என் மலர்
விளையாட்டு
- ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது.
- இந்திய ஆண்கள் அணி 4-1 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
சிலாங்கூர்:
ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவில் உள்ள சிலாங்கூரில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின. முதலில் நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், ஹாங்காங்கின் யங் கா லாங் அங்குஸ் உடன் மோதினார். இதில் பிரனாய் 18-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதன் மூலம் ஹாங்காங் முதலில் 1-0 என முன்னிலை பெற்றது.
அடுத்து நடந்த இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி தங்களது போட்டியில் வெற்றி பெற்றனர்.
தொடர்ந்து நடந்த ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்று இந்தியா முன்னிலை பெற உதவினர்.
இறுதியில், இந்திய அணி 4-1 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தியா காலிறுதியில் சீனாவுடன் மோதுகிறது.
- முகமது நபி ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையிலும் ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
- ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பிடத்தக்க மாற்றமாக ஒருநாள் போட்டிகளின் ஆல் ரவுண்டர் வரிசையில் நீண்ட காலங்களாக நம்பர் 1 இடத்தில் இருந்த வங்காளதேச வீரரின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி, ஷகிப் அல் ஹசனை பின்னுக்கு தள்ளி ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் இவர் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையிலும் ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தையும் குல்தீப் யாதவ் 10-வது இடத்தில் இருந்து 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளனர். மற்ற தரவரிசைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்து அணி இந்த தொடரில் 2 வேகப்பந்து வீரர்களுடன் விளையாட உள்ளனர்.
- அணியில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் இடத்தில் சர்பராஸ் கான் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
ராஜ்கோட்:
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் கொண்ட தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. இதற்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. 2 போட்டி முடிவில் 1-1 என்ற சமநிலை நிலவுகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (15-ந்தேதி) தொடங்குகிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த டெஸ்டிலும் வென்று முன்னிலை பெறும் ஆர்வத்தில் உள்ளது. இந்தியாவின் அதிரடி இந்த போட்டியிலும் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் 2 டெஸ்டில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி விலகினார். தற்போது தொடர் முழுவதும் ஆட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.எல். ராகுல் இந்த போட்டியிலும் ஆடவில்லை. காயம் காரணமாக அவர் 2-வது டெஸ்டில் விளையாடவில்லை. அதே நேரத்தில் கடந்த போட்டியில் ஆடாத ஜடேஜா அணிக்கு திரும்பி உள்ளார்.
சர்பராஸ் கான், விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் ஆகிய டெஸ்டில் அறிமுகமாகிறார்கள். அணியில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் இடத்தில் சர்பராஸ் கான் இடம் பெற வாய்ப்பு உள்ளது. விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் பேட்டிங் தொடர்ந்து மோசமாக இருப்பதால் ஜூரலுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஒருவேளை ரஜத் படிதார் சுழற்றிவிடப்பட்டால் தேவ்தத் படிக்கல் இடம் பெறுவார். அவரும் இதுவரை டெஸ்டில் விளையாடவில்லை.
ஜடேஜா அணிக்கு திரும்பியதால் குல்தீப் யாதவ் அல்லது அக்ஷர் படேல் நீக்கப்படலாம். முகமது சிராஜ் முழு உடல் தகுதியுடன் இருந்தால் முகேஷ் குமார் இடம் பெறமாட்டார்.
கடந்த டெஸ்டில் ஜெய்ஷ்வாலின் இரட்டை சதமும், சுப்மன்கில்லின் சதமும், 9 விக்கெட் வீழ்த்திய பும்ராவின் அபார பந்துவீச்சும் வெற்றிக்கு காரணமாக இருந்தது.
இங்கிலாந்து அணி இந்த தொடரில் முதல் முறையாக 2 வேகப்பந்து வீரர்களுடன் விளையாட உள்ளனர். ஆண்டர்சனும், மார்க்வுட்டும் இங்கிலாந்தின் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ளனர்.
அந்த அணியின் பேட்டிங்கில் ஆலி போப், கிராவ்லி, பென்ஸ்டோக்ஸ் ஆகியோரும் பந்துவீச்சில் ஹார்ட்லே, ரேகான் அகமது, ஆண்டர் சன் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். 2-வது டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்க்கும் வேட்கையில் இங்கிலாந்து அணி இருக்கிறது.
