என் மலர்tooltip icon

    உலகம்

    • நோய்க்கான பல சிகிச்சை முறைகளிலும் நோயாளிகளுக்கு வலி குறைவதில்லை
    • வலியற்ற கேன்சர் சிகிச்சை முறைகள் குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன

    உலகெங்கும் உள்ள மக்களை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று, கேன்சர் (cancer) எனப்படும் புற்றுநோய்.

    உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படக் கூடிய கேன்சர் நோய்க்கு, நவீன மருத்துவத்தில் பல சிகிச்சை முறைகளும், மாத்திரைகளும், மருந்துகளும் உள்ளதால் நோயை கட்டுக்குள் வைக்க முடிகிறது.

    ஆனால், இத்தகைய சிகிச்சை முறைகளில் நோயாளிகளுக்கு வலி அதிகம் இருப்பது தவிர்க்க முடியாததாக இருந்து வருகிறது.

    கேன்சர் நோய் தீர்க்கும் வழிமுறைகள் மற்றும் வலியற்ற சிகிச்சை முறைகள் குறித்து உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், இங்கிலாந்தின் "கிழக்கு சஃபோல்க் மற்றும் வடக்கு எஸ்ஸெக்ஸ்" (East Suffolk and North Essex) பகுதியில் தேசிய சுகாதார சேவையின் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் (NHS Foundation Trust) எனும் லாப நோக்கமற்ற அமைப்பு கேன்சர் நோயாளிகளுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் கேன்சர் நோய்க்கான சிகிச்சை அளித்து வருகிறது.

    இந்த அமைப்பை சார்ந்த மருத்துவர்கள் தங்கள் ஆய்வில் "லைட் தெரபி" (light therapy) எனப்படும் "ஓளி சிகிச்சை" மூலம் கழுத்து மற்றும் தலை (head and neck) கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதெரபி (மருந்து சிகிச்சை) மற்றும் ரேடியோதெரபி (கதிரியக்க சிகிச்சை) ஆகியவற்றின் பக்கவிளைவாக ஏற்படும் வலி, பெருமளவு குறைவதை கண்டுபிடித்துள்ளனர்.

    பிற தெரபிகளின் பக்க விளைவாக வாய் பகுதியில் ஏற்படும் வலியை "லைட் தெரபி" குறைக்கிறது.

    "ஃபோட்டோ பயோ மாடுலேஷன்" (Photo Bio Modulation) சிகிச்சை எனப்படும் பிபிஎம் (PBM) பெற்று கொண்ட நோயாளிகளுக்கு வலி நிவாரண மருந்துகள் தேவைப்படுவதில்லை என தெரிய வந்துள்ளது.

    சீராக அகச்சிவப்பு ஓளியை (infrared light) வாய் பகுதியில் பாய்ச்சுவதன் மூலம் வாய் புண் மற்றும் வலி குறைந்துள்ளது.

    "பிற சிகிச்சைகளினால் ஏற்பட்ட வாய் புண் குறையாமல் இருந்தது. அதன் காரணமாக திரவ உணவு மட்டுமே உட்கொள்ளும் நிலை இருந்து வந்தது. மேலும், நாவினால் எந்த சுவையையும் அறிய முடியவில்லை. ஆனால், பிபிஎம் சிகிச்சை நிம்மதியான அனுபவத்தை கொடுத்தது" என ஒரு நோயாளி தெரிவித்தார்.

    வரும் மாதங்களில், பிபிஎம் சிகிச்சையின் பரவலான பயன்பாடு குறித்து மேலும் தகவல்கள் வெளிவரலாம்.

    • பாலத்தில் 20 டன் சுமை வரை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டது
    • சம்பவம் குறித்து அந்த கப்பலின் கேப்டன் விசாரிக்கப்பட்டு வருகிறார்

    சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள நகரம், குவாங்சோ (Guangzhou). முக்கிய துறைமுக நகரமான இது, பெர்ல் நதியின் (Pearl River) டெல்டா பகுதியில் உள்ளது.

