என் மலர்
விளையாட்டு
- வங்காளதேச அணி சமீபத்தில் பாகிஸ்தானை அவர்களது இடத்தில் இரு டெஸ்டிலும் தோற்கடித்து வரலாறு படைத்தது.
- அந்த அணியில் தரவரிசை அடிப்படையில் சில சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள்.
மும்பை:
இந்தியாவுக்கு வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 19-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் வங்காளதேசத்தை எளிதாக நினைத்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று இந்திய அணியை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
வங்காளதேச அணி சமீபத்தில் பாகிஸ்தானை அவர்களது இடத்தில் இரு டெஸ்டிலும் தோற்கடித்து வரலாறு படைத்தது. இதன் மூலம் தாங்களும் தீவிரமான ஒரு அணி என்பதை நிரூபித்து காட்டியது. இரு ஆண்டுக்கு முன்பு இந்திய அணி அங்கு சென்று விளையாடிய போது கூட வங்காளதேச அணியினர் கடும் போராட்டம் (மிர்புர் டெஸ்டில் 145 ரன் இலக்கை இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து தான் எட்டிப்பிடித்தது) அளித்தனர். தற்போது பாகிஸ்தானை வீழ்த்தியிருப்பதால் அதே உத்வேகத்துடன் இந்தியாவை எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள்.
அந்த அணியில் தரவரிசை அடிப்படையில் சில சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். இதே போல் சில வளர்ந்து வரும் நட்சத்திரங்களும் உள்ளனர். அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆரம்ப நிலையில் இருப்பதால் அவர்களை பற்றி எதிரணிகளுக்கு அதிகம் தெரியாது. எனவே இப்போது அவர்களை எதிர்த்து விளையாடும் போது எந்த வகையிலும் நாம் மெத்தனமாக இருக்க கூடாது. ஏனெனில் பாகிஸ்தானை வீழ்த்தியது போல் அவர்கள் இந்தியாவையும் வீழ்த்தலாம். அதனால் இது எதிர்பார்ப்புக்குரிய ஒரு தொடராக நிச்சயம் இருக்கும்.
அடுத்த 4½ மாதங்களில் இந்திய அணி மொத்தம் 10 டெஸ்ட் போட்டிகளில் (வங்காளதேசம், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) விளையாட உள்ளது. இவற்றில் குறைந்தது 5-ல் டெஸ்டில் வெற்றி பெற்றால் தான் இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும். ஆனால் அடுத்து வரக்கூடிய எந்த டெஸ்ட் தொடரும் இந்தியாவுக்கு எளிதாக இருக்காது. விறுவிறுப்பு நிறைந்த கிரிக்கெட்டின் கோடை காலத்தில் நாம் இருக்கிறோம்.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
- சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக தாமஸ் பேச் 2013-ம் ஆண்டு முதல் தற்போது வரை இருந்து வருகிறார்.
- 12 ஆண்டு பதவி காலத்தை நிறைவு செய்யும் தாமஸ் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பதவி விலகுகிறார்.
ஜெனீவா:
சர்வதேச விளையாட்டு அமைப்பில் அதிகாரமிக்க, வலிமையான பதவியான சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.) தலைவராக தாமஸ் பேச் (ஜெர்மனி) 2013-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். 12 ஆண்டு பதவி காலத்தை நிறைவு செய்யும் அவர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பதவி விலகுகிறார். இதனால் ஐ.ஓ.சி.யின் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி இப்போதே தொடங்கி விட்டது. தலைவர் பதவிக்கு அதன் உறுப்பினர்கள் 7 பேர் போட்டியிடுவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதில் உலக தடகள சம்மேளனத்தின் தலைவராக இருக்கும் இங்கிலாந்தை சேர்ந்த 67 வயதான செபாஸ்டியன் கோவும் ஒருவர். முன்னாள் ஓட்டப்பந்தய வீரரான இவர் 1980, 1984-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் 2 தங்கம் மற்றும் இரு வெள்ளிப்பதக்கம் வென்றவர் ஆவார். 2012-ம் ஆண்டு லண்டனில் ஒலிம்பிக் போட்டி நடந்த போது போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைவராக சிறப்பாக செயல்பட்டார். அவர் தலைவர் பதவியை பிடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. என்றாலும் அவர் கடும் சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஐ.ஓ.சி.யின் வயது வரம்பு 70. தேர்தலின் போது அவருக்கு 68 ஆக இருக்கும். ஆனால் வயது வரம்பு 4 ஆண்டுகள் வரை தளர்த்தப்பட அனுமதி உண்டு. அந்த வகையில் பார்த்தால் செபாஸ்டியன் கோ புதிய தலைவராக தேர்வானால் 6 ஆண்டுகள் அந்த பதவியில் நீடிக்க முடியும்.
