என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கிரிக்கெட் பேட் தயாரிக்கும் ஆஸ்திரேலியா நிறுவனம் ஒப்பந்தத்தை மீறியதற்காக மன்னிப்பு கேட்டதால் சச்சின் தெண்டுல்கர் வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கடந்த 2016-ம் ஆண்டு கிரிக்கெட் பேட் தயாரிக்கும் நிறுவனமான ஸ்பார்டனின் பொருட்கள் மற்றும் வீரர்கள் அணியும் ஆடைகளை பிரபலப்படுத்தும் உலகளாவிய பிரத்தியேக ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார். 2018 செப்டம்பர் மாதம் 17-ந்தேதிக்குப் பிறகு சச்சின் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டார். இருந்தாலும் சச்சின் பெயரை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

    ஆனால் ஒப்பந்தத்தில் கூறியபடி ராயல்டி மற்றும் ஒப்புதல் கட்டணத்தை அந்த நிறுவனம் சச்சினுக்கு கொடுக்கவில்லை. பலமுறை கேட்டும் செவி சாய்க்காததால், ஆஸ்திரேலியாவின் உச்சநீதிமன்றத்தை நாடினார். சச்சின் அந்த நிறுவனம் மீது ஒப்பந்தத்தை மீறுதல், தவறாக நடத்துதல், ஏமாற்றும் நடத்தை போன்ற காரணங்களால் குறிப்பிட்டு குற்றம்சாட்டியிருந்தார்.

    இந்நிலையில், ‘‘மதிப்பிற்குரிய ஒப்பந்தத்தின்படி நடந்து கொள்ள தவறிவிட்டோம், அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தெண்டுல்கரின் பொறுமை பிரச்சனை முடிவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்’’ என ஸ்பார்டன் நிறுவனம் தெரிவித்தது. இதனால் சச்சின் தெண்டுல்கர் வழக்கை திரும்ப பெற்றுக் கொண்டார்.
    டோக்கியோ ஒலிம்பிக் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவை எதிர்நோக்கி இருக்கிறோம் என ஐஓசி தெரிவித்துள்ளது.
    ஜப்பான் டோக்கியோ நகரில் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டி அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கின்றது.

    பொதுவாக போட்டிக்கான செலவை போட்டியை நடத்தும் நாடு, அந்த நகர நிர்வாகம் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமி்ட்டி ஏற்றுக்கொள்ளும். ஜப்பான் இந்த ஒலிம்பிக் போட்டிக்காக சுமார் 12.6 பில்லியன் டாலர் (இந்திய பண மதிப்பில் 95,562 கோடி ரூபாய்) செலவழித்துள்ளது.

    தற்போது ஒரு வருடத்திற்கு போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக 800 மில்லியன் டாலர் (சுமார் 6,067.40 கோடி ரூபாய்) செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணத்தை போட்டி அமைப்பாளர்கள்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் தாமஸ் பேச் தெரிவித்துள்ளார்.

    800 மில்லியன் டாலரில் 650 மில்லியன் டாலரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஏற்றுக் கொள்ளும் என்றும், 150 மில்லியன் டாலரை சர்வதேச பெடரேசன்கள், தேசிய ஒலிம்பிக் கமிட்டிகள் ஆகியவற்றிடம் இருந்து வாங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தாமஸ் பேச் கூறுகையில் ‘‘போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பாதுகாப்பான சூழ்நிலை ஏற்படும் வகையில் டோக்கியோ 2020 ஒலிம்பிக்கை, அடுத்த வருடம் சிறப்பாக நடத்தி முடிக்க நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம்.

    ஒலிம்பிக் போட்டி ஒத்தி வைக்கப்பட்டதில் இருந்து ஒரு வருடம் இரண்டு மாதங்கள் இருக்கின்றன. எதிர்காலம் திட்டம் குறித்து எந்தவொரு ஊகங்களையும் நாம் தெரிவிக்க இயலாது’’என்றார்.

