என் மலர்tooltip icon

    உலகம்

    • மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களுக்குப் பதிலாக திறமையான தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.
    • மாற்று ஹெலிகாப்டர் இந்திய போர்க்கப்பலில் இருந்து நாளை வரவுள்ளதாகவும் மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மாலே:

    மாலத்தீவில் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்ட முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி னார்.

    மாலத்தீவில் இந்திய ராணுவ வீரர்கள் 70-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மேலும் கடலோர ரோந்து பணிகளை மேற்கொள்ள டோர்னியர் ஹெலிகாப்டர் மற்றும் மருத்துவ வசதிக்காக துருவ் ஹெலிகாப்டர் ஆகியவற்றை மாலத்தீவுக்கு இந்தியா வழங்கி உள்ளது.

    ராணுவம் வெளியேறுவது தொடர்பாக இரு நாடுகள் பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களுக்குப் பதிலாக திறமையான தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. மார்ச் 10-ந் தேதிக்குள் ஒரு விமானப்படைத் தளத்தில் இருக்கும் ராணுவ வீரர்களுக்குப் பதிலாக தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும்,மே 10-ந் தேதிக்குள் மற்ற இரண்டு விமானப் படைத் தளங்களில் உள்ள ராணுவ வீரர்களும் திரும்பப் பெறப்பட்டு, தொழில்நுட்ப பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்திய படைகளுக்கு பதிலாகவும், மருத்துவ நோக்கங்களுக்காக இந்தியா வழங்கிய ஹெலிகாப்டர்களை கையாளவும் முதல் இந்திய தொழில்நுட்ப பணியாளர்கள் மாலத்தீவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது சீனு கானில் நிறுத்தப்பட்டுள்ள இந்தியப் படைகளுக்குப் பதிலாக ஹெலிகாப்டரை இயக்கும் குழுவினர் மாலத்தீவு வந்தடைந்துள்ளனர் என்று கூறியுள்ளது. மேலும் இதற்கிடையில், லாமுகன் கத்தூ விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஹெலிகாப்டர் பராமரிப்புக்காக இந்தியாவுக்கு அனுப்பப்படும் என்றும், மாற்று ஹெலிகாப்டர் இந்திய போர்க்கப்பலில் இருந்து நாளை வரவுள்ளதாகவும் மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே கான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்த இந்திய ராணுவ வீரர்கள் இன்று அதிகாலை தொழில்நுட்ப பணியாளர்கள் குழுவிடம் தங்களது பணியை ஒப்படைக்கும் நடைமுறையை தொடங்கினர்.

    • காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு சுரங்கங்களை அமைத்து பதுங்கி வருகின்றனர்.
    • ஹமாஸ் அமைப்பின் இந்த சுரங்கங்கள் இஸ்ரேலுக்கு கடும் சவாலாக இருந்து வருகிறது.

    டெல் அவிவ்:

    காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு சுரங்கங்களை அமைத்து அதற்குள் பதுங்கி இருந்தபடி செயல்பட்டு, இஸ்ரேலுக்கு சவாலாக இருந்து வருகிறது. இதனால், அந்த அமைப்புக்கு எதிரான போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    காசா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு அடியில் 10 கி.மீ. நீளத்திற்கு ஒரு பெரிய சுரங்கப்பாதையை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கண்டறிந்துள்ளனர்.

    காசா முனையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்க கூடிய வகையில், பூமிக்கடியில் பயங்கரவாத நெட்வொர்க் ஒன்று செயல்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து, அந்த சுரங்கத்தின் நுழைவு வாயில் பகுதிகளை இஸ்ரேல் படையினர் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன்பின் அதனை ஆய்வு செய்து, நெட்வொர்க்கின் பெரும் பகுதியையும் அழித்தனர்.

    காசாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் இயங்குவதற்காக இந்த சுரங்க நெட்வொர்க் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த அமைப்பு, ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கோடிக்கணக்கான மதிப்பிலான நிதியை செலவிட்டு உள்ளது.

