என் மலர்tooltip icon

    விளையாட்டு

    விர்ஜில் வான் டிஜிக், முகமது சாலா கோல் அடிக்க மான்செஸ்டர் யுனைடெட் அணியை 2-0 என வீழ்த்தியது லிவர்பூல்.
    இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்தில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் மான்செஸ்டர் யுனைடெட் - லிவர்பூல் அணிகள் மோதின. லிவர்பூல் அணிக்கு சொந்தமான அன்ஃபீல்டு மைதானத்தில் 53 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் இந்த ஆட்டம் நடைபெற்றது.

    இந்த சீசனில் தோல்வியை சந்திக்காமல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் லிவர்பூல் 14-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தது. அலெக்சாண்டர் அர்னால்டு பாஸ் செய்த பந்தை விர்ஜில் வான் டிஜிக் கோலாக மாற்றினார்.

    அதன்பின் இரு வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. 90 நிமிட ஆட்டத்திற்குப் பின் இன்ஜூரிக்கான நேரம் வழங்கப்பட்டது. இதன் 3-வது நிமிடத்தில் முகமது சாலா கோல் அடிக்க லிவர்பூல் 2-0 என வெற்றி பெற்றது.

    விர்ஜில் வான் டிஜிக்

    இந்த வெற்றியின் மூலம் லிவர்பூல் 22 போட்டிகளில் 21 வெற்றி, ஒரு டிரா மூலம் 64 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. மான்செஸ்டர் சிட்டி 23-ல் 15-ல் வெற்றி, 3-ல் டிரா, ஐந்தில் தோல்வி ஆகியவை மூலம் 48 புள்ளிகள் பெற்றி 2-வது இடத்தில் உள்ளது.
    ஐதராபாத் அணிக்கெதிராக மனோஜ் திவாரி முச்சதம் விளாசி ஆட்டமிழக்காமல் இருக்க பெங்கால் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 635 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
    ரஞ்சி டிராபியில் பெங்கால் - ஐதராபாத் இடையிலான ஆட்டம் மேற்கு வங்காளத்தில் உள்ள கல்யாணி என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பெங்கால் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 60 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டை இழந்து தத்தளித்தது.

    4-வது விக்கெட்டுக்கு மனோஜ் திவாரியுடன் மஜும்தார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. குறிப்பாக மனோஜ் திவாரி சிறப்பாக விளையாடினார். நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் பெங்கால் 5 விக்கெட் இழப்பிற்கு 366 ரன்கள் குவித்தது. மனோஜ் திவாரி 156 ரன்களுடனும், சக்ரபோர்ட்டி ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சதத்தை இரட்டை சதமாக மாற்றிய மனோஜ் திவாரி முதன்முறையாக முச்சதத்தையும் பதிவு செய்தார். இவரது சதத்தால் பெங்கால் 7 விக்கெட் இழப்பிற்கு 635 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. மனோஜ் திவாரி 414 பந்தில் 303 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 53 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. பென் ஸ்டோக்ஸ் (120), ஒல்லி போப் (135 அவுட் இல்லை), சதத்தால் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 209 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. 290 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் இங்கிலாந்து பாலோ-ஆன் கொடுத்தது.

    இதனால் 290 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்து தத்தளித்து கொண்டிருந்தது.

    பிலாண்டர் 13 ரன்னுடனும், மகாராஜ் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. பிலாண்டர் 13 ரன்னிலேயே ஆட்டமிழந்தார். மகாராஜ் ஒரு பக்கத்தில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடினார்.

    மறுமுனையில் கடைநிலை வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற தென்ஆப்பிரிக்கா 237 ரன்னில் சுருண்டது. இதனால் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மகாராஜ் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது. 4-வது டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் வருகிற 24-ந்தேதி நடக்கிறது.
    மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபனில் 3-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் இன்று மெல்போர்ன் நகரில் தொடங்கியது. இந்த தொடருக்கான 3-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் முதல் சுற்றில் தரநிலை பெறாத அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீவ் ஜான்சனை எதிர்கொண்டார். இதில் ரோஜர் பெடரர் 6-3, 6-2, 6-2 என நெர்செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    19-வது கோர்ட்டில் நடைபெற்ற பெரும்பாலான ஆட்டங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டன.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பான வகையில் விக்கெட் கீப்பிங் செய்த லோகேஷ் ராகுல், தொடர்ந்து அந்த பணியைச் செய்வார் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். பேட் கம்மின்ஸ் வீசிய பந்து அவரின் ஹெல்மெட்டில் தாக்கியதால் மூளையதிர்ச்சி ஏற்பட்டு வெளியேறினார்.

