என் மலர்
விளையாட்டு
- ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் லக்ஷயா சென் காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.
ஹாங்காங்:
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், சக வீரரான ஆயுஷ் ஷெட்டி உடன் மோதினார்.
இதில் லக்ஷயா சென் முதல் செட்டை 21-16 என கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக ஆயுஷ் ஷெட்டி 2வது செட்டை21-17 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் அதிரடியாக ஆடிய லக்ஷயா சென் 21-13 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- 12-வது புரோ கபடி லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது.
ஜெய்ப்பூர்:
12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே தமிழ் தலைவாஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் 45-36 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அர்ஜுன் தேஷ்வால் 17 புள்ளிகள் எடுத்தார்.
தமிழ் தலைவாஸ் அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும்.
- பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- ஓமன் அணி தரப்பில் ஷா பைசல், ஆமிர் கலீம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இதில் இன்று நடைபெறுகின்ற 4-வது லீக் ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் - ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரின் 2-வது பந்தில் சைம் அயூப் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இதனையடுத்து சாஹிப்சாதா ஃபர்ஹான்- முகமது ஹாரிஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினார். குறிப்பாக ஹாரிஸ் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். நிதானமாக விளையாடிய சாஹிப்சாதா 29 பந்தில் 29 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதனை தொடர்ந்து ஹாரிஸ் 66 ரன்னில் வெளியேறினார்.
இதனை தொடர்ந்து வந்த கேப்டன் சல்மான் ஆகா டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த நவாஸ் 9 ரன்னில் வெளியேறினார்.
அந்த கட்டத்தில் பாகிஸ்தான் அணி 16.4 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இந்த இக்கட்டான சூழலில் பக்கர் ஜமான் மற்றும் முகமது நவாஸ் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய முகமது நவாஸ் 10 பந்தில் 19 ரன்கள் விளாசி அவுட் ஆனார். இறுதிவரை போராடிய பக்கர் ஜமான் 16 பந்தில் 23 ரன்களுடம் களத்தில் இருந்தார்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஓமன் அணி தரப்பில் ஷா பைசல், ஆமிர் கலீம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- தமிழ்நாட்டில் இருந்து டிரிபிள் ஜம்ப் வீரர் பிரவீன் சித்ரவேல் இதில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
- நீரஜ் சோப்ரா பங்கேற்கும் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதி சுற்று 17-ந் தேதியும், இறுதிப்போட்டி 18-ந் தேதியும் நடக்கிறது.
டோக்கியோ:
20-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை (13-ந் தேதி ) தொடங்குகிறது. வருகிற 21-ந் தேதி வரை 6 நாட்கள் இந்த போட்டி நடைபெறுகிறது.
இதில் 198 நாடுகளை சேர்ந்த 2202 வீரர் வீராங்க னைகள் கலந்து கொள்கிறார்கள். 49 பிரிவுகளில் பந்தயம் நடத்தப்படுகிறது. வழக்கம்போல் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
19 பேர் கொண்ட இந்திய அணி உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கிறது. வரலாற்றில் முதல்முறையாக ஈட்டி எறிதலில் 4 இந்தியா்கள் கலந்து கொள்கிறார்கள் .
இதில் நீரஜ் சோப்ரா மீது தான் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. 27 வயதான அவர் 2022 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். கடந்த 2023-ம் ஆண்டு அங்கேரியில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
அவர் இந்த முறையும் தங்கம் வெல்வாரா ? என்று ஆவலுடன் எதிா்பாா்க்கப்படுகிறது. ஒலிம்பிக் சாம்பியனும், பாகிஸ்தான் வீரருமான அர்சத் நதீம் உள்ளிட்ட வீரர்கள் அவருக்கு கடும் சவாலாக இருப்பார்கள். நீரஜ் சோப்ரா பங்கேற்கும் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதி சுற்று 17-ந் தேதியும், இறுதிப்போட்டி 18-ந் தேதியும் நடக்கிறது.
தமிழ்நாட்டில் இருந்து டிரிபிள் ஜம்ப் வீரர் பிரவீன் சித்ரவேல் இதில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் இந்திய அணி வருமாறு-
ஆண்கள்: நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ், யஷ்வீா் சிங், ரோகித் யாதவ் (ஈட்டி எறிதல்), முரளி ஸ்ரீசங்கா் (நீளம் தாண்டுதல்), குல்வீா் சிங் (5,000 மற்றும் 10,000 மீட்டர் ஓட்டம்), பிரவீன் சித்ரவேல், அப்துல்லா அபூபக்கா் ( டிரிபிள் ஜம்ப்), சா்வேஷ் அனில் குஷோ் (உயரம் தாண்டுதல்), அனிமேஷ் குஜுா் (200 மீட்டர்), தேஜாஸ் சிா்சே (110 மீ தடை தாண்டுதல்), சொ்வின் செபாஸ்டியன் (20 கி.மீ. நடைப் பந்தயம்), ராம் பாபு, சந்தீப் குமாா் (35 கி.மீ. நடைப் பந்தயம்).
