என் மலர்tooltip icon

    உலகம்

    • அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது.
    • இஸ்ரேல் தூதரக அலுவலகம் உள்ளது. விமான படை வீரர் உடை அணிந்த ஒருவர் இந்த அலுவலகத்துக்கு வந்தார்.

    வாஷிங்டன்:

    பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் படையினர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இந்த சண்டை நடந்து வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் என 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.

    காசாவில் நடந்து வரும் போரை நிறுத்துமாறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வந்த போதிலும் அதனை இஸ்ரேல் நிராகரித்து வருகிறது. தொடர்ந்து காசாவில் குண்டுகளை வீசி வருகிறது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக அமெரிக்காவில் விமான படையை சேர்ந்த வீரர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரக அலுவலகம் உள்ளது. நேற்று பிற்பகல் விமான படை வீரர் உடை அணிந்த ஒருவர் இந்த அலுவலகத்துக்கு வந்தார். திடீரென அவர் உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

    தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது. இதனால் அவர் அலறி துடித்தார். இதைபார்த்த அங்கிருந்தவர்கள் அவர் மீது பற்றிய தீயை அணைத்து அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    அவர் எதற்காக இந்த முடிவை மேற்கொண்டார் என தெரியவில்லை. இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அவர் தீக்குளிப்பதற்கு முன்பு பேசியது இடம் பெற்றுள்ளது. அவர் இனிமேலும் நான் இனப்படு கொலைக்கு (காசாவில்)உடந்தையாக இருக்க மாட்டேன். நான் ஒரு தீவிர எதிர்ப்பு செயலில் ஈடுபட உள்ளேன் என கூறி உள்ளதாக தெரிகிறது.

    இந்த தீக்குளிப்பு சம்பவத்தை தொடர்ந்து இஸ்ரேல் தூதரகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நைஜீரிய நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள பர்கினோ பாசோ கிராமம் உள்ளது.
    • திடீரென துப்பாக்கி ஏந்திய ஒரு கும்பல் தேவாலயத்திற்குள் நுழைந்தது.

    அபுஜா:

    நைஜீரிய நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள பர்கினோ பாசோ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது.

    இதில் ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர். அப்போது திடீரென துப்பாக்கி ஏந்திய ஒரு கும்பல் தேவாலயத்திற்குள் நுழைந்தது. அவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர்.

    இந்த கோர தாக்குதலில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    • ரஷியாவுக்கு எதிரான போர்க்களத்தில் உக்ரைன் வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.
    • உக்ரைனுக்கான ராணுவ உதவிக்கு அமெரிக்கா நிச்சயமாக ஒப்புதல் அளிக்கும் என ஜெலன்ஸ்கி கூறினார்.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி 2 ஆண்டு முடிந்து, மூன்றாம் ஆண்டாக தொடர்ந்து நடந்து வருகிறது. ரஷியாவுக்கு எதிரான போர்க்களத்தில் உக்ரைன் வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    உக்ரைனின் வெற்றி மேற்கத்திய நாடுகளின் ஆதரவைச் சார்ந்துள்ளது. உக்ரைனுக்கான ராணுவ உதவிக்கு அமெரிக்கா நிச்சயமாக ஒப்புதல் அளிக்கும்.

    ரஷியாவுடனான 2 ஆண்டு போரில் 31,000 உக்ரைன் வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர். ஆனால் ரஷிய அதிபர் புதினோ, ஒன்றரை முதல் 3 லட்சம் உக்ரைன் வீரர்கள் உயிரிழந்ததாக பொய் சொல்லி வருகிறார். எங்கள் வீரர்களின் இழப்புகள் ஒவ்வொன்றும் எங்களுக்கு ஒரு பெரிய இழப்பு என தெரிவித்தார்.

    ரஷிய அதிபர் புதினுடன் பேசுவீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, உங்களால் காது கேளாத நபருடன் பேசமுடியுமா? எதிரிகளைக் கொல்லும் ஒரு மனிதனுடன் பேசமுடியுமா? அவர் 2030-ம் ஆண்டு வரை அதிகாரத்தில் இருக்க நினைக்கிறார். நாங்கள் விரைவில் வீழ்த்த விரும்புகிறோம் என்றார்.

