search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்காவை வீழ்த்திய மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள்
    X
    தென்ஆப்பிரிக்காவை வீழ்த்திய மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள்

    3-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவை இன்னிங்ஸ் மற்றும் 53 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

    போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 53 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. பென் ஸ்டோக்ஸ் (120), ஒல்லி போப் (135 அவுட் இல்லை), சதத்தால் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 209 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. 290 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் இங்கிலாந்து பாலோ-ஆன் கொடுத்தது.

    இதனால் 290 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்து தத்தளித்து கொண்டிருந்தது.

    பிலாண்டர் 13 ரன்னுடனும், மகாராஜ் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. பிலாண்டர் 13 ரன்னிலேயே ஆட்டமிழந்தார். மகாராஜ் ஒரு பக்கத்தில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடினார்.

    மறுமுனையில் கடைநிலை வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற தென்ஆப்பிரிக்கா 237 ரன்னில் சுருண்டது. இதனால் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மகாராஜ் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது. 4-வது டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் வருகிற 24-ந்தேதி நடக்கிறது.
    Next Story
    ×