என் மலர்tooltip icon

    உலகம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தோனேசியாவில் இன்று காலை 11.22 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

    ஜகார்த்தா:

    பல்வேறு தீவுக்கூட்டங்களைக் கொண்ட இந்தோனேசியா பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் அருகே கடல்பகுதியில் இன்று காலை 11.22 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது என அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக பூடான் சென்றார்.
    • பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    திம்பு:

    பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக பூடான் புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பூடானில் உள்ள பரோ சர்வதேச விமான நிலையத்தில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் அவரை வரவேற்றனர்.

    இந்நிலையில், பூடான் அரசர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் பிரதமர் ஷேரிங் டோப்கே ஆகியோர் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ விருதை அளித்தனர். விருதைப் பெற்றுக்கொண்டதும் பிரதமர் மோடி இருவருக்கும் நன்றி தெரிவித்தார்.

    இந்த விருது தரவரிசை மற்றும் முன்னுரிமையின்படி, ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ வாழ்நாள் சாதனைக்கான அலங்காரமாக நிறுவப்பட்டது. பூடானில் உள்ள மரியாதை அமைப்பின் உச்சமாக உள்ளது. இது அனைத்து உத்தரவுகள், அலங்காரங்கள் மற்றும் பதக்கங்களை விட முதன்மையானது.

    இரு நாடுகளின் உறவை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

    • காலிஸ்தான் ஆதரவாளர் குர்பிரித்சிங் என்பவர் தாக்கி காயப்படுத்தியதாக புகார்கள் எழுந்தது.
    • பின்னர் அவர் ஜல்வர்த் கிரவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் வசித்து வரும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது இந்திய தூதரகம் முன்பு போராட்டமும் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டன் மேற்கு பகுதியில் உள்ள சவுத்ஹாலில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி இந்திய சுதந்திரதின விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான இந்திய வம்சாவளியினர் கலந்து கொண்டனர். அப்போது ஆஷிஷ் சர்மா மற்றும் நானக் சிங் ஆகிய 2 இந்திய வம்சாவளியினரை காலிஸ்தான் ஆதரவாளர் குர்பிரித்சிங் என்பவர் தாக்கி காயப்படுத்தியதாக புகார்கள் எழுந்தது.

    இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது. இச் சம்பவம் தொடர்பாக குர்பி ரித் சிங்கை இங்கிலாந்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜல்வர்த் கிரவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 28 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    • 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி முதன் முறையாக நாசா விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் அப்பல்லோ விண்கலம் மூலம் நிலவில் தரை இறங்கினார்.
    • நாசா விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் கால் பதித்த இடத்தில் ஒரு கருவியை வைத்தார்.

    வாஷிங்டன்:

    நிலவில் என்ன இருக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ( இஸ்ரோ) கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 22 -ந்தேதி சந்திரயான்- 2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது.

    இதில் இருந்து பிரிந்த தகவல் தொடர்பு கருவியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் தொடர்ந்து நிலவை சுற்றி வருகிறது.

    சுமார் 3 ஆண்டு காலம் நிலவை சுற்றும் இந்த ஆர்பிட்டர் நிலவின் கரடு முரடான நிலப்பரப்பு உள்ளிட்ட பல்வேறு அரிய வகை புகைப்படங்களை இஸ்ரோவுக்கு அனுப்பி வருகிறது.

    54 ஆண்டுகளுக்கு முன்பு 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி முதன் முறையாக நாசா விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் அப்பல்லோ விண்கலம் மூலம் நிலவில் தரை இறங்கினார். இதன் மூலம் நிலவில் கால் பதித்த முதல் விண்வெளி வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அப்போது அவர் தான் கால் பதித்த இடத்தில் ஒரு கருவியை வைத்தார்.

    அந்த கருவி தற்போதும் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தை தற்போது சந்திரயான்-2 ஆர்பிட்டர் வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளது. இந்த புகைப்படத்தை இஸ்ரோவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

    • 25 கிலோ மீட்டர் தூரத்தில் படகு சென்று கொண்டிருந்த போது கடலில் திடீரென கவிழ்ந்தது.
    • இந்தோனேஷியா கடலோர படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    மியுபோபா:

    நமது பக்கத்து நாடான வங்காள தேசத்தில் வசித்து வரும் ஏராளமான அகதிகள் கடல் வழியாக இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு படகில் தப்பி செல்வது தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இவர்கள் சட்டவிரோத மாக பாதுகாப்பு இல்லாமல் படகில் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிர் இழந்து வருகின்றனர். இந்நிலையில் வங்காள தேசத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் படகில் இந்தோனேஷியா சென்று கொண்டிருந்தனர். இந்தோனேஷியா வடக்கில் கோலா பூடான் கடற்கரையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் படகு சென்று கொண்டிருந்த போது கடலில் திடீரென கவிழ்ந்தது.

