என் மலர்
விளையாட்டு
இந்திய குத்துச்சண்டை பெடரேசன் மே 20-ந்தேதிக்குள் பணத்தை செலுத்தாவிடில் சஸ்பெண்ட் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என சர்வதேச குத்துச்சண்டை சங்கம் வலியுறுத்தியுள்ளது.
2021-ம் ஆண்டு நடைபெற இருக்கும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரை நடத்தும் உரிமத்தை இந்தியா பெற்றிருந்தது. போட்டியை நடத்துவதற்கான கட்டணத்தை (4 லட்சம் அமெரி்க்க டாலர்) இந்திய குத்துச்சண்டை பெடரேசன் செலுத்த தவறியதால் தொடரை வேறு நாட்டிற்கு மாற்றியது. மேலும் அபராதமும் விதித்தது.
இதற்கிடையில் 2018-ம் ஆண்டு டெல்லியில் நடத்தப்பட்ட சாம்பியன்ஷிப் தொடருக்கான தொகையில் 3,60,000 அமெரிக்க டாலர் பாக்கி வைத்துள்ளது. இவற்றை தவணை முறையில் வசூலிக்க முடிவு செய்தது.
அதன்படி மார்ச், ஏப்ரல், மே மாதத்திற்கான தவணை தொகை 1,20,000 டாலர் மே 20-ந்தேதிக்குள் கட்ட வேண்டும். முழு பிரச்சினைக்கும் ஒரு இணக்கமான தீர்வு கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம் என்று இந்திய குத்துச்சண்டை பெடரேசன் தெரிவித்துள்ளது.
இந்த பணத்தை கட்ட தவறினால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியிருக்கும் என சர்வதேச குத்துச்சண்டை சங்கம் தெரிவித்ததுள்ளது.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நீண்ட காலமாக நம்பர் ஒன் இடத்தில் இருந்த டேல் ஸ்டெயின், பந்தை இன்-ஸ்விங் செய்வதில் ஆண்டர்சன் வல்லவர் என்று தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் நட்சத்திர பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் தென்ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின். பந்தை அவுட்-ஸ்விங் செய்வதில் வல்லவர். வேகப்பந்து வீச்சாளர்களுக்கான ஆடுகளத்தில் லெக்-ஸ்டம்பிற்கு நேராக பந்தை பிட்ச் செய்து ஆஃப் ஸ்டெம்பிற்கு வெளியே பந்தை கொண்டு செல்வதில் வல்லவர்.
36 வயதான ஸ்டெயின் 2004-ம் ஆண்டில் இருந்து 2019 வரை 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 439 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 26 முறை ஐந்து விக்கெட்டுகளுக்கு மேலும், 5 முறை 10 விக்கெட்டுகளுக்கு மேலும் வீழ்த்தியுள்ளார். சராசரி 22.95 ஆகும்.
2007 முதல் 2013 வரையில் நட்சத்திர பந்து வீச்சாளராக திகழ்ந்தார். இந்த காலக்கட்டத்தில் ஐசிசி-யின் டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் நீண்ட காலமாக நம்பர் ஒன் இடத்தில் நீடித்தார். தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக டேல் ஸ்டெயினின் கிரிக்கெட் வாழ்க்கை சரிய ஆரம்பித்தது.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (வயது 37). 2003-ல் டெஸ்ட் கிரிக்கெட்டை தொடங்கிய ஆண்டர்சன் இன்னும் விளையாடி வருகிறார். இதுவரை 151 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 584 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 28 முறை ஐந்து விக்கெட்டும், 3 முறை 10 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். பந்தை இன்-ஸ்விங் செய்வதில் வல்லவர்.
இரண்டு பேரும் ஒரே காலக்கட்டத்தில் விளையாடியதால் இருவரில் யார் சிறந்த பந்து வீச்சாளர் என்ற விவாதம் எல்லாம் நடைபெற்றது. பெரும்பாலான ரசிகர்கள் டேல் ஸ்டெயின்தான் சிறந்த பந்து வீச்சாளர் என்பார்கள்.
ஆனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்று பந்தை இன்-ஸ்விங் செய்ய முடியாது என்று டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டேல் ஸ்டெயின் கூறுகையில் ‘‘நான் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சை பார்த்துள்ளேன். அவர் மிகவும் அபாயகரமான பந்து வீச்சாளர். அவரை போன்று என்னால் மிகப்பெரிய அளவில் பந்தை இன்-ஸ்விங் செய்ய இயலாது. நான் ஆண்டர்சனின் ரசிகன். இதில் பொய் சொல்ல ஒன்றுமில்லை’’ என்றார்.
