என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • நமது நாட்டில் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் உள்ளனர்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் சமீபத்தில் பதவி யேற்றார். அவர் பதவியேற்றவுடன் பல்வேறு அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டார். குறிப்பாக சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் டிரம்ப் தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை தீவிரவாதிகள் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

    அவர் கூறும்போது, `நமது நாட்டில் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் உள்ளனர். இந்த பிரச்சினையை நாங்கள் கவனித்துக் கொள்வோம்' என்றார்.

    மேலும் டிரம்ப் கூறும் போது, `ஜனநாயகக் கட்சியினரால் ஆட்சி செய்ய முடியாது என்பதையும், அவர்களின் கொள்கைகள் பயங்கரமானவை என்பதையும் மக்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

    குத்துச்சண்டை வளையத்தில் ஒரு பெண் ஒரு ஆணால் தாக்கப்படுவதை அவர்கள் பார்க்க விரும்பவில்லை. ஒரு குழந்தை ஒரு பையனாக வீட்டை விட்டு வெளியேறி 2 நாட்களுக்குப் பிறகு ஒரு பெண்ணாக திரும்பி வருவதை அவர்கள் விரும்பவில்லை. ஆனால் அது நடக்கக்கூடிய மாகாணங்களும் உள்ளன.

    முன்னாள் அதிபர் ஜோ பைடன் பலருக்கும் பொது மன்னிப்பு வழங்கினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தனக்குதானே மன்னிப்பு வழங்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளோரிடா, லூசியானா மாகணங்கள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
    • சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து பொதுசேவை குறைக்கப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் மேற்கு கரையோரத்தில் அமைந்துள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இந்த மாதம் தொடக்கம் முதல் காட்டுத்தீ பரவியது. கடுமையான காற்றுவீச்சு காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.

    அமெரிக்காவின் தெற்கு மாகணங்களான புளோரிடா, மிசிசிப்பி, லூசியானா உள்ளிட்டவற்றில் புத்தாண்டு தொடங்கி கடுமையாக பனி பொழிந்து வருகிறது. இயற்கை அன்னையின் இந்த முரண்பாடான தாக்குதலில் இருந்து மீள முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது. இந்தநிலையில் புளோரிடா மாகாணத்தில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத அளவில் கடும் பனிப்பயுல் வீசி வருகிறது.

    மைனஸ் 20 டிகிரி வானிலையுடன் கடுமையான பனிப்புயல் காரணமாக அங்குள்ள முக்கிய நகரங்களை வெள்ளை பனி மூடியது. குறிப்பாக புளோரிடாவில் உள்ள மில்டன் நகரம் துருவ கண்டம்போல காட்சியளிக்கும் வகையில் பனிபொழிந்து வருகிறது. அங்கு 23 செ.மீட்டர் அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு கொண்டது என அந்த நாட்டின் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் புளோரிடா, மிசிசிப்பி, லூசியானா உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள நகரங்களில் 20 செ.மீட்டருக்கும் அதிகமாக பனிப்பொழிவு பதிவாகி உள்ளதாக அந்த நாட்டின் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளோரிடா, லூசியானா மாகணங்கள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

    இதனால் அந்த நாட்டின் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன, சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து பொதுசேவை குறைக்கப்பட்டது. ஹவுஸ்டன், கூல்ப்போர்ட், டல்லாயாசி, மொபில் உள்ளிட்ட நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டன.

    இதனால் 2 ஆயிரம் விமானங்கள் ரத்தாகின. அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 10 பேர் பலியாகினர். 3 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.

    • கடந்த 2021-ம் ஆண்டு ஜோ பைடன் பதவி ஏற்பு நிகழ்ச்சியை 3 கோடியே 38 லட்சம் பேர் நேரலையில் பார்த்துள்ளனர்.
    • டிரம்ப் பதவி ஏற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டிரம்ப் கடந்த 20-ந்தேதி பதவி ஏற்றார். வழக்கமாக ஜனாதிபதி பதவி ஏற்பு விழா என்பது வாஷிங்டன் நகரில் உள்ள கேபிடல் எனப்படும் பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் நடைபெறும். இதில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு பார்வையிடலாம்.

    ஆனால் இந்த முறை கடும் பனிப்பொழிவு காரணமாக, ஜனாதிபதி பதவி ஏற்பு விழா பாராளுமன்ற கட்டிட உள்ளரங்கில் நடைபெற்றது. இந்த விழாவை நேரலையில் பார்க்குமாறு டிரம்ப் கூறியிருந்தார்.