பெண்கள்: பாருல் , அங்கிதா தியானி (3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்), பிரியங்கா கோசு வாமி (35 கி.மீ. நடைப்பந்த யம்), பூஜா (800 மீட்டர் , 1,500 மீட்டர்).
- ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட் ஒரு சதம் கூட அடித்ததில்லை.
- இந்த முறை ஜோ ரூட் சதம் அடிக்கவில்லை என்றால் மேத்யூ ஹைடன் நிர்வாணமாக நடப்பதாக கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 39 சதங்கள் அடித்த போதிலும் ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை.
இந்த முறை ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் சதம் அடிப்பார் என்றும் அவர் சதம் அடிக்கவில்லை என்றால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை நிர்வாணமாக சுற்றி வருவேன் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.
அவரது கருத்து வைரலானதை தொடர்ந்து, ஹைடனின் மகள் கிரேஸ் ஹைடன், "தயவு செய்து இந்த முறை சதம் அடித்து விடுங்கள் ஜோ ரூட்" என்று இன்ஸ்டாகிராம் கமெண்டில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- லெஜண்ட்ஸ் லீக் தொடரில் பாகிஸ்தான் எதிராக இந்திய அணி விளையாடாமல் வெளியேறியது.
- பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடப் போவதில்லை என்று ஷிகர் தவான், ஹர்பஜன் ஆகியோர் அறிவித்தார்கள்.
ஆசியக் கோப்பை 2025 தொடரில் இந்திய அணி வருகிற 14-ந் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. துபாயில் நடைபெற உள்ள அப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடக்கூடாது என்று ஹர்பஜன் சிங் போன்ற முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடிய லெஜண்ட்ஸ் லீக் தொடர் நடைபெற்றது.
அத்தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடப் போவதில்லை என்று ஷிகர் தவான், ஹர்பஜன் ஆகியோர் இன்ஸ்டாகிராமில் அறிவித்தார்கள்.
அதைத் தொடர்ந்து யுவராஜ் சிங் தலைமையிலான மொத்த இந்திய அணியும் பாகிஸ்தான் எதிராக விளையாடாமல் வெளியேறியது. அதே போல ஆசியக் கோப்பையில் விளையாடக்கூடாது என்று ஹர்பஜன் சிங், கேதார் யாதவ் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில் முதன்மையான இந்திய அணியே ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளதாகவும் ஆனால் லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடாமல் விலகியவர்கள் தங்களை இந்தியர்கள் என்று நிரூபிக்க முயற்சிப்பதாகவும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கிரிக்கெட் எப்போதும் நடைபெற வேண்டும் என்று நான் சொல்வேன். ஏனெனில் அதை இரு நாடுகளின் நட்பை வலுப்படுத்த உதவலாம். இங்கிலாந்தில் லெஜெண்ட்ஸ் லீக் போட்டியைப் பார்க்க மக்கள் டிக்கெட் வாங்கினார்கள். வீரர்கள் பயிற்சி எடுத்தனர். ஆனால் கடைசியில் நீங்கள் விளையாடவில்லை.
அதன் பின்னணியில் உள்ள சிந்தனை என்ன? என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதற்கு காரணமாக அமைந்த வீரரின் பெயரைக் குறிப்பிட்டால் அது அவருடைய வாழ்க்கையை கடினமாக்கும். நான் குறிப்பிடும் வீரர் ஒரு மோசமான முட்டை. அவருடைய கேப்டன் நீங்கள் விளையாட விரும்பவில்லையெனில் விளையாடாதீர்கள்.
அதனை சமூக வலைத்தளத்தில் ஏன் பதிவிட வேண்டும் என்று கூறியிருந்தார். சில வீரர்கள் தங்கள் தனிப்பட்ட நோக்கத்துடன் தான் இந்த தொடரில் இருந்து விலகினார்கள். இதனால் தான் அவர்களை நான் கெட்ட முட்டை என்று கூறுகின்றேன். இந்திய அணியில் உள்ள சில இந்திய வீரர்கள் பிறந்ததிலிருந்து நாங்களும் இந்தியர்கள் தான் என்று நிரூபிக்க போராடுகிறார்கள்.
இந்த தொடரில் இருந்து விலகியவர்கள் தற்போது ஆசிய கோப்பை தொடருக்கு கிரிக்கெட் வர்ணனை செய்கிறார்கள். மேலும் இந்தியாவிலும் நிலைமை சரி கிடையாது. சில வீரர்களின் வீடு எரிக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்றிருக்கிறது
என்று அப்ரிடி கூறினார்.
- 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
- இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இந்நிலையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஓமன் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் 39 சதங்கள் விளாசியுள்ளார்.
- ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட் ஒரு சதம் கூட அடித்ததில்லை.
இங்கிலாந்து அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 73 முறை மோதியுள்ளது. இதில் ஆஸ்திரேலியா 34 போட்டிகளிலும், இங்கிலாந்து 32 போட்டிகளிலும் 7 போட்டிகள் டிராவில் முடிந்தது.
சமீப காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தொடர்ச்சியாக ரன்களை குவித்து வருவதுடன், பல்வேறு சாதனைகளையும் முறியடித்து வருகிறார்.
அவர் பல சாதனைகளை படைத்தாலும் ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட் இதுநாள் வரையிலும் சதமடிக்க முடியாமல் தடுமாறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், 9 அரைசதங்கள் அடித்துள்ளார். ஆனால் ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவில் ஜோ ரூட்டின் அதிகபட்ச ஸ்கோர் 89 ரன்களாகும்.
இந்நிலையில் இந்த முறை ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் சதம் அடிப்பார் என்றும் அவர் சதம் அடிக்கவில்லை என்றால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை நிர்வாணமாக சுற்றி வருவேன் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இங்கிலாந்து அணிக்காக இதுவரை 158 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், அதில் 39 சதங்கள், 66 சதங்களை விளாசி 13,543 ரன்களைக் குவித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதுதவிர, பந்துவீச்சில் அவர் 73 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- 11 வயதாக இருக்கும்போது 23 வயதிற்கு உட்பட்டோருக்கான வேகப்பந்து வீச்சு முகாமுக்கு சென்றேன்.
- 7ஆவது அல்லது 8ஆவது இடத்தில் களம் இறங்கி 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தேன்.
இந்திய டெஸ்ட் அணி கேப்டன், ஒருநாள் மற்றும் டி20 அணி துணைக் கேப்டனாக சுப்மன் கில் இருந்து வருகிறார். 2019ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான நிலையில், 6 வருடத்திற்குள் மூன்று விடிவிலான கிரிக்கெட்டிலும் கேப்டன் பதவிக்கு உயர்ந்துள்ளார்.
சுப்மன் கில், தன்னுடைய சிறுவயது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து நினைவு கூர்ந்துள்ளார். தன்னுடைய 11 வயதில், கிரிக்கெட்டுதான் தன்னுடைய தொழிலாக இருக்கப்போகிறது என உணர்ந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுப்மன் கில் கூறியதாவது:-
நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், எனக்கு 11 வயது இருக்கும்போது, கிரிக்கெட்டுதான் தன்னுடைய தொழிலாக இருக்கப் போகிறது என உணர்ந்தேன். 23 வயதுக்கு உட்பட்ட வேகப்பந்து வீச்சாளர்களுக்கான முகாம் நடைபெற்றது. அப்போது எனக்கு 11 வயதுதான். அங்கிருந்த மற்ற வீரர்களில் பெரும்பாலானோர் என்னைக் காட்டிலும் இரண்டு மடங்கு வயது அதிகம் கொண்டவர்களாக இருந்தனர். அதேவேளையில் பேட்ஸ்மேன்கள் சற்று குறைவாக இருந்தனர்.
நான் என்னுடைய சிறந்த நண்பர் மற்றும் நெருங்கிய நண்பருமான குஷ்ப்ரீத் உடன் பயிற்சி மேற்கொண்டேன். குர்ஷ்பீரித் வேகப்பந்து வீச்சாளர். அவர் பயிற்சியாளரிடம் சென்று, நம்மிடம் பேட்ஸ்மேன்கள் குறைவு. அதனால் என்னை களம் இறக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பயிற்சியாளர் என்னையும், எனது நண்பரையும் களம் இறக்கினார்.
நான் 7 அல்லது 8ஆவது வரிசையில் பேட்டிங் செய்ய இறங்கினேன். அணியின் முன்கள வீரர்கள் நான்கு அல்லது ஐந்து ஓவரில் ஆட்டமிழந்தனர். அதன்பின் நான் பேட்டிங் செய்ய களம் இறங்கினேன். 90 ரன்கள் அடித்து நாட்அவுட்டாக இருந்தேன். அந்த தருணம், அந்த இன்னிங்ஸ், பயிற்சி போட்டியாக இருந்தாலும் கூட எனக்கு நம்பிக்கை கொடுத்தது. இந்த தருணம்தான் இனிமேல் கிரிக்கெட்டுதான் தொழில் என்பதை உணர வைத்தது.
இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
- தமிழ் தலைவாஸ் அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் உள்ளது.
- அணி நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடு காரணமாக அவர் இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது.
ஜெய்ப்பூர்:
12-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் இதுவரை 28 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளது. மேலும் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் கட்ட ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. அடுத்த கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் இன்று தொடங்குகிறது.
தமிழ் தலைவாஸ் அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் உள்ளது.
இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணிக்கு நட்சத்திர வீரரான பவன் ஷெராவத் ஏலத்தில் எடுக்கப்பட்டார். மேலும் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தமிழ் தலைவாஸ் அணியில் இருந்து பவன் ஷெராவத் திடீரென்று வெளியேறி உள்ளார். அணியின் ஜெய்ப்பூர் சுற்றுப்போட்டிக்கான பயணத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. யாரிடமும் தெரிவிக்காமல் பவன் ஷெராவத் அணியின் முகாமில் இருந்து வெளியேறி சென்றதாக கூறப்படுகிறது.
அணி நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடு காரணமாக அவர் இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது. தற்போதைய சீசனில் பவன் ஷெராவத் 3 போட்டிகளில் 22 புள்ளிகள் எடுத்தார். அவரது திடீர் விலகல் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
புரோ கபடி லீக் வரலாற்றில் அதிக ரெய்டு புள்ளிகள் பெற்றவர்களில் ஒருவராக பவன் ஷெராவத் திகழ்கிறார். இதுவரை 1340 ரெய்டு புள்ளிகள் குவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் தமிழ் தலைவாஸ் அணியில் தொடருவாரா? அல்லது விலகுவாரா? என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. தமிழ் தலைவாஸ் அணி இன்று இரவு 9 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பெங்கால் அணியுடன் மோதுகிறது.
இதில் பவன் ஷெராவத் பங்கேற்க மாட்டார் என்பதால் துணை கேப்டனான அர்ஜுன் தேஷ்வால் கேப்டனாக செயல்படுவார். பவன் ஷெராவத்தை அணிக்கு திரும்ப கொண்டு வரும் முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.
- முதலில் விளையாடிய தெற்கு மண்டலம் 149 ரன்னில் சுருண்டது.
- ரஜத் படிதார் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
துலீப் கிரிக்கெட் இறுதிப் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. தெற்கு மண்டலம்- மத்திய மண்டலம் அணிகள் மோதும் இந்த போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற மத்திய மண்டலம் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களம் இறங்கிய தெற்கு மண்டலம், 149 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் தன்மே அகர்வால் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். மத்திய மண்டலம் சார்பில் சரண்ஸ் ஜெயின் 5 விக்கெட்டும், குமார் கார்த்திகேயா 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் மத்திய மண்டலம் முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. டேனிஷ் மாலேவார் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷுபம் சர்மா 6 ரன்னிலும், அக்ஷேய் வட்கார் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கேப்டன் ரஜத் படிதார் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 115 பந்தில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 12 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும். யாஷ் ரதோட் 76 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
72 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்து மத்திய மண்டலம் தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறது.
- ஆபரேசன் சிந்தூருக்குப் பிறகு கிரிக்கெட், வணிகம் நடைபெறக் கூடாது எனச் சொல்கிறார்கள்.
- இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்படும்வரை, கிரிக்கெட் மற்றும் வணிகமும் நடைபெறக் கூடாது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை (நாளைமறுதினம்) துபாயில் நடைபெற இருக்கிறது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் நடைபெற்ற நிலையில் இரு நாடுகளும் பரஸ்பர தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில் கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டுமா? என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது. போட்டிக்கு தடைவிதிக்கக் கோரி நீதிமன்றத்தில் பொதுநல மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி நடத்தப்பட வேண்டுமா? என்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வான ஹர்பஜன் சிங் கூறியதாவது:-
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி எப்போதும் மிகப்பெரிய அளவில் பேசப்படும் போட்டியாக இருக்கும். ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, எல்லோரும் கிரிக்கெட் மற்றும் வர்த்தகம் இரு நாடுகளுக்கு இடையில் நடைபெறக்கூடாது எனச் சொல்கிறார்கள். நாம் லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடினோம். அப்போது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடாமல் புறக்கணித்தோம்.
ஒவ்வொருவருக்கும் அவரவர் சிந்தனை மற்றும் புரிதல் முறை உள்ளது. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்படும்வரை, கிரிக்கெட் மற்றும் வணிகமும் நடைபெறக் கூடாது என்று நான் நினைக்கிறேன். அதுதான் என் கருத்து. அரசாங்கம் போட்டி நடக்கலாம் என்று சொன்னால், அது நடக்க வேண்டும். ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சிறப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.