    இதன்படி, பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புகள் ஆகியவற்றின் கீழே சுரங்க நெட்வொர்க் செயல்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதனைக் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம் என தெரிவித்துள்ளது.

    • பாலஸ்தீனத்தை விடுதலை செய்ய வேண்டும்.
    • படுகாயமடைந்த அரோன் புஷ்னெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு அமெரிக்க விமானப்படை வீரர் அரோன் புஷ்னெல் (வயது 25) காசா மீதான போருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார். பாலஸ்தீனத்தை விடுதலை செய்ய வேண்டும், இனப்படுகொலைக்கு துணைபோகமாட்டேன் என்று கோஷம் எழுப்பியபடி அவர் திடீரென்று தீக்குளித்தார்.

    அதை சமூகவலைதளத்தில் அரோன் நேரடியாகவும் ஒளிபரப்பு செய்தார். படுகாயமடைந்த அரோன் புஷ்னெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி விமானப்படை வீரர் அரோன் புஷ்னெல் உயிரிழந்தார்.

    • இஸ்ரேல், அமாஸ் அமைப்பினர் இடையிலான போரில் காசா மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
    • காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவர அமெரிக்கா, கத்தார் உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரில் காசாவில் உள்ள மக்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலியானோர் எண்ணிக்கை 29 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச்சென்ற இஸ்ரேல் பிணைக்கைதிகளை மீட்க 7 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன்பின் இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, காசாவில் போர் நிறுத்தத்தைக் கொண்டுவர அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் முயற்சித்து வருகின்றன.

    இதில் ஹமாசின் கோரிக்கைகளை ஏற்க இஸ்ரேல் மறுத்தது. இதனால் போர் நிறுத்தம் ஏற்படுவதில் இழுபறி நீடித்து வருகிறது.

    இந்நிலையில், காசாவில் மார்ச் 4-ம் தேதிக்குள் போர் நிறுத்தம் ஏற்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், காசாவில் போர் நிறுத்தம் ஏற்படுவதில் நெருக்கமாக இருக்கிறோம் என்று எனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்னிடம் தெரிவித்தார். அடுத்த திங்கட்கிழமைக்குள் (மார்ச் 4-ம் தேதி) போர் நிறுத்தம் ஏற்படும் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டார்.

    • காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
    • தொடர் தாக்குதல் எதிரொலியாக ராஜினாமா முடிவை எடுத்திருப்பதாக முகமது ஷ்டய்யே கூறியுள்ளார்.

    காசா:

    பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் படைக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், பாலஸ்தீனத்தில் திடீர் திருப்பமாக அந்நாட்டு பிரதமர், பதவியை ராஜினாமா செய்வதாக முகமது ஷ்டய்யே அறிவித்தார்.

    பாலஸ்தீனத்தில் தனது தலைமையிலான அரசை கலைத்துவிட்டு புதிய அரசு பொறுப்பேற்க பிரதமர் முகமது ஷ்டய்யே விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாசிடம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல் எதிரொலியாக இந்த முடிவை எடுத்துள்ளேன். காசாவில் போர் முடிவுற்ற பின், அதற்குப் பிந்தைய சூழலில் பாலஸ்தீனியத்தை நிர்வகிக்க புதிய அரசு அமைவதே சிறந்ததாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

    • மரியம் நவாஸ் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
    • பஞ்சாப் மாகாணத்தின் ஒவ்வொரு பெண்ணும், பெண் முதல்வரைப் பார்த்து பெருமிதம் கொள்கிறார்கள்

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். இதன்மூலம் பாகிஸ்தான் வரலாற்றில் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    பாகிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத்தேர்தல் கடந்த 8-ம் தேதி நடந்தது. இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பஞ்சாப் மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் சுயேட்சைகள் மரியம் நவாஸ் ஷெரீபுக்கு ஆதரவு தந்தனர்.