    • மவுன்ட் எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் வடக்கில் திபெத்தும், தெற்கில் நேபாளமும் உள்ளன
    • 1953ல் இருந்து சுமார் 300 பேர் மலையேறும் முயற்சியில் உயிரிழந்துள்ளனர்

    இமயமலைத் தொடரில் சீனா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் உள்ள உலகின் உயரமான மலைச்சிகரம், மவுன்ட் எவரெஸ்ட் (Mount Everest).

    இதன் உயரம் 8,849 மீட்டர் (29,032 அடி).

    மவுன்ட் எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் வடக்கில் திபெத்தும், தெற்கில் நேபாளமும் உள்ளன.

    எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொடும் சாதனைக்காக பலரும் தங்களை தயார்படுத்தி கொண்டு உயிரை பணயம் வைத்து கடினமான இந்த மலையேற்றத்தில் ஈடுபடுவது வழக்கம்.

    1953ல் இருந்து சுமார் 300 பேர் இந்த முயற்சியில் உயிரிழந்துள்ளனர்.

    எவரெஸ்ட் பேஸ் கேம்ப் (Everest base camp) எனப்படும் மலையடிவார தளம் 18,000 அடி உயரத்தில் உள்ளது. அங்கிருந்து மலையுச்சியை அடையும் முயற்சியில் பனிமழை, பனிப்புயல், பனிச்சரிவு உள்ளிட்ட காரணங்களால், காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பது மிக கடினமான செயலாக இருந்து வருகிறது.

    இந்நிலையில், இச்சிக்கலை தவிர்க்கும் முயற்சியாக நேபாள அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

    இது குறித்து பேசிய நேபாள சுற்றுலா துறை தலைமை அதிகாரி ராகேஷ் குருங், "எவரெஸ்ட் மலையேறும் முயற்சியில் ஈடுபடும் அனைத்து வீரர்களுக்கும் அவர்களின் உடையில் அணிந்து கொள்ளும் வகையில் ஒரு மின்னணு "சிப்" அரசாங்கத்தால் வழங்கப்படும். இதன் மூலம் மலையுச்சியை அடையும் முயற்சி பாதுகாப்பானதாக இருக்கும். மேலும், அவசர காலகட்டங்களில் தேடுதல் பணிகளை எளிதாக்கவும் முடியும்" என தெரிவித்தார்.

    2023ல்  ஒரு இந்தியர், ஒரு சீனர், 4 நேபாளிகள் உட்பட 12 மலையேறும் வீரர்கள் உயிரிழந்ததாக நேபாள சுற்றுலாத்துறை அறிவித்தது.

    • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பினர் நாடுகள் உள்ளன
    • 2 வருடங்களாக பலர் பல துன்பங்களை அனுபவிக்கின்றனர் என்றார் பொதுச்செயலாளர்

    இரண்டாம் உலகப் போருக்கு பிறகு மீண்டும் உலக நாடுகளுக்கிடையே போர்கள் தோன்றாமல் இருக்க அமெரிக்காவின் தலைமையில் பல உலக நாடுகளை உள்ளடக்கி உருவான சர்வதேச அமைப்பு, ஐக்கிய நாடுகள் (United Nations) அமைப்பு.

    ஐ.நா. சபையின் முக்கிய அங்கம் ஐ.நா. பாதுகாப்பு சபை (UN Security Council).

    இதில் 15 உறுப்பினர் நாடுகள் உள்ளன. இவற்றில் நிரந்தர உறுப்பினர் நாடுகள் 5.

    2022 பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர் நேற்றுடன் 2-வருட காலகட்டத்தை நிறைவு செய்துள்ளது.

    உலக நாடுகள் மற்றும் ஐ.நா. சபை ஆகியவற்றின் போர்நிறுத்த கோரிக்கையை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் புறக்கணித்து விட்டார்.


    இப்பின்னணியில், ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில், நேற்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் (Antonio Guterres) உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது:

    2 வருடங்களாக நடக்கும் இப்போரினால் ஐரோப்பிய மக்களின் இதயத்தில் ஒரு திறந்த, ஆறாத காயம் ஏற்பட்டுள்ளது.

