என் மலர்
உக்ரைன்
- அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்காவுக்கு அழைத்து வெள்ளை மாளிகையில் வைத்து வாக்குவாதம் செய்தார்.
- உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நிறுத்தப்படுவதை தீய ஜெலென்ஸ்கி விரும்பவில்லை
ரஷியா - உக்ரைன் போர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஜோ பைடன் அமெரிக்க அதிபராக இருந்தவரை உக்ரைனுக்கு ஆயுதங்களை கொடுத்து ஆதரித்தார்.
ஆனால் டொனால்டு டிரம்ப் ரஷியா பக்கம் சாய்த்துள்ளார். சமீபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்காவுக்கு அழைத்து வெள்ளை மாளிகையில் வைத்து வாக்குவாதம் செய்தார்.

இந்நிலையில் ஜெலென்ஸ்கிக்கு டொனால்டு டிரம்ப்பின் கூட்டாளி எலான் மஸ்க் பகிரங்க மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், எனது ஸ்டார்லிங்க் அமைப்பு உக்ரைன் ராணுவத்தின் முதுகெலும்பு. நான் அதை நிறுத்தினால், அவர்களின் முழு பாதுகாப்பு அமைப்பும் சரிந்துவிடும்.
மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் உயிரிழப்புகள் மற்றும் காயங்களால் நான் சோர்வடைந்துள்ளேன். உக்ரைன் இந்தப் போரில் தோற்பது உறுதி. ஆனால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நிறுத்தப்படுவதை தீய ஜெலென்ஸ்கி விரும்பவில்லை.
தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஜெலென்ஸ்கி வேண்டுமென்றே அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தாமதப்படுத்துகிறார் என்று தெரிவித்துள்ளார்.
- உக்ரைனின் டோனெட்ஸ்க், கார்கிவ் பகுதிகளில் ரஷியா தாக்குதல் நடத்தியது.
- இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 20 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
கீவ்:
உக்ரைனுக்கு எதிராக ரஷியா தொடுத்த போர் 3 ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. இதில் இருதரப்பிலும் பொதுமக்கள், வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர். காயமடைந்துள்ளனர்.
இதற்கிடையே, உக்ரைனுக்கு முன்னாள் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு ஆதரவளித்து ஆயுதம், நிதியுதவி வழங்கியது. ஆனால் டிரம்ப் தலைமையிலான அரசு உக்ரைனுக்கான ஆதரவில் இருந்து பின்வாங்கி வருகிறது. உக்ரைனுக்கான ராணுவ உதவியை டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு சமீபத்தில் நிறுத்தியது. உக்ரைனுக்கு அளித்துவந்த புலனாய்வு தகவலையும் நிறுத்துவது என அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. டோனெட்ஸ்க் பகுதியில் குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கார்கிவ் மற்றும் ஒடிசா பகுதிகளில் வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகள் கடுமையாக தாக்கப்பட்டன.
பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகம் ஒன்றின் மீது தாக்குதலை தொடுக்க பயன்படுத்தப்பட்டன.
இதுதொடர்பாக, ஜெலன்ஸ்கி டெலிகிராம் பதிவில் வெளியிட்ட செய்தியில், மீட்புக்குழுவினரை இலக்காக கொண்டு ரஷியா மற்றொரு தாக்குதலை உள்நோக்கத்துடன் நடத்தியது. இதுபோன்ற தாக்குதல், ரஷியாவின் இலக்குகள் மாறவில்லை என எடுத்துக் காட்டுகின்றன என தெரிவித்தார்.
- இந்த விஷயங்கள் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்
- பிரதமர் மோடி குறைக்க ஒப்புக்கொண்டதாக டிரம்ப் தெரிவித்தார்.
வரிவிதிப்பு சர்ச்சைக்கு மத்தியில் இந்தியா, ரஷியாவிடம் ஆயுதங்களை வாங்குவதற்கு அமெரிக்கா ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
ரஷியாவின் ஆயுதங்களை இந்தியா சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறினார்.