    அதன்படி பதவியேற்பு நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இதனை அமெரிக்காவில் 2 கோடியே 46 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இது மிகவும் குறைந்த எண்ணிக்கை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஜோ பைடன் பதவி ஏற்பு நிகழ்ச்சியை 3 கோடியே 38 லட்சம் பேர் நேரலையில் பார்த்துள்ளனர் என்றும், 2017-ம் ஆண்டு டிரம்ப் முதன் முறையாக ஜனாதிபதியாக பதவி ஏற்ற நிகழ்ச்சியை 3 கோடியே 6 லட்சம் பேர் நேரலையில் பார்த்துள்ளனர் என்றும் நீல்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம் பிற முக்கிய தொலைக்காட்சி நிறுவனங்களில் இந்த எண்ணிக்கையில் மாறுபாடு உள்ளது.

    இது ஒருபுறம் இருக்க டிரம்ப் பதவி ஏற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதில், போதைப்பொருள் விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட, ரகசிய வலைத்தளமான சில்க் ரோட்டின் நிறுவனர் ரோஸ் உல்ப்ரிசட்டுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இது தொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், ரோஸுக்கு முழுமையான மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு வழங்குவதில் கையெழுத்திட்டதில் நான் மகிழ்ச்சியடைந்தேன் என்று ரோசின் தாயாரிடம் கூறினேன். அவரை குற்றவாளியாக்க வேலை செய்தவர்கள், எனக்கு எதிராக வேலை செய்தவர்கள்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அமெரிக்காவில் அனைத்து கூட்டாட்சி பன்முகத்தன்மை, சமபங்கு மற்றும் உள்ளடக்க ஊழியர்களை சம்பளத்துடன் கூடிய விடுப்பில் அனுப்பவும், அவர்களை பணி நீக்கம் செய்வதற்கான திட்டங்களை உருவாக்கவும் டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது.

    மேலும் அமெரிக்காவில் ஆரக்கிள், சாப்ட் பேங்க் மற்றும் ஓபன் ஏ.ஐ. ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்படும் ஒரு புதிய நிறுவனத்தின் மூலம் செயற்கை தொழில் நுட்ப உள்கட்டமைப்பில் 50 ஆயிரம் கோடி டாலர் முதலீடு செய்யப்படும் என்று டிரம்ப் அறிவித்தார். இதன் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் கூறினார்.

    டிரம்ப் பதவியேற்ற சில மணி நேரத்தில், வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் ஸ்பானிஷ் மொழிப் பதிப்பு நீக்கப்பட்டது.

    இதுபற்றி வெள்ளை மாளிகையின் முதன்மை துணை செய்தி தொடர்பாளர் ஹாரிசன் பீல்ட்ஸ் கூறுகையில், வலைதளத்தின் ஸ்பானிஷ் மொழிபெயர்ப்புப் பகுதியை மீண்டும் ஆன்லைனில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். சில மாற்றங்களுக்கு பின்னர் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறினார். கடந்த 2017-ம் ஆண்டும் இதேபோல் ஸ்பானிஷ் பதிப்பை டிரம்ப் நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தற்போது மீண்டும் காட்டுத்தீ பரவி வருகிறது.
    • பலத்த காற்று காட்டுத்தீயின் தீவிரத்தை அதிகப்படுத்தியது.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளனர். இதே பகுதியில் சமீபத்தில் தான் இரண்டு மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், தற்போது மீண்டும் காட்டுத்தீ பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காஸ்டாயிக் ஏரியின் அருகில் உள்ள மலைப்பகுதியில் வேகமாக பரவிய காட்டுத்தீ கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குள் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டது. பலத்த காற்று காட்டுத்தீயின் தீவிரத்தை அதிகப்படுத்த, அந்தப் பகுதி முழுக்க புகை சூழ்ந்து காணப்பட்டது. மேலும், தீ அதிக இடங்களுக்கு பரவும் என்று தெரிகிறது.

    புதிதாக பரவி வரும் காட்டுத்தீ காரணமாக சாண்டா கிளாரிட்டா அருகில் அமைந்துள்ள ஏரியை சுற்றி வசிக்கும் 31 ஆயிரம் பேரை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஹியூஸ் தீ என்று அழைக்கப்படும் புதிய தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் துறையைச் சேர்ந்த ராபர்ட் ஜென்சன் வலியுறுத்தினார்.

    ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் சம்பவ இடத்தில் தண்ணீர் மற்றும் தீயை தடுக்கும் மருந்துகளை தீயில் ஊற்றிக்கொண்டிருந்தன. லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி தீயணைப்புத் துறை மற்றும் ஏஞ்சல்ஸ் தேசிய வனப்பகுதியைச் சேர்ந்த குழுவினரும் தரையில் இருந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • எலான் மஸ்க் மற்றும் இந்திய-அமெரிக்க தொழிலதிபரும் அரசியல்வாதியுமான விவேக் ராமசாமி நியமிக்கப்பட்டனர்.
    • விவேக் ராமசாமிக்கும் மஸ்க் மற்றும் டிரம்ப் கட்சியினருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

    அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த திங்கள் கிழமை பதவியேற்றுக்கொண்டார். டிரம்ப் பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே அவர் உருவாக்கிய DODGE துறையின் இணை தலைவராக நியமிக்கப்பட்ட விவேக் ராமசாமி (39 வயது) பதவி விலகுவதாக அறிவித்தார்.

    அரசின் செயல்திறனை மேம்படுத்தும் முகமை DODGE. புதிதாக உருவான இந்த துறையின் தலைவர்களாக உலக பணக்காரருக்கு டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்டவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க் மற்றும் இந்திய-அமெரிக்க தொழிலதிபரும் அரசியல்வாதியுமான விவேக் ராமசாமி நியமிக்கப்பட்டனர்.

    ஆனால் எக்ஸ் பக்கத்தில் தனது பதவி விலகலை அறிவித்த விவேக் ராமசாமி, 'எனக்கு கிடைத்த மரியாதை. அரசாங்கத்தை சீரமைப்பதில் எலான் மஸ்க் & குழு வெற்றிபெறும் என்று நான் நம்புகிறேன்' என்று கூறியிருந்தார்.

    2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஓஹியோ மாகாண கவர்னர் பதவிக்கு அவர் போட்டியிட உள்ளார் என்றும் அதனால் பதவி விலகினார் என்றும் முதலில் கூறப்பட்டது.

    ஆனால் DODGE இன் மற்றொரு தலைவர் எலான் மஸ்க், விவேக் ராமசாமியை அந்த பதவியை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளார் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

     

    அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிய வழங்கப்படும் எச்-1பி விசா பின்னணியில் விவேக் ராமசாமிக்கும் மஸ்க் மற்றும் டிரம்ப் கட்சியினருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

    கடந்த டிசம்பரில் தனது எக்ஸ் பதிவில், அமெரிக்க கலாச்சாரம் சிறப்பானவற்றை விட, அற்பமானவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதால், தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து [H-1B விசா மூலம்] ஆட்களை வேலைக்கு எடுப்பதாக தெரிவித்திருந்தார்.

    இது டிரம்பின் குடியரசு கட்சி பெரும்புள்ளிகளிடையேயும், எலான் மஸ்க் தரப்பிலும் புகைச்சலை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதையே காரணம் காட்டி டிரம்பிடம் கூறி விவேக் ராமசாமியை எலான் மஸ்க் வெளியேற செய்துள்ளார் என்று அமெரிக்காவின் பிரபல பொலிட்டிக்கோ [politico] இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

    இதற்கிடையே, நாட்டிற்குள் வரும் மிகவும் திறமையான மக்களை நான் விரும்புகிறேன். இதனால் எச்-1பி விசாவை நிறுத்த விரும்பவில்லை என்று டிரம்ப் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள 18,000 இந்தியர்களை டிரம்ப் நிர்வாகம் அடையாளம் கண்டுள்ளது
    • ​​​​அமெரிக்காவின் தெற்கு எல்லையில் டிரம்ப், தேசிய அவசரநிலையை அறிவித்தார்.

    அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக கடந்த திங்கள்கிழமை பதவியேற்றார். அவரது கடந்த 2016-20 ஆட்சிக் காலத்தை போலவே தற்போதும் அதிரடி முடிவுகளை வெளியிட்டு வருகிறார்.

