என் மலர்
உலகம்
- யானையால் தூக்கி வீசப்பட்ட பெண் எழுந்து சிரித்துக்கொண்டே செல்வது போன்ற காட்சிகள் உள்ளது.
- வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
தேசிய பூங்காக்கள், அடர்ந்த வனப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்லும் போது அங்கு விலங்குகளை புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு சுற்றுலாப்பயணிகள் அத்துமீறி நடந்து கொள்வதும், அவர்களை வன விலங்குகள் துரத்தும் காட்சிகளும் சமீப காலமாக சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது டுவிட்டரில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், யானை ஒன்று இலைகளை சாப்பிட்டு கொண்டிருக்கிறது. அந்த யானைக்கு உணவளிப்பதற்காக இளம்பெண் ஒருவர் அருகில் செல்கிறார்.
அப்போது ஆவேசம் அடையும் யானை அந்த பெண்ணை தனது துதிக்கையால் தாக்குவதும், அந்த பெண் தூக்கி வீசப்படும் காட்சிகளும் பயனர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அந்த பெண்ணுக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
யானையால் தூக்கி வீசப்பட்ட அந்த பெண் எழுந்து சிரித்துக்கொண்டே செல்வது போன்ற காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர், காட்டு விலங்குகளை தனியாக விடுங்கள் எனவும், மற்றொரு பயனர், வால் அசைக்கும் போது யானையின் அருகில் செல்ல வேண்டாம். அது அச்சுறுத்தலாக உணர்கிறது எனவும் பதிவிட்டுள்ளனர்.
Girl tries to make friends with an elephant and finds out pic.twitter.com/DD5jGR6qjk
— non aesthetic things (@PicturesFoIder) February 21, 2024
- சீனாவில் லின் என்ற பெண்மணி தனது நாயுடன் வாக்கிங் சென்றார்.
- அப்போது அந்த நாய் கவ்விப் பிடித்த லாட்டரி டிக்கெட்டுக்கு பரிசு விழுந்தது.
பீஜிங்:
தெற்கு சீனாவின் குவாங்டாங் நகரில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார் லின் என்ற பெண்மணி. அவர் கையில் பிடித்திருந்த நாய், ஒரு கடைக்கு அருகே வந்தபோது திடீரென எஜமானரின் பிடியில் இருந்து நழுவி கடைக்குள் ஓடியது. அங்கு வைக்கப்பட்டிருந்த லாட்டரி டிக்கெட்டை கவ்விப் பிடித்தது. இதனால் அவர் அந்த டிக்கெட்டை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அந்த லாட்டரி டிக்கெட்டுக்கு 139 டாலர் பரிசு விழுந்தது. இதனால் லின் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
மறுநாள் அவர் தனது நாயை அந்தக் கடைக்கு அழைத்துச்சென்று மீண்டும் ஒரு லாட்டரி டிக்கெட்டை கவ்வச் செய்தார். இந்த முறை அவருக்கு 4 டாலர் பரிசு விழுந்தது. அதிர்ஷ்டத்தை தேடித்தந்த நாய்க்கு பரிசுத்தொகையில் ஒரு பகுதியை செலவு செய்தேன் என்றார் லின்.
- இஸ்ரேலியர்கள் மீது மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
- துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த 5 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜெருசலேம்:
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. காசா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக இஸ்ரேல் படை குண்டுகளை வீசி வருவதால் இறந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டி விட்டது
இந்த சூழ்நிலையில் இஸ்ரேலியர்கள் மீது மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்கு கரை பகுதியில் கிழக்கு ஜெருசலேம் பிரதான நெடுஞ்சாலையில் உள்ள சோதனை சாவடி அருகே மர்ம நபர்கள் 3 பேர் காரில் சென்றவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தனர். ஒரு பெண் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வீரர்கள் மர்ம நபர்கள் 2 பேரை பதிலடி தாக்குதல் நடத்தி சுட்டுக்கொன்றனர். மற்றொருவரை மடக்கி பிடித்தனர்.
தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரும் இஸ்ரேல் மேற்கு கரையையொட்டியுள்ள பாலஸ்தீன நகரமான பெத்லகேம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த 5 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காசாவில் சண்டை நடந்து வரும் நிலையில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது மேலும் பதற்றத்தை அதிகரித்து உள்ளது.
- அமெரிக்கா, சோவியத் ரஷியா, சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் நிலவில் கால் பதித்துள்ளன.
- கடந்த 15-ந்தேதி விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் விரைவாக நிலவில் தரையிறக்கம்.
அமெரிக்காவின் ஹூஸ்டனை தலைமையிடமாக கொண்ட தனியார் நிறுவனம் கடந்த 15-ந்தேதி நவீன தொழில்நுட்பத்துடன் விரைவில் நிலவை சென்றடையும் வகையிலான ஐஎம்-௧ விண்கலத்தை ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியது.
இந்த விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து வெற்றிகரமாக நிலவின் சுற்று வட்டப்பாதையில் இணைந்தது. இந்த நிலையில் அமெரிக்க நேரப்படி நேற்று நள்ளிரவு விண்ணில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற ஒடிசியஸ் லேண்டர் தரையிறங்கியதும் முதலில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பின் மெல்லமெல்ல தகவல் பரிமாற்றம் நடைபெற்றதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், நிலவில் லேண்டர் தரையிறங்கியது உறுதிப்படுத்தியது.
அமெரிக்கா கடந்த 1972-ம் ஆண்டு நிலவில் விண்கலத்தை தரையிறக்கியது. அதன்பின் சுமார் 52 ஆண்டுகள் கழித்து தற்போது அமெரிக்காவின் தனியார் நிறுவனம் நிலவில் வெற்றிகரமாக ஐஎம்-௧ விண்கலத்தின் ஒடிசியஸ் லேண்டரை தரையிறக்கியுள்ளது.
இதற்கு முன்னதாக அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கியது. அதன்பின் தனியார் நிறுவனம் தற்போது நிலவில் விண்கலத்தை தரையிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் ஹூஸ்டனைச் சேர்ந்த இன்டியூடிவ் மெஷின்ஸ் (Intuitive Machines) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஐஎம்-1 (IM-1) விண்கலத்தின் ஒடிஸியஸ் லேண்டர் நோவா-சி வகையைச் சேர்ந்தது. ஆறு கால்களை கொண்ட அறுங்கோண வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 15-ம் தேதி, ஒடிஸியஸ் லேண்டர் புளோரிடாவின் கேப் கனாவரலில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
மற்றொரு நிறுவனமான ஆஸ்ட்ரோபோடிக் டெக்னாலஜியின் நிலவு லேண்டர், ஜனவரி 8-ம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே உந்துவிசை கலனில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
- இத்தாலிக்கு வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருகிறது.
- இதனால் அல்பேனியா நாட்டுடன் கடந்த நவம்பர் மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டது.
வட ஆப்பிரிக்காவில் உள்ள பெரும்பாலான நாடுகளில் உள்நாட்டு போர் நடைபெற்றது. மேலும், நிலையற்ற அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. இதனால் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
படகு மூலம் ஆபத்தான பயணம் மேற்கொண்டு இவ்வாறு ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றனர். இதனால் நடுக்கடலில் படகு கவிந்து உயிரிழக்கும் சம்பவமும் நடைபெற்றது.
ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஐரோப்பிய நாடுகள் அடைக்கலம் கொடுக்க மறுத்தன. மத்திய தரைக்கடல் கரையோர நாடான இத்தாலிதான் இவர்களை வரவேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அவர்களை நடுக்கடலில் தடுத்து நிறுத்தி வந்தது. ஆனால் வருடத்திற்கு வருடம் புலம்பெயர்வோரின் வருகை அதிகரித்து வண்ணம் உள்ளது.
