என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என்று அழைத்தார்.
    • அவர் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கூறி வந்தனர்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவித்தார். துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் களம் காண்கிறார். குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார். துணை அதிபர் வேட்பாளராக ஜேடி வேன்ஸ் அறிவிக்கப்பட்டார்.

    மீண்டும் அதிபர் தேர்தலில் களம் காணும் ஜோ பைடனுக்கு துவக்கம் முதலே அமோக வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும், அவரது உடல்நிலையும் அவருக்கு எதிராக இருந்தது. டிரம்ப் உடனான நேரடி விவாதத்தில் இந்த விஷயம் பொதுவெளியில் அம்பலமானது. டிரம்ப் உடன் பேசும் போது தடுமாறிய பைடன், அதன்பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என்று அழைத்தார்.

    இதோடு துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸை டிரம்ப் என்று அழைத்தார். இந்த சம்பவங்கள் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஜோ பைடனுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுவதை தொடர்ந்து அவர் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று ஜனநாயக கட்சியினர் தொடர்ந்து கூறி வந்தனர்.

    இந்த நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். மேலும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை முன்மொழிவதாக ஜோ பைடன் தெரிவித்தார்.

    இது தொடர்பான எக்ஸ் தள பதிவில், "ஜனநாயக கட்சியினரே, எனது வேட்புமனுவை ஏற்க வேண்டாம். எஞ்சியிருக்கும் பதவிக்காலம் முழுக்க அதிபராக எனது கடமைகளில் முழு ஆற்றலை செலுத்த முடிவு செய்துள்ளேன்."

    "இந்த ஆண்டு தேர்தலில் எங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ்-க்கு என் முழு ஆதரவு, ஒப்புதலை வழங்குகிறேன். ஜனநாயகவாதிகள் ஒன்றுகூடி டிரம்ப்-ஐ தோற்கடிக்க வேண்டிய நேரம் இது. இதை செய்வோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தையின் தாய் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
    • வீடியோ இன்ஸ்டாகிராமில் சுமார் 3 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.

    பொதுவாக குழந்தைகள் பிறக்கும் போது பல் இருக்காது. குழந்தை வளரும் போது பற்களும் வளர ஆரம்பிக்கும். சராசரியாக ஒரு நபருக்கு ஞானப்பல் உள்பட 32 பற்கள் வெளிவர 21 வருடங்கள் ஆகும். பற்களின் வளர்ச்சியில் பல்வேறு காரணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு குழந்தை பிறக்கும் போதே முழுமையாக 32 பற்களுடன் பிறந்துள்ளது. இந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு பெண், தனது பெண் குழந்தையின் 32 பற்கள் கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    அதில், அந்த குழந்தைக்கு நேர்த்தியான பற்கள் இருக்கிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தையின் தாய் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ நிகாதிவா அன்னோ என்ற பயனரின் இன்ஸ்டா கணக்கில் பகிரப்பட்டுள்ளது.

    அரிய நோய் பாதிப்பு காரணமாக பிறக்கும் போதே 32 பற்கள் இருந்ததாகவும், இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே வீடியோவை பகிர்ந்ததாகவும் குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார். பிறக்கும் போதே இவ்வாறு பற்களுடன் பிறக்கும் குழந்தைகளின் பிரச்சினையை நேட்டல் டீத் என்று சொல்வார்கள். நீண்ட காலமாக இந்த நேட்டல் பற்கள் பிரச்சனையுடன் பிறந்த குழந்தைகளுக்கு 4 முன் பற்கள், தாடையில் 4 முதல் 6 பற்கள் மற்றும் பலவற்றின் எடுத்துக்காட்டுகள் உள்ளன.

    இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் சுமார் 3 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.

    • டிரம்ப் மீது மேத்யூ என்ற இளைஞர் துப்பாக்கி சூடு நடத்தினார்.
    • டிரம்பின் வலது காதில் காயம் ஏற்பட்டு, நூலிழையில் உயிர் தப்பினார்.

    அமெரிக்காவில் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சிக்கான வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட டிரம்ப் மீது மேத்யூ என்ற இளைஞர் துப்பாக்கி சூடு நடத்தினார்.

    இதில் டிரம்பின் வலது காதில் காயம் ஏற்பட்டு, நூலிழையில் உயிர் தப்பினார். இந்நிலையில், துப்பாக்கி சூட்டிற்கு பிறகு மிச்சிகனில் உள்ள கிராண்ட் ரேபிட்ஸில் தனது முதல் பிரசார பேரணியில் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது, "ஜனாதிபதியாக இருந்தபோது சீனா மீதான பொருளாதாரக் கொள்கையைப் பற்றி விவாதித்தோம். துப்பாக்கி சூடு பற்றி அறிந்ததும், சீன அதிபர் ஜி ஜின்பிங் என்ன நடந்தது என்று நலம் விசாரித்தார்."

