என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • அவர் ஒரு அணிக்கான வீரர். டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஆசைப்படுகிறார்.
    • நாட்டிற்காக விளையாட விரும்புகிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், துணை கேப்டனுமான ரிஷப் பண்ட் மான்செஸ்டரில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் நாளில் காயமடைந்தார். வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் அதிவேகமாக யார்க்கராக வீசிய பந்தை ரிஷப் பண்ட் 'ரிவர்ஸ் ஸ்வீப்' ஷாட் அடிக்க முயற்சித்தார். ஆனால் பந்து பேட்டில் லேசாக உரசியபடி நேராக அவரது வலது காலை பலமாக தாக்கியது. ஷூவை கழற்றி பார்த்த போது, பந்து தாக்கிய இடத்தில் ரத்தக்கசிவுடன் வீங்கி இருந்தது. வலியால் துடித்த ரிஷப் பண்ட் (37 ரன்) அத்துடன் 'ரிட்டயர்ட் ஹர்ட்' ஆகி வெளியேறினார்.

    'ஸ்கேன்' பரிசோதனையில் அவரது கால்பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இத்தகைய காயம் குணமடைய 6 முதல் 8 வாரங்கள் ஓய்வு அவசியம். இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இருந்து ரிஷப் பண்ட் விலகியுள்ளார்.

    அதே சமயம் மான்செஸ்டர் டெஸ்டில் சிகிச்சை எடுத்துக் கொண்டு 2-வது நாளில் பேட்டிங் செய்த பண்ட் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். தேவைப்பட்டால் 2-வது இன்னிங்சிலும் பேட் செய்வார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் விக்கெட் கீப்பிங் பணியை அவருக்கு பதிலாக துருவ் ஜூரெல் கவனிக்கிறார்.

    இந்நிலையில் என்ன ஆனாலும் அணிக்காக விளையாடுவேன் என ரிஷப் பண்ட் கூறியதாவது முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்க்கு முன் ரிஷப் பண்டிடம் உன் கைவிரல் எப்படி இருக்கிறது? உடைந்து விட்டதுதானே என்றேன். அதற்கு விரல்கள் உடைந்தாலும், நான் விளையாடுவேன் என்றார்.

    அவர் ஒரு அணிக்கான வீரர். டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஆசைப்படுகிறார். நாட்டிற்காக விளையாட விரும்புகிறார்.

    என ரவி சாஸ்திரி கூறினார்.

    • உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் திவ்யா தேஷ்முக்- கோனெரு ஹம்பி மோதுகின்றனர்.
    • இதன்மூலம் பெண்கள் உலகக் கோப்பையை இந்தியா முதல்முறையாக வெல்வது உறுதியாகி விட்டது.

    பதுமி:

    'பிடே' பெண்கள் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் கோனெரு ஹம்பி, சீனாவின் லீ டிங்ஜி இடையிலான அரைஇறுதியின் முதல் இரு ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. இருவரும் தலா 1 புள்ளியுடன் சமநிலை வகித்தனர். இதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் சுற்று நேற்று நடந்தது.

    டைபிரேக்கரிலும் முதல் இரு ஆட்டங்கள் 'டிரா' ஆனது. அடுத்த இரு ஆட்டங்களில் இருவரும் தலா ஒன்றில் வெற்றி பெற்றனர். இதனால் மேலும் இரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய இதன் முதலாவது ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய கோனெரு ஹம்பி 70-வது நகர்த்தலில் வெற்றியை வசப்படுத்தினார். இதன் 2-வது ஆட்டத்தில் கருப்புநிற காய்களுடன் ஆடிய ஹம்பி எதிராளியை மிரட்டினார். 33-வது நகர்த்தலில் ராஜா, ராணி இரண்டுக்கும் குதிரை மூலம் 'செக்' வைத்தார். அத்துடன் தோல்வியை லீ டிங்ஜி ஒப்புக் கொண்டார்.

    மொத்தம் 8 ஆட்டங்கள் நீடித்த இந்த அரைஇறுதியில் கோனெரு ஹம்பி 5-3 என்ற புள்ளி கணக்கில் டிங்ஜியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தார். 38 வயதான ஹம்பி உலக செஸ் போட்டியில் இறுதிப்போட்டியை எட்டுவது இதுவே முதல் முறையாகும். மேலும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

    இறுதி ஆட்டத்தில் கோனெரு ஹம்பி, சக நாட்டவரான திவ்யா தேஷ்முக்கை சந்திக்கிறார். இதன் மூலம் பெண்கள் உலகக் கோப்பையை இந்தியா முதல்முறையாக வெல்வது உறுதியாகி விட்டது. இறுதிசுற்று இரு ஆட்டங்களை கொண்டது. இதன் முதலாவது ஆட்டம் நாளை நடக்கிறது.