    2004ல் குவாங்சோ பகுதியில் நான்ஷா (Nansha) மாவட்டத்தில் கப்பல்களில் சரக்குகளை ஏற்றி இறக்கும் தளம் ஒன்று உருவானது.

    2021லேயே அங்குள்ள லிக்சின்சா (Lixinsha) பாலத்தில் கப்பல்கள் மோதாத வண்ணம் சீரமைக்க அப்பிராந்திய அதிகாரிகள் முடிவெடுத்தனர். ஆனால், சீரமைக்கும் பணிகள் பல காரணங்களுக்காக அது தள்ளி போடப்பட்டு வந்தன.

    2020ல், 20 டன் வரை எடையுள்ள சுமையுடன் அந்த பாலத்தை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.

    இந்நிலையில், போசான் (Foshan) பகுதியிலிருந்து குவாங்சோ நோக்கி சென்ற ஒரு கப்பல், அந்த பாலத்தின் கீழே செல்லும் போது எதிர்பாராத விதமாக அதன் மீது மோதியது.


    இதில் அப்பாலத்திலிருந்து ஒரு பேருந்து உட்பட 5 வாகனங்கள் தண்ணீரில் விழுந்தன.

    இச்சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்; ஒருவர் காயமடைந்தார். மேலும், 3 பேர் காணவில்லை. அவர்களை தேடும் பணிகள் நடைபெறுகிறது.

    இந்த மோதலால், பாலத்தின் ஒரு பகுதி உடைந்தது. பாலத்தின் உடைந்த பகுதிக்கு அருகே அந்த கப்பல் கீழே சிக்கிக் கொண்டது.

    விபத்தில் சிக்கிய அந்த கப்பலில் சரக்கு ஏதும் கொண்டு செல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இச்சம்பவம் தொடர்பாக, அந்த கப்பலின் கேப்டன் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

    கப்பலை பாலத்தின் கீழிருந்து வெளியே மீட்கும் பணி மும்முரப்படுத்துள்ளது. இதனால், விபத்து நடந்த பகுதியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    • சட்ட விரோதமாக இயங்கி வந்த திறந்தவெளி தங்கச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.
    • விபத்து நடந்த தங்கச் சுரங்கத்துக்கு ஆற்றில் படகில் ஒரு மணி நேரம் பயணம் செய்த பிறகே செல்ல முடியும்.

    கராகஸ்:

    வெனிசுலா நாட்டில் சட்ட விரோதமாக தங்க சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அங்கோஸ்டுரா நகராட்சியில் புல்லா லோகா என்ற இடத்தில் சட்ட விரோதமாக இயங்கி வந்த திறந்தவெளி தங்கச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது தங்கச் சுரங்கத்தில் ஒரு பாதி இடிந்து விழுந்தது. அதில் பல தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். விபத்து நடந்த தங்கச் சுரங்கத்துக்கு ஆற்றில் படகில் ஒரு மணி நேரம் பயணம் செய்த பிறகே செல்ல முடியும். இதனால் மீட்புக் குழுவினர் உடனடியாக செல்ல முடியவில்லை. பின்னர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

    தங்கச் சுரங்கத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 15 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்து இருந்தனர்.அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்னும் சிலர் தங்கச் சுரங்கங்களில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

    வெனிசுலாவில் கடந்த 2016-ம் ஆண்டு,புதிய வருவாய் திட்டமாக, நாட்டின் நடுப்பகுதி முழுவதும் ஒரு பெரிய சுரங்க மேம்பாட்டு மண்டலத்தை அந்நாட்டு அரசாங்கம் நிறுவியது. இதையடுத்து தங்கம், வைரங்கள், தாமிரம் மற்றும் பிற கனிமங்களுக்கான சுரங்க நடவடிக்கைகள் தொடங்கின.மேலும் அந்த மண்டலத்திற்கு வெளியே சட்டவிரோத சுரங்கங்கள் பெருகின என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல்முறையாக மன்னர் சார்லஸ் மற்றும் ரிஷி சுனக் சந்திப்பு நடைபெற்றது.
    • என் துயரத்தை பெரும்பாலான சமயங்களில் குறைத்துள்ளன.

    இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் அந்நாட்டு பிரதமர் ரிஷி சுன்க் நேரில் சந்தித்து பேசினர். மன்னர் சார்லஸ்-க்கு புற்றுநோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, முதல்முறையாக மன்னர் சார்லஸ் மற்றும் ரிஷி சுனக் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

    பக்கிங்காம் அரண்மனையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, மன்னர் சார்லஸ், "பல்வேறு அற்புதமான தகவல்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள் எனக்கு வந்துள்ளன. இவை என் துயரத்தை பெரும்பாலான சமயங்களில் குறைத்துள்ளன," என்று தெரிவித்தார்.

    "நாங்கள் அனைவரும் உங்களுக்கு பின்புலமாக இருக்கிறோம். இந்த தேசம் உங்களுக்கு ஆதரவாக நிற்கிறது," என்று மன்னர் சார்லஸ்-இடம் ரிஷி சுனக் தெரிவித்தார்.

    • எலான் மஸ்க்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என நார்வே எம்.பி மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார்.
    • அசாஞ்சே மேற்கத்திய போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தினார், இதனால் அமைதிக்கு அவர் பங்களித்துள்ளார்

    டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் X- நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என நார்வே எம்.பி மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார்.

    ரஷ்யா-உக்ரைன் போரின் போது செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளை வழங்கியது, சுதந்திரமான பேச்சு மற்றும் திறந்த உரையாடலுக்கான ஆதரவுக்காக 2024-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார்.

    இதற்கிடையில், நார்வே எம்.பியான சோபி மர்ஹாக், ஜூலியன் அசாஞ்சேவை பரிந்துரைத்தார். அசாஞ்சே மேற்கத்திய போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தினார், இதனால் அமைதிக்கு அவர் பங்களித்துள்ளார். ஆகவே அவர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் என்று அவர் தெரிவித்தார். 

    • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை.
    • கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட 3வது நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் இன்று மாலை 6.27 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது.

    10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் தெரியவில்லை.

    ஏற்கனவே 4.2 மற்றும் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட 3-வது நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • $430 பில்லியன் டாலர் கடனை பைடன் ரத்து செய்ததை உச்ச நீதிமன்றம் தடுத்தது
    • இதுவரை $138 பில்லியன் மதிப்பிலான மாணவர் கடனை பைடன் ரத்து செய்துள்ளார்

    அமெரிக்காவில் மாணவர்கள் கடன் $1.73 டிரில்லியன் என உள்ளது.

    கடந்த முறை அதிபர் தேர்தலில் இரு கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் மாணவர் கடன் முக்கிய இடம் பிடித்தது.

    முதல் முறையாக அதிபரான ஜோ பைடன், சுமார் $430 பில்லியன் டாலர் மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்ய முயன்று போது உச்ச நீதிமன்றம் அதனை ரத்து செய்தது.

    இதனையடுத்து, "மதிப்புமிக்க கல்விக்கு சேமிப்போம்" (Saving on a Valuable Education) எனும் திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டத்தில் 7.5 மில்லியன் பயனாளிகள் பதிவு செய்துள்ளனர்.

    இன்று, ஜோ பைடன் அரசின் கல்வி துறை, 1,53,000 மாணவர்களின் கல்வி கடனை தள்ளுபடி செய்துள்ளது.