    "இது குறித்து ஜி ஜின் பிங் எனக்கு ஒரு அழகான கடிதம் எழுதினார். நான் ஜனாதிபதி ஜி ஜின் பிங்குடன் மிகவும் நன்றாகப் பழகினேன்" என்று கூறினார்.

    • சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • லாரி டிரைவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் கவினுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் கவின் தசூர். இவருக்கு வயது 29. கவின் 2016 முதல் அமெரிக்காவில் வசித்து வந்தார். 2018 இல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்த பிறகு, சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

    இதனிடையே, மெக்சிகன் வம்சாவளியைச் சேர்ந்த சிந்தியா என்ற பெண்ணை கடந்த ஜூன் மாதம் 29-ந்தேதி திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், திருமணம் ஆகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், கவின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 16-ந்தேதி குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த கவின், மீண்டும் வீட்டுக்கு தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முந்தி செல்வது தொடர்பாக லாரி டிரைவருக்கும், கவினுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது லாரி டிரைவர், கவின் மீது அவரது மனைவி கண்முன்னே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் கவின் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, போலீசார் விசாரணை குறித்து குற்றம்சாட்டிய குடும்பத்தினர், லாரி டிரைவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் கவினுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனிடையே, ஜூலை 29 ஆம் தேதி கவின் இந்தியா திரும்புவார் என்று குடும்பத்தினர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், இப்போது அவரது தாயார் கவினின் சாம்பலை எடுத்துக்கொண்டு ஆக்ராவுக்குத் திரும்புவார் என்று குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்தனர்.

    • ஜோ டைபனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து டெலாவேரில் உள்ள ரெஹோபோத் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
    • இருப்பினும் அவருக்கு உடல் தளர்வு, இருமல், தொண்டை கரகரப்பு உள்ளது.

    இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் 81 வயதான ஜோ பைடன் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக களமிறங்குகிறார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அதிபர் ஜோ டைபனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து டெலாவேரில் உள்ள ரெஹோபோத் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

    இந்நிலையில், ஜோ பைடன் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருவதாகவும், அதிபருக்கான கடமைகளை தொடர்கிறார் என்று வெள்ளை மாளிகை மருத்துவர் கூறியுள்ளார்.

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் பைடன், கொரோனாவுக்கான 6-வது டோஸ் கோவிட் எதிர்ப்பு மாத்திரையை உட்கொண்டுள்ளார். இருப்பினும் அவருக்கு உடல் தளர்வு, இருமல், தொண்டை கரகரப்பு உள்ளது. அவரது நாடித்துடிப்பு, இரத்த அழுத்தம், சுவாச விகிதம் மற்றும் வெப்பநிலை அனைத்தும் சாதாரண வரம்புகளுக்குள் உள்ளது என்று மருத்துவர் கெவின் சி ஓ கானர் கூறினார்.

    முன்னதாக அதிபர் பைடன் அளித்த ஒரு பேட்டியில், தனக்கு ஏதேனும் அவசர மருத்துவ கோளாறு ஏற்படும் பட்சத்தில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குடியரசு கட்சிக்கான வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.
    • டிரம்ப் மீது நடந்த படுகொலை முயற்சிக்கான தாக்குதலுக்கு ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சிக்கான வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இந்தத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு வெளிநாட்டு தலைவர்களிடம் டொனால்டு டிரம்ப் ஆதரவு கேட்டு பேசி வருகிறார்.

    இந்நிலையில், அதிபர் வேட்பாளரான டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசி வழியே பேசினார்.

    இதுதொடர்பாக டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடக செய்தியில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், நானும் தொலைபேசி வழியே பேசிக் கொண்டோம். எங்களுடைய உரையாடல் நன்றாக இருந்தது.

    அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சிக்கான வேட்பாளராக நியமிக்கப்பட்டதற்காக எனக்கு அவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

    என்னை தொடர்பு கொண்டதற்காக அதிபர் ஜெலன்ஸ்கியை பாராட்டுகிறேன். அடுத்த அமெரிக்க அதிபராக உலகத்திற்கு நான் அமைதியை கொண்டு வருவேன்.