    அந்த வகையில் சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை கொண்ட டிரம்ப் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற அச்சம் புலம்பெயர்ந்து அங்கு குடியேறியுள்ள பல நாட்டவரை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

     

    இந்நிலையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களையும் கண்டறிந்து திருப்பி பெறுவதாக இந்திய அரசு டொனால்டு டிரம்பின் நிர்வாகத்துடன் புரிந்துணர்வு மேற்கொண்டுள்ளது என புளூம்பெர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற புளூம்பெர்க் செய்தி மற்றும் ஆய்வு நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள 18,000 இந்தியர்களை டிரம்ப் நிர்வாகம் அடையாளம் கண்டுள்ளது என்றும் நாடு கடத்தப்பட உள்ள அவர்களை இந்திய அரசு சரிபார்த்து திரும்பப்பெறும் என்று கூறப்படுகிறது.

    திங்களன்று தனது பதவியேற்பின்போது, அமெரிக்காவின் தெற்கு எல்லையில் டிரம்ப், தேசிய அவசரநிலையை அறிவித்தார்.

     

    நாட்டிற்குள் நிகழும் அனைத்து சட்டவிரோத நுழைவுகளும் உடனடியாக நிறுத்தப்படும் என்றும், தனது நிர்வாகம் மில்லியன் கணக்கான குற்றப்பின்னணி கொண்ட வெளிநாட்டினரை அவர்கள் வந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பத் தொடங்கும் என்றும் டிரம்ப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.   

    • குவாட் உலக நன்மைக்கான ஒரு சக்தியாகத் தொடரும்.
    • ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஒப்புக் கொண்டோம்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டிரம்பின் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் கூட்டம் அமெரிக்காவில் நடந்தது. இதில் அந்தந்த நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கலந்து கொண்டனர்.


    அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியாக பதவியேற்ற மார்கோ ரூபியோவுடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கு மேல் நடந்தது.

    அதேபோல் மார்கோ ரூபியோவை ஆஸ்திரேலியா மந்திரி பென்னி வோங், ஜப்பான் மந்திரி இவாயா தகேஷி ஆகியோரும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    இதுகுறித்து எஸ்.ஜெய்சங்கர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, வாஷிங்டனில் பயனுள்ள குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டேன். பெரியதாக சிந்திப்பது, நிகழ்ச்சி நிரலை ஆழப்படுத்துவது மற்றும் எங்கள் ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஒப்புக் கொண்டோம்.

    இன்றைய சந்திப்பு, நிச்சயமற்ற மற்றும் நிலையற்ற உலகில், குவாட் உலக நன்மைக்கான ஒரு சக்தியாகத் தொடரும் என்பதற்கான தெளிவான செய்தியை அனுப்புகிறது என்றார்.

    • 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றார்.
    • அதிரடியாக பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றார். அவர் பதவியேற்றதும் அதிரடியாக பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

    பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றில் இருந்து அமெரிக்கா விலகல், பாராளுமன்ற கலவர வழக்கில் 1500 பேருக்கு பொது மன்னிப்பு, சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க நடவடிக்கை உள்ளிட்ட பல உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

    மேலும் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவது ரத்து செய்யப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.


    இந்தநிலையில் அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிய வழங்கப்படும் எச்-1பி விசாவை நிறுத்த விரும்பவில்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, எச்-1பி விசா தொடர்பாக நடக்கும் விவாதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து டிரம்ப் கூறியதாவது:-

    எச்-1பி விசா தொடர்பான விவாதத்தின் இரு பக்கங்களையும் நான் விரும்புகிறேன். ஆனால் நம் நாட்டிற்குள் வரும் மிகவும் திறமையான மக்களையும் நான் விரும்புகிறேன். இதனால் எச்-1பி விசாவை நிறுத்த விரும்பவில்லை. நான் என்ஜினீயர்களைப் பற்றி மட்டும் பேசவில்லை. அனைத்து மட்டங்களில் உள்ளவர்களைப் பற்றியும் பேசுகிறேன்.

    திறமையான மக்கள் நம் நாட்டிற்குள் வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மேலும் எச்-1பி திட்டத்தை நான் நன்கு அறிவேன். நான் இந்த திட்டத்தைப் பயன்படுத்துவேன் என்றார்.

    சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க வேண்டும். கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி பிப்ரவரி 1-ந்தேதி விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதிக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்க பரிசீலித்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    • நீதிமன்றங்களில் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளன.
    • வெள்ளை மாளிகை தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

    ஜனநாயகக் கட்சிகள் தலைமை வகிக்கும் மாநிலங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் குழுக்கள் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த பிறப்புரிமை குடியுரிமையை திரும்பப் பெறும் முயற்சியை எதிர்த்து வழக்குகளை தாக்கல் செய்துள்ளன.