    2-வது போட்டியில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக பணியாற்றினார். சிறப்பாக பேட்டிங் செய்ததுடன், கேட்ச் மற்றும் ஸ்டம்பிங்கிலும் அசத்தினார். இதனால் 3-வது போட்டிக்கு ரிஷப் பண்ட் தயாரானபோதும் கேஎல் ராகுல்தான் விக்கெட் கீப்பராக பணியாற்றினர்.

    இவர் விக்கெட் கீப்பராக பணியாற்றினால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்க்க முடியும். பேலன்ஸ் கொண்ட அணியை தேர்வு செய்ய முடியும். ஆகையால் அவர் விக்கெட் கீப்பர் பணியை தொடர்ந்து செய்வார் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். இதனால் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் பணிக்கு திரும்புவது சந்தேகமே.
    அயர்லாந்துக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட்டில் லென்டில் சிம்மன்ஸ் 40 பந்தில் 10 சிக்சர்களுடன் 91 ரன்கள் விளாச வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 138 ரன்னில் சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் பொல்லார்டு மற்றும் வெயின் பிராவோ தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் 139 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் லென்டில் சிம்மன்ஸ், எவின் லீவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    குறிப்பாக லென்டில் சிம்மன்ஸ் சிக்சர் மழை பொழிந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 5.2 ஓவரில் 50 ரன்னைக் கடந்தது. 9 ஓவரில் 100 ரன்னை தொட்டது. சிம்மன்ஸ் 28 பந்தில் 4 பவுண்டரி, ஐந்து சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

    வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலையில் லீவிஸ் 25 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 46 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து பூரன் களம் இறங்கினார். வெஸ்ட் இண்டீஸ் 11 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    லென்டில் சிம்மன்ஸ் 40 பந்தில் 5 பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 91 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தது வெஸ்ட் இண்டீஸ். முதல் போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்றது. 2-வது போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது.
    பிக் பாஷ் டி20 லீக்கில் பிரிஸ்பேன் ஹீட் விக்கெட் இழக்காமல் 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மேலும் 36 ரன்கள் எடுப்பதற்குள் 10 விக்கெட்டுக்களை இழந்து தோல்வியை சந்தித்தது.
    பிக் பாஷ் டி20 லீக்கில் பிரிஸ்பேனில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. முதலில் விளையாடிய மெல்போர்ன் ரெனேகட்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.

    பின்னர் பிரிஸ்பேன் ஹீட் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஹீஸ்லெட், கிறிஸ் லின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கிறிஸ் லின் 15 பந்தில் 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அப்போது பிரிஸ்பேன் ஹீட் 6 ஓவரில் 84 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க வீரர் ஹீஸ்லெட் 37 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிரிஸ்பேன் ஹீட் 15 ஓவரில் 120 ரன்னில் சுருண்டு படுதோல்வியடைந்தது.

    முதல் 5.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 84 எடுத்திருந்தது. அதன்பின் அடுத்த 9.1 ஓவர்களில் 36 ரன்கள் எடுப்பதற்குள் 10 விக்கெட்டுக்களையும் இழந்தது.

    பிக் பாஷ் டி20 லீக்கில் எந்தவொரு நிலையிலும் இதுபோன்று 36 ரன்னுக்குள் 10 விக்கெட்டுக்களையும் எந்த அணியும் வீழ்ந்தது கிடையாது.
    மூன்று வீரர்கள் அரைசதங்கள் விளாச உலக கோப்பை தொடக்க ஆட்டத்தில் இந்தியா 90 ரன் வித்தியாசத்தில் இலங்கையை எளிதில் வீழ்த்தியது.
    13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

    ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியனான இந்திய அணி, இலங்கையுடன் நேற்று மோதியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் குவித்தது. முதல் 6 பேட்ஸ்மேன்களும் 20 ரன்களுக்கு மேல் எடுத்தனர். ஜெய்ஸ்வால் (59 ரன்), கேப்டன் பிரியம் கார்க் (56 ரன்), விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் (52 ரன்) அரைசதம் அடித்தனர்.

    தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 45.2 ஓவர்களில் 207 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதன் மூலம் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் ஆகாஷ் சிங், சித்தேஷ் வீர், ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி (சி பிரிவு), ஸ்காட்லாந்தை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 23.5 ஓவர்களில் வெறும் 75 ரன்னில் சுருண்டது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது வாசிம் 7.5 ஓவர்களில் 2 மெய்டனுடன் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

    இந்த எளிய இலக்கை பாகிஸ்தான் அணி 11.4 ஓவர்களில் எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இன்றைய லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா - நைஜீரியா அணிகள் மோதுகின்றன.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என வென்ற புத்துணர்ச்சியோடு நியூசிலாந்து புறப்படுகிறது இந்திய அணி.
    விராட் கோலி தலைமையிலான அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றிகரமாக முடித்தது. அடுத்து நியூசிலாந்துடன் இந்தியா விளையாடுகிறது. ஐந்து 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் 2 டெஸ்டில் ஆடுவதற்காக இந்திய அணி இன்று பெங்களூருவில் இருந்து நியூசிலாந்து புறப்படுகிறது.

    சிங்கப்பூர் வழியாக ஆக்லாந்துக்கு வீரர்கள் சென்று அடைகிறார்கள். இந்தியா - நியூசிலாந்து மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் ஆக்லாந்தில் வருகிற 24-ந்தேதி நடக்கிறது. பிப்ரவரி 2-ந்தேதியுடன் 20 ஓவர் தொடர் முடிகிறது.

    அதைத்தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் பிப்ரவரி 5-ந்தேதி தேதி முதல் 11-ந்தேதி வரையும், டெஸ்ட் போட்டிகள் பிப்ரவரி 21-ந்தேதி முதல் மார்ச் 4-ந்தேதி வரையும் நடக்கிறது.

    நியூசிலாந்து பயணத்துக்கு 20 ஓவர் போட்டிக்கான அணி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் அணி விவரம் விரைவில் அறிவிக்கப்படுகிறது. நேற்றைய ஆட்டத்தில் தவானுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் நியூசிலாந்து பயணத்தில் இடம் பெறுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

    20 ஓவர் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் விவரம்:-

    விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, தவான், லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், ரி‌ஷப் பண்ட், ஜடேஜா, மணிஷ் பாண்டே, பும்ரா, சாஹல், குல்தீப் யாதவ், முகமது ‌ஷமி, ‌ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி சதம் அடித்தார். அவரது ஆட்டம் அழகாக இருந்தது என்று விராட்கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

    பெங்களூர்:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்திய அணி பழிதீர்த்தது. பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 3-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 286 ரன் குவித்தது.

    முன்னாள் கேப்டன் ஸ்டீவ் சுமித் சிறப்பாக ஆடி சதம் அடித்தார். அவர் 132 பந்தில் 131 ரன்னும் (14 பவுண்டரி, 1 சிக்சர்), லபுஷ்சேன் 54 ரன்னும் (5 பவுண்டரி), அலெக்ஸ் கேரி 35 ரன்னும் (6 பவுண்டரி) எடுத்தனர்.

    முகமது ‌ஷமி 4 விக் கெட்டும், ஜடேஜா 2 விக் கெட்டும், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பும்ரா விக்கெட் எடுக்காவிட்டாலும் 38 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

    பின்னர் விளையாடிய இந்திய அணி 287 ரன் இலக்கை 15 பந்து எஞ்சி இருந்த நிலையில் எளிதில் எடுத்தது. இந்தியா 47.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ரோகித் சர்மா அதிரடியாக ஆடி சதம் அடித்தார். அவர் 128 பந்தில் 119 ரன்னும் (8 பவுண்டரி, 6 சிக்சர்), கேப்டன் வீராட் கோலி 91 பந்தில் 89 ரன்னும் (8 பவுண்டரி), ஷிரேயாஸ் அய்யர் 35 பந்தில் 44 ரன்னும் ( 6 பவுண்டரி, 1 1 சிக்சர்) எடுத்தனர். ஆடம் ஜம்பா, ஆஸ்டன் அகர், ஹாசல்வுட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.

    இந்த வெற்றி மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

    மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்திலும், ராஜ்கோட்டில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 36 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தன.

    ஆஸ்திரேலிய அணி கடந்த மார்ச் மாதம் இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. தற்போது அதற்கு இந்திய அணி தொடரை வென்று சரியான பதிலடி கொடுத்தது.