    மூன்று முறை பிரதமராக பதவி வகித்த நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -கியூ மற்றும் இஸ்டேகாம்-ஐ-பாகிஸ்தான் கட்சி ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார் மரியம் நவாஸ்.

    50 வயதான மரியம் நவாஸ் தனது தந்தையும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தானின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள தனது சித்தப்பா ஷாபாஸ் ஷெரீப் ஆகியோரது முன்னிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வராகப் பதிவியேற்றார். இதைத் தொடர்ந்து உரையாற்றிய மரியம் நவாஸ், தனது தந்தை அலங்கரித்த பதவியில் தான் பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

    பஞ்சாப் மாகாணத்தின் ஒவ்வொரு பெண்ணும், பெண் முதல்வரைப் பார்த்து பெருமிதம் கொள்வதாகவும், இதே போல, பெண்கள் தலைமைப் பதவியேற்கும் சூழல் எதிர்காலத்திலும் தொடரும் என்ற நம்பிக்கை வந்துள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

    • பிரச்சினைகள் குறித்த விவாதம் மற்றும் தீர்வு எட்டப்படும்.
    • தனியார் துறையை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    சர்வதேச வர்த்தக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் உலக நாடுகளை சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொள்ளும் 13-வது அமைச்சர்கள் மாநாடு அபுதாபியில் துவங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாநாட்டில் வர்த்தக துறை சார்ந்த மிக முக்கிய முடிவுகள் எட்டப்படும்.

    உலக வர்த்தக அமைப்பை அணுகுவது, அறிவுசார் சொத்து மற்றும் சர்ச்சைகளுக்கு தீர்வு எட்டுவது என பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து 13-வது சர்வதேச வர்த்தக கூட்டமைப்பின் அமைச்சர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

     


    இன்று (பிப்ரவரி 26) அபுதாபியில் துவங்கியுள்ள 13-வது அமைச்சர்கள் மாநாடு பிப்ரவரி 29-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் உலக வர்த்தக கூட்டமைப்பு எல்லைக்குள் நடக்கும் பிரச்சினைகள் குறித்த விவாதம் மற்றும் தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த மாநாட்டில் உலக நாடுகளை சேர்ந்த வர்த்தக துறை அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் என பலர் கலந்து கொள்கின்றனர். இதில் மொத்தம் 175 மாநிலங்களை சேர்ந்த உறுப்பினர்கள், தனியார் துறையை சேர்ந்த தலைவர்கள், அரசு அல்லாத நிறுவனங்கள் மற்றும் சமூக பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்.

    இன்றைய 13-வது அமைச்சர்கள் மாநாட்டில், வர்த்தகம், நிலைத்தன்மை மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளில் ஒருங்கிணைந்து எதிர்கொள்வது, அதற்கான வாய்ப்புகள் மற்றும் வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து அமைச்சர்கள் ஆலோசித்தனர்.

    மேலும், சர்வதேச ஒத்துழைப்பை வளர்த்து பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.  

    • ரஷிய-உக்ரைன் போர் குறித்து இதுவரை டிரம்ப் உறுதியான கருத்து தெரிவிக்கவில்லை
    • பொய் தகவல்களை பரப்ப பில்லியன்களில் செலவு செய்கிறார் புதின் என்றார் ஜெலன்ஸ்கி

    ரஷிய-உக்ரைன் போர் தொடங்கி 2 வருடங்கள் கடந்த நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதி மற்றும் ராணுவ உதவியை தொடர்வதற்கு அமெரிக்க பாராளுமன்றம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தற்போதைய அதிபர் ஜோ பைடன் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.

    தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய-உக்ரைன் போர் குறித்து தனது நிலைப்பாட்டையும் உறுதியாக தெரிவிக்கவில்லை.

    தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளவராக கருதப்படும் டிரம்ப், புதினின் ஆதரவாளராக விமர்சிக்கப்படுகிறார்.

    இந்நிலையில், புதின் மற்றும் டிரம்ப் குறித்து ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்தார்.

    அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்ததாவது:

    இரண்டு வருடங்களுக்கு மேலாக நடக்கும் இப்போரில் இதுவரை உக்ரைன் நாட்டு வீரர்கள் 31,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    அமெரிக்காவில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை பரப்ப பில்லியன்களில் புதின் செலவு செய்து வருகிறார். தற்போது அவர் அந்த முயற்சியில் வெற்றி அடைந்தது விட்டாரோ என தோன்றுகிறது.

    ரஷியாவை ஆதரிக்க டிரம்ப் முடிவெடுத்தால், அவர் உக்ரைனுக்கு மட்டுமல்ல, அமெரிக்கர்களுக்கே எதிரானவராக கருதப்படுவார்.


    டிரம்ப், புதின் பக்கம் நிற்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    அமெரிக்க ராணுவம் ரஷிய ராணுவத்துடன் போர் புரிந்ததில்லை. அதனால் அவரது உண்மையான நோக்கங்களை அமெரிக்கர்கள் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் புதினை எதிர்த்து போரிட்டு வருகிறோம்; எங்களுக்கு தெரியும்.

    நாங்கள் இப்போரில் வெற்றி பெறுவது எங்கள் கூட்டாளிகளான மேற்கத்திய நாடுகளின் கைகளில் உள்ளது.

    இவ்வாறு புதின் தெரிவித்தார்.

    • சோபியா என்ற அந்த சிறுமி உலக சாதனை படைக்கும் போது அங்கிருந்த ஒவ்வொரு ஜெர்சியையும் இடுப்பு வரை இழுக்க வேண்டி இருந்தது.
    • முதலில் சிறிய அளவிலான ஜெர்சியும் பின்னர் அளவில் பெரிய ஜெர்சியும் அணிந்திருந்தார்.

    சமீப காலமாக உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பலரும் பல்வேறு வகைகளில் உலக கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு சிறுமி ஒரே நேரத்தில் 45 ஜெர்சிகளை அணிந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

    சோபியா என்ற அந்த சிறுமி உலக சாதனை படைக்கும் போது அங்கிருந்த ஒவ்வொரு ஜெர்சியையும் இடுப்பு வரை இழுக்க வேண்டி இருந்தது. சோபியாவை போலவே அவரது தாயாரும் உலக சாதனை படைத்துள்ளார். முதலில் சிறிய அளவிலான ஜெர்சியும் பின்னர் அளவில் பெரிய ஜெர்சியும் அணிந்திருந்தார்.

    சோபியா உலக சாதனையை தான் வசிக்கும் இடத்தில் உள்ள பொது நூலகத்தில் படைத்தார். முன்னதாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 11 வயது சிறுவன் தோமஸ் உமாம்போ ஒரே நேரத்தில் 40 ஜெர்சிகளை அணிந்திருந்ததே உலக சாதனையாக இருந்தது. அதனை சோபியா முறியடித்துள்ளார்.

    • பேராசிரியரான அசோக் வீரராகவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    • பொறியியல் துறையில் சாதனை படைத்தற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

    டெக்சாஸ்:

    அமெரிக்காவில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெக்சாசின் மிக உயரிய கல்வி விருதான எடித் மற்றும் பீட்டர் ஓடோனல் விருது இந்திய வம்சாவளியை சேர்ந்த கணிணி பொறியாளர் மற்றும் பேராசிரியரான அசோக் வீரராகவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    பொறியியல் துறையில் சாதனை படைத்தற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

    • 1984ல் வேல்ஸ் (Wales) பகுதியில் சுரங்க தொழிலாளர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர்
    • தாக்கப்படும் அபாயம் இருந்தும் இங்கு வந்து உதவினர் என உக்ரைன் தொழிலாளர்கள் கூறினர்

    கடந்த 2022 பிப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர், 2 ஆண்டுகளை கடந்து தீவிரமாக நடைபெற்று வருவதால், உக்ரைனில் அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் மக்கள் பரிதவிக்கின்றனர்.