    இதனால் படகில் பயணம் செய்த அகதிகள் கடலில் விழுந்து தத்தளித்தனர். இது பற்றி அறிந்ததும் இந்தோனேஷியா கடலோர படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் தத்தளித்த 60 பேரை அவர்கள் பத்திரமாக மீட்டனர். மற்றவர்கள் கதி என்ன? என்று தெரியவில்லை.அவர்களை கடலோர படையினர் தேடி வருகின்றனர்.

    • நிர்வாணமாக உடற்பயிற்சி செய்யும் போது தனித்துவமான அணுகுமுறையை பின்பற்றியதாகவும், இதன் மூலம் எடை குறிப்பிட்ட அளவு குறைந்ததாகவும் கூறுகிறார்கள்.
    • பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    பிரேசில் நாட்டின் சாவ் பாலோ பகுதியை சேர்ந்த ஜோடி பெல்லா மாண்டோவானி- வாக்னர் ஒபெரா. இந்த ஜோடியினர் தங்கள் உடற்பயிற்சி கூடத்தில் நிர்வாணமாக உடற்பயிற்சி செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். அவர்கள் அங்கு நிர்வாணமாக உடற்பயிற்சி செய்யும் போது தனித்துவமான அணுகுமுறையை பின்பற்றியதாகவும், இதன் மூலம் எடை குறிப்பிட்ட அளவு குறைந்ததாகவும் கூறுகிறார்கள்.

    மேலும் அதிக கலோரிகள் கிடைத்ததாகவும், இந்த முயற்சி தங்களின் பிணைப்பை வலுப்படுத்த உதவியது மட்டுமின்றி, உடல் தகுதிக்கும் பங்களித்ததாக ஜோடியினர் தெரிவித்தனர்.

    இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகிய நிலையில், பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • வாழ்க்கையில் ரெயில் நிலையம் முக்கிய பங்கு வகித்த நிலையில், தனக்கு பிடித்த ரெயில் நிலையத்தின் பெயரை தனது பெயரில் சேர்க்க கவேஜா விரும்பினார்.
    • தனது மகள்களுடன் விவாதித்த போது அவர்கள் ரெஹானா கவேஜா என்ற அவரது பெயரின் நடுவில் அந்த ரெயில் நிலைய பெயரை இணைக்க அறிவுறுத்தினர்.

    இங்கிலாந்து நாட்டில் மேற்கு லண்டனில் உள்ள மேரி லேபோன் ரெயில் நிலையத்தில் ரெஹானா கவேஜா என்ற பெண் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். அங்கு ஆபரேட்டர் நெட்வொர்க் பணியில் தொடங்கிய அவரது பயணம் பாதுகாப்பு பிரிவு மேலாளர் வரை உயர்ந்தது. அவரது வாழ்க்கையில் ரெயில் நிலையம் முக்கிய பங்கு வகித்த நிலையில், தனக்கு பிடித்த ரெயில் நிலையத்தின் பெயரை தனது பெயரில் சேர்க்க கவேஜா விரும்பினார்.

    அதன்படி கவேஜா, மேரி லேபோன் என்ற ரெயில் நிலையத்தின் பெயரை தனது பெயரில் முதல் பெயராக இணைக்க முடிவு செய்தார். இதுகுறித்து அவர் தனது மகள்களுடன் விவாதித்த போது அவர்கள் ரெஹானா கவேஜா என்ற அவரது பெயரின் நடுவில் அந்த ரெயில் நிலைய பெயரை இணைக்க அறிவுறுத்தினர். அதன்படி அவரும் பெயரை மாற்றி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது என் வாழ்க்கையின் ஒரு பெரும் பகுதி ஆகும். இப்போது நான் அதை அதிகாரப்பூர்வமாக என்னுடன் எடுத்து செல்வேன், இது மிகவும் உற்சாகமானது என குறிப்பிட்டார்.

