் வெற்றி கிடைக்கும். எதிர் கருத்து உள்ளவர்கள் கூட இணக்கமாக நடந்துகொள்வர். குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் இருந்த மந்தநிலை மாறும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. வீண் வாக்குவாதங்களால் வந்த பிரச்சனை அகலும். வருமானம் உயரும். பிள்ளை களின் வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சி பலன்தரும். ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் வருகிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. எனவே இக்காலத்தில் இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். உங்கள் ராசிநாதன் உங்கள் ராசிக்கே வருவது யோகம்தான். உடல்நலன் சீராகும். செல்வநிலை உயரும். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர் களுக்கு கூட்டாளிகளால் நன்மை உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்த இலக்கை அடைய இயலும். கலைஞர்களுக்கு நட்பால் நன்மை உண்டு. மாணவ - மாணவிகளுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு குடும்பச்சுமை குறையும். உடன்பிறந்தவர்களால் நன்மை உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 18, 19, 23, 24, 30, 31, நவம்பர்: 9, 10, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.
விருச்சிக ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியை உச்சம் பெற்ற குரு பகவான் பார்க்கிறார். அது 5-ம் பார்வையாக இருப்பதால் பொன் கொழிக்கும் மாதம் இது. எடுத்த முயற்சிகள் யாவிலும் வெற்றி கிடைக்கும். அடுத்தடுத்து ஆதாயம் தரும் தகவல் வந்து கொண்டேயிருக்கும். 'நீங்கள் கொடுத்து வைத்தவர்' என்று கூட இருப்பவர்கள் பாராட்டுவார்கள். பொருளாதார நிலை உச்சம் அடையும். புதிய திருப்பங்கள் ஏற்படும். நீங்கள் தேர்ந்தெடுத்த களம் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி கிடைக்கும் மாதம் இது.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை பலத்தால் பலவித நன்மைகள் கிடைக்கும். குரு பார்க்க கோடி நன்மை என்பதால், இக்காலத்தில் உடல்நலம் சீராகும். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். ஆதாயம் தரும் தகவல்கள் அதிக அளவில் வந்து மகிழ்விக்கும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். பொதுநலத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதிகார அந்தஸ்து தேடிவரும். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இந்த நேரத்தில் குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வாகனம் வாங்குவது, தொழில் தொடங்குவது ஆகியவற்றில் ஈடுபடுவீர்கள்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் சுக ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். 'கும்ப ராகு, குடம் குடமாக கொடுக்கும்' என்பார்கள். அந்த அடிப்படையில் பொருளாதார நிலை உயரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். கடை திறப்பு விழா, கட்டிடத் திறப்பு விழா போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு ஏற்படும். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு கைகூடும். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் ஆரோக்கியத் தொல்லை அகலும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்குச் செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கும், 6-ம் இடத்திற்கும் அதிபதியானவர் செவ்வாய். அவர் உங்கள் ராசிக்கே வருவது யோகமான நேரமாகும். இடம், பூமி வாங்கும் வாய்ப்பு உண்டு. எதைச் செய்ய நினைத்தாலும், அதை உடனடியாகச் செய்து முடிக்கும் வகையில் பொருளாதார நிலை இடம் கொடுக்கும். தொழிலில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர். கேட்ட சலுகைகளையும் வழங்குவர். இது ஒரு பொற்காலமாகும்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு விரயாதிபதியான சுக்ரன் விரய ஸ்தானத்திற்கு வரும்போது, கூடுதல் விரயம் ஏற்படத்தான் செய்யும். என்றாலும் அதை சுபவிரயமாக மாற்றிக்கொள்வது நல்லது. இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழலாம். வாடகைக் கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். இடமாற்றம் எளிதில் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண் அதிகம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு வருமானம் போதுமானதாக இருக்கும். வசதி வாய்ப்புகள் பெருகும். சுபச் செய்தி உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 19, 21, 27, 28, நவம்பர்: 1, 2, 11, 12, 15.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.






