என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • அழைப்பின் பேரில் எம்.எஸ். டோனி டிரம்ப் உடன் கோல்ஃப் விளையாட சென்றதாக தகவல்.
    • முன்னதாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியை எம்.எஸ். டோனி நேரில் கண்டுகளித்தார்.

    இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனுமான எம்.எஸ். டோனி அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் கோல்ஃப் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது.

    டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்ததன் பேரில் எம்.எஸ். டோனி கோல்ஃப் விளையாட சென்றதாக கூறப்படுகிறது. அதன்படி இருவரும் கோல்ஃப் விளையாடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    முன்னதாக கார்லோஸ் அல்காராஸ் மற்றும் அலெக்சாண்டர் வெரவ் இடையே நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் காலிறுதிச் சுற்று போட்டியை எம்.எஸ். டோனி நேரில் கண்டுகளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வீடியோ வைரல் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

    எம்.எஸ். டோனி மற்றும் டொனால்ட் டிரம்ப் கோல்ஃப் விளையாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை எம்.எஸ். டோனியின் நண்பர் ஹிதேஷ் சங்வி பகிர்ந்து இருக்கிறார். 

    • அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா புறப்பட்டார்.
    • அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

    வாஷிங்டன்:

    ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்பட ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

    அதன்படி ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் இந்தியாவின் அழைப்பை ஏற்று, மாநாட்டில் பங்கேற்பதை உறுதிப்படுத்தினர்.

    இதற்கிடையே, அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கடந்த திங்கட்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனினும் ஜோ பைடனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து, அதிபர் ஜோ பைடன் இந்தியா வருவதை வெள்ளை மாளிகை உறுதி செய்தது.

    இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் ஜோ பைடன் விமானம் மூலம் இந்தியாவுக்கு புறப்பட்டார்.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ஜோ பைடன் இடையேயான இரு தரப்பு பேச்சுவாா்த்தை 8-ம் தேதி நடக்கிறது.

    தொடா்ந்து, செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டு அமா்வுகளில் அவா் பங்கேற்க உள்ளார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதியில் இந்தியாவின் போபண்ணா ஜோடி வென்றது.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் நடந்தது.

    இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, பிரான்சின் நிகோலஸ் மஹத், பியர்-ஹியுஸ் ஹெர்பெர்ட் ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 7-6 (7-3), 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    13 ஆண்டுகளுக்குப் பிறகு ரோகன் போபண்ணா அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெபோராவை 38 முறை கத்தியால் குத்தினார்
    • துப்பு கொடுப்பவர்களுக்கு 10 ஆயிரம் டாலர் பரிசுத்தொகை

    அமெரிக்காவில், கடந்த 2021-ல், 34-வயதான டனேலோ சவுசா கேவல்கான்டே எனும் பிரேசில் நாட்டை சேர்ந்தவர், 33 வயதான டெபோரா பிராண்டாவோ எனும் தனது தோழியை, அவரது 2 குழந்தைகளின் கண் முன்னே 38 முறை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு கடந்த மாதம் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

    இதனையடுத்து, அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், ஃபிலடெல்ஃபியாவிற்கு 50 கிலோமீட்டர் தொலைவில் பொகோப்சான் டவுன்ஷிப் பகுதியில் உள்ள செஸ்டர் கவுன்டி சிறைச்சாலையில் சவுசா கேவல்கான்டே அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 31 அன்று கேவல்கான்டே சிறையில் இருந்து சவுசா தப்பித்தார். இவரை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையில் நூற்றுக்கணக்கான காவல்துறையினருடன் ஹெலிகாப்டர்களும், டிரோன்கள் மற்றும் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்தேடுதல் வேட்டை குறித்து இவரது புகைப்படத்தை வெளியிட்டு பொது மக்களை செஸ்டர் கவுன்டி மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் எச்சரித்து இருக்கிறது.

    அதில், "மக்கள் தங்கள் வீடுகளை பூட்டி கொண்டு பத்திரமாக இருக்க வேண்டும். கார்களையும், உடைமைகளையும் அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். மேலும் தங்களை சுற்றி ஏதேனும் வித்தியாசமாக நடைபெறுகிறதா என விழிப்புடன் கவனிக்க வேண்டும்," என்று அந்த அலுவலகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

    ஆங்காங்கே இவரை கண்டதாக சில தகவல்கள் காவல்துறைக்கு வருகிறது. கேவல்கான்டே தப்பிய விதம் குறித்து சிறைத்துறை வெளியிட்டுள்ள வீடியோவில் வெள்ளை நிற டீ-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்த இவர் இரு சுவற்றுக்கிடையே உள்ள இடைவெளியில் கைகளை வைத்து நகர்ந்து மேற்கூரைக்கு சென்று அங்கிருந்து தப்பியோடுவது தெரிகிறது.