    பல உயிர்களை பலி வாங்கி, எண்ணற்ற குடும்பத்தினரை துன்பத்தில் ஆழ்த்திய போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என

    பதிவிட்டுள்ளார்.

    இந்த உரையாடலின்போது டிரம்ப் மீது நடந்த படுகொலை முயற்சிக்கான தாக்குதலுக்கு ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 81 வயதாகும் நிலையில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் நிலையில் பைடன் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
    • பைடன் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக நின்று பேசிக் கொண்டிருக்கிறார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் களம் இறங்கி உள்ளார்.

    81 வயதாகும் நிலையில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் நிலையில் பைடன் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். அதற்கு ஏற்றாற்போல் அண்மைக்காலமாக அவருடைய நடவடிக்கைகள் அமைந்து வருகின்றன.

    ஜனாதிபதி தேர்தலையொட்டி டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் பைடன் பேசுவதற்கு மிகவும் தடுமாறினார். அதேபோல் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என்றும், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசை டிரம்ப் என்றும் தவறுதலாக கூறினார்.

    இந்த சம்பவங்கள் ஜனநாயக கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதை தொடர்ந்து, பைடன் போட்டியில் இருந்து விலக வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. ஆனால் தேர்தலில் போட்டியிடுவேன் என பைடன் பிடிவாதமாக உள்ளார்.

    இந்த நிலையில் ஜோ பைடன் தனது மனைவி என நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்ற சம்பவம் அவரது மனநலம் குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், பைடன் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக நின்று பேசிக் கொண்டிருக்கிறார். பின்னர் அந்த பெண்ணின் உதட்டில் முத்தம் கொடுக்க செல்கிறார். அப்போது பைடனின் மனைவி பதற்றத்துடன் ஓடி வந்து பைடனை தடுத்து அவருக்கு புரிய வைக்கிறார். அதன் பின்னர் பைடன் அதிர்ச்சியுடன் அங்கிருந்து நகர்ந்து செல்கிறார்.

    இந்த வீடியோ நெட்டிசன்களிடையே பெரும் விவாதங்களை உண்டாக்கி உள்ளது. பலரும் பைடனின் இந்த செயலை விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    • குடியரசு கட்சியின் தேசிய மாநாடு விஸ்கான்சின் மாகாணத்தின் மில்வாக்கி நகரில் கடந்த 15-ந்தேதி தொடங்கியது.
    • துப்பாக்கிச்சூட்டில் ஏற்பட்ட காயத்துக்காக டிரம்ப் தனது வலது காதில் ‘பேண்டேஜ்’ போட்டிருந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், கடந்த 13-ந்தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தாமஸ் மேத்யூ என்ற இளைஞர் டிரம்பை கொலை செய்யும் நோக்கில் துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒரு தோட்டா டிரம்பின் வலது காதை உரசி சென்றது. இதில் அவரது காதின் மேல் பகுதி கிழிந்து ரத்தம் கொட்டியது. துப்பாக்கிச்சூட்டில் நூலிழையில் உயிர் தப்பிய டிரம்ப், பாதுகாப்பு படையினரால் பத்திரமாக அழைத்து செல்லப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதனிடையே குடியரசு கட்சியின் தேசிய மாநாடு விஸ்கான்சின் மாகாணத்தின் மில்வாக்கி நகரில் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. இந்த மாநாட்டில் டிரம்ப் கலந்து கொண்டார். அப்போது அவர் துப்பாக்கிச்சூட்டில் ஏற்பட்ட காயத்துக்காக வலது காதில் 'பேண்டேஜ்' போடப்பட்டிருந்தார். 'பேண்டேஜ்' உடன் அவர் மாநாட்டில் பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின.

    இந்த நிலையில் மாநாட்டின் நிறைவையொட்டி நேற்று முன்தினம் டிரம்ப் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். அவரது உரையை கேட்பதற்காக அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டனர். அவர்களில் பலர் வினோதமான முறையில் டிரம்புக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டில் ஏற்பட்ட காயத்துக்காக டிரம்ப் தனது வலது காதில் 'பேண்டேஜ்' போட்டிருந்த நிலையில், அவரின் ஆதரவாளர்கள் பலரும் தங்களின் வலது காதில் 'பேண்டேஜ்' போட்டுக் கொண்டு மாநாட்டில் பங்கேற்றனர்.

    படுகொலை முயற்சியில் இருந்து தப்பிய டிரம்ப் உடனான ஒற்றுமையின் அடையாளமாகவும், நாங்கள் அவரை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை அவருக்கு தெரியப்படுத்துவதற்காகவும் காதில் 'பேண்டேஜ்' அணிந்துள்ளதாக டிரம்பின் ஆதரவாளர்கள் கூறினர்.