    • ரமலான் தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் பல குண்டு வெடிப்பு.
    • காலை 8 மணியளவில் வங்கி வெளியே காத்திருந்த மக்களை குறிவைத்து குண்டு வெடித்துள்ளது.

    ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் இன்று நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 12 பேர் பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    மார்ச் 11 அன்று இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் பல குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில், சில சம்பவங்களை தலிபான் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

    மத்திய காந்தஹார் நகரத்தில் உள்ள நியூ காபூல் வங்கிக் கிளைக்கு வெளியே இன்று காலை 8 மணியளவில் காத்திருந்த மக்கள் குழுவை குறிவைத்து வெடித்துள்ளது.

    இதுகுறித்து கந்தஹார் மாகாணத்தின் தகவல் மற்றும் கலாச்சார இயக்குனர் இனாமுல்லா சமங்கானி கூறுகையில்" தற்கொலைப் படை தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.பொதுவாக மக்கள் தங்கள் சம்பளத்தைப் பெறுவதற்காக வங்கியில் கூடுகிறார்கள். அப்போது குண்டு வெடித்துள்ளது. காயமடைந்தவர்கள் கொண்டு செல்லப்பட்ட நகரின் மருத்துவமனையில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது" என்றார்.

    இதற்கிடையே, தலிபான் அதிகாரிகள் வங்கிக்கு வெளியே உள்ள பகுதியை சுற்றி வளைத்தனர். பத்திரிக்கையாளர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

    இருப்பினும், குண்டுவெடிப்பை அடுத்து ஆம்புலன்ஸ்களில் மயக்கமடைந்தவர்கள் அல்லது இறந்தவர்களின் உடல்கள் ஏற்றப்பட்டதாகவும், சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் அப்பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்தனர், அங்கு இரத்தம், உடைகள் மற்றும் காலணிகள் தரையில் சிதறிக்கிடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    • ரஷிய அதிபருக்கான தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் புதின் மீண்டும் வெற்றி பெற்றார்
    • இதன்மூலம் ரஷிய வரலாற்றில் அதிக வருடம் அதிபராக இருந்தவர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்

    அண்மையில் நடந்து முடிந்த ரஷிய அதிபருக்கான தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் புதின் மீண்டும் வெற்றி பெற்றார்.

    அவர் 87.8 சதவீத வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதன்மூலம் 71 வயதான புதின், அடுத்த 6 ஆண்டுக்கு ரஷியாவின் அதிபராக நீடிப்பார்.

    இதன்மூலம் ரஷிய வரலாற்றில் அதிக வருடம் அதிபராக இருந்தவர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். இதற்கு முன்னதாக ஜோசப் ஸ்டாலின் ரஷியாவை அதிக வருடங்கள் ஆண்ட அதிபர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.

    மேலும், சோவியத் ரஷியா உடைந்த பிறகு அதிக வாக்குகள் பெற்ற அதிபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

    உக்ரைனுக்கு எதிராக இரண்டு வருடங்கள் சண்டை நடைபெற்று வருவது, எதிர்க்கட்சி தலைவர் நவால்னி சிறையில் மரணம் அடைந்தது உள்ளிட்ட சம்பவங்கள் புதினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதையும் தாண்டிய புதின் வெற்றி பெற்றுள்ளார்.

    ரஷியாவில் நடைபெற்ற தேர்தல் சுதந்திரமாக மற்றும் நியாயமாக நடைபெறவில்லை என அமெரிக்கா விமர்சனம் செய்துள்ளது.

    இந்நிலையில், நடந்து முடிந்த ரஷிய அதிபர் தேர்தலின்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை சேர்ந்த அலெக்ஸாண்ட்ரா சிரியத்யேவா, வாக்குச்சீட்டின் பின்புறம் 'போர் வேண்டாம்' என எழுதியுள்ளார்.

    இதனையடுத்து, ரஷ்ய ராணுவத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டி அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் மாவட்ட நீதிமன்றம், அப்பெண்ணுக்கு 8 நாட்கள் சிறைத் தண்டனையும் 40,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

    • கடலில் ஆய்வு செய்வதாகக் கூறி சீன கப்பல்கள் உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
    • சர்வதேச ஆய்வுக்கப்பல்கள் தங்கள் துறைமுகங்களில் நிறுத்த இலங்கை அரசு தடை விதித்தது.