    இந்த வெற்றி குறித்து கேப்டன் வீராட்கோலி கூறியதாவது:-

    எங்களது தொடக்கம் நன்றாக அமைந்தது. ராகுலும், ரோகித்தும் திறமை வாய்ந்தவர்கள். ராகுல் ஆட்டம் இழந்த பிறகு சூழ் நிலைக்கு தகுந்தவாறு ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது.

    பந்து நன்றாக திரும்பியது. இதனால் பொறுமையுடன் ஆட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதற்கு அனுபவம் உதவியாக இருந்தது.

    ரோகித் சர்மாவும் நானும் அனுபவம் வாய்ந்தவர்கள். நிலைத்து நின்று பார்ட்னர் ஷிப் அமைப்பது முக்கியம் என்று நாங்கள் பேசிக் கொண்டோம்.

    ரோகித் சர்மாவின் ஆட்டம் அழகாக இருந்தது. நான் களம் வருவதற்கு முன்பே அவர் ஆட்டத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

    ரோகித் சர்மா- விராட் கோலி

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கடந்தமுறை ஆடியதை விட அந்த அணி தற்போது வலுவாக இருந்தது. ஸ்டீவ்சுமித், வார்னர், மார்னஸ் லபுஷ் கேன் தற்போது உள்ளனர். மேலும் திறமை வாய்ந்த பந்து வீச்சையும் கொண்டது. பீல்டிங்கிலும் முத்திரை பதித்தவர்கள்.

    முதல் 2 ஆட்டத்தில் வென்று கடைசி 3 போட்டியில் தோற்று தொடரை இழந்தோம். தற்போது முதல் ஆட்டத்தில் நாங்கள் தோற்று கடைசி 2 போட்டியில் வென்று தொடரை கைப்பற்றி இருக்கிறோம்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது மிகுந்த திருப்தியை அளிக்கிறது. நாங்கள் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து மேல்நோக்கி செல்ல விரும்புகிறோம்.

    ராகுல் விக்கெட் கீப்பராக பணியாற்றுவதில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் கிடைக்கிறார். இதனால் பேட்டிங்கை வலுப்படுத்திக் கொள்ளலாம். இதனால் அணி வீரர்களில் மாற்றம் செய்வதற்கான காரணம் எதுவுமில்லை.

    இவ்வாறு வீராட்கோலி கூறி உள்ளார்.

    அதிவேகமாக 5 ஆயிரம் ரன், ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன் குவிப்பு என்ற முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனியின் சாதனைகளை கேப்டன் விராட் கோலி முறியடித்துள்ளார்.
    பெங்களூரு:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியது. பெங்களூருவில் நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அபாரமாக ஆடி அசத்தினர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி 89 ரன்கள் விளாசினார். இதன்மூலம் கேப்டனாக ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்) அதிக ரன்கள் குவித்த இந்தியர் என்ற சாதனையை டோனியிடம் இருந்து தட்டிப்பறித்தார்.

    விராட் கோலி கேப்டனாக இதுவரை 199 இன்னிங்சில் பேட்டிங் செய்து 11,208 ரன்கள் குவித்துள்ளார். டோனி 330 இன்னிங்சில் 11,207 ரன்கள் எடுத்துள்ளார்.

    இதேபோல், கோலி 14 ரன்கள் எடுத்தபோது கேப்டனாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த சாதனையையும் தன்னுடன் இணைத்துக் கொண்டார்.

    இந்த இலக்கை கோலி 82 ஆட்டங்களில் எடுத்துள்ளார். இந்த சாதனை பட்டியலில் இந்தியாவின் டோனி (127 ஆட்டம்) இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (131 ஆட்டம்) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
    போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
    போர்ட் எலிசபெத்:

    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    அதன்பின் ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் திணறியது.
    இதனால் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 209 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டி காக் 63 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 

    இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டும், டாம் பெஸ் 5 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    290 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால் இங்கிலாந்து பாலோ-ஆன் கொடுத்தது. இதையடுத்து, தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடர்ந்தது.

    இரண்டாவது இன்னிங்சிலும் இங்கிலாந்து அணி அபாரமாக பந்து வீசியது. இதனாம் 4வது நாள் முடிவில் தென்ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்துள்ளது.

    இங்கிலாந்து சார்பில் கேப்டன் ஜோ ரூட் 4 விக்கெட்டும், மார்க் வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இன்னும் 188 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், தென்ஆப்பிரிக்காவின் எஞ்சிய 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து எளிதில் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    ×