    இன்று தள்ளுபடி செய்யப்படும் கடன் தொகை சுமார் $1.2 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    $12,000 அல்லது அதற்கும் கீழே கடன் பெற்று கடந்த 10 வருடங்களுக்கும் குறையாமல் தவணைகளை செலுத்தி வரும் மாணவர்களில், அதிபர் பைடன் கடந்த வருடம் கொண்டு வந்த "ஸேவ்" (SAVE) திட்டத்தில் பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

    "யாருக்கு மிக அதிக தேவை உள்ளதோ அவர்களுக்கு கடன் நிவாரணம் வழங்கப்படுகிறது. மேலும், இப்பிரச்சனைக்கு அடிப்படை தீர்வு காணவும் நாங்கள் முயன்று வருகிறோம். கல்லூரி படிப்பிற்கான செலவு மிக அதிகமாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும்" என இது குறித்து பேசிய கல்வி துறை செயலர் தெரிவித்தார்.

    பைடன் பதவி ஏற்றதில் இருந்து தற்போது வரை $138 பில்லியன் மதிப்பிலான மாணவர் கடனை ரத்து செய்துள்ளார். இதன் மூலம் இதுவரை 3.9 மில்லியன் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிடி டவரை 1965ல் அப்போதைய பிரதமர் ஹெரால்ட் வில்சன் திறந்து வைத்தார்
    • பிடி டவர் உரிமையாளர்கள் எம்சிஆர் ஓட்டல்களுக்கு (MCR Hotels) $347 மில்லியனுக்கு விற்றனர்

    இங்கிலாந்து தலைநகரான லண்டனில் உலக கட்டிடக்கலை துறையின் சிறப்புகளை உணர்த்தும் பல கட்டிங்கள் உள்ளன.

    அவற்றில் ஒன்று லண்டன் "வெஸ்ட் எண்ட்" பகுதியில் உள்ள 1964ல் உருவாக்கப்பட்ட"பிடி டவர்" (British Telecommunications Tower) எனப்படும் 620 அடி உயர கோபுரம். இந்த கோபுரத்தின் மத்திய பகுதி 581 அடிகள் உயரம் கொண்டது.

    பிடி டவரை 1965ல் அப்போதைய பிரதமர் ஹெரால்ட் வில்சன் திறந்து வைத்தார்.

    அதன் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள 360 டிகிரி எல்.ஈ.டி. (LED) திரை செய்திகளை ஒளிபரப்புகிறது.

    இந்த கோபுரத்தை தொடக்கத்தில் தொலைக்காட்சி சிக்னல்கள் அனுப்ப பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில், பிடி டவரின் உரிமையாளராக இருந்த பிடி குழுமம் (BT Group), அதனை எம்சிஆர் ஓட்டல்கள் (MCR Hotels) குழுமத்திற்கு $347 மில்லியனுக்கு விற்பனை செய்து விட்டதாக அறிவித்தது.

    மொபைல் போன்கள் தொழில்நுட்பம் பரவலான பிறகு தகவல் தொடர்பில் இந்த கோபுரத்தின் பயன்பாடு குறைய தொடங்கியதால் இதில் பொருத்தப்பட்டிருந்த நுண்ணலை ஏரியல்கள் நீக்கப்பட்டன.


    எம்சிஆர் ஓட்டல்கள் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டைலர் மோர்ஸ் (Tyler Morse), "இந்த பழமையான கட்டிடத்தை அதன் பெருமை குறையாமல் மேம்படுத்தி புதிய தலைமுறையினருக்கு சுகமான அனுபவத்தை வழங்கும் முயற்சியில் மகிழ்ச்சியாக உள்ளோம்" என கூறினார்.

    பல வருடங்களாக இதனை பொதுமக்கள் நேரடியாக பயன்படுத்த முடியாமல் இருந்து வந்த நிலையில், அவர்களின் நேரிடையான பயன்பாட்டிற்கு இது வருவது உற்சாகம் அளிக்கும் செய்தியாக அந்நகரில் பார்க்கப்படுகிறது.