    இவ்வாறு செய்வதன் மூலம் டிரம்ப்-இன் எதிரிகள் நீதிமன்றத்தில் அவரது நிகழ்ச்சி நிரலைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கடந்த திங்கட்கிழமை பதவியேற்ற பிறகு, குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப், அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளின் தாய் அல்லது தந்தை அமெரிக்க குடிமகனாகவோ அல்லது சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளராகவோ இல்லாவிட்டால் அவர்களின் குடியுரிமையை அங்கீகரிக்க மறுக்குமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.

    கொலம்பியா மாவட்டம் மற்றும் சான் பிரான்சிஸ்கோ நகரத்துடன் இணைந்து 22 ஜனநாயக கட்சி தலைமை வகிக்கும் மாநிலங்கள், டிரம்ப் அமெரிக்க அரசியலமைப்பை மீறியதாக பாஸ்டன் மற்றும் சியாட்டிலில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளன.

    இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப் குடியிரிமை குறித்த நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்ட சில மணி நேரங்களில் அவரது நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்ற போராட்டங்களை எதிர்கொள்ள துவங்கியுள்ளது.

    டிரம்ப்-இன் உத்தரவுகள் அமலுக்கு வரும் பட்சத்தில், அமெரிக்காவில் ஆண்டுதோறும் பிறக்கும் 1.5 லட்சத்திற்கும் அதிக குழந்தைகளுக்கு முதல் முறையாக குடியுரிமை பெறும் உரிமை மறுக்கப்படும் என்று அட்டார்னி ஜெனரல் ஆண்ட்ரியா ஜாய் கேம்பெல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து வெள்ளி மாளிகை தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

    • ரஷியா மீது தடைகள் விதிக்கப்படும்.
    • பொது மக்கள் அதிகளவில் கொல்லப்பட்டுள்ளனர்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புட்டினை எந்த நேரத்திலும் சந்திக்க தயாராக இருப்பதாக கூறினார். மேலும் உக்ரைன் பிரச்சினையில் பேச்சுவார்த்தைக்கு ரஷியா வரவில்லை என்றால் ரஷியா மீது தடைகள் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

    "உங்களிடம் திறமை இருந்தால் போர் துவங்கி இருக்காது. நான் அதிபராக இருந்திருந்தால், உக்ரைனில் போர் நடைபெற்றிருக்காது. ரஷியா ஒருபோதும் உக்ரைனுக்குள் சென்றிருக்காது. எனக்கு புதினுடன் நல்ல புரிதல் உள்ளது. அது நிச்சயம், நடந்திருக்காது. அவர் பைடனை அவமதித்தார்" என்று டிரம்ப் கூறினார்.

    புதினை சந்திப்பது குறித்து கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப், "அவர்கள் எப்போது நினைத்தாலும், நான் சந்திக்கிறேன். பல லட்சம் மக்கள் கொல்லப்படுகின்றனர். இது மிகவும் கொடூரமான சூழ்நிலை, தற்போது அவர்கள் வீரர்கள். பொது மக்கள் அதிகளவில் கொல்லப்பட்டுள்ளனர், நகரங்கள் அழிக்கப்பட்டு இடிபாடு தளங்கள் போல காட்சியளிக்கின்றன," என்று தெரிவித்தார்.

    • அரசின் செயல்திறனை மேம்படுத்தும் முகமை DODGE.
    • DODGE இணை தலைவராக தொடர முடியாததால் அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்

    அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் திங்கள் கிழமை (இந்திய நேரப்படி நேற்றிரவு) பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழா வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் ஒன் அரங்கில் நடைபெற்றது.

    இந்நிலையில் டிரம்ப் பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே அவர் உருவாக்கிய DODGE துறையின் இணை தலைவராக நியமிக்கப்பட்ட விவேக் ராமசாமி (39 வயது) பதவி விலகியுள்ளார்.

    அரசின் செயல்திறனை மேம்படுத்தும் முகமை DODGE. புதிதாக உருவான இந்த துறையின் தலைவர்களாக உலக பணக்காரருக்கு டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்டவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க் மற்றும் இந்திய-அமெரிக்க தொழிலதிபரும் அரசியல்வாதியுமான விவேக் ராமசுவாமி நியமிக்கப்பட்டனர்.