    தப்பியவர் மீது மேலும் பல கொடூர குற்றசாட்டுகள் பிரேசில் நாட்டிலும் இருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவ்வட்டார பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இவரை கண்டுபிடிக்க துப்பு கொடுப்பவர்களுக்கு சுமார் ரூ.8.3 லட்சம் ($10000) பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அமெரிக்காவில் இப்போது இரண்டு அடுக்கு நீதி அமைப்பு உள்ளது.
    • நமது சட்ட அமைப்பின் அடிப்படை கொள்கைகள் மீது இருண்ட நிழலை ஏற்படுத்தியது.

    அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்க இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி முடிவு செய்தார். அக்கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுப்பதற்கான பிரசாரத்தில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் தான் அதிபராக வெற்றி பெற்றால் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 6-ந்தேதி அமெரிக்க பாராளுமன்றத்துக்குள் புகுந்து போராட்டம் நடத்திய முன்னாள் அதிபர் டிரம்பின் ஆதரவாளர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, அமெரிக்காவில் இப்போது இரண்டு அடுக்கு நீதி அமைப்பு உள்ளது. சில கலகக்காரர்கள் சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர். அதே வேளையில் ஜனவரி 6-ந்தேதி போராட்டத்தை அமைதியான முறையில் நடத்தியவர்கள் ஜாமீன் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அதிபர் ஜோபைடனின் அநீதித்துறையானது, போராட்டத்தில் தொடர்புடைய வன்முறையற்ற குற்றங்களுக்காக 1000-க்கும் மேற்பட்ட கைதுகளை நிறைவேற்றியுள்ளது. இது நமது சட்ட அமைப்பின் அடிப்படை கொள்கைகள் மீது இருண்ட நிழலை ஏற்படுத்தியது. நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் உரிய நடைமுறை மறுக்கப்பட்ட அனைத்து அமெரிக்கர்களையும் மன்னிக்க உறுதியளிக்கிறேன். இதில் ஜனவரி 6-ந்தேதி நடைபெற்ற போராட்ட மற்றும் வன்முறையற்ற எதிர்ப்பாளர்களும் அடங்குவர் என்றார்.

    • ஐநா சபையில் துருக்கி பெயர் கடந்த வருடம் மாற்றப்பட்டுள்ளது
    • முறையாக கோரிக்கை விடுக்கப்பட்டால் பரிசீலனை செய்யப்படும்

    இந்தியா தனது நாட்டின் பெயரை "இந்தியா" என்பதை "பாரத்" என மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரின் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதிலாக "பாரத்" என அச்சிடப்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. என்றாலும், உலகளவில் "இந்தியா" என்பது "பாரத்" என மாற்றப்பட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விவாதம் தொடங்கியுள்ளது. பாஸ்போர்ட், தூதரகம், மின்அஞ்சல் போன்றவற்றில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஐ.நா. இந்த விவகாரத்தை எவ்வாறு எடுத்துக் கொள்கிறது என்று பார்ப்போம் என்றால், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் துணை செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறுகையில்

    ''துருக்கி (Turkey) துருகியே (Turkiye) என கடந்த வருடம் மாற்றப்பட்டது. இதற்கு அந்த அரசிடம் இருந்து முறையாக கோரிக்கை எங்களுக்கு வந்தது. அதனடிப்படையில் மாற்றப்பட்டது. அதேபோல், எங்களுக்கு கோரிக்கை வந்தால், நாங்கள் அவர்களிடம் இருந்து கோரிக்கை வந்ததாக கருதுவோம்'' என்றார்.

    இந்திய அரசு சார்பில் முறைப்படியான கோரிக்கை விடுக்கப்பட்டால் ஐ.நா.வில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என அழைக்கப்படும்.

    • உக்ரைன், ரஷியா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
    • உக்ரைனுக்கு கூடுதலாக 175 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவியை அமெரிக்கா அறிவித்தது.

    வாஷிங்டன்:

    உக்ரைன், ரஷியா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதி உதவியும், ராணுவ உதவியும் அளித்து வருகிறது.

    இந்நிலையில், உக்ரைனுக்கு கூடுதலாக 175 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவியை அமெரிக்க அறிவித்துள்ளது. இவை உக்ரேனிய படைகள் ரஷிய படைகளின் முன் பகுதியை தாக்க உதவியாக இருக்கும்.