    • நொண்டியபடி மைதானத்துக்கு வந்த அவர், வலியுடனேயே பேட்டிங் செய்தார்.
    • ரிஷப் பண்ட் காயத்துடன் மீண்டும் விளையாட வந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி மகத்தான தன்மையைக் காட்டினார்.

    மான்செஸ்டர்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. நேற்றைய 2-ம் நாள் ஆட்டத்தில் இந்தியா 358 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது. இப்போட்டியின் முதல் நாளில் கிறிஸ் வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தில் ரிஷப் பண்ட் வலது கால் விரலில் காயம் அடைந்தார். வலியால் துடித்த அவர் பாதியில் வெளியேறினார். நேற்றைய 2-ம் ஆட்டத்தின் போது ஷர்துல் தாக்கூர் விக்கெட் விழுந்ததும் கால் காயத்துடன் ரிஷப் பண்ட் களம் இறங்கினார்.

    நொண்டியபடி மைதானத்துக்கு வந்த அவர், வலியுடனேயே பேட்டிங் செய்தார். இதில் அரைசதம் அடித்தார். பின்னர் 54 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்த நிலையில் காயத்துடன் பேட்டிங் செய்த ரிஷப் பண்ட்டை டெண்டுல்கர் உள்பட பலர் பாராட்டி உள்ளனர்.

    இதுதொடர்பாக டெண்டுல்கர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    ரிஷப் பண்ட் காயத்துடன் மீண்டும் விளையாட வந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி மகத்தான தன்மையைக் காட்டினார். அவரது 50 ரன்கள், உங்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்து வதற்கு தேவையான மன உறுதியை நினைவூட்டுகிறது. இந்த துணிச்சலான முயற்சி நீண்ட காலம் நினைவில் வைத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறும்போது, உங்களுடைய நாட்டுக்காக எந்தளவில் விளையாடினாலும் இது போன்ற தைரியம் மற்றும் போராட்ட குணத்தைக் காண்பிக்க வேண்டும். காயத்தையும் தாண்டி பேட்டிங் செய்ய வந்த ரிஷப் பண்ட்டுக்கு தலை வணங்குகிறேன் என்றார்.

    அதேபோல் முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா கூறும் போது, ஆண்டிகுவாவில் அனில் கும்ப்ளே தாடை உடைந்ததைத் தாண்டி விளையாட வந்ததைப் பார்த்துள்ளேன். அது போன்ற நிகழ்வை இனிமேல் பார்க்க மாட்டேன் என்று நினைத்தேன். ஆனால் ரிஷப்பின் தைரியம் மூலம் அதை பார்த்தேன் என்றார்.

    • முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது.
    • 12.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 153 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் 6 அணிகள் பங்கேற்று உள்ளன.

    நேற்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியில் ஏ.பி.டிவில்லியர்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 41 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.அவரது ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா எளிதில் வெற்றி பெற்றது.

    அந்த அணி 12.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 153 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிவில்லியர்ஸ் 51 பந்துகளில் 116 ரன்கள் எடுத்தார். இதில் 15 பவுண்டரி, 7 சிக்சர் அடங்கும். அதிரடி பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் தனது 41-வது வயதிலும் அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார்.

    • இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகி உள்ளார்.
    • 5-வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு ஆலோசித்து வருகிறது.

    காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகி உள்ளார்.

    தற்போது நடந்து வரும் 4-வது டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் தேவைபட்டால் ரிஷப்பண்ட் பேட்டிங் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் விக்கெட் கீப்பிங் பணியை துருவ் ஜூரெல் கவனித்து வருகிறார்.

    இதற்கிடையே 5-வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு ஆலோசித்து வருகிறது. இதில் இங்கிலாந்தில் கவுண்டி டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இஷான் கிஷனை அணியில் சேர்க்க முடிவு செய்து அவருக்கு தேர்வுக் குழு அழைப்பு விடுத்தது.

    ஆனால் தான் கணுக்கால் காயம் காரணமாக அவதிப்படுவதாகவும், இதனால் தன்னால் 5-வது டெஸ்டில் ஆட முடியாது என்றும் இஷான் கிஷன் மறுப்பு தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதையடுத்து வேறு வீரர்களை தேர்வுக்குழு பரிசீலித்து வருகிறது. இந்த நிலையில் ரிஷப் பண்ட்டுக்கு மாற்றாக தமிழகத்தை சேர்ந்த ஜெகதீசனை அணியில் சேர்க்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • சாய் சுதர்சன், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் ஆகியோர் அரை சதம் கடந்தனர்.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, இந்தியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 114.1 ஓவர்களில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சாய் சுதர்சன் 61 ரன்களும், ஜெய்ஸ்வால் 58 ரன்களும், ரிஷப் பண்ட் 54 ரன்களும் எடுத்தனர்.