    நூற்றுக்கணக்கான உக்ரைன் சுரங்க தொழிலாளர்களும் ரஷியாவிற்கு எதிராக போரில் களம் இறங்கி உள்ளனர்.

    1984ல் ஐரோப்பாவின் வேல்ஸ் (Wales) பகுதியில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உக்ரைன், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து சுரங்க தொழிலாளர்களும் ஆதரவளித்தனர்.

    நீண்ட நாள் நடைபெற்ற இந்த வேலை நிறுத்தத்தினால் வருவாய் இல்லாமல் தவித்த அந்த தொழிலாளர்களுக்கு உலகெங்கும் இருந்து பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது.


    அப்போது சோவியத் யூனியன் (Soviet Union) என அழைக்கப்பட்ட ஒருங்கிணைந்த ரஷியாவில், உக்ரைன் பகுதியில் இருந்த சுரங்க தொழிலாளர்களில் ஏராளமானவர்கள், வெல்ஷ் (Welsh) சுரங்க தொழிலாளர்களுக்கு பலவித உதவிப்பொருட்களை அனுப்பி வைத்தனர்.

    சுமார் 40 வருடங்கள் கடந்த பிறகும், தங்களுக்கு உக்ரைனியர்கள் செய்த உதவியை மறக்காத வெல்ஷ் பணியாளர்கள், தங்களின் ஊதியத்தை நன்கொடையாக வழங்கி, பல சரக்கு வாகனங்களில் மருந்து, மளிகை உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களை தெற்கு வேல்ஸ் பகுதியில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) நகருக்கு, சாலை வழியே கொண்டு சென்று வழங்கினர்.

    இது குறித்து உக்ரைன் சுரங்க தொழிலாளர்கள், "சுரங்க தொழிலாளர்கள் அனைவரும் ஒரே இனம் என்பதை 1984ல் நாங்கள் மறக்கவில்லை. அதே போல் அவர்களும் எங்களை இப்போது மறக்கவில்லை. குண்டு வீச்சில் தாக்கப்படும் அபாயம் உள்ளதை அறிந்தும் அவர்கள் துணிந்து வந்து எங்களுக்கு உதவினர்" என பெருமிதத்துடன் கூறுகின்றனர்.

    • அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது.
    • இஸ்ரேல் தூதரக அலுவலகம் உள்ளது. விமான படை வீரர் உடை அணிந்த ஒருவர் இந்த அலுவலகத்துக்கு வந்தார்.

    வாஷிங்டன்:

    பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் படையினர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இந்த சண்டை நடந்து வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் என 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.

    காசாவில் நடந்து வரும் போரை நிறுத்துமாறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வந்த போதிலும் அதனை இஸ்ரேல் நிராகரித்து வருகிறது. தொடர்ந்து காசாவில் குண்டுகளை வீசி வருகிறது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக அமெரிக்காவில் விமான படையை சேர்ந்த வீரர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரக அலுவலகம் உள்ளது. நேற்று பிற்பகல் விமான படை வீரர் உடை அணிந்த ஒருவர் இந்த அலுவலகத்துக்கு வந்தார். திடீரென அவர் உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

    தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது. இதனால் அவர் அலறி துடித்தார். இதைபார்த்த அங்கிருந்தவர்கள் அவர் மீது பற்றிய தீயை அணைத்து அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    அவர் எதற்காக இந்த முடிவை மேற்கொண்டார் என தெரியவில்லை. இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அவர் தீக்குளிப்பதற்கு முன்பு பேசியது இடம் பெற்றுள்ளது. அவர் இனிமேலும் நான் இனப்படு கொலைக்கு (காசாவில்)உடந்தையாக இருக்க மாட்டேன். நான் ஒரு தீவிர எதிர்ப்பு செயலில் ஈடுபட உள்ளேன் என கூறி உள்ளதாக தெரிகிறது.

    இந்த தீக்குளிப்பு சம்பவத்தை தொடர்ந்து இஸ்ரேல் தூதரகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×