என் மலர்
உலகம்
- பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல கலாசாரங்களை கொண்ட விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- நோன்பு திறக்கும் நேரம் வந்ததும் அனைவரும் பிரார்த்தனை செய்து நோன்பை திறந்தனர்.
துபாய்:
ரமலான் நோன்பையொட்டி இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. பள்ளிவாசல்கள், கூடாரங்களில் நடைபெறும் இப்தார் நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று நோன்பு திறந்து வருகின்றனர். இந்த நிலையில் உலகில் முதல் முறையாக துபாய் சர்வதேச விமான நிலைய ஓடு பாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. விமானங்கள் தரையிறக்கப்படும் ஓடுபாதையில் நடந்த இப்தார் நிகழ்ச்சியில் அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல கலாசாரங்களை கொண்ட விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பேரீச்சம் பழம், தண்ணீர், ஜூஸ், பிரியாணி உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
இந்த நோன்பு திறக்கும் நேரம் வந்ததும் அனைவரும் பிரார்த்தனை செய்து நோன்பை திறந்தனர். அவர்கள் நோன்பை திறந்த போது விமானங்கள் தரையிறங்குவது, புறப்படுவது நடந்து கொண்டிருந்தது.

இது குறித்து துபாய் விமான நிலைய அதிகாரி கூறும்போது, துபாய் சர்வதேச விமான நிலைய ஊழியர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மிகவும் பரபரப்பான சூழலில் வேலை செய்து வந்தவர்கள் அதனை மறந்து பலரும் விளையாட்டாக பேசிக் கொண்டு மன இறுக்கத்தை மறந்து செயல்பட்டனர்.
விமான நிலையத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் ஊழியர்களின் பங்களிப்பு முக்கியமானது அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார்.
துபாயில் கின்னஸ் உலக சாதனைகள் பல வித்தியாசமான முறையில் படைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக விமான ஓடு பாதையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
- இந்திய பிரதமர் மோடி சமீபத்தில் அருணாச்சல பிரதேசம் சென்றிருந்தார்.
- அருணாச்சல பிரதேசம் திபெத்தின் தெற்குப் பகுதி என சீனா சொந்தம் கொண்டாடுகிறது.
இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் எங்களுடைய நிலப்பரப்பு என சீனா அடிக்கடி உரிமைக்கோரி வருகிறது. இந்திய தலைவர்கள் அருணாச்சால பிரதேசம் சென்றால் சீனா எதிர்ப்பு தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.
சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி அருணாச்சல பிரதேசம் சென்றிருந்தார். அதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு இந்தியாவால் அருணாச்ச பிரதேசம் என அழைக்குப்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம். கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். ஜிஜாங்கின் (திபெத்தை சீனா இவ்வாறு அழைக்கிறது. திபெத்தின் தெற்குப்பகுதான் அருணாச்சால பிரதேசம் என சீனா கூறி வருகிறது) தெற்குப் பகுதி சீனாவின் உள்ளார்ந்த பகுதியாகும்" என சீன பாதுகாப்பு அமைச்கத்தின் செய்தி தொடர்பானர் ஜாங் ஜியாவோகாங் தெரிவித்திருந்தார்.

சீனா இவ்வாறு உரிமைகோரிய நிலையில், அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தி செய்தி தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் கூறுகையில் "அருணாச்சல பிரதேசத்தை இந்திய நிலப்பரப்பாக அங்கீகரிக்கிறோம்.
ஊடுருவல் அல்லது அபகரித்தல், ராணுவம் மூலமாக உண்மையான எல்லைக்கோட்டை தாண்டி தங்களது நிலப்பரப்பு என ஒருதலைப்பட்சமாக உரிமைக்கோருவதற்கான எந்தவொரு முயற்சியையும் அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது" என்றார்.
- சுரங்கம் தோண்டும் பணியின்போது பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
- இந்த வெடிவிபத்தில் 12 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் ஹர்னாய் மாவட்டத்தில் உள்ள சர்தாலோ என்ற பகுதியில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது.
நேற்று இரவு சுமார் 20 தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மீத்தேன் வாயுக்கசிவு காரணமாக பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சுரங்க வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், காயமடைந்தோருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
- ரஷியாவில் நடந்த அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் அபார வெற்றி பெற்றார்.
- தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மாஸ்கோ:
ரஷியாவில் நடந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் அபார வெற்றி பெற்றார். அவர் 88 சதவீத வாக்குகள் பெற்று சாதனை படைத்தார். தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதற்கிடையே தேர்தலுக்கு முன்பாக சிறையில் மரணமடைந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் மனைவி யூலியா நவல்னயா, அதிபர் புதினுக்கு எதிராக தனது கணவரின் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாக அறிவித்தார்.
இந்நிலையில், அதிபர் தேர்தலில் புதின் பெற்ற வெற்றி தொடர்பாக யூலியா நவல்னயா கூறியதாவது:
தேர்தல் முடிவுகள் ஒரு பொருட்டல்ல. உலகில் யாரும் புதினை முறையான அதிபராக அங்கீகரிக்கவில்லை என்பதை நாங்கள் உறுதி செய்வோம். அவருடன் உலக தலைவர்கள் யாரும் பேச்சுவார்த்தைக்கு மேசையில் உட்கார வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஏனென்றால் அவர் ரஷியாவின் முறையான அதிபர் அல்ல. புதின் எங்கள் அதிபர் அல்ல என்பதை நாங்கள் மற்றவர்களுக்கும் நிரூபித்துள்ளோம். ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் புதின் ஆட்சியை எதிர்த்துப் போராட மக்களை வலியுறுத்துகிறேன்.
நமக்கு அமைதியான, சுதந்திரமான மற்றும் மகிழ்ச்சியான ரஷியா தேவை. நாம் இணைந்து செயல்பட்டால் நிச்சயம் சாதிக்க முடியும். இதை விட்டுக் கொடுத்துவிடக்கூடாது என தெரிவித்தார்.
- தனி நபர்களின் வாழ்க்கைத் திருப்தி, அத்துடன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு,
- சமூக ஆதரவு, ஆரோக்கியமான ஆயுட்காலம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் ஆகிய அடிப்படையில் மதிப்பீடு
உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஐ.நா. வெளியிட்டுள்ளது. இப்பட்டியல் தனி நபர்களின் வாழ்க்கைத் திருப்தி, அத்துடன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு, ஆரோக்கியமான ஆயுட்காலம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் ஆகியவற்றின் சுய மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
ஐ.நா.வின் வருடாந்திர உலக மகிழ்ச்சி அறிக்கையில் பின்லாந்து நாடு தொடர்ந்து 7-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகியவை உள்ளன.
10 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியிடப்பட்டு வரும் அறிக்கையில் முதல் முறையாக, அமெரிக்காவும் ஜெர்மனியும் முதல் 20 மகிழ்ச்சியான நாடுகளில் இடம் பெறவில்லை். அந்த நாடுகள் முறையே 23, 24-வது இடத்தில் உள்ளன.
கனடா, இங்கிலாந்து, கோஸ்டாரிகா, குவைத் ஆகிய நாடுகள் முதல் 20 இடங்களில் உள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடுக ளான செர்பியா, பல்கேரியா மற்றும் லாட்வியா ஆகியவை இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
கணக்கெடுக்கப்பட்ட 143 நாடுகளில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது. லெபனான் மற்றும் ஜோர்டான் ஆகியவை சரிந்து உள்ளது.
உலகின் பெரும்பாலான பிராந்தியங்களில் இளைய தலைமுறையினர் தங்களது பழைய தலைமுறையினரை விட மகிழ்ச்சியாக இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில், 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் இடையே மகிழ்ச்சி அதிக அளவில் குறைந்துள்ளது, அங்கு இளைஞர்களை விட பழைய தலைமுறையினர் மகிழ்ச்சியாக உள்ளனர்.
மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் எல்லா வயதினரிடமும் மகிழ்ச்சி கணிசமாக அதிகரித்தது. ஐரோப்பாவைத் தவிர ஒவ்வொரு பிராந்தியத்திலும் மகிழ்ச்சி சமத்துவமின்மை அதிகரித்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆசிப் அலி சர்தாரி அதிபராக பதவி ஏற்றதால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
- சிந்து மாகாணத்தில் உள்ள தொகுதியில் போட்டியிட நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் அதிபராக ஆசிஃப் அலி சர்தாரி உள்ளார். இவரின் இளைய மகள் ஆசீபா பராளுமன்றத்தின் என்.ஏ.207 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் முறையாக அரசியல் பிரவேசம் செய்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆசிப் அலி சர்தாரி ஏன்.ஏ.-207 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அதிபராக பதவி ஏற்றதால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதனால் அந்த தொகுதி காலியாக உள்ள நிலையில், தனது மகளை நிறுத்தியுள்ளார். நேற்று சிந்து மாகாணம் நவாப்ஷா பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு சென்று தேர்தல் அதிகாரிடம் வேட்புமனுவை அளித்தார்.
ஆசிபா பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான மறைந்த பெனாசீர் பூட்டோ- சர்தாரி தம்பதியின் இளைய மகள் ஆவார். ஆசிபாவின் சகோதரர் பிலாவல் பூட்டோ பாகிஸ்தான் நாட்டின் மந்திரியாக இருந்துள்ளார்.
பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்தல் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் நாவஸ் ஷெரீப் கட்சி ஆட்சி அமைக்க பிலாவல் பூட்டோ ஆதரவு கொடுத்துள்ளார். ஆனால், மந்திரிசபையில் இடம் பெற மறுத்துவிட்டார். வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து வருகிறார்.
சர்தாரி தனது மகள் ஆசிபாவை பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண்மணி என அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக நாட்டின் பாரம்பரியப்படி மனைவிதான் முதல் பெண்மணியாக அறிவிக்கப்படுவார். ஆனால், பெனாசீர் பூட்டோ இல்லாததால் தனது மகளை அறிவிக்க வாய்ப்புள்ளது.
- குடிபெயர்ந்தவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி வெளியேற ஒத்துக் கொள்ள வேண்டும்.
- இல்லையெனில் சட்டவிரோதமாக நுழைந்ததாக வழக்கு தொடரப்படும்.
அமெரிக்காவின் எல்லையில் அமைந்துள்ளது மெக்சிகோ நாடு. தென்அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேற விரும்புபவர்கள் மெக்சிகோ எல்லை வழியாகத்தான் ஊடுருவி வருகிறார்கள்.
இது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இதனால்தான் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், இரு நாடுகளின் எல்லையில் சுவர் எழுப்ப இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில்தான் டெக்சாஸ் மாநிலம் புதிய குடியேற்ற சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் மூலம் மெக்சிகோவில் இருந்து குடிபெயர்ந்தவர்களை உடனடியாக அந்நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்க முடியும். இந்த சட்டத்திற்கு நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது.
இந்த சட்டத்தின்படி, டெக்சாஸ் மாநிலத்திற்கு குடிபெயரும் நபர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்ற முடியும். அல்லது சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததாக வழக்கு தொடர முடியும்.
ஆனால், டெக்காஸ் மாநிலத்தின் இந்த புதிய குடியேற்ற சட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என மெக்சிகோ தெரிவித்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் "எந்தவொரு சூழ்நிலையிலும் டெக்சாஸ் மாநிலத்தால் திருப்பு அனுப்படுவதை ஏற்றுக் கொள்ளமாட்டோம்" எனத் தெரிவித்துள்ளது.
- குர்தீஷ் போராளிகள் குழு துருக்கி ராணுவம் மீது தாக்குதல் நடத்தியதில் ஒரு வீரர் உயிரிழப்பு.
- பதிலடியாக துருக்கு ராணுவம் போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
துருக்கி அரசுக்கு எதிராக குர்தீஷ் போராளி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்பு பயங்கரவாத அமைப்பாக துருக்கி அரசு அறிவித்துள்ளது. துருக்கி ஈராக் எல்லையில், ஈராக் பகுதியில் குர்தீஷ் போராளிகள் குழு செயல்பட்டு வருகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் அரை-தன்னாட்சி பெற்ற சுதந்திர அமைப்பாக செயல்பட்டு வருகிறது. குர்தீஷ் குழு ஆதிக்கம் செலுத்தும் பகுதியில் ஈராக் அரசால் அவர்களை ஒன்னும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குர்தீஷ் போராளிகள் குழு திடீரென துருக்கி ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் துருக்கியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் பலியானார். நான்கு பேர் காயம் அடைந்தனர். இதனால் கோபம் அடைந்த துருக்கி ராணுவம், ஈராக்கில் செயல்பட்டு வரும் குர்தீஷ் போராளிகள் குழுவின் நிலைகளை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.