    இந்திய அணியின் முதல் இன்னிங்சில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். ஆனாலும், காயத்தைப் பொருட்படுத்தாத ரிஷப் பண்ட் களமிறங்கி 2 சிக்சர் உட்பட 54 ரன்கள் அடித்து அசத்தினார்.

    இந்நிலையில், இந்த இன்னிங்சில் அடித்த அரைசதத்தையும் சேர்த்து ரிஷப் பண்ட் இங்கிலாந்தில் இதுவரை 9 அரைசதங்கள் அடித்துள்ளார்.

    இதன்மூலம் வெளிநாடுகளில் அதிக டெஸ்ட் அரைசதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற தோனியின் (8 அரைசதங்கள்) வாழ்நாள் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

    • வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • யூகி பாம்ப்ரி ஜோடி 2வது சுற்றில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    வாஷிங்டன்:

    வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற 2வது சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, நெதர்லாந்தின் செம் வெர்பீக்-ஸ்வீடனின் கோரன்சன் ஜோடி உடன் மோதியது.

    இதில் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் செட்டை 7-6 (7-1) என இழந்தது. இதில் சுதாரித்துக் கொண்ட யூகி பாம்ப்ரி ஜோடி அடுத்த இரு செட்களை 7-6 (7-3), 10-6 என கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
    • முதலில் பேட்செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 178 ரன் எடுத்தது.

    டாக்கா:

    வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு போட்டியின் முடிவில் வங்கதேச அணி 2 போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி டாக்காவில் நடந்தது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 178 ரன்களை எடுத்தது. தொடக்க வீரர் சாஹிப்சாதா பர்ஹான் அதிரடியாக விளையாடி அரை சதத்தைப் பதிவுசெய்தார். அவர் 63 ரன்னில் அவுட்டானார். ஹசன் நவாஸ் 33 ரன்னில் வெளியேறினார்.

    வங்கதேச அணி சார்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. பாகிஸ்தான் அணியினரின் துல்லிய பந்து வீச்சில் சிக்கிய வங்கதேச அணி 104 ரன்னில் சுருண்டு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 74 ரன்னில் பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்றது.

    வங்கதேசம் அணி டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது.

    ஆட்ட நாயகன் விருது சாஹிப்சாதா பர்ஹானுக்கும், தொடர் நாயகன் விருது ஜேகர் அலிக்கும் வழங்கப்பட்டது.

    ஏற்கனவே இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வென்ற வங்கதேச அணி, தற்போது பாகிஸ்தானுக்கு எதிராகவும் டி20 தொடரை வென்று அசத்தியுள்ளது.

    • சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    பீஜிங்:

    சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், தைவானின் சூ டின்-சென் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 21-18 என இந்திய வீரர் கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட தைவான் வீரர் அடுத்த இரு செட்களை 21-15, 21-8 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டும், ஆர்ச்சர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், கே.எல்.ராகுல் 46 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய சாய் சுதர்சன் 61 ரன்னில் அவுட்டானார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 83 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜாவும், ஷர்துல் தாக்கூரும் தலா 19 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. ஜடேஜா 20 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷர்துல் தாகூர் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் நாளில் காலில் அடிபட்டு வெளியேறிய ரிஷப் பண்ட் மீண்டும் களமிறங்கி அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார். அரை சதம் விளாசிய பண்ட் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் 27 ரன்னில் அவுட்டானார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டும், ஆர்ச்சர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலி, பென் டக்கெட் இறங்கினர்.

    இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். இதனால் ரன்ரேட் 5க்கும் அதிகமாக இருந்தது. இருவரும் அரை சதம் கடந்தனர்.

    முதல் விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்த நிலையில் ஜாக் கிராலே 84 ரன்னில் அவுட்டானார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் பென் டக்கெட் 94 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து 46 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்தியா சார்பில் ஜடேஜா, கம்போஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • 90ஸ் கிட்ஸ் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஹல்க் ஹோகன்.
    • WWE போட்டியை பிரபலமாக்கியதில் இவருக்கு முக்கிய இடம் உண்டு.

    புளோரிடா:

    பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் (71), அமெரிக்காவில் காலமானார். இவர் 90ஸ் கிட்ஸ் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

    புகழ்பெற்ற அமெரிக்க மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன். WWE போட்டியை பிரபலமாக்கியதில் இவருக்கு முக்கிய இடம் உண்டு.

    ஹல்க் ஹோகனின் வீரதீர ஆளுமை, தேசபக்தி விளம்பரங்கள் மற்றும் உடல்கட்டு ஆகியவற்றால் அவரது புகழ் உயர்ந்தது. அவரது மறைவுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடந்து வருகிறது.
    • இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.

    பீஜிங்:

    சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி,

    இந்தோனேசியாவின் பகஸ் மவுலானா-கர்னாண்டோ ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-19, 21-19 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    ×