    ஒரு காலகட்டத்தில் அந்த டவரின் உச்சியில் உள்ள வட்ட மாடத்தில் ஒரு சுழலும் உணவகம் இருந்ததும், அது சுற்றி முடிக்க 22 நிமிடங்கள் எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

    • ஆயுதமேந்திய சிலர் உள்ளே அத்துமீறி நுழைந்து அதிபர் ஜோவெனலை சுட்டுக் கொன்றனர்
    • அதிபர் மனைவியின் வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக உள்ளது என கூறப்படுகிறது

    கரீபியன் கடற்பகுதியில் உள்ள தீவு நாடு, ஹைதி (Haiti). இதன் தலைநகரம் போர்ட்-ஆ-ப்ரின்ஸ் (Port-au-Prince).

    கடந்த 2021 ஜூலை 7 அன்று அந்நாட்டு அதிபர் ஜோவெனல் மாய்ஸ் (Jovenel Moise), போர்ட்-ஆ-ப்ரின்ஸ் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார்.

    அப்போது ஆயுதமேந்திய சிலர் உள்ளே அத்துமீறி நுழைந்து அதிபர் ஜோவெனலை சுட்டுக் கொன்றனர்.

    இந்த தாக்குதலில் அதிபர் ஜோவெனல் மாய்சின் மனைவி மார்டினெ மாய்ஸ் (Martine Moise) காயமடைந்தார்.

    அதிபர் படுகொலை விசாரணையில் இதில் 50க்கும் மேற்பட்டோருக்கு தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்டனர்.

    இந்த குற்றப்பத்திரிகையில், அதிபரின் மனைவி மார்டினெ மாய்ஸ் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

    குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டதாவது:

    சம்பவம் நடந்த பிறகு அதிபரின் மனைவி கொடுத்துள்ள வாக்குமூலத்தில் பல அம்சங்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.

    மேலும், அதிபர் மாளிகையில் இருந்த செயலர், இச்சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன் அங்கு வந்த மார்டினெ சுமார் 5 மணி நேரம் அங்கிருந்து, சில முக்கிய பொருட்களை அப்புறப்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார்.

    மார்டினெ, ஜோவெனல் உயிரிழந்ததும், தான் அதிபராக பதவியேற்க திட்டமிட்டு, முன்னாள் பிரதமர் க்ளாட் ஜோசப் (Claude Joseph) மற்றும் சிலருடன் இணைந்து சதி செய்து தனது கணவரை கொலை செய்துள்ளார்.

    இவ்வாறு குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    க்ளாட் ஜோசப் பெயரும் இதில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

    "அதிபர் படுகொலையினால் பலனடைந்திருப்பது தற்போதைய பிரதமர் ஏரியல் ஹென்றி (Ariel Henry) என்றும், அவர் நீதித்துறையை ஆயுதமாக்கி தனது அரசியல் எதிரிகளை பழி வாங்குவதாகவும்" என க்ளாட் ஜோசப் குற்றம் சாட்டினார்.

    மாய்ஸ் உயிரிழந்த 2 வாரங்களில் அதிபராக பதவியேற்ற ஹென்றி, இந்த குற்றச்சாட்டுகளை "பொய் செய்தி" என மறுத்துள்ளார்.

    • வடக்கு காசா பகுதியில் இருந்து வெளியேற இஸ்ரேல் ராணுவம் எச்சரித்தது
    • பசியின் காரணமாக உணவு வாகனங்களை கும்பல்கள் தாக்கி களவாடுகின்றன

    கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் 130 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது.

    பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேலிய ராணுவ படையினர் (Israeli Defence Forces) ஹமாஸ் (Hamas) அமைப்பினரை அழிக்க வான்வழியாகவும், தரை வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    மேலும், ஹமாஸ் அமைப்பினரின் வசம் உள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகளை காசா பகுதி முழுவதும் அனைத்து இடங்களிலும் இஸ்ரேலிய ராணுவம் தேடி வருகின்றனர்.

    இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையை அடுத்து வடக்கு காசாவில் இருந்து மக்களில் பலர் கூட்டம் கூட்டமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர்.