    சர்வதேச நாடுகளுக்கு இடையேயான சச்சரவுகள் அமைதியான வழிமுறையிலேயே தீர்க்கப்பட வேண்டும்.

    உக்ரைனில் பலர் தங்கள் குழந்தைகளை எப்போது இழந்து விடுவோமோ என அச்சத்திலேயே வாழ்கின்றனர்.

    ரஷிய வீரர்களும் இப்போரினால் உயிரிழக்கின்றனர்.

    இரண்டு வருடங்களாக பலர் பல துன்பங்களை அனுபவிப்பதை பார்த்து விட்டோம். போதும்.

    சர்வதேச சட்டங்களின்படி அமைதி ஏற்படுத்த இதுவே சரியான தருணம்.

    இவ்வாறு குட்டெரஸ் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் பாதுகாப்பு சபையின் உறுப்பினர்கள், பல நாடுகளின் அமைச்சர்கள், தூதர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ரஷிய உக்ரைன் போரினால் இதுவரை உக்ரைனில் பொதுமக்களில் 10,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    • பிரான்ஸ் தேசிய கொடியை மஹ்ஜோபி அவமதித்து வீடியோ பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது
    • நாட்டை அவமதிப்பவர்களை எளிதாக தப்பி செல்ல விட மாட்டோம் என்றார் டர்மனின்

    பிரான்சில் பக்னோல்ஸ்-சர்-செஸ் (Bagnols-sur-Ceze) பகுதியில் மத பணிகளில் ஈடுபட்டு வந்தவர் இமாம் மஹ்ஜோப் மஹ்ஜோபி (Mahjoub Mahjoubi). துனிசியா (Tunisia) நாட்டை சேர்ந்த மஹ்ஜோபி 38 வருடங்களுக்கு முன்பே பிரான்சில் குடியேறியவர்.

    மஹ்ஜோபி ஒரு சமூக வலைப்பதிவில் பிரான்ஸ் நாட்டு தேசிய கொடியை "சாத்தான்" என பொருள்பட பேசி ஒரு வீடியோவை பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    பிரான்ஸ் அரசின் கவனத்திற்கு இந்த பதிவு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து மஹ்ஜோபியை நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு உள்துறை உத்தரவிட்டது.

    மஹ்ஜோபி வெளியிட்டுள்ள கருத்துகள் பிரெஞ்சு குடியரசின் அடிப்படை சித்தாந்தங்களுக்கு எதிராக உள்ளதாகவும், பெண்களுக்கு எதிராகவும், தவறான சிந்தனைகளை ஊக்குவித்து யூத மக்களுக்கு பதட்டத்தை உண்டாக்கும் வகையில் உள்ளதாகவும் பிரான்ஸ் அரசு தெரிவித்தது.


    ஆனால், மஹ்ஜோபி தனது கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் தனக்கு தேசிய கொடியை அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார்.

    "கைது செய்யப்பட்ட 12 மணி நேரத்தில் மஜ்ஜோபி பிரெஞ்சு எல்லையை விட்டே வெளியேற்றப்பட்டார். தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். நாட்டிற்கு எதிரானவர்கள் எளிதாக தப்பி செல்ல விட மாட்டோம்" என பிரெஞ்சு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் (Gerald Darmanin) கூறினார்.

    இந்நிலையில், துனிசியா தலைநகர் துனிஸ் (Tunis) செல்லும் விமானத்தில் அவர் ஏற்றப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அரசின் இந்த உத்தரவிற்கு எதிராக வழக்கு தொடுக்க போவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

    வெளிநாடுகளிலிருந்து பிரான்சிற்கு வந்து வாழ்பவர்களை அந்நாடு வெளியேற்ற விரும்பினால், உடனடியாக செயல்படுத்தும் வகையில் அந்நாட்டு குடியுரிமை சட்டங்களில் சமீபத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பாசில்கான் மரணம் தொடர்பாக அவரது குடும்பத்திற்கு இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
    • நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம், பாசில்கானின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் உள்ளது.