இந்தியாவில் நடந்த தனியார் செய்தி நிறுவனத்தின் மாநாடு ஒன்றில் அவர் பேசியதாவது, இந்தியா வரலாற்று ரீதியாக ரஷியாவிடமிருந்து தனது இராணுவ உபகரணங்களில் பெரும் பகுதியை வாங்கியுள்ளது.
ரஷியாவிடம் இருந்து இந்தியா ஆயுதங்கள் வாங்குவதை நிறுத்த வேண்டும் - அமெரிக்கா கொடுத்த ஆஃபர்
மேலும் டாலருக்கு மாற்றாக உலகளாவிய நாணயத்தை உருவாக்க பிரிக்ஸ் முயற்சிக்கிறது. இந்த பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா உள்ளது.
இது அமெரிக்க-இந்திய உறவுகளை பலவீனப்படுத்துகிறது. இந்த வகையான விஷயங்கள் அமெரிக்கா - இந்தியா இடையே அன்பையும் பாசத்தையும் உருவாக்குவதில்லை.
இந்த விஷயங்கள் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்க பொருட்களுக்கான வரியை பிரதமர் மோடி குறைக்க ஒப்புக்கொண்டதாக டிரம்ப் நேற்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- இந்தத் தாக்குதல்கள் உக்ரைனின் 13க்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்தன.
- அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் இன்றுடன் (பிப்ரவரி 24) ஆம் தேதியுடன் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யப் போகிறது. ஐரோப்பிய யூனியனின் நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிராக ரஷியா தங்கள் நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற காரணத்தை கூறி ரஷியா 2022இல் போரை தொடங்கியது.
இந்நிலையில் ரஷியா இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய தாக்குதலை உக்ரைன் மீது நடத்தியுள்ளது.
உக்ரைன் அதிகாரிகளின் கூற்றுப்படி, நேற்று ஒரே நாளில் ரஷியா 267 ட்ரோன்களை ஏவியது. இது இதுவரை உக்ரைன் மீது நடந்தேறாத மிகப்பெரிய வான்வழித் தாக்குதலாகும்.
இந்தத் தாக்குதல்கள் உக்ரைனின் 13க்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்தன. அவற்றில் கார்கிவ், பொல்டாவா, சுமி, கீவ், செர்னிஹிவ், மைகோலைவ் மற்றும் ஒடெசா ஆகியவை அடங்கும்.
உக்ரைன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இக்னாட் கூறுகையில், ரஷியா ஏவிய 267 ட்ரோன்களில் 138 இடைமறிக்கப்பட்டன. இருப்பினும், இந்த தாக்குதலின் போது மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் உடன் ஏவி, உக்ரைனின் ஐந்து நகரங்களில் ரஷியா சேதம் விளைவித்தது.
இந்தத் தாக்குதலின் போது, உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பு பல ரஷிய ட்ரோன்களை அழித்தது. உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் இந்த சம்பவத்தின் காணொளியை வெளியிட்டுள்ளது.
முன்னதாக கடந்த சனிக்கிழமை இரவு உக்ரைனின் கிரிவி ரிஹ் நகரில் நடந்த மற்றொரு ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர்.
ரஷியாவின் தாக்குதலை உக்ரைன் அதிபர்ஜெலென்ஸ்கி கண்டித்துள்ளார். கடந்த வாரத்தில் மட்டும் ரஷியா 1,150 ட்ரோன்கள், 1,400 க்கும் மேற்பட்ட வான்வழி வெடிகுண்டுகள் மற்றும் 35 ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசியதாக அவர் தெரிவித்தார்.
உக்ரைன் போருக்கு தீர்வு காண சவுதி அரேபியாவில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அழைக்கப்படவில்லை. இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. உக்ரைனை நேட்டோ நாடுகளுடன் சேர்த்தால் தனது அதிபர் பதவியை விட்டுக்கொடுப்பதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
- போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கு அழைப்பு இல்லை என்றார் அதிபர் டிரம்ப்.