    அங்கிருந்து செல்லாமல் தங்கிய மக்களுக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் (World Food Programme) எனும் சர்வதேச அமைப்பின் வழியாக உணவு வழங்கப்பட்டு வந்தது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வடக்கு காசாவில் உணவுகளை வினியோகிக்க சென்ற இந்த அமைப்பினரின் வாகனங்களை பசி மற்றும் வறட்சி காரணமாக காசா மக்கள் சூழ்ந்து கொண்டு உணவு பண்டங்களை சூறையாடினர்.

    ஒரு சில இடங்களில் வாகன ஓட்டுனர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன.

    இந்நிலையில், அங்கு நிலவும் அசாதாரணமான சூழலால், உணவு வழங்குவதை உலக உணவு திட்ட அமைப்பினர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.


    இது குறித்து உலக உணவு திட்ட அமைப்பு அறிவித்திருப்பதாவது:

    வடக்கு காசா பகுதியில் வன்முறையும், கட்டுப்பாடற்ற சூழலும் நிலவுகிறது. அங்கு சட்டம் ஒழுங்கற்ற நிலை உருவாகி விட்டது.

    உணவுக்காக கும்பல் கும்பலாக தாக்குதலில் ஈடுபடுகின்றனர். துப்பாக்கிச் சூடு மற்றும் உணவு களவாடப்படுதல் சம்பவங்கள் அதிகரித்து விட்டது.

    பாதுகாப்பற்ற சூழலில் உள்ள மக்கள் சிறிது சிறிதாக பசி மற்றும் நோய் தாக்குதல் ஆகியவற்றால் தீவிர துன்பத்தை அனுபவிக்கின்றனர்.

    உணவு வினியோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு கோரியுள்ளோம்.

    விரைவில் வினியோகம் மீண்டும் தொடங்கப்படும்.

    இவ்வாறு அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

    வடக்கு காசாவில் உணவு, குடிநீர், மருந்து ஆகிய அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் பஞ்சம் நிலவுகிறது.

    இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களினால் பாலஸ்தீனத்தில் இதுவரை 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதற்கட்ட சோதனை வெற்றிக்கரமாக நடந்து முடிந்தது.
    • மனிதர்களிடம் சோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

    நரம்பியல் நிலைமைகள் அல்லது அதிர்ச்சிகரமான காயங்கள் உள்ள மனிதர்களின் மூளைக்குள் சிப் பொருத்தி, அவர்களை இந்த பாதிப்பில் இருந்து மீட்க எலான் மஸ்க் 'நியூராலின்க்' என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

    இந்த நிறுவனம் மனிதர்களின் மூளையில் சிப் பொருத்தும் முதல் முயற்சியின் முதற்கட்ட சோதனை வெற்றிக்கரமாக நடந்து முடிந்திருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    கழுத்து பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பக்கவாத பாதிப்புக்கு ஆளான நோயாளிகளின் மூளையில் சிப் பொருத்தப்படும். இதன்மூலம் அவர்களின் எண்ணத்தின் அடிப்படையில் கம்ப்யூட்டரின் கர்சர் மற்றும் கீபோர்டு உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்த முடியும்.

    கடந்த 2016-ம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. பின்னர் இந்த திட்டத்தை மனிதர்களிடம் சோதனை செய்வதற்காக எலான் மஸ்க் அமெரிக்க அரசிடம் அனுமதி பெற்றிருந்தார்.

    அதன்படி பக்கவாதம் பாதிக்கப்பட்டு, இந்த சோதனையில் ஈடுபட தேர்வு செய்யப்பட்ட முதல் நபரிடம் ஆய்வு தொடங்கப்பட்டது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சிப் முதன்முதலாக வெற்றிகரமாக மனிதரின் மூளையில் பொருத்தப்பட்டது.