இந்த நிலையில்தான் இந்த சிக்கலை தீர்க்க இத்தாலி அல்பேனியா நாட்டுடன் கடந்த நவம்பர் மாதம் ஒரு ஒப்பந்தம் போட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி அல்பேனியாவும் புலம்பெயர்ந்தோரை தங்கள் நாட்டில் தற்காலிகமாக தங்க வைக்க வேண்டும். அதன்பின் விண்ணப்பம் கொடுப்பவர்களை ஏற்றுக் கொள்ளலாம். இதனால் இத்தாலியின் சுமை ஓரளவு குறையும்.
ஆனால் இந்த ஒப்பந்தத்தை அல்பேனிய எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. என்றபோதிலும் இன்று பாராளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. என்றபோதிலும், போதுமான வாக்குகள் பதிவாக பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.
இந்த ஒப்பந்தத்தின்படி ஒரே நேரத்தில் 3 ஆயிரம் புலம்பெயர்ந்தோருக்கு அல்பேனியா அடைக்கலம் கொடுக்க முடியும். அதன்பின் அகதிகளாக இருக்க விண்ணப்பம் செய்ய வேண்டும். இதற்கு சுமார் ஒரு மாத காலம் எடுத்துக் கொள்ளும். ஒரு வருடத்தில் அடைக்கலம் கோரும் அகதிகளின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை தொடக்கூடும் எனக் கூறப்படுகிறது.
இரு நாட்டின் ஒப்பந்தத்தின்படி, இந்த செயல்முறை முழுவதும் அகதிகளுக்கு இத்தாலி சட்டப்பூர்வமாக பொறுப்பேற்க வேண்டும். மேலும் அவர்களுக்கு சர்வதேச பாதுகாப்பு வழங்கப்பட்டால் அவர்களை வரவேற்கும் அல்லது மறுத்தால் அல்பேனியாவிலிருந்து நாடுகடத்தப்படுவதற்கு ஏற்பாடு செய்யும்.
கடந்த ஆண்டில் மட்டும் 2022-ஐ காட்டிலும் 50 சதவீதம் பேர் அகதிகளாக வந்துள்ளனர். 1,55,750 பேர் இத்தாலி கடற்கரைக்கு வந்துளற்ளனர். இதில் 17 ஆயிரம் சிறுவர்கள் துணையின்றி வந்துள்ளனர். 2022-ல் 1,03,850 பேர் வந்துள்ளனர்.
- விற்பனைத்தொகையில் 1000 யூரோக்களை சிறுவனின் பெற்றொர் நன்கொடையாக வழங்கினர்
- ஆஸ்டனை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாக ஆஸ்டனின் தாயார் கூறினார்
இங்கிலாந்தின் நார்தாம்ப்டன் (Northampton) பகுதியை சேர்ந்த ஆஸ்டன் (Aston) எனும் சிறுவன், நரம்பியல் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு உதவுவதற்காக, "திங்க்ஸ் அபவுட் ஸ்பேஸ்" (Things About Space) எனும் புத்தகத்தை தனது 8-வது வயதில் எழுதி, படிப்பதற்கு சிரமம் உள்ளவர்களுக்கு அதன் ஒலி பதிப்பையும் வெளியிட்டு புகழ் பெற்றான்.
ஆஸ்டனின் புத்தகம், 700 பிரதிகளுக்கும் மேல் விற்று தீர்ந்தது.
தற்போது 11-வயது ஆகும் ஆஸ்டன் எழுதிய புத்தகத்தின் விற்பனை மூலம் கிடைத்த தொகையில் 1000 யூரோக்களை இங்கிலாந்து வானியல் நிறுவனத்திற்கு நன்கொடையாக ஆஸ்டனின் பெற்றோர் வழங்கினர்.
ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அந்த புத்தகத்தின் பல பிரதிகளை வாங்கி உள்ளூர் பள்ளிகளில் வினியோகித்தார்.
ஆஸ்டன் முதலில் எழுதிய பதிப்புகள் அனைத்தும் விற்று தீர்ந்ததால், கடந்த ஆண்டு, அதன் இரண்டாவது பதிப்பை மீண்டும் வெளியிட வேண்டியிருந்தது.
"பல நண்பர்கள் அந்த புத்தகத்தைப் பற்றி கேட்டது எனக்கு மிகவும் பிடித்தமாக இருந்தது. புத்தகம் எழுதி வெளியிடுவது எப்படி என கேட்பவர்களுக்கு நான் சொல்வது, மனது வைத்தால் யாராலும் இதை செய்ய முடியும் என்பதுதான். என்றாவது ஒரு நாள் எதிர்காலத்தில் விண்வெளியில் பயணம் செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம்" என்று ஆஸ்டன் வானொலி பேட்டியில் கூறினார்.
"ஆஸ்டனை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று ஆஸ்டனின் தாயார் கூறினார்.
பிரிட்டிஷ் விண்வெளி வீரர் டிம் பீக் (Tim Peake) ஆஸ்டனின் புத்தகத்தை குறித்து கேள்விப்பட்டு அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசியதுடன், ஆஸ்டனின் புத்தகத்தின் பிரதியில் கையெழுத்திட்டு வாழ்த்தினார்.
ஆஸ்டனுக்கு சில குழந்தைகளை தாக்கும் அபூர்வ வளர்ச்சி குறைபாட்டு நோய் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- வீடியோவில் நீருக்கு அடியில் சுமார் 26 அடி நீளம் கொண்ட அனகோண்டாவின் தலை முதல் வால் வரை காட்டுகிறார்.
- ஒரு கார் டயர் போன்ற தடிமன், சுமார் 8 மீட்டர் நீளம் மற்றும் 200 கிலோவுக்கு மேல் எடை மற்றும் பெரிய தலையுடன் காணப்படுகிறது.
அமேசான் மலைக்காடுகள் உலகின் மிகப்பெரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் இருப்பிடம் ஆகும். இங்கு விஞ்ஞானிகள் நடத்தி வரும் ஆய்வில் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் அமேசான் காட்டில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகளில் ஒருவரான ப்ரீக் வோங்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகப்பெரிய அனகோண்டா பாம்பின் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் நீருக்கு அடியில் சுமார் 26 அடி நீளம் கொண்ட அனகோண்டாவின் தலை முதல் வால் வரை காட்டுகிறார்.
அதனுடன், நான் பார்த்த மிகப்பெரிய அனகோண்டாவை வீடியோவில் நீங்கள் பார்க்கலாம். ஒரு கார் டயர் போன்ற தடிமன், சுமார் 8 மீட்டர் நீளம் மற்றும் 200 கிலோவுக்கு மேல் எடை மற்றும் பெரிய தலையுடன் காணப்படுகிறது. நான் இதற்கு முன்பு ஒரு பெரிய இனத்தை கண்டுபிடித்தேன். அது ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த ஒரு சிறிய பாம்பு. ஆனால், இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது உலகிலேயே மிகப்பெரிய பாம்பு என தெரிவித்துள்ளார்.
- இந்தியா மற்றும் மாலத்தீவு இடையிலான உறவு சமீபத்தில் விரிசலடைந்துள்ளது.
- இதைப் பயன்படுத்தி மாலத்தீவுடன் நெருக்கம் சீனா காட்டி வருகிறது.
பீஜிங்:
இந்தியா மற்றும் மாலத்தீவு இடையிலான உறவு சமீபத்தில் விரிசலடைந்துள்ளது. இதைப் பயன்படுத்தி மாலத்தீவுடன் நெருக்கம் காட்டி வருகிறது சீனா.