    இந்த தொகுப்பில் ரஷிய விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகளுக்கு எதிராக செயல்படக்கூடிய வான் ஏவுகணைகள், ஜாவெலின் எதிர்ப்பு கவச ராக்கெட்டுகள் மற்றும் பிற வெடிமருந்துகள் ஆகியவை அடங்கும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது
    • இதில் ரஷியாவின் மெத்வதேவ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    ரஷியாவின் டேனில் மெத்வதேவ், சக வீரர் ஆன்ட்ரூ ரூப்லெவுடன் மோதினார். இதில் மெத்வதேவ் 6-4, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில் பெலாரசின் அரினா சபலென்கா, சீனாவின் குயின்வென் செங் உடன் மோதினார். இதில் சபலென்கா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • 25 முதல் 30 மாடி உயரம் கொண்ட இந்த விண்கலம், 120 டன் எடை கொண்டது.
    • ஸ்பேக் எக்ஸ் ராக்கெட் ஏவுதளத்தில் விண்கலம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்லும் விண்கலம் தயாராக உள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் அறிவித்துள்ளது.

    பிரபல கோடீஸ்வரர் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் விண்கலத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஸ்டார் சிப் விண்கலம், மனிதர்களை நிலவு, செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்ல உருவாக்கப்பட்டதாகும்.

    25 முதல் 30 மாடி உயரம் கொண்ட இந்த விண்கலம், 120 டன் எடை கொண்டது.

    உலகின் மிக சக்தி வாய்ந்த டிராகன் பூஸ்டர்ஸ் ராக்கெட் மூலம், இந்த விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது.

    இந்த விண்கலம், புவிஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு, தானாக பயணித்து, தரையிறங்கும் வல்லமை கொண்டது.

    விண்கலத்தின் அனைத்து சோதனைகளும் நிறைவு செய்துள்ளது. ஸ்பேக் எக்ஸ் ராக்கெட் ஏவுதளத்தில் விண்கலம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மனிதர்களை ஏற்றி செல்வதற்காக, அமெரிக்க விண்வெளி துறையின் அனுமதிக்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் காத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

    • குடியிருப்பின் மையப்பகுதியில் குழந்தைகள் விளையாடுவது வழக்கம்
    • சகோதரியின் மொபைலில் அச்சிறுமி உடனடியாக படமெடுத்தார்

    அமெரிக்காவின் தென்கிழக்கின் ஓரத்தில் உள்ளது புளோரிடா மாநிலம்.

    இம்மாநிலத்தில் உள்ள ஆர்லேண்டோ பகுதியில் சமர்செட் அபார்ட்மென்ட்ஸ் எனும் பெரும் குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மையப்பகுதியில் திறந்தவெளியில் உள்ள பூங்காவில் அங்குள்ள குழந்தைகள் விளையாடுவது வழக்கம்.

    இங்குள்ள ஒரு வீட்டில் தனது பாட்டியின் பராமரிப்புக்காக கார்லோஸ் ரிவெரா லூசியானோ எனும் 46 வயது ஆண் சென்றிருக்கிறார். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் கண்ணாடி கதவின் வழியாக ஒரு 5 வயது சிறுமி தென்பட்டிருக்கிறாள். அவளை பார்த்து லூசியானோ, காற்றில் முத்தங்களை பறக்க விட்டார். பிறகு தன் உடலை ஆபாசமாக வெளிப்படுத்தும் செய்கைகளிலும் ஈடுபட்டார்.

    இச்செயலை அச்சிறுமி தனது சகோதரியின் மொபைல் போனில் கார்லோசிற்கு தெரியாமல் புத்திசாலித்தனமாக உடனடியாக வீடியோ படம் பிடித்தார். இந்த வீடியோவை கண்ட அச்சிறுமியின் தாயார் அதிர்ச்சியடைந்து, உடனே அமெரிக்காவில் அவசர உதவிக்கான எண்ணான 911-ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர், அந்த வீடியோவை கண்டு அதில் உள்ள கார்லோசின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். மேலும், அவர்கள் அந்த குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்து பெற்றோர்களிடமும் விழிப்புணர்வுக்காக இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.

    இக்குற்றச்சாட்டை மறுத்த கார்லோஸ் தன்னிடமும் இது குறித்த வீடியோ உள்ளதாக கூறினார். ஆனால், அவரால் காவலர்களிடம் எந்த வீடியோவும் சமர்ப்பிக்க முடியவில்லை. இதனையடுத்து அவர் ஆரஞ்ச் கவுன்டி சிறையில் அடைக்கப்பட்டார்.

    அந்த 5-வயது சிறுமியின் புத்திசாலித்தனத்தை அங்குள்ள பலரும் பாராட்டி வருகின்றனர்.