    கடந்த மாதம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒத்திவைக்கப்பட்டால் போட்டியை நடத்தும் நாட்டிற்கு ஏராளமான செலவு ஏற்படும். இருந்தாலும் நாங்கள் அதில் பெருமளவு பங்கெடுத்துக் கொள்வோம் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்திய கிரிக்கெட் வாரியம் பத்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான பரிசுத் தொகையை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளது.
    உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பிசிசிஐ பரிசுத் தொகை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது.

    10 வீரர்களுக்கு கடந்த நான்கு மாதமாக பணம் வழங்கப்படவில்லை என்று செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து 8 வீரர்களுக்கு தலா ரூ. 2.5 லட்சமும், இரண்டு வீராங்கனைகளுக்கு தலா ஒன்றரை லட்சம் ரூபாயையும் அவர்களது வங்கிக் கணக்கில் பிசிசிஐ செலுத்தியுள்ளது.

    23 வயதிற்கு உட்பட்டோருக்கான சிகே நாயுடு டிராபியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய புதுச்சேரி அணியைச் சேர்ந்த சிதக் சிங், 16 வயதிற்கு உட்பட்டோருக்கான விஜய் மெர்சன்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த ஜார்கண்ட் அணி வீரர் ஆர்யன் ஹூடா, இதேத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய ஜார்கண்ட் அணி வீரர் அபிஷேக் யாதவ்.

    குஜராத் அணியைச் சேர்ந்த மனன் ஹிங்ராஜியா, அபுர்வா ஆனந்த், கேரளாவைச் சேர்ந்த வத்சல் கோவிந்த், சிக்கிம் அணியைச் சேர்ந்த மிலிந்த் குமார், பீகார் அணியைச் சேர்ந்த அஷுடோஷ் அமன் ஆகியோருக்கு தலா 2.5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

    வீராங்கனைகளான ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா ஆகியோருக்கு தலா 1.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    லாக்டவுன் நேரமான தற்போது அவர்களது குடும்பம் பணத்திற்காக கஷ்டப்படுகின்றன என ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது. அதனடிப்படையில் பிசிசிஐ நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
    வங்காளதேச அணியின் மற்ற வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்த நேரத்தில், என்னை மட்டும் விராட் கோலி சீண்டவில்லை என இம்ருல் கெய்ஸ் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, மைதானங்களில் ஆக்ரோசமாக செயல்படக்கூடியவர். எதிரணி வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்தால் பதிலடி கொடுக்க சற்றும் தயங்கமாட்டார்.

    தற்போது வீரர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது கருத்துக்களை பகி்ர்ந்து வருகிறார்கள். விராட் கோலியுடன் இளம் வயதில் இருந்தே விளையாடி வரும் வங்காளதேச அணியின் தொடக்க பேட்ஸ்மேன் இம்ருல் கெய்ஸ், அந்த அணியின் அனுபவ வீரர் தமிம் இக்பாலுடன் ‘பேஸ்புக் லைவ்’ மூலம் உரையாடினார். அப்போது விராட் கோலி என்னிடம் ஸ்லெட்ஜிங் செய்வதில்லை என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து இம்ருல் கெய்ஸ் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியா அகாடமியில் விளையாடிய 2007-ல் இருந்தே எனக்கு விராட் கோலியை தெரியும். நாங்கள் இருவரும் 2011-ம் ஆண்டு முதன்முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சந்தித்தோம். அப்போது விராட் கோலி என்னை ஸலெட்ஜிங் செய்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவருடன் ஒருமாதமாக செலவிட வேண்டியிருந்தது. ஆனால், அவர் என்னை ஸ்லெட்ஜிங் செய்தார்.

    விராட் கோலி, தமிம் இக்பால்

    நான் விராட் கோலியிடம் ஏதும் கூறவில்லை. சீனியர் வீரரான தமிம் இக்பாலிடன் சென்று இதுகுறித்து கூறினேன். தமிம் இக்பால் விராட் கோலிக்கு பதிலடி கொடுத்தார். இந்த விஷயத்தை தமிம் இக்பால் சரியாக செய்தார். அவர் மைதானத்தில் விளையாடும்போது ஆக்ரோசமாக இருக்க முடியும்.