    • துப்பாக்கிச் சூட்டுக்கு பின் நேற்று[ஜூலை 18] நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் டிரம்ப் கட்சியினரிடையே மனம் திறந்துள்ளார்.
    • குடியரசுக் காட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர் தங்களது காதில் டிரம்பைப் போல் கட்டு போட்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    அமரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கியுள்ளார் டிரம்ப். கடந்த வாரம் பென்சில்வேனியாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டது. தலையை சற்று அசைத்ததால் குண்டு அவரது வலது காதின் மேற்பகுதியை உரசிச் சென்றது. நூலிழையில் டிரம்ப் உயிர்தப்பிய நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய தாமஸ் க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டான். டிரம்புக்கு அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரி  கோரி காம்ப்ரேட்டோர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தார்.

     

     

    இந்நிலையில்  துப்பாக்கிச் சூட்டுக்கு பின் நேற்று[ஜூலை 18] நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் டிரம்ப் கட்சியினரிடையே மனம் திறந்துள்ளார். குடியரசுக் கட்சியின் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டபின் மாநாட்டில் பேசிய அவர், இன்றுதொட்டு நான்கு மாதத்தில் [அதிபர் தேர்தலில்] நம் மிகப்பெரிய வெற்றியை பெற உள்ளோம். நான் முழு அமெரிக்காவுக்கும் அதிபர், பாதி அமெரிக்காவுக்கு மட்டுமல்ல என்று தெரிவித்தார்.

    மேலும் துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து விவரித்த அவர், 'எல்லா இடங்களிலும் ரத்தம் சிந்திக்கொண்டிருந்தது, இருந்தபோதிலும் நான் மிகவும் பாதுகாப்பாகவே உணர்ந்தேன். கடவுள் என் பக்கம் இருக்கிறார். கடைசி நொடியில் நான் எனது தலையை அசைக்காமல் இருந்திருந்தால் தோட்டா குறிவைக்கப்பட்ட எனது நெற்றியில் பாய்ந்திருக்கும். இன்று உங்கள் முன்னாள் நான் இருந்திருக்க மாட்டேன்.

     

    நான் இங்கு இருந்திக்க வேண்டியவனே இல்லை. ஆனால் கடவுளின் கருணையால் இங்கு உங்கள் முன் நிற்கிறேன்' என்று தெரிவித்தார்.மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்த பாதிகாப்பு வீரருக்கு  டிரம்ப் அஞ்சலி செலுத்தினார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற குடியரசுக் காட்சியைச் சேர்ந்தவர்கள் தங்களது காதில் டிரம்பைப் போல் கட்டு போட்டிருந்தது அனைவரின் கவனத்தையும்  ஈர்த்து வருகிறது. முன்னதாக   ஒடிசா மாநிலம் பூரியிலுள்ள கடவுள் ஜகந்நாதர்தான் டிரம்ப்பின் உயிரைக் காப்பாற்றினார் என்று கோவில் பூசாரி சொன்னது குறிப்பிடத்தக்கது.

    • பாப் நியூஹார்ட் டெட்பான் [Deadpan] எனப்படும் காமடி வகைக்கு பேர் போனவர் ஆவர்
    • 1970 மற்றும் 80 களில் தொலைக்காட்சி சிட்காம்களில் கொடிகட்டிப் பறந்தார் பாப் நியூஹார்ட்.

    அமெரிக்காவைச் சேர்ந்த 94 வயதாகவும் பிரபல ஸ்டான்ட் அப் காமெடியன் பாப் நியூஹார்ட் உயிரிழந்துள்ளார். சிகாகோவைச் சேர்ந்த பாப் நியூஹார்ட் டெட்பான் [Deadpan] எனப்படும் காமடி வகைக்கு பேர் போனவர் ஆவர். அவரது டெட்பான் வகை நகைச்சுவைகள் அவரை உச்சபட்ச தொலைக்காட்சி நட்சத்திரமாக மாற்றியது.

     

    1929 செப்டம்பர் 5 இல் இல்லினோய்ஸ் புறநகரில் பிறந்த பாப் நியூஹார்ட் வணிக மேலாண்மையில் பட்டம் பெற்று அதன்பின் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தார். கொரிய போரில் பணியாற்றிய அவர் நாடு திரும்பியபின் சட்டப்படிப்பில் சேர்ந்தார். ஆனால் படிப்பை இடையிலேயே கைவிட்டுவிட்டு அக்கவுன்டன்டாக தனது பணியை தொடங்கிறார்.