நாளைய போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. 'ஸ்போர்ட்ஸ் 18' சேனலில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இஷான் கிஷன் பிசிசிஐ-யிடம் தெரிவித்தார்.
- பணிச்சுமையை நிர்வகிப்பதற்காகவே இஷான் கிஷனுக்கு தற்காலிக ஓய்வு கொடுக்கப்பட்டதாக டிராவிட் தெரிவித்தார்.
தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இஷான் கிஷன் பிசிசிஐ-யிடம் தெரிவித்தார். மேலும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்கு தமக்கு அனுமதி கொடுக்குமாறு கேட்டார். அதற்கு உடனடியான அனுமதி வழங்கப்பட்ட நிலையில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடாத அவர் துபாய்க்கு சென்று 2024 புத்தாண்டு பார்ட்டியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் டி20 தொடர் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் அவர் தேர்வு செய்யப்படவில்லை. அதற்கு பொய் சொல்லிவிட்டு நன்னடத்தையின்றி நடந்து கொண்ட காரணத்தாலேயே இஷான் கிஷன் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.
பணிச்சுமையை நிர்வகிப்பதற்காகவே அவருக்கு தற்காலிக ஓய்வு கொடுக்கப்பட்டதாக டிராவிட் தெரிவித்தார். மேலும் இந்திய அணியில் மீண்டும் இஷான் கிஷன் விளையாடுவதற்கு உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று சில போட்டிகளில் விளையாடி ஃபார்முக்கு திரும்பி கம்பேக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் முழு உடற்தகுதியை பெற்ற நிலையிலும் ரஞ்சி கோப்பை தொடரை இளம் வீரர்கள் புறம்தள்ளுகிறார்கள். இதனால் இந்திய அணியில் உள்ள வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கும் ரஞ்சி கோப்பை விளையாடுவதை கட்டாயமாக்க பிசிசிஐ பரிசீலனை செய்து வருதவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இஷான் கிஷனை ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடச் சொல்லி பிசிசிஐ வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- முதல் டெஸ்ட் போட்டியிலேயே அதை நிகழ்த்துவார் என நினைத்தேன்.
- எனது சொந்த ஊரான ராஜ்கோர்ட்டில் அஸ்வின் அந்த சாதனையை படைக்க வேண்டும் என்பதே விதி.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (15-ந்தேதி) தொடங்குகிறது.
இந்நிலையில் எனது சொந்த ஊரான ராஜ்கோர்ட்டில் அஸ்வின் தனது 500-வது விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்பதே விதி என ஜடேஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அஸ்வினுடன் நிறைய ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன். அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் தனது 500-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்துவார். முதல் டெஸ்ட் போட்டியிலேயே அதை நிகழ்த்துவார் என நினைத்தேன். பரவாயில்லை எனது சொந்த ஊரான ராஜ்கோர்ட்டில் அஸ்வின் அந்த சாதனையை படைக்க வேண்டும் என்பதே விதி.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது.
- 2-வது டெஸ்ட்டில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.
ராஜ்கோட்:
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் கொண்ட தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. இதற்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. 2 போட்டி முடிவில் 1-1 என்ற சமநிலை நிலவுகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (15-ந்தேதி) தொடங்குகிறது.
இந்நிலையில் அதற்கான 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் பஷீருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் அணியில் இடம் பிடித்துள்ளார்.
11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி:-
ஜாக் க்ராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், பென் ஃபோக்ஸ், ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, மார்க் வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
- குல்னா டைகர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரங்பூர் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்த போட்டியில் இம்ரான் தாஹிர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
வங்காளதேசத்தில் பங்களாதேஷ் பிரீமியர் லீக் (பிபிஎல்) தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில்
குல்னா டைகர்ஸ் மற்றும் ரங்பூர் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ரங்பூர் ரைடர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய ரங்பூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய குல்னா டைகர்ஸ் அணி இம்ரான் தாஹிர் சுழலில் 141 ரன்னில் சுருண்டது. இதனால் ரங்பூர் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இம்ரான் தாஹிர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் குறைந்த டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் இம்ரான் தாஹிர் 4-வது இடத்தில் உள்ளார். 44-வது வயதில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
குறைந்த போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் பிராவோ (624 விக்கெட்), ரஷித் கான் (556 விக்கெட்), சுனில் நரேன் (532) ஆகியோருக்கு அடுத்தப்படியாக இம்ராம் தாஹிர் உள்ளார்.