    அதன்பின் விராட் கோலி என்னிடம் மிகவும் மோசமாக நடந்தது கிடையாது. கடந்த ஆண்டு ஃபதுல்லாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஏறக்குறைய வங்காளதேச அணியின் எல்லா வீரர்களிடம் மோசமாக நடந்து கொண்டார். ஆனால் என்னிடம் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை’’ என்றார்.
    கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு முதன்முறையாக ஜெர்மனில் நாளை பண்டேஸ்லிகா கால்பந்து விளையாட்டு தொடங்க இருக்கிறது.
    கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து கால்பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்தை கொரோனா வைரஸ் சின்னபின்னமாக்கிய போதிலும் ஜெர்மனி நாடு தழுவிய லாக்டவுன் இல்லாமல் சிறப்பாக செயல்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தது.

    இதனால் கால்பந்து போட்டிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி அந்நாட்டின் முதன்மை கால்பந்து லீக்கான பண்டேஸ்லிகா, அணி வீரர்களை தயார்படுத்தியது. கடந்த சில நாட்களாக வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் நாளை பண்டேஸ்லிகா கால்பந்து போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஒரே நாளில் ஆறு போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டிகளில் இந்திய நேரப்படி இரவு ஏழு மணிக்கு தொடங்குகின்றன. அனைத்து போட்டிகளும் டிவி மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்த வேண்டும், ஐந்து மாற்று வீரர்களை பயன்படுத்தி கொள்ளலாம், வீரர்கள் மிகப்பெரிய அளவில் உடல் அளவில் தாக்கக்கூடாது ஆகிய கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடக்கின்றன.

    7 மணிக்கு டார்ட்மண்ட் - ஸ்கால்க், ஃபோர்ட்சுனா - படேர்போர்ன், ஆக்ஸ்பர்க் - வோல்ஸ்பர்க், ஹோஃப்பென்ஹெய்ம் - ஹெர்தா, ஆர்.பி. லெப்ஜிக் - எஸ.சி. பிரெய்பர் அணிகள் மோதுகின்றன.

    10 மணிக்கு எய்ன்ட்ரச்ட் பிராங்பர்ட் - மோன்செங்லாபேச் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    இருநாடுகளுக்கு இடையிலான தொடர், ஐபிஎல் லீக்குடன்தான் மீண்டும் கிரிக்கெட் தொடங்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 10-ந்தேதிக்குப்பிறகு அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவில்லை. தற்போது ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களின் முக்கிய நகரங்களில் மட்டுமே தாக்கம் அதிகமாக உள்ளது.

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டன. அடுத்த வாரத்தில் இருந்து இங்கிலாந்து வீரர்கள் பயிற்சியில் ஈடுபட இருக்கிறார்கள்.

    இதனால் மிக விரைவில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்நிலையில் அப்படி கிரிக்கெட் போட்டி தொடங்கும் வாய்ப்பு வந்தால் இருநாடுகளுக்கு இடையிலான தொடர் (bilateral series), ஐபிஎல் தொடருடன் கிரிக்கெட் தொடங்க வேண்டும் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘கடந்த இரண்டு மாதங்கள், மற்றும் தற்போது நடைபெற்று வரும் சூழ்நிலை விளையாட்டு வீரர்கள் கடந்த 70 முதல் 80 ஆண்டுகள் எதிர்கொள்ளாத மிக பயங்கரமான காலக்கட்டம். இதுபோன்ற நிலையை நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

    போட்டியை நடத்துவதற்கான சூழ்நிலையை எட்டிய பின்னர், பைலேட்டரல் தொடர்தான் முதலில் நடத்த வேண்டும். உலக கோப்பை அல்லது பைலேட்டரல் தொடர் ஆகிய இரண்டில் இந்தியா எதை தேர்வு செய்யும்? என்று கேட்டால், நாங்கள் பைலேட்டரல் தொடர்தான் என்பதை நிச்சயமாக வலியுறுத்துவோம்.