    கொழும்பு:

    சீனாவின் புவி இயற்பியல் ஆராய்ச்சிக் கப்பல் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் கடந்த நவம்பர் மாதம் நிலை நிறுத்தப்பட்டது.

    இதற்கு இந்தியா தனது கவலையை இலங்கை அரசிடம் தெரிவித்தது. இதையடுத்து சர்வதேச ஆய்வுக்கப்பல்கள் தங்களது துறைமுகங்களில் நிறுத்த இலங்கை அரசு ஒரு ஆண்டு தடை விதித்து உத்தரவிட்டது.

    சமீபத்தில் ஜெர்மனி ஆய்வுக்கப்பலுக்கு மட்டும் இலங்கை அரசு அனுமதி அளித்தது. அதேவேளையில், சீன கப்பலை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு இலங்கை அரசிடம் சீனா தனது கண்டனத்தைத் தெரிவித்தது.

    இந்நிலையில், இனி அனைத்து ஆய்வுக்கப்பல்களையும் தங்களது துறைமுகங்களில் நிறுத்த அனுமதிக்க போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் சீன ஆய்வுக்கப்பல்களுக்கு இலங்கை மீண்டும் அனுமதி அளிக்க உள்ளது.

    கடலில் ஆய்வு செய்வதாகக்கூறி சீன கப்பல்கள் உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வீடியோவில் பெண் ஒருவர் கருப்பு நிற ஆடை அணிந்து கொண்டு யோகாசனம் செய்யும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
    • சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்துள்ளனர்.

    கொள்ளையடிக்க செல்லும் இடத்தில் திருடர்கள் தூங்கியதால் சிக்கிக் கொண்டது, சாமி கும்பிட்டுவிட்டு கைவரிசை காட்டுவது போன்ற சம்பவங்களை கேள்விபட்டிருக்கிறோம்.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் பேக்கரி ஒன்றில் திருடுவதற்காக சென்ற இளம்பெண் ஒருவர் கைவரிசை காட்டுவதற்கு முன்பாக பேக்கரி முன்பு யோகாசனம் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகி உள்ளது. 'மிஷன் இம்பாசிபிள்- கோஸ்ட் புரொடோகால்' ஒலிப்பதிவின் பின்னணி இசையுடன் கூடிய அந்த வீடியோவில் பெண் ஒருவர் கருப்பு நிற ஆடை அணிந்து கொண்டு யோகாசனம் செய்யும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    இந்த சம்பவம் கடந்த 3-ந்தேதி நடைபெற்றுள்ளது. யோகாசனம் செய்த பிறகு அந்த பெண் பேக்கரிக்குள் நைசாக நுழைந்து அங்கிருந்த பொருட்களை திருடி சென்றுள்ளார். இதற்கிடையே சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்துள்ளனர்.



    • உயர்அதிகாரிகள் பணியாற்றும் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
    • ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் வந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குவாடர் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அதிகாரிகள் பணிபுரியும் வளாகத்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பயங்கரவாதிகளுடன் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். துறைமுகத்தில் துப்பாக்கி சூடு மற்றும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. உடனே அங்கிருந்த ஊழியர்கள் பல இடங்களில் பதுங்கி கொண்டனர்.

    தகவல் அறிந்ததும் ராணுவத்தினர் துறைமுகத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். துறைமுகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய 8 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பலுசிஸ்தான் மாகாண முதல்வர் சர்ப்ராஸ் புக்டி கூறும்போது, குவாடர் துறைமுக ஆணைய வளாகத்தில் 8 பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். வன்முறையை பயன்படுத்த விரும்பும் யாரும் அரசின் கருணையை பார்க்க மாட்டார்கள். பாகிஸ்தானுக்காக துணிச்சலுடன் போராடிய அனைத்து வீரர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    இதற்கிடையே தீவிரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாதிகளிடம் ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை இயக்கம் பொறுப்பேற்று உள்ளது. இந்த இயக்கம், பலுசிஸ்தானில் சீனாவின் முதலீடுகளை எதிர்த்து வருகிறது.

    வளங்கள் நிறைந்த பலுசிஸ்தான் மாகாணத்தை சீனாவும், பாகிஸ்தானும் சுரண்டுவதாக குற்றம்சாட்டி வருகிறது. அந்த இயக்கத்தினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் செயல்படும் குவாடர் துறைமுகத்தில் தாக்குதல் நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×