விமான போக்குவரத்துக்கு ஒவ்வொரு நாடுகளும் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் வெளிநாடு செல்ல முடியாததை நகைச்சுவையாக டு பிளிஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நடைபெறாமல் உள்ளன. ஒவ்வொரு நாடுகளும் மீண்டும் கிரிக்கெட் தொடர்களை தொடங்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், ஆஸ்திரேலியாவில் அக்டோபர் - நவம்பரில் நடைபெற இருக்கும் ஐசிசி டி20 உலக கோப்பையை வீரர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இந்தியா, வங்காளதேசம், தென்ஆப்பிரிக்கா நாடுகளை விட கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு குறைவாக இருந்த போதிலும், ஆஸ்திரேலியா செப்டம்பர் மாதம் வரை சர்வதேச போக்குவரத்திற்கு (விமான சேவை) தடைவிதித்துள்ளது.
ஒருவேளை தடை நீக்கப்பட்டால் ஆஸ்திரேலியா சென்று விளையாட இந்தியா போன்ற நாடுகள் தயாராக இருக்கின்றன. இந்திய வீரர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வார்கள் என்று பிசிசிஐ வெளிப்படையாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா சென்று உலக கோப்பை விளையாடுவதற்கு முன் இரண்டு வாரங்களும், விளையாடிய பின்னர் இரண்டு வாரங்களும் வீரர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என தென்ஆப்பிரிக்கா அணியின் மூத்த வீரர் டு பிளிஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டு பிளிஸ்சிஸ் கூறுகையில் ‘‘எனக்கு உறுதியாக தெரியவில்லை, படித்ததில் இருந்து ஏராளமான நாடுகள் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் வரை சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை விதிப்பது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். வங்காளதேசம், இந்தியா, தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளை போன்று ஆஸ்திரேலியா பாதிக்கப்படவில்லை என்றாலும், மக்களின் ஆரோக்கியம் குறித்து அவர்கள் கருத்தில் கொள்கிறார்கள்.
ஆனால் உலக கோப்பைக்காக ஆஸ்திரேலியா செல்லும் அணிகள் தொடருக்கு முன் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்திக் கொள்ள முடியும். அதன்பின் தொடர் முடிந்த பிறகும் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்திக் கொள்ள முடியும்.
தென்ஆப்பிரிக்கா பயணங்களுக்கான தடையை எப்போது நீக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. நாம் அந்த காலத்தை போன்று படகில் செல்ல முடியாது (நகைச்சுவையாக)’’என்றார்.
சதம் அடித்து ஆட்ட நாயகன் விருது பெற்ற போட்டிக்குப் பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தை டோனியிடம் கேட்டது கிடையாது என மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி (வயது 34). மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன இவர் கடந்த 2008-ம் ஆண்டு தனது 22 வயதில் இந்திய தேசிய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார். அதிர்ஷ்டம் இல்லாத சில வீரர்களில் இவரும் ஒருவர்.
2011-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 104 ரன்கள் அடித்தார். இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.
ஆனால் அடுத்த 14 போட்டிகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதுகுறித்து அப்போதைய கேப்டன் எம்எஸ் டோனியுடன் இதுவரை நான் கேட்டது கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மனோஜ் திவாரி கூறுகையில் ‘‘தேசிய அணிக்காக விளையாடி சதம் அடித்து, ஆட்ட நாயகன் விருதை பெற்ற பிறகு, அடுத்த 14 போட்டிகளில் இடம் கிடைக்கவில்லை என்பதை நான் ஒருபோதும் நினைத்ததில்லை.
ஆனால் கேப்டன், பயிற்சியாளர் அல்லது நிர்வாகம் ஆகியவற்றின் சில ஐடியாக்களுக்கு நான் மதிப்பு அளிக்கிறேன். ஏனென்றால், அந்த நேரத்தில் அவர்கள் என்ன நினைக்கிறார்களோ?, அதற்கு நாம் வீரர்கள் என்ற அடிப்படையில் மதிப்பு அளிக்க வேண்டும். அவர்கள் எனக்குப் பதிலாக வேறு வீரரை நினைத்திருக்கலாம்.