    ஒட்டுமொத்த அணிகளும் உலக கோப்பைக்காக ஒரே நாட்டிற்குச் செல்வதற்குப் பதிலாக, ஒரு அணி மற்றொரு நாட்டிற்குச் சென்று ஒன்று அல்லது இரண்டு மைதாங்களில் விளையாடலாம். இந்தியா, உள்ளூரின் முக்கியமான ஐபிஎல் தொடரை இழக்க உள்ளது. இதனால் கிரிக்கெட் மீண்டும் தொடங்கும்போது, ஐபிஎல் தொடருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்’’ என்றார்.
    ஜூலை மாதம் டெஸ்ட் தொடரை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு திட்டமிட்டுள்ள நிலையில், வீரர்கள் திங்கட்கிழமையில் இருந்து பயிற்சியை தொடங்க இருக்கிறார்கள்.
    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூலை 1-ந்தேதி வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்களுக்கு  இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடைவிதித்தது. ‘தி ஹண்ட்ரெட்’ தொடரை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைத்துள்ளது. ஒரு இன்னிங்ஸில் 100 பந்துகள் கொண்ட இப்போட்டி ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஜூலை 1-ந்தேதி வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்களுக்கு தடைவிதித்துள்ளதால் இங்கிலாந்தில் நடைபெறுவதாக இருந்த இங்கிலாந்து - வெஸ்ட்இண்டீஸ் இடையிலான டெஸ்ட் தொடர், இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒயிட்-பால் கிரிக்கெட் தொடர் ஆகியவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன.

    ஆனால் சில அறிவிப்புகளால் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் திட்டங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இங்கிலாந்துப் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்த ஓர் அறிவிப்பில், ஜூன் 1-ந்தேதி முதல் இங்கிலாந்தில் படிப்படியாக விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுமதியளிக்கப்படும் என்று கூறினார்.

    ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறலாம். கொரோனாவின் பாதிப்பைப் பொறுத்து இதற்கான அனுமதி தொடர்ந்து நீட்டிக்கப்படும். தொலைக்காட்சியில் விளையாட்டுப் போட்டிகளைப் பார்க்கும் இங்கிலாந்து மக்களின் மனநிலை மேம்படும் மற்றும் நிதிச் சிக்கலை ஓரளவு போக்கவும் இந்த நடவடிக்கை உதவும் என்றார்.

    இந்த சீஸனில் விளையாட்டுப் போட்டிகளில் எதுவும் இங்கிலாந்தில் நடைபெறாமல் போனால் 3,553 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அதிகாரி டாம் ஹாரிஸன் கூறியிருந்தார்.

    இந்தநிலையில், வரும் திங்கட்கிழமை முதல் இங்கிலாந்து வீரர்கள் பயிற்சிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இங்கிலாந்தின் மத்திய ஒப்பந்த பட்டியலில் உள்ள வீரர்கள் மற்றும் கவுன்ட்டி நடைமுறையில் உள்ள வீரர்கள் ஆகியோரில் இருந்து 30 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள், கவுன்ட்டி அணிகளுக்கு சொந்தமான மைதானங்களில் பயிற்சியில் ஈடுபட இருக்கிறார்கள். முதலில் பந்து வீச்சாளர்கள் பயிற்சி மேற்கொள்வார்கள். 15 நாட்கள் கழித்து பேட்ஸ்மேன்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

    அனைத்து வீரர்களும் பங்கேற்கும் முழு வலைப்பயிற்சி இரு வாரங்களுக்குப் பிறகு தொடங்கும். இந்த நடைமுறையில் வீரர்களின் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
    வேகப்பந்து வீச்சை சந்திக்க பயமா என்ற ரோகித் சர்மா குற்றச்சாட்டுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் பதில் அளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், முன்னாள் வீரர் இர்பான் பதானுடன் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் கலந்துரையாடினார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தவான் அளித்த பதில் வருமாறு:

    கேள்வி: உங்களுக்கு பிடித்தமான இந்திய கேப்டன்?

    பதில்: டோனி, விராட் கோலி ஆகியோரின் தலைமையின் கீழ் மட்டுமே விளையாடி இருக்கிறேன். இப்போதைக்கு டோனியை தேர்வு செய்கிறேன்.

    கேள்வி: உங்களுடைய சிறந்த பேட்டிங் பார்ட்னர்?

    பதில்: ரோகித் சர்மா.

    கேள்வி: தற்போதைய இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன் யார்?

    பதில்: விராட் கோலி.