ஜிம்பாப்வேயை சேர்ந்த முன்னாள் நீச்சல் வீராங்கனையும், இதன் நிர்வாக குழு உறுப்பினருமான 41 வயதான கிறிஸ்டி கவன்ட்ரியும் களத்தில் உள்ளார். ஜிம்பாப்வே விளையாட்டுத்துறை மந்திரியாக இருக்கும் கவன்ட்ரிக்கு தற்போதைய தலைவர் தாமஸ் பேச்சின் ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 130 ஆண்டுகால ஒலிம்பிக் கமிட்டி வரலாற்றில் இதுவரை 9 ஆண்கள் மட்டுமே தலைவர் பதவியை அலங்கரித்துள்ளனர். எனவே கவன்ட்ரி தலைவராக தேர்வானால் அந்த பொறுப்புக்கு வரும் முதல்பெண்மணி என்ற பெருமையை பெறுவார்.
போட்டி களத்தில் இருக்கும் 7 பேரில் ஐ.ஓ.சி.யின் 4 துணைத்தலைவர்களில் ஒருவரான ஸ்பெயினை சேர்ந்த ஜூவான் ஆன்டோனியா சமாரஞ்ச் ஜூனியரும் முக்கியமானவர். இவரது தந்தை சமாரஞ்ச் 21 ஆண்டுகள் இந்த உயரிய பதவியில் இருந்துள்ளார். மேலும் சர்வதேச சைக்கிளிங் சங்க தலைவர் டேவிட் லாப்பரடின்ட் (பிரான்ஸ்) சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க தலைவர் மோரினாரி வதானாப் (ஜப்பான்), ெபரும் கோடீஸ்வரரான சர்வதேச ஸ்கை மற்றும் ஸ்னோபோர்டு தலைவர் ஜோஹன் எலியாஸ் (சுவீடன்), ேஜார்டான் நாட்டு இளவரசர் பைசல் பின் ஹூசைன் ஆகியோரும் போட்டியாளர்களாக உள்ளனர்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை கிரீஸ் தலைநகர் ஏதென்சில் நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்கிறது. ஐ.ஓ.சி. உறுப்பினர்கள் மட்டுமே ஓட்டுபோட தகுதி படைத்தவர்கள். மொத்தம் 111 பேர் ஓட்டு போடுவார்கள். அதிக வாக்குகள் பெறுபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். புதிய தலைவரின் பதவி காலம் 8 ஆண்டுகள் ஆகும். மீண்டும் தேர்வானால் மேலும் 4 ஆண்டுகள் பதவியில் தொடரலாம்.
- முதல் அரையிறுதி போட்டி பாகிஸ்தானை வீழ்த்தி சீனா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- நாளை நடைபெறும் இறுதி போட்டியில் சீனாவை இந்தியா எதிர்கொள்கிறது.
8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன.
இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், சீனா, தென்கொரியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
முதல் அரையிறுதி போட்டி பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்றது. இப்போட்டி 1 -1 எனற கணக்கில் சாமானில் முடிந்தது. இதனையடுத்து வெற்றியை தீர்மானிக்க போட்டி பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு சென்றது. அதில் 2-0 என்ற கணக்கில் சீனா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பின்னர் நடத்த 2 ஆவது அரையிறுதி போட்டியில் தென்கொரிய அணியை இந்தியா எதிர்கொண்டது. இப்போட்டியில் 4 - 1 என்ற கோல்கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நாளை நடைபெறும் இறுதி போட்டியில் சீனாவை இந்தியா எதிர்கொள்கிறது.