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீனா சென்றிருந்தபோது மாலத்தீவு மற்றும் சீன அரசுகளுக்கு இடையே 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மேலும், பொருளாதார ரீதியிலும், ராணுவ ரீதியிலும் தன்னை பலப்படுத்திக் கொள்ள சீனா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவிற்கு பல்வேறு வகைகளில் அழுத்தம் கொடுத்து வரும் சீனா தற்போது மாலத்தீவு அரசுடன் நெருக்கமான உறவை பேணி வருகிறது. மாலத்தீவுடனான சீனாவின் நெருக்கம் இந்தியாவுக்கு புதிய தலைவலியாக மாறியுள்ளது.
இதற்கிடையே, சியாங் யாங் ஹாங் 03 என்ற சீன உளவுக்கப்பல் ஒன்று இந்திய பெருங்கடல் வழியாக நுழைந்து மாலத்தீவை நோக்கி சென்றது.
பாதுகாப்பு கருதி இந்திய கடற்படை உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது.
இந்நிலையில், சியாங் யாங் ஹாங் 03 என்ற சீன உளவுக்கப்பல் இன்று மாலத்தீவை வந்தடைந்துள்ளது. ஆராய்ச்சிக்காக மட்டுமே கப்பல் சென்றுள்ளது என சீனா தெரிவித்துள்ளது.
ஆராய்ச்சி கப்பல் என்ற பெயருடன் மாலத்தீவு வந்துள்ள இந்த கப்பல் 4,300 டன் எடை உடையது. இப்பகுதியில் ஏற்படக்கூடிய எதிர்கால இயற்கை பேரிடருக்கான சாத்தியக் கூறுகள், அப்பகுதியில் நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்குவதற்கான வசதிகள் குறித்த தகவல்களை சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.
- இட்லி, தோசை, வடை, பொங்கல் என தென்னிந்திய உணவு வகைகளை வெளிநாட்டுகாரர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
- வீடியோ வைரலாகி 18 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது.
தென்னிந்திய உணவு வகைகளுக்கு உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகுந்த வரவேற்பு உள்ளது. குறிப்பாக இட்லி, தோசை, வடை, பொங்கல் என தென்னிந்திய உணவு வகைகளை வெளிநாட்டுகாரர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்நிலையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சமையல்கலைஞரான ஜேக் ட்ரையன் என்பவர் தமிழ்நாட்டின் பிரபலமான உணவு வகைகளில் ஒன்றான பொரியலை தயார் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் 'ட்ரையன் கிரீன் பீன் பொரியல்' என்ற தலைப்பில் அவர் பாரம்பரிய உணவு வகையான பொரியலை தயாரிக்கும் காட்சிகள் உள்ளது. அந்த வீடியோவில், ட்ரையன் தனது பார்வையாளர்களை அன்புடன் வணக்கம் என வாழ்த்து சொல்லி தொடங்குகிறார். பின்னர் கறிவேப்பிலை, துருவிய தேங்காய், பருப்பு, வதக்கிய காய்கறிகள் ஆகியவற்றை சேர்த்து பொரியலை தயாரிக்கும் காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்கிறது.
இந்த வீடியோ வைரலாகி 18 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது.
- 39 வயதான புஸ்கோவ் தனது மூக்கு துவாரத்திற்குள் 68 தீக்குச்சிகளை திணித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
- கின்னஸ் சாதனை அமைப்பின் தகவல்படி புஸ்கோவ், பல சவால்களுக்கு மத்தியில் இந்த தீப்பெட்டி சவாலை தேர்ந்தெடுத்ததாக கூறப்பட்டுள்ளது.
இப்படி எல்லாம் கூட சாதனை படைக்க முடியுமா? என வியக்க வைக்கிறார்கள் சிலர். அந்த வகையில் டென்மார்க்கை சேர்ந்த பீட்டர் வான் டாங்கன் புஸ்கோவ் வித்தியாசமான முறையில் ஒரு சாதனை படைத்துள்ளார்.