    கேள்வி : உங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் எதிர்கொண்ட கடினமான பவுலர்?

    பதில்: ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை (4 முறை இவரது பந்து வீச்சில் ஆட்டம் இழந்திருக்கிறார்) சொல்வேன்.

    கேள்வி: சமீபத்தில் ஒரு உரையாடலில், நீங்கள் ஒரு போதும் இன்னிங்சின் முதல் பந்தை அதுவும் வேகப்பந்து வீச்சாக இருந்தால் சந்திப்பதில்லை என்று சக தொடக்க வீரர் ரோகித் சர்மா கூறியுள்ளாரே?

    பதில்: இந்த கருத்தை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். நான் ஒரு தொடக்க ஆட்டக்காரர். இந்திய அணிக்காக இந்த வரிசையில் 8 ஆண்டுகளாக ஆடுகிறேன். வேகப்பந்து வீச்சை சந்திக்க எனக்கு பயம் கிடையாது. முதல் ஓவரில் வேகப்பந்து வீச்சை சந்திக்காவிட்டால், அடுத்த ஓவரில் எதிர்கொள்ளப்போகிறேன் அவ்வளவு தான். அதே சமயம் ஆட்டத்தின் முதல் பந்தை நான் சந்திக்க விரும்புவதில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். இருப்பினும் தொடக்க வீரர் என்னை விட இளம் வீரராக இருந்து அவரும் முதல் பந்தை ஆடுவதில் அசவுரியமாக உணர்ந்தால் நானே முதல் பந்தை சந்திப்பேன். 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் முதல் முறையாக ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய போது முதல் பந்தை சந்திக்கும்படி அவரிடம் கூறினேன். அந்த நடைமுறை மாற்றமின்றி இப்போதும் தொடருகிறது.

    இவ்வாறு தவான் கூறினார்.
    தமிழக துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனின் பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. ஒவ்வொரு விளையாட்டின் சங்கத்திடமும் தகுதியான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெயர்களை அனுப்பி வைக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    அவ்வகையில் தமிழக துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனின் பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

    அர்ஜுனா விருதுக்காக துப்பாக்கிச் சுடுதல் சம்மேளனம் மத்திய அரசுக்கு அளித்துள்ள பரிந்துரை பட்டியலில்,  உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில்  தங்கப் பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவன் மற்றும் மனு பாக்கர், அபிஷேக் வர்மா, சவுரப் சவுத்ரி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இளவேனில் வாலறிவன் இரண்டு முறை ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ‘நீண்ட கால இலக்கு எந்த வகையிலும் பலன் தராது’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தெரிவித்தார்.
    மும்பை:

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் இருப்பதால் வீட்டில் முடங்கி கிடக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசுகையில் கூறியதாவது:-

    “நீண்ட கால இலக்கு உங்களுக்கு எந்தவகையிலும் உதவாது என்பதை கடந்த கால அனுபவத்தின் மூலம் நான் உணர்ந்து இருக்கிறேன். மாறாக அது உங்களுக்கு நெருக்கடியையும், அழுத்தத்தையும் அதிகரிக்கும். நான் எப்பொழுதும் குறுகிய கால இலக்கை நிர்ணயித்து தான் கவனம் செலுத்துவேன். அதிலும் முக்கியமாக அடுத்த 2-3 மாதங்களில் வரும் சில ஆட்டங்கள் குறித்தும், யாருக்கு எதிராக விளையாடுகிறோம். அதில் என்னால் என்ன சிறப்பாக செய்ய முடியும் என்பது குறித்து தான் சிந்திப்பேன். ஒவ்வொரு தொடர் அல்லது ஒவ்வொரு போட்டிக்கு என்று தனியாக இலக்கு நிர்ணயித்து செயல்படுவது எனக்கு நிறைய உதவிகரமாக இருக்கிறது. வருங்காலத்திலும் இந்த முறையையே தொடர்ந்து பின்பற்ற நான் விரும்புகிறேன்.