மெட்டினா, ஜாப், ஹகுர்க், காரா மற்றும் குவாண்டில் பகுதிகளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குர்தீஷ் போராளிகள் குழுவின் குகைகள், முகாம்கள், பதுங்கு குழிகள் ஆகியவற்றை குறிவைத்ததாகவும் 27 நிலைகள் அழிக்கப்பட்டதாகவும் துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் குர்தீஷ் போராளி குழு இது தொடர்பான உடனடியாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
1980-ல் இருந்து குர்தீஷ் போராளி குழு துருக்கி அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
கடந்த வாரம் துருக்கி வெளியுறவுத்துறை மந்திரி ஹகான் பிடன், ஈராக் நாட்டின் மந்திரியுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். அப்போது குர்தீஷ் போராளி குழுக்கள் உள்ளிட்ட அமைப்புகளுக்க எதிரான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
பின்னர் இரு நாடுகள் சார்பில், குர்தீஷ் போராளிகள் குழு இருநாட்டு பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக அறிவித்தன. மேலும், ஈரானில் செயல்படுவது அந்நாட்டின் அரசமைப்பு மீறுவதாகும் எனவும் தெரிவித்தன.
- பலர் இன்றும் வீட்டிலே இருந்தே பணியாற்றி வருகின்றனர்.
- ஊழியர்கள் அலுவலகம் சென்று பணியாற்ற துவங்கினர்.
சர்வதேச சந்தையில் முன்னணி லேப்டாப் பிராண்டு டெல். உலகளவில் பல்வேறு அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் டெல் நிறுவனத்திற்காக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் இன்றும் வீட்டிலே இருந்தே பணியாற்றி வருகின்றனர்.
உலகம் முழுக்க கொரோனா பெருந்தொற்று காரணமாக வீட்டில் இருந்து பணியாற்றும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. பிறகு, பெருந்தொற்று சூழல் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து உலகின் பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதை ஆதரிக்கவில்லை. இதன் காரணமாக ஊழியர்கள் அலுவலகம் சென்று பணியாற்ற துவங்கினர்.
இந்த நிலையில், டெல் நிறுவனம் வீட்டில் இருந்தே பணியாற்றும் தனது ஊழியர்கள் பதவி உயர்வுக்கு தகுதி பெற முடியாது என தெரிவித்துள்ளது. ஊழியர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தே பணியாற்ற முடியும் என்றும் டெல் தெரிவித்துள்ளது. வீட்டில் இருந்து பணியாற்றுவோர் பதவி உயர்வு மற்றும் நிறுவனத்திற்குள் தங்களது பொறுப்பை மாற்றிக் கொள்ளவும் முடியாது.
கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பில் இருந்தே ஊழியர்கள் வீட்டில் இருந்தும் பணியாற்ற அனுமதி அளித்த நிலையில், டெல் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு வீட்டில் இருந்து பணியாற்றி வரும் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. டெல் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக வீட்டில் இருந்து பணியாற்றி வருவோருக்கு, இனிமேல் பதவி உயர்வு, பதவிகளை மாற்றிக் கொள்ள முடியாது என்ற அறிவிப்பு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
- இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மரணமடைந்துள்ளதாக நேற்று தகவல் பரவியது.
- இது ரஷியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் தீயாக பரவியது.
லண்டன்:
இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் (75), புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார் என கடந்த மாதம் பக்கிங்காம் அரண்மனை தெரிவித்தது.
இதற்கிடையே, ரஷிய ஊடகங்களில் நேற்று மதியத்திற்கு மேல் பிரிட்டன் மன்னர் சார்லஸ் மரணம் அடைந்ததாக தகவல் பரவியது. ரஷியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் இந்த தகவல் தீயாக பரவியது. இங்கிலாந்து அரச குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளதாக தகவல் வெளியிட்ட ரஷிய ஊடகங்கள், மன்னர் சார்லஸ் குறித்த போலி புகைப்படங்களையும் இணைத்திருந்தன.