- ஒரு வருடத்தில் அதிக சிக்சர் விளாசியவர்கள் பட்டியலில் மெக்கல்லம் முதல் இடத்தில் உள்ளார்.
- அவர் ஒரு வருடத்தில் 33 சிக்சர்கள் விளாசி உள்ளார்.
இந்தியா - வங்கதேச ஆகிய இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற எதிரான டெஸ்ட் தொடர் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. அதனை தொடர்ந்து கான்பூரில் 2-வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.
இந்நிலையில் டெஸ்ட் தொடரின் மூலம் ஜெய்ஸ்வால் மிகப்பெரிய சாதனையை படைக்கவுள்ளார். நியூசிலாந்து ஜாம்பவான் பேட்டர் மெக்கல்லத்தின் நீண்ட கால சாதனையை முறியடிக்க இந்திய அணியின் ஜெய்வாலுக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
1 சிக்சர் விளாசினால் ஸ்டோக்சையும் 8 சிக்சர் விளாசினால் மெக்கல்லத்தையும் பின்னுக்கு தள்ளி அந்த பட்டியலில் முதல் இடத்தை ஜெய்ஸ்வால் பிடித்து சாதனை படைப்பார்.
ஒரு வருடத்தில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியல்:-
வீரேந்தர் சேவாக்- 22 சிக்சர்கள் (2008)
கில்கிறிஸ்ட் -22 சிக்சர்கள் (2005)
பென் ஸ்டோக்ஸ் - 26 சிக்சர்கள் (2022)
ஜெய்ஸ்வால் -26 சிக்சர்கள் (2024)
மெக்கல்லம் -33 சிக்சர்கள் (2014)
- இலங்கை அணியின் கேப்டனாக தனஞ்செயா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஓஷதா பெர்னாண்டோ மீண்டும் இலங்கை அணியில் இடம் பிடித்துள்ளார்.
நியூசிலாந்து அணி இலங்கை அணியில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தனஞ்செயா டி சில்வா தலைமையில் இந்த அணி களமிறங்குகிறது.
ஓஷதா பெர்னாண்டோ மீண்டும் இலங்கை அணியில் இடம் பிடித்துள்ளார். நிஷான் மதுஷ்காவுக்கு அணியில் வாய்ப்பு வழங்கபடவில்லை.
இலங்கை அணி விவரம்:-
தனஞ்சய டி சில்வா (கேப்டன்), திமுத் கருணாரத்னே, பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ஓஷதா பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமாரா, பிரபாத் ஜயசூரியா, ரமேஷ் மெண்டிஸ், ஜெப்ரி வான்டர்சே, மிலன் ரத்நாயக்க.
- 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை அயர்லாந்து வீழ்த்தியது.
- டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக இங்கிலாந்து அணியை வீழ்த்தி அயர்லாந்து அணி சாதனை படைத்துள்ளது.
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 67 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி கடைசி ஓவரில் வெற்றியை ருசித்தது.
இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக இங்கிலாந்து அணியை வீழ்த்தி அயர்லாந்து அணி சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியை அயர்லாந்து அணி வீராங்கனைகள் உள்பட ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி தீர்த்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- முகமது சிராஜ், பும்ரா ஆகியோருக்கும் ஓய்வு கொடுக்கப்படலாம்.
- ரோகித்சர்மா, விராட் கோலி, ஜடேஜா, ஆகியோர் டி20-யில் இருந்து ஏற்கனவே ஓய்வை அறிவித்து விட்டனர்.