    இருவரும் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக தீவிரமாக செயல்பட்டனர். முதலில் டிரம்பை எதிர்த்து போட்டியிட முனைந்த ராமசாமி, பின்னர் அந்த போட்டியில் இருந்து விலகி டிரம்ப் ஆதரவாளர்களில் ஒருவராக மாறினார்.

    இவர்களின் ஆதரவை அங்கீகரிக்கும் விதமாகவே டிரம்ப் DODGE துறையை உருவாக்கி இவர்களை தலைவர்களாக்கினார். ஆனால் தற்போது விவேக் ராமசாமி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

     

    இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராமசாமி, DOGE ஐ உருவாக்க உதவும் வாய்ப்பு, எனக்கு கிடைத்த மரியாதை. அரசாங்கத்தை சீரமைப்பதில் எலான் மஸ்க் & குழு வெற்றிபெறும் என்று நான் நம்புகிறேன்.

    ஓஹியோவில் எனது எதிர்காலத் திட்டங்களைப் பற்றி நான் மிக விரைவில் கூறுவேன். மிக முக்கியமாக, அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற அதிபர் டிரம்பிற்கு உதவ நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம்! என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    ஓஹியோ மாகாண கவர்னர் பதவிக்கு விவேக் ராமசாமி போட்டியிட திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் DODGE இணை தலைவராக தொடர முடியாததால் அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு கவர்னர் தேர்தல் நடைபெறுகிறது.

    அவுட்பேக் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் ராமசாமி, "ஓஹியோவில் உள்ள மக்கள் என்னை கவர்னர் பதவிக்கு போட்டியிட அதிகளவில் வற்புறுத்துகின்றனர். அதை நான் ஏன் கருத்தில் கொள்ளக்கூடாது?" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இல்லையெனில் ரஷியாவுக்கு பெரிய சிக்கல் ஏற்படும்.
    • நான் அவருடன் நன்றாகப் பழகினேன்.

    அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் திங்கள் கிழமை (இந்திய நேரப்படி நேற்றிரவு) பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழா வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் ஒன் அரங்கில் நடைபெற்றது. இதில் உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பதிவேற்றபின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. 42 முக்கிய ஆவணங்களிலும், பல நிர்வாக ரீதியான உத்தரவுகள் என 100க்கும் மேற்பட்டவற்றில் கையொப்பம் இட்டுள்ளார். அமெரிக்கவில் ஆண், பெண் இருபாலாருக்கு மட்டுமே அனுமதி, உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறுவது உள்ளிட்ட முக்கிய முடிவுகளும் அதில் அடங்கும்.

    இந்நிலையில் பதவியேற்றபின் உக்ரைன் போர் குறித்தும் ரஷியாவை கடுமையாக டிரம்ப் சாடியுள்ளார்.

    2022 பிப்ரவரி தொடங்கி உக்ரானில் ஏறக்குறைய சுமார் 3 ஆண்டுகளாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்துக்கு ரஷிய அதிபர் புதின் இணங்க வேண்டும் என்றும்,  இல்லையெனில் ரஷியாவுக்கு பெரிய சிக்கல் ஏற்படும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    தனது ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதின் ஒரு ஒப்பந்தத்திற்கு வர வேண்டும், ஒப்பந்ததிற்கு இணங்காமல் அவர் ரஷியாவை அழிக்கிறார் என்று நான் நினைக்கிறேன். பணவீக்கம் உள்ளிட்டவற்றால் ரஷியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று டிரம்ப் கூறியுள்ளார்.

    மேலும்  புடினைச் சந்திக்கவும் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். தனது முந்தைய ஆட்சிக் காலத்தை [2016-20] நினைவு கூர்ந்த டிரம்ப், புதினுடன் உச்சிமாநாட்டில் பங்கேற்றதுபற்றி குறிப்பிட்டார். "நான் அவருடன் நன்றாகப் பழகினேன். அவர் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார் என்று நான் நம்புகிறேன்" என்று டிரம்ப் கூறினார்.

    போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதி ஒப்பந்தம் தேவை என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தன்னிடம் கூறியதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    மேற்கத்திய நாடுகள் அடங்கிய நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைந்தால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி ரஷியா உக்ரைன் மீது போர் தொடுத்தது குறிப்பிடத்தக்கது.

    ×