    இந்தியாவை சேர்ந்தவர் பாசில்கான் (27). இவர் அமெரிக்காவில் தி ஹெச்சிங்கர் ஊடகத்தில் பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார். பாசில்கான், நியூயார்க்கின் ஹார்லெமில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்தார். இந்த நிலையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இ-பைக் பேட்டரியில் ஏற்பட்ட தீ, குடியிருப்பில் பரவியது. இதனால் அங்கு வசிப்பவர்கள் வெளியேற முயன்றனர். ஆனால் சிலர் தீ, புகை மூட்டத்தில் சிக்கி கொண்டனர். தீ விபத்தில் பாசில்கான் சிக்கி உயிரிழந்தார். தீயில் இருந்து தப்பிக்க 17 பேர் ஜன்னல்கள் வழியாக குதித்தனர். காயம் அடைந்த அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பாசில்கான் மரணம் தொடர்பாக அவரது குடும்பத்திற்கு இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய தூதரகம் கூறும்போது, "ஹார்லெமில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான தீ விபத்தில் இந்தியாவின் பாசில்கான் இறந்ததைப் பற்றி அறிந்து வருத்தமடைந்தோம். நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம், பாசில்கானின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் உள்ளது. அவரது குடும்பத்துக்கு உதவிகளை தொடர்ந்து வழங்குவோம்"என்று தெரிவித்தது.

    • டிரம்பிற்கு வாய்ப்பு அதிகம் இருந்தும் நிக்கி ஹாலே போட்டியில் பின்வாங்கவில்லை
    • இது போன்ற பேச்சுக்கள் கட்சியின் வெற்றி வாய்ப்பை தகர்த்து விடும் என்றார் நிக்கி ஹாலே

    2024 வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஆகியோர் களமிறங்கி உள்ளனர்.

    குடியரசு கட்சி சார்பில் தெற்கு கரோலினாவின் முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே, டிரம்பிற்கு போட்டியாக, தனக்கு ஆதரவு கோரி பிரசாரம் செய்து வருகிறார்.

    தற்போது நிலவும் சூழலில் அமெரிக்காவில் குடியரசு கட்சியினரின் ஆதரவு டொனால்ட் டிரம்பிற்கே அதிகமாக உள்ளது. ஆனால், நிக்கி ஹாலே போட்டியில் இருந்து பின்வாங்கவில்லை.

    இந்நிலையில், தெற்கு கரோலினாவில் தனது கட்சியினரிடம் ஆதரவு கோரி பிரசாரம் செய்யும் போது கருப்பின மக்கள் குறித்து டொனால்ட் டிரம்ப் சில கருத்துகளை தெரிவித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    கருப்பின மக்களுக்கு என்னை பிடிக்கும். என்னை போலவே அவர்களும் வஞ்சிக்கப்பட்டனர்.

    நான் பாதிக்கப்பட்டது போல அவர்களும் பாதிக்கப்பட்டதால் அவர்கள் என்னை தங்களில் ஒருவனாக பார்க்கின்றனர்.

    என்னை காவலில் எடுத்து போது வெளியிடப்பட்ட எனது "மக் ஷாட்" (mug shot) புகைப்படம் அவர்களை மிகவும் கவர்ந்துள்ளது. ஏனெனில், பிறரை காட்டிலும் கருப்பின மக்கள் அதிகமாக அது போல் காவல்துறையினரால் புகைப்படம் எடுக்கப்பட்டவர்கள்.

    இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.

    ஆனால், டிரம்பின் இந்த கருத்தை நிக்கி ஹாலே விமர்சித்துள்ளார்.

    இது குறித்து நிக்கி ஹாலே தெரிவித்ததாவது:

    கருப்பின மக்களை இவ்வாறு அருவெறுக்கத்தக்க வகையில் பேசியதை கண்டிக்கிறேன்.

    டிரம்பை மனம் போன போக்கில் பேச விட்டால் இதுதான் நடக்கும்.

    பொதுத் தேர்தல் முடியும் வரை அவரிடமிருந்து இது போன்ற பேச்சுக்களும், குழப்பங்களும் அதிகம் வரும். இது போன்ற பேச்சுக்கள் குடியரசு கட்சியின் வெற்றி வாய்ப்பை தகர்த்து விடும்.