புதுடெல்லி:
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் வருகிற 19-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் கான்பூரில் (27-ந் தேதி தொடக்கம்) நடக்கிறது. 20 ஓவர் தொடர் அக்டோபர் 6-ந்தேதி முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த நிலையில், வங்க தேசத்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்பட இருப்பதாகவும் அவருக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் அக்டோபர் 16-ந்தேதி தொடங்குகிறது. வங்கதேச தொடர் முடிந்த பிறகு 3 நாள்கள் மட்டுமே இருப்பதால் டெஸ்ட் போட்டியைக் கருத்தில் கொண்டு கில்லுக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அடுத்த ஆண்டு நடக்கிறது. இந்திய அணி 10 டெஸ்டில் விளையாட உள்ளது. இதேபோல அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியும் நடைபெற இருக்கிறது. இந்த இரண்டையும் கருத்தில் கொண்டு இந்திய அணி தற்போது 20 ஓவர் போட்டிகளை விட ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
வங்கதேசத்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் சுப்மன் கில்லை தவிர்த்து மேலும் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. முகமது சிராஜ், பும்ரா ஆகியோருக்கும் ஓய்வு கொடுக்கப்படலாம். ரிஷப் பண்ட்டும் இதற்கான பட்டியலில் இருப்பதாக தெரிகிறது.
ரோகித்சர்மா, விராட் கோலி, ஜடேஜா, ஆகியோர் 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் அந்த இடங்களுக்கு எந்த வீரர்களை கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்யப்போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்க்கப்படுகிறது.
- ஆண்கள் பிரிவில் குகேஷ், அர்ஜூன் எரிகாசி ஆகியோர் வெற்றியை வசப்படுத்தினர்.
- பிரக்ஞானந்தா மற்றும் விடித் குஜராத்தி ஆகியோர் தங்களது ஆட்டத்தை டிரா செய்தனர்.
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று நடந்த 5-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி அஜர்பைஜானை தோற்கடித்தது.
இதன் மூலம் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆண்கள் அணி தொடர்ந்து 5வது வெற்றியை பதிவு செய்துள்ளது. அஜர்பைஜானை 3-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவில் இந்திய அணி 2.5-1.5. என்ற கணக்கில் கஜகஸ்தானை தோற்கடித்தது.
ஆண்கள் பிரிவில் குகேஷ், அர்ஜூன் எரிகாசி ஆகியோர் சிறப்பாக விளையாடி தங்களது ஆட்டங்களில் வெற்றியை வசப்படுத்தினர். நிஜாத் அபாசோவ் மற்றும் ஷக்ரியார் மமேத்யரோவ் ஆகியோருக்கு எதிராக ஆர் பிரக்ஞானந்தா மற்றும் விடித் குஜராத்தி ஆகியோர் டிரா செய்தனர். அய்டின் சுலைமான்லியை டி குகேஷ் தோற்கடித்தார்.
- 2 விக்கெட்டுகள் வீழ்த்தினால் பேட் கம்மின்ஸ் சாதனையை அஸ்வின் முறியடிப்பார்.
- 4 விக்கெட்டுகள் வீழ்த்தினால் வெஸ்ட் இண்டீஸ் வீரர் வால்ஷ் சாதனையை முறியடிப்பார்.
இந்தியா வந்துள்ள வங்கதேச அணி டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. வரும் 19-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் அனைவரும் ஏற்கனவே சென்னை வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தொடரில் தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் பல சாதனைகளை படைவிருக்கிறார். இதுவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையில் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் முதலிடத்தில் உள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மட்டும் இதுவரை 43 போட்டியில் விளையாடியுள்ள அவர் 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்து ஆஸ்திரேலியாவின் கேப்டன் பேட் கம்மின்ஸ் 175 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். தற்போது 174 விக்கெட்டுடன் மூன்றாவது இடத்தில் அஸ்வின் இருக்கிறார். 2 விக்கெட்டுகளை வீழ்த்தினால் கம்மின்சை பின்னுதள்ளி விடுவார்.