- ஆஸ்திரேலிய அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
- இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது.
ஆஸ்திரேலிய அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் முதல் டி20 தொடர் நடைபெற உள்ளது. அதற்கான டி20 அணியை நியூசிலாந்து அணி அறிவித்துள்ளது.
இந்த டி20 தொடரின் கேப்டனாக மிட்செல் சாட்னர் செயல்படுகிறார். டிரெண்ட் போல்ட் அணிக்கு திரும்பி உள்ளார். வில்லியம்சன் சொந்த காரணங்களுக்காக இந்த தொடரில் விளையாடவில்லை. அதே போல டேரில் மிட்செல் காயம் காரணமாக விலகி உள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது.
டி20 அணிக்காக நியூசிலாந்து வீரர்கள் விபரம்:-
மிட்செல் சான்ட்னர் (கே), ஃபின் ஆலன், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், கான்வே, லாக்கி பெர்குசன், ஆடம் மில்னே, மாட் ஹென்றி, க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் சீஃபர்ட், சோதி, டிம் சவுத்தி (முதல் டி20 மட்டும்). ட்ரெண்ட் போல்ட் (இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20),
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் டேன் பீட் 5 விக்கெட்டுகளையும், டேன் பீட்டர்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
- தென் ஆப்பிரிக்கா அணி 31 ரன்களுடன் முன்னிலையில் உள்ளது.
நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஹேமில்டனில் நேற்று தொடங்கியது.
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 220 ரன் எடுத்து இருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 242 ரன்னில் 'ஆல் அவுட்' ஆனது. ருவான் டிஸ்வார்ட் அதிகபட்சமாக 64 ரன் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டும், ரவீந்திரா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 211 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக வில்லியம்சன் 43 ரன்களை எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் டேன் பீட் 5 விக்கெட்டுகளையும், டேன் பீட்டர்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 31 ரன்களுடன் முன்னிலையில் உள்ளது.
- தசைப்பிடிப்பால் கடந்த டெஸ்டில் ஆடாத ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
- அதனால் 3-வது டெஸ்டில் அவர் விளையாடுவார் என்று நினைக்கிறேன்.
ராஜ்கோட்:
3-வது டெஸ்ட் நடக்கும் ராஜ்கோட் ஆடுகளத்தன்மை அதிகமாக சுழலுக்கு ஒத்துழைக்காது என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். காயத்தில் இருந்து மீளாததால் இந்திய முன்னணி பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல் விலகி விட்டார். பார்ம் இன்றி தவிக்கும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு இடமில்லை. இதனால் 3-வது டெஸ்டில் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் மற்றும் சர்ப்ராஸ் கான் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய தினம் பயிற்சிக்கு பிறகு இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ராஜ்கோட் ஆடுகளம் முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சுக்கு உகந்த வகையில் இருக்கப்போவதில்லை. ஆனால் சிறந்த ஆடுகளமாக இருக்கும். பேட்டிங்குக்கு நன்றாக இருக்கும். அதற்காக 700-800 ரன்கள் குவிக்கக்கூடிய ஆடுகளமாக இருக்கும் என்று அர்த்தமில்லை. மொத்தத்தில் உயிரோட்டமான ஒரு ஆடுகளமாக இருக்கும். சுழலுக்கும் உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன். எத்தகைய ஆடுகளமாக இருந்தாலும் அனுபவித்து உற்சாகமாக பந்து வீசுவேன். ரசிகர்களும் சிறந்த ஆட்டத்தை பார்க்கவே விரும்புகிறார்கள். அது தான் முக்கியம்.
தசைப்பிடிப்பால் கடந்த டெஸ்டில் ஆடாத ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அதனால் 3-வது டெஸ்டில் அவர் விளையாடுவார் என்று நினைக்கிறேன். அணியில் எனக்கு உறுதியாக இடம் உண்டா? என்பது தெரியாது. ஆடும் லெவனில் இடம் கிடைத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.
பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடுவதில்லை. ஆனால் இங்கிலாந்தின் 'பாஸ்பால்' என்ற ஆக்ரோஷமான பேட்டிங் அணுகுமுறை பவுலர்களையும் அதற்கு ஏற்ப தயார்படுத்த வைக்கிறது. சில சமயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடும் போது பந்து வீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களின் அதிரடி பற்றி கவலைப்படாமல் அவர்களின் விக்கெட்டுகளை எப்படி வீழ்த்துவது என்பதிலேயே கவனம் செலுத்துவார்கள். ஆனால் இங்கு இங்கிலாந்து வீரர்களின் அணுகுமுறை வேறுவிதமாக இருக்கிறது. தாக்குதல் பாணியை கடைபிடிக்கிறார்கள். இதனால் அவர்களின் ரன்வேட்டையை எப்படி கட்டுப்படுத்துவது என்றும் திட்டமிட வேண்டி உள்ளது. இதுவே போட்டியில் சுவாரஸ்யமாக இருக்கிறது.
இவ்வாறு குல்தீப் யாதவ் கூறினார்.
- கடந்த முறை சில முக்கியமான போட்டிகளில் ஐதராபாத் அணியின் பந்து வீச்சில் குழப்பமாக இருந்தது.
- அவரது வருகையால் கடந்த ஆண்டு கேப்டன்ஷிப்பில் இருந்த குறைபாடு நீங்கும்.
புதுடெல்லி:
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் இறுதியில் தொடங்குகிறது. இதற்கான ஏலத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்சை ரூ. 20½ கோடிக்கு வாங்கியது. இதனால் இந்த சீசனில் ஐதராபாத் அணியின் கேப்டனாக கம்மின்ஸ் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகையில், 'ஏலத்தில் ஐதராபாத் அணி கம்மின்சை வாங்கியதை புத்திசாலித்தனமான முடிவாக நான் பார்க்கிறேன். அவர் கொஞ்சம் அதிக விலைக்கு வாங்கப்பட்டு இருந்தாலும், அவரது வருகையால் கடந்த ஆண்டு கேப்டன்ஷிப்பில் இருந்த குறைபாடு நீங்கும்.
கடந்த முறை சில முக்கியமான போட்டிகளில் ஐதராபாத் அணியின் பந்து வீச்சில் குழப்பமாக இருந்தது. அதன் காரணமாகவே அவர்கள் சில ஆட்டங்களில் தோல்வியை தழுவினர். தற்போது கம்மின்ஸ் ஐதராபாத் அணியில் இணைவதால் அவர் நிச்சயம் கேப்டனாக நியமிக்கப்படுவார். அத்துடன் அவரது வருகை அணியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று உறுதியாக நம்புகிறேன்' என்றார்.
- கடந்த ஆண்டு ஆகஸ்டு 23-ந்தேதி இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்தது.
- இந்திய மல்யுத்த சம்மேளம் மீதான இடைநீக்க நடவடிக்கையை உலக மல்யுத்த சங்கம் நேற்று தளர்த்தியது.
புதுடெல்லி:
இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலை குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தாமல் பலமுறை தள்ளிவைக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த உலக மல்யுத்த சங்கம், கடந்த ஆண்டு ஆகஸ்டு 23-ந்தேதி இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்தது.
இதற்கிடையே, பல்வேறு சலசலப்புக்கு மத்தியில் இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. புதிய தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு மல்யுத்த வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அவர் விதிமுறைக்கு புறம்பாக தேசிய போட்டிகளை நடத்த முயற்சித்ததால் உடனடியாக புதிய நிர்வாகத்தை மத்திய விளையாட்டு அமைச்சம் இடைநீக்கம் செய்தது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்ட தற்காலிக கமிட்டி மல்யுத்த பணிகளை கவனிக்கிறது. ஆனாலும் புதிய நிர்வாகம், விளையாட்டு அமைச்சகத்தின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளம் மீதான இடைநீக்க நடவடிக்கையை உலக மல்யுத்த சங்கம் நேற்று தளர்த்தியது. அதே சமயம் முன்னாள் மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிராக பல மாதங்கள் போராடிய பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் போன்ற வீரர், வீராங்கனைகளை சர்வதேச போட்டிக்கு பரிசீலனை செய்யும் போது எந்தவித பாகுபாடும் காட்டமாட்டோம் என்று இந்திய மல்யுத்த சம்மேளனம் எழுத்துபூர்வமாக உத்தரவாதம் தர வேண்டும் என்றும் உலக சங்கம் அறிவுறுத்தியுள்ளது.