    சிப் பொருத்தப்பட்ட நபர் தற்போது குணமடைந்து வருகிறார் என்றும் அவரது எண்ணங்களை பயன்படுத்தி கம்ப்யூட்டர் மவுசை கட்டுப்படுத்துகிறார் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    • "8 பாசஞ்சர்ஸ்" எனும் ரூபியின் சேனலுக்கு 2 மில்லியன் பயனர்கள் தேர்ந்தனர்
    • உணவு, குடிநீர், படுக்கை மறுக்கப்பட்டதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்

    மேற்கு அமெரிக்காவில் உள்ள மாநிலம், உடா (Utah). இதன் தலைநகரம் சால்ட் லேக் சிட்டி (Salt Lake City).

    உடா மாநிலத்தில், 42 வயதான ரூபி ஃப்ராங்கி (Ruby Franke) எனும் பெண், தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    கடந்த 2015ல் ரூபி, யூடியூப் வலைதளத்தில் குழந்தைகளை வளர்ப்பது தொடர்பான வீடியோக்களை உருவாக்கி பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோ உருவாக்கத்தில் அவரது குழந்தைகளையும் அவர் பங்கெடுக்க செய்தார்.

    "8 பாசஞ்சர்ஸ்" (8 Passengers) எனும் அவரது யூடியூப் சேனலுக்கு குறுகிய காலத்திலேயே 2 மில்லியன் பயனர்கள் சேர்ந்தனர்.

    2020 காலகட்டத்தில் அவரது மகன்களில் ஒருவர் தனக்கு நேரும் துன்புறுத்தலை குறித்து ஒரு வீடியோ பதிவு செய்திருப்பதை ஒரு பயனர் கண்டு, ரூபியின் முந்தைய வீடியோக்களை கவனமாக ஆய்வு செய்தார். அதில் ரூபி தனது குழந்தைகளை "கட்டுப்பாடு" எனும் பெயரில் துன்புறுத்தும் சான்று கிடைத்தது.

    இதனை தொடர்ந்து ரூபியை விசாரிக்க உடா மாநில குழந்தைகள் நல அதிகாரிகளிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன.

    குற்றச்சாட்டுகளை மறுத்த ரூபி, 2022ல் தனது யூடியூப் சேனலை நிறுத்தி விட்டார். ரூபியும், அவரது கணவரும் பிரிந்தனர். 


    தொடர்ந்து "ஜோடி ஹில்டெப்ராண்ட்" என்பவரின் "கனெக்ஷன்ஸ் க்ளாஸ்ரூம்" (ConneXions Classroom) எனும் சேனலில் ரூபி தனது வீடியோக்களை பதிவேற்றினார்.

    2022ல் அவரது 12-வயது மகன் ஒருவன் வீட்டை விட்டு தப்பி, அண்டை வீட்டாரிடம் உணவு கேட்கும் போது அவன் உடலெங்கும், பல காயங்கள் இருப்பதும், அவை அச்சிறுவனை பலமாக கயிற்றினால் கட்டி வைத்ததால் ஏற்பட்டவை என்பதும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்களும், காவல்துறையினரும் விரைந்து வந்து ரூபியின் வீட்டை ஆய்வு செய்தனர்.

    அங்கு அவர்களுக்கு ரூபி தனது குழந்தைகளுக்கு உணவு, குடிநீர் வழங்காமல் சித்திரவதை செய்ததற்கான தடயங்கள் காவல் அதிகாரிகளுக்கு கிடைத்தது.

    இதனை தொடர்ந்து விசாரணை நடைபெற்று, ரூபி ஃப்ராங்கி மற்றும் அவரது தொழில் கூட்டாளி ஹில்டெப்ராண்ட்" (54) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

    விசாரணையின் போது நீதிமன்றத்தில் உடா மாநில அரசு தரப்பு வழக்கறிஞர், "ஃப்ராங்கியின் குழந்தைகள் நாஜி படையினர் நடத்திய சித்திரவதை கூடங்களை போன்ற சூழலில் வீட்டில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு உணவு, குடிநீர், படுக்கை, பொழுதுபோக்கு என அனைத்தும் மறுக்கப்பட்டு வந்தது" என தெரிவித்தார்.

    இந்நிலையில், அவர்கள் இருவருக்கும் தலா 60 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    ×