டோனியிடம் இதுகுறித்து கேட்க வேண்டும் என்று உண்மையிலேயே நினைத்தேன். இந்திய அணியின் கேப்டனாக இருந்த டோனியிடம், அந்த நேரத்தில் இதுகுறித்து கேட்க வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை அல்லது தைரியம் இல்லை என்று சொல்லலாம். சீனியர் வீரர்களுக்கு மிகப்பெரிய அளவில் மதிப்பு அளிக்கும்போது, இதுபோன்ற விஷயங்களை கேட்க தாமாகவே தடுக்கப்பட்டு விடுவோம். ஆகவே, நான் இதுவரை அவரிடம் இதுகுறித்து கேள்வி கேட்டது கிடையாது’’ என்றார்.
கிரிக்கெட் வீரர்கள் இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரத்திற்குள் பயிற்சிக்கு திரும்ப வேண்டும் என இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் மாதத்தில் இருந்து நடைபெறாமல் உள்ளது. தற்போது அங்கு கொரோனாவின் தாக்கம் சற்று குறைய ஆரம்பித்துள்ளது.
இதனால் போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் வீரர்கள் பயிற்சிக்கு திரும்ப வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜோஸ் பட்லர் கூறுகையில் ‘‘இன்னும் இரண்டு வாரங்களில் வீரர்கள் பயிற்சிகளை தொடங்க வாய்ப்புள்ளதாக அறிந்து கொண்டேன். தனிப்பட்ட வீரர்கள் சமூக இடைவெளியுடன் பயிற்சிகளை தொடங்க முடியும். குறைந்தபட்சம் பயிற்சியாளருடன் ஒரு வீரர் பயிற்சியில் ஈடுபடலாம். பேட்ஸ்மேனாகிய எனக்கு ஒருவர் பந்து வீச முடியும். இதில் எந்த பிரச்சனையும் இருக்காது.
நாங்கள் தனியாக இருக்கிறோம். எங்களுடைய தனிப்பட்ட வாகனத்தில் செல்ல முடியும். நேராக வலைப்பயிற்சிக்கு சென்ற பின்னர், வீட்டிற்கு திரும்ப முடியும். நாமே நமக்கான முடிவுகளை எடுத்துக் கொள்ள முடியும். நமக்கு மகிழ்ச்சி இல்லை என்றாலும், வசதியாக இல்லை என்றாலும் நமக்காக மற்றவர்களை நெருக்குடிக்குள்ளாக்க விரும்பக்கூடாது’’ என்றார்.
எம்எஸ் டோனி மிகவும் பவர்ஃபுல் பேட்ஸ்மேன் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார்.
தற்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளதால் கிரிக்கெட் வீரர்கள், விமர்சகர்கள், வர்ணனையாளர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பழைய நினைவுகளை பற்றி பேசி வருகிறார்கள்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் எம்எஸ் டோனி குறித்து பேசியுள்ளார்.
அப்போது கிரேக் சேப்பல் கூறுகையில் ‘‘தோனியின் பேட்டிங்கை முதல்முறை கண்டபோதே திகைத்துப்போனேன். அப்போதைய காலகட்டத்தில் இந்திய அணியிக்கு ஒரு திறமையான பேட்ஸ்மேன் கிடைத்து விட்டதாக நினைத்தேன்.
இலங்கைக்கு எதிரான போட்டியில் தோனி அதிரடியாக விளையாடி 183 ரன்களை குவித்தது நினைவிருக்கிறது. அது ஒரு மிகவும் அதிரடியான பேட்டிங். அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு வந்துவிட்டது. அவர் பந்துகளை சரியான திசைகள் பார்த்தெல்லாம் அடிக்கவில்லை. நான் கண்டவரை இந்திய அணியில் பவர்ஃபுல் பேட்ஸ்மேன் தோனிதான்’’ என்றார்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, பேட்ஸ்மேன் தவான் ஆகியோர் பெயரை அர்ஜுனா விருதுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்யலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு தகுதியான வீரர், வீராங்கனைகளின் பெயர்களை ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களும் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரைக்க தொடங்கி உள்ளன.