கீவ்:
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிதியுதவி அளித்து வருகின்றன. இரு நாடுகள் இடையிலான போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.
இதற்கிடையே, அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு போர்நிறுத்தம் குறித்த பேச்சுகள் தீவிரமடைந்துள்ளன. ஆனாலும் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கு அழைப்பு இல்லை என டிரம்ப் தெரிவித்தது சர்ச்சையானது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருக்கிறேன் என அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தலைநகர் கீவில் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
உக்ரைனில் அமைதி திரும்ப நான் எனது பதவியை விட்டுத் தரவேண்டும் என்றால் அதற்கு தயாராகவே இருக்கிறேன். உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி கொடுத்தால் அதிபர் பதவியை விட்டு விலகத் தயாராக உள்ளேன்.
உக்ரைனின் நிலைப்பாட்டை டிரம்ப் புரிந்துகொள்ள வேண்டும். ரஷியாவின் தாக்குதலால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, டிரம்ப் ரஷியாவிடம் இருந்து எங்களுக்குப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.
இந்தப் பிராந்தியத்தில் அமைதி திரும்ப உக்ரைனின் கூட்டாளியாக டிரம்ப் இருக்க வேண்டும். இதை டிரம்ப் புரிந்து கொள்வோர் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
- போர் நிறுத்தம் குறித்து நாங்கள் இல்லாமல் ஆலோசிப்பதா?
- பேச்சுவார்த்தை 4 மணி நேரம் நடந்தது.
கீவ்:
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்தது. 3 ஆண்டுகளாக நீடித்து வரும் இப்போரை நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். இதற்கிடையே சவுதி அரேபியாவில் நேற்று அமெரிக்கா, ரஷ்யா உயர் அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் அமெரிக்கா வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபினியோ, ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் ஆகியோர் பங்கேற்றனர். பேச்சு வார்த்தைக்கு உக்ரைன் அழைக்கப்படவில்லை. இந்த பேச்சுவார்த்தை 4 மணி நேரம் நடந்தது.
இதில் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், நல்லுறவை மேம்படுத்துவதற்கும் பணியாற்ற இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. விரைவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் துருக்கிக்கு சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்கா-ரஷியா இடையேயான பேச்சுவார்த்தை குறித்து கூறியதாவது:-
சவுதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் பங்கேற்காததால் அதில் எடுக்கப்படும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட எந்தவொரு பேச்சு வார்த்தையும் நியாயமானதாக இருக்க வேண்டும்.
பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வந்த துருக்கி உட்பட ஐரோப்பிய நாடுகள் இடம்பெற வேண்டும். எங்கள் முதுகுக்குப் பின்னால் யாரும் எதையும் முடிவு செய்யக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம்.
உக்ரைனில் போரை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து உக்ரைன் இல்லாமல் எந்த முடிவும் எடுக்க முடியாது. சவுதி அரேபியாவுக்கு செல்ல முடிவு செய்திருந்தேன். ஆனால் அந்த பயணத்தை மார்ச் 10-ந்தேதி வரை ஒத்திவைத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும் ரஷிய அதிபர் புதினை இந்த மாதத்தில் சந்திப்பேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- தற்போது ரஷியா - உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
- ரஷ்யா ஏவிய 95 டிரோன்களை உக்ரைன் இராணுவம் சுட்டு வீழ்த்தியது
கடந்த 2022-ம் ஆண்டில் இருந்து கடந்த 3 வருடங்களாக ரஷியா - உக்ரைன் போர் நடைபெற்று வருகிறது. போர் தொடங்கியபோது ரஷியா, உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள பல இடங்களை கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ரஷியாவுக்கு எதிராக வலுவாக சண்டையிட ரஷிய பல இடங்களில் பின்வாங்க தொடங்கியது.