    அதனால்தான் டிரம்பால் ஒரு பொதுத்தேர்தலை கூட வெல்ல முடியாது என கூறி வருகிறேன்.

    இவ்வாறு ஹாலே கூறினார்.

    நிக்கி ஹாலேவை போல், "தன் மேல் உள்ள வழக்குகளால் கருப்பின மக்கள் அவரை விரும்புவார்கள் என டிரம்ப் கூறுவது அவர்களை அவமானப்படுத்துவது போல் உள்ளது" என ஜனநாயக கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.

    • நேற்றுடன், ரஷிய-உக்ரைன் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்தது
    • இங்கிலாந்து உக்ரைனுக்கு அளிக்கும் உதவிகளை வரவேற்கிறேன் என்றார் மன்னர்

    கடந்த 2022 பிப்ரவரி 24 அன்று, தனது அண்டை நாடான உக்ரைனை, ரஷியா, "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் தீவிரமாக போரிட்டு வருகிறது.

    நேற்றுடன், ரஷிய-உக்ரைன் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்தது. ஆனால், தற்போது வரை போர் நிற்பதற்கான அறிகுறிகள் இல்லை.

    போர்நிறுத்தம் குறித்து உலக நாடுகள் மற்றும் ஐ.நா. சபை அமைப்பினர் விடுத்த கோரிக்கைகளை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் புறக்கணித்து விட்டார்.

    இப்பின்னணியில், உக்ரைனுக்கு அமெரிக்காவில் இருந்து கிடைத்து வந்த நிதியுதவிகள் தொடர்ந்து கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், உக்ரைனுக்கு நிதியுதவி தொடர்ந்து அளிக்க போவதாக உறுதியளித்தார்.


    இந்நிலையில், இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ், உக்ரைனை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    மன்னர் சார்லஸ் தெரிவித்திருப்பதாவது:

    எந்த வித முன்னறிவிப்போ, தூண்டுதலோ இன்றி ஒரு தாக்குதலை உக்ரைன் சந்தித்தது.

    அந்நாட்டு மக்கள் வார்த்தையில் விவரிக்க முடியாத அளவு துன்பத்தையும், அடக்குமுறையையும் சந்தித்து வருகின்றனர்.

    இங்கிலாந்து மற்றும் அதன் நட்பு நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து அளித்து வரும் உதவிகளை வரவேற்கிறேன். இங்கிலாந்தில் உக்ரைன் வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் ராணுவ பயிற்சியையும் பாராட்டுகிறேன்.

    அத்தியாவசிய பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு நிலவுகின்ற நேரத்தில் உக்ரைன் மக்களுக்கு சர்வதேச நாடுகள் உதவுவது பாராட்டத்தக்கது.

    மிகவும் நெருக்கடியான காலகட்டத்திலும் உக்ரைன் மக்கள் அசாத்திய மன உறுதியையும், வீரத்தையும் காட்டி வருவதை பாராட்டுகிறேன்.

    இவ்வாறு மன்னர் சார்லஸ் தெரிவித்தார்.

    பிப்ரவரி 6 அன்று மன்னர் சார்லசுக்கு புற்று நோய் இருப்பதாக கண்டறியப்பட்டதும், அவர் பூரண நலம் பெற உலகெங்கும் உள்ள மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு செய்தி அனுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.

    • நவால்னியின் தாயார், தனது மகனின் உடலை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென விரும்புகிறார்.
    • உடல் சிதைந்து வருவதால், முடிவெடுக்க அதிக நேரம் இல்லை என கூறி அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர்.