இந்திய கிரிக்கெட் வாரியம், தற்போது உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக விளங்கும் 26 வயதான ஜஸ்பிரித் பும்ராவின் பெயரை இந்த விருதுக்கு சிபாரிசு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த முறை பும்ரா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பெயர்கள் அனுப்பப்பட்டன. இதில் சீனியர் வீரர் என்ற அடிப்படையில் ஜடேஜா அர்ஜுனா விருதை தட்டிச்சென்றார். இந்த தடவை பும்ராவுக்கு விருது கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
2018-ம் ஆண்டு தவான் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் விருது கிடைக்கவில்லை. தற்போது சீனியர் வீரராக இருக்கும் தவான் பெயரையும் பரிந்துரை செய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் விதிமுறையில் மாற்றம் தேவை என்று ஹர்பஜன் சிங் வலியுறுத்தியதை சச்சின் தெண்டுல்கர் ஆமோதித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தற்போது புதிய விதிப்படி ஒரு ஆட்டத்தில் இரண்டு புதிய வெள்ளைப் பந்துகளைப் பயன்படுத்தலாம். அதேபோல் 3 பவர் பிளேக்களைப் பின்பற்ற வேண்டும். முதல் பவர் பிளேவில் வெளிவட்டத்தில் 2 பீல்டர்கள் மட்டுமே இருக்கலாம். 11-40 ஓவர்கள் வரை 4 வீரர்கள் மட்டுமே இருக்கலாம். கடைசி 10 ஓவர்களில் 5 பீல்டர்கள் மட்டுமே இருக்கலாம்.
கிரிக்கெட்டின் சகாப்தம் தெண்டுல்கர் - கங்குலி விளையாடிய காலக்கட்டத்தில் இந்த விதிமுறைகள் இல்லை. இதற்கிடையே தெண்டுல்கர் - கங்குலி தொடக்க ஜோடிதான் இதுவரை அதிகம் ரன்களை சேர்த்தது என்ற தகவலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தது.
இருவரும் இணைந்து 176 போட்டியில் 8227 ரன்களை எடுத்தனர். சராசரி 47.55 ஆகும். ஒருநாள் போட்டியில் வேறு எந்த ஜோடியும 6000 ரன்களைக் கூட கடந்தது இல்லை. ஐ.சி.சி.யின் இந்த பதிவைப் பார்த்து, தெண்டுல்கர் புதிய விதிகள் இருந்திருந்தால், இன்னும் எவ்வளவு ரன்கள் எடுத்திருப்போம் என்று கங்குலியிடம் கேட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த கங்குலி இன்னும் 4000 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்கலாம் என்று தெரிவித்தார்.
தெண்டுல்கர் - கங்குலி உரையாடலுக்கு முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன் சிங் பதிலளித்திருந்தார். அவர் கூறியதாவது:-
நீங்கள் இருவரும் இன்னும் கூடுதலாக சில ஆயிரம் ரன்களை எடுத்திருக்கலாம். இது ஒரு மோசமான விதி. அப்போது 260 மற்றும் 270 ரன்கள் எடுத்தாலே கடும் போட்டி நிலவும். ஆனால் தற்போது 320, 330 ரன்கள் எடுத்தாலும் சுலபமாக அதை தாண்டி விடுகிறார்கள்’’ என்றார்.
இதற்கு பதில் அளித்த சச்சின் தெண்டுல்கர் ‘‘ஹர்பஜன் சிங் சொன்னதை நான் ஆமோதிக்கிறேன். ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் விதிமுறைகளும் மற்றும் ஆடுகளமும் மாற்றி அமைக்கப்பட வேண்டும். இதை ஆய்வு செய்வது அவசியமானது’’எனக் கூறினார்.
தெண்டுல்கர் ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட் போட்டி விதிமுறைகளை மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வான் மீது அடுக்கடுக்கான புகார் கூறிய கிறிஸ் கெய்ல் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜமைக்கா:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் அங்கு நடத்தப்படும் கரிபீயன் பிரிமியர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஜமைக்கா தலவாஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்த சீசனில் அவரை தக்கவைக்காமல் அந்த அணி நிர்வாகம் கழற்றி விட்டது. இதையடுத்து அவரை செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணி தேர்வு செய்தது. பின்னர் கெய்ல் வெளியிட்ட யு-டியூப் வீடியோ பதிவில், ‘ஜமைக்கா அணியில் இருந்து விடுவிக்கப்படுவது குறித்து என்னிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அந்த அணியின் பயிற்சியாளரும், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரருமான ராம்நரேஷ் சர்வான் தான் என்னை வெளியேற்றியதற்கு முக்கிய காரணம். அவர் கொரோனாவை விட மோசமானவர். ஒரு கொடிய பாம்பு. பழிவாங்கும் குணம் கொண்டவர், நம்ப வைத்து முதுகில் குத்தி விட்டார், முதிர்ச்சியற்றவர்’ என்று சரமாரியாக திட்டி தீர்த்தார்.