தற்போது இரு நாடுகளும் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், மின்சார உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
கடந்த மாதம் ரஷியாவில் உள்ள எண்ணெய் கிடங்குகள், ராணுவ ஆயுத கிடங்குகள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ரஷியாவுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை கீவ் பிராந்தியத்தில் உள்ள செர்னோவில் அணுமின் நிலையம் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
இந்நிலையில், தெற்கு உக்ரைனில் உள்ள ஒரு அனல் மின் நிலையத்தின் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் ரஷ்யா 143 டிரோன்களை ஏவியதாகவும் அதில், 95 டிரோன்களை உக்ரைன் இராணுவம் சுட்டு வீழ்த்தியது என்றும் 46 டிரோன்கள் இலக்கை அடையவில்லை என்றும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
- செர்னோவில் அணுமின் நிலையம் மீது ரஷியா டிரோன் தாக்குதல்.
- கதிரியக்கம் வெளியாகாமல் இருக்க பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள கூரை தீப்பற்றி எரிந்தது.
ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென உக்ரைன் மீது போர் தொடுத்தது. அதில் இருந்து சுமார் மூன்று வருடங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது. போர் தொடங்கியபோது ரஷியா, உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள பல இடங்களை கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ரஷியாவுக்கு எதிராக வலுவாக சண்டையிட ரஷிய பல இடங்களில் பின்வாங்க தொடங்கியது.
தற்போது இரு நாடுகளும் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், மின்சார உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
கடந்த மாதம் ரஷியாவில் உள்ள எண்ணெய் கிடங்குகள், ராணுவ ஆயுத கிடங்குகள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ரஷியாவுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை கீவ் பிராந்தியத்தில் உள்ள செர்னோவில் அணுமின் நிலையம் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
செர்னோபில் அணுமின் நிலையத்தில் உள்ள 4-வது உலையில் இருந்து கதிரியக்கம் வெளியேறாமல் இருக்க கான்கிரீட் கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூரை டிரோன் தாக்குதலுக்கு உள்ளாகி, தீப்பற்றி எரிந்துள்ளது. நல்லவேளையாக, அணு உலையில் இருந்து கதிர்வீச்சு வெளியேறவில்லை. வழக்கமான நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
1986-ம் ஆண்டு இந்த அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது. உலகில் உள்ள அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட மோசமான விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்த விபத்து காரணமாக கதிர்வீச்சு வெளியேறாத வகையில் 4-வது அணு உலைக்கு மேல் பாதுகாப்பிற்கு கான்கிரீட் கூரை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு அணுஉலையில் எஞ்சியிருக்கும் கதிரியக்கம் வெளியேறாத வகையில் இந்த கூரை அமைக்கப்பட்டுள்ளது.
உக்ரைன்- ரஷியா இடையிலான 3 வருட சண்டையில் உக்ரைனில் உள்ள நான்கு அணுமின் நிலையங்களுக்கு ஆபத்து உள்ளதாக எச்சரிக்க விடுக்கப்பட்ட்டள்ளது. இதில் தெற்கு உக்ரைனில் ரஷியா கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஸ்சியா அணுமின் நிலையம் ஐரோப்பியாவில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையமாகும். மேலும், உலகில் உள்ள மிகப்பெரிய 10 அணுஉலைகளில் ஒன்றாகும்.
- உக்ரைனின் பெரிய நகரங்கள் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
- இந்த தாக்குதலில் ஒரு பெண் உள்பட 6 பேர் பலியாகினர்.
கீவ்:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷிய ராணுவம் கைப்பற்றியது.
அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் உக்ரைன் போரை எதிர்கொண்டு வருகிறது.
உக்ரைனின் பெரிய நகரங்களில் ரஷியா டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ரஷிய ராணுவம் உக்ரைனின் பொல்டாவா நகரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இதை தொடர்ந்து இடிந்து விழுந்த கட்டிதத்திலிருந்து சுமார் 22 பேர் மீட்கப்பட்டனர்.
அதேபோல், உக்ரைன் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன் இடிபாடுகளில் விழுந்ததில் 60 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் இன்று மட்டும் 6 பேர் கொல்லப்பட்டனர்.