39 வயதான அவர் தனது மூக்கு துவாரத்திற்குள் 68 தீக்குச்சிகளை திணித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை படைத்த முதல் நபர் இவர் ஆவார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு மிகப்பெரிய நாசி மற்றும் மிகவும் நீளமான தோல் உள்ளது. அது எனக்கு சாதனை படைக்க உதவியது என்று நம்புகிறேன் என கூறி உள்ளார்.
கின்னஸ் சாதனை அமைப்பின் தகவல்படி புஸ்கோவ், பல சவால்களுக்கு மத்தியில் இந்த தீப்பெட்டி சவாலை தேர்ந்தெடுத்ததாக கூறப்பட்டுள்ளது. சிறு வயதில் கூட மூக்கில் பொருட்களை செருகும் ஆசை தனக்கு இருந்ததில்லை என கூறும் புஸ்கோவ் தற்போது சாதனைக்காக இந்த சவாலை ஏற்றதாக கூறினார். மேலும் நான் எப்போதும் வாழ்க்கையின் சுவாரஸ்யமான மற்றும் வித்தியாசமான அம்சங்களை தேட முயற்சிப்பேன் என்றார்.
- லார்ட் பேடன்-பவல், அவரது மனைவி ஓலேவ், ஆகியோரின் பிறந்த நாள் பிப்ரவரி 22 ஆகும்
- "உலக சிந்தனை தினம் - 2024" ஆண்டிற்கான கருப்பொருள் "எங்கள் உலகம், நமது செழிக்கும் எதிர்காலம்"
1926ல் நியூயார்க்கில், உலக பெண் வழிகாட்டிகள் மற்றும் பெண் சாரணர்கள் சங்கத்தின் (World Association of Girl Guides and Girl Scouts) 4-வது உலக மாநாட்டின் எடித் மேசி முகாமில் (Edith Macy camp) அதன் பிரதிநிதிகள் சந்தித்தனர்.
அந்த மாநாட்டின் முடிவில், சாரணர் மற்றும் வழிகாட்டி இயக்கத்தின் நிறுவனர் லார்ட் பேடன்-பவல் (Lord Baden-Powell) மற்றும் அவரது மனைவி ஓலேவ் (Olave) ஆகிய இருவரின் பிறந்த நாளான பிப்ரவரி 22 தேதியை, பெண் வழிகாட்டிகளுக்கும் சாரணர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாளாக கொண்டாட சங்க பிரதிநிதிகள் ஒருமனதாக முடிவு செய்தனர்.

அதன்படி, அன்றிலிருந்து பிப்ரவரி 22, "உலக சிந்தனை தினம்" (World Thinking Day) எனும் பெயரில் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
"உலக சிந்தனை தினம் - 2024" ஆண்டிற்கான கருப்பொருள் "எங்கள் உலகம், நமது செழிக்கும் எதிர்காலம்" (Our World, Our Thriving Future) என்பதாகும்.
பெண்கள் செழித்து வளர வாய்ப்புள்ள, நிலையான உலகத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும், இது குறித்த விழிப்புணர்வை உண்டாக்கவும் உலக சிந்தனை தினம் கொண்டாடப்படுகிறது.
"உலக சிந்தனை நாள் - 2024" என்பது பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கான அதிகாரம், பெண்களின் முன்னேற்றம் ஆகியவற்றை குறித்து சிந்தித்து, அந்த முயற்சிக்கு எதிராக உள்ள சவால்களை நீக்க எடுக்கப்பட வேண்டிய முயற்சிகளை கண்டறியவும் ஒரு வாய்ப்பாகும்.
உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் வலிமை, தைரியம் மற்றும் மனஉறுதியை கொண்டாடும் நாளாகவும் பிப்ரவரி 22 கொண்டாடப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள சுமார் 10 மில்லியன் பெண் வழிகாட்டிகள் மற்றும் பெண் சாரணர்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அவர்கள் மேம்பாட்டிற்காகவும் நிதி திரட்ட இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்நாளில், பெண்களுக்கு இடையையான பிணைப்பை வலுப்படுத்தவும், அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான வழிமுறைகளை ஆராயவும், அது குறித்து சிந்தித்து செயலாற்றவும் அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக வழங்கிட உறுதி எடுத்து கொள்வோம்.
- நோய்க்கான பல சிகிச்சை முறைகளிலும் நோயாளிகளுக்கு வலி குறைவதில்லை
- வலியற்ற கேன்சர் சிகிச்சை முறைகள் குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன
உலகெங்கும் உள்ள மக்களை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று, கேன்சர் (cancer) எனப்படும் புற்றுநோய்.
உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படக் கூடிய கேன்சர் நோய்க்கு, நவீன மருத்துவத்தில் பல சிகிச்சை முறைகளும், மாத்திரைகளும், மருந்துகளும் உள்ளதால் நோயை கட்டுக்குள் வைக்க முடிகிறது.
ஆனால், இத்தகைய சிகிச்சை முறைகளில் நோயாளிகளுக்கு வலி அதிகம் இருப்பது தவிர்க்க முடியாததாக இருந்து வருகிறது.
கேன்சர் நோய் தீர்க்கும் வழிமுறைகள் மற்றும் வலியற்ற சிகிச்சை முறைகள் குறித்து உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இங்கிலாந்தின் "கிழக்கு சஃபோல்க் மற்றும் வடக்கு எஸ்ஸெக்ஸ்" (East Suffolk and North Essex) பகுதியில் தேசிய சுகாதார சேவையின் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் (NHS Foundation Trust) எனும் லாப நோக்கமற்ற அமைப்பு கேன்சர் நோயாளிகளுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் கேன்சர் நோய்க்கான சிகிச்சை அளித்து வருகிறது.
இந்த அமைப்பை சார்ந்த மருத்துவர்கள் தங்கள் ஆய்வில் "லைட் தெரபி" (light therapy) எனப்படும் "ஓளி சிகிச்சை" மூலம் கழுத்து மற்றும் தலை (head and neck) கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதெரபி (மருந்து சிகிச்சை) மற்றும் ரேடியோதெரபி (கதிரியக்க சிகிச்சை) ஆகியவற்றின் பக்கவிளைவாக ஏற்படும் வலி, பெருமளவு குறைவதை கண்டுபிடித்துள்ளனர்.
பிற தெரபிகளின் பக்க விளைவாக வாய் பகுதியில் ஏற்படும் வலியை "லைட் தெரபி" குறைக்கிறது.
"ஃபோட்டோ பயோ மாடுலேஷன்" (Photo Bio Modulation) சிகிச்சை எனப்படும் பிபிஎம் (PBM) பெற்று கொண்ட நோயாளிகளுக்கு வலி நிவாரண மருந்துகள் தேவைப்படுவதில்லை என தெரிய வந்துள்ளது.
சீராக அகச்சிவப்பு ஓளியை (infrared light) வாய் பகுதியில் பாய்ச்சுவதன் மூலம் வாய் புண் மற்றும் வலி குறைந்துள்ளது.
"பிற சிகிச்சைகளினால் ஏற்பட்ட வாய் புண் குறையாமல் இருந்தது. அதன் காரணமாக திரவ உணவு மட்டுமே உட்கொள்ளும் நிலை இருந்து வந்தது. மேலும், நாவினால் எந்த சுவையையும் அறிய முடியவில்லை. ஆனால், பிபிஎம் சிகிச்சை நிம்மதியான அனுபவத்தை கொடுத்தது" என ஒரு நோயாளி தெரிவித்தார்.
வரும் மாதங்களில், பிபிஎம் சிகிச்சையின் பரவலான பயன்பாடு குறித்து மேலும் தகவல்கள் வெளிவரலாம்.