    • இன்னொசென்ஸ் ப்ராஜெக்ட் எனும் அமைப்பு 1992ல் உருவாக்கப்பட்டது
    • 1975ல் டி.என்.ஏ. பரிசோதனை முறை கண்டுபிடிக்கப்படவில்லை

    அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ளது வெஸ்ட்செஸ்டர் கவுன்டி பகுதி.

    1975-ல் 18 வயதிற்கு உட்பட்ட ஒரு சிறுமி மற்றொரு சிறுமியுடன் பள்ளியில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒருவன் அவர்களை வழிமறித்து, அந்த சிறுமியை கடத்தி, பாலியல் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றான்.

    இச்சம்பவம் குறித்து அந்த சிறுமி தெரிவித்த அடையாளங்களை கொண்டு பெரும்பாலும் வெள்ளையின மக்கள் வசிக்கும் அப்பகுதியில் இருந்த லியோனார்டு மேக் எனும் அமெரிக்க ஆப்பிரிக்க இனத்தை சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு நீண்ட கால சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    அமெரிக்காவில் சிறையில் தவறான காரணங்களுக்காக அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு உதவ, அந்நாட்டில் 1992-ல் "இன்னொசென்ஸ் ப்ராஜெக்ட்" எனும் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. இவர்கள் மேக் சம்பந்தப்பட்ட பாலியல் வழக்கை கையிலெடுத்து விசாரித்தனர்.

    மேக் வழக்கு விசாரணை செய்யப்பட்ட காலகட்டத்தில் குற்றவியல் விசாரணை முறையில் மரபணு (DNA) பரிசோதனையும், அது தொடர்பான தடயங்கள் நீதிமன்றங்களில் பரிசீலிக்கப்படுவதும் வழக்கத்தில் இல்லை.

    அதனால், இவ்வழக்கை எடுத்த இன்னொசென்ஸ் ப்ராஜெக்ட் அமைப்பு மரபணு பரிசோதனையின் மூலம் 1975-ல் சிறுமியிடம் பாலியல் தாக்குதல் நடத்தியது லியோனார்டு மேக் அல்ல என கண்டறிந்தது. இதன் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் மேக் விடுதலை செய்யப்பட்டார்.

    செய்யாத குற்றத்திற்கு 47 வருட சிறை தண்டனை அனுபவித்து தற்போது குற்றமற்றவர் என நிரூபணம் ஆகி விடுதலை ஆனது குறித்து மேக், "இறுதியாக நான் சுதந்திரம் பெறுகிறேன்" என தெரிவித்துள்ளார்.

    • நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவரில் இருந்து எடுக்கப்பட்ட முப்பரிமாண வடிவ புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டது.
    • எல்ஆர்ஓ விண்கலம் நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் -3 லேண்டரை சமீபத்தில் படம்பிடித்தது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முயற்சியால் (இஸ்ரோ) சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதனைச் சாதித்த முதல் நாடு என்ற பெருமையை நமது நாடு கொண்டாடி வருகின்றது.

    விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலனின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொண்டது.

    இந்த ஆய்வின் மூலம் நிலவில் இரும்பு, அலுமினியம், சல்பர் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை கண்டறிந்து பிரக்யான் ரோவர் உறுதி செய்தது.

    சமீபத்தில், நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவரில் இருந்து எடுக்கப்பட்ட முப்பரிமாண வடிவ புகைப்படத்தை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.

    இந்தப் புகைப்படத்தை சிவப்பு மற்றும் சியான் எனப்படும் நீல நிற கண்ணாடிகள் மூலம் முப்பரிமாண வடிவத்தில் பார்க்கலாம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 இருப்பதை நாசா செயற்கைக்கோள் படம்பிடித்துள்ளது.

    அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் (எல்ஆர்ஓ) சமீபத்தில் சந்திரயான் -3ன் லேண்டரின் புகைப்படத்தை பிடித்தது. இந்த படம் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி அன்று எல்ஆர்ஓ-ஆல் எடுக்கப்பட்டது.

    இந்த படத்தை டுவிட்டரில் பகிர்ந்த நாசா,"எல்ஆர்ஓ விண்கலம் நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் -3 லேண்டரை சமீபத்தில் படம்பிடித்தது.

    சந்திரயான் 3 தரையிறங்கிய நான்கு நாட்களுக்குப் பிறகு லேண்டரின் சாய்ந்த பார்வையை (42-டிகிரி ஸ்லூ ஆங்கிள்) எல்ஆர்ஓ கேமரா படம் பிடித்தது. ராக்கெட் ப்ளூம் நுண்ணிய ரேகோலித் (மண்) உடன் தொடர்புகொள்வதால் லேண்டரைச் சுற்றி பிரகாசமான ஒளிவட்டம் தெரிந்தது" என்றது.

    ×