இதற்கு சர்வான் அளித்த விளக்கத்தில், ‘ஜமைக்கா அணியில் இருந்து கெய்ல் விடுவிக்கப்பட்ட முடிவில் எனக்கு துளியும் தொடர்பு கிடையாது. அது அணி நிர்வாகத்தின் முடிவு. கெய்ல் கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை. அவர் தேவையில்லாமல் பலரது பெயருக்கு களங்கம் கற்பித்து விட்டார்’ என்று கூறியிருந்தார். ஜமைக்கா அணி நிர்வாகமும், வர்த்தகம் மற்றும் கிரிக்கெட் காரணங்கள் அடிப்படையிலேயே கெய்ல் விடுவிக்கப்பட்டாரே தவிர, சர்வானுக்கு இதில் பங்கு இல்லை என்று தெளிவுப்படுத்தியது.
இந்த நிலையில் சர்வான் மீது பகிரங்கமாக சகட்டுமேனிக்கு குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிய 40 வயதான கெய்ல் மீது ஒழுங்கு நடவடிக்கை (போட்டியில் பங்கேற்க தடை அல்லது அபராதம்) பாயும் என்று தெரிகிறது. இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் ரிக்கி ஸ்கெரிட் கூறுகையில், ‘ஒரு வீரர் கிளப் அல்லது லீக் அணிகள் அல்லது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் ஒப்பந்தம் செய்து கொள்ளும் போது, நடத்தை விதிகளை சரியாக பின்பற்ற வேண்டும். கெய்லின் செயலால் சி.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் தண்டனையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். குறிப்பிட்ட அணியுடன் கெய்ல் ஒப்பந்தத்தில் இருப்பதால் நிச்சயம் இந்த விவகாரம் குறித்து சி.பி.எல். நிர்வாகம் அவரிடம் பேசும் என்று நினைக்கிறேன். அவர்கள் கெய்ல் பிரச்சினையை எப்படி கையாளுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்த சர்ச்சையால் கெய்லின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விடாது என்று நம்புகிறேன்’ என்றார்.
‘கெய்லும், சர்வானும் ஒரு காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிறந்த நண்பர்களாக வலம் வந்தனர். நீண்ட காலம் இணைந்து விளையாடி, அணியை முன்னெடுத்து சென்று இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், தற்போது நடந்த விதத்தை பார்ப்பதற்கு ஏமாற்றம் அளிக்கிறது. இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது’ என்றும் ஸ்கெரிட் குறிப்பிட்டார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் அங்கு நடத்தப்படும் கரிபீயன் பிரிமியர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஜமைக்கா தலவாஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்த சீசனில் அவரை தக்கவைக்காமல் அந்த அணி நிர்வாகம் கழற்றி விட்டது. இதையடுத்து அவரை செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணி தேர்வு செய்தது. பின்னர் கெய்ல் வெளியிட்ட யு-டியூப் வீடியோ பதிவில், ‘ஜமைக்கா அணியில் இருந்து விடுவிக்கப்படுவது குறித்து என்னிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அந்த அணியின் பயிற்சியாளரும், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரருமான ராம்நரேஷ் சர்வான் தான் என்னை வெளியேற்றியதற்கு முக்கிய காரணம். அவர் கொரோனாவை விட மோசமானவர். ஒரு கொடிய பாம்பு. பழிவாங்கும் குணம் கொண்டவர், நம்ப வைத்து முதுகில் குத்தி விட்டார், முதிர்ச்சியற்றவர்’ என்று சரமாரியாக திட்டி தீர்த்தார்.