    மாஸ்கோ:

    ரஷிய எதிர்க்கட்சி தலைவரும், அதிபர் புதினின் தீவிர எதிர்ப்பாளருமான அலெக்சி நவால்னி ஊழல் வழக்கில் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு ஆர்க்டிக் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    கடந்த வாரம் அவர் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். நவால்னியின் மரணத்துக்கு அதிபர் புதினே காரணம் என பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் புதின் அரசு அதை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

    இந்த நிலையில் சிறையில் உயிரிழந்த தனது கணவரின் உடலை ஒப்படைக்க புதின் மறுப்பதாக நவால்னியின் மனைவி யூலியா நவால்னயா குற்றம்சாட்டியுள்ளார். பேட்டி ஒன்றில் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நவால்னியின் தாயார், தனது மகனின் உடலை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென விரும்புகிறார். ஆனால் அதிகாரிகள் நவால்னி உடலை ஆர்க்டிக் சிறையிலேயே அடக்கம் செய்ய ஒப்புக்கொள்ளும்படி அவரது தாயை அச்சுறுத்துகின்றனர். உடல் சிதைந்து வருவதால், முடிவெடுக்க அதிக நேரம் இல்லை என கூறி அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர்.

    என் கணவரின் உடலை எங்களிடம் கொடுங்கள். நீங்கள் அவர் உயிருடன் இருந்தபோது அவரை சித்ரவதை செய்தீர்கள். இப்போது அவர் இறந்த பிறகும் தொடர்ந்து சித்ரவதை செய்கிறீர்கள். இதன் மூலம் இறந்துபோனவரின் உடலை நீங்கள் கேலி செய்கிறீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்காவில் மட்டும் கூகுள் பே சேவை வரும் ஜூன் மாதம் முதல் நிறுத்தப்படுகிறது.
    • இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் இந்த சேவை பயன்பாட்டில் இருக்கும் என தெரிவித்துள்ளது.

    வாஷிங்டன்:

    கூகுள் நிறுவனத்தின் பே ஆப் என்ற செயலி உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. யுபிஐ மூலம் பரிவர்த்தனைகள் நடைபெறுவதால் பயனாளர்களின் செல்போன் எண் இருந்தாலே அவர்களுக்கு பணம் அனுப்பவும், அவர்களிடமிருந்து பணத்தைப் பெறவும் முடிகிறது.

    இந்தச் செயலியை உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவிலும் இந்த செயலி இல்லாத செல்போன்களே இல்லை என்னும் அளவுக்கு இதன் பயன்பாடு உள்ளது. டீக்கடை முதல் பெரிய மால்கள் வரை அனைத்து இடங்களிலும் கூகுள் பே பயன்பாடு அதிகரித்துள்ளது. அமெரிக்காவிலும் லட்சக்கணக்கானோர் கூகுள் பே பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், வரும் ஜூன் மாதம் 4-ம் தேதி முதல் அமெரிக்காவில் கூகுள் பே வசதி நிறுத்தப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

    அமெரிக்காவில் மட்டும்தான் இந்த சேவை நிறுத்தப்படுகிறது. இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் வழக்கம்போல் அந்த சேவை பயன்பாட்டில் இருக்கும். கூகுள் பே செயலி சேவை நிறுத்தப்பட்டாலும் அதில் உள்ள வசதிகளை கூகுள் வாலட்டில் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் பே ஆப்பை விட கூகுள் வாலட்டின் பயன்பாடு அமெரிக்காவில் மிக அதிகமாக இருப்பதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    கூகுள் நிறுவனத்தின் இந்த திடீர் அறிவிப்பு அமெரிக்கர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது.

    • குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் தேர்தலில் டிரம்ப், நிக்கி ஹாலே இடையே போட்டி நிலவுகிறது.
    • தெற்கு மாகாணத்தில் நடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். இந்த ஆண்டு அவரது பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது.

    அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும். அதற்கு மாகாணங்கள் தோறும் வாக்குப்பதிவு நடைபெறும். இரு கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள்.

    இதற்கிடையே, அமெரிக்க அதிபர் தேர்தல் களம் களைகட்டத் தொடங்கியுள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. இதில் முன்னாள் அதிபர் டிரம்ப், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரும், தெற்கு கரோலினா மாகாண முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹாலே இடையே போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய தெற்கு கரோலினா மாகாணத்தில் நடந்த தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். தெற்கு மாகாணத்தில் நடந்த வாக்குப்பதிவில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

    ஏற்கனவே நியூ ஹாம்ப்ஷையர் மற்றும் லோவா காகசஸ் மாகாணங்களில் நடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×