உக்ரைன் ராணுவமும் பதிலுக்கு ரஷியா மீது டிரோன் தாக்குதல் நடத்தியது. ரஷிய வான் பாதுகாப்புப் படையினர் 9 டிரோன்களை இடைமறித்து தாக்கி அழித்தனர்.
- மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் போரை உக்ரைன் ராணுவம் எதிர்கொண்டு வருகிறது.
- குடியிருப்பில் வசித்திருந்த 120 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
கீவ்:
ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷிய ராணுவம் கைப்பற்றியது. அதே சமயம், மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் போரை உக்ரைன் ராணுவம் எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் உக்ரைனின் பெரிய நகரமாக சுமியில் ரஷியா டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பானது சேதம் அடைந்தது. இருப்பினும் இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். இதனால் அந்த குடியிருப்பில் வசித்திருந்த 120 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
அதேபோல் உக்ரைனின் தெற்கு ஒடேசா பகுதியில், ரஷிய டிரோன்கள் ஒரு மருத்துவமனை மற்றும் இரண்டு அடுக்குமாடி கட்டிடங்களை சேதப்படுத்தியதாக பிராந்தியத் தலைவர் ஓலே கிப்பர் டெலிகிராமில் தெரிவித்துள்ளார். மேலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.
மேலும் இரவு நேரங்களில் ரஷியா ஏவிய 80-க்கும் மேற்பட்ட டிரோன்களை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
ரஷ்யா உக்ரைனில் இரவு முழுவதும் 80-க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவியதாக விமானப்படை தெரிவித்துள்ளது, இவை பொதுவான இரவு நேரத் தாக்குதல்கள். பெரும்பாலான டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
- பதவியேற்றபின் முதல் முறையாக ஸ்டார்மர் தற்போது போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு வருகை தந்துள்ளார்.
- உக்ரைன் நேட்டோ நாடாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இரு நாடுகளுக்கும் 100 ஆண்டு உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது. கடந்த 2022 முதல் ரஷியாவுடன் போர் செய்து வரும் உக்ரைனின் பிரதான கோரிக்கை, நேட்டோ நாடுகளுடன் இணைவதே. இந்நிலையில் உக்ரைனுடன் இங்கிலாந்து செய்துள்ள உடன்படிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்ற நிலையில் கெயர் ஸ்டார்மர் பிரதமர் பதவி ஏற்றார்.
பதவியேற்றபின் முதல் முறையாக ஸ்டார்மர் தற்போது போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு வருகை தந்துள்ளார். நேற்று [வியாழக்கிழமை] கீவ் நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து இரு நாடு நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் இந்த 100 ஆண்டு உடன்படிக்கையை உறுதி செய்துள்ளார்.
இந்த 100 ஆண்டு ஒப்பந்தம் - பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கியதாகும். ஒப்பந்தத்தின் கீழ், லண்டனும் கீவ்-வும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று ஸ்டார்மர் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார். உக்ரைன் எதிர்காலத்தில் நேட்டோ நாடாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

100 ஆண்டு கால ஒப்பந்தத்தின் பல்வேறு கூறுகள் வரும் வாரங்களில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் திங்கட்கிழமை அமெரிக்க அதிபராக பதவியேற்கும் டிரம்ப், உக்ரைனில் மூன்றாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
- சரடோ, ஏஞ்சல்ஸ், பிரியன்ஸ்க், துலா, டார்ஸ்டன் ஆகிய நகரங்கள் மீது தாக்குதல்
- ரஷியா மீது உக்ரைன் நாடு நடத்தி இருக்கும் மிகப்பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
உக்ரைன் நாடு தனது பாதுகாப்புக்காக நேட்டோ அமைப்பில் சேர முயற்சிகள் மேற்கொண்டது. இது தனது நாட்டின் பாதுகாப்புக்கு உகந்ததாக இருக்காது என்று ரஷியா கருதியது. இதனால் உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி ரஷியா அதிரடியாக போர் தொடுத்தது.
உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் கணிசமான நகரங்களை ரஷியா தன் வசப்படுத்திக் கொண்டது. என்றாலும் உக்ரைன் நாட்டு ராணுவம் ரஷியாவை எதிர்த்து தீவிரமாக போரிட்டு வருகிறது. அடிக்கடி இரு நாடுகளும் மாறிமாறி ஏவுகணை தாக்குதல்களை நடத்துகின்றன.
உக்ரைன்- ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உள்பட பல நாடுகள் முயற்சி செய்தன. ஆனால் இதுவரை சமரச தீர்வு எட்டப்படவில்லை. இதனால் 3 ஆண்டுகளாக போர் நீடித்தபடி உள்ளது.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக ரஷியா நாடு மீது உக்ரைன் தனது தாக்குதல் வியூகங்களை மாற்றி உள்ளது. அதன்படி ரஷியாவின் பல ராணுவ நிலைகள் மீது உக்ரைன் நாடு டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. சில டிரோன்கள் ரஷியாவின் உயரமான கட்டிடங்களை பதம் பார்த்தன.
இதையடுத்து தனது பாதுகாப்பை உக்ரைன் பகுதியில் மேலும் பலப்படுத்திய ரஷியா உக்ரைன் மீதான தாக்குதலையும் தீவிரப்படுத்தி வந்தது. இந்தநிலையில் நேற்று ரஷியா மீது உக்ரைன் நாடு திடீர் அதிரடி தாக்குதலை மேற்கொண்டது.
ராணுவ தொழிற்சாலை
ரஷியாவில் உள்ள சரடோ, ஏஞ்சல்ஸ், பிரியன்ஸ்க், துலா, டார்ஸ்டன் ஆகிய நகரங்கள் மீது உக்ரைன் நாட்டின் ஏவுகணைகள் நூற்றுக்கணக்கில் சீறிப்பாய்ந்து தாக்கின. திடீரென உக்ரைன் ஏவுகணைகள் இத்தகைய பலமுனை தாக்குதலை நடத்தும் என்று ரஷியா எதிர்பார்க்கவில்லை.
என்றாலும் சுதாரித்துக் கொண்ட ரஷிய ராணுவம் பதிலடி தாக்குதலை நடத்தியது. நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய இந்த தாக்குதல்கள் நடந்தன.

உக்ரைன் ஏவுகணைகள் ரஷியாவின் ராணுவ தொழிற்சாலையை தாக்கி அழித்ததாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த ராணுவ தொழிற்சாலை பீரங்கி, வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகள் தயாரிக்கும் பெரிய தொழிற்சாலை ஆகும்.
ஆனால் ராணுவ தொழிற்சாலைக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று ரஷியா கூறி உள்ளது.
எண்ணை கிடங்கு
அதுபோல ரஷியாவின் விமான எரிபொருள் சேமிப்பு நிலையமான எண்ணை கிடங்கு மீதும் உக்ரைன் குறி வைத்து ஏவுகணைகளை வீசியது. இதில் எண்ணை கிடங்கு தீப்பற்றி எரிந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ஆனால் அந்த எண்ணை கிடங்கை நோக்கி வந்த ஏவுகணைகளை நடுவழியில் மறித்து அழித்து விட்டதாக ரஷியா அறிவித்துள்ளது. இந்த எண்ணை கிடங்கு உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்துக்கு முக்கிய பங்களிப்பு செய்து வருகிறது.
ரஷியாவின் குண்டு வீசும் போர் விமானங்களுக்கு எரிபொருள் வினியோகம் முழுமையாக இந்த எண்ணை கிடங்கில் இருந்துதான் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரிய தாக்குதல்
கடந்த சில மாதங்களில் ரஷியா மீது உக்ரைன் நாடு நடத்தி இருக்கும் மிகப்பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த தாக்குதல் காரணமாக ரஷியாவின் சில நகரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன.
இந்த தாக்குதல் தங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று ரஷியா இன்று மீண்டும் அறிவித்தது.
உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்த போவதாகவும் ரஷியா கூறி உள்ளது. இதனால் ரஷியா- உக்ரைன் போரில் மீண்டும் பதட்டம் எழுந்துள்ளது.