மேலும் 14 விக்கெட்டுகளை எடுக்கும் பட்சத்தில் நாதன் லயனை பின்னுக்கு தள்ளி அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடிப்பார். அதோடு மட்டுமின்றி அடுத்தடுத்து நடைபெற இருக்கும் டெஸ்ட் போட்டியில் அவர் 26 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் முதல் பவுலராக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையும் அவர் நிகழ்த்தும் வாய்ப்புள்ளது.
இந்தியாவில் 126 சர்வதேச போட்டிகளில் விளையாடி மொத்தம் 455 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தியுள்ளார். அவர் வங்கதேச தொடரை 22 விக்கெட்டுகளுடன் முடித்தால், இந்திய மண்ணில் விளையாடிய போட்டிகளில் 476 சர்வதேச விக்கெட்டுகள் என்ற அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடிப்பார்.
இதை தவிர, 4 மற்றும் 15 விக்கெட்டுகள் வீழ்த்தினால், டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மேற்கிந்தியத் தீவுகளின் ஜாம்பவான் கர்ட்னி வால்ஷ் (519), ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் (530) ஆகியோரை பின்னுக்குத் தள்ளுவார். மேலும் இரண்டு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினால், ஷேன் வார்னேவின் (37 முறை) 5 விக்கெட்டுகள் சாதனையை முறியடிப்பார். 5 விக்கெட்டுகள் அதிக முறை எடுத்தவர்கள் பட்டியலில் இலங்கையின் முத்தையா முரளிதரன் (67) முதல் இடத்தில் உள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 2023-25-ல் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் ஆஸ்திரேலியாவின் ஹசில்வுட் 51 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இந்த தொடரில் அஸ்வின் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினால் WTC-l அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்ற சாதனையை அஸ்வின் பெறுவார்.
- சீனியர் பிரிவில் தமிழக வீராங்கனை கனகலட்சுமி வெண்கலம் பதக்கம் வென்றார்.
- அரையிறுதியில் இந்திய வீராங்கனை சோனியா தேவியிடம் தோற்றார்.
புதுடெல்லி:
இந்திய வாள்வீச்சு சம் மேளனம் சார்பில் முதலாவது எப்.ஐ.இ. பாயில் பிரிவு பெண்களுக்கான சர்வதேச சேட்லைட் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.
இதில் இந்தியா, ஆஸ்திரியா, நேபாளம் ஆகிய நாடுகளை சேர்ந்த 53 வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து 6 பேர் இந்த போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
சீனியர் பிரிவில் நடந்த இந்த போட்டியில் தமிழக வீராங்கனை கனகலட்சுமி வெண்கலம் பதக்கம் வென்று முத்திரை பதித்தார். சேலத்தை சேர்ந்த அவர் தனிநபர் பிரிவில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். அரையிறுதியில் இந்திய வீராங்கனை சோனியா தேவியிடம் தோற்றார்.
வெண்கலம் வென்ற கனகலட்சுமியை தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி சேர்மன் சுப்பையா தனசேகரன், கன்வீனர் வி.கருணாமூர்த்தி ஆகியோர் பாராட்டினார்கள்.
ஆஸ்திரியாவை சேர்ந்த புருஜ்ஜர் லில்லி தங்கமும், சோனியா தேவி வெள்ளியும், மற்றொரு இந்திய வீராங்கனை கனுபிரியா வெண்கலமும் பெற்றனர்.
- 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரெபேக்கா உடல் உறுப்புக்கள் செயலிழந்து உயிரிழந்தார்
- ஆயிரக்கணக்காக மக்கள் ரெபேக்காவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
உகாண்டா நாட்டை சேர்ந்த 33 வயதான ஒலிம்பிக்ஸ் மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை ரெபேக்கா செப்டேகி [Rebecca Cheptegei] மீது அவரது காதலன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடைசியாக உகாண்டா சார்பில் பாரீஸ் ஒலிம்பிக்சில் கலந்துகொண்டு மாரத்தான் பிரிவில் 44வது இடத்தைப் பிடித்து நாடு திரும்பிய ரெபேக்கா கென்யா நாட்டில் மேற்கு Trans Nzoia மாகாணத்தில் அவருக்கு சொந்தமான வீட்டில் ஓய்வில் இருந்தார்.