இதற்கு சர்வான் அளித்த விளக்கத்தில், ‘ஜமைக்கா அணியில் இருந்து கெய்ல் விடுவிக்கப்பட்ட முடிவில் எனக்கு துளியும் தொடர்பு கிடையாது. அது அணி நிர்வாகத்தின் முடிவு. கெய்ல் கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை. அவர் தேவையில்லாமல் பலரது பெயருக்கு களங்கம் கற்பித்து விட்டார்’ என்று கூறியிருந்தார். ஜமைக்கா அணி நிர்வாகமும், வர்த்தகம் மற்றும் கிரிக்கெட் காரணங்கள் அடிப்படையிலேயே கெய்ல் விடுவிக்கப்பட்டாரே தவிர, சர்வானுக்கு இதில் பங்கு இல்லை என்று தெளிவுப்படுத்தியது.
இந்த நிலையில் சர்வான் மீது பகிரங்கமாக சகட்டுமேனிக்கு குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிய 40 வயதான கெய்ல் மீது ஒழுங்கு நடவடிக்கை (போட்டியில் பங்கேற்க தடை அல்லது அபராதம்) பாயும் என்று தெரிகிறது. இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் ரிக்கி ஸ்கெரிட் கூறுகையில், ‘ஒரு வீரர் கிளப் அல்லது லீக் அணிகள் அல்லது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் ஒப்பந்தம் செய்து கொள்ளும் போது, நடத்தை விதிகளை சரியாக பின்பற்ற வேண்டும். கெய்லின் செயலால் சி.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் தண்டனையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். குறிப்பிட்ட அணியுடன் கெய்ல் ஒப்பந்தத்தில் இருப்பதால் நிச்சயம் இந்த விவகாரம் குறித்து சி.பி.எல். நிர்வாகம் அவரிடம் பேசும் என்று நினைக்கிறேன். அவர்கள் கெய்ல் பிரச்சினையை எப்படி கையாளுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்த சர்ச்சையால் கெய்லின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விடாது என்று நம்புகிறேன்’ என்றார்.
‘கெய்லும், சர்வானும் ஒரு காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிறந்த நண்பர்களாக வலம் வந்தனர். நீண்ட காலம் இணைந்து விளையாடி, அணியை முன்னெடுத்து சென்று இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், தற்போது நடந்த விதத்தை பார்ப்பதற்கு ஏமாற்றம் அளிக்கிறது. இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது’ என்றும் ஸ்கெரிட் குறிப்பிட்டார்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினை அவுட்டாக்க எனது மனது ஒருபோதும் விரும்பியதில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். சக அணி வீரர்களை தவிர்த்து எதிரணி வீரர்களும் சச்சின் தெண்டுல்கர் பேட்டிங்கை ரசிப்பார்கள்.
எந்தவொரு காலக்கட்டத்திலும் எதிரணி வீரர்களுடன் ஒழுங்கீனமான நடந்து கொண்டது கிடையாது. இதனால் எதிரணி வீரர்களும் சச்சினுடன் நட்புடன் பழக விரும்புவார்கள்.
இந்நிலையில் சச்சின் தெண்டுல்கரை ஒருபோதும் அவுட்டாக்க எனது மனம் விரும்பியதில்லை என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஷித் லத்தீப் கூறுகையில் ‘‘நான் விக்கெட் கீப்பராக பணியாற்றிய காலத்தில் ஏராளமான பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்ய வந்துள்ளனர். ஆனால் சச்சின் தெண்டுல்கர் மட்டும் பேட்டிங் செய்ய வரும்போது, அவர் ஆட்டமிழக்க வேண்டும் என எனது மனம் ஒருபோதும் விரும்பியது கிடையாது.
நான் கீப்பிங் பணியை செய்து கொண்டிருக்கும்போது அவரது பேட்டிங்கை ரசிப்பேன். அவர் விளையாடுவதை டி.வி.யில் அல்ல, ஸ்டம்பிற்கு பின்னால் நின்று விக்கெட் கீப்பர் பணியை செய்யும்போது ரசிப்பேன்.

ஆனால் பிரையன் லாரா, ரிக்கி பாண்டிங், கல்லீஸ் ஆகியோர் பேட்டிங் செய்யும்போது, கீப்பிங் செய்யும்போது அவுட்டாக்க வேண்டும் என்று நினைப்பேன். தெண்டுல்கரின் பழக்க வழக்கம் தனித்துவம் வாய்ந்தது. நான் ஸ்டம்பிற்கு பின்னால் நின்று ஏதாவது கூறினால் கூட, ஒருபோதும் பதில் அளிக்க மாட்டார் அல்லது எதிர்வினை ஆற்றமாட்டார். ஜஸ்ட் புன்னகை சிந்துவார்’’ என்றார்.