இதையடுத்து, தஜிகிஸ்தானில் முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று சார்லஸ் மன்னருக்கு இரங்கல் செய்தியும் வெளியிட்டது.
இந்நிலையில், இங்கிலாந்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான தகவல் வெறும் புரளி. மன்னர் சார்லஸ் உயிருடன் இருக்கிறார் எனக்கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
- குழந்தைக்கு எதைப்பார்த்தாலும் சாப்பிட வேண்டும் என ஆர்ட்டிசம் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- குழந்தை எந்த நேரத்தில் எதை சாப்பிடுகிறது என்ற பயத்தில் இருக்க வேண்டியது உள்ளது.
இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் பிளாக்வுட் நகரை சேர்ந்தவர் ஸ்டேஷி ஹெர்ன் என்ற பெண்ணுக்கு 3 வயதில் வின்டர் என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை வீட்டில் விளையாடும் போது தரையில் கிடந்த பொருட்களை எல்லாம் வாயில் போடுவதும், அதை சாப்பிடுவதுமாக இருந்துள்ளது. குழந்தைகளுக்கு இதுபோன்ற பழக்கம் வழக்கமானது என்பதால் நாளடைவில் இது சரியாகி விடும் என அவரது தாயார் கருதினார்.
ஆனால் வழக்கத்திற்கு மாறாக சோபாவில் உள்ள பஞ்சு, போட்டோ பிரேம், கண்ணாடி துண்டுகள், கட்டிலில் உள்ள மரக்கட்டைகள் என அனைத்து பொருட்களையும் குழந்தை சாப்பிட தொடங்கியதால் ஸ்டேஷி அதிர்ச்சியடைந்தார். இதனால் குழந்தை தூங்கும் நேரத்தை தவிர சில நேரங்களில் அந்த குழந்தையையே கண்காணிக்கும் நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்த போது அந்த குழந்தைக்கு எதைப்பார்த்தாலும் சாப்பிட வேண்டும் என ஆர்ட்டிசம் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய ஸ்டேஷி, குழந்தையின் உணவு பழக்கத்தால் குழந்தையை கண்காணிப்பதே முழு நேர வேலையாக மாறி விட்டது. குழந்தை எந்த நேரத்தில் எதை சாப்பிடுகிறது என்ற பயத்தில் இருக்க வேண்டியது உள்ளது. நள்ளிரவில் எழுந்து போர்வை, மெத்தையையும் சாப்பிடுகிறது. இதில் இருந்து குழந்தையை மீட்க போராடி வருகிறேன். இதற்கு மருத்துவர்கள் உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
- வடக்கு காசாவை தொடர்ந்து முக்கியமான நகரமாக கருதப்படும் ரஃபா மீது தாக்குதல் நடத்த திட்டம்.
- காசாவின் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டோர் ரஃபா பகுதியில் உள்ளனர்.
ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக் கட்டுவதற்காக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. காசாவின் வடக்கு பகுதியை துவம்சம் செய்து விட்டது. இங்கிருந்து பெரும்பாலான மக்கள் தெற்குப் பகுதியான ரஃபா, கான் யூனிஸ்க்கு இடம் மாறினர். கான் யூனிஸ் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான இலக்கை எட்ட வேண்டுமென்றால் ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும். அதற்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் எகிப்து-காசா எல்லை மூடப்படும் அபாயம் ஏற்படும். மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க முடியாத நிலை ஏற்படும்.
இதனால் ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. இதற்கிடையே அங்குள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெலிபோன் மூலம் பேசியுள்ளார். அப்போது ரஃபா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தாக்குதலுக்குப் பதிலாக வேறு வழிகள் இருந்தால் அதை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அதற்கு நேதன்யாகு வேறு வழிகள் இருந்தால் கடைபிடிக்க முயற்சி செய்கிறோம் என உறுதி அளித்துள்ளதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் சுமார் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவார்கள்.
காசா முனையில் மொத்தம் 2.3 மல்லியன் பாலஸ்தீனர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் தற்போது 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் போர் காரணமாக ரஃபா பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து இவர்களை வேறு இடத்திற்கு மாற்ற முயற்சிப்போம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.