    ஆனால் சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்ட பாப் நியூஹார்ட் இடையிடையே காமெடி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தனது திறமையை வெளிக்காட்டி வந்தார். அதன்பின் கவனம் பெற்ற அவர், வார்னர் ப்ரோஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து காமெடி  ஆல்பங்களை வழங்கத் தொடங்கினார். நியூஹார்ட்டின் "The Button-Down Mind of Bob Newhart" காமெடி ஆல்பம் அவருக்கு பபுகழைத் தேடித் தந்தது.

    1970 மற்றும் 80 களில் தொலைக்காட்சி சிட்காம்களில் கொடிகட்டிப் பறந்தார் பாப் நியூஹார்ட். 90 களில் நடந்த நிகழ்ச்சிகளில் சிறப்பு தோற்றங்களில் தோன்றினார். பிரபல சீரிசான பிக் பாங் தியரியிலும்  சிறப்பு தோற்றத்தில் பாப் நடித்துள்ளார். இந்நிலையில் அவரது மறைவு அமெரிக்க ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

     

    • வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
    • அதிபர் உடல்நிலை சரியாக வேண்டும்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த வாரம் அமெரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, வாஷிங்டனில் வைத்து அதிபர் பைடனை சந்திக்கலாம்.

    எனினும், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் அதிபர் பைடனின் உடல்நிலையை பொருத்தே இதுபற்றிய இறுதி முடிவு எட்டப்படும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

    "பிரதமர் நேதன்யாகு நகரில் இருக்கும் போது, இருநாட்டு தலைவர்களும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். எனினும், தற்போதைய சூழலில் எதையும் உறுதியாக கூறிவிட முடியாது. அதிபர் உடல்நிலை சரியாக வேண்டும், அவருக்கு கொரோனா பாதிப்பு குணமடைய வேண்டும்," என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

    இரு நாட்டு தலைவர்கள் சந்திக்கும் பட்சத்தில் இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் போர் குறித்த ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக அதிபர் பைடன் ஹமாஸ் உடன் அமைதி ஒபந்தத்தை ஏற்படுத்த வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

    • 2022-ம் ஆண்டு டைனோசரின் புதைப்படிவம் கண்டுபிடிக்கப்பட்டது.
    • நியூயார்க்கில் உள்ள சோதேபிஸ் ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது.

    நியூயார்க்:

    அமெரிக்காவில் டைனோசர் எலும்புக்கூடு ரூ.372 கோடிக்கு ஏலம் போய் இருக்கிறது. மேற்கு அமெரிக்க மாகாணமான கொலராடோவில் மோரிசன் அகழ்வாராய்ச்சி தளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு தாவரத்தை உண்ணும் ஸ்டெகோசொரஸ் என்ற டைனோசரின் புதைப்படிவம் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதை ஜேசன் கூப்பர் என்பவர் கண்டுபிடித்தார். இந்த டைனோசருக்கு அபெக்ஸ் என்று பெயரிடப்பட்டது. ஸ்டெகோசொரஸ் டைனோசர் 11 அடி உயரமும், மூக்கிலிருந்து வால் வரை 27 அடி நீளமும் கொண்டது. இந்த டைனோசரின் எலும்புக்கூடு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சோதேபிஸ் ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது.

    இதில் 7 பேர் பங்கேற்று ஏலம் கேட்டனர். இதில் டைனோசரின் எலும்புக்கூடு 44.6 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ( இந்திய மதிப்பில் ரூ. 372 கோடி) ஏலம் போனது. இதற்கு முன்பு கடந்த 2020-ம் ஆண்டு ஸ்டான் என்று அழைக்கப்படும் டி ரெக்ஸ் என்ற டைனோசரின் எலும்புக்கூடு ரூ.265 கோடிக்கு ஏலம் போயிருந்தது. அதை அபெக்ஸ் முறியடித்தது.

    இதுகுறித்து சோதேபிஸ் ஏல நிறுவனம் கூறும்போது, இதுவரை ஏலத்தில் விற்கப்பட்டவற்றில் மிகவும் மதிப்புமிக்க புதைபடிவமாக அபெக்ஸ் உள்ளது. இந்த புதைபடிவம் அதன் விற்பனைக்கு முந்தைய மதிப்பீட்டை விட 11 மடங்கு அதிகமாகும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய ஸ்டீகோசொரஸ் வகை டைனோசரின் புதைபடிவம் இதுவாகும் என்று தெரிவித்தது.

    ×