ஒட்டுமொத்த பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்ட பிறகு ‘செர்ரி ஏ’ கால்பந்து தொடர் நடத்தப்படும் என இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் கோரத்தாண்டம் ஆடிய முக்கியமான நாடுகளில் இத்தாலியும் ஒன்று. தற்போது சுமார் இரண்டு மாதத்திற்குப்பின் கொரோனாவின் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ளது.
இதனால் விளையாட்டு போட்டிகளை மீண்டும் நடத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இத்தாலியின் நம்பர் ஒன் கால்பந்து லீக்கான ‘செர்ரி ஏ’ மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 2-வது வாரத்திற்குப் பிறகு கடந்த 4-ந்தேதியில் இருந்து கால்பந்து வீரர்கள் தனித்தனியே பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். கடுமையான நிபந்தனைகளுக்கு இடையில் வருகிற 18-ந்தேதியில் இருந்து ஒரு அணியாக பயிற்சி மேற்கொள்ள இருக்கின்றனர்.
இந்நிலையில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின் ‘செர்ரி ஏ’ கால்பந்து லீக் தொடங்கும் என இத்தாலி விளையாட்டுத்துறை மந்திரி வின்சென்ஜோ ஸ்பாடாஃபோரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வின்சென்ஜோ ஸ்பாடாஃபோரா கூறுகையில் ‘‘மீண்டும் ‘செர்ரி ஏ’ லீக் தொடங்கும் என்று நாங்கள் எல்லோரும் நம்புகிறோம். ஏனென்றால் போட்டி நடைபெறுவதற்கு பொருத்தமான நடவடிக்கைகள், பாதுகாப்பு நெறிமுறைகளை குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஒரு வீரருக்கு பாசிட்டிவ் ஏற்பட்டால் ஒட்டுமொத்த அணியும் தனிமைப்படுத்தப்படும் என்று கூறும்போது, கேஷியருக்கு பாசிட்டிவ் என்றால், சூப்பர் மார்க்கெட் ஏன் மூடப்படுவதில்லை என்று யாரோ ஒருவர் கேட்கலாம்.
கால்பந்து போட்டியில் சமூக இடைவெளியோடு வீரர்கள் விளையாடுவதற்கு சாத்தியமில்லை. வீரர்கள் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு ஓட வேண்டும். ஆனால் சூப்பர் மார்க்கெட்டில் இந்த சூழ்நிலை ஏற்படாது’’ என்றார்.
ஜூலை 1-ந்தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்த இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பாதிக்கப்பட்டதில் இங்கிலாந்தும் ஒன்று. இதுவரை ஏறக்குறைய 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஜூலை 1-ந்தேதி வரை இங்கிலாந்தில் விளையாட்டு போட்டிகள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்த முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் அணி ஜூலை 30-ந்தேதியில் ஆகஸ்ட் மாதம் வரை தலா மூன்று டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டிருந்தது. இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து சென்று விளையாட இருந்தது. தற்போதைய நிலையில் அதற்கு சாத்தியமில்லை.
இங்கிலாந்து அரசு அனுமதி அளித்தால் இங்கிலாந்து கொரோனாவிற்குப் பிறகு முதன்முறையாக பாகிஸ்தானை எதிர்த்து விளையாடும். ஆனால், தற்போதைய நிலையில் இங்கிலாந்து தொடர் குறித்து உடனடியாக முடிவு எடுக்க மாட்டோம் என பாகிஸ்தான கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைமை நிர்வாகி வாசிம் கான் கூறுகையில் ‘‘வீரர்கள் மற்றும் ஸ்டாஃப்கள் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். இதில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.
தற்போது இங்கிலாந்தில் மோசமான நிலை நிலவுகிறது. அவர்களுடைய திட்டம் குறித்து நாங்கள் கேட்டுள்ளோம். நாங்கள் எந்தவொரு முடிவையும் எடுக்க மாட்டோம். ஆனால், அடுத்த மூன்று அல்லது நான்கு வாரங்களில் மதிப்பீடு செய்து முடிவு எடுப்போம்’’ என்றார்.






