என் மலர்
கிரிக்கெட் (Cricket)

2 கால், 2 கை இல்லானாலும் இந்தியாவுக்காக விளையாடுவேன் சார்.. ரவி சாஸ்திரியிடம் கூறிய பண்ட்
- அவர் ஒரு அணிக்கான வீரர். டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஆசைப்படுகிறார்.
- நாட்டிற்காக விளையாட விரும்புகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், துணை கேப்டனுமான ரிஷப் பண்ட் மான்செஸ்டரில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் நாளில் காயமடைந்தார். வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் அதிவேகமாக யார்க்கராக வீசிய பந்தை ரிஷப் பண்ட் 'ரிவர்ஸ் ஸ்வீப்' ஷாட் அடிக்க முயற்சித்தார். ஆனால் பந்து பேட்டில் லேசாக உரசியபடி நேராக அவரது வலது காலை பலமாக தாக்கியது. ஷூவை கழற்றி பார்த்த போது, பந்து தாக்கிய இடத்தில் ரத்தக்கசிவுடன் வீங்கி இருந்தது. வலியால் துடித்த ரிஷப் பண்ட் (37 ரன்) அத்துடன் 'ரிட்டயர்ட் ஹர்ட்' ஆகி வெளியேறினார்.
'ஸ்கேன்' பரிசோதனையில் அவரது கால்பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இத்தகைய காயம் குணமடைய 6 முதல் 8 வாரங்கள் ஓய்வு அவசியம். இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இருந்து ரிஷப் பண்ட் விலகியுள்ளார்.
அதே சமயம் மான்செஸ்டர் டெஸ்டில் சிகிச்சை எடுத்துக் கொண்டு 2-வது நாளில் பேட்டிங் செய்த பண்ட் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். தேவைப்பட்டால் 2-வது இன்னிங்சிலும் பேட் செய்வார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் விக்கெட் கீப்பிங் பணியை அவருக்கு பதிலாக துருவ் ஜூரெல் கவனிக்கிறார்.
இந்நிலையில் என்ன ஆனாலும் அணிக்காக விளையாடுவேன் என ரிஷப் பண்ட் கூறியதாவது முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்க்கு முன் ரிஷப் பண்டிடம் உன் கைவிரல் எப்படி இருக்கிறது? உடைந்து விட்டதுதானே என்றேன். அதற்கு விரல்கள் உடைந்தாலும், நான் விளையாடுவேன் என்றார்.
அவர் ஒரு அணிக்கான வீரர். டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஆசைப்படுகிறார். நாட்டிற்காக விளையாட விரும்புகிறார்.
என ரவி சாஸ்திரி கூறினார்.