வீட்டில் வைத்து ரெபேக்காவுக்கும் அவரது முன்னாள் காதலன் டேனியலுக்கும் [Daniel Ndiema] இடையில் இருந்த நிலத்தகராறு காரணமாக வாக்குவாதம் எழுந்துள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ரெபேக்கா மீது பெட்ரோல் ஊற்றி தீவை வைத்துள்ளார் டேனியல். இதனால் அவருக்கு 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரெபேக்கா உடல் உறுப்புக்கள் செயலிழப்பு காரணமாக கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில் வீராங்கனை ரெபேக்காவின் உடல் நேற்றைய தினம் கென்யாவில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. கென்ய நாட்டின் எல்லையில் உள்ள நகரத்தில் நடந்த இந்த இறுதி ஊர்வலத்தில் உகாண்டாவை சேர்ந்த ஆயிரக்கணக்காக மக்கள் ரெபேக்காவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே ரேபாகாவின் காதலிடம் போலீஸ் விசாரித்து வருகிறது.
- ஏற்கனவே பந்துவீச்சு பயிற்சியை ஆரம்பித்துவிட்டேன்.
- நான் எவ்வளவு வலிமையாக திரும்புகிறேனோ, அது எனக்கு நல்லது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமிக்கு, கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அந்த உலகக் கோப்பையில் 7 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரமாதப்படுத்திய சமி, கடந்த நவம்பருக்கு பிறகு எந்த போட்டியிலும் விளையாடவில்லை.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இடது கணுக்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொண்டு வரும் சமி விரைவில் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட 34 வயதான முகமது சமி தற்போதைய தனது உடல்தகுதி குறித்து கூறியதாவது:-
நான் சில காலமாக இந்திய அணிக்கு விளையாடாமல் இருப்பதை அறிவேன். அதனால் அணிக்கு விரைவாக திரும்ப கடுமையாக முயற்சித்து வருகிறேன். இருப்பினும் நான் அணிக்கு திரும்பும் போது, உடல் அளவில் எந்த வித அசவுகரியமும் இன்றி இருப்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். நான் எவ்வளவு வலிமையாக திரும்புகிறேனோ, அது எனக்கு நல்லது.
அடுத்து வரும் வங்காளதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என எந்த அணிக்கு எதிரான தொடராக இருந்தாலும் அவசரப்பட்டு அணிக்கு வந்து, மறுபடியும் காயமடைந்தால் சிக்கலாகி விடும். அதனால் இந்த விஷயத்தில் நான் எந்த 'ரிஸ்க்'கும் எடுக்க விரும்பவில்லை.
ஏற்கனவே பந்துவீச்சு பயிற்சியை ஆரம்பித்துவிட்டேன். ஆனால் 100 சதவீதம் உடற்தகுதியை அடையும் வரை அணிக்கு திரும்புவதில் எந்த ஒரு வாய்ப்பையும் எடுக்கபோவதில்லை. எனது உடற்தகுதியை சோதிக்க உள்ளூர் போட்டியில் விளையாட வேண்டும் என்றால் அதற்கும் தயார். எந்த அணிக்கு எதிராகவும், எந்த வடிவிலான போட்டியாக இருந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன்.
இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்புள்ளது. கடந்த தொடரில் அங்கு நாம் இளம் வீரர்களுடன் விளையாடினோம். சில சீனியர் வீரர்கள் இல்லை. ஆனாலும் நாம் தான் சிறந்த அணி என்று நிரூபித்து காட்டினோம். இந்த முறை கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறேன். ஆனால் இந்தியா வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு சமி கூறினார்.
இதுவரை 64 டெஸ்டுகளில் விளையாடி 229 விக்கெட் வீழ்த்தி இருக்கும் முகமது சமி அடுத்த மாதம் நடக்கும் ரஞ்சி கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்காக ஏதாவது ஒரு ஆட்டத்தில் ஆடுவார் என்று தெரிகிறது.