    கொரோனா வைரஸ் தாக்கம் தணிந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். அதற்காக காத்து இருக்கிறேன். ஆனால் நாங்கள் மீண்டும் எப்போது கிரிக்கெட் விளையாட தொடங்குவோம் என்பது தெரியாது. நாங்கள் மீண்டும் விளையாட ஆரம்பிக்கையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியா? அல்லது ஐ.பி.எல். போட்டியா? நமது வழியில் வருகிறது என்பதை பார்க்க வேண்டும். நாங்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பெரிய போட்டி தொடரில் விளையாடவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. நாங்கள் யாருக்கு எதிராக விளையாட போகிறோம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மராட்டியத்தை சேர்ந்த 33 வயது ஹிட்மேனான ரோகித் சர்மா 32 டெஸ்ட் போட்டியில் விளையாடி 6 சதம் உள்பட 2,141 ரன்னும், 224 ஒருநாள் போட்டியில் ஆடி 29 சதம் உள்பட 9,115 ரன்னும், 108 இருபது ஓவர் போட்டியில் ஆடி 4 சதம் உள்பட 2,773 ரன்னும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    இங்கிலாந்து கால்பந்து அணியின் இளம் வீரரான டேல் அலியின் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், கத்தி முனையில் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    இங்கிலாந்து கால்பந்து அணியின் இளம் வீரர் டேல் அலி. இவர் இங்கிலீஷ் பிரிமீயர் கால்பந்து லீக்கில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்காக விளையாடி வருகிறார்.

    தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் லாக்டவுன் அமலில் இருப்பதால் டேல் அலி வீட்டிற்குள்ளேயே இருக்கிறார். நேற்றிரவு திடீரென கொள்ளையர்கள் டேல் அலி வீட்டிற்குள் நுழைந்து கொள்ளை அடிக்க முயன்றுள்ளனர்.

    அப்போது டேல் அலி தடுக்க முயன்றுள்ளார். கொள்ளையர்களில் ஒருவர் டேல் அலியின் முகத்தில் பஞ்சு ஒன்று வைத்துள்ளார். அத்துடன் விடாமல் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, வீட்டில் உள்ள தங்க நகைகள் மற்றும் வாட்ச்களை திருடி சென்றுள்ளனர்.

    இதுகுறித்த செய்தி டெய்லி மெய்ல் பத்திரிகையில் வெளியானது. இதனால் ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலம் நலம் விசாரிக்க தொடங்கினர்.

    நடந்த சம்பவம் உண்மை என்று கூறிய டேல் அலி, ‘‘இந்த சம்பவம் பயங்கரமான அனுபவம். தற்போது நன்றாக இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
    இந்திய குத்துச்சண்டை பெடரேசன் மே 20-ந்தேதிக்குள் பணத்தை செலுத்தாவிடில் சஸ்பெண்ட் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என சர்வதேச குத்துச்சண்டை சங்கம் வலியுறுத்தியுள்ளது.
    2021-ம் ஆண்டு நடைபெற இருக்கும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரை நடத்தும் உரிமத்தை இந்தியா பெற்றிருந்தது. போட்டியை நடத்துவதற்கான கட்டணத்தை (4 லட்சம் அமெரி்க்க டாலர்) இந்திய குத்துச்சண்டை பெடரேசன் செலுத்த தவறியதால் தொடரை வேறு நாட்டிற்கு மாற்றியது. மேலும் அபராதமும் விதித்தது.

    இதற்கிடையில் 2018-ம் ஆண்டு டெல்லியில் நடத்தப்பட்ட சாம்பியன்ஷிப் தொடருக்கான தொகையில் 3,60,000 அமெரிக்க டாலர் பாக்கி வைத்துள்ளது. இவற்றை தவணை முறையில் வசூலிக்க முடிவு செய்தது.

    அதன்படி மார்ச், ஏப்ரல், மே மாதத்திற்கான தவணை தொகை 1,20,000 டாலர் மே 20-ந்தேதிக்குள் கட்ட வேண்டும். முழு பிரச்சினைக்கும் ஒரு இணக்கமான தீர்வு கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம் என்று இந்திய குத்துச்சண்டை பெடரேசன் தெரிவித்துள்ளது.

    இந்த பணத்தை கட்ட தவறினால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியிருக்கும் என சர்வதேச குத்துச்சண்டை சங்கம் தெரிவித்ததுள்